Friday, August 8, 2008

சில குரல்களும் நிறைய பம்மாத்துக்களும்


நிகழ் எப்போதும் யாராலாவது,எதனாலாவது பழிக்கப்பட்டோ பழிவாங்கப்பட்டோதான் வந்திருக்கிறது.எதையாவது ஒன்றினை சமாதானத்திற்காக,ஆறுதலுக்காக துணைக்கழைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது."நீ அப்படி பண்ண!அதுக்கான தண்டனை இது" இப்படி எதையாவது சொல்லித் தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.கிட்டத்தட்ட நினைவு தெரிந்த நாள் முதல் எனக்கிப்படித்தான் நேர்கிறது.சில பொழுதுகளில் "எனக்கு மட்டும்தான் இப்படியா?" என்றெல்லாம் சிந்திக்கத் தோன்றும்.கவிழ்ந்த மாலையில், தூக்கம் போன அதிகாலைகளில், இப்படி தன் சார்ந்த இரக்கங்களும் புலம்பல்களும் அதிகமாக இருக்கும்.என் நிகழை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது தோன்றும் சுய பச்சாதாபம் தாங்க இயலாதது.ஆரம்பகாலத்தில் சிகெரெட் புகைத்தேன்.அதன் எண்ணிக்கைதான் கூடியதே தவிர என்னை சமதளத்திற்கு கொன்டு வர அதனால் இயலவில்லை.பின்பு மது.இது கொஞ்சம் உதவி புரிந்தது.ஆனால் அது அடுத்த நாள் காலையில் இன்னும் குற்ற உணர்வுகளை அதிகப்படுத்தும்.என் குடும்பத்தில் யாருக்கும் எந்த பழக்கமும் இருந்திராததால் என் குடும்ப பரம்பரையையே இழிவுபடுத்தியதாய் உணர்வேன்.அடுத்த முறை குடிக்கும் தருணத்திற்கு முன்பு வரைக்கும் அந்த எண்ணங்கள் இருக்கும்.குடிக்கும்போது மட்டும் அந்த எண்ணங்களோ,குற்ற உணர்வுகளோ ஏற்படுவதில்லை.ஆனால் அடுத்த நாள் காலையில் மீண்டும் அதே எண்ணங்கள். இன்னும் அடர்த்தியாய்.இந்த தாங்கொணா வேதனையை என்னால் சரியாய் எழுத முடியவில்லை.ஒரு கட்டத்தில் குடிப்பதையும் நிறுத்திவிட்டேன். இப்போது 'மாற்று'க்கான எந்த வழியும் இல்லை.

இது போன்ற ஒரு சூழலில் நான் என்ன செய்திருக்க வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்கள்?.

0.தியானம் செய்வது.
அ.தற்கொலை பண்ணி செத்துப்போவது.
ஆ.காதலிப்பது.
இ.திருமணம் செய்துகொள்வது.
ஈ.திருமணமாகி இருந்தால் டைவர்ஸ் செய்வது.

0.தியானம் செய்வது:
முதலில் இந்த தியானம் என்னவென்றால் என்ன இழவென்று எனக்கு சரியாய் புரியவில்லை. ஒரு முறை சூப்பர் ஸ்டார் தியானம் செய்ததால்தான் சூப்பர்ஸ்டாரானேன் என ஒரு டிவி பேட்டியில் சொன்னாராம்.அதை அடியொற்றி எண்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ்குடிமகன்/ள் கள் தியானம் செய்தார்களாம்.பெரும்பாலான மகன்களின் மனத்திரையில் முலைகளும்,மகள்களின் மனத் திரையில் குறிகளுமாய் நினைவில் மோத,சிறிது நாட்களில் அதைக் கைவிட்டு வழமைக்கு திரும்பினார்களாம்.இதைச் செவி வழி கேட்டிருந்த நான் அந்த கருமத்தை முயற்சிக்காமலேயே இருந்தேன்.ஆனால் இந்த எண்ணங்களின் இம்சை பொறுக்கமாட்டாமல் இதை செய்துதான் பார்க்கலாமே என ஒரு முடிவினுக்கு வந்தேன்.எதையும் முறையாக தொடங்குவதில் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது.மொறையா சரக்கு ஊத்தி சைட்டிஷ் தொட்டு ச்சீ கருமம்..

ஒரு குருவின் மூலமாய் கற்றுக்கொள்வது சரியாயான வழி் என நண்பர் ஒருவர் சொன்னபடியால் நகரின் பிரதான குப்பைத்தொட்டி,குட்டிச்சுவர் மற்றும் காம்பவுண்டு சுவர்களில் சினிமா, மூல, பவுத்திர போஸ்டர்களோடு போஸ்டர்களாய் ஒட்டப்பட்டிருக்கும் தியான சாமியார்களின் விளம்பரங்களை வரிவிடாமல் படிக்கத் துவங்கினேன்.எல்லா சாமியார்களின் பெயர்களும் ஆனந்தாவில் முடிந்தது.ஒரு வேளை அவர்களிடம் போகும் நமக்கும் ஆனந்தம் பொங்குமோ என்னவோ?.

இறுதியாய் ஒரு சாமியாரைத் தேர்ந்தெடுத்தேன்.அவர் இளைஞராக இருந்ததும் ஒரு காரணம். ஒரு இளைஞன் மனச இன்னொரு இளைஞனாலதான் புரிஞ்சிக்க முடியும்..சாமியாருக்கு வயசு 24.ரொம்ப சின்ன வயசுலே ஞானம் அடைஞ்சிட்டாராம்.இந்த ஞானம் அப்படிங்கிறது இன்னாங்கிறதுதான் அடுத்த பெரிய டவுட்..மொதல்ல தியானம் அடுத்து ஞானம்..மலை சுற்றும் வழியிலிருக்கும் அவரின் ஆசிரமத்துக்குப் போனேன்.உள்ளே எங்கெங்கு காணினும் பெண்கள்.18 வயதிலிருந்து 25 வயதிற்குள் இருக்கும் பெண்களின் ஆடைகள் பச்சை நிறத்திலும், 25ல் இருந்து 35 வயதிற்குள்ளான பெண்களின் ஆடைகள் இளஞ்சிவப்பு நிறத்திலேயும், 35 ல் இருந்து 45 வயதுவரை அடர் நீலத்திலுமாய் ஆடைகள் (புடவை)அணிந்திருந்தார்கள்.இந்த கும்பல்ல என்னத்த தியானம் பண்ரது?..சரி இவ்ளோ தூரம் வந்துட்டமேன்னு அந்த நீளமான வரிசைல நிக்க ஆரமிச்சேன்.ரொம்ப தூரத்தில சாமியார் உட்கர்ந்திட்டிருக்கார்.சுத்தி கட்டை வேலி கட்டப்பட்ட நீளமான வரிசைல மெதுவா நகர்ந்து, நகர்ந்து கிட்ட போனேன்.கொஞ்ச தூரத்தில அவர் முகம் தெரிஞ்சது.அட! இந்த முகத்த எங்கயோ பார்த்திருக்கேன். இந்த சிரிப்பு,பேச்சு,முகம் எல்லாம் பழக்கமானதுதான்.இது..இது...இது... அய்யோ!! இளங்கோ அடப்பாவி!! இளங்கோ!! கண்டிப்பா இது இளங்கோதான் ..எனக்கு இவன நல்லா தெரியும். சண்முகா ஸ்கூல்ல படிச்சான்..அப்பவே யார்கிட்டயும் ஒட்ட மாட்டான்.என்ன விட ஒரு க்ளாஸ் கம்மி..ரமணாஸ்ரமத்துக்கு பின்னால இருக்க குளக்கரைல உட்கார்ந்து படிச்சிட்டிருப்போம். அப்ப இந்த பையனும் அங்க படிக்க வருவான்..என் கிட்ட நல்ல பேசுவான் ரெண்டு மூணு பேச்சு போட்டில கூட இவன பார்த்திருக்கேன்..இவன் எப்படி திடீர்னு இவ்ளோ பெரிய ஆளா ஆனான்?..என்ன நடக்குது நம்ம ஊர்லனே தெரிலயே..இதோ கிட்டக்கப் போய்ட்டேன்..இ..இ..இள..பேச்சு வரமாட்டேங்குது ..அவன் புன்னகைக்கிறான்.ஆசிர்வாதம் பன்றான்.ஒரு 23 வயசு பொண்ணு என்ன "நகர்ந்து போய்ட்டே இருங்க சார்!" ன்னு தள்ளுது.நான் வந்துட்டேன்.ரொம்ப குழப்பமா இருக்கு. இவன் எப்படி சாமியாரா ஆனான்?.ஏன் இத்தன பெண்கள் இந்த ஆசிரமத்துல?.ஒண்ணும் புரியல.தியான பயிற்சிக்கான அட்மிசனுக்கு தனி அலுவலகம் இருந்தது.அங்க ஒரு வெள்ளைக்கார பெண்மணி இருந்தாங்க. சொல்ல விட்டுப்போச்சு,இந்த வெள்ளைக்கார பெண்களுக்கு அடர் சிவப்பில் புடவை.அவங்க கலரும் புடவை கலரும் சேர்ந்து ஒரு மாதிரி பண்ணிடுச்சி.எனக்கு இதுலாம் சரிப்படாது. ஒரு வார பயிற்சிக்கு என் ஒரு மாச சம்பளத்த வேற கேட்டாங்க.ஒண்ணும் பேசாம வந்திட்டேன்.

அ. தற்கொல பண்ணி செத்துப்போவது.

இத பத்தி ஏற்கனவே நெறய சொல்லியிருக்கேன்.இப்பலாம் சொன்னதையே,எழுதினதயே திரும்ப திரும்ப சொல்றனான்னு ஒரு பிரம்மை வருது.எங்கனாச்சிம் போனா இந்த எடத்துக்கு ஏற்கனவே வந்திருக்கமோன்னு நிழலா சில எண்ணம் வருது.எனக்கு ஒரு மலையருவில இருந்து குதிச்சி செத்துப்போகனும்னு ஆசை.என் ஆத்மார்த்த ஸ்நேகிதியிடம் ஒரு முற இத பத்தி சொன்னேன்.அவ சொன்னத வச்சி ஒரு கவிதை கூட எழுதினனே.படிச்சிருப்பிங்கன்னு நெனைக்கிறேன்.திரும்பவும் அவகிட்ட இந்த ஆசைய சொன்னேன்.சரி செத்துப்போ ன்னு சொன்னா.நான் ஆவியா வந்து உன்ன பிடிச்சிக்கவான்னு கேட்டேன்.வந்தா பார்த்துக்கலாம் நீ மொதல்ல செத்துப்போன்னு சொன்னா.அப்புறம் நான் பேச்ச மாத்திட்டேனா இல்ல அவ கெளம்பி போய்ட்டாளான்னு தெரில.தற்கொலைலாம் சும்மா பேச்சுக்குதான் பாஸ்!.சும்மா கொஞ்ச நேரம் ஏதாச்சிம் பேசனுமேன்னு பேசனும்.அவ்ளோதான்.என் ஸ்நேகிதிக்கு தெரியும் என்ன பத்தி. இந்த மாதிரி ஏதாச்சிம் உளறினா கண்டுக்க மாட்டா.நீங்களும் பெரிசா கண்டுக்காதீங்க..

ஆ.காதலிப்பது

இது மேட்டர்.இந்த அய்டியா வ சொன்னவங்கள நான் ரொம்ப லைக் பண்றேன்.எனக்கு காதலிக்க பிடிக்கும்ங்க.இதுவரை எத்தனை பேரை காதலிச்சிருக்கேன்னு யாராச்சிம் டக் னு கேட்டா ஒடனே சொல்ல வராது.பத்து நிமிசமாவது டைம் எடுத்துக்குவேன்.உங்களுக்கு இன்னொரு ரகசியம் சொல்லவா? நான் காதலிச்ச எல்லாரும் என்னையும் காதலிச்சிருக்காங்க.அட ஆமாங்க.நெசமாத்தான் சொல்றேன்.காதல் ஒரு ஆர்ட் பாஸ்!.அட்டகாசமான கலை!!.மனச தொடனும் பாஸ்! மனச தொடனும்!!.ஒரு குழந்தைகிட்ட பெரிய மனுசத்தோரணை இல்லாம பேசினாத்தான் உங்ககிட்ட ஒட்டும்.அது மாதிரிதான் பெண்களும்.பெரும்பாலான மக்க என்னா பன்றாங்கன்னா பெண் அப்படின்னவுடனே ஏதோ வேற்று கிரக ஜந்து ரேஞ்சிக்கு பேச ஆரம்பிச்சிடுவாங்க. எக்கச்செக்கமா பதறி, உருகி, வழிஞ்சி, காத்திருந்து, பொலம்பி, கத வுட்டு, பந்தா பண்ணி, பிகு பண்ணி,.. இயல்பாவே எந்த ஆணும் ஒரு பெண்கிட்ட பேசுறதில்ல.சாதாரணமா எந்த உறவு நிலையிலும் உண்மையா இருந்தாவே அதில ஒரு 'க்ரிப்' இருக்கும்.எல்லார்கிட்டவும் எப்பவும் உண்மையா இருக்க முடியாது.ஆனா ஒரு பெண்கிட்ட பழகும்போது பெரும்பாலும் உண்மைய பேசினா அந்த பெண் சுலபமா நம்ம நம்ப ஆரம்பிக்கும். ஒருமுற நம்பிக்கை வச்சிட்டாங்கன்னா அதுக்கு பிறகு லேசில அது போகாது.ஆனா எல்லாமே டக் னு கலைஞ்சிடும் பாஸ்!. அதிகபட்சம் ஒரு ஆணும் பெண்ணும் ஆறு மாசத்துல இருந்து ஒரு வருசம் பழகுவாங்க. அப்புறம் சூழல், வேற மனிதர்கள் னு தடம் மாறி போய்டும். நீடித்த அன்பு, நிலைத்த உறவுன்னு ஒண்ணு கெடயவே கெடயாது.அப்படி இருந்தா அது போலித்தனமாத்தான் இருக்க முடியும்.இப்படி சொல்ரனேன்னு கோச்சிக்காதீங்க நம்ம இயல்பு அதான்.இவ்ளோ தெளிவா பேசுற. அப்புறம் இன்னாயா உனக்கு கொழப்பம்னு கேக்குறீங்களா?.அது அப்படித்தாங்க. எனக்கு எதில ஆர்வமும் அனுபவமும் இருக்கோ அதில நான் சுமாரான தெளிவா இருப்பேன்.இந்த அய்டியா எனக்கு ரொம்ப தெரிஞ்ச ஒண்ணுதாங்கிறதால இதாலயும் ஒண்ணும் பிரயோசனமில்ல பாஸ்!.

இ.திருமணம் செய்துகொள்வது
அட போங்க..அதான் மேலயே சொன்னனே.. தியான பயிற்சிக்கு போகற அளவுக்கு கூட சம்பாதிக்கல.அப்புறம் எந்த லட்சணத்தில கல்யாணம் பண்ணிக்கிறது?.எனக்குலாம் காதலோட சரிங்க.கல்யாணத்துக்குலாம் வழியில்லை.யாராச்சிம் வீட்டோட மாப்ளைன்னு கேட்டு வந்தாங்கன்னா ரெடியா இருக்கேன்.உங்களுக்கும் அப்படி யாரையாச்சிம் தெரிஞ்சதுன்னா சொல்லுங்க.

. இ க்கே வழியில்லை அப்புறம் எங்க ஈ?

இத படிச்ச ஒடனே உங்க மனநிலை எப்படியிருக்கு?.எரிச்சலா? குழப்பமா? இதுலாம் என்ன இழவுடா ங்கிற டென்சனா?எதுவா இருந்தாலும் சொல்லுங்க பாஸ்.இதுக்கும் புனைவுன்னே லேபிள் போட்டுடுறேன். நீங்களும் நம்பிடுங்க.

25 comments:

King... said...

\\\
நீடித்த அன்பு, நிலைத்த உறவுன்னு ஒண்ணு கெடயவே கெடயாது.அப்படி இருந்தா அது போலித்தனமாத்தான் இருக்க முடியும்
\\\

இந்த கருத்து உண்மையா அண்ணன்...

King... said...

\\\
இத படிச்ச ஒடனே உங்க மனநிலை எப்படியிருக்கு?.எரிச்சலா? குழப்பமா? இதுலாம் என்ன இழவுடா ங்கிற டென்சனா?எதுவா இருந்தாலும் சொல்லுங்க பாஸ்.இதுக்கும் புனைவுன்னே லேபிள் போட்டுடுறேன். நீங்களும் நம்பிடுங்க.
///

நம்பித்தானே படிக்கிறோம் ஆமா எனக்கு எதுவும் புரியவில்லை...

Sridhar Narayanan said...

'பம்மாத்து' தலைப்பில் மட்டுமல்ல பதிவு முழுவதும் விரவி இருக்கின்றது. உண்மையில் 'உண்மை' என்று ஒன்றுமே இல்லை என்பதுதான் உண்மை :-)

ரௌத்ரன் said...

//இத படிச்ச ஒடனே உங்க மனநிலை எப்படியிருக்கு?.எரிச்சலா? குழப்பமா? இதுலாம் என்ன இழவுடா ங்கிற டென்சனா?எதுவா இருந்தாலும் சொல்லுங்க பாஸ்.இதுக்கும் புனைவுன்னே லேபிள் போட்டுடுறேன். நீங்களும் நம்பிடுங்க.//

எல்லாம் கலந்த ஒரு கொழகொழப்பான மனநிலையத்தான் தருதுங்க.அதனால தான் நெருக்கமாவும் இருக்கு...

Anonymous said...

Hello I like You

Rasigar manram Aarambikkatatuma

Michael J.R

anujanya said...

நன்று அய்யனார். கதைசொல்லிக்கு பதிவு எழுதச் சொல்லிக் கொடுக்கலாம். தியான முயற்சிகளின் ஏமாற்றமும், தற்கொலையின் சூனியமும், காதலின் வலிகளும், திருமண இன்னபிறக்களின் சிக்கல்களும் இல்லாத அனுமதிக்கப்பட்ட போதை அல்லவா வலையுலகு. பின்னூட்ட எதிர்பார்ப்புகளைத் தவிர்த்தல் நலம். ரசித்தேன்.

ஆசிரமத்தின் வெவ்வேறு நிற ஆடைகளில் ஏதேனும் குறியீடு உள்ளதா?

அனுஜன்யா

கிருத்திகா ஸ்ரீதர் said...

"இதுக்கும் புனைவுன்னே லேபிள் போட்டுடுறேன். நீங்களும் நம்பிடுங்க."... நல்லாருக்கு :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா வந்திருக்கு அய்யனார்.

ஆறாவது ஐடியா : சும்மா இருங்க :)

சும்மா இருந்து
சுவடு பதியாமல்
நடந்து
மௌனமாய்ச் சிந்தித்து
நண்ப
சற்று
விச்ராந்தியாய் இரு - சுந்தர ராமசாமி

KARTHIK said...

// இத படிச்ச ஒடனே உங்க மனநிலை எப்படியிருக்கு?.எரிச்சலா? குழப்பமா? இதுலாம் என்ன இழவுடா ங்கிற டென்சனா?எதுவா இருந்தாலும் சொல்லுங்க பாஸ்.//

எல்லாமே கலந்துதான் இருக்கு

லேகா said...

//அதிகபட்சம் ஒரு ஆணும் பெண்ணும் ஆறு மாசத்துல இருந்து ஒரு வருசம் பழகுவாங்க. அப்புறம் சூழல், வேற மனிதர்கள் னு தடம் மாறி போய்டும்.//

அப்படியா அய்யனார்??!!ம்ம்ம்.........

Ayyanar Viswanath said...

கிங் மற்றும் லேகா அந்த கருத்த கதை சொல்லி மனநிலையா வச்சிக்கலாம்..:)

ஆமாம் ஸ்ரீதர் நன்றி உங்களின் புரிதலுக்கு....

நெருக்கத்திற்கு நன்றி ரெளத்ரன்

Ayyanar Viswanath said...

mike :)

அனுஜன்யா தொடர் கருத்துகளுக்கு நன்றி..ஒரு வித நம்பகத்தன்மைக்கு அல்லது நெருக்கத்தினுக்காகத்தான் அந்தப் 'பின்னூட்டக் குறி' சாயல்..உடைகளில் எவ்விதக் குறியீடும் இல்லை அது அப்படித்தானிருந்தது...

Ayyanar Viswanath said...

சுந்தர் உ க்கு அததான் நெனச்சேன் ஆனா இத எல்லாம் முயற்சி செய்திட்டு அதைத்தான் பண்ணமுடிகிறதென்பதால சொல்லாம விட்டாச்சி..கவிதைக்கு நன்றி

நன்றி கார்த்திக்

Ayyanar Viswanath said...

நன்றி கிருத்திகா

MSK / Saravana said...

நல்ல புனைவு.. [நம்பிட்டோம்]
:)

MSK / Saravana said...

//தற்கொலைலாம் சும்மா பேச்சுக்குதான் பாஸ்!.சும்மா கொஞ்ச நேரம் ஏதாச்சிம் பேசனுமேன்னு பேசனும்.அவ்ளோதான்.என் ஸ்நேகிதிக்கு தெரியும் என்ன பத்தி. இந்த மாதிரி ஏதாச்சிம் உளறினா கண்டுக்க மாட்டா.நீங்களும் பெரிசா கண்டுக்காதீங்க..//

இதுதான் உண்மை..

MSK / Saravana said...

//நீடித்த அன்பு, நிலைத்த உறவுன்னு ஒண்ணு கெடயவே கெடயாது.அப்படி இருந்தா அது போலித்தனமாத்தான் இருக்க முடியும்//

இது அதி அற்புத உண்மை..

:)

MSK / Saravana said...

//பெரும்பாலான மக்க என்னா பன்றாங்கன்னா பெண் அப்படின்னவுடனே ஏதோ வேற்று கிரக ஜந்து ரேஞ்சிக்கு பேச ஆரம்பிச்சிடுவாங்க. எக்கச்செக்கமா பதறி, உருகி, வழிஞ்சி, காத்திருந்து, பொலம்பி, கத வுட்டு, பந்தா பண்ணி, பிகு பண்ணி,.. இயல்பாவே எந்த ஆணும் ஒரு பெண்கிட்ட பேசுறதில்ல.//

மைண்ட்ல வைச்சிக்கிறேன்.. யூஸ் பண்ணிக்கிறேன்..

இராம்/Raam said...

// ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா வந்திருக்கு அய்யனார்.

ஆறாவது ஐடியா : சும்மா இருங்க :)

சும்மா இருந்து
சுவடு பதியாமல்
நடந்து
மௌனமாய்ச் சிந்தித்து
நண்ப
சற்று
விச்ராந்தியாய் இரு - சுந்தர ராமசாமி//

உங்க சினேகிதங்கள் எல்லாம் வந்தாச்சு..... இனி நாங்க என்ன சொல்ல????


ரொம்ப நல்லாயிருக்கு..... :)

கார்க்கிபவா said...

//நீடித்த அன்பு, நிலைத்த உறவுன்னு ஒண்ணு கெடயவே கெடயாது.அப்படி இருந்தா அது போலித்தனமாத்தான் இருக்க முடியும்//

நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரி என்றாலும் ஒரு ஆண்டுக்குள் முடிந்து விடும் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.இதற்கு விதிவிலக்குகள் உண்டா இல்லையா என்பதை தெரிந்துக் கொள்ள விழைகிறேன் நண்பரே...

கார்க்கிபவா said...

//ஆறாவது ஐடியா : சும்மா இருங்க :)//

உலகத்தில் முடியாத காரியம் உண்டென்றால் இதைத்தான் சொல்வேன்

Ayyanar Viswanath said...

சரவண குமார்
மிக்க நன்றி..

இராம் நன்றி

கார்க்கி
அந்த கருத்து கதை சொல்லியின் மனநிலையிலிருந்து சொல்லப்பட்டதுதான் நிச்சயமாக மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம்..

நன்றி..

Sundar சுந்தர் said...

//ஒரு குழந்தைகிட்ட பெரிய மனுசத்தோரணை இல்லாம பேசினாத்தான் உங்ககிட்ட ஒட்டும்.அது மாதிரிதான் பெண்களும்.//
நல்ல எழுதறிங்க! தொடர்ந்து வருவேன்!
//நீடித்த அன்பு, நிலைத்த உறவுன்னு ஒண்ணு கெடயவே கெடயாது.அப்படி இருந்தா அது போலித்தனமாத்தான் இருக்க முடியும்.//
அட அப்படியா? பெற்றவர்கள், பிள்ளைகள் மேல் வைக்கும் அன்பு கூடவா? பரஸ்பரம் எதிர்பார்த்து வைக்கும் அன்பு வேண்டுமானால் நீடிக்காமல் இருக்கலாம். உறவு வேண்டுமானால் நிலைக்காமல் போகலாம் ஆனால் மனதார ஒருவர் மேல் வைக்கும் அன்பு நீடிக்க முடியாது என்றால் உலகம் இயங்காது நண்பரே!

Anonymous said...

why did you spell oLindhu as oLiZhindhu?!?

யாழினி said...

நீடித்த அன்பு, நிலைத்த உறவுன்னு ஒண்ணு கெடயவே கெடயாது.அப்படி இருந்தா அது போலித்தனமாத்தான் இருக்க முடியும்
\\\

அப்படியா..? உண்மையா...? சொல்லுங்கப.. எனக்கு புரியலை...

Featured Post

test

 test