Thursday, January 30, 2020

தம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை


தமிழ் சிறுகதைப் பரப்பில் எல்லாவித சாத்தியங்களும் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டன. ஒரு சொல் அல்லது ஒரு சொற்றொடர் கூட மிகுந்து வராத இறுகிய கட்டுமாணங்கள் கொண்ட நவீனச் சிறுகதைகளிலிருந்து, சொல்லாமல் சொல்லிப் போகும் நுண்மக் கதைகள் வரை எல்லாமும் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டன. இனிப் புதிதாய் இதே மரபில் எழுத என்ன இருக்கிறது என்கிற வியப்பும் சோர்வும் ஒரு சேர எழும்போதெல்லாம் நான் சிறுகதை எழுதுவதை தள்ளிப்போடுவேன்.

அதே நேரத்தில் இனிமேலும் கதை என்ற ஒன்றை வழுவாத சட்டகங்களோடு எழுதிக் கொண்டிருக்க வேண்டுமா என்கிற எண்ணமும் தோன்றும். அது வலுவடைந்து என்னை என் விருப்பத்திற்கு எழுத வைத்தது. அவை கதைகள் ஆகின்றனவா, கலையம்சம் கொண்டிருக்கின்றனவா என்பதெல்லாம் வாசகர் தீர்மானிக்க வேண்டியவை.

மேலும் நம் சிறுகதைச் சூழலில் வட்டாரவழக்கு, காமம், வாழ்வியல் என எல்லாமும் போதுமான அளவுக்கு எழுதப்பட்டுவிட்டன. இனிமேலும் வாழ்வை ரத்தமும் சதையுமாகப் பதிவிக்கிறேன் என்கிற பெயரில் யதார்த்தத்தைச் சுரண்டிக் கொண்டிருப்பது உண்மையிலேயே அலுப்பானது என்பதால் நான் வழமையான கதைகளை எழுதவும் முயலவில்லை. இத் தொகுப்பில் இருப்பவை யாவும் என்னுடைய அறிதல்களும் அறிய முயன்றவையும் மட்டும்தான்.

சொந்த அறிதலைப் பொதுவுக்குக் கடத்துவதே கலை என்பார்கள். என் வாழ்வும் பயணமும் எனக்குத் தந்ததை இப்படிப் புனைவுகளாய் எழுதிப் பார்த்திருக்கிறேன். இது பொதுவுக்கு கடத்தப்பட்டிருக்கிறதா என்பதை வாசிப்பவர்கள் அறியத் தந்தால் மகிழ்வேன்.

முள்ளம்பன்றிகளின் விடுதியும் சரக்கொன்றையின் கடைசி தினமும் தொடர்ந்து அறிவியல் புனைவுத் தொடர்களைப் பார்த்தும், கதைகளை வாசித்தும் உருவான மன நிலையில் எழுதிப் பார்த்தவை. இன்னொரு கதையான சமீபத்திய மூன்று சண்டைகள் ரேமண்ட் கார்வரை வாசித்த பாதிப்பில் எழுதிப் பார்த்தது.

இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் சமவெளி மான் கதையின் போதாமைதான் ஓரிதழ்ப்பூவாக உருவானது. சோதிடன், அங்கையற்கன்னி, மலர்ச்செல்வி கதாபாத்திரங்கள் என்னோடு நான்கு வருடங்கள் வரைப் பயணித்தார்கள்.

கினோகுனியா, நீலகண்டப் பறவை ஆகிய இரண்டும் நான் வாழும் இந்த நிலப்பரப்பு எனக்குத் தந்தவை.

இப்படியாக வெவ்வேறு தருணத்தில், காலங்களில், மனநிலையில் எழுதிப் பார்த்த இக் கதைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்நூலை மிகத் தரமாய் கொண்டு வரும் ஜீரோ டிகிரியின் எழுத்துப் பிரசுரத்துக்கு என் நன்றி.

இந்நாட்களில் என் இயங்கு சக்தியாக இருக்கும் சாருவுக்கும் காயத்ரி மற்றும் ராம்ஜிக்கும் என் அன்பு. சாருவின் முன்னுரை இந்த வருடத்தில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு. இந்தத் தொகுப்புக்காக மட்டும் நான்கு நாட்களை ஒதுக்கி ஒவ்வொரு சொல்லாய் வாசித்து மொத்தக் கதைகளையும் மெருகூட்டிய சாருவின் அன்பு நெகிழ வைக்கிறது. பதிலுக்கு இன்னும் அதிக அன்பை சாருவுக்குத் தர முயல்வேன் .

மிக்க அன்புடன்
அய்யனார் விஸ்வநாத்
துபாய், டிசம்ப ர் 06, 2019


Sunday, January 19, 2020

முள்ளம்பன்றிகளின் விடுதி




சென்னை புத்தகத் திருவிழா -2020 வில் முள்ளம்பன்றிகளின் விடுதி சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. வெளிவந்த முதல் நாளிலிருந்து கிடைத்திருக்கும் வரவேற்பு திகைப்பையும் மகிழ்ச்சியையும் சேர்த்துத் தருவதாக இருக்கிறது. அனைவருக்கும் அன்பு. புத்தகத் திருவிழாவில் ஜீரோ டிகிரி அரங்கு எண் 376 மற்றும் 377 இல் முள்ளம்பன்றிகளின் விடுதி நூல் கிடைக்கும். உடன் ஹிப்பியும் தனியறை மீன்களும் அரங்கில் கிடைக்கும்.



Sunday, November 24, 2019

தனியறை மீன்களின் சிறகடிப்பு




தனியறை மீன்கள் கவிதைத் தொகுப்பை நியாயமாக தனிமையின் இசை என்கிற இந்த வலைப்பக்கத்திற்குத்தான் சமர்ப்பித்திருக்க வேண்டும். பதிமூன்று வருடங்களுக்கு முன்பு இங்குதான் கவிதைகளை எழுதிப் பார்த்துக் கொண்டேன்.  வாசகர்களும் நண்பர்களும் கவிதைகள் வழியாகத்தான் என் உலகில் நுழைந்தனர். இதிலிருந்துதான் என் சின்னஞ்சிறு புனைவுலகு தன் சிறகுகளை விரித்துக் கொண்டது. கவிதைகள் எழுதிய காலகட்டங்களில் நெகிழ்ந்தும், சுருங்கியும், வெதும்பியும், உழன்றும் இன்னும் எல்லாவித மன உணர்வுகளிலும் கிடந்து அல்லாடினேன். சந்தேகமே இல்லாமல் அவற்றைப் பெண்களே தந்தனர். எல்லா உணர்வுகளையும் எழுதிப் பார்த்தேன். அந்த வடிவத்திற்கு கவிதை எனப் பெயர் வைத்துக்கொண்டேன். எழுதப்பட்டக் கவிதைகள் மிக அதிகபட்ச கொண்டாட்டத்தையும், கர்வத்தையும், காதலையும், காமத்தையும் கொண்டுவந்து சேர்த்தன. இலவச இணைப்பாய் ஏமாற்றம், துரோகம், பயன்படுத்துதல் போன்ற உணர்வுகளையும் பெற்றுக் கொண்டேன். எல்லாம் கடந்து மனம் சமநிலைக்குத் திரும்பியபோது தொடர்ந்து  கவிதைகள் எழுதும் விருப்பம் காணாமல் போயிருந்தது. போதும் இது என நிறுத்திக் கொண்டேன்.

’தனிமையின் இசை’, ’நானிலும் நுழையும் வெளிச்சம்’ எனும் தலைப்புகளில் இரண்டு தொகுப்புகள் அச்சில் வெளிவந்தன. ’எனக்கு மனிதர்களைப் பிடிக்காது’ எனும் பெயரில் ஒரு மின் தொகுப்பை வெளியிட்டேன். மூன்றுமே சரியான வாசக கவனத்தைப் பெறவில்லை. இணையத்தின் பழைய ஆட்கள் வாசித்த அல்லது மிகக் குறைவான கவிதை வாசகர்கள் மட்டும் வாசித்த தொகுப்புகளாய் மூன்றும் இருந்தன.   இந்தத் தொகுப்புகளை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க  என் தரப்பிலிருந்து நானும் எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் மனதின் அடியாழத்தில் இதுவரை எழுதியவற்றை ஒரே தொகுப்பாய், தரமாய் கொண்டு வர வேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. அது இத்தனை வருடங்கள் கழித்து நிறைவேறி இருக்கிறது.

இந்தத் ’தனியறை மீன்கள்’ தொகுப்பு என் மனதிற்கு மிக நெருக்கமானதாக இருக்கிறது. இதை நிறைவேற்றிய சாருவுக்கும் காயத்ரி மற்றும் ராம்ஜிக்கும் என் அன்பு. கவிதைத் தொகுப்பின் பின் இணைப்பாய் சாருவுக்கும் எனக்கும் இடையே நிகழ்ந்த கவிதை உரையாடலும் இடம்பெற்றிருக்கிறது. இப்போதும் கவிதைகளை வாசிக்கும் பழையவர்களிடமும் புதிதாய் கவிதைகளை வாசிக்க ஆரம்பித்திருக்கும் புதியவர்களிடமும் இந்தத் தொகுப்பு போய்ச் சேர வேண்டும் என விரும்புகிறேன்.

அனைத்திற்கும் நன்றி. அனைவருக்கும் அன்பு

Thursday, October 10, 2019

ஹிப்பி தற்போது விற்பனையில்


ஹிப்பி நாவல் வெளிவந்துவிட்டது. நண்பர்கள் கீழ்காணும் இணைப்பைச் சொடுக்கி இணையத்தில் வாங்கலாம்.

https://zerodegreepublishing.com/books/new-releases/%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8%e0%ae%be/?fbclid=IwAR1vAecoFTx9Jec7DmmohoOfAqaZ0ZYTDiscA7WK0Q-Mz-8aF6hS_Ikfz24


இயற்கையின் பிரம்மாண்டத்தோடு தனி மனித விடுதலையையும் இணைத்துப் பின்னப்பட்டிருக்கும் இந்நாவல், தமிழில் இதுவரை பேசப்பட்டிராத நிலங்களையும் மனிதர்களையும் அவர்களின் தனித்துவமான சிக்கல்களையும் காட்சிப்படுத்த முன் வந்திருக்கிறது.
ஜவ்வாது மலைத் தொடரும், திருவண்ணாமலையும் வசீகரமான கதாபாத்திரங்களாக உருமாறியிருக்கும் இந்நாவலில் வெயிலும் மழையும் ஊடுபாவி வடதமிழகத்தின் இன்னொரு முகத்தை அறியத் தருகின்றது.
ஹிப்பிகளும், விளிம்பு நிலை மனிதர்களும் சேர்ந்து உருவாக்கும்        இக்கதைவெளியெங்கும் கஞ்சா நெடி விரவிக் கிடக்கிறது. ஒரு புள்ளியில் நிலைபெறாத நாடோடி மனங்களில் உள்ள காமமும், போதையும், கைவிடப்பட்ட அன்பும், கொண்டாட்டமும் வாசிப்போரைக் கனவுத் தன்மைக்குள் தள்ளுகிறது.
அய்யனார் விஸ்வநாத்தின் தனித்துவமான மொழியும் பின் நவீனத்துவக் கதை கூறலும் இந்நாவலின் அலாதியான வாசிப்பின்பத்திற்கு வலு சேர்க்கின்றன.


0

மாரியோ பர்கஸ் யோசாவைப் படிக்கும் போதெல்லாம் இந்த அளவு சுவாரசியமாகக் கதை சொல்ல தமிழில் யாருமே இல்லையே என்று வருத்தப்படுவேன். இங்கே இலக்கியம் என்றாலே ‘டல்’லாக இருக்க வேண்டும் என்று ஒரு தவறான எண்ணம் இருந்து வருகிறது. அய்யனார் விஸ்வநாத்தைப் படித்த போது அந்த என் எண்ணம் மாறி விட்டது. பிரமாதமான கதைசொல்லி. அதே சமயம் Content-உம் பல உள்ளடுக்குகளைக் கொண்டதாக இருக்கிறது. அய்யனார் வெறும் கதைசொல்லி மட்டும் அல்ல. மீண்டும் மீண்டும் வாசிக்கக் கோருபவை அவர் நாவல்கள். அந்தத் தன்மைதான் பொழுதுபோக்குக் கதைகளுக்கும் இலக்கியத்துக்குமான வித்தியாசம். அய்யனார் விஸ்வநாத்தின் ஹிப்பி நாவலைப் படித்து விட்டேன். அற்புதம். எடுத்தால் கீழே வைக்க முடியாது. நல்லவேளை, அய்யனார் ஏற்கனவே வெளிநாட்டில் இருக்கிறார். இல்லாவிட்டால் கதையின் முடிவுக்காக அவரை நாடு கடத்தியிருப்பார்கள். மிரட்டும் நாவல். இதை உடனடியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும்.
– சாரு நிவேதிதா

Tuesday, September 24, 2019

ஹிப்பி - நாவல்





தான் வாழும் அல்லது வாழ்ந்த நிலத்தின் மீதான அன்பு என்பது மனிதருக்குப் பொதுவானது. எழுதுபவனுக்கோ அவன் சார்ந்த நிலமும் மக்களும் என்றும் முதன்மையானவர்கள். உலகின் பெரும்பாலான எழுத்தாளர்கள் தாங்கள் வாழும் நிலத்தைக் குறித்து மூன்று படைப்புகள் எழுதுவதை ஒரு சாதனையாகக் கருதுவார்கள்.
இஸ்தான்புல்லையும்,தைவானையும், போலந்தையும், தென்கொரியாவையும் -மேதைகளின் Trilogy வழியாக அறிந்த எனக்கு என் நிலமான திருவண்ணாமலை குறித்து ஒரு ட்ரிலாஜி எழுதும் ஆசை உருவானது. அதன் முதல் கனிதான் ஓரிதழ்ப்பூ. அதைத் தொடர்ந்து இதோ ஹிப்பி . இம்முறை இன்னும் அழுத்தமாய் என்னிடமிருந்தும் இன்னும் தரமாய் எழுத்துப் பிரசுரம் வழியாகவும் ஹிப்பி நாவல் வெளிவருகிறது.
சாரு நிவேதிதா, காயத்ரி மற்றும் ராம்ஜிக்கு என் அன்பு.

Sunday, August 18, 2019

அம்பிலி - கடவுளின் கண்



இதயத்திலிருந்து வாழும் ஒரு மனிதனைக் குறித்த முழுமையானச் சித்திரம்தான் அம்பிலி. கள்ளங் கபடமில்லாத தூய அன்பு, உயிரைப் பிழியும் இசை, இயற்கையின் பேரெழில் மிளிரும் மகத்தான நிலக் காட்சிகள் ஆகிய இவை மூன்றையும் சரிவிகிதத்தில் கலந்து ஒரு திரைப்படத்தை உருவாக்கினால் எப்படிக் கரையாமல் இருக்க முடியும். பல காட்சிகளில்  உருகிப் போனேன். படத்தின் முதல் பாதியில் மூன்றாம் பிறை ’டைப்’ காதல் கதையாகி விடுமோ என்ற என் யூகம் இரண்டாம் பாதியில் தவிடு பொடியானது. கேரளத்தின் கட்டப்பனையிலிருந்து காஷ்மீர் வரைக்குமான ஒரு சைக்கிள் பயணமாக, ஓர் அற்புதமான பயணத் திரைப்படமாக அம்பிலி உருக்கொள்கிறது. இறுதியில் காஷ்மீரின் கம்பீர மலைகளுக்கு முன்பு அம்பிலியின் சின்னஞ் சிறு இதயம் நெகிழ்ந்தும் கரைந்தும் வெடித்துமாய் தன்னை அறிகிறது. கவித்துவமும் தத்துவமும் அம்பிலி - ஷெளபினின் நிகரில்லா நடிப்புமாய் பின்னிப் பிணைந்து நமக்கு ஓர் அபாரமான காட்சி அனுபவத்தை இந்தத் திரைப்படம் வழங்குகிறது.

அம்பிலியின் திரைக்கதை எழுதப்பட்ட விதம் சவாலானதுதான். முதல் ஒரு மணிநேரத்திற்கு கேரளத்தின் எழில், அம்பிலியின் சின்னஞ்சிறு நண்பர்கள், கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள், நகைச்சுவை, நாயகி தான்வியினுடனான காதல், ஒரு முன் கதை என ஏராளமான விஷயங்கள் சொல்ல இருக்கின்றன. ஆனால் இரண்டாம் பாதியில் சாலைப் பயணம் மட்டும்தான், பெரும்பாலும் இரண்டே கதாபாத்திரங்கள் மற்றும் நிலங்கள் அவ்வளவுதான். இரண்டாம் பாதியை நிறைக்க இயக்குனர் எந்த விதத் தனி - ஸோ கால்டு சுவாரசிய விஷயங்களையும் திணிக்கவில்லை. இந்திய நிலம் பார்வையாளர்களை ஒன்றச் செய்துவிடும் என நம்பியிருக்கிறார்கள். அது நடந்திருக்கிறது. எந்தத் திருப்பங்களுமில்லாமல் நேர்கோட்டில் மிக நிதானமாக நம்மையும் இணைத்துக் கொண்டு படம் நகர்கிறது.

அம்பிலி ஒரு காட்சி அனுபவம். படம் முழுக்க ஏரியல் ஷாட் களைப் பயன்படுத்தி மொத்த நிலத்தின் அழகையும் திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். கிட்டத் தட்டக் கடவுளின் கண் கொண்டு இந்தப் பூமியைப் பார்ப்பது போன்ற உணர்வை அடைந்தேன். படத்தின் ஒளிப்பதிவாளரான Sharan Velayudhan புதியவர். அவரின் மிகச்சிறந்த படமாக இது இருக்கும். இசையமைப்பாளரான Vishnu Vijay இயக்குனார் ஜான் பால் ஜார்ஜின் முந்தைய படமான Guppy யில் இணைந்து பணியாற்றியவர். இசையால் படத்தை நிறைத்திருக்கிறார். ஆராதிகே பாடலை நேற்றிலிருந்து திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஒளிப்பதிவும் இசையும் அம்பிலியின் முழுமைக்கு முக்கியக் காரணங்களாகின்றன.



கேரளத்தின் In to the Wild என்றும் கூட அம்பிலியைச் சொல்லிவிட முடியும். இன் டு த வைல்ட் தனிமைப்படுதலைக் கொண்டாடி, வழமையின் நமுத்தத் தன்மையை பயணத்தின் வழியே களையும் திரைப்படம். ஆனால் அம்பிலி அன்பை, முழுமையை பயணத்தின் வழியே உணர்த்தும் படம். இந்தக் கள்ளங்கபடமற்றச் சிறுவன் செல்லுமிடமெல்லாம் அன்பை விதைக்கிறான்.
அவசியம் திரையரங்கில் காண வேண்டிய படம்.

Sunday, July 21, 2019

கிரீஷ் கர்னாட் - குலப்பெருமையை அசைத்தல்


கிரீஷ் கர்னாட் நடித்து, திரைக்கதை வசனம் எழுதிய சம்ஸ்காரா திரைப்படம் இந்திய சமூகம் என்றும் நினைவில் வைத்திருக்க  வேண்டிய படம். பார்ப்பனியம் கோலோச்சியிருந்த, சாதி வெறியும் தீண்டாமையும் உக்கிரமாய் இருந்த காலகட்டங்களில் மாத்வ பிராமணர்கள் வசிக்கும் ஓர் அக்கிரஹாரத்தில் நடைபெறும் கதையாக சம்ஸ்காராவை யு,ஆர் அனந்தமூர்த்தி எழுதியிருப்பார்.

கிரீஷ் கர்னாட் ஒழுக்கமும், பக்தியும், நிறைந்த கல்வி ஞானமும் கொண்ட ஆச்சாரியார் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.  சில பிராமணக் குடும்பங்கள் வசிக்கும்  அந்த அக்கிரஹாரத்தின் முதன்மைப் பண்டிதராகவும்  ஆச்சாரியார் இருப்பார். இன்னொரு கதாபாத்திரமான நாராயணப்பாவாக புகழ் பெற்ற எழுத்தாளரும் கெளரி லங்கேஷின் தந்தையுமான பி. லங்கேஷ் நடித்திருப்பார். நாராயணப்பா அந்த பிராமணக் குடியிருப்பின் எல்லா மரபுகளுக்கும் எதிரானவர். குடியும் கொண்டாட்டமும் பாட்டும் கூத்தும் நட்பும் காதலுமாய் வாழ்பவர்.

 ஒரு நாள் நாராயணப்பா இறந்து போகிறார்.  அவர் பிறப்பால் பிராமணன் என்பதாலும் அவரை அக்கிரஹாரத்தை விட்டு விலக்கி வைக்காததினாலும் இன்னொரு பிரமணனே இறுதி காரியங்களைச் செய்ய வேண்டும். ஆனால் அதை யார் செய்வது என்பதில் குழப்பம் வரும். சண்டியராகத் திரிந்ததால் பிற பிராமணர்கள் யாரும் இறுதி காரியத்தைச் செய்ய முன் வர மாட்டார்கள். அப்போது அவரின் மனைவியான சந்திரி தான் அணிந்திருக்கும் நகைகளைக் கழற்றி ஆச்சாரியாரிடம் கொடுப்பாள். இறுதி காரியங்களைச் செய்பவர்களுக்கு இந்நகைகள் போகட்டும் எனச் சொல்லிவிடுவாள். இதைக் கேள்விப்பட்டதும் ஊரில் இருக்கும் அத்தனை பிராமணர்களும் நாராயணப்பாவிற்கு இறுதி காரியத்தைச் செய்ய முன்வருவார்கள். ஆனால் ஆச்சாரியார் கடவுளிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று சொல்லிவிடுவார்.

 இறுதிக் காரியம் யார் செய்ய வேண்டும் என்பதற்கான பதில் வேண்டி ஆஞ்சநேயருக்கு இரவு பகலாக பூஜை செய்து கொண்டிருப்பார். அவரின் மனைவி பல வருடங்களாக படுத்தப் படுக்கையாகக் கிடப்பவள். மனைவிக்கான பணிவிடைகளையும் ஆச்சாரியாரே செய்து வருவார். பதில் எதுவும் கிடைக்காததால் ஆச்சாரியார் மிகுந்த ஏமாற்றத்துடன் கோவிலை விட்டு வெளியே வரும்போது  எதிரே நாராயணப்பாவின் மனைவி சந்திரி அமர்ந்திருப்பாள். உடலும் பொழுதும் உந்தவே அவளுடன் ஆச்சாரியார் உறவு கொண்டுவிடுவார்.

அதனால் குற்ற உணர்வு அடையும் ஆச்சாரியார் வீட்டிற்கு வந்து பார்க்கும்போது மனைவி இறந்திருப்பாள். அவள் உடலைத் தனி ஒருவராகத்  தகனம் செய்துவிட்டு அந்த ஊரை விட்டு ஓடிப்போவார். வெளியூரில் தன்  அடையாளத்தை மறைந்துக் கொண்டு அலையும்போது உடன் வருபவனின் நிர்பந்தத்தின் பேரில் திருவிழா நடைபெறும் கோவில் ஒன்றில் அமர்ந்து உணவருந்துவார். அங்கு ஒருவரால் இன்னார் என அடையாளம் காணப்படவே அங்கிருந்து தலை தெறிக்க ஓடுவார். பின்னாலேயே வரும் வெள்ளந்தியான சக பயணியிடம் தான் யார் என்பதையும் எதனால் இங்கு அலைகிறேன் என்பதையும் சொல்வார். அதைக் கேட்டுத் திகைப்படையும் பயணி அவரை விட்டு விலகிப் போவான். மீண்டும் தன் சொந்த கிராமத்திற்கு வரும் ஆச்சாரியார், இறந்து போன நாராயணப்பா தன்னை விட மேலானவர் என சுயத் தெளிவு அடைவதோடு படம் நிறைவடையும்.

இன்று வரைக்குமே இந்த நாவலும், திரைப்படமும் அடிப்படைவாதத்தில் ஊறிப்போன மனங்களை அடித்து நொறுக்குவதாகத்தான் இருக்கிறது. சம்ஸ்காரா நாவலுக்குத் திரையிலும் நியாயத்தைச் செய்த வகையில் கிரீஷ் கர்னாட் ஒரு முக்கியமான கலைஞனாகிறார்.

இதைத் தொடர்ந்து எஸ்.எல் பைரப்பாவின் வம்ச விருக்‌ஷா நாவலை பி.வி. காரந்தோடு சேர்ந்து இயக்கி திரைப்படத்தில் ராஜா ராவ் என்கிற முக்கியக் கதாபாத்திரம் ஏற்றும் நடிக்கிறார். வம்ச விருக்‌ஷா நாவல் பரம்பரை கண்ணியத்தை உடைத்து நொறுக்கும் வண்ணம் எழுதப்பட்டிருக்கும். பிராமணர்களின் குலப்பெருமையை அசைத்துப் பார்க்கும் புத்துலக நாவல். திரையிலும் இந்த உணர்ச்சி சரியாகவே வெளிப்பட்டது. யு. ஆர்.அனந்த மூர்த்தி, பைரப்பா, குவெம்பு, சிவராம காரந்த், மாஸ்தி, பி.லங்கேஷ், கிரீஷ் கர்னாட் என கன்னடத்தின் அத்தனை எழுத்தாளர்களும் சுய சாதி மற்றும் சுய மதத்தின் மீது கடுமையான விமர்சனங்களையும், அதிகாரத்தை தங்களின் எழுத்துக்களின் வழியாய் எதிர்த்தும் வந்தனர். எனவேதான் கன்னட இலக்கியத்தை இந்தியாவின் மிக முன்னோடி இலக்கியம் என நான் திரும்பத் திரும்பக் கூறுகிறேன்.

கன்னூரு ஹெக்கடத்தி, காடு ஆகிய இரண்டு படங்களும் கிரீஷ் கர்னாட் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த படங்கள். சம்ஸ்காரா, வம்ச விருக்‌ஷா, கன்னூரு ஹெக்கடத்தி, காடு இந்நான்கு படங்களையும் கிரிஷ் கர்னாட் மறைவிற்குப் பிறகு தொடர்ந்து பார்த்தேன். எழுத்து, நாடகம், நடிப்பு, இயக்கம் இப்படி கலையின் எல்லா வடிவங்களிலும் தன் தனி முத்திரையைப் பதித்தவர். சாகும் வரையிலும் மூக்கில் ஒரு குழாயை சொருகிக் கொண்டாவது அதிகாரத்திற்கு எதிராகப் போராடியவர். சம காலத்தின் மிக முக்கியமான அர்பன் நக்சலான கிரீஷ் கர்னாடிற்கு அஞ்சலி


Featured Post

test

 test