திரும்பிவர இயலா ஒற்றையுலகத்தில்
நம்மைத் தொலைத்தது அந்த இசை
வீணையின் அதிர்வுகளில்
நினைவு
முடிவிலியின் சுவர்களில் மோதி
இரத்தமிழந்தது
இப்போது உன் உதடுகளிலிருந்து துவங்குவதே
மிகச்சரியானதாயிருக்கக்கூடும்
வெகுசன ரசனைகள் குறித்தான புரிதல்களையும் திரையிசையின் மீதும் திரை இசைப் பாடல்களின் மீதும் விருப்பம் கொண்ட நண்பர் ஒருவருடனான உரையாடல் திரை இசை பாடல்கள் மீதிருந்த சில இறுக்கங்களை விடுவித்தது போலிருந்தது.குறுக்கெழுத்துப் புதிர்களுக்கு நிகரான ஒரு கட்டமைப்பிலேயே கவிஞர்களுக்குப் பாடல்களெழுத சுதந்திரம் வழங்கப்படும் சூழலில் கவிஞன்/ பாடலாசிரியன் தனது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள பாடல்களைச் செய்துகொண்டிருக்கிறான்.கவிஞர்களை விட திறமைசாலிகளை வளர்த்தெடுக்கும் இடமாக அல்லது திறமைசாலிகள் மட்டுமே கோலோச்சும் இடமாக திரை இசைப் பாடல்கள் உருக்கொண்டுள்ளன.இத்தகைய வெளி யிலிருந்து சில நல்ல பாடல்கள் வெளிவருவதைக் கண்டிப்பாகப் பாராட்டியே தீர வேண்டும்.சமீபத்தில் வந்துகொண்டிருக்கும் சில நல்ல பாடல்களும்,இசையும் தமிழ்த்திரையிசையை இன்னும் உயிர்ப்பாக வைத்துக்கொண்டிருக்கின்றது.பெரும்பான்மைக் குப்பைகளை கண்டிக்காமலிருக்கவும் முடியவில்லை.சமீபத்தில் சத்யம் எனும் தெலுங்கு டப்பிங் படத்தில் நயனை பால்பப்பாளி என விளித்து ஒரு குத்துப் பாடல்.எழுதியவனைச் சொல்வதா? எழுதத் தூண்டியவனைச் சொல்வதா? கேட்டு இன்புறுவனைச் சொல்வதா? இந்தக் கருமாந்திரங்களை வெகுசன ரசனை என பொத்தாம் பொதுவாக வகைப்படுத்தி தன் சுய அரிப்புகளுக்கு கூட்டம் சேர்க்கும் புல்லுருவிகளினை எதைக் கொண்டும் அடிக்கலாம்.வெகு சன ரசனை என்பது கீழ்த்தரமானதாய் ஒரு போதும் இருக்கமுடியாது.வெகு சன ரசனை என்பது இலகுவானதும், பொழுதுபோக்கு சார்ந்ததுமாய்த்தான் இருக்கமுடியும்.அதிக ஆபத்தில்லாத ராமராஜன் திரைப்படங்கள் குறித்து இப்போது நாம் பேச ஆரம்பித்திருப்பது வெகு சன ரசனைக்கு சரியான புரிதல்களாய் இருக்க முடியும்.
ADNAN SAMI யின் "bhigi bhigi rato mein..." பாடலை இசையுடன் மொழிபெயர்க்க நண்பர்களுடன் ஓர் இரவைப் பகிர்ந்துகொள்ள முடிந்தது.இந்தி,உருது போன்ற பிற மொழிப் பாடல்களை தமிழில் இசையோடு மொழிபெயர்ப்பது சிறிது கடினமானது.சந்தத்துடனும்,பொருள் மாறாமலும், மூலத்தைச் சிதைக்காமலும் மொழிபெயர்க்க வேண்டுமென்கிற எங்களின் ஆவல் ஓரளவிற்கு நிறைவேறியது.ஆனால் பாடல் மிகச் சாதாரண பிற தமிழ்பாடலைப் போலத்தானிருந்தது. பெரிதாய் கவித்துவமில்லாமல் போனது குறித்து எனக்கு சிறிது வருத்தமே ஆனால் மூலத்தை மாற்றுவதில் / சிதைப்பதில் எனக்கு உடன்பாடும் இல்லை.என் அறிவுக்கெட்டியவரை பிற மொழிப்பாடல்கள் / கவிதைகளில் தெறிக்கும் கவித்துவத்தை விட தமிழில் நாம் எட்டிய கவித்துவ உச்சம் சிறிது அதிகமாகத்தான் தோன்றுகிறது.நமது மொழியின் ஆளுமை அல்லது நமது மொழியின் மிக அதிக வார்த்தைகள் வெவ்வேறு உணர்வுகளுக்கு ஒரே வார்த்தைகளை கையாள வேண்டிய சிக்கல்களில்லாதிருக்கின்றது.நிறைய வார்த்தைகளை பல்வித உணர்வுகளுக்கு வழங்க ஏதுவாக அமைந்திருப்பது நமது மொழியை இன்னமமும் நேசிக்கத் தூண்டுகிறது.
பண்புடனில் தொடர்ச்சியாய் காதல் கவுஜை/கவிஜை/கவிதை களை எழுதிக்கொண்டிருப்பது இலகுவான மனநிலையை வெளிப்படுத்துவதாய் உள்ளது.விளையாட்டாகத்தான் எழுத ஆரம்பித்தது.ஒரு வித கிண்டலடிக்கும் மனநிலையில்தான் எழுதத் தொடங்கினேன்.சில சுமாராய் வந்திருப்பதால் தொடரும் எண்ணமும் இருக்கின்றது.
கூடுகளை விரும்பிடாத பறவையொன்றின் பின்
தொடர்ச்சியாய் பயணித்துக் கொண்டிருக்கிறேன்
இளைப்பாறல்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவனெனினும்
பறவையின் வசீகரம் இளைப்பாறல்களை
தொலைத்துவிடச் செய்தது
இதுவரை கடந்திடாத தொலைவுகளை கடந்தபின்னும்
பறவை பறந்துகொண்டிருக்கிறது
வழி தப்பும் பயத்தில்
நானும் தொடர்ந்துகொண்டிருக்கிறேன்....
காதல், உறவு, வாழ்வு என எல்லாவற்றையும் இதனுள் பொருத்திக்கொள்ளலாம் போலத்தானிருக்கிறது.
ட்விட்டர் பக்கம் ஒதுங்கியதில் நிறைய சுட்டிகளைப் பெறமுடிந்தது.சுரதா கொடுத்திருந்த கடவுளின் குழந்தைகள் எனும் பாலுமகேந்திராவின் குறும்படம் மனதைத் தைத்தது.தொடர்ச்சியாய் மனநலம் குறித்தாய் கண்ணில் பட்டு இம்சிக்கிறது.உள்ளே இருந்து சில குரல்கள் தந்த அயர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் வெகு நாட்களாய் பார்க்காமல் வைத்திருந்த One Flew Over the Cuckoo's Nestதிரைப்படத்தையும் கடந்த வாரத்தில் பார்த்தேன்.முடிவை ஏனிப்படி குரூரமாக்கினார்கள் என புலம்பியபடியிருந்தேன்.சில நெருடல்களிருப்பினும் இந்தப் படம் எனக்குப் பிடித்தேயிருந்தது.இத்திரைப்படத்தில் வரும் குழு உரையாடல்கள் மிகச் சிறந்த முறையில் வந்திருந்தன.கோபியும் இந்த அணுகுமுறையை விரிவாய் பேசியிருப்பார்.தொடர்ச்சியாய் பேச முடியாத billy கதாபாத்திரம் ஏற்படுத்திய பரிதாபம் வெகுநேரம் நீடித்திருந்தது.
ஜெய மோகனின் காமரூபினி படித்தேன்.ஜெமோவின் அடுத்த படியென நண்பர் ஒருவரால் சிலாகிக்கப்பட்டிருந்த அளவிற்கு இதில் ஒன்றுமில்லை.பெண்ணை தொடைகளாய், முலைகளாய், யட்சியாய், காமாந்தகியாய் மட்டுமே பார்க்கத் தெரிந்த புனிதர்.ரப்பர், எசமாடன், டார்த்தீனியமென இவரது புனைவுகளிலிருந்தே சுட்டு எழுதப்பட்டிருந்த இன்னொரு புனைவாகத்தான் என்னால் இதை அணுகமுடிந்தது.வார்த்தைகளைக் கொட்டி ஜெமோ படைக்கும் பிரம்மாண்ட படையல்களின் மீது உண்மை சாவகாசமாய் கால் தூக்கி ஒன்றுக்கிருந்து போகிறது.மாறாய் உயிர்மை ஜீலை இதழில் வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன சிறுகதை மனதில் வெகு நேரம் தங்கியிருந்தது.அகம் புறம் என சிறுமியின் வினோத உலகத்தை பறவைகள் கொண்டு புனைந்திருந்தது அற்புதமாய் வந்திருந்தது.சுகி திடீரென சொல்லும் புல் புல் லில் சிறிது அதிர்ந்து போனேன்.
AKira வின் Dreams படத்தை இரண்டாம் முறையாக பார்க்கவாரம்பித்து முடிக்க முடியாத மன உணர்வில் நிறுத்திவிட்டேன்.நிகழிலிருந்து பிடுங்கி பெருங்கனவொன்றில் எறிந்தார்போன்ற உணர்வைத்தான் இத்திரைப்படம் தருகிறது.சிறுவனின் கனவுகளில் உயிர்கொள்ளும் peech மரங்கள்,மழையும் வெய்யிலும் அடிக்கும் பொழுதொன்றில் நரியின் திருமணம் பார்க்கபோய் வினோத மனிதர்களை பார்த்து ஆபத்தில் சிக்கும் இன்னொரு சிறுவன்,வான் கோவின் ஓவியங்கள் வழிப் பயணித்து வான்கோ வை சந்தித்து திரும்பும் பார்வையாளன், போரில் இறந்த வீரர்கள் உயிர்கொண்டு கமாண்டரினை கலங்கடிக்கும் வினோத tunnel என வினோதங்களாலும் பிறழ்வுகளாலும் நிரம்பிய வெளி.பிரம்மிப்பையும் அயர்ச்சியையும் ஒன்றாய் தரவல்ல tarkoyevski யின் திரைப்படங்களினையொத்த Akira வின் படம். காட்சியூடகத்தின் வலிமையை அழுத்தமாய் சொன்ன படமிது.பிரம்மிப்பொழிந்த மனநிலையில் இத்திரைப்படத்தை விரிவாய் பதியவும் எண்ணம்.
ஒரு மாலையின்
மேகக் கவனித்தலின்போது
நினைவை அசைத்தது
அந்தியின் பொன்னிறம்
மேகத்தை விட்டு
அடிவான நிறங்களில் கரையும்போது
இரவுப்பெண் தன் நீளக் கருங்கூந்தலினால்
வானத்தை மூடவாரம்பித்தாள்
அது உன் கூந்தலிழைகளில் புதையும்
என் முகத்தினையொத்தபடி
நிறங்களை விடுவித்து
கருமையில் புதைந்து கொண்டது...
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
36 comments:
\\\
சும்மா கவிதையெழுதவாச்சுக்கும்
உன்னை நினைத்துக்கொள்வது
என் போலித்தனங்களின் மீது
இன்னும் வெறுப்பைக் கூட்டுகிறது
என்ன செய்ய
உன்னை நினைத்துக்கொண்டால்தான்
கவிதையும் வந்து தொலைகிறது
\\\
பதிவை புரிந்து கொண்டு பின்னூட்டம் போடுவதற்கான மனோ நிலை தற்பொழுது வாய்க்காமல் இதனை இங்கே தந்திருக்கிறேன்...
:)
:)
//வெகு சன ரசனை என்பது இலகுவானதும், பொழுதுபோக்கு சார்ந்ததுமாய்த்தான் இருக்கமுடியும்.அதிக ஆபத்தில்லாத ராமராஜன் திரைப்படங்கள் குறித்து இப்போது நாம் பேச ஆரம்பித்திருப்பது வெகு சன ரசனைக்கு சரியான புரிதல்களாய் இருக்க முடியும். //
மிகச்சரியாய் சொன்னீர்கள்.. இவர்கள் போதைக்கு நம்மை ஊறுகாய் ஆக்குகிறார்கள்.
//இந்தக் கருமாந்திரங்களை வெகுசன ரசனை என பொத்தாம் பொதுவாக வகைப்படுத்தி தன் சுய அரிப்புகளுக்கு கூட்டம் சேர்க்கும் புல்லுருவிகளினை எதைக் கொண்டும் அடிக்கலாம்.வெகு சன ரசனை என்பது கீழ்த்தரமானதாய் ஒரு போதும் இருக்கமுடியாது.வெகு சன ரசனை என்பது இலகுவானதும், பொழுதுபோக்கு சார்ந்ததுமாய்த்தான் இருக்கமுடியும்//
ரொம்ப சரி.வெகுஜன ரசனையை காரணம் சொல்லி கீழ் தரமான திரைப்படங்களும் ஒருபுறம் குறைவின்றி வந்து கொண்டிருக்கிறது!!உமிகளுக்கு மத்தியில் அரிசியை தேடுவது போல ஆகிவிட்டது நம் பிழைப்பு!!
தமிழன்,சரவணக்குமார்,கார்க்கி மற்றும் லேகா கருத்துகளுக்கு நன்றி..
Dreams படம் குறித்து எழுதியது ஆர்வத்தை தூண்டியது.இப்படத்தை ஆறு மாதங்களுக்கு முன் பார்த்தேன்.ஒரு படம் என்று கூட சொல்ல முடியாது..துண்டு துண்டு கவிதைகள்...அதில் எனக்கு பிடித்தது பனிப்புயலில் சிக்கி அலைவுறும் அந்த வீரர்களின் காட்சி.மூச்சு திணர்வது போல் இருந்தது.வான்கோவாக நடித்தவர் கூட நம்ம god father இயக்குனர் ஸ்கார்சசி(சரிதானா?).
சமீபத்தில் நான் பார்த்த 2 படங்கள் DANCER IN THE DARK மற்றும் O BROTHER! WHERE ART(ARE) THOU(YOU)?
இதில் DANCER IN THE DARK ஒரு musical cinema...மிக நன்றாக இருந்தது.முடிந்தால் வாங்கி பாருங்கள்...
கவிதை ரொம்ப நல்லா இருக்கு..
ஆடன் சாமி பாட்டின் மொழிபெயர்ப்பு இங்கே போடவில்லையா..?
உண்மைதான். காமரூபினி படித்து முடிப்பதற்குள் விழி, மொழி இரண்டும் பிதுங்கி விட்டது, இத்தனை சிக்கலாக ஏன் படைக்கவேண்டும் என்ற கேள்வி எழுந்தது, ஒருவேளை இது தான் தற்போதைய தமிழ் கதைகளின் அறிவிலக்கியமோ என்ற பயம் காரணமாக முழுவதும் படித்து முடித்து நானும் அந்த அறிவாளிகளின் பட்டியலில் ஒருத்தியாக என்னால் இயன்ற முயற்சியை செய்துவிட்டேன்...:)
எஸ்.ராவின், பறவைகள் பற்றிய கதை எழுப்பிய தாக்கம் இன்னும் பல கேள்விகளை எழுப்பிக்கொண்டே தான் இருக்கிறது.
நல்ல பதிவு...வாழ்த்துக்கள்.
வணக்கம் நண்பா.
திரைப்பாடல்கள் குறித்து சில தகவல்களை சொல்ல நினைக்கிறேன். சினிமாவில் இப்போது இருப்பது பாடலாசிரியன் அல்ல. மெட்டுக்கு கெட்ட வார்த்தைகளை தேடிக்கொண்டிருப்பவர்கள்.
வாலியே.. சமைஞ்சது எப்படி? என்று எழுதியவர்தான். நாட்டுக்கட்டை என்ற வார்த்தை பாடல் வழி பிரயோகப்படுத்தப்பட்டு விட்டது என்பதற்கான திம்சுகட்டை என்ற வார்த்தை தேடிப்பிடிக்கிறான்.
காரணம் பாடலாசிரியர்கள் அல்ல. தங்களை அதிமேதாவிகளாக காட்டிக்கொள்ளும் இயக்குனர்கள்தான். கூடவே இசை அமைப்பாளர்களும். இயக்குனர், 'புது வார்த்தையா புடிங்க பாஸ்" என்று கட்டளையிடுவார். இசை அமைப்பாளர், 'வாடி வாடி கைப்படாத சி.டி"ங்கற பல்லவி குழந்தகளை எல்லாம் டான்ஸ் ஆட வச்சிடுச்சுங்க. அதே போல பலல்வி பிடிங்க" என்பார்.
இந்த அக்கப்போரில் பாடல் எழுதுபவன் இரவுபகலாக சிகெட்டுக்குள் வாழ்ந்து 80 பக்கம் எழுதிவிட்டு போனால், அதிமேதாவி இயக்குனர், இதில் ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் ஒவ்வொரு வாக்கியத்தை எடுத்து சேர்ப்பார்.
கண்டினியூட்டி இல்லாமல் இருக்கும். அதையே பாடலாக்குவார்கள். இதற்கான எடுத்துக்காட்டாக பல பாடல்களை சொல்ல முடியும்.
பிழைப்புக்கு பாட்டெழுதுபவன், 'நீங்க சூப்பரா செலக்ட் பண்ணியிருக்கீங்க தலைவா" என்று அவனுக்கு ஜிங்கி அடித்துவிட்டு வரவேணடும். இதுதான் இப்போதைய நடைமுறை. இதற்கு யாரை குற்றம் சொல்ல முடியும்?
//அகம் புறம் என சிறுமியின் வினோத உலகத்தை பறவைகள் கொண்டு புனைந்திருந்தது அற்புதமாய் வந்திருந்தது.சுகி திடீரென சொல்லும் புல் புல் லில் சிறிது அதிர்ந்து போனேன்.//
//எஸ்.ராவின், பறவைகள் பற்றிய கதை எழுப்பிய தாக்கம் இன்னும் பல கேள்விகளை எழுப்பிக்கொண்டே தான் இருக்கிறது.//
நல்ல பதிவை பகிர்ந்தமைக்கு நன்றிங்க அய்யனார்.
ரெளத்ரன் இரண்டு படங்களுமே பாக்கல..சுட்டியமைக்கு நன்றி..
முத்துலெட்சுமி
அந்த மொழிபெயர்த்த பாடலை ஆசிப் விரைவில் பாடி அவர் பக்கத்தில் பதிவு செய்வார்....
கிருத்திகா
அப்போ இலக்கிய ஜாம்பவான்களில் நீங்களும் ஒருத்தரா :) மொழி பழக்கபட்டதுதான் என்றாலும் உள்ளடக்கம்தான் அதிக எரிச்சலை கெளப்புச்சி..அழகு ஒரு விளி புண்ணாக்கு பொடலங்கான்னு இதுல அழகியல் தத்துவம் வேற..இவரை துதி பாட ஒரு கூட்டம் இருக்க வரைக்கும் இப்படித்தான் பொலம்பிட்டுத் திரியனும்னு நெனைக்கிறேன்..
எழுத்து வெறும் பம்மாத்து ன்னு ரொம்ப தீர்மானமா நிரூபிக்கிறார் இலக்கியமே வெறும் வார்த்தை போதைதான்னு ஒரு பெருங்கூட்டமே சரக்கடிச்சி கவிழ்ந்திருக்கு ..என்ன செய்ய :(
ஆடுமாடு
உங்கள் பார்வை மிகச் சரி..அதைத்தான் குறுக்கெழுத்து புதிர்களின் கட்டங்களை நிரப்பும் துர்பாக்கியம்தான் இன்றைய பாடலாசிரியனின் நிலைன்னு பேசிட்டிருந்தோம்...
நன்றி கார்த்திக்..எஸ்ராவின் சிறுகதை மிக நல்ல வாசிப்புணர்வைத் தந்தது...வாசித்துவிட்டு சொல்லுங்கள்
இது உங்களுடய முண்தைய பதிவுக்கான பதில்.
one flew over the cuckoo's nest மிகவும் அதிகமாக மனனல விவாதங்களில் பேசப்பட்ட படம். எனோ அதைப்பார்ப்பதை தீவிரமாக தவிர்க்கிரேன்.
மன நல சிகிட்ச்சை முறைகளில்,மற்றும் சட்டதிட்டங்களில் பல மாற்றங்களைக் கொண்டு வந்த திரைப்படம்..இதே திரைப்படத்தை anti psychiatry lobby also uses whihc is sad.
சில நடிகர்கள் இந்தியாவில் அடிக்கடி'என் படத்தில் மெஸ்ஸேஜ் உண்டு ' அல்லது மெஸ்ஸேஜ் குடுக்கறதுக்காக படம் பண்ணமுடியாது என்றெல்லாம் பேசுவார்கள்..ஆனால் இந்த திரைப்படம் தந்த'மெஸ்ஸேஜ்' brougth sweeping changes in mental health lobbies.
//மாறாய் உயிர்மை ஜீலை இதழில் வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன சிறுகதை மனதில் வெகு நேரம் தங்கியிருந்தது.//
அபத்தத்தின் உச்சகட்டம் இந்த புனைவு..
1. இதுபோல பேசத் தெரிந்தும் பேசாத குழந்தை (அதுவும் குழந்தை) என்று ஒன்று இருக்கும் என்று என்னால் நம்ப முடியவில்லை..
2. பொதுவாகவும் என் அனுபவத்திலும் நான் கண்டதெல்லாம் கர்ப்பிணி மனைவியை அதிகமாக (சில சமயம் போலியானதும்) பாசத்துடன் கவனித்துக் கொள்ளும் ஆண்களே.. குழந்தையை எதிர்பார்க்கும் தம்பதிகள் தினமும் கத்தி சண்டை போடுகிறார்கள் என்றால்.. ஒன்று, கணவனோ, மனைவியோ வேறு தொடர்பு வைத்திருக்க வேண்டும்.. அல்லது இருவரில் ஒருவர் போதைக்கு அடிமையாக இருக்க வேண்டும்
ஒரு காரணமும் இல்லாமல் கத்தி கத்தி சண்டையாம்..ம்ம்ம்ம்ம்
3. கதையின் அடிமடியிலேயே கை வைக்கிறேன்.... தெருத் தெருவாகவும் காடு காடாகவும் அந்த சிறுமியை வைத்துக் கொண்டு சுற்றுவதையும் விட எளிதாக ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றால்.. இதை விட நல்ல பலன் கிடைத்திருக்கும்.
படிப்பதற்கு கொஞ்சம் நல்லாயிருக்கு அந்த புனைவு.. ஆனால் தாக்கம் ஏற்படுத்துகிறது என்றும் சொல்ல முடியுமா??
அந்த சுட்டி கொடுத்ததற்கு நன்றி..
சீதா
பகிர்வுக்கு நன்றி.இந்த திரைப்படத்தில் நிறைய காட்சிகளில் மனநல சிகிச்சைமுறைகள் மிக நுணுக்கமாக சொல்லப்பட்டிருந்தது.அதே சமயத்தில் மனநல காப்பகங்களில் நிகழும் குரூரங்களையும் சுட்டத் தவறவில்லை.உங்களைப் போன்ற மருத்துவர்களுக்கு நிச்சயம் இத்திரைப்படம் நல்ல உந்துதலாக இருக்கலாம்.முடிந்தால் ஒரு முறை பார்த்துவிடுங்கள்..
அனானி
புனைவு v யதார்த்தம் என்பதினை சரியாய் புரிந்து கொள்ளுங்கள். புழக்கத்தில் உள்ள அடிப்படை சட்டதிட்டங்களுக்குட்பட்டுதான் ஒரு கதை எழுதப்படவேண்டுமென அவசியமில்லை.அப்படி யதார்த்தம் மீறாதிருக்க வாரமலரோ,குமுதமோ தரும் ஒரு பக்க கதைகளை படித்து அபத்தம் மீறாமலிருக்கிறதென மகிழ்ந்து கொள்ளலாம்.
எஸ் ராவின் மொழியின் மீது எனக்கு சில விமர்சனங்களிருப்பினும் இப்புனைவில் அது எல்லை மீறாதிருந்ததாகவே உணர்ந்தேன்.கிளிட்சே அல்லது மிகுந்து சொல்லப்படுவதென்பது எஸ் ரா கதைகளில் இயல்பானது :)
ஒரு தந்தையின் உணர்வை நெக்குருகி சொல்லியிருக்கிறார்.சுகி போன்ற கதாபாத்திரங்கள் இதற்கு முன்பு நான் படித்திராது.மேலும் பறவைப் புனைவுகள் ஒரு வித மயக்கத்திலாழ்த்தியது..இவையே இப்புனைவை நான் விரும்பக் காரணமாகவிருந்தன.
மாறாய் கதையில் புகுந்து அதை அப்படி செய்திருக்கலாம் இப்படி செய்திருக்கலாம் என்பதெல்லாம் உங்களின் வாசிப்பின் தரத்தை உறுதிபடுத்துகின்றது.
நன்றி
கவிதைகள் சிறப்பு.
பாடலாசிரியன் கண்ணதாசனுக்குப் பிறகு வெறும் குறுக்கெழுத்துப் போட்டியாளன் போலத்தான் தென்படுகிறான். நீங்கள் சொல்லும் திறமையினால், சில நல்ல கவிதா வரிகளும் கிடைக்கின்றன. இசையும் சந்தமும் கவிதையை அடிமையாக்கி விட்டதில், திரை இசை பாடல்கள் ஒரு இசை மற்றும் காணும் அனுபவமே ஒழிய கவிதை ஒரு அழகான, அரிய விபத்தாக நிகழ்கிறது.
தமிழின் வார்த்தைகள் போதுமானவையாக உள்ளதா? ஆங்கிலத்தின் பரப்புடன் ஒப்பிட முடியாது மற்றும் கூடாது எனினும், ஒரு தொல்மொழி இன்னும் அதிக வார்த்தைகளை புழக்கத்தில் வைத்திருக்கவேண்டும் என்று படுகிறது. இங்கு நான் கையாண்ட 'அதிகமான' என்ற பதமே சிலருக்கு அந்நிய மொழி என்றும் தவிர்க்கப்பட வேண்டியது என்றும் தோன்றுகிறது. தன்மான உணர்ச்சியை சோதித்தாலும், பிற மொழிச் சொற்கள் என்று நாம் தீர்மானித்தவைகளை நம் மொழிக்குள் அரவணைக்க மறுத்தால், ஒரு ஐம்பத்து ஆண்டுகளில் ஹிந்தி போன்ற மொழிகள் தமிழைவிட பெரும் பரப்பு மிக்கதாக விளங்கும்.
நீங்கள் பல விடயங்களை ஒரே பதிவில் தொடுவதால், பின்னூட்ட சரித்திரத்தில் மன்னிக்கவும் வரலாற்றில் முதன் முறையாக 'தொடரும்' போடுகிறேன்.
அனுஜன்யா
.' இதுபோல பேசத் தெரிந்தும் பேசாத குழந்தை (அதுவும் குழந்தை) என்று ஒன்று இருக்கும் என்று என்னால் நம்ப முடியவில்லை..'
இந்தக்கதையை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் பேசத்தெரிந்துகொண்டே பேசாமல் இருப்பது என்பது ஒரு மனநல வேறுபாடு... இதுபோல பேசத் தெரிந்தும் பேசாத குழந்தை (அதுவும் குழந்தை) என்று ஒன்று இருக்கும் என்று என்னால் நம்ப முடியவில்லை..
அதற்ற்க்கு selective mutism என்று பெயர். கூகிள் செய்தால் தெரியும்..
கடந்த மாதம் நான் assess செய்த குழண்தைக்கு ஐந்து வயது. அவனுக்கு செலக்டிவ் ம்யுடிஸ்ம் தான். தயவு செய்து இது மேலனாட்டினரில் அன்பு இன்மையின்ம்மையால் வருகிறது என்று சொல்லவேண்டாம். இந்தியாவிலும் உண்டு.
தொடரும் போட அனுமதித்ததற்கு நன்றி.
காமரூபிணி விடயத்தில் நான் கிருத்திகா கட்சி. என்ன, அவர் சிரமப்பட்டு முடித்து விட்டார். நான் ஆரம்பித்ததோடு சரி. அந்த மொழி பிடிபடவில்லை. சுண்டியிழுக்கும் நடை இல்லாததை ஒரு முக்கியத் தகுதி என்று பல பெரிய எழுத்தாளர்களும் கருதுவது என்னளவில் வருத்தமே. ஆக, காமருபிணி தற்போதைக்கு என்னால் முடியவே முடியாது என்று ஒதுக்கி வைத்த calculus புத்தகம் பக்கத்தில் இடம் பிடிக்கிறது. ஆயினும் ஜெமோ விடயத்தில் நீங்கள் நிரம்பவே கறார் என்று படுகிறது.
எஸ்ராவின் கதை படித்தவுடனே மனதில் ஒட்டிக்கொண்டது. அதைப் பற்றி நீங்களும், அது உளவியல் ரீதியில் 'selective mutism' (selective என்று டைப் செய்தாலே அம்னிஷியா உடனே தானே டைப் செய்துகொள்கிறது சே!) என்று விளக்கிய மருத்துவர் சீதாவும் சொல்லியபின் ஒன்றும் சொல்வதற்கில்லை.
நல்ல படங்கள் பற்றிய ஆவல் இருப்பதோடு சரி. ஒரு ஆளு பல விடயங்கள் எழுதினால், 3-4 ஆட்கள் தேவைப்படுகிறார்கள் அதனை அலச. கதைக்கு கிருத்திகா; படத்துக்கு ரௌத்ரன்; உளவியல்/மனப்பிறழ்வு பற்றி சீதா; நாங்கள் கேட்க அஞ்சும் கேள்விகள் கேட்க அனானி; உங்கள் கவிதைகள் பற்றி விரிவாக அலசிய(!) நான்.
நல்ல பதிவுக்கு நன்றி அய்யனார்.
இரு பாகங்களாய் வரலாற்றுச் சிறப்பு மிக்க பின்னூட்டமிட்டதிற்கு நன்றி அனுஜன்யா :)
ஒவ்வொன்றும் தனித்தனி பதிவாய் இடுவது வடிவ ரீதியினாய் சரியாகவிருக்கலாம்.இதுபோன்ற குறிப்புகள் இப்படி பின்னூட்டங்களின் மூலம் விரிவாய் பேசிக்கொள்ள வழிவகுக்கின்றன.சரியான புரிதலுக்கும் தொடர்ச்சியான அன்பிற்கும் நன்றி..
சீதா
மேலதிக விவரங்களுக்கு நன்றி.புதிதாய் ஒரு விதயத்தை தந்திருக்கிறீர்கள் எஸ் ரா வின் அச்சிறுகதையை அணுக மேலும் உதவியாய் இருந்தது உங்களின் குறிப்பு மிகவும் நன்றி...
ayyanaar,
just read the story. from what i read to me it is not very clear as to if it is selective mutism.on the other hand it is almost like autism or intellectual disability. the writer here probably wants to talk of an ill prepared man becoming a father and the related anguish rather than the diagnosis per se. also he has touched upon the wife's mental health issues pertaining to pregnancy...another huge topic.i am not sure why he has taken too many mental health topics in one go.
I Know why the Caged Birds Sings (Taschenbuch)
von Maya Angelou..is about the authour's selective mutism. have not read the book
அனுஜன்யாவின் இந்த பின்னூட்டம் நல்லாருக்கு...
..."நல்ல படங்கள் பற்றிய ஆவல் இருப்பதோடு சரி. ஒரு ஆளு பல விடயங்கள் எழுதினால், 3-4 ஆட்கள் தேவைப்படுகிறார்கள் அதனை அலச. கதைக்கு கிருத்திகா; படத்துக்கு ரௌத்ரன்; உளவியல்/மனப்பிறழ்வு பற்றி சீதா; நாங்கள் கேட்க அஞ்சும் கேள்விகள் கேட்க அனானி; உங்கள் கவிதைகள் பற்றி விரிவாக அலசிய(!) நான்."
:)
//ஜெய மோகனின் காமரூபினி படித்தேன்.ஜெமோவின் அடுத்த படியென நண்பர் ஒருவரால் சிலாகிக்கப்பட்டிருந்த அளவிற்கு இதில் ஒன்றுமில்லை.பெண்ணை தொடைகளாய், முலைகளாய், யட்சியாய், காமாந்தகியாய் மட்டுமே பார்க்கத் தெரிந்த புனிதர்.//
அவரது 'வாசகி' பதிவில் கீழே சுட்டியிருக்கும் பத்தியிலுள்ள தடித்த எழுத்துக்களைப் பார்க்க:
எனக்கு அவள் என்னை வேறு யாரோ என்று புரிந்துகொண்டிருப்பதாகவே தோன்றியது. அவள் மீண்டும் அந்த சைகையை செய்தாள். நான் ”கியா?”என்றேன் ”பாஞ்ச் ருப்யா” என்றாள். என் ரத்தமெல்லாம் தலைக்கு ஏறியது. தொடை தனியாக நடுங்கியது. ”ஜாவ் ஜாவ்”என்றேன். குரல் வெளிவரவில்லை. ”தோ ருப்யா பாயி” ”ஜாவ்!” என்று கூவியபோது என் குரல் விசித்திரமாக உடைந்திருந்தது. நுனிநாக்கை நீட்டி சீண்டுவது போல சிரித்தபடி ”ஏக் ருப்யா?”என்றாள். ”ஜாவ்”என்றபடி தரையில் கல் ஏதும் கிடக்கிறதா என்று பார்த்தேன். அவள் விலகிச்சென்று நின்று சிரித்தாள்.
பயத்திலும் காய்ச்சலிலும் விளைந்த உப செயல் என்றில்லாமல், சைகை காட்டிய பெண்ணை (சிறுமி என்று கூடச் சொல்லவில்லை) எதிர்கொள்ளக் கல்லைத் தேடுவது என்ன விதமான எதிர்வினை என்று தெரியவில்லை! இதை எழுதிய நேர்மை(இந்தக் கோணத்தைப் புரிந்தே எழுதப்பட்டிருந்தால் மட்டுமே கூறக்கூடியதான நேர்மை - அப்படியானதொன்று இதுவென எனக்குத் தோன்றவில்லை!!)யைப் பாராட்டுவதா, அல்லது இந்த சந்தர்ப்பத்தில் கல்லைத் தேடும் மனத்தின் இயக்கத்தை நினைத்து அதிர்வதா என்று தெரியவில்லை!! எழுத்து மனத்தின் பித்து (எனப்படுவது) கொடூரத்தின் சால்வையைப் போர்த்தியே திரிவது ஒரு சர்வசாதாரணமான செயலாயினும் கூட, இந்தக் கொடூரத்தைப் (சிறுமியின் வாய் செய்ததல்ல, கல்லைத் தேடிய சிந்தனையின் கொடூரம்) படித்தபோது ஒருகணம் சிந்தனையிழந்து விறைத்துப்போவதைத் தவிர்க்கமுடியவில்லை. கொடுமை. சும்மா குறைசொல்வது போலத்தான் தெரியும் - வாசகனின் நோக்கம் வாசகனுக்கு மட்டுமே, அதுதான் அவன் தலையெழுத்தும் கூட.
-சன்னாசி.
சன்னாசி
வாசகி யை படித்திருக்கவில்லை..பித்தடைந்த மனங்கள் படைக்கும் குரூரத்திற்கும் ஆதிக்க மனம் படைத்த மேதாவித்தனத்திற்குமான வித்தியாசங்களை புரிந்து கொள்ளமுடியாமல் இல்லை..குறை சொல்லிக்கொண்டேயிருப்பது சற்று சலிப்பாக இருந்தாலும்.உண்மை அப்படித்தானிருக்கிறது.
விளிம்பைக் கல்கொண்டெறிய முனையும் மனதின் புனிதங்களை எப்படி தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் எனத் தெரியவில்லை சன்னாசி..நன்கு படித்த விவரமான புத்தி கொண்ட புத்திஜீவிகளுக்கும் இதுபோன்ற குரூரங்கள் தட்டுப்படாமல் போவதுதான் கொடுமை...
//எனக்கு அவள் என்னை வேறு யாரோ என்று புரிந்துகொண்டிருப்பதாகவே தோன்றியது. அவள் மீண்டும் அந்த சைகையை செய்தாள். நான் ”கியா?”என்றேன் ”பாஞ்ச் ருப்யா” என்றாள். என் ரத்தமெல்லாம் தலைக்கு ஏறியது. தொடை தனியாக நடுங்கியது. ”ஜாவ் ஜாவ்”என்றேன். குரல் வெளிவரவில்லை. ”தோ ருப்யா பாயி” ”ஜாவ்!” என்று கூவியபோது என் குரல் விசித்திரமாக உடைந்திருந்தது. நுனிநாக்கை நீட்டி சீண்டுவது போல சிரித்தபடி ”ஏக் ருப்யா?”என்றாள். ”ஜாவ்”என்றபடி தரையில் கல் ஏதும் கிடக்கிறதா என்று பார்த்தேன். அவள் விலகிச்சென்று நின்று சிரித்தாள்.
//
இப்படி எழுதப்பட்ட ஒரு பகுதியை, அதனைத் தொடர்ந்து அங்கிருந்த குழந்தையைப் பற்றியும், அங்கே வரும் ஒரு வாடிக்கையாளரைப் பற்றியும், அவர்கள் ஒதுங்கும் கழிப்பறையைப் பற்றியும் மொத்தமான ஒரு பகுதியிலிருந்து பிரித்து
//விளிம்பைக் கல்கொண்டெறிய முனையும் மனதின் புனிதங்களை //
இப்படி வகைப் படுத்துவது ஏன் என்று புரியவில்லை. :-((
ஜெமோவின் எழுத்திற்கும் உங்களின் வகைப்படுத்துதலுக்கும் உள்ள வேறுபாடு அந்த இரயில் நிலையத்தின் கழிப்பறைக்கு அருகே நிற்பதற்கும், கணிணியின் முன் அமர்ந்து கொண்டு பொழுதுபோக்காக சாட்டுவதற்கும் உள்ள வேறுபாடு தெரிகிறது.
ஜெமோவின் ஏழாம் உலகம் விளிம்புகளை பல கோணங்களில் படம் பிடித்துதான் காட்டுகிறது. இதை ஒத்துக் கொள்வதில் எனக்கு எந்தவித 'முற்போக்கு இலக்கியவாதி' பட்டம் பற்றிய சிக்கலில்லை.
அனானி,
மிகச் சரியா வந்திட்டீங்க :)..அவர் எழுதினா அது கழிப்பறைக்கு பக்கத்தில நிக்கறது ..நாங்க எழுதினா பொழுதுபோக்கா சாட்டுவது..நல்லாருக்குங்க..எது உங்களை இப்படிப் பிரிக்கத் தோணுது?..இந்த மாதிரி பிம்பங்களை எப்படி உங்களால உருவாக்கிக்கொள்ள முடிகிறது?..எல்லாத்துக்கும் ஒரு சப்ப கட்டை அவரை விட அவரின் வாசகர்களாகிய உங்களால எப்படி சடக் னு புனிதப்படுத்திட முடியுது?அவர புரிஞ்சிக்கனும்னா உள்வெளியின் தரிசனத்தை காணத் துடிக்கும் பேராவல் இருக்க வாசகனால மட்டும்தான் முடியும் இல்லையா? மத்தவனுக்குலாம் மூள வளர்ச்சி இல்ல..அற்புதம்!! ..
இதென்னங்க..ஏழாம் உலகம் எழுதிட்டா வாசகி ய கொண்டாடனுமா?
இல்ல அவர் எடுக்கிற வாந்தியலாம் எழுத்தின் அமிர்த கலசம்னு ரெண்டுகைய குவிச்சி மண்டியிட்டு ஏந்திக் குடிக்கனுமா?உங்க மாதிரி வாசகர்களோட தீவிர துதி மனோபாவம் எரிச்சலையும் சலிப்பையும் ஒரே நேரத்தில தருதுங்க..
தயவு செய்து ஒண்ண மட்டும் புரிஞ்சிக்கங்க..அவரு எழுதிக் கிழிக்கறதுதான் எலக்கியம் கழிப்பறைக்கு பக்கத்தில நிக்கிறது அல்லது கழிப்பறைய பதிவு செய்யறது இங்க யாராச்சிம் எதாச்சிம் பேட்டா அது பொழுது போக்கா சாட்டுவது ங்கிற முடிவுக்கெல்லாம் நீங்களா வராதீங்க...பொழுதத்தான் போக்கனும்னா அதுக்கு நெறய வழி இருக்கு..ஜெமோ வலாம் படிச்சி நொந்து நூலாக வேண்டிய அவசியமில்ல...
//உங்க மாதிரி வாசகர்களோட தீவிர துதி மனோபாவம் எரிச்சலையும் சலிப்பையும் ஒரே நேரத்தில தருதுங்க..//
எனது எழுத்தில் எங்கே 'துதி பாடுதல்' இருக்கிறது என்று எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்கும்.
சன்னாசி மற்றும் உங்கள் கருத்தில் தெரியும் nitpicking மனப்பாண்மையை எடுத்துச் சொல்லவே முந்தின பின்னூட்டம். மற்றபடி நீங்கள் வாந்தியை இரண்டு கையேந்தி குடிக்கவும் வேண்டாம், முற்போக்குவாதி பட்டதிற்காக குற்றவாளிக் கூண்டில் ஏற்றி நிறுத்தவும் வேண்டாம்.
அனானி
உங்க ஒட்டு மொத்த பின்னூட்டமே சப்பைக்கட்டு அல்லது துதிக்கான வெளிப்பாடுதான்..ஜெமோ பாணியில சொல்லப்போனா உங்களுக்கு Consciousness ரொம்ப கம்மியா இருக்கு வாசிப்பு எழுத்து இதுலாம் சும்மா பொழுது போக்கா பண்ணாம கூடுதல் கவனத்தோட பண்ணுங்க..
பி.கு நீங்கள் ஒரிஜினலாய் வந்திருந்தால் இந்த சிறு எள்ளலை தவிர்த்திருப்பேன்.ஜெமோ வின் ரசிகர்கள் பெரும்பாலும் முதுகெலும்பற்றவர்கள்.
எப்போது \'பேன்பார்ப்பது\' \'கூரிய வாசிப்பாக\' மாறுகிறது என்று கண்டுணர்ந்தவர்கள் சொல்கிறீர்கள், சரிதான். \'நைனிடால்\' கதையின் இறுதியில், \'இத்தனை விளக்குகள் சுற்றிலும் இருக்கிறதே, ஏரியின் அடியில் இருக்கும் தண்ணீரில் வெதுவெதுப்பு இருக்காதா\' என்று கதாபாத்திரமொன்று கணவனிடம் கேட்கும் - அந்த வாக்கியத்தை மட்டும் கதையிலிருந்து முற்றிலுமாகத் துண்டித்து எடுத்து, \'இப்படிப்பட்ட முட்டாள்தனமான பாத்திரங்களைப் படைப்பது சரியா\' என்றும், அந்த விளக்குகளுக்குப் பதில் நைனிடாலின் வெகு பிரத்யேகமான நைனிடால் மெழுகுவர்த்திகள் கதையினுள் இல்லாதது ஒரு பெரும் குறை என்றும், விஷ்ணுபுரத்தில் திருத்துழாய் குறித்து ஏதும் இல்லையே என்றும், \'தாண்டவம்\' கதையை எழுதியதற்காக மிருகவதைச் சட்டத்தைப் பாய்ச்ச வேண்டுமென்பதும், தாண்டவத்து யானை காட்டில் கிரிதரனுக்கும் அய்யருக்குமான விவாதங்களில் திரும்ப வருவதை யூஸ் ஆஃப் ரா மெட்டீரியல்ஸ் என்று எழுதுவதும் வேண்டுமானால் பேன்பார்ப்பதென்று சொல்லலாம் ;-) - எழுத்தாளனின் படைப்புக்களின்மேலோ எழுத்தாளன் மேலோ கேவலமான குற்றச்சாட்டுக்களை வைப்பதல்ல இந்த \'பேன்பார்த்தலின்\' நோக்கம்.
இதற்கு மேல் இதை விவாதிப்பதாக இல்லை - சிலருடன் விவாதிப்பது ஆயாசம் தரக்கூடியதும் நேரத்தைக் கொல்லக்கூடியதுமான விஷயம் (\'bun\' intended).
-சன்னாசி
இந்த விவாதத்தை தொடர்ந்து எடுத்து செல்வதில் எனக்கும் எந்த விருப்பமும் இல்லைதான். ஜெமோவின் 'துதிபாடுதல்' இவ்வளவு சுலபமாக இருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆகையால் இலக்கிய பீடத்தின் மேலிருப்பவர்கள் மன்னிப்பார்களாக.
இப்பொழுது சொல்லவந்தது இரண்டு விசயங்கள்தான்.
-சன்னாசியையும் அய்யனாரையும் பல்வேறு தடவைகள் ஊன்றிப் படுத்தி இதைவிட வெளிப்படையாகவே 'துதிபாடிக்' கொண்டுதான் இருந்து வந்திருக்கிறேன். தனக்கு ஒத்த கருத்தை சொல்லும்போது உற்சாகம் பீறிடுவதும், மாற்றுக் கருத்தை (இரு வரிகளாகவே இருந்தாலும்) ஆயாசம் வருவதும் சாமான்யருக்கு (மட்டும்) அழகுதான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
- அனானியாக வந்து 'சன்னாசி' என்று கையெழுத்திட்டால் அதுவே சமூக பாதுகாப்பு அட்டையாக இருக்கும் என்று தெரியாது. என்னை ஒரு 'பன்னாசி' என்று நினைத்துக் கொண்டு நீங்கள் எள்ளலை குறைத்துக் கொண்டோ, கூட்டிக் கொண்டோ வைத்துக் கொள்ளலாம்.
இனி ஆயாசம் தராத கருத்துகளை மட்டும் 'சொறியும்' ஆசையுடன்.
- முதுகெலும்பை உருவிவிட்டுக் கொள்ளும்
பன்னாசி
அனானி
மாற்றுக்கருத்துக்களை முன் வைக்கும்போது சொந்த பெயரில் வருவது சில தர்மசங்கடங்களை தவிர்க்கும்.தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாத ஒருவருக்கு மிக பொறுப்பாய் பதில் சொல்வதென்பது மிகக் கடினமானது.போகிற போக்கில் கேட்கப்படும் மாற்றுப்புரிதல்கள் ஏற்படுத்தும் உணர்விற்குப் பெயர் சலிப்பாகவோ ஆயாசமாகவோகத்தான் இருக்க முடியும்.
இந்த இடத்தில் ஜெமோவின் காமரூபினியையும் வாசகியையும் விமர்சித்திருந்தோம்.நீங்கள் பிரதியை சுத்தமாய் தொடாது,என்ன கேள்வி எழுப்பி இருக்கிறோம் என்பதை சிறிதளவும் பொருட்படுத்தாது, போகிற போக்கில் 'பொழுது போக்க எழுதுகிறீர்கள்' 'எழுதிப்பார் தெரியும்' என்கிற முதல்வன் ரகுவரன் ரீதியிலாய் ஒரு ஷொட்டு கொடுத்துவிட்டீர்.இந்த திட்டவட்ட அறிக்கையை சொந்த பெயரில் சொல்லியிருந்தால் நேராகவே இருக்கும் முதுகெலும்பு என ஒத்துக்கொள்வதில் எனக்கெந்த ஆட்சேபணையும் இல்லை.
ஜெமோ வின் பிரதியின் மீதான மாற்றுக் கருத்துக்களை, விமர்சனங்களை, என் புரிதலின் அளவுகோல்களின்படி முன் வைத்திருந்தேன். நீங்கள் மிகச்சரியாய் புரிந்து கொண்டிருந்தால், அதை நேரடியாய், உங்களின் கருத்தாய், சொல்லியிருக்கலாம். என்னைப்போன்ற புரியாத அசமஞ்சஙகளுக்கு புரிவிக்க மெனக்கெட்டிருக்கலாம். ஆனால் நீங்கள் செய்தது கருத்துக்களை சொன்னவரை விமர்சித்தது மட்டுமே.'பேன் பார்க்கும்' பட்டம் வேறு இலவச இணைப்பு..போதாத குறைக்கு போலி முற்போக்குவாதி பட்டம்..உங்களின் பிரச்சினை என்னவென்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.இதில் சுயசொறிதலுக்கு ஆசைப்படுபவர் என்கிற இன்னொரு முடிவு.சடார் சடார் என கருத்துக்களை உங்களின் நண்பரைப்போலவே அள்ளித் தெளிக்கிறீர் :)
பி.கு
சன்னாசியின் மொழி நடையில் வேறு யாராலாவது எழுத முடியுமா என்பது சந்தேகமே. சன்னாசி அனானியாய் வந்து சன்னாசி எனப் பெயரிட்டாலே போதுமானது நீங்கள் பன்னாசி என்ற வலைப்பதிவை வைத்திருந்தால் உங்கள் மொழிநடை பரவலாய் எல்லாராலும் அறியப்பட்டிருந்தால் நீங்களும் அனானியாய் வந்து பன்னாசி எனப்பெயரிட்டாலும் போதுமானது..
//இதற்கு மேல் இதை விவாதிப்பதாக இல்லை - சிலருடன் விவாதிப்பது ஆயாசம் தரக்கூடியதும் நேரத்தைக் கொல்லக்கூடியதுமான விஷயம் //
அது நகைச்சுவைக்காகச் சொன்னது மட்டுமே (பன் உட்பட). அசலில் யாரையும் குறைத்துச் சொல்வது என் நோக்கமல்ல.
//அனானியாக வந்து 'சன்னாசி' என்று கையெழுத்திட்டால் அதுவே சமூக பாதுகாப்பு அட்டையாக இருக்கும் என்று தெரியாது.//
தவறுதான். அனாமதேயமாகவே போட்டு விட்டால் பிரச்னை இல்லைதான் - பாராட்டுவதை அனாமதேயமாகவும் குறைசொல்வதை ஏதாவதொரு அடையாளத்துடனும் சொல்வது நேர்மையான விஷயமென்று தோன்றும் - ஒருவேளை இது தவறாகவும் இருக்கலாம். இனி ப்ளாகரில் நுழைந்து பின்னூட்டம் இட முயல்கிறேன். சங்கடத்துக்கு அய்யனாரும் அனானியும் மன்னிக்க.
சன்னாசி எந்த சங்கடமும் இல்லை..உங்களின் மொழிநடையில் யாராலாவது எழுதிவிட முடியுமா என்ன :)
அனானி க்கு தேவையானது சில தற்பாதுகாப்புகள்தான்..விட்டுத் தள்ளுங்கள்..
Post a Comment