Tuesday, July 1, 2008

சமையலோடு சேரும் காதலும், கண்ணீரும்


Como agua para chocolate aka Like Water for Chocolate (1992)

மெக்சிகன் நாவலாசிரியையான Laura Esquivel வின் புகழ்பெற்ற நாவலைத் திரைப்படமாக்கியிருக்கிறார் Alfonso Arau (இவரின் கணவர்) இந்தப் புத்தகம் வெளிவந்த காலத்தில்(1989) மாந்தீரீக யதார்த்த கூறுகளுக்காக பெரிதும் சிலாகிக்கப்பட்டது. இத்திரைப்படத்தின் திரைக்கதையை எழுதியிருப்பவரும் லாராதான்.மாந்தீரீக யதார்த்தம் என்றால் வேற்றுகிரகவாசிகளாக கட்டமைப்பை நிறுவும் நவீனவியாதிகள் இத்திரைப்படத்தைப் பார்க்கலாம்.மெக்சிகோவில் 1890 லிருந்து 1930 வரைக்குமான குடும்ப அமைப்புகளின் கதைகளம்தான் இதன் சூழல்.ஒருவரிக் காதல் கதைதான் என்றாலும் படமாக்கிய விதமும், புதியதொரு சூழலும், சமதளத்திலிருந்து திடீர் திடீரென விலகிப்போகும் திரைக்கதையும், புதியதொரு அனுபவத்திற்கு உத்திரவாதமளிக்கிறது.காட்சிப்படுத்துதல்களை குறைவாய் செய்துவிட்டு கதைசொல்லி மூலமாக கதையை நகர்த்துவது சற்று சலிப்பைத் தந்தாலும் ஒரு நாவல் படித்த உணர்வை அடையமுடிகிறது.

Mama Elena சமையலறையில் வெங்காயத்தை வெட்டிக்கொண்டிருக்கும்போது பிரசவ வலி எடுத்து tita வை அம்மேசையின் மீது படுத்தபடி பிரசவிக்கிறாள்.அப்போது பனிக்குடம் உடைந்து நீர் படிக்கட்டுகளில் வழிந்தபடி ஓடுகிறது.அந்நீர் மறுநாள் உப்புகளாக படிந்திருக்கிறது அவ்வுப்புக்களை நான்கு சாக்குமூட்டையில் சேகரித்து வெகுநாட்கள் சமையலுக்கு பயன்படுத்தினார்களாம்.tita சமையல் தாதியுடன் வளர்கிறாள்.அவளது உலகம் சமையலறைதான்.pedro,tita வை காதலிக்கிறான் மூன்றாவது / கடைசி பெண்ணானதால் அவளின் தாய் tita விற்கு திருமணம் செய்ய மறுத்துவிடுகிறாள்.கடைசிப் பெண் தாய் உயிரோடு இருக்கும்வரை அவளை கவனித்துக்கொள்ளவேண்டுமென்பது அக்குடும்ப வழக்கமாய் இருக்கிறது.tita வை மணக்க முடியாதென உறுதியானதும் அவளின் அக்கா Rosaura வை மணந்து கொள்கிறான் pedro.கண்டிப்பும் பிடிவாதமும் கொண்ட தாயின் அன்பு கடைசி வரை tita விற்கு கிட்டாமலேயே போய்விடுகிறது.அவளின் பிடிவாதத்திற்கும் கண்டிப்புக்கும் காரணம் இழந்த அவளின் பழைய காதலாக இருப்பதை அவளின் இறப்பிற்கு பிறகு அறிந்துகொள்கிறாள்.வாழ்வும் யதார்த்தமும் tita வையும் pedro வையும் சுழற்றி அடிக்கிறது இறுதியில் tita வின் உறுதியான காதல் நீர்த்துப்போகாமல் pedro வுடன் சேர்கிறாள்.

மாந்திரீக யதார்த்த திரைப்படங்களென்றால் இதுதான் என்று சரியாய் அடித்துக்கூற தயக்கமாய் இருக்கிறது அறிபுனைவு / மாந்திரீக யதார்த்தம் இரண்டுக்குமான வித்தியாசங்களை யாராவது தலையில் அடித்து சொன்னால் புண்ணியமாகப் போகும்.என்னளவில் kubric ன் 2001: A Space Odyssey யை அறிபுனைவுத் திரைப்படமாகவும் அந்திரேய் தர்க்கோயெவ்ஸ்கியின் solaris திரைப்படத்தை மாந்திரீக யதார்த்தவியலிலும் வகைப்படுத்த முடிகிறது.Big fish படத்தின் இறுதிக் காட்சி வினோதங்களை கண்முன் கொண்டு வந்து புதுத் தளத்திற்கு கூட்டிச் சென்றது.இந்தத் திரைப்படத்தை பொறுத்தவரை அறிபுனைவுக் குழப்பங்கள் எதுவுமில்லை. Rosaura வின் திருமண விருந்திற்காக நள்ளிரவு வரை விழித்திருந்து செய்யப்படும் கேக்கில் tita வின் கண்ணீரும் கலந்திருக்கிறது விருந்தில் அக்கேக்கை சாப்பிடும் அனைவரும் நதிக்கரை ஓரமாக நின்றபடி தேம்பி தேம்பி அழுகிறார்கள்.திருமண விருந்து பாழாகிறது.tita எவ்வித மனநிலையில் உணவைச் சமைக்கிறாளோ அதே உணர்வு அதை உண்பவருக்கும் ஏற்படுகிறது.pedro பரிசளித்த ரோஜாப்பூ இதழ்களை கொண்டு சமைக்கப்படும் உணவு மூலமாக tita, pedro வை உணர்வு பூர்வமாக அனுபவிக்கிறாள் இருவரின் உடலும் ஒன்றாகும் உணர்வை இருவராலும் உனரமுடிகிறது.

சிண்ட்ரெல்லா தேவதைக் கதாபாத்திரத்தை நினைவூட்டும் tita வை மறக்க சில நாட்கள் பிடிக்கலாம்.tita வின் இன்னொரு அக்கா Gertrudis ஒரு புரட்சிக்காரனோடு ஓடிப்போகிறாள்.மிகக் கட்டுப்பாடான குடும்ப சூழல் அவளை அவ்வாறு நிர்பந்திக்கிறது.மெக்சிகன் புரட்சியும் இத்திரைப்படத்தின் சூழலில் பதிவு செய்யப்படுகிறது.குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கும் Gertrudis ஐ 'அப்படியே' குதிரையில் தூக்கிச் செல்லும் காட்சி கனவுத் தன்மையை கொண்டு வருகிறது.
tita வின் சமையல் ருசியின் ரகசியத்தை கேட்கும் பெண்களுக்கு tita சொல்வது சமைக்கும்போது சிறிது அன்பையும் சேருங்கள் என்பதாகத்தான் இருக்கிறது. இதை வெகு காலத்திற்கு முன்பிருந்தே என் அம்மாவிடம் வம்பு சண்டை வாங்கும் நோக்கில் சொல்லிவந்திருக்கிறேன் :) மேலும் சமீபகாலமாய் என் சமையலுக்கான ரசிகர்கள் அதிகரித்த வண்ணமிருக்கிறார்கள் இதற்கு காரணம் சமைக்கும் போது உச்சஸ்தாயில் கேட்கும் பாடல்களும் உற்சாக மிகுதியுமே என்ச் சொல்வதில் தவறேதுமில்லை.

சமையல் தாதிக்களாக வரும் nacha மற்றும் chencha பாத்திரங்கள் சாமான்யர்களின் மிகுந்த அன்பை வெளிக்கொணரும் அழகான படைப்புகள்.புரட்சியின் இன்னொரு முகத்தினை தொட்டுச் செல்லும் காட்சி ஒன்றும் வருகிறது mama elana யையும் chencha வையும் எதிர் கும்பலொன்று சூறையாடுகிறது.tita தன் சமையல் மூலம் rosaura வை பழிதீர்ப்பதாகவும் இத்திரைப்படத்தை அணுகலாம் அல்லது அவளின் உணர்வுகள் அவ்விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் புரிந்துகொள்ளலாம்.rosaura வின் குழந்தைக்கு பாலூட்டுவதின் மூலமாக கன்னித்தாய் அல்லது நமது சூழல் நீலியின் குணாதிசயங்களாகவும் tita வின் பாத்திரம் விரிகிறது.ஒவ்வொரு காட்சிகளும் தன்னகத்தே கொண்டிருக்கும் விரிவுகள் திரைப்படத்திற்கான பன்முக வாசலைத் திறக்கிறது.இறுதிக் காட்சி ஏற்படுத்தும் தாக்கம் வினோதமானது tita வுடனான கலவின் உச்சக்கிளர்ச்சியில் மூச்சடைக்கிறான் pedro. தன்னை முதலில் எரித்துக்கொண்டு சகலத்தையும் தீயிலிட்டு அழிக்கிறாள் tita.
Post a Comment

Featured Post

தம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா

கினோகுனியா - சிறுகதைத் தொகுப்பை அமேஸான் கிண்டிலில் வாங்க https://www.amazon.in/dp/B077DHX1FX பத்துக் கதைகளை கிண்டிலில்...