Friday, April 23, 2010

லீனா

..............
தொடர்ந்து புலியின் வாயை
மிக அகலமாகவும் பற்களை மிக நேர்த்தியாகவும்
வரையத்தொடங்கும் அச்சிறுமி என் கடவுள்
என் மகள் என் உயிர்
என் நேற்றைய பிம்பம்
- சன்னாசி


படைப்புகளைக் காட்டிலும் பிரச்சினைகளை படிப்பதில் திருப்தியடையும் கிசுகிசு மனம் கிடைக்கும் சொற்ப நேர இணைய வாசிப்பில் கூட கடந்த இரண்டு மாதங்களாக லீனா விவகாரத்தையே தேடித் தேடிப் படித்துக் கொண்டிருக்கிறது. இது இன்னொரு வகையில் மிகுந்த மன உளைச்சலையும் உண்டாக்குகிறது. இம்மனநிலை குறித்து நான் வெட்குகிறேன். இதை எழுதுவதற்கான காரணம் இம்மனநிலையில் இருந்து முற்றிலும் வெளிவருவதற்கான சுயநலம்தான். நடுநிலைமை என்கிற நிலைப்பாட்டின் மீதெல்லாம் எனக்கு எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை. சார்புத் தன்மை அற்ற, சார்ந்த என்கிற இரண்டு புள்ளிகளையும் விலக்க முற்படுவதுதான் மிகப் பெரும் சவாலாக இருந்து வருகிறது. கீழ்கண்ட என் பகிர்வுகள் முழுக்க முழுக்க இணையத்தில் படித்த, சம்பந்தப்பட்ட நபர்களால் எழுதப்பட்ட தரவுகளை மட்டுமே அடிப்படையாக கொண்டு / நம்பி எழுதப்பட்டது. எழுதப்படாதவைகள் எழுதப்பட்டவைகளை நிராகரித்தால் இக் கட்டுரையும் நிராகரிக்கப் பட வேண்டிய ஒன்றுதான்.

1. செங்கடல் படப் பிடிப்பில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு பணம் கொடுக்காமல் லீனா தகராறு செய்ததாக வெளிவந்த தினத் தந்தி செய்தியை முன் வைத்து வினவில் ஒரு கட்டுரை எழுதப்பட்டிருந்தது. இக்கட்டுரையை வளர்மதி முகப்பு பக்கத்தில் பகிர்ந்திருந்தார். கட்டுரையின் தலைப்பை பார்த்தவுடன் இதே போன்றதொரு சம்பவம் வளர்மதிக்கும் லீனாவிற்கும் இடையே நிகழ்ந்தது நினைவிற்கு வந்தது. எனவே பின்னூட்டமாக ஒரு சிரிப்பானைப் போட்டுவிட்டு ஒரு சிறிய பணியை முடித்து விட்டு வந்து வினவுப் பக்கத்தில் கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தேன். அந்த கட்டுரை முழுக்க முழுக்க கிசுகிசு பாணியில் எழுதப் பட்டிருந்தது. மேலும் லீனாவின் தனிப்பட்ட வாழ்வையும் மிகக் கடுமையாக தாக்கி எழுதப்பட்டிருந்தது. இவ்விரண்டும் எனக்கு ஒவ்வாத உணர்வைத் தரவே பின்னூட்டத்தில் என் வருத்தத்தைப் பதிவு செய்தேன். சற்று நேரத்தில் ரோசாவசந்தின் கண்டனப் பதிவும் என் நிலைப்பாட்டுடன் ஒத்துப் போகவே அங்கேயும் என் கண்டனங்களைப் பதிவு செய்துவிட்டு நகர்ந்தேன். லீனாவின் இரண்டு கவிதைகளுக்கும் எதிரான விமர்சன அர்ச்சனைகளும் வினவின் அதே பதிவில் எழுதப்பட்டிருந்தது. அந்த அர்ச்சனைகள் பெண் எழுத்தால் எழுந்த பதட்டங்களாகத் தோன்றியதே தவிர அறிவு தளத்தினூடான விமர்சனமாக எனக்குப் படவில்லை. மேலும் கவிதையை வைத்தே பெண்ணை அலைபவளாக நிறுவ முயல்வது வன்முறையாகத்தான் தோன்றியது. இடையே பின்னூட்டத்தில் வளர்மதி சுட்டியிருந்த unlimited semiosis கருத்தாக்கத்தின் அபத்தம் குறித்தும் யோசிக்க வேண்டியிருந்தது. கவிதையில் துருத்திக் கொண்டிருந்த 'நானும்' 'புரச்சிப் பாலியல் பெண் கவிதைகள்’ முன்னிறுத்தலும் அக் கவிதைகள் குறித்து தொடர்ந்து யோசிக்க இடையூறாக இருக்கவே தொடர்ந்து பேச முடியாது விலகிவிட்டேன்.


2. இந்து மக்கள் கட்சியின் புகாருக்கு எதிரான கண்டன ஒன்று கூடல் அறிவிப்பைப் பார்த்ததும் அதில் இடம்பெற்றிருந்த ஏராளமான படைப்பாளர்களின் சிந்தனையாளர்களின் பெயர்களைப் பார்த்ததும் சற்றுத் திகைப்பாக கூட இருந்தது. லீனாவின் கவிதைக் குறி சுட்டும் சம்பந்தப் பட்ட நபர்கள் இதை வேறெப்படி எதிர்கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியும்? இணையத்தில் தோழர்கள் அவர்களுக்கு உரித்த தடாலடி மொழியில் தங்களின் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இந்து மக்கள் கட்சியினருக்கு கவிதையோ கட்டுரையோ எழுத தெரியாமல் போலிஸில் கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கிறார்கள். இந்த அணுகுமுறைக்கு பரிதாபப் பட வேண்டுமே ஒழிய கண்டனக் கூட்டம் நடத்துவது இரு தரப்பு விளம்பர நோக்கங்களையும் நிறைவேற்றி வைப்பது போலாகும் என்ற எண்ணம்தான் எனக்கு இருந்தது. சற்றுத் திருப்பங்களுடன் இந்த கண்டனக் கூட்டம் இ.ம.க மற்றும் ம.க.இ.க தீவிர தொண்டர்களால் நிஜமான அச்சுறுத்தலானது என்பதை உண்மைத் தமிழன் பதிவில் படித்தபோது வருத்தமாக இருந்தது. லீனாவின் கவிதைக்கு இவ்வளவு பெரிய சர்ச்சையோ விமர்சனமோ தேவையில்லாத ஒன்றாகத்தான் படுகிறது. லீனா போன்ற செவி வழியாய் அரசியல் ஞானமடைந்த புரட்சிக் கவிஞர்களின் படைப்புகளை?! கண்டுகொள்ளாமல் விடுவதே சிறந்த வழி. ஆனால் இலக்கிய கூட்டங்களை எதிர்த்து புரச்சி செய்வதின் வாயிலாக தங்களை, தங்களின் சித்தாந்தங்களை காப்பாற்றி விட்டதாய் எண்ணி புளகாங்கிதம் அடையவும் இன்னொரு கூட்டம் நம் சூழலில் இருப்பதும் தமிழ் சூழலின் சாபக் கேடாய்த்தான் இருக்க முடியும்.


3. லீனாவின் இரு கவிதைகளை ஜமாலனும் பெருந்தேவியும் மிகுந்த சிரத்தையுடன் விமர்சனப் பூர்வமாக அணுகியிருந்தனர். கவிதையின் “நான்” = கவிஞரின் “நான்” இரண்டும் ஒருமித்து ஒற்றைத் தன்மையாகிவிடும் சிக்கலையும், பொதுப் புத்தியிலிருந்து விலகாத, உடல் பற்றிய பிரக்ஞையில்லாத, அரசியல் புரிந்துணர்வில்லாத கவிதைகளின் சாராம்சத்தையும் கிளிப் பிள்ளைக்கு விளக்குவது போல் போதுமான விளக்கங்களை அவர்கள் அளித்திருந்தும் லீனா மிக எளிதாக இவ் விமர்சனத்தைக் கடந்து போகிறார். அந்தக் கவிதைகள் கச்சா மொழியிலிருப்பதால் இத்தனை எதிர்ப்பு வருகிறது என பலமாக நம்புகிறார். அதையே ரோசா வசந்தின் விமர்சனத்திற்கும் பதிலாய் வைக்கிறார். மொழி பற்றிய பிரம்மைகளிலிருந்து, வார்த்தைகளில் நல்லது கெட்டது என்பதிலிருந்தெல்லாம் நம் சூழல் வெகு தொலைவு பயணித்து வந்து விட்டது என்பதை லீனாவிற்கு எப்படிப் புரியவைப்பது என்பதுதான் அறிவு தளத்தில் இயங்குபவர்களின் சவாலாக இருக்கிறது. அத்தோடு நில்லாமல் சோவியத் யூனியன், பிரஸ்திரோய்கா கிளாஸ்நாஸ்ட்,பெர்லின் தோழி, குழந்தை கம்யூனிஸ்ட் என்றெல்லாம் வார்த்தைகளைத் தூவுகிறார். விமர்சனத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத இவ்வார்த்தை தூவல்களைப் படிக்கும்போது ’சப்பான்ல சாக்கிசான் கூப்டாக’ என கோவை சரளா உச்சக் குரலில் கத்தும் பிம்பம் தான் நினைவில் இடறுகிறது. அ.மார்க்ஸ், ஷோபாசக்தி போன்றோரின் நட்பே போதுமான அறிவை கொடுத்துவிடும் என்பதை நம்புகிறார்போலும். மேலும் நட்பு வட்டாரங்கள் அவ்வப்போது உதிர்க்கும் அரசியல் கருத்துக்களை கேட்டே ஞானமடைபவர்களால் மட்டுமே தன் குறித்தான பிம்பங்களை மிகையாக கட்டமைத்துக் கொள்ள முடியும். தீவிர வாசிப்பும், கொஞ்சமே கொஞ்சம் சமூக அக்கறையும், தன்னையே பிரதானப்படுத்திக் கொள்ளாது ’பிற’ பற்றிய புரிந்துணர்வும் கொண்டவர்களால் லீனாவின் ஸ்டண்டுகளை சகித்துக் கொள்ள இயலாது. ஓரிரண்டு வருடங்களுக்கு முன் தமிழச்சி லீனாவை விட மிகப் பிரமாதமாக கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தார். சாம்பிளுக்கு ஒன்று.

யோனிகள் இங்கே வாடகைக்கு கிடைக்கும்!
வந்தவன் விலை கேட்டான்
சிறிதும், பெரிதுமாக
சுருங்கி விரிந்த
யோனிகளுக்கு
ஓவ்வொரு ரேட்டாம்.

வந்தவன் சொன்னான்.
"மலஜலக்கழிப்பிடங்களை விட
காமக்கழிவுகளை கொட்டும்
இந்த யோனிகளுக்கு
கிராக்கி அதிகம் தான்."



4. மேலும் லீனாவின் கவிதைகளை எப்படி அணுகுவதென்றும் அவரே சொல்லித் தருகிறார் /ஒரு குறிப்பிட்ட கவிதைகளை எடுத்துக் கொண்டு விமர்சிக்க முயலும்போது, ஒரு படைப்பாளியின் முழு படைப்பு வெளியையும் கணக்கிலெடுத்துக் கொண்டு தான் சொல்லாடலை முன் வைக்க வேண்டும்/ இதைப் படித்தவுடன் புல்லரித்தது. சென்ற வருடம் ஊருக்குப் போயிருந்த போது லீனாவின் கவிதைப் படம் ஒன்றைக் காண நேரிட்டது. அதாவது அவரின் கவிதை பின்னால் ஒலிக்க படம் ஓடும். படத்திலும் அவரே நடித்திருந்தார். ’தீர்ந்து போயிருந்த காதல்’ என்பது கவிதைப்படத்தின் தலைப்பு. வாரமலர், குடும்பமலர் போன்ற இலவச இணைப்புகளில் வெளிவரும் பின்னுள்ளட்டைக் கவிதைத் தேர்வாளர்கள் கூட பிரசுரிக்கத் தயங்கும் கவிதை அது. ஒரு பெண் (லீனா) வேலையிலிருந்து திரும்புகிறார். சமைக்கிறார். கணவருக்காக காத்திருக்கிறார். லேட் ஆகிறது. அப்படியே கை நீட்டி மேசையில் கவித்துவமாக கவிழ்கிறார். கணவர் தாமதமாக வருகிறார். அப்போது காத்திருந்த பெண்ணுக்கு அவர் மீதிருந்த காதல் தீர்ந்து போய் இருக்கிறது. வராமலே இருந்திருக்கலாம் என நினைத்துக் கொள்கிறார். நான் அவ்வ்வ் என அழாத குறையாக அதைக் கொடுத்தவரிடம் திருப்பிக் கொடுக்க ஓடினேன். அதை அவர் அன்புப் பரிசாக வைத்துக் கொள்ளச் சொல்லி வெகு நேரம் சிரித்தார். ஒரு மோசமான கவிதை எழுதுவது, அதை படமாக்குவது, அப்படத்தில் தானே நடிப்பது இதெல்லாம் ஒருவரின் தனிப்பட்ட விசயங்கள். ஆனால் அதை குறுந்தகடாக வெளியிட்டு விற்பதுதான் எனக்கு அநியாயமாகத் தோன்றுகிறது. அதைக் காசு கொடுத்து வாங்குபவனை கேணயனாக்கும் முயற்சிதானே இது. இம் மாதிரியான பின்புலமும் லீனாவினுடையதுதான். அவரை விமர்சிக்கும்போது இந்த அபத்தங்களையும் சேர்த்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பதையும் அவரே சொல்லட்டும்.

5. கீற்றில் வெளிவந்த மினர்வா கட்டுரையில் பின்னூட்டமாக சங்கரராம சுப்பிரமணியன் ஒரு விஷயத்தை பதிவு செய்திருந்தார். சங்கர், விக்ரமாதித்யன், லக்ஷ்மி மணிவண்ணன் மூவரும் எழுதிய கவிதைக்கு விளக்கம் கேட்டு ம.க.இ.க தோழர்கள் சங்கரின் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். கட்சி அலுவலகத்தில் வைத்து மன்னிப்பு கடிதமும் எழுதி வாங்கியிருக்கின்றனர். நம்முடைய தமிழ் சூழல் ஒன்றும் அறிவு முதிர்ந்த சூழலல்ல. மிகவும் எளிமையான நம்பிக்கைகளையும், குடும்பம் என்கிற பலகீனமான அமைப்பை ஆதாரமாகவும் கொண்டுள்ள வாழ்வு முறை. இதில்தான் ஒட்டு மொத்த மனிதர்களும் இயங்கியாக வேண்டியிருக்கிறது. இங்கு ஒவ்வொரு கலைஞனுமே இயல்பிற்கும் கற்பனைக்கும் இடையே மிகப் பெரும் ஊசலாட்டமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இம்மாதிரியான சூழலில் ஒரு கவிஞனின் வீடு புகுந்து அவனிடம் யோனி என்பதற்கு அர்த்தம் சொல் என்பதும், அவனின் சுற்றத்தினருக்கு பிரதியைப் படிக்கத் தந்து திடீர் அதிர்ச்சி தருவதும், கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து மன்னிப்பு கடிதம் எழுதி வாங்குவதும் தோழர்கள் என அழைத்துக் கொள்பவர்களின் செயல்களாய் தெரியவில்லை. தன்னுடைய மதம், தான் நம்பும் கடவுள் இவ்விரண்டிற்கும் எதிராக ஒரு சிறு அசைவைக் கூட பொறுத்துக் கொள்ள இயலாத வெறியாளர்களைப் போலத்தான் இச் சித்தாந்த வாதிகளும் நடந்து கொண்டிருக்கிறார்கள். நாம் எம்மாதிரியான நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், நமக்கான அடிப்படை உரிமைகளை எவ்வளவு சுலபமாக இந்த வலியவர்கள் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை யோசிக்க யோசிக்க அதிர்ச்சியாகவும் ஆயாசமாகவும் இருந்தது. ஏன் இந் நிகழ்விற்கு எதிராக கருத்தளவில் கூட எவரும் எதையும் பதியவில்லை என்பதை நினைத்தாலும் ஆச்சரியமாய் இருக்கிறது.

Tuesday, April 13, 2010

முப்பது வருடங்கள்

பொழுதுகளோடு நான் புரிந்த
யுத்தங்களையெல்லாம் முடித்துவிட்டு
உன்னருகே வருகிறேன்
அமைதி என்பது மரணத் தறுவாயோ ?
வந்தமர்ந்த பறவையினால்
அசையும் கிளையோ ?
வாழ்வின் பொருள் புரியும்போது
உலக ஒழுங்கு முறையின் லட்சணமும்
புரிந்துவிடுகிறது.
அமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ ?
எழுந்து சென்ற பறவையினால்
அசையும் கிளையோ ?
- தேவதேவன்


முப்பது வயதைக் கடந்திருக்கிறோம் என நினைக்கையில் லேசான ஒரு திடுக் மனநிலை அல்லது நம்ப இயலாத ஒரு வியப்பு புன் முறுவலைப் போலத் தோன்றி விட்டு மறைகிறது. ஆனாலும் முப்பது வருடங்களை நான் கடந்துதான் வந்திருக்கிறேன். இன்னும் எத்தனை வருடங்கள் மீதமிருக்கின்றன என நினைத்துக் கொள்ளவும் இந்த நாள் ஒரு வாய்ப்பளிக்கிறது. அசையாது அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் மரணத்தின் முன்புதாம் நாமனைவரும் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. மரணம் நமக்களித்த கொடைதாம் இந்த வாழ்வு. எப்போது வேண்டுமானாலும் அந்தக் கொடையை திரும்பப் பெற்றுக் கொள்ளவும் மரணம் தயங்குவதில்லை. மேலும் அது திரும்பப் பெற்றுக் கொள்ளும் கணம் அத்தனை இலகுவாய் எவருக்கும் இருப்பதில்லை. நான் என்னளவில் அந்த கணத்தின் இறுக்கத்தை சிறிது குறைக்க விரும்புகிறேன். இந்த வாழ்வின் இந்த பயணங்களின் இந்த அலைவுகளின் குறைந்த பட்ச வெற்றியென்பது மரணத்தை இலகுவாக்குவதுதான். நானும் என் சகோதரனும் அடிக்கடி சொல்லிக் கொள்வதுதான் இது. மரணம் ஒரு தியானத்தைப் போல, ஒரு விடுபடுதலைப் போல, ஒரு திறப்பைப் போல அணுகப்பட வேண்டும். அதற்கான மன நிலையை எட்டுவதுதான் என் வாழ்நாள் சாதனையாக இருக்கக் கூடும். A perfect pure death என சொல்லிப் பாருங்கள் கிளர்ச்சியாக இருக்கிறதல்லவா?

இன்றைய பதினைந்து நிமிடக் காலைப் பயணத்தில் முப்பது வருடங்களை நினைவில் சக்கரமாய் சுழற்றிப் பார்த்தேன். மிக இலகுவாய் நகர்ந்து போகும் இந்த நாட்களை விட வியர்வையில் குளித்தபடி வெயிலில் அலைந்து கொண்டிருந்த இருபதின் ஆரம்ப நாட்கள் மிகுந்த உயிர்ப்புத் தன்மை கொண்டதாகத் தோன்றுகிறது. பத்து வருடத்திற்கு முன்பு நான் எட்டுவதற்கான உயரங்கள், அடைய வேண்டியவை, கைப் பற்ற வேண்டியவை என்பன போன்ற ரீதியிலான நீளமான பட்டியல்களும் பேராசைகளுமிருந்தன. அந்த விரும்புதல்கள் இன்னொரு வகையில் வாழ்வை உற்சாகமாகவும் வைத்திருந்தன. வெற்றி, தோல்வி, கொண்டாட்டம், துயரம் என்பதினை அடி மனதிலிருந்து அந்தந்த உணர்வுகளின் வேர்சுவையை ருசிக்க முடிந்தது. இப்போதும் அதே உணர்வுகள் இருக்கிறதுதாம் என்றாலும் ஏதோ ஒரு புள்ளியில் நான் அதிலிருந்து விலகுகிறேன். அதன் ஆழத்தினுக்கு என்னால் பயணிக்க முடியவில்லை. பாதியிலேயே நான் நடிப்பது எனக்கே உறைத்துவிடுகிறது. மீண்டும் அவ்விருபதினுக்கு,அப்பதின்மத்தினுக்கு செல்ல முடிந்து விட்டால் பின்பு எப்போதுமே அங்கிருந்து நகராமல் எதையாவது பிடித்துக் கொள்ள வேண்டும். சற்றுக் கலைந்த நினைவுகளில் பதின்மமும்,இருபதும் தந்த அயற்சிகள் லேசாய் எட்டிப் பார்த்தன. இன்னும் சற்று வசதியாக இருக்கட்டுமே என நினைவை இன்னும் பின்னோக்கி விரட்டினேன்.அணிந்திருக்கும் கால்சட்டை முழுக்க தெருப்புழுதியும், ஆற்று மணற்துகள்கள் நிரந்தரமாய் தஞ்சம் புகுந்துவிட்ட செம்பட்டை தலை முடியோடும் சுற்றித் திரிந்த என் சிறு வயது பிம்பத்தில் நினைவைப் பொருத்தி விடுகிறேன். இதில் எந்த சிக்கல்களுமில்லை.

எல்லா வளர்ந்த ஆண், பெண்களிலும் ஒரு சிறுவனோ சிறுமியோ நிரந்தரமாய் விழித்திருப்பார்கள் போலும். என் சிறுவனை எவரும் நினைவுறுத்தத் தேவையில்லாது அவன் அவ்வப்போது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான். அந்த கணங்கள் மிகப் பிரத்யேகமாகிவிடுகின்றன. அந்த கணத்தின் உற்சாகத் தளும்பலை எது கொண்டும் அடக்கி விட முடிவதில்லை. அந்த கணத்திலேயே தொடர்ந்து நீடிப்பதுதான் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வாய் இருக்க முடியும். மனதளவில் நான் அந்த வயதை விட்டு நகராமல்தான் இருக்கிறேனோ என்கிற சந்தேகங்கள் எழ ஆரம்பிக்கின்றன. எப்போதுமே இழந்ததை விரும்பும் மனதின் பகல் கனவுதாம் இவ்வெண்ணங்கள் என்பது உறைத்தாலும் கனவினை நாடும் மனம் நிகழில் ஒரு போதும் பொருந்துவதில்லை.

இன்றைய தினத்தில் நன்றி உணர்வு பெருக்கெடுக்கிறது. இந்த இயற்கை, இந்த மனிதர்கள், எனக்குச் சமீபமான சக உயிரினங்கள், என எல்லாத் தரப்பிலிருந்தும் நான் அன்பைப் பெற்றிருக்கிறேன். எந்த பற்சக்கரத் தாடைகளும் கடித்துக் குத்தி கிழித்துவிடாமல் இந்த வருடங்களை நான் கடந்திருக்கிறேன். அவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக இன்றைக் கருதுகிறேன். கோபத்தின் விதையை, வன்மத்தின் வளர்ந்த செடியை, துரோகத்தின் மறைவுக் கொடியை நான் பலரின் சிறு தோட்டங்களில் ஊன்றியிருக்கலாம். அவைகளுக்கான காரணங்கள் அந்தந்த நிமிடங்களின் உணர்வுத் தெறிப்புகளேயன்றி எப்போதைக்குமான வன்மங்கள் அல்ல. எனக்கு இணக்கமில்லாதவர்கள், என்னை வெறுப்பவர்கள், என் மீது உமிழ நினைப்பவர்கள் அனைவருக்கும் என் அன்பு முத்தங்கள்.

இதே நாளில் பிறந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சக வலைப்பதிவர் வால் பையன், தங்கை அருள்மொழி பாலாஜி மற்றும் முகமற்ற முகவரியற்ற அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள். மின்னஞ்சல்,தொலைபேசி,ஆர்குட்,முகப்பு பக்கம் மூலமாக வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றியும் அன்பும்.

Monday, March 29, 2010

அங்காடித் தெரு – கை விடப்படுதலின் துயரம்

தன்னுடைய இரண்டாவது படத்தை இரத்தமும் சதையுமாக வெயிலில் நிகழ்த்திக் காட்டிய வசந்தபாலன் மீண்டும் அதே இரத்த வாசத்தோடும், பிய்ந்து தொங்கும் சதையின் குரூரத்தோடும் மற்றுமொரு படைப்பை நம் முன் வைத்திருக்கிறார். சாமான்யர்கள், விளிம்பு நிலை மனிதர்கள், வறுமையின் கோரப் பிடியில் சிக்குண்டு தத்தளிக்கும் குடும்பங்கள், அடுத்த வேளை உணவிற்கான உத்திரவாதமற்றோர், சாலையோர மனிதர்கள் என தமிழ் நாட்டின் மக்கள் தொகையில் எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கும் முப்பது சதவிகித மக்களின் வாழ்வை மிகுந்த வீச்சோடு பேசுகிறது இப்படம். அவர்களின் குமுறலை, துயரத்தை, மரணத்தை, இழப்பை, கதறலை, நசுக்கப்படுதலை, ஒடுங்கிப்போதலை மிகுந்த வன்மத்தோடும் சற்றே மிகையோடுமாய் பதிவு செய்திருக்கிறது இப்படம். வறுமையும் விபத்தும் தத்தமது கோரத் தாண்டவங்களை நிகழ்த்திக் காட்டும் பிரதான இடமாக இவர்களின் வாழ்விருக்கிறது. இவர்களின் வாழ்வை மொத்தமாய் உறிஞ்சிக் குடித்து வீங்கிப் பெருத்திருக்கும் பண முதலைகளையும், அதிகார வர்க்கத்தினரையும் இப்படம் கடுமையாய் சாடியிருக்கிறது.

அங்காடித் தெருவின் திரைக்கதையிலிருந்து பத்திற்கும் மேற்பட்ட அற்புதமான சிறுகதைகள் பிரிந்து செல்கின்றன. அல்லது பல சிறுகதைகள் சேர்ந்து ஒரே திரைக்கதையாய் பிணையப்பட்டிருக்கிறது. இப்படம் முழுக்க சிதறியிருக்கும் கதாபாத்திரங்களுக்கு விரிவாய் சொல்லப்படாது விட்ட அழுத்தமான பின்புலம் இருக்கிறது. அதை ஒரு காட்சியின் மூலமோ, சிறியதொரு உரையாடலின் மூலமோ மொத்தமாய் பார்வையாளனுக்கு கடத்தி விட முடிவது அதி நேர்த்தியான இயக்கமாகத்தான் இருக்க முடியும்.

1. செளந்திர பாண்டி – ராணியின் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் மட்டுமே ஒரு தேர்ந்த சிறுகதையாக கண் முன் விரிகிறது.
தட்டிக் கழிக்க முடியாத குடும்ப பொறுப்புகளும், வறுமையும், வேலையின்மை குறித்த அச்சமும் செளந்திரபாண்டியை இயலாமையின் உச்சத்தினுக்கு நகர்த்திவிட்டிருக்கிறது. தன்னுடைய காதலை ஒத்துக் கொண்டால் இருவருக்குமே வேலை போய்விடும், குடும்பம் தெருவிற்கு வந்துவிடும் என்கிற பலவீனம் பலரின் முன் தன் காதலை ஒத்துக் கொள்ள அவனை மறுக்க வைக்கிறது. இரண்டு வருடங்களாய் பின்னால் அலைந்த ஆண் காதலிப்பதாய் உருகிய காதலன் பொதுவில் தன்னை வேசை யென்றும் தன்னை அவன் காதலிக்கவே இல்லையென்றும் சொன்ன அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாது (கனி யின் வார்த்தைகளில் : அவன் ராணிய வேசைன்னு சொன்னான் பார் அப்பவே அவ நெஞ்சு வெடிச்சி செத்து போயிட்டா அப்புறம் கீழ விழுந்தது வெறும் உடல்தான்) ராணி மாடி கண்ணாடி சன்னலை உடைத்துக் கொண்டு தரைக்குப் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். வேலை, காதலி வாழ்க்கை என சகலமும் இழந்து பைத்தியமாகும் செளந்திரபாண்டி ஆண்களுக்கு ஆத்மார்த்தமாகவும். காதலுக்காக உயிர் நீத்த ராணி பெண்களுக்கான ஆதர்சமாகவும் மாறிப்போகிறார்கள். வறுமை என்கிற ஒரே பலவீனத்தை மிக மோசமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அதிகார வர்க்கம் ஒரு பெண்ணைக் கொன்றும் இன்னொருவனைப் பைத்தியமாக்கியுமாய் கெக்கலிக்கிறது. பார்வையாளர்களாகிய நாம் உறைந்து போகிறோம்.

2. கனியின் பதிமூன்று வயது தங்கை - அவள் பணிபுரியும் வீடு - சடங்காதல் -தீட்டு என கொல்லையில் நாய்கள் கட்டும் இடத்தில் தங்க வைத்தல் – இந்தாடி அம்பது ரூபா என்பதை உதறிவிட்டுப் போதல் - சடங்கான பெண்ணை கூட்டிக்கொண்டு எங்கே போவதெனத் தெரியாமல் நடுத்தெருவில் கதறுதல் – தீட்டு மனுசங்களுக்குதான் சாமிக்கு இல்ல என மனித நேயமிக்க மனிதர்கள் சிலர் அரவணைத்துக் கொள்ளுதல். இது இன்னொரு நேர்த்தியான சிறுகதை.

3. வளர்ச்சிக் குன்றிய மனிதருக்கு பிறக்கும் குழந்தை அவரைப் போலவே இருக்கிறதென மகிழும் முன்னாள் பாலியல் தொழிலாளித் தாய். இந்தக் கதையை மட்டுமே விவரித்து எழுதினால் சிறந்த சிறுகதையாக வரும் என்பதில் சந்தேகமில்லை

4. வெளியில் பளபளப்பாய் திரியும் பணக்காரப் பெண்ணின் குசுவினால் ஓடி மறையும் ஏழை இளைஞர்கள் பகுதி மிகுந்த எள்ளலோடு பதியப்பட்ட எதிர் கதையாடல்.

5. எட்டு வருடங்களாய் பனிரெண்டு மணி நேரங்கள் நின்றபடியே வேலை பார்த்ததில் இரண்டு கால்களும் முழுதாய் வெரிக்கோசு நோய் தாக்கி அதே ரங்கநாதன் தெருவில் மடியும் நடுத்தர வயதுக்காரர்.

முப்பது வருடங்களாய் மனிதர்களை மட்டும் நம்பி ரங்கநாதன் தெருவில் கடைபோட்ட கண் தெரியாத முதியவர், பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்காமல் நகராட்சிக் கக்கூஸை ஆக்ரமித்து செல்வந்தனாகும் நடுத்தர வயதுக்காரர், பழைய சட்டைகளை துவைத்து புதிதாக லேபிள் ஒட்டி பேக்கிங் செய்து பத்து ரூபாய்க்கு விற்கும் இளைஞர், வெளியூரில் அண்ணன் வேலை செய்யும் கடையின் பெயர் போட்ட பையை தயக்கத்தோடு கேட்டு வாங்கி குதூகலிக்கும் சிறுமி என படம் முழுக்க கதாபாத்திரங்களும் கதைகளும் சிதறிக் கிடக்கின்றன.
எல்லாக் கதைகளும் எல்லாக் கதாபாத்திரங்களும் விளிம்பு மனிதர்களின் மீது பாயும் அதிகாரங்களின் வெறியாட்டத்தையும் தின்றுக் கொழுத்த பணக்காரர்களின் குரூர முகத்தினையும் அப்பட்டமாக தோலுறிக்கின்றன. அதே நேரத்தில் மனித நேயத்தையும் சிறியதொரு நம்பிக்கை வெளிச்சத்தையும் பார்வையாளர்களிடத்தில் கடத்தவும் தவறவில்லை.

விபத்து இந்தப் படத்தில் வெகு கவனமாக கையாளப்பட்டிருக்கிறது. பெரும்பாலான விபத்துக்கள் சாமான்யர்களின் உயிரைத்தான் காவு வாங்குகின்றன. சாமான்யன் ஒரு தனிமனிதனுமல்ல. மரணமோ, உடல் ஊனமோ அது அவனுக்கு மட்டும் நேராது அவனைச் சார்ந்துள்ள குடும்பத்தினுக்கும் நேரும் அவலத்தையும் அங்காடித் தெரு நுட்பமாய் பதிவு செய்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு உதயம் தியேட்டருக்கருகில் சாலை ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்களின் உயிரை / உடலைப் பறித்த லாரியின் வன் சக்கரங்களுக்கடியில் சிக்குண்ட லிங்குகளின் கனிகளின் வாழ்வு இப்படி இருந்திருக்கலாம். விடியப் போகும் அடுத்த நாள் அவர்களுக்கு மிக முக்கியமானதொரு நாளாக இருந்திருக்கக் கூடும். அடுத்த நாளின் சுதந்திரத்தை அவர்கள் மிகப் பெரும் போராட்டத்தினுக்குப் பிறகு பெற்றிருக்கலாம். அப்போதுதான் துளிர்த்த ஒரு செடி வேரோடு பிடுங்கியெறிப்பட்டதைப் போல கனிகளின் லிங்குகளின் துளிர்த்த வாழ்வை அந்த லாரி நசுக்கி அழித்திருக்கக் கூடும். ஆளில்லாத ரயில்வே கேட்டுகளை கடக்க முனைந்து, ரயிலிடம் தோற்று, தண்டவாளத்தில் உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் எத்தனையோ குடும்பங்கள் சென்னையின் நெரிசலில், அதிகார வர்க்கத்தினரின் காலடியில் புதையுண்டிருக்கலாம். பனையேறியின் வாழ்வும் சாவும் பனையிலேதான் என்பதை நிரூபித்த எத்தனையாவதோ பனையேறியின் மீதமிருக்கும் வாழ்வைக் காக்க வேண்டி அவரின் இரண்டு பதின்ம வயதுப் பெண்களில் ஒருத்தி சென்னையின் துணிக்கடைகளில் மாரைக் கசக்கும் கருங்காலிகளுக்கு இரையாகலாம். இன்னொருத்தி மேல்தட்டு வர்க்கத்தினரின் நாய்கள் தங்கும் கூண்டுக்குள் அடைப்பட்டுக் கிடக்கலாம். எல்லாவற்றுக்கும் ஆதாரமாய் இருப்பது இந்த விபத்துக்கள்தாம். அந்த விபத்துகளின் பின்னாலிருக்கும் அரசாங்கத்தின் மெத்தனம், தனிநபரின் கவனக் குறைவு போன்றவைதாம் மிகப் பெரும் துயரங்களுக்கான ஊற்றாய் இருக்கிறது. எல்லாவற்றையும் பயன் படுத்திக் கொள்ளும் மேல் தட்டு வர்க்கம் கை விடப்பட்டவர்களின் வாழ்வை மிகுந்த விருப்பத்தோடு விழுங்கி ஏப்பம் விடுகிறது.

திரையாக்கத்தைப் பொறுத்த வரை அங்காடித் தெரு வெயிலின் நகலாகத்தான் வந்திருக்கிறது. இரு படங்களும் வெவ்வேறு தளம்தான் என்றாலும். ஒரு பெண்ணின் தற்கொலையோடு முடியும் முதல் பாதி, பால்ய கால முன் கதைக் காட்சியமைப்புகள், மிகுந்த சப்தங்களோடு பெய்யும் மழையில் சண்டை, வலிந்து திணிக்கப்படும் குரூரம், கிளிட்சே அழுகை என பலக் காட்சிகளில் வெயிலின் பாதிப்பு இருந்தது. இம்மாதிரியான பேட்டன் கதை சொல்லல் முறைகளிடம் வசந்த பாலன் போன்றவர்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது. இந்த படத்தின் மிக மோசமான விஷயம் இசை. குதூகலம், கொண்டாட்டம், துயரம், என எந்த உணர்வையுமே இசை தூண்டவில்லை. மாறாய் காட்சிகளின் வீர்யத்தை இசை சற்றே குறைக்கிறது. பின்னணி இசையை சரியாகப் பயன்படுத்தும் இயக்குனராக நம் சூழலில் பாலுமகேந்திராவை சொல்லலாம். அவர் இயக்கத்தில் வந்த பெரும்பாலான படங்களின் பின்னணி இசையென்பது மெளனமும், காற்றும், பறவைகளின் சப்தமும் அல்லது சூழல்களின் ஒலிகளாகத்தான் இருக்கும் அதுவே அக்காட்சிகளின் இயல்பைக் குலைக்காது பார்த்துக்கொள்ள உதவும். இம்மாதிரியான படங்களுக்கு நடனத்துடன் கூடிய பாடல் காட்சிகளெல்லாம் பொருந்தாது உறுத்தலாகி விடுகின்றன. படத்தின் இயக்குனரே எழுதும் உரையாடலுக்கும் எழுத்தாளரின் உரையாடலுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை ஜெயமோகன் சரியாய் நிறுவியிருக்கிறார். இரண்டாம் பாதி தொய்வை திரைக்கதையில் சற்று சரி செய்திருக்கலாம். ஆனந்தியாக நின்று போயிருந்த அஞ்சலி கனியாக விஸ்வரூபமெடுத்திருக்கிறார். படத்தை உயிரோட்டமாக வைத்திருப்பதில் இவரின் பங்கு பிரதானமாகிறது.

சொற்பமான ஆட்கள் மட்டுமே அமர இயலும் துபாய் கலேரியாவின் குட்டித் திரையரங்கில் மிக சொற்பமான ஆட்களுன் இத்திரைப்படத்தைப் பார்த்தேன். இடைவேளையில் கழிவறையில் இருபத்தாறு வயது மதிக்கத் தக்க இளைஞர் ஒருவர் அழுகையைக் கட்டுப் படுத்த முனைந்து தோற்றுக் கொண்டிருந்தார். சில காட்சிகளில் பின்னிருக்கைப் பெண்களின் விசும்பல்களும் துல்லியமாய் கேட்டன. படம் பார்த்து இரண்டு நாட்களாகியும் ஏதோ ஒரு நிம்மதியின்மையை உணர்வதாக நண்பியொருத்தி புலம்பிக் கொண்டிருந்தாள். இவைதாம் இத்திரைப்படத்தின் வெற்றியாகவிருக்கிறது.

Monday, March 22, 2010

விழாக் குறிப்புகள் - 2


சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தபோது நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது. அளவில் சிறிய விமான நிலையம் என்பதால் சீக்கிரம் வெளியே வந்து விட முடிந்தது. வெளியேறும் வழியில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள். மூன்று மாதத்தினுக்கு முன்பு வரும்போது இப்படிச் சுற்றி வர வேண்டியதில்லை. பெரும்பாலான நவீனப்படுத்தப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் யாவும் நமக்கு மிகப்பெரும் தொல்லையாகத்தான் இருக்கின்றன. சிம் கார்டு மாற்றி வாட்சைத் திருகி சென்னைக் காற்றை ஆழமாய் உள்ளிழுத்தபோது ஒரு சிறிய பரவசம் உண்டாயிற்று. எந்தக் கவலையுமற்று மனிதர்கள் வெற்றுத் தரையில் தலைக்கு கை வைத்தபடி தூங்கிக் கொண்டிருந்தனர். திறந்திருந்த இரண்டு ஏர் டெல் கடைக்காரர்கள் இரும்பு நாற்காலியில் சரிந்து ஆழமாய் தூங்கிக் கொண்டிருந்தனர். குளிர் மென்மையாய் பரவியிருந்தது. டாப் அப் செய்ய வேண்டியிருந்ததுதான் என்றாலும் அவர்களின் தூக்கத்தை கெடுக்க மனதில்லாமல் நகர்ந்தேன். மகேந்திரா வேனிலிருந்து கிராமத்து மனிதர்கள் இறங்கிக் கொண்டிருந்தனர். தூக்கம் நிறைந்த கண்களோடு வழியெங்கும் தாயகம் திரும்புபவர்களின் உறவினர்கள் காத்துக் கிடந்தனர். இம்மாதிரி சம்பிரதாயங்களான விடைபெறல், வரவேற்றல், கண்ணீர், இதெல்லாம் என்னை சம நிலையில் இருக்க விடாமல் செய்துவிடுமென பயந்தே நான் உறவுகளையும் நண்பர்களையும் விமான நிலையத்தினுக்கு அழைப்பதில்லை. மேலதிகமாய் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை வந்துவிடுவதால் பெரிய இடைவெளியோ நெகிழ்வுச் சமாச்சாரங்களோ இருப்பதில்லை.

அங்கிருந்த கடையொன்றில் தேநீரும் தண்ணீர் பாட்டிலொன்றும் வாங்கினேன் அய்ம்பது ரூபாய் கொடுத்ததில் சில்லறையாக ஏதோ திருப்பித் தந்தனர். சென்னை நம்பவே முடியாத அளவினுக்கு விலைகளை உயர்த்திக் கொண்டுள்ளது. டீயைக் குடிக்கவே முடியவில்லை. மோசமானதொரு சுவையிலிருந்தது. உடன் வந்த உயரமான ஜீன்ஸ் பெண் எனக்கு முன்னர் வந்து அதே டீயை ஊதி ஊதிக் குடித்துக் கொண்டிருந்தாள். டீயை எறிந்து விட்டு விமான நிலையத்திலிருந்து வெளியில் வந்தேன். திருவண்ணாமலை என்பதால் பேருந்து வசதி சற்று அதிகம்தான். விமான நிலையத்திலிருந்து இறங்கி சாலைக்கு எதிர்புறம் சென்றால் போதுமானது. ஆட்கள் குறைவான பேருந்துகள் தூங்கியபடி வந்து கொண்டிருக்கும். குளிர் காற்று முகத்தில் படபடக்க பயணிக்கும் இந்த நான்கு மணி நேரத்தில் என்னால் எப்போதுமே ஒரு நொடி கூட தூங்க முடிந்ததில்லை. மெல்ல இருள் விலகிக் கொண்டிருக்கும் பின்னிரவைப் பார்த்தபடி வழியில் தென்படும் ஊர்களுக்கு வந்த தருணங்களை, நிகழ்ந்த சம்பவங்களை நினைத்தபடி, நேரம் கடக்கும். இம்மாதிரி தருணங்கள் பகல் கனவில் மூழ்கித் திளைக்க வசதியானது. சமீபத்தில் வந்து கொண்டிருக்கும் பகல் கனவையெல்லாம் எழுதி உங்களை கிச்சுகிச்சு மூட்ட விருப்பமில்லாததால் பகல் கனவு என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறேன்.

திண்டிவனம் தாண்டியபோது இரவு மெல்ல விலகியிருந்தது. பனிப்புகை மூடிய காலை உதித்த முதல் கணத்தை தரிசிக்க முடிந்தது. செஞ்சியிலிருந்து திருவண்ணாமலை வரை பிரதான சாலையை ஒட்டிய வயல்கள் வரிசையாய் வந்து கொண்டிருந்தன. பசிய புற்களில்,அடர் பசும் நெற்கதிர்களில் பனி படந்திருந்தது. அதிகாலைப் பனிக்காற்றில் கலந்திருந்த பசுந்தாவரங்களின் வாசம் சுவாசத்தை நிரப்பியது. சாலையை ஒட்டிய குடிசைகள், ஓட்டு வீடுகள், சமீபமாய் கட்டப்பட்ட ஒரே மாதிரியான மெத்தை வீடுகளென சிறுசிறு இடைவெளிகளில் வீட்டின் முகங்கள் வந்து கொண்டிருந்தன. சொல்லி வைத்தாற்போல் எல்லா வீட்டு முற்றத்திலும் அதே நேரத்தில் பெண்கள் சாணம் தெளித்துக் கொண்டிருந்தனர். சாலை ஓரத்தில் குத்துக் காலிட்டு அமர்ந்து கையில் ஒரு குச்சியினை வைத்துக் கொண்டு மண்ணைக் கீறியபடி சிறுவர்கள் மலம் கழித்துக் கொண்டிருந்தனர், அசை போட்டபடி நடக்கும் மாடுகள், புலுக்கை உதிர்க்கும் ஆடுகள், விடியலை அறிவிக்கும் கோழிகள் என கண்களில் பட்டு வேகமாய் மறையும் சாலையோர கிராமக் காட்சிகளை விழுங்கியபடி பயணித்துக் கொண்டிருந்தேன். கீழ் பெண்ணாத்தூரைக் கடந்த போது கருவேல மரங்கள் சூழந்த அந்த ஏரியும் அதனுள் மாலை நேரங்களில் சூரியன் தங்கமாய் மின்னும் பின்னணியில் விளையாடிக் களைத்த சிறு பிராயத்து நாட்களும் நினைவில் வந்தது. மேலும் அவ்வயதில் அக் கிரமத்தைச் சுற்றியுள்ள பெரும்பாலான சிறு கிராமங்களின் கிணறுகளில் குதித்து கும்மாளமிட்டிருந்ததையும் நினைத்துக் கொண்டேன். பம்பு செட்டு, கிணறை ஒட்டிய பெருமரக் கிளைகள் போன்றவற்றின் மீதேறிக் குதிப்பது மிகப்பெரும் சாகசச் செயலைப் புரிந்த மனநிலையைத் தரும். இந்த மன நிலை இன்னமும் கூட அப்படியேதான் இருக்கிறது. சமீபத்தில் மஸ்கட் சென்றிருந்த போது வாதிபின்காலித் என்கிற இடத்தில் கென்னுடன் ஒரு உயரமான பாறை மீதிருந்தது நீரில் குதித்து புளகாங்கிதமடைந்து கொண்டேன்.

திருவண்ணமலை வந்துவிட்டது. பெரியார் சிலை நிறுத்ததில் இறங்கியதும் பிரம்மாண்டமான பேனர் ஒன்று என்னை வரவேற்றது. புத்தக வெளியீட்டு விழா பேனர் தான் அது. மிக நேர்த்தியான ஓவியத்துடன் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை பறை சாற்றிக் கொண்டிருந்தது. மூன்று சாலைகள் சந்திக்கும் திருவண்ணாமலையின் முக்கிய இடங்களிலெல்லாம் மிகப் பெரிய விளம்பரங்கள் நேர்த்தியான ஓவியத்துடனும் புகைப்படத்துடனும் வைக்கப்பட்டிருந்ததை ஆட்டோவில் செல்லும்போது பார்த்துக் கொண்டேன்.

காலை பத்தரை மணிக்கு வம்சியில் வைத்து பவா வைக் கட்டிக் கொண்டேன். மிகப் பெரிய மலர்ந்த வரவேற்பை ஒவ்வொரு முறையும் அவரிடம் உணரமுடிகிறது. க.சீ.சிவக்குமார் நான்கு நாட்கள் முன்னதாகவே அங்கு வந்துவிட்டிருந்தார். தொடர்ச்சியாக நண்பர்கள் வந்து கொண்டேயிருக்க சுவாரசியமாய் பேச்சும் டீயும் ஓடியபடி இருந்தது. அழைப்பிதழ்களை அணுப்பியபடி, நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தபடி, அந்த நண்பகல் கடந்தது. என் சொந்த வேலை ஒன்றையும் மதியவாக்கில் முடித்துக் கொண்டு நானும் சிவாவும் பிரபஞ்சனை சந்திக்கச் சென்றோம். மதிய உணவை பவாவின் நிலத்தில் அவரின் புதுக் குடிலில் வைத்துக் கொள்ள திட்டமிட்டோம்.

தொடரும்..

Friday, March 19, 2010

மத்தியக் கிழக்கின் வாழ்வும் திரையும் - துபாய் திரைப்பட விழா



ஆறாவது சர்வதேசத் திரைப்பட விழா துபாயில் டிசம்பர் 9 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 16 ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இவ்விழாவில் 55 நாடுகளிலிருந்து 168 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் அராபிய ஆவணப்படங்களும் பாலஸ்தீனிய குறும்படங்களும் உள்ளடக்கம். பெரும்பாலான திரையிடல்கள் மால் ஆஃப் எமிரேட்ஸ் - சினிஸ்டார் திரையரங்குகளிலும் சொற்பமான படங்கள் மதினாத் ஜூமைரா, டிஎம்சி உள்ளிட்ட மற்ற மூன்று இடங்களிலும் திரையிடப்பட்டன.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வெளிவரும் திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதை தேர்வுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இது ஒருவகையில் சரியானதே. பெரும்பான்மையுடன் போட்டியிட முடியாத சிறுபான்மை சினிமாவிற்கான தளமாகவும் துபாய் திரைப்பட விழா இருக்கிறது. A celebaration of Indian cinema என்கிற பிரிவில் இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அமிதாப் பச்சனிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நம் ஊரிலிருந்து அவள் பெயர் தமிழரசி மற்றும் யோகி இரண்டும் இடம் பிடித்திருந்தன. பிற நாடுகளின் வரிசையில் பிரெஞ்சுத் திரைப்படங்களும் அதிகம் திரையிடப்பட்டன.

மற்ற நாடுகளின் சினிமா பரிச்சயமான அளவிற்கு நான் வாழும் நிலப்பரப்பின் திரைப்படங்களை இன்னும் பார்த்திருக்கவில்லை(ஈரான் நீங்கலாக) எனவே இம்முறை மத்திய கிழக்கின் படங்களைப் பார்க்க பெரிதும் விரும்பியிருந்தேன். ஆனால் முன்பெப்போதுமில்லாத பரபரப்பான நாட்களை எதிர்கொண்டிருப்பதால் நான்கு படங்களை மட்டுமே பார்க்க முடிந்தது.

THE NILE BIRDS – Egypt
WHISPER WITH THE WIND -Iraq
MY DEAR ENEMY - South Korea
THE MAN WHO SOLD THE WORLD - Morocco

நான்கு படங்களுமே நல்லதொரு காட்சி அனுபவமாக இருந்தது. திரைப்படம் என்கிற வகையில் எகிப்திய படமான நைல் பேர்ட்ஸ் எனக்கு ஏமாற்றத்தையே அளித்தாலும் நைல் நதிக்கரை மனிதர்கள், நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வு, காமம், கொண்டாட்டம், துயரம் இவற்றை ஓரளவிற்கு சுமாரான திரைக்கதையிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. எகிப்தில் சினிமா ஒரு இலாபகரமான தொழிலாக இல்லை. அதிக திரைப்படங்கள் எடுக்கப்படுவதில்லை. வளர்ச்சி, தொழில்நுட்பம் என எதுவுமில்லாத ஒரு தேசத்திலிருந்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அந்நாட்டைப் பொறுத்த வரை ஒரு முக்கிய சினிமாவாக இருக்கலாம். இப்படத்தினை அதன் இயக்குனரோடும் கதாநாயகனோடும் அமர்ந்து பார்த்தேன். படம் முடிந்த பின்பான உரையாடலில் நான் சிக்கலை ஏற்படுத்த விரும்பவில்லை. ஆனால் எகிப்து நாட்டின் பார்வையாளர்களிடமிருந்து இச்சினிமா குறித்த நல்லதொரு திருப்தி இருந்ததை அவர்களின் களிப்பிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.

After the Downfall, Heman, The Children of Diyarbakir, Whisper with the Wind போன்ற குர்திஷ் இயக்குனர்களின் படங்கள் இம்முறை இடம் பெற்றிருந்தன. குர்திஷ் இன மக்களின் அழித்தொழிப்பை களமாகக் கொண்டிருக்கும் இத் திரைப்படங்கள் துருக்கி,ஈரான் மற்றும் ஈராக் நாடுகளால் கொன்று குவிக்கப்பட்ட குர்திஷ் இன மக்களின் அவலத்தை மிகுந்த வலியுடன் நம் முன் வைக்கின்றன. Turtles can fly படத்தை இயக்கிய பக்மன் ஹோபாடியின் No one Knows about Persian Cats படத்தைப் பார்க்க பெரிதும் விரும்பியிருந்தேன் அத்திரைப்படம் இங்கு திரையிடப்படாததால் இரானிய குர்திஷான ஷாஹ்ரம் அலிடியின் இயக்கத்தில் வந்த Whisper with the Wind படத்தைப் பார்த்தேன். ஷாஹ்ரம் அலிடியின் முதல் படமிது. கான் 2009 திரைப்பட விழாவில் பல்வேறு விருதுகளை குவித்திருக்கிறது. குர்திஷ் இன மக்களின் மீது அரசாங்கம் நிகழ்த்திய வெறியாட்டத்தை, படுகொலைகளை இத் திரைப்படம் காட்சிப்படுத்தியிருக்கிறது. வறண்ட மலைகள் சூழந்த நிலப்பரப்பு, எல்லாவிடத்தும் நிறைந்திருக்கும் காற்றின் அமானுஷ்ய சப்தம் இவற்றின் பின்னணியோடு மிகத் துல்லியமான, அபாரமான ஒளிப்பதிவும் சேர்ந்து இப்படத்தை மிளிரச் செய்திருக்கிறது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் சாமான்யர்களின் வாழ்வு மிகுந்த வலியுள்ளதாக இருக்கிறது. தொடர்ச்சியான போர்களிலும், வல்லரசுகளின் கோரத் தாண்டவங்களிலும் சிக்கி அலைவுறுவதோடு மட்டுமில்லாமல் மதம், சமூகக் கட்டுக்கள், சிறுபான்மை இனத்தவரின் மீதான அதிகாரத்தின் வெறியாட்டம் என எல்லா வன்முறைகளும் நிகழ்ந்த / நிகழ்ந்து கொண்டிருக்கும் இடமாக இத் தேசங்கள் இருக்கின்றன. இம்மாதிரியான சூழலிலிருந்து வெளிவரும் படங்கள் தங்களின் துயரம் நிரம்பிய வாழ்வை, இழப்பை, கதறல்களை இரத்தமும் சதையுமாக பார்வையாளன் முன் வைக்கின்றன. அவை ஏற்படுத்தும் அதிர்ச்சி பார்வையாளனை நிலைகுலைய வைக்கிறது. அப்படி ஒரு அதிர்வைத்தான் இப்படமும் ஏற்படுத்தியது. ஈராக் - அமெரிக்க போர்சூழல் பின்னணியில் வெளிவந்த turtles can fly படத்தின் தொடர்ச்சியாக இதை அணுகலாம். இரண்டு பிரச்சினைகளும் வெவ்வேறானது என்றாலும் இரண்டுமே சாமான்யர்களின் துயரத்தை மிக அழுத்தமாகவே நம் முன் வைக்கின்றன.

ஈராக் மலைப்பிரதேசங்களில் வாழும் குர்திஷ் மக்களின் அழித்தொழிப்பில் தன் மகனை இழந்த மாம் பால்டார் என்கிற முதியவர் திக்பிரம்மையுற்ற மனைவியுடன் எஞ்சிய நாளை கழிக்கிறார். தன் வாகனத்தில் மலைகள், சமவெளிகள் முழுக்கப் பயணித்து அங்கங்கே மீதமிருக்கும் மக்களுக்கு தகவல்களைத் தந்து கொண்டிருக்கிறார். கூண்டோடு அழிக்கப்பட்ட கிராமங்கள், உயிரோடு புதைக்கப்பட்ட மனித உடல்கள் எல்லாவற்றையும் தாண்டி மீதமிருக்கும் மனிதர்களுக்கு சிறுசிறு உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார். அவரது பயணங்களில் தென்படும் கடைகள், நிகழ்வுகள் யாவும் திரும்பி வரும்போது காணாமல் போயிருக்கின்றன அல்லது சிதிலமாகிக் கிடக்கின்றன. உயிர் எப்போது வேண்டுமானாலும் போகலாம் அழித்தொழிப்புகள் எல்லாத் திசைகளிலிருந்தும் வரலாம் என்கிற பயத்தோடு வாழ்கிற மக்களின் அவலத்தை மிகத் துல்லியமாய் பதிவு செய்திருக்கும் படமிது. எல்லா நம்பிக்கைகளும் காணாமல் போன பின்பு அங்கங்கே கேட்கும் அல்லா அல்லா என்கிற அவலக் குரல்களுக்கு மத்தியில் மிகுந்த சிரமங்களுக்கிடையில் மாம் பால்டார் பதிவு செய்த பிறந்த குழந்தையின் அழுகுரலொன்றை தடைசெய்யப்பட்ட வானொலி ஒளிபரப்பு செய்கிறது. மலைப் பிரதேசமெங்கும் வானொலியில் கேட்கும் அப்போதுதான் பிறந்த குழந்தையின் அழுகுரல் புதியதொரு துவக்கத்திற்கான நம்பிக்கைகளைத் தருவதோடு படம் நிறைவடைகிறது.

ஈழம், குர்திஷ்தான் என நிறைவேறாமலேயே போன அற்புதங்கள் கணக்கிலடங்கா குழந்தைகளின் பெண்களின் முதியவர்களின் இளைஞர்களின் உடல்களைத் தின்று அதிகாரத்தின் காலடியில் புதையுண்டிருக்கலாம். ஆயினும் அதிகாரத்தின் குரல்வளையை நோக்கிப் புதைவிலிருந்து நீளும் ஆயிரம் கைகளைப் பற்றிய கனவுகளின் மீது நம்பிக்கை வைப்பதுதான் இந்நாட்களின் மீட்பாய் இருக்கிறது.

மொராக்கோ திரைப்படமான The man who sold the world புதுமையான காட்சி அனுபவத்தைத் தந்தது. திரைப்படவிழாவில் இரண்டு முறை திரையிடப்பட்டு இரண்டு முறையும் அரங்கு நிறைந்தது. இவ்விழாவில் பார்த்ததிலேயே எனக்கு மிகவும் பிடித்தமான படமாக இதைச் சொல்லலாம். இமாத் நூரி(Imad Noury), சுவெல் நூரி (Swel Noury) என்கிற மொராக்கோ சகோதரர்கள் இயக்கிய படமிது. இவர்களின் தந்தை ஹக்கிம் நூரி மொராக்கோவில் நன்கு அறியப்பட்ட இயக்குனர். தாய் மரியா (Maria Pilar Cazorla) ஸ்பானியத் திரைப்பட தயாரிப்பாளர். இத் திரைப்படத்தை தயாரித்திருப்பதும் இவர்தான்.

தஸ்தாயெவ்ஸ்கியின் 'A Weak Heart' நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படமிது. பெரும்பாலான காட்சிகளில் இரஷ்ய இயக்குனர் அந்திரேய் தர்க்கோயெவ்ஸ்கியின் பாதிப்பை உணர முடிந்தது. திரையில் மிகச் சிறந்த கவித்துவப் படிமங்களை உண்டாக்குவதில் வல்லவரான தர்க்கோயெவ்ஸ்கியால் பயன்படுத்தப்பட்ட பல திரைப்படிமங்கள் இவர்களை பாதித்திருக்கின்றன. கவித்துவ உச்சங்களை திரையில் கொண்டுவர தர்க்கோயெவ்ஸ்கியால் மட்டும்தான் முடியுமென்கிற என் இறுக்கமான நம்பிக்கைகளை இவர்கள் சற்றுத் தளர்த்தியிருக்கிறார்கள். மத்திய கிழக்கின் intellectual cinema என இத்திரைப்படத்தை தாராளமாக கொண்டாடும் அளவிற்கு மிக நேர்த்தியான முறையில் படமாக்கப் பட்டிருக்கிறது. இப்படத்திற்கு திரைக்கதை எழுதியிருப்ப சுவெல் நூரி.

ரெட் காமிராவினைக் கொண்டு படமாக்கி இருக்கிறார்கள். லில்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் Audrey Marnay யின் வெண்ணிற உடலில் தனியாய் தெரியும் அடர் சிவப்பு உதடுகளும் சிவப்புச் சாயம் பூசின நகங்களும் ரெட் காமிராவின் அசாத்தியங்கள். படம் முழுவதுமே சிவப்பு நிறம் காதலின் நிறமாகவும் கொண்டாட்டத்தின் நிறமாகவும் கையாளப்பட்டிருக்கிறது.

காட்சிகளுக்குப் பின்னணியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஓவியங்கள் படத்திற்கு அசாதாரணத் தன்மையை தந்திருக்கின்றன. மனதின் மிக ஆழமான, கொந்தளிப்பான, உணர்வுகளின் / உணர்ச்சிகளின் தெறிப்பை ஒவ்வொரு காட்சியிலும் உணர முடிந்தது. பதினைந்து தலைப்புகளில் இத்திரைப்படம் தொகுக்கப்பட்டுள்ளது. ஒரு அடையாளமில்லா தேசத்தில் போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்வு மிகக் கடுமையான சட்ட திட்டங்களுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது. வளைந்த கால் ஒன்றையும் மிக இலேசான இதயத்தையும் கொண்டவனுமான எக்ஸ்(Said Bey) அரசாங்கத்தின் கோப்புகளை மறு பிரதியாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறான். எக்ஸின் கையெழுத்து அந்த ஊரிலேயே மிகச் சிறந்த கையெழுத்தாய் இருப்பதனாலும் அவன் உடல் சிக்கலை முன் வைத்தும் அவனை அரசாங்கம் போர் முனைக்கு அனுப்பி வைக்க வில்லை. எக்ஸின் அறைத்தோழனும் சக பணியாளனுமான நே (Fahd Benchamsi) எக்ஸின் மீது மிக ஆழமான அன்பை வைத்திருக்கிறான். இருவரும் மிக நெருக்கமான அடர்த்தியான அன்பில் திளைக்கிறார்கள். மேலதிகமாய் எக்ஸிற்கு லில்லி என்கிற மிக அழகான பாடகியின் காதலும் கிட்டுகிறது. அவள் எக்ஸை இந்த உலகத்தின் எல்லாவற்றையும் விட அதிகமாய் நேசிக்கிறாள்.

தன் மீது நம்பிக்கை வைக்கும் உயரதிகாரி, அன்பையும் அக்கறையும் கொட்டும் உயிர்த்தோழன், தன்னை வாரிக் கொடுக்கும் அழகான காதலி என எல்லாமிருந்தும் எக்ஸ் துயரமடைகிறான். பதட்டமடைகிறான். இந்த உலகத்தில் தனக்கு மட்டும் எல்லாம் கிடைத்துவிட்டதே என குற்ற உணர்வு கொள்கிறான். தன்னைச் சுற்றியுள்ளவர்களின் நம்பிக்கையை குலைத்து விடுவோமோ என பயப்படுகிறான். தன்னை உலகத்துடன் பொருத்திப் பார்த்து உலகம் எப்போது மகிழ்வடைகிறதோ அப்போதுதான் தன்னால் மகிழ்வாய் இருக்க முடியும் என நம்புகிறான். இறுதியில் மனநிலை பிறழ்கிறான்.

இப்படத்தின் திரையாக்கம் மகிழ்வையும், உற்சாகத்தையும், அன்பில் திளைத்தலையும், நட்பையும், காதலையும், காமத்தையும், உடலையும், போதையையும், பைத்தியத்தன்மையையும் மிகச் கச்சிதமாக பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது. போர்ச்சூழலை காண்பிக்க இரண்டு சிதிலமடைந்த வீடுகளும் எக்ஸ் மற்றும் நே வின் பதட்டங்களும் போதுமானதாய் இருக்கிறது. தஸ்தாயெவ்ஸ்கியின் கதையும் புறம் சாராது அகத்திலேயே பயணிப்பதால் இடம்/தேசம் குறித்தான அடையாளமற்றத் தன்மையை உண்டாக்க இயக்குனர்கள் பெரிதாய் மெனக்கெட வேண்டிய அவசியமில்லாமல் போய்விடுகிறது.

திரையிடலுக்குப் பின்பான கலந்துரையாடலில் நூரி சகோதரர்களில் ஒருவரும் தயாரிப்பாளரான தாயும் மற்றும் எக்ஸாக நடித்திருந்த சையத்பேவும் பங்குபெற்றனர். இரஷ்ய நாவலை அராபிய போர் சூழலுக்குப் பொருத்த எவ்வாறு முடிந்தது என்கிற வினாவிற்கு நூரி பதிலளித்தார். தஸ்தாயெவ்ஸ்கி, காஃப்கா போன்றவர்களின் படைப்புகளில் சூழல்கள் பின்னணிகள் குறித்த பெரும் விவரணைகள் இல்லாதது எல்லா சூழல்களுக்கும் பொருந்திப் போக இலகுவாய் இருக்கிறதென்றார். தாய் தயாரிப்பாளராக இருந்ததால் தங்களால் சுதந்திரமாய் இயங்க முடிந்ததென்றும் பட நேர்த்தியை மட்டுமே கவனத்தில் வைத்து செயல்பட முடிந்ததாயும் பகிர்ந்தனர். அரை மில்லியன் யூரோக்களை இப்படத்திற்கு செலவு செய்ததாய் மரியா பகிர்ந்தார். முப்பது வயதையும் எட்டியிராத இவ்விளம் இயக்குனர்கள் தொட்டிருக்கும் உயரம் அசாத்தியமானதுதான். மேலதிகமாய் இத்திரைப்படம் மூலமாய் உலகத்திற்கு நீங்கள் சொல்ல விரும்புவதென்ன போன்ற மொன்னை கேள்விகளுக்கும் மிக நிதானமாய் பதில் சொல்லும் பொறுமையும் இவர்களுக்கு இருக்கிறது.படம் முடிந்த பின்பு நூரியின் கைகளை அழுத்தமாய் பற்றிக் குலுக்கினேன். இவ்விரு சகோதரர்களும் வருங்கல மத்தியக் கிழக்கின் தவிர்க்க முடியாத சினிமா அடையாளமாகவிருப்பர் என்பதில் சந்தேகமில்லை.

துபாய் திரைப்பட விழாவின் வண்ணம் வருடத்திற்கு வருடம் மெருகேறிக் கொண்டிருக்கிறது. கடந்த மூன்று வருடங்களாக இந்நிகழ்வை அவதானித்து வருபவன் என்கிற முறையில் கடந்த வருடங்களை விட இவ்வருடம் மிக தைரியமான படங்களை விழாக் குழுவினர் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். உள்ளூர் படங்களுக்கு கணிசமான பரிசை வழங்குவதின் மூலம் அராபிய இளைஞர்களிடையே திரைப்படம் குறித்தான சிந்தனைகளை வளர்த்தெடுக்கிறார்கள். அய்ரோப்பிய திரைப்பட விழாக்களைப் போல கவர்ச்சியும் வசீகரமும் புகழின் வெளிச்சமும் அங்கீகாரங்களும் இன்னமும் இவர்களுக்கு கிடைக்கவில்லைதான் எனினும் மத்தியக் கிழக்கின் பெருமளவில் அறியப்படாத சினிமாக்களுக்கு இவ்விழா ஒரு பாலமாக இருக்கிறது என்பது உண்மைதான்.

அகநாழிகை மார்ச் 2010 இதழிலும் இக்கட்டுரை வெளிவந்துள்ளது. நன்றி வாசு.

Thursday, March 18, 2010

விழாக் குறிப்புகள் -1

நினைவு முழுக்க படு வேகமாய் கடந்து போன இரண்டரை நாட்களில் நிகழ்ந்த சம்பவங்களும் தருணங்களும் மனிதர்களும் பேச்சுக்களும் நிறைந்திருந்தன. ஒவ்வொரு முறையும் என் சொந்த நகரத்தை விட்டு வரும்போது ஒற்றையனாய்த்தான் வருகிறேன் (எப்படி உள் நுழைந்தேனோ அப்படியே) சென்னை விமான நிலையத்தினுக்கு விரையும் வாகனமொன்றில் சன்னல் வழியே இரவுக் குளிர் காற்று முகத்தினை சிதறடித்துக் கொண்டிருந்தது. என்னுடலை உறைவித்து நினைவுகள் எங்கெங்கோ உலவிக் கொண்டிருந்தன. கடந்த வியாழக்கிழமை மாலை துவங்கிய பயணமிது. இதோ அதே புள்ளியை நோக்கிய திரும்பல். ஒரு வித இறுக்கமும், இலகுவும் தோன்றி மறைந்தன. எல்லா இறுக்கங்களையும் நான் இலகுவாய் எடுத்துக் கொள்ள இச்சூழலால் தயாரிக்கப்பட்டிருக்கிறேன் என்பதுதான் உண்மையாய் இருக்க முடியும்.

ஒரு படைப்பு வேண்டுமென்றால் பூ மலர்வது போல இயல்பாய் உதிர்க்கலாம் ஆனால் அந்தப் படைப்பை வெளியே கொண்டுவருவதற்கும், வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் பெரும் ப்ரயத்தனங்கள் எடுக்க வேண்டியிருக்கிறதென ஷைலஜா ஒரு முறை சொன்னார். இதை என்னால் முழுமையாய் உணர முடிந்தது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில்தான் துவங்கியது இந்த புத்தகப் பணி. இத்தனைக்கும் இந்த மூன்று புத்தகங்களின் உள்ளடக்கங்களும் ஏற்கனவே எழுதப்பட்டவைதாம். அவற்றை புத்தக வடிவத்தினுக்கேற்றார் போல் மாற்றித், தொகுத்துத், திருத்தி, அட்டையைத் தேர்வுசெய்து, நண்பர்களிடம் படிக்கத் தந்து, முன்னுரை வாங்கி, அச்சகத்தினுக்கு அனுப்ப வேண்டியதுதான் வேலை.

இம்மாதிரியான வேலைகளில் அனுபவமில்லாததால் பல்வேறு வகையில் இடையூறுகளையும், தாமதங்களையும் எதிர் கொள்ள நேர்ந்தது. இத்தனைக்கும் பவா நான்கு புத்தகங்களை கொண்டு வர விரும்பினார். நானாகத்தான் மூன்றாகக் குறைத்தேன். அதற்கே எனக்குத் தெரிந்த எல்லா நண்பர்களும் எனக்காக வேலை செய்ய வேண்டியதாய் போயிற்று. புத்தகச் சந்தையில் இடம்பெற்றுவிட வேண்டுமென்ற நோக்கத்தில் இரவு பகலாய் செயல்பட்டு சரியான நாளில் மூன்று புத்தகங்களையும் வம்சி குடும்பத்தார் புத்தகச் சந்தைக்கு கொண்டுவந்துவிட்டு மகிழ்ச்சியாய் தொலைபேசினர். எனக்கு லேசான குற்ற உணர்வும், மகிழ்வும் அந்த தருணத்தில் ஒருமித்து எழுந்தது. விற்பனையும் நல்ல முறையில் இருந்ததாக தெரியவந்ததும் சற்று ஆறுதலாக உணர்ந்தேன்.


இதோ இந்தப் பயணம் வெளியீட்டு விழாவினுக்காக நிகழ்ந்திருக்கிறது. சொந்த நகரத்தில் வசிக்க இயலாதவர்களுக்கு மட்டுமே அந்நகரம் மிகுந்த வசீகரமுடையதாய் இருக்கிறது என்பது உண்மைதான். இரு சக்கர வாகனத்தில் கூட இலகுவாய் பயணிக்க இயலாதிருக்கும் சாலைகளால் ஆன இச்சிறுநகரத்தின் மீதுதாம் என் பிரியங்கள் படர்ந்திருக்கின்றன. இதே நகரத்தில் எனக்குப் பிடித்தமான ஆளுமைகள், நண்பர்கள், உறவுகள் சகிதமாய் புத்தகங்களை வெளியிட வாய்த்தது என் வாழ்வின் அதி முக்கிய நிகழ்வுதாம். வெளிச்சத்திற்கான நகர்வுகளை, மய்யத்திற்கான தயாரிப்புகளை நிகழ்த்தினாலும் நான் அடிப்படையில் கூட்டுக்குள் சுருங்கி வாழ்வதில் திருப்தியடையும் உயிரினம்தான் என்பது இந்த நிகழ்வில் உறுதியாயிற்று. படபடப்பும், வெட்கமும், கூச்சமும் சேர்ந்து கலவையான ஒரு மனநிலையில்தான் விழா முழுக்கத் திளைத்துக் கொண்டிருந்தேன். முதல் புத்தக வெளியீட்டு விழாவில் எழுத ஆரம்பிக்கும் புதியவர்கள் வழக்கமான ஏற்புரையாய் சொல்லும் தேய்ந்த வசனங்களை நானும் சொன்னேனா என்பது நினைவிலில்லை. ஆனால் அதே தொணியில் வேறு சொற்களைத்தான் நானும் பயன்படுத்தியிருக்கக் கூடும்.

இந்த விழாவினுக்கான அடித்தளங்கள் புத்தகங்களை கொண்டு வர வேண்டும் எனப் பேச ஆரம்பித்தபோதே பவாவினால் முன்னெடுக்கப்பட்டதுதான். திருவண்ணாமலையில் வெளியீடு என்பதை நானும் விரும்பியதால் சற்றுத் தாமதமாக நடத்த வேண்டியதாயிற்று. மானஸியின் பிறந்த நாளைத் தொடர்ந்து மார்ச் இரண்டாவது வாரத்தில் புத்தக வெளியீடுகளை நிகழ்த்தி விடலாம் என்பதை பவா தொலைபேசி உறுதி செய்ததும் பத்து நாட்கள் விடுமுறைக்குத் திட்டமிட்டேன். இத்தனை வருடங்களாய் தூங்கி, சமீபமாய் விழித்துக் கொண்ட என் அலுவலகம் திடீர் புத்திசாலிகளை அங்கங்கே உலவ விட்டதில் என் விடுமுறை மறுக்கப்பட்டது. நிகழ்வினுக்கு வர முடியாத மன நிலையை வளர்த்துக் கொண்ட பின்பு வம்சி வெளியீடுகளின் அழைப்பிதழைப் பார்த்தேன். என் தனியொருவனுக்காக இத்தனை பேர் மெனக்கெடும்போது இங்கென்ன வேலையென ஒரே ஒரு நாளை போராடிப் பெற்றுக் கொண்டு வியாழக் கிழமையன்று ஒரு மோசமான வானூர்தியில் என் இடத்தைப் பதிந்து கொண்டேன். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் எனும் குறுகலான வானூர்தியில் ஏறியதும் லேசான பினாயில் வாசம் வீசியது. மோசமான நிறத்தில் உடையணிந்த மெலிந்த பெண்கள் கடமையாய் புன்னகைத்ததும் அவசரமாய் அவர்களின் கண்களைப் பார்ப்பதை தவிர்த்துக் கொண்டேன்.

ஏர் இந்தியா நிறுவனத்தின் கடுமையான நட்டம் காரணமாக(அப்படித்தான் சொல்லப்படுகிறது) இரவில் சொற்பமாய் தரும் உணவையும் நீரையும் தவிர்த்து மற்ற எல்லாவற்றினுக்கும் காசைத் தீட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். பணம் பிடுங்குவதின் உச்சமாய் குட்டித் திரையில் ஆர்யாவும் த்ரிஷாவும் பேசிக் கொள்வதைக் கேட்க ஐந்து திர்ஹாம்கள் கொடுக்க வேண்டியிருந்தது. நடமாடும் மதுச்சாலைகளும் உண்டு என்பது லேசான ஆசுவாசத்தை தந்தது. கிட்டத் தட்ட ஆறு மணி நேர இடுக்கிப் பயணமிது. நம் சொந்த ஊர் பேருந்தில் கூட தாராளமாய் அமரலாம். ஆனால் இந்த இருக்கை பேருந்து இருக்கையை விட அளவில் குறுகியதாய் இருந்தது. ப்ளாக் லேபிள் லார்ஜ் பதினோரு திர்ஹாம், சோடா நான்கு திராம், கண்ணாடியும் பிளாஸ்டிக்குமல்லாத க்ளாஸ் மற்றும் வறுகடலை இரண்டு திராம், பனித் துண்டங்களை பற்றி விசாரிக்கவில்லை. எனினும் சற்று மகிழ்ச்சியாகத்தான் இருந்தது துபாய் மதுவிடுதிகளோடு ஒப்பிடுகையில் சற்றுக் குறைவுதான். மூன்று முறை பிளாக்கியதும் எதைப் பற்றியும் கவலைப்படாது தூங்கி விட்டேன்.

விழித்துப் பார்த்தபோது திருச்சிராப் பள்ளி எனப் பரிதாபமாய் எழுதப்பட்ட பெயர்பலகை நள்ளிரவில் தனியாய் கண்ணில் பட்டது. துபாயிலிருந்து திருச்சி வந்து பின் சென்னை வரும் விமானமிது. கிட்டத் தட்ட எல்லா இருக்கைகளும் இங்கேயே காலியாகிவிட்டிருந்தன. தென் தமிழ்நாட்டுப் பயணிகளுக்கு இவ்விமானம் நேர அடிப்படையில் வசதியானதாக இருக்கலாம். இதே விமானம் கோலாலம்பூர் வேறு போகிறதாம். சென்னை மற்றும் கோலாலம்பூர் பயணிகள் ஏறிக்கொண்டதும் மீண்டும் செங்குத்தான பயணம் துவங்கியது. இறுக்கமான ஜீன்ஸ் அணிந்த இருபது வயது மதிக்கத் தக்க உயரமான பெண்ணொருத்தி எனக்கு எதிர் இருக்கையில் பெற்றோர் சகிதமாய் வந்தமர்ந்து உடனடியாய் தூங்கிப் போனாள். சுஜாதாவின் ரங்கத்துப் பெண்களின் நிழலை அவள் தன் முகத்தில் தேக்கி வைத்திருந்தாள்.

அடுத்த இரண்டு நாட்களின் பரபரப்பை நினைத்துக் கொண்டேன். தூக்கம் விலகி ஓடியது. இந்தப் பயணத்திற்கான துவக்கப் புள்ளி எதுவாக இருந்தது? இணக்கமான மனிதர்களற்ற சூழலா? மிகப்பெரும் பூதத்தைப் போல இளைப்பாறிக் கிடந்த நேரமா? இணையத்தின் அசாதாரண சாத்தியமா? ஓசி வலைப்பூ? நண்பர்கள்? நண்பிகள்? தோழிகள்? காதலிகள்? இவையெல்லாமும்தான் என்றாலும் எல்லாவற்றுக்குமான துவக்கப்புள்ளி ஆறுவயதில் எனக்கு அறிமுகமான, பார்வதி நகருக்கு குடிநீர் வந்ததை அறிவிக்கும் பணியிலிருந்த, நைனார் தாத்தாவின் கையிலிருந்த பூந்தளிர் புத்தகமாகத்தான் இருக்கமுடியும்.


தொடரும்..

Tuesday, March 9, 2010

புத்தக வெளியீட்டு விழா


வம்சி வெளியீட்டு விழாவில் என்னுடைய மூன்று புத்தகங்களும் வரும் சனிக்கிழமை மாலை திருவண்ணாமலையில் வெளியிடப் பட இருக்கின்றன. தமிழ்நதி சந்திரா முத்து கிருஷ்ணன் ஆகியோர் என் புத்தகங்களைக் குறித்து பேச இருக்கிறார்கள். வம்சியின் மற்ற புத்தகங்களும் உடன் வெளியிடப்படுவதால் திரளான படைப்பாளிகள் கலந்து கொள்கிறார்கள். மூன்று நாள் பயணமாக வரும் நானும் விழாவில் பங்கு கொள்கிறேன். நேரமும் சந்தர்ப்பமும் வாய்க்கும் நண்பர்கள் இச்சிறு அறிவிப்பை அழைப்பாக ஏற்று நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும். முதல் புத்தக வெளியீட்டை சொந்த ஊரில் நடத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். வரும் வெள்ளிக்கிழமை காலையிலிருந்து ஞாயிறு மதியம் வரை 9952236058 என்ற எண்ணில் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

Featured Post

test

 test