Monday, November 19, 2007

கோபி கிருஷ்ணன் - இறப்பு,எழுத்து மற்றும் வாழ்வு



மே 10,2003 ல் தன் இறுதி சடங்கிற்கான பணத்தைக்கூட சேர்த்து வைத்துக் கொள்ள முடியாமல் / தன் குடும்பத்தினருக்கு தந்திடாமல் இறந்துபோனான் தமிழின் மிகச் சிறந்த சிறுகதையாளன் கோபி கிருஷ்ணன்.ஒரு உண்மையான கலைஞனின் வாழ்வைப் போலவே மரணமும் பெரும் அலைக்கழிப்பாய் இருப்பது தமிழ்சூழலுக்கு ஒன்றும் புதிதில்லை.ஒருவேளை இவ்விதம் இறப்பது மட்டுமே உண்மைக்கான சரியான அடையாளமாய் இருக்கும் என்பதுபோன்ற தீர்மானங்களையும் நாம் நாளையடைவில் பெற்றுவிடக்கூடும்.

கோபி கிருஷ்ணன் தன்னுடைய உயிர்ப்பு - நாட்குறிப்பு பதிவுகள் எனும் ஒரு சிறுகதையில்(குறிப்புகளை சிறுகதையாக்கிய நவீன பாணி எழுத்தாளுமைகளை நிறைவேற்றிக் காட்டியவர்களில் இவர் முக்கியமானவர்)இவ்வாறு சொல்லியிருப்பார்,
12.89' இன்று நிறைய நண்பர்களைப் பார்த்ததில் மனம் சந்தோஷத்தால் நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது.இன்றைக்கு இந்த சந்தோஷத்திலேயே செத்துப்போனால் எவ்வளவு அருமையாக இருக்கும் என்று எண்ணத் தோன்றிற்று.அந்த நைட்டிங்கேல் பறவையின் நாத இனிமையில் சாக விரும்பிய கீட்ஸ் நினைவில் நின்றார்.அந்த இளம் அழகி கொடுத்த அன்னியோன்ய சந்தோஷத்தின் பூரணத்துவத்தில் தன்னை மாய்த்துக்கொண்ட 'அப் அட் த வில்லா'வில் வரும் கார்ல் என்ற கதாபாத்திரம் மனதில் தங்கிற்று.இன்று கிடைத்த மனநிறைவு மீண்டும் கிடைக்குமா என்கிற ஏக்கம் மனதில் தோன்றி நிலைத்தது.


தோழமை மிக்க மனிதராக,விமர்சனங்களின் மீதும் காழ்ப்புணர்வுகளின் மீதும் எப்போதும் நம்பிக்கை கொண்டிராத,நண்பர்களை மிகவும் நேசித்த கோபிகிருஷ்ணனின் மரணத்திற்கு மிக சொற்பமானவர்களே குழுமி இருந்தனர்.வளர்மதி உள்ளிட்ட நண்பர்கள் அவரது இறுதி சடங்கிற்கான பணத்தை திரட்டித் தந்திருக்கிறார்கள்.வெளி ரங்கராஜன்,லதா ராமகிருஷ்ணன் போன்றோர் திண்ணை மூலமாக சிறுதொகை யொன்றை கோபி கிருஷ்ணனின் குடும்பத்திற்கு திரட்டித் தந்திருக்கின்றனர்.நிதியுதவி அளித்தோர் பட்டியலில் தமிழின் ஆகச்சிறந்த,வசதி படைத்த படைப்பாளிகளின் பெயர்களைத் தேடிப்பார்த்ததில் வெறுமையே எஞ்சியது.

விளிம்பு நிலை மனிதர்கள்,கீழ்த்தட்டு மனிதர்கள்,நடுத்தர வர்க்கம்,அதிகாரங்களுக்குப் பழகிய இயந்திரமயமாகிப்போன மனிதர்கள் என இவரது கதைமாந்தர்கள் இயலாமையின் உச்சத்திலிருந்து சமூகத்தின் போலி மதீப்பீடுகளை விசாரணைக்குள்ளாக்குபவர்கள்.உளவியல் சிக்கல்கள்,அக மனதின் விசாரங்கள் என இவரது துறை சார்ந்த செறிவான உள்ளீடுகளையும் இவரது படைப்பில் காணலாம்.வாழ்வின் மீது மறைமுகமாகப் படிந்துபோயிருக்கும் குரூரத்தினை தனது அடையாளமாகவே ஏற்றுக் கொள்ளும் வாழ்வின் உச்சகட்ட இயலாமைகளை மிகவும் புதுமையான ஒரு நடையில் நமக்கு அறிமுகப்படுத்துவதாகவே இவரது கதைகள் இருக்கின்றன.

இவரது படைப்புகள் ஒவ்வாத உணர்வுகள்,முடியாத சமன்,உணர்வுகள் உறங்குவதில்லை,தூயோன்,மானிட வாழ்வு தரும் ஆனந்தம்,டேபிள் டென்னிஸ்,உள்ளிருந்து சில குரல்கள்,இடாகினிப் பேய்களும்-நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும் என்னும் பெயர்களில் புத்தகங்களாக வந்துள்ளது.இதில் உள்ளேயிருந்து சில குரல்கள் நாவல் வடிவத்திலும்,உணர்வுகள் உறங்குவதில்லை குறுநாவல் தொகுதியாகவும்,டேபிள் டென்னிஸ் குறுநாவலாகவும்,மற்றவைகள் சிறுகதைத் தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளது.இவரது உள்ளிருந்து சில குரல்கள் உளவியல் ரீதியிலான சிக்கல்களை பேசும் மிகச் சிறந்த நாவல்.கோபி கிருஷ்ணனின் மாஸ்டர் பீஸ் என பெரும்பாலானவர்களால் இவரது டேபிள் டென்னிஸ் கொண்டாடப்படுகிறது.இது தவிர்த்து பல உளவியல் கட்டுரைகளும்,மொழிபெயர்ப்பு கட்டுரைகளும் இவரால் எழுதப்பட்டிருக்கிறது.இவரது படைப்புகளை முழுத்தொகுதியாய் வெளிக்கொண்டு வந்தால் அத்தொகுப்பு தமிழின் சிறந்த அடையாளமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மதுரையில் பிறந்த கோபிகிருஷ்ணன் உளவியல் துறையிலும்,சமூக சேவை துறையிலும் முதுகலைப்பட்டம் பெற்றவர். ஆத்மன் ஆலோசனை மையம் என்ற அமைப்பை உருவாக்கி, மனநல ஆலோசகராக சில காலம் பணியாற்றியுள்ளார். பல்வேறு தொண்டு நிறுவனங்களிலும் சமூக சேவகராகப் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு.எந்த ஒரு வடிவிலும் குரூரத்தை தாங்கிக் கொள்ளாத மனநிலையே இவருக்கு வாய்த்திருக்கிறது.இவரது மானிட வாழ்வு தரும் ஆனந்தம் எனும் சிறுகதைத் தொகுப்பில் இந்த மென்மையான மனதைப் பார்க்கலாம்.காசாப்புக் கடையில் ஆட்டின் கழுத்தை அறுக்கும் வன்முறையை பார்த்த காட்சி அவனை மதிய உணவை சாப்பிட விடாமல் செய்வதை ஒரு துண்டு சிறுகதையிலும் சாலையோர பிச்சைக்காரனுக்கு தினம் உணவளிக்கும் இன்னொருவனை நடைபாதை உறவு எனும் சிறுகதையிலும் காணலாம்.அதிகார மய்யங்களுக்கெதிரான குரலை எழுப்ப முடியாமல் போவதின் துயரங்களையும் எழுப்புகிறவன் மீதெழும் இயல்பான கவர்ச்சி மற்றும் இயலாமைகள் ஆசான் சிறுகதையில் நேர்த்தியாய் வெளிப்பட்டிருக்கும்.

கோபி கிருஷ்ணனின் வாழ்வையும் எழுத்தையும் தனித்தனியே பார்க்க முடியவில்லை வாழ்வே எழுத்தாகவும் எழுத்தே வாழ்வாகவும் கொண்ட சொற்பமான மனிதர்களுள் கோபி கிருஷ்ணன் முக்கியமானவர்.அதிகமான மனவழுத்தம் காரணமாக பலமுறை தற்கொலைக்கு முயன்றவர்.தொடர்ந்து சாப்பிட்டு வந்த உளநல மருந்துகள் ஏற்படுத்திய பலகீனம் காரணமாக் நோய்மையுற்று இறந்தார்.ஆத்மாநாமினுடையது போன்ற வெளிப்படையான தற்கொலை இல்லையெனினும் இதுவும் ஒருவித மறைமுக தற்கொலையாகவே அவரது நெருக்கமானவர்களால் சொல்லப்படுகிறது.பிரதியூடான வாசிப்புகளை புதுமைப்பித்தன் வரை நிகழ்த்திக் காட்டிய மார்க்ஸ் உள்ளிட்ட அறிவுஜீவிகள் கோபி கிருஷ்ணனை எப்படி அனுகுகிறார்கள் எனத் தெரியவில்லை.எப்படியிருப்பினும் மிக நேர்மையான எழுத்து என்பதற்கு இவரை உதாரணமாக சொல்லலாம்.

தொடர்புடைய சுட்டிகள்
மேதமைகளைப் பின் தொடரும் இருண்மை-அய்யனார்
கோபி கிருஷ்ணனின் பீடி சிறுகதை
கோபி கிருஷ்ணன் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் கதாவிலாசம்
தமிழ் விக்கி பீடியாவில் கோபிகிருஷ்ணன்
உருபடாதது நாரயணனின் சிலாகிப்பு

Saturday, November 10, 2007

பெயர் மறந்துபோன அந்தப் பையனும் கருணையின் சாயல்களற்ற கண்களைக் கொண்ட பூங்குழலியும்



அந்தப் பையன் இரண்டாவது ஷிப்டில் வந்து மிகுந்த தயக்கங்களோடு என் பைக் சாவி கேட்டான்.ஏதோ அவசர வேலையிருப்பதாகவும் ஒரு மணி நேரத்தில் வந்து விடுவதாகவும் சொன்னான்.நான் அப்போது கருப்பு நிற சுசுகி பைக் வைத்திருந்தேன்.எனக்கு மிகப் பிடித்தமான வண்டி.அதை வைத்திருந்த நான்கு வருடங்களில் எனக்கெந்த விபத்தும் நேரவில்லை.எவ்வளவு குடித்தாலும் அந்த பைக் என்னை எந்த சிக்கலுமில்லாமல் வீட்டில் சேர்த்துவிடும் என்ற நம்பிக்கையும் எனக்கிருந்தது.அவன் கேட்ட விதம் பிடித்திருந்ததால் தயங்காமல் சாவி கொடுத்தேன்.தரக்கட்டுப்பாடு பிரிவில் பரிசோதகனாக வேலை பார்த்தான் அந்தப் பையன். அதற்கு முன் அவனிடம் பேசியது கூட இல்லை மேலும் அவன் ஒரு அப்ரண்டிஸ் பையன் என்பதாலும் அவன் என்னிடம் பேசவோ, நான் அவனிடம் பேசிக்கொள்ளவோ சந்தர்ப்பம் வாய்த்ததில்லை.இரண்டு மணி நேரம் கழித்து ஆனந்த் வந்தான்.ஆனந்த் தரக் கட்டுப்பாடு பிரிவிலும் நான் உற்பத்தி பிரிவிலும் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்தோம்.

அந்தப் பையனை ரொம்ப நேரமாக காணவில்லை இந்த பக்கமாக வந்தானா?எனக்கேட்டதற்கு என்னிடம் பைக் வாங்கிப்போன தகவலை சொன்னேன்.ஆனந்த மிகவும் கோபப்பட்டான் வேலை நேரத்தில் இப்படிப் போவதற்கு எப்படி அனுமத்தித்தேன் என்றும் பைக் வேறு கொடுத்தா அனுப்புவது என்றும் சத்தம் போட்டான்.மேலும் அந்தப் பையன் ஆறு மாதத்திற்கு முன்புதான் பைக்கில் விழுந்து வாறினான் என்ற தகவலையும் சொன்னான்.தொடையிலும் நடுமுதுகிலும் ப்ளேட் வைத்திருப்பதாயும் எந்த வாகனத்தையும் ஓட்டக்கூடாது என்றும் அவன் சொன்ன தகவல்கள் சின்ன அதிர்ச்சியை வரவைத்தது.ஷிப்ட் முடிய 1 மணி நேரம் இருக்கும்போது வந்தான்.தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டபடி சாவியை கொடுத்தான்.நான் எதுவும் பேசாமல் வாங்கிக்கொண்டேன்.அவன் திரும்பி வந்ததே போதும் என்ற மனநிலை அப்போது வந்துவிட்டிருந்தது.

நான் பணிபுரிந்த நிறுவனம் சுற்றுச் சூழல் மற்றும் பாதுகாப்பு பிரிவுகளில்(ஐஎஸ் ஓ 14001 & 18001) சான்றிதழ் வாங்க விரும்பியது. அதற்கான பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.பணிப்பாதுகாப்பு சம்பந்தமாக எங்கள் நிறுவன மருத்துவமனைக்கு தொடர்ச்சியாய் செல்ல வேண்டி வந்தது.மருத்துவமனை மருந்தகப் பிரிவில் பூங்குழலி வேலை பார்த்தாள். அவளிடம் சில தகவல்களைப் பெற வேண்டி இருந்தது.பெண்கள் இருக்கும் சூழலில் பணிபுரிவது மிகுந்த சந்தோஷமான ஒன்று. ஆனால் எனக்கந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை. இயந்திரவியல் துறை என்பதாலும் அதிலும் உற்பத்திப் பிரிவு என்பதாலும் என் பணியிடங்களில் பெண் வாசனையே இல்லாதிருந்தது.(இந்தியாவில் கடைசியாய் பணிபுரிந்த நிறுவனத்தில் மட்டும் விஜயலட்சுமி இருந்தாள்.சக ஆணை விட சக பெண்ணுடன் பணிபுரிவது பல விதங்களில் இணக்கமானது.தொழில்நுடப விவரங்கள்,பணிகுறித்தான தகவல்களை சுலபத்தில் ஒரு பெண்ணிடமிருந்து வாங்கிவிடலாம் (என் சமீபத்திய நண்பர் அடிக்கடி சொல்வதுபோல ஒட்டுகாஜ் அல்லது ஓசிகாஜ் அடிப்பது சுலபம்))

ஆனால் பூங்குழலியிடமிருந்து நான் தகவல்கள் வாங்க சற்று சிரமப்பட வேண்டியிருந்தது.அரைமணி நேரத்திற்கொருமுறை கேண்டீன் போக வேண்டியிருந்தது.அவளின் பிறப்பு,வளர்ப்பு எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது.என் பைக் நிறம் அவளுக்குப் பிடித்தமானதாய் இருந்தது. என்னை இதற்கு முன்பு பார்த்திருப்பதாகவும் சொன்னாள்.( என் வீடு மருத்துவமனைக்கு சமீபமாய் இருந்தது) பொதுவாய் லொட லொட பெண்கள் மேல் எனக்கு ஆர்வம் இல்லை.அதுவும் சாப்பாடு, சினிமா, ஊர், காலேஜ், வேலை என்பது தவிர்த்து வேறெதுவும் தெரியாத பெண்களிடம் பேச என்ன இருக்கிறது? ஒரு வழியாய் அவளிடம் தகவல்களைப் பெற்றுக்கொண்டு திரும்பினேன் அதற்குள் அவளின் தொலைபேசி எண் என் தொலைபேசி எண் எல்லாம் கைமாறிவிட்டிருந்தது.ஒரு முறை வீட்டிற்கும் வந்து போனாள்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் அவள் அந்தப் பையனை பற்றி கேட்டது எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.அவள் அந்தப் பையனை காதலிப்பதாக சொன்னாள்.நான் ஆனந்திடம் இதுபற்றி சொன்னேன். உங்காளு பார்யா கலக்குறான்! என்றதற்கு அவன் சிரித்துக்கொண்டான்.அந்த பையனை அதற்கு பிறகு வேறு மாதிரி பார்க்க ஆரம்பித்தேன்.ஒரு ஆண் ஒரு பெண்ணால் காதலிக்கப்படுவது மிக முக்கியத்துவம் வாய்ந்ததது.அந்த ஆண் அதற்குப் பின் வேறுமாதிரி ஒரு வடிவத்தினை அடைகிறான்.ஒரு ஹீரோயிச தோற்றம் அவனுக்குப் பொருந்திவிடுகிறது.பின்பு அந்த நிறுவனத்திலிருந்து விலகிவிட்டு சென்னை போய் விட்டேன்.ஆனந்திடமிருந்து மட்டும் அவ்வப்போது தொலைபேசி அழைப்புகள் வரும்.பின்பு அதுவும் நின்றுபோயிற்று.மூன்று மாதங்கள் கழித்து ஊருக்குப் போனேன் மருத்துவமனையை கடந்து சொல்லும்போது பூங்குழலி நினைவில் வந்தாள் அவளோடு அந்த பையனும் நினைவில் வந்து போனான்.

சாயந்திரம் ஆனந்த் வீட்டுக்கு வந்தான்.மாடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.அந்த பையன் சூசைட் பண்ணிக்கினான் மச்சி! என ஆனந்த சொன்னது அதிர்ச்சியாக இருந்தது.திடீரென்று இரண்டு வாரமாய் ஆளை காணவில்லை என்றும் அவனை செங்கல்பட்டில் ஒரு லாட்ஜிலிருந்து அழுகிய உடலாய் அவன் பெற்றோர் கண்டுபிடித்ததாயும் ஆனந்த் சொன்னது என்னை உறைய வைத்தது.சில நிமிடங்கள் எதுவும் பேசமுடியவில்லை அவன் தாமதமாய் வந்த தருணத்தில் அவனை கடிந்து கொள்ளாமல் விட்டது இப்போது ஆசுவாசமாக இருந்தது.எதற்காகவென்று கேட்டதற்கு காதல் விவகாரம்தான் வேறென்ன எழவு! என இறுகிய முகத்தோடு சொன்னான்.அந்த பையன் மிக மெதுவாய் பேசுவான், உயரமாய், சிவப்பாய், அழகாய் இருப்பான்,என்ன சொன்னாலும் கேட்பான்,எதிர்த்தே பேசமாட்டான்,ரொம்ப நல்ல பையன் என ஆனந்த அடுக்கிக்கொண்டே போனான்.
இந்தப்பெண் அவனை கழட்டி விட்டுட்டு வேறொருத்தனோட சுத்த ஆரம்பிச்சிட்டா! பையனால தாங்க முடியல அதான் இப்படி பண்ணிட்டான்
என்றான்.

ஏனோ உலகத்தின் அத்தனை பெண்கள் மீதும் வெறுப்பாய் வந்தது.ஒரு வழியாய் அவனை தேற்றி அனுப்பி வைத்து விட்டு தனிமையில் புதைந்து கொண்டேன்.அந்தப் பையனின் நினைவுகளிலிருந்து என்னை மீட்டெடுக்க முடியாத கணமொன்றில் பூங்குழலியை பார்க்கப்போனேன்.அவள் அப்போதுதான் கிளம்பிக்கொண்டிருந்தாள் என்னை எதிர்பார்க்காததினால் மிக அதிக வெளிப்படுத்துதல்களுடனே வரவேற்றாள். என்னால் புன்னகைக்க முடியவில்லை. எப்படியிருக்கிறாய்? என்பதற்கு பதில் சொல்லாமல்
அந்த பையன் சூசைட் பண்ணிகிட்டானாமே தெரியுமா?
என்றதற்கு தெரியும் என்றாள்.மேலும் சுத்தப் பைத்தியக்காரத்தனம்!அவன மாதிரி அடிமுட்டாள் எவனுமில்லை என்றாள்.அப்போது அவள் கண்களை கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தேன் அதில் கருணையின் சாயல்களைக் கூட காணமுடியவில்லை.அவளின் குரலில் குற்ற உணர்வின் த்வனி எட்டிப்பார்க்கக் கூட இல்லை.எதுவும் சொல்லாமல் வீட்டிற்கு வந்துவிட்டேன்.

அதற்குப் பின் நான் பூங்குழலியை பார்க்கவோ பேசவோ இல்லை. எங்களிருவருக்கும் பொதுவான நண்பர்களும் இல்லாததால் அவளைப் பற்றி கேள்விப்படாத நிம்மதியும்
கிட்டியது.எப்போதாவது லாட்ஜில் வாலிபர் தற்கொலை!அழுகிய உடல் இரண்டு நாட்களுக்குப் பிறகு மீட்பு என்ற செய்திகளை நாளிதழில் படிக்கும்போது மட்டும் அந்தப் பையனும் பூங்குழலியும் நினைவில் வந்து போவார்கள்.இப்போது தமிழ் நாளிதழ்களை படிக்கும் பழக்கத்தையும் விட்டாயிற்று.

Tuesday, November 6, 2007

உலகத்தின் வழிகாட்டி/கடவுள் #1 மற்றும் அவர் மனைவி


உலகத்தின் வழிகாட்டி/கடவுள் #1 க்கும் எனக்குமான உரையாடல்

மனம் பிறழ்தலென்பது உண்மைக்கு அருகாமையிலிருத்தல்..
மனம் பிறழ்ந்தோர் / பைத்தியக்காரர்கள் என்போர் உண்மையை கண்டறிந்து தவிர்த்தோர்...
சுவாமி,ஞானி,உள்விழிப்பு பெற்றவன்,என்லைட்டண்டு புத்தன் இவர்களனைவரும் உண்மையை கண்டறிந்ததாய் பிரச்சாரம் செய்துகொள்ளும் நாளைய ஆபத்தான உலகினுக்கான விதைகள்..
சமகாலத்தில் பெருத்துப்போய் இருக்கும் அத்தனை புராண, இதிகாச, மத, சாதீய பிரச்சினைகளுக்கும் அடிப்படை காரணம் இந்த உண்மையை கண்டறிந்ததாய் சொல்லிக்கொள்ளும் புத்தர்களே.. இதிலிருந்து வாழ்வை மீட்டெடுக்க நீ செய்ய வேண்டியதெல்லாம் மனத்தை தொலைப்பது அல்லது மனம் பிறழ்வது அல்லது பைத்தியமாவது..

மனதை எப்படித் தொலைப்பது?'நான்'ஐ எப்படி விடுவது? கிடைக்கும் எந்த ஒரு நிமிடத்தையும் இந்த கணினியில் என் பெயரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.இந்த உலகினை இரட்சிக்க வந்த பின்நவீன கடவுளாகத்தான் என்னை வெகு காலமாய் கற்பனை செய்து வைத்திருக்கிறேன்.அத்தோடு ஆண்/பெண் பித்தும் சேர்ந்து விட்டிருக்கிறது.புடைக்கும் சமயங்களிலல்லாது எப்போதைக்குமான நுழைத்தல்களை சாத்தியப்படுத்துவதற்கான ஆதார தேடுதல்களையும் கொண்டிருக்கும் இந்நாட்களில் எப்படித் தொலைப்பது?

உனது உடலின் மையப்புள்ளி எது?சிந்தனைகளின் தோற்றுவாய் எது? உன்னை எப்போதும் இயங்கச் செய்வது எது? நீ ஒரு இயங்கும் விலங்கு என எப்படி உனக்குத் தெரியும்?உன் உடலின் ஏதோ ஒரு பாகத்தில் தான் அதற்கான விடை இருக்கிறது.. உன் உடலின் ஏதோ ஒரு பாகம்தான் இது அத்தனைக்குமான தூண்டல்... மனம்..ஆம்!.. இம்மனம் தான் எல்லாவற்றிர்குமான தோற்றுவாய்.. அதன் ஊற்றுக்கண் எங்கிருக்கிறது என எவனுக்கும் தெரியாது...உடலின் எப்பாகத்தில் அது மறைக்கப்பட்டிருக்கிறதென எவனும் இங்கு கண்டறியவில்லை.ஆனால் அதை அடக்கிவிட்டதாய் கொக்கரிக்கிறார்கள்.. அரைவேக்காடுகள்!..அரசியல்வாதிகளுக்கும் சாமியார்களுக்கும் மட்டுமே தெரிந்த அந்த ரகசியத்தை இப்போது உனக்கு சொல்லுகிறேன்.. அது இருப்பது சிறுமூளையில்!!.. அதை அடக்க மது அல்லது போதை வஸ்துக்களை அதிகப்படியாய் பயன்படுத்தினாலே போதுமானது.. அல்லது மிக அதிக வீர்யமுள்ள போதை வஸ்துக்களை மிகக் குறைவாய் உபயோகப் படுத்தினாலும் நலமே...

உலகத்தின் வழிகாட்டி/கடவுள் #1ன் மனைவிக்கும் எனக்குமான உரையாடல்

உனக்கொன்று தெரியுமா?சம காலத்தில் சாமியார்களாய் வேசம் போடும் அத்தனை பேடிகளும் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை உபயோகிப்பவர்கள்தாம். ஒரு பொது இடத்தில் தலைவனொருவன் தன் சகாக்களுக்கு பிரசாதத்தை வழங்குவது போல் ஒபியத்தை வழங்கிக்கொண்டிருக்கிறான் பார்! அனைத்து அடிவருடிகளும் நக்கிக் குடித்து மனத்தை தொலைக்கிறார்கள்.அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது உண்மைக்கான வழி! இருப்பினும் தலைவர்கள் எப்போதும் தலைவர்களாகவே இருக்கும் பொருட்டு பெருந்திரளாய் குழுமியிருக்கும் தன் தொண்டர்களை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பார்! சுன்னத் செய்யப்பட்டவர்களை கொல்லுமாறு ஏவி விடுகிறார்கள். சிலைகளை தலையில் சுமந்தபடி தெருவெங்கிலும் ஊர்வலம் வரும்படியாயும், முக்காடிட்ட பெண்களை வன்புணரும்படியுமாயும் கட்டளைகளை இடுகிறார்கள்.உண்மைக்கு இத்தனை சுலபமான வழியை ஒருபோதும் கேட்டிராத ஆட்டு மந்தைகள் எதிர்பார்த்ததிற்கதிகமாய் கொல்கிறார்கள்.உண்மையை கண்டுகொள்ளும் பேராவலில் கிழிக்கப்படும் யோனிகளின் சப்தம் தூங்கும் கடவுளர்களை எழுப்புவதற்கான இசை என மகிழ்ந்து இன்னும் வேகமாய் சப்தத்தை ஏற்படுத்துகிறார்கள்.

அந்நிய மதக் குழந்தைகளை பூமிக்கு வரவிடாதபடி பார்த்து கொண்டால் (வயிற்றிலேயே குத்தி விடுபவன் வீரன்)உண்மையை வெகு சீக்கிரம் கண்டறியலாம் என்றொரு திரியை கிள்ளிப்போடுகிறான் போதை மிகுந்த தலைவனொருவன்.சாதாரண போதையிலிருந்தவனும் கிளர்ந்துபோய் போதையற்றவர்களுடன் சேர்ந்து குத்திக் கொல்கிறான் கர்ப்பிணிகளையும் கருக்களையும்..வீதிகளெங்கிலும் வழிந்தோடும் ரத்தத்தில் குளித்து மகிழ்கிறது கடவுளர்களின் சிலைகள்.

நீ பைத்தியமாகவேண்டுமா? அரசியல்வாதியாக வேண்டுமா? சாமியாராக வேண்டுமா? எல்லாவற்றிர்கும் ஆதாரம் இந்த போதை வஸ்துதான்.சிறுமூளையை ஆக்ரமிக்கும் இதன் மிகப்பரந்த நீர் வெளி கடும் இன்பத்தினாலானது.போதையின் அளவுகள்தான் இந்த முப்பரிமாண தோற்றத்தை உனக்கு வழங்குகிறது.அளவுகளை நீயே தேர்ந்தெடுத்துக்கொள் வடிவங்கள் தானாய் வந்துவிடும்

இல்லை எனக்கிந்த உணமையை தெரிந்து கொள்ள வேண்டாம் நான் இப்படியே இருந்து விட்டுப்போகிறேன்.கொல்பவர்களின் கூட்டத்தில்லையெனினும் சிலை சுமப்பவர்களில் ஒருவனாய் இருந்துவிட்டுப்போகிறேன்.

கடவுளும் கடவுள் மனைவியும் விடைபெற்றுப்போன போன ஒரு பின்னிரவில் தூக்கம் வர வேண்டி என் குளியலறையின் கதவை அடைக்கிறேன் இயலாமைகளோடும் ஆற்றாமைகளோடும் கசப்புகளோடும் கழிவிரக்கங்களோடும்....

Thursday, November 1, 2007

உள்ளேயிருந்து குரல்கள் அல்லது எண்ணங்களை எழுத்துக்களாக்குதல் அல்லது வாந்தியெடுத்தல்



இந்தப் பணியில் நீ ஒன்பது மாதங்களாக நிலைத்திருப்பது மிகவும் ஆபத்தானது.நல்லவேளையாக இரண்டு இருப்பிடங்களை மாற்றி விட்டிருக்கிறாய் இருப்பினும் வழக்கமாய் எதிர்கொள்பவர் சிரிக்க ஆரம்பித்து விட்டாலோ,ஒரே மனிதர்களை ஒரே நேரத்தில்,ஒரே இடத்தில் சந்திக்கத் துவங்கிவிட்டாலோ நீ! தேங்கிப் போவதை உணரத்தொடங்கு. உடனடியாக எங்காவது ஓடிப்போ! மேலும் இந்தப் பணியில் எந்த சுவாரஸ்யமில்லை.. இது என்ன எழவெடுத்த வேலை? ஒரு பிரயோசனமுமில்லை.. மேலும் இந்த சம்பளம்,பதவி எல்லாம் எத்தனை நாளைக்கு? உட்னடியாக எங்காவது கிளம்பு..
நீ! சற்று நிறுத்தேன் உன் பிரச்சினையால்தான் என் வாழ்வு இத்தனை அலைக்கழிப்பாய் இருக்கிறது.என்னால் நிம்மதியாய் மூச்சு விட முடியவில்லை.. இத்தனை ஓட்டங்களிலேயும் நான் அடைந்ததுதான் என்ன?ஒன்றுமில்லை. சற்று சும்மா இரு. என்னால் எந்த ஒன்றையும் மாற்றிவிடமுடியவில்லை.. எல்லாம் அப்படியேத்தான் இருக்கிறது.. மேலும் மாற்றிவிடமுடியும் என்கிற நம்பிக்கையும் எனக்குப் போய்விட்டது. இந்த அலைவுகளில் பல மோசமான மனிதர்களை சந்தித்தேன் என்பதைத்தவிர நான் சாதித்தது எதுவுமில்லை. என்னை விட்டுவிடு நான் எங்காவது நிலைபெற வேண்டிய தருணம் வந்துவிட்டது.இந்த இடம் சற்று ஆசுவாசமய் இருக்கிறது.அடுத்த மூன்று வருடங்களுக்கு நகர்வதாயில்லை.
உனக்கென்ன பைத்தியமா?இதுதான் சரியான தருணம் அலைவுகளின் மூலம்தான் உனக்கான மிகச் சரியான ஒன்றை நீ அடையமுடியும். யோசித்து பார் ஒரு காலத்தில் ஐந்தாயிர ரூபாய் தான் உன் கனவாயிருந்தது ஆனால் இப்போது பார் உன் வார இறுதிக்காக நீ செலவிடும் தொகை அதை விட அதிகம்.இது எதனால் வந்தது?
வாய மூடு ஐந்தாயிரம் வாங்கியிருந்தாலும் இதே போதையை ஏன் இன்னும் அதிக போதையைப் பெற்றிருக்க முடியும் இந்த கருமத்துக்காக எத்தன இழந்திருக்கிறேன்.
நான் ஐந்தாயிரம் என சொன்னது ஒரு உதாரணத்திற்காக நீ நேர்மையாக உன்னைப் பார்! எத்தனை வளர்ந்திருக்கிறாய்!..எத்தனை பண்பட்டிருக்கிறாய் என உனக்குத் தெரியாது.
இதன்மூலம் எனக்கென்ன வந்தது?என்ன பிரயோசனம் இந்த வடிவத்தில்? உனக்குத் தெரியுமா இந்த முறை ஊருக்கு போயிருந்தபோது நண்பர்களைப் பார்க்கப் பொறாமையாக இருந்தது.எல்லாரும் ஒரே இடத்தில்தான் இருக்கிறார்கள் மனைவி குழந்தை சகிதமாய் இரு சக்கர வாகனத்தில் வாடகை வீடாயிருப்பினும் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள்.நான் பார் பைத்தியக்காரனை விட கேவலமாய் எதையோ கிறுக்கி கொண்டிருக்கிறேன்.
இதென்ன அபத்தம்! பசங்க சந்தோசமா இருக்காங்கன்னு யார் சொன்னது உனக்கு? அவன் பிரச்சின அவனவனுக்கு.. நீ! டொயட்டால சுத்துற டேய்! நீ! ரொம்ப அதிகமான வசதிகளோட இருக்க.. என்ன அசிங்கமா திட்ட வைக்காத!
எனக்கு போதும்யா! இந்த வாழ்க்கை.. என்னை விட்டுடு..
இதோ பார்! இந்த ஊர்ல கல்யாணம் பண்ணிட்டுலாம் சந்தோசமா இருக்க முடியாது.இப்பவே யோசிக்க ஆரம்பி வேற ஊருக்கு போ, வேற வேல தேடு, வேற எங்காவது செட்டில் ஆகு!
எனக்கு யோசிக்கவே பயமா இருக்கு.. என் தகுதிக்கு இந்த வேலை ரொம்ப அதிகம்..
யார்ரா! சொன்னது அப்படியெல்லாம் இல்ல.. உன் திறமை உனக்கு தெரியாது
எனக்கு மட்டும் ஏன் வாழ்க்கை இத்தன சிக்கலா இருக்கு? இது வர எதுவும் ஒழுங்கா நடக்கல.. எது தேவையோ அது எப்பவும் கிடைக்கல..
என்னா கிடைக்கல உனக்கு? எது உன் தேவை?
தெரியல
ஆனா என்னால எதையும் மாத்த முடியல... என்னால யாரும் சந்தோசமா இல்ல.. நானும் சந்தோசமா இல்ல..
டேய்! இது வெத்து சீன்
நல்லா யோசிச்சி பார்! நீ மாறி இருக்க நிறைய விசயத்தை மாத்தியிருக்க (இந்த 'விசய' கூட இப்ப மாத்தினதுதான்)
அய்யோ! என்ன விட்டுடு..
இதோ பார்! இந்த பொண்ன என்னா பண்ணலாம்னு இருக்க?
தெரில
இருக்கிற பிரச்சின பத்தாதுன்னு இது வேற
சரி அந்த பொண்ணு?
டேய்! சும்மா இர்ரா!! என்ன டார்ச்சர் பண்ணாத.. என் வாழ்க்கைல எல்லா பிரச்சினைகளுக்கும் காரணமே இந்த பொண்ணுங்கதான்..
பன்றதெல்லாம் பண்ணிட்டு இதென்னடா மொக்க ஸ்டேட்மெண்ட்
சரி அந்த வீட்ட என்னா பன்றது
தெரில ஆனா அந்த வீட்ல என்னால இருக்க முடியாது
சரி வேற வாங்கு
அய்யோ! என்ன விடு..
டேய்! யோசிடா! எதையும் யோசிக்க மாட்டன்னு அடம்புடிச்சா என்ன செய்ய
எதுக்கும் தீர்வு வரப்போறதில்ல
என் வாழ்க்கை இப்படித்தான் நான் இப்படியே இருந்துட்டு போறேன் விடு..

நீ உனக்கான ஒரு பொய்யான உலகத்தைப் புனைந்துகொண்டு அதன் கனவுத் தன்மையில் ஆழ்ந்துபோய்கொண்டிருப்பதை உன்னால் உணரமுடிகிறதா? இந்த பாழாய் போன எழுத்தை எப்போது துவங்கினாயோ அப்போதிலிருந்து பிடித்துவிட்டது சனி.இதெல்லாம் வேலையில்லாத சோம்பேறிகளின் கொட்டாரம்.என்னசெய்வதென்று தெரியாமல் கொட்டாவி விடுவதைப் போன்றது நன்றாக யோசித்துப் பார் இந்த உலகத்திற்கு வந்த பிறகு நீ! எதையாவது உருப்படியாய் செய்தாயா?புத்தகங்கள் திரைப்படங்களய் வாங்கி குவிப்பது,அதிமேதாவித்தனமாய் சிந்திப்பது, அதிகபட்சமாய் கிடைக்கும் மனிதர்களிடம் உன் மேதாவித்தனத்தத நிரூபிக்க முனைவது.இதைத் தவிர்த்து வேறேதாயினும் செய்தாயா?மெல்ல மெல்ல நீ! உனக்கான வாழ்க்கையை புனைவுகளுக்கு நகர்த்துகிறாய்.எல்லா நிகழ்வுகளையும் எழுத்துக்களாகிப் பார்க்கிறாய்.உன் உலகம் மெல்ல வடிவம்,நிறம்,எல்லாமிழந்து வெற்று சொற்களாகவும் எழுத்துக்களாகவும் மாறி விட்டதை உன்னால் உணரமுடிகிறதா?..இப்போதெல்லாம் உனக்கு பெயரோ,வடிவமோ,பின்குறிப்புகளோ, முன் குறிப்புகளோ தேவைப்படுவதில்லை தமிழெழுத்துக்கள் மட்டுமே பிரதானமாய் முன்நின்று உன்னை ஆகரமிக்கத் தொடங்குவதை உணரமுடிகிறதா? தம்பி நீ! உனக்கான வாழ்வை இழந்து கொண்டிருக்கிறாய்.விழித்துக் கொள்..நீ ஒரு வடிவமாக நான் உதவியிருக்கிறேன் நீ! தரையிலிருந்து மேலெழும்பி மிதக்க ஆரம்பிக்க நான்தான் தூண்டுதலாய் இருந்தேன்.அதே நான் இப்போது உன்னை மேலிருந்து இறக்க மிகவும் சிரமப்படுகிறேன் உனக்கு மிக பிரம்மாண்டமான இறக்கைகள் முளைத்துவிட்டன.அவை மிகுந்த ஆபத்தானவை அவை உன்னை கொண்டு செல்லும் இடம் மிகப்பெரிய பள்ளத்தாக்காய் இருக்கக்கூடும்.. மேலும் உன்னுலக மனிதர்கள் ஒவ்வொருத்தராய் நிறமிழந்து கொண்டே வருவதை உன்னால் உணரமுடிகிறதா?இப்படித்தான் கடைசியில் எல்லாம் வெளிறிப் போகும்.

எனக்குத் தலை சுற்றுகிறது என்ன செய்வதென்று தெரியவில்லை.நான் என்ன செய்ய? எங்கு போக?எதை ஆரம்பிக்க?எதை முடிக்க?எதையும் என்னால் செய்ய முடியதென தீர்மானமாய் தெரிந்த கொண்ட பிறகு என்னை எங்காவது தொலைத்துவிட முடிவுசெய்கிறேன்.எனக்கிந்த இருப்பு மிகுந்த பயத்தை தருகிறது. நானே ஒரு உலகத்தை புனைந்துகொள்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த மனிதர்களை அங்கே நான் சந்திக்கிறேன் என் சிந்தனை என் எண்ணவோட்டம் இவைகளோடு பெரும்பாலோர் ஒத்துப்போகிறார்கள். நான் மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கிறேன். உனக்கொன்று தெரியுமா? என் உயரங்கள் இருபத்தாறு வருடங்களாய் எனக்கே தெரியாமலிருந்தது.இப்போது என்னால் உணரமுடிகிறது.நான் சந்தோசமாயிருக்கிறேன் தயவு செய்து என்னை குழப்பாதே.. கொஞ்சம் சும்மா இரு போதும்...இன்று வார இறுதி வேறு.. தியாகுவோடு கராமா ஓட்டலுக்கு போகிறேன். தர்க்கோயெவ்ஸ்கி படங்கள் இரண்டு பார்க்காமல் இருக்கிறது. மெல்லிதான போதையும், பின்னிரவும், மிக மெதுவான திரைப்படமுமாய் எனக்கான உலகம் என்னை விழுங்க காத்திருக்கிறது. தயவு செய்து உன் கொழுத்த வாயை மூடிக்கொண்டு போ!

Monday, October 29, 2007

பாதுகாப்புகளற்ற வெளியில் இயங்குகிறது சகலமும்



எந்த ஒன்றின் அடிப்படையில்
நாளைக்கான வாக்குறுதிகளைத்
தருவதெனப் புரியாது
திகைத்துப்போயிருக்கிறது
நம்பிக்கைகள்
ஏற்கனவே தரப்பட்டவைகளை
திரும்பப் பெறுவதெப்படி
எனத் தெரியாமல்
தனிமைக் கூட்டின் சுவர்களில்
விடாது மோதியபடி கதறித் தீர்க்கிறது
ஆற்றாமையின் புலம்பல்கள்

எல்லாவற்றின் பின்னாலும் பல்லிளித்து நிற்கிறது
தேவைகளின் பருத்த பெருநிழல்

இயங்குதலின் அடிப்படை
மாற்றமென்பதால்
மாறிக்கொண்டே இருக்கும் நிறங்களின் மேல்
எந்தத் தவறும் இல்லை
நம்பிக்கைகள்,வாக்குறுதிகள்
என்றென்றைக்குமான சாஸ்வதங்களென்று எதுவுமில்லை

இன்றைய தினத்தில் என்னை அடையாளம் கண்டு சிரிக்கிறது
நான் வழக்கமாய் சந்திக்கும்
ஓர் கருப்பு தேசத்து குழந்தை

இந்த அந்நிய தேசத்தில் குளிர்காலம் துவங்கிவிட்டது..



உர்ரென என்னேரமும் உறுமியபடி இருக்கும்
குளிர்ப்பெட்டியின் மூச்சை நிறுத்தியாகிவிட்டது
சன்னல்களைத் திறக்கத்தான்
சற்று சிரமப்பட வேண்டியிருந்தது
இப்போது சன்னல்கள் வழி
புழுதியோ வெம்மையோ வருவதில்லை
காற்று எந்த நதியில் குளித்து விட்டு வந்ததோ?
இத்தனை குளுமை
பெண்ணின் அழுத்தமான
உள்ளங்கைப் பற்றல்களைப் போல…

சிற்றுந்துகளின் மேல் அதிகாலைகளில்
ஒயிலாய் துயில்கொள்ளும்
புலியின் சாயல்களையொத்த பூனைகளின் பாடுதான்
இனித் திண்டாட்டம்
விடியற்காலை குளிருக்கு அவை
இந்த மாடிப்படிக்கட்டுகளின் அடியில்
புதைந்து கொள்ள வேண்டியிருக்கும்..
அதிகாலைப் புகைகளுக்கு நடுவில்
கம்பளிச் சட்டையணிந்த
சிறார்களை இனி பார்க்கலாம்...
அதில் ஏதோ ஒரு சிறுமி
பனியில் குளித்த பூவினை நினைவுபடுத்தலாம்
புறாக்களைத் தவிர்த்து வேறுவிதமான பறவைகளும்
கண்ணில் படத் துவங்கியாயிற்று
வாரயிறுதிகளில் இனி
குளிரூட்டப்பட்ட மது புட்டிகள் தேவைப்படாது
இரவில் மொட்டைமாடியில் குளிரில்
மெல்லிதாய் நடுங்கியபடி புகைக்கலாம்
விடியவே கூடாதென வேண்டியபடி
போர்வைக்குள் ஒரு கதகதப்பான உடலை
நினைவில் தருவித்து
இறுக்கி கட்டித் தூங்கலாம்
நீளமான வீதிகளில் விரல்பிடித்தபடியும்
வெட்கிசிரித்தபடியுமாய் நடைபயிலும்
தமிழ் தேசத்து இளஞ்சோடிகளை
இன்னும் அதிக பொறாமைக் கண்ணோடு
பார்க்க நேரிடலாம்...

எப்போதும் எவருமற்று இருக்க நேர்ந்தாலும்
குளிர்காலம் மிகவும் ரம்மியமானது

நேற்று பெய்த மழை



நேற்று மழையில் தெப்பலாக நனைந்து வந்ததாய் சொன்னாய்

கடைசியாய் நான் நனைந்த நாளை நினைவுக்குள்
கொண்டு வர முயன்று தோற்றேன்
இந்த ஊரில் போன வருடம் டிசம்பர் மாத இறுதியில்
இரண்டு தினங்கள் வெகு குறைவாய் மழை பெய்தது
இந்த ஊர் மழைக்கு ஏற்றதுமில்லை..

மழையில் நனைந்த என் வீட்டு முற்றத்துப் புங்கைமரம்
கொல்லை முருங்கை, மா, கொய்யா, எலுமிச்சை மரங்களை
நினைத்துக் கொண்டேன்..
மழை ஓய்ந்தபின் மலையில் மேகக்கூட்டங்கள்
சற்று ஓய்வெடுத்து
மெல்ல விலகும் காட்சி அற்புதமானது..
என் அம்மாவின் தேநீரோடு மாடியில் தேங்கியிருக்கும் மழைநீரில்
கால்கள் துழாவியபடி நடந்த காட்சியும் வந்து போனது..
அவள் என்னறைக்கு வரும்போதெல்லாம் பின்னாலேயே மழையை
அழைத்து வந்த தினங்களை நினைத்துக்கொண்டேன்..
ஒரு நள்ளிரவில் பெருத்த சப்தங்களோடு
பூமியை நிறைத்த பெருமழையில்
இருவரும் வெகுநேரம் கட்டிக்கொண்டு அழுததும்
நினைவில் வந்து போனது..

நீ மழைபெய்ததாய் என்னிடம் சொல்லியிருக்க வேண்டாம்

Featured Post

test

 test