Monday, August 10, 2009

கொண்டாட்டமும் வெறுப்பும் (அ) பொழுதிற்கொரு முகம்

வ.வெ.தொ.அ.வெ.கு – 10

வியாழக்கிழமை மாலைகள் எப்போதும் உற்சாக வண்ணத்தை அணிந்திருக்கின்றன. அன்றைய தினம் மற்ற மாலைகளை விட வெப்பம் மிகுதியாக இருந்தாலும் கூடச் சகித்துக் கொள்ளலாம் என்கிற மனநிலை எப்படி வந்துவிடுகிறதெனத் தெரியவில்லை. புத்தகம், எழுத்து, திரைப்படம், பாழாய் போன ப்லாக் உலகம் என்கிற இத்தொடர் வஸ்துக்களுக்குச் சிறிதும் தொடர்பில்லாத நண்பர்கள் ஆங்காங்கே இருந்து தங்களது வருகையை மாலையிலிருந்தே அறிவிக்கத் துவங்குவர். நெரிசலான இடத்தில் குறுகலான ஆனால் சுதந்திரமான என் இருப்பிடம் தூங்கப் போகாத அன்றைய இரவை ஆவல் / எரிச்சலாய் எதிர்கொள்ளக் காத்திருக்கும். ஒவ்வொருவரும் அன்றைய தினத்திற்கான மிக விசேஷமான மதுவினை எங்கிருந்தாவது பெற வார நாளின் துவக்கத்திலிருந்தே முயற்சி செய்துகொண்டிருப்பர். சிவப்பு அல்லது வெள்ளை ஒயின், ரெட் அல்லது ப்ளாக் லேபிள், சிவாஸ் ரீகல் அல்லது பகார்டி என விதவிதமான தேர்ந்த மதுக்குப்பிகளோடு அறை நிறைவர்.

வியாழக் கிழமை மதியமே அறை வரும் நண்பன் வெயிலைப் பொருட்படுத்தாது நல்ல மீன்களைத் தேடிப் போவான். கிங்பிஷ், மத்தி, விரால், இன்ன பிற பெயர் தெரியா மீன்களைத் தேடிப் பிடித்து வாங்கி வருவான். மாலையில் சாவகாசமாய் அறை நுழையும் என்னைத் தேர்ந்த மீன் மணம் வரவேற்கும். கேலியும் கிண்டலும் நிரந்தரமாய் எல்லாரிடத்தும் தங்கியிருக்கும். பெரும்பாலான நண்பர்கள் என் சொந்த ஊரினைச் சேர்ந்தவர்களாதலால் மொழி தன்னுடைய போலித்தனத்தைக் களைந்து அதன் வேரைச் சூடி நிற்கும்.

பால்ய கால ஸ்நேகிதிகள், இடங்கள், தெருக்கள், சண்டைகள் விளையாட்டுகள் எனப் பேச்சுக்களை சொந்த நிலம் மட்டுமே ஆக்ரமித்திருக்கும். இயலாமைகள், தோல்விகள், இழந்தவைகள் மட்டுமே நினைவுகளில் தேங்கிவிடுவது வரமா? சாபமா? இரவு முழுக்கப் பேசுவதற்கான கதைகள் எல்லாரிடத்துமிருக்கின்றன. இசம்கள் தத்துவங்கள், நவீனத்துவங்கள் என எந்தப் பாம்பின் விஷம்களும் தீண்டியிராத இரவுகள் மிகுந்த ஆசுவாசமானவை. நேற்றைய இரவை “எங்கள் ஆசான்” விஜயகாந்தோடு கொண்டாடினோம். அவர் “பஞ்சா”க மட்டுமே பேசுகிறார் அல்லது பேசுவதெல்லாமே “பஞ்சா”க இருக்கிறது. தன்னை நோக்கிப் பாய்ந்துவரும் துப்பாக்கித் தோட்டாவை பல்லால் கவ்வித் திருப்பித் துப்பி வில்லனைக் கொல்வது, தன்னுடல் வலிமையின் மூலம் மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர்களை வெடித்துச் சிதற வைப்பது, பைக்கை ஹெலிகாப்டரில் மோதி சின்னா பின்னமாக்குவது போன்ற அதிபயங்கர சாகசங்களைக் காட்டிலும் அவரின் "பஞ்ச்" டைலாக்குகள் அதிஅதிபயங்கர விளைவுகளை எங்களிடத்தில் உண்டாக்கின. விஜயகாந்த் பேசும் ஒவ்வொரு டைலாக்கும் 'எப்பூஊடி' போட வைத்தது. ஒரு கட்டத்தில் 'எப்பூஊடி' சொன்ன நண்பர்கள் வாய் வலித்து நிறுத்திவிட்ட பின்பு அவர் பேசும் டைலாக்குகளுக்கு வீட்டின் சுவர்கள் 'எப்பூஊடி' என ஆரம்பித்தன. சுவர்களையும் குமைய வைக்கும் ஆற்றல் தமிழ்சினிமா கதாநாயகர்களுக்கே உள்ளது.

எப்போதும் இரவினுக்கு ஓரிரு மணிநேரங்களேயே மீதம் வைத்துவிட்டுத் தூங்கப்போவோம்.

நண்பர்கள் போன வெள்ளியிரவில் ஒரு நாள் தூங்கின சாத்தான் விழித்தெழும். கணினித் திரையில் தென்படும் தமிழெழுத்துக்களை விழி வயிற்றினைக் கொண்டுத் தின்றுத் தீர்க்கும். வன்மம், கோபம், ஆனந்தம், சிரிப்பு, எரிச்சல் என விழித் திரையில் எழுத்துக்கள் ஏற்படுத்தும் சலனங்களை நொடிக்கொருமுறை வெளித்துப்பிக் கொண்டிருக்கும். இப்போதெல்லாம் பெரும்பாலும் இச்சாத்தானுக்கு எரிச்சலுணர்வே மேலோங்கியிருக்கிறது. நள்ளிரவில் அது சடாரென எல்லாவற்றையும் உதறிவிட்டு மேலெழும். சேமிப்பிலிருக்கும் குறுவட்டுக்கள், இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டவை, நண்பர்களிடமிருந்து பெற்றவை எனக் குழப்பமாய் சிதறிக் கிடப்பவைகளிலிருந்து ஏதேனும் ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்து சாத்தானின் விழிகள் தின்ன ஆரம்பிக்கும். அது மீதமுள்ள இரவினுக்குப் போதுமானது.

வார இறுதிகளில் உரையாடலினி தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விடுவாள். எவ்வித மந்திர சக்தி கொண்டும் அவளிருப்பிடத்தைக் கண்டு பிடிக்க முடியாது. எல்லா சனிக்கிழமைகளும் அவளுக்கானதாய் இருக்க வேண்டுமென்கிற என் ஆவலினை அவள் சிறிதும் பொருட்படுத்துவதில்லை. பெரும்பாலான சனிக்கிழமை மதியங்களில் மாலைத் தேநீருக்கு அழைத்துக் கொண்டிருப்பேன் இல்லை மன்றாடிக் கொண்டிருப்பேன். அவள் திட்டவட்டமாய் மறுப்பாள். என் கத்தல்களையோ, கதறல்களையோ, ப்ளீஸ்களையோ, ஒரேஒருடைம்களையோ, இதான் கடேசிகளையோ, மிக சாவகாசமாகத் தாண்டிப்போவாள். இனி இயலாது என்றான பிறகு ஏற்படும் ஆத்திரத்திலும் வெறுப்பிலும் அவளைப் படு மோசமாய் திட்டுவேன். அதையும் மிக சுலபமாய் தாண்டிப் போவாள். அவளைப் போன்ற நெஞ்சழுத்தக்காரியை நான் பார்த்ததில்லை. கண்ணகி சிலைக்குப் பக்கத்தில் அவளுக்கும் ஒரு சிலையை என் ஆயுள் காலத்திற்குள் வைத்துவிடவேண்டும் என்பதுதான் என்னுடைய இப்போதைய விருப்பமாக இருக்கிறது.

புராண கால நாயகிகளைத் தன் நடவடிக்கைகளிலும் நவீனயுக விடிவெள்ளிப் பெண் தன்மைகளை மனதளவிலும் இவளால் எப்படி ஒரே நேரத்தில் பெற்றிருக்க முடிகிறது என்கிற ஆச்சர்யம்தான் கடந்த இரண்டு வருடங்களாக இவளின் பின்னால் என்னை அலைய வைத்திருக்கிறது. ஆச்சர்யங்கள் தீரும் வரை அலைந்து கொண்டிருக்க வேண்டியதுதான். மகிழ்வையும் வெறுப்பையும் அதனதன் உச்சங்கள் தொட எனக்குத் துணையாய் இருந்தவள் என்பதினால் வெறுப்பில் மகிழ்வையும் மகிழ்வில் வெறுப்பையும் கண்டின்புறும் சித்தன் மனநிலைக்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

சனிக்கிழமை மாலையை மட்டும் எதைக் கொண்டும் நிரப்பி விடமுடியவில்லை. தன் சார்ந்த துக்கமும், இயலாமையும், ஏமாற்றமும், கசப்புணர்வும், பெருகி வழியும். வியர்த்து வழிய நடந்தோ, புத்தகத்தில் தலையை விட்டுக் கொண்டோ, திரைப்படத்தில் மூழ்கியோதான் சனியிரவுகளை அரை குறையாய் கொல்ல வேண்டியிருக்கிறது. இரவு முழுக்கத் தூங்கியிராத ஞாயிற்றுக் கிழமை விடியல்கள் நரகத்திற்கு இணையானவை. எந்தச் சனியிரவும் என்னை அலைக்கழிக்காமல் போனதில்லை. எந்தச் சனிமாலையிலும் துணையிருந்ததில்லை. என் பிரியத்திற்குறிய நண்பர்களே, தேவதைகளே, தோழிகளே, காதலிகளே, நண்பிகளே நீங்கள் என்னை உண்மையாகவே நேசித்தால் சனி இரவுகளில் மட்டும் என்னோடு துணையிருங்கள்.
Post a Comment

Featured Post

தினசரிகளின் துல்லியம் - கிண்டில் வெளியீடு

தினசரிகளின் துல்லியம்             புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் சில உதிரிக் குறிப்புகள் உள்ளே.. 1.    தினசரிகள...