Monday, October 29, 2007

பாதுகாப்புகளற்ற வெளியில் இயங்குகிறது சகலமும்



எந்த ஒன்றின் அடிப்படையில்
நாளைக்கான வாக்குறுதிகளைத்
தருவதெனப் புரியாது
திகைத்துப்போயிருக்கிறது
நம்பிக்கைகள்
ஏற்கனவே தரப்பட்டவைகளை
திரும்பப் பெறுவதெப்படி
எனத் தெரியாமல்
தனிமைக் கூட்டின் சுவர்களில்
விடாது மோதியபடி கதறித் தீர்க்கிறது
ஆற்றாமையின் புலம்பல்கள்

எல்லாவற்றின் பின்னாலும் பல்லிளித்து நிற்கிறது
தேவைகளின் பருத்த பெருநிழல்

இயங்குதலின் அடிப்படை
மாற்றமென்பதால்
மாறிக்கொண்டே இருக்கும் நிறங்களின் மேல்
எந்தத் தவறும் இல்லை
நம்பிக்கைகள்,வாக்குறுதிகள்
என்றென்றைக்குமான சாஸ்வதங்களென்று எதுவுமில்லை

இன்றைய தினத்தில் என்னை அடையாளம் கண்டு சிரிக்கிறது
நான் வழக்கமாய் சந்திக்கும்
ஓர் கருப்பு தேசத்து குழந்தை

இந்த அந்நிய தேசத்தில் குளிர்காலம் துவங்கிவிட்டது..



உர்ரென என்னேரமும் உறுமியபடி இருக்கும்
குளிர்ப்பெட்டியின் மூச்சை நிறுத்தியாகிவிட்டது
சன்னல்களைத் திறக்கத்தான்
சற்று சிரமப்பட வேண்டியிருந்தது
இப்போது சன்னல்கள் வழி
புழுதியோ வெம்மையோ வருவதில்லை
காற்று எந்த நதியில் குளித்து விட்டு வந்ததோ?
இத்தனை குளுமை
பெண்ணின் அழுத்தமான
உள்ளங்கைப் பற்றல்களைப் போல…

சிற்றுந்துகளின் மேல் அதிகாலைகளில்
ஒயிலாய் துயில்கொள்ளும்
புலியின் சாயல்களையொத்த பூனைகளின் பாடுதான்
இனித் திண்டாட்டம்
விடியற்காலை குளிருக்கு அவை
இந்த மாடிப்படிக்கட்டுகளின் அடியில்
புதைந்து கொள்ள வேண்டியிருக்கும்..
அதிகாலைப் புகைகளுக்கு நடுவில்
கம்பளிச் சட்டையணிந்த
சிறார்களை இனி பார்க்கலாம்...
அதில் ஏதோ ஒரு சிறுமி
பனியில் குளித்த பூவினை நினைவுபடுத்தலாம்
புறாக்களைத் தவிர்த்து வேறுவிதமான பறவைகளும்
கண்ணில் படத் துவங்கியாயிற்று
வாரயிறுதிகளில் இனி
குளிரூட்டப்பட்ட மது புட்டிகள் தேவைப்படாது
இரவில் மொட்டைமாடியில் குளிரில்
மெல்லிதாய் நடுங்கியபடி புகைக்கலாம்
விடியவே கூடாதென வேண்டியபடி
போர்வைக்குள் ஒரு கதகதப்பான உடலை
நினைவில் தருவித்து
இறுக்கி கட்டித் தூங்கலாம்
நீளமான வீதிகளில் விரல்பிடித்தபடியும்
வெட்கிசிரித்தபடியுமாய் நடைபயிலும்
தமிழ் தேசத்து இளஞ்சோடிகளை
இன்னும் அதிக பொறாமைக் கண்ணோடு
பார்க்க நேரிடலாம்...

எப்போதும் எவருமற்று இருக்க நேர்ந்தாலும்
குளிர்காலம் மிகவும் ரம்மியமானது

நேற்று பெய்த மழை



நேற்று மழையில் தெப்பலாக நனைந்து வந்ததாய் சொன்னாய்

கடைசியாய் நான் நனைந்த நாளை நினைவுக்குள்
கொண்டு வர முயன்று தோற்றேன்
இந்த ஊரில் போன வருடம் டிசம்பர் மாத இறுதியில்
இரண்டு தினங்கள் வெகு குறைவாய் மழை பெய்தது
இந்த ஊர் மழைக்கு ஏற்றதுமில்லை..

மழையில் நனைந்த என் வீட்டு முற்றத்துப் புங்கைமரம்
கொல்லை முருங்கை, மா, கொய்யா, எலுமிச்சை மரங்களை
நினைத்துக் கொண்டேன்..
மழை ஓய்ந்தபின் மலையில் மேகக்கூட்டங்கள்
சற்று ஓய்வெடுத்து
மெல்ல விலகும் காட்சி அற்புதமானது..
என் அம்மாவின் தேநீரோடு மாடியில் தேங்கியிருக்கும் மழைநீரில்
கால்கள் துழாவியபடி நடந்த காட்சியும் வந்து போனது..
அவள் என்னறைக்கு வரும்போதெல்லாம் பின்னாலேயே மழையை
அழைத்து வந்த தினங்களை நினைத்துக்கொண்டேன்..
ஒரு நள்ளிரவில் பெருத்த சப்தங்களோடு
பூமியை நிறைத்த பெருமழையில்
இருவரும் வெகுநேரம் கட்டிக்கொண்டு அழுததும்
நினைவில் வந்து போனது..

நீ மழைபெய்ததாய் என்னிடம் சொல்லியிருக்க வேண்டாம்

Sunday, October 28, 2007

மீட்டெடுத்தல்



பாதுகாப்புணர்வின் ருசியை இதுவரை அறிந்ததே இல்லை
எது கொண்டும் வாழ்வினை சமன்படுத்த முடியாமல் போகிறது
வெட்டி எறியப்பட்ட மிருகத்தின் ரத்தத் துளிகளிலிருந்து
பல்கிப் பெருகியதென ஆங்காரமாய் முன் நின்று சிரிக்கிறது
இயலாமையின் எச்சங்கள்...

எல்லாவற்றையும் தின்றுசெறிக்கும் மிக வலிமையான
மிருகமொன்றை யாரேனும் பார்த்தால் சொல்லுங்கள்!
அதற்குத் தின்னக் கொடுக்க
வழிவழியாய் வந்த ரத்தமும் சதையுமான துயரங்களும்
ஒரு போதும் மாற்றிடமுடியாத அவலங்களும்
என்னிடம் ஏராளமாயிருப்பதை..

சாம்பல் படிந்த என் வீட்டின் சுவர்களுக்கு
வண்ணங்கள் தேடியலைந்து கொண்டிருக்கிறேன்
தேவதை கதைகளில் வருவதுபோன்று
அவை ஏழு மலைகளையும் கடல்களையும் தாண்டிய
தனித்தீவில் நெருப்புக்கோளங்களுக்கு மத்தியில்
ஒரு பெட்டியினுள் வைத்துப் பூட்டப்பட்டிருக்கலாம்..

எப்படியிருப்பினும்
பறக்கும் கம்பளமும் தங்கநிற சாவியும்
கிடைக்காமலா போய்விடும்?

Wednesday, October 24, 2007

பதினான்காம் நகரமும் நானும் பிற நகரங்களும் மனிதர்களும்



என் நகரத்தை எனக்காக இவர்கள் தருவதற்கு முன் பதிமூன்று நகரங்கள் இருந்தது.பதிமூன்று சிக்கலான எண் என்பதால் அதனை மாற்ற வேண்டி எல்லா நகரத்தின் கடவுளர்களும் பதினான்காவது நகரமாக என் புதிய நகரத்தை ஒரு பதிமூன்றாம் தேதி நள்ளிரவில் தோற்றுவித்தனர்.தலைவனாக என்னைத் தேர்ந்தெடுக்க இவர்களுக்கு தேவைப்பட்ட தகுதியெல்லாம் பதிமூன்றாம் தேதி நான் பிறந்திருந்தது மட்டுமே.ஒரு நகரத்தின் தலைவனாக எவ்வித தனித்தகுதியும் தேவைப்படாததின் மூலம் இவை சனநாயகத்தின் வழித்தோன்றல்களாக மட்டுமே இருக்கமுடியும் என்பது புலனாகும்.

இங்கிருக்கும் மற்ற நகரங்களின் குடிமக்களைப்போல என் நகரத்தின் குடிமக்களுக்கும் தனி அடையாளம் வேண்டி என் நகரத்தின் கடவுளிடம் விவாதித்துக் கொண்டிருந்தேன்.முதலில் அவர் கொம்புகள் வைப்பது குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்.அதில் எனக்கு உடன்பாடில்லை,ஒரு மனிதனை கண்டவுடன் அவனின் 'அகம்' அடையாளம் காணப்படக்கூடியதாய் இருக்க வேண்டுமென பிடிவாதமாயிருந்தேன்.முடிவில் துளைகள் வைப்பதும்,குணத்திற்குப் பொருந்தா உடலின் பாகத்தினை மறையச் செய்துவிடுவதுமான முடிவிற்கு வந்தோம்.இப்போது இந்த நகரத்தில் வாழும் நூற்று இருபத்தி இரண்டு பேருக்கும் அடையாளம் வந்துவிட்டது.அவை கீழ்கண்டவாறு இருக்கும்

1.கால்கள் தரையில் பரவாது மிதந்து செல்வோர் கவிஞர்கள்,கலைத் தன்மை கொண்டவர்கள்.(இவர்களுக்குத் தேவைப்படாத கால்கள் கடவுளின் மூலமாய் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது).
2.அன்பில்லாத,இரக்கமில்லாத கடுமையான குணம் உடைய, இறுக்கமான நபர்களுக்கு இதயம் இருக்குமிடத்தில் பெரிய துளை இருக்கும்(நாளையடைவில் தன் குணத்தை மாற்றிக்கொண்டால் துளைகள் அடைந்து விடும்)
3.ஆண்மை இல்லாதோருக்கு வயிற்றிக்கு கீழ் பெரிய துளையொன்று இருக்கும்(பெண்கள் ஏமாறுவது தவிர்க்கப்படும் அதன் மூலம் கள்ளக் காதல்,கொலை,துரோகம் போன்ற குற்றங்கள் இல்லாமல் போகலாம்.தினத் தந்தி போன்ற நாளிதழ்கள் உருவாகாமலேயே போகக் கூடும்)
4.காதலித்து கொண்டிருப்போருக்கு உதடுகள் தேவையில்லை என முடிவெடுத்து உதடுகளை திரும்ப பெற்றுக்கொண்டாயிற்று.(காதல் மனம் சம்பந்தப் பட்டதுதானே உதடுகள் எதற்கு?)
5மேலும் ஆண் பெண்களுக்கான குறியமைப்புகளையும் மாற்றியமைத்தாயிற்று.முதல் முறை கலவி கொள்ளும் ஆண்,பெண் இருவரும் கடைசி வரை வேறொருவருடன் கலக்க முடியாத அளவிற்கு குறிகளின் தகவமைப்பு மாறிவிடுவது போன்ற அளவீடுகளை வடிவமைத்தாயிற்று(இந்த வடிவமைப்பிற்காக என் நகரத்தின் கடவுள் பதிமூன்று நாட்கள் இரவு பகலாக உழைத்தார்.ஒன்பதாம் நாள் இரவு இது சாத்தியமில்லை என்றதிற்கு நான் பிடிவாதமாய் நின்றேன்.ஒரு முறை காதலில் தோற்றுப்போனதால் இனி காதல் தோல்வி அல்லது ஏமாறுதல்/ஏமாற்றுதல் என்பதே இருக்ககூடாது என பிடிவாதமாய் நின்றேன்.ஒருவழியாய் பதினான்காம் நாள் பிறக்க பதிமூன்று நொடிகள் மீதமிருக்கும் நொடியில் இதனை வடிவமைத்தார்)

என் நகரத்தின் குடிகள் மகிழ்வாயிருந்தனர்.அவ்வப்போது எழும் பிரச்சினைகளையும் நான் சமயோசிதமாய் தீர்த்து வைத்தேன்.உதாரணத்திற்கு என் நகரத்தில் கவிஞன் என்பது பொதுப்படுத்தப்பட்ட ஒன்று.(கால்களை பிடுங்கி கொண்டோம்)ஆனால் நவீன கவிஞர்கள் ஓர் நாள் திரண்டு பிரமிள்,ஆத்மாநாம்,தேவதேவன் சாயலில் எழுதிக்கொண்டிருக்கும் எங்களுக்கும் வைரமுத்து,வாலியை அடியொற்றும் அவர்களுக்கும் கால்கள் இல்லாதிருப்பதன் மூலம் இரு பிரிவினரும் ஒருவராக கருதப்படும் அபாயம் இருப்பதாகவும் மேலும் அது தங்களுக்கு கவுரவ குறைச்சல் எனவும் குமைந்தனர்.பின்பு நான் நவீன கவிஞர்கள்,சாதா கவிஞர்கள் என இரு பிரிவுகளாகப் பிரித்தேன்.சாதா கவிஞர்களுக்கு ஒரு காலைத் திரும்ப கொடுத்துவிட்டு, நவீன கவிஞர்களை அப்படியே விட்டுவிட்டேன்.நானொரு சனநாயகத்தின் அடியொற்றி என்பதால் என்னால் எல்லோரையும் திருப்தி படுத்த முடிந்தது.மேலும் தெருவிற்கொரு மதுக்கடை திறந்து வைத்திருந்ததால் பெரும்பாலும் எவனும் ஆழமாய் சிந்திப்பதில்லை.பின்நவீன புத்தகங்கள்/பிரதிகள் போன்றவைகளை தடை செய்திருப்பதாலும்,நிர்வாண நடனத்தை தேசியமயமாக்கி இருப்பதாலும் என் குடிமக்கள் மகிழ்வாயிருந்தனர்.

நானொரு அரசியல் உயிரி.எனக்கான அரசியலின் முடிவுகள் பெரும்பான்மை குரலின் வெளிப்பாடாக இருந்தும் எனக்கு சிறுபான்மைகளின் மேல் கவர்ச்சி இருந்தது.சக நகரங்களின் தலைவர்கள்,அவர்களின் நகர அமைப்புகள் இவற்றின் மீது பொறாமை இருந்தது.காப்ரியேல் கார்சியா மார்க்வெஸின் நகரம் எனக்கு அதிக பொறாமையைத் தூண்டியது.அவரின் நகரத்தில் பிணங்கள் நாறுவதில்லை.பூமிக்கடியில் புதைக்கப்பட்ட பிணங்களை எத்தனை ஆண்டுகள் கழித்து தோண்டி எடுத்தாலும் அவை புத்தம் புதிய மனித உடல்களாகவே இருந்தது.போர்ஹே,கால்வினோ,நெருடா நகரங்கள் சிறுபான்மையின் கவர்ச்சிகளோடு என்னை ஈர்த்தது.ரமேஷ் ப்ரேம் மாலதி மைத்ரி சகிதமாய் எனக்கு அருகாமையிலிருந்த நகரம் என்னை பொறாமையின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.அவர்களின் உலகத்தில் பிணங்கள் வேறு வடிவமெடுக்கிறது.ஒரு மனிதன் பல்வேறு பிணங்களக மாறுவதற்கான சாத்தியம் அவர்களின் உலகிற்கு இருந்தது.பிணத்துடன் பேச,உறங்க,வாழ அவர்கள் தலைப்பட்டிருந்தனர்.

என் நகரம் இத்தனை வசீகரம் இல்லையெனினும் அங்கே பிரச்சினைகள் இல்லாதிருந்தது மகிழ்வளித்தது.

நான் அவ்வப்போது கதாபாத்திரங்களின் நகரத்திற்கு சென்று வருவேன்.பால்யத்திலும் பதின்மங்களிலும் எனக்கு பிடித்திருந்த மனிதர்கள் வாழும் நகரத்திற்கு போய் வருவேன்.கடைசியாய் இரண்டு நாட்களுக்கு முன்பு போயிருந்தபோது தெரு வழக்கம்போல் குதூகலமாய் இருந்தது.கபீஷ்,ஜோ,எக்ஸ்ரே கண்,சுப்பாண்டி ஒரு புறமும் மாயாவியும் பிலிப்பும் இன்னொரு புறமுமாய் ஓடிப்பிடித்து விளையாடியதில் எழுந்த தூசிக்கு முகம் பொத்தி யமுனா வீட்டில் நுழைந்தேன்.யமுனாவின் வசீகரம் இன்னும் அதிகமாயிருந்தது.அம்மணி மட்டும் வந்து போகிறாள் என்றும் செண்பகம் எட்டியே பார்ப்பதில்லை என்றுமாய் குறைபட்டுக் கொண்டாள்.
இப்போதெல்லாம் இந்த வீதி மாறிப்போய் விட்டது.இங்கே யார் யாரோ வருகிறார்கள்.இந்த நகரத்தின் வீதிகள் அடர்வுத் தன்மை கொண்டு வருகிறது எவர் பேசுவதும் புரியவில்லை.எல்லாரும் கிறுக்கு பிடித்தவர்களைப்போல பேசிக்கொள்கிறார்கள்
என குறைபட்டுக் கொண்டாள்.நான் மெல்ல சிரித்துக் கொண்டேன்.விடைபெறுவதற்கு முன் யமுனா தி.ஜா வை பற்றிக் கேட்டாள்.
எல்லாருக்கும் சிலை வைக்கும் நகரத்தில் அவரின் சிலை இருக்கிறதா?
என்றதற்கு நான் இல்லையென்றேன்.மேலும் பூநூல் போட்டவர்களுக்கு சிலை வைப்பதில்லை என்றேன்.
நிறைய பேர் இருந்தார்களே ஒருத்தருக்கு கூடவா இல்லை?
என்றதற்கு நினைவு வந்தது போல் நகுலனுக்கு மட்டுமிருப்பதாய் சொன்னேன்.
நகுலனா!அந்த ஆள் ஒரு பைத்தியம்! நேத்து வந்து இங்க உட்கார்ந்திருந்தது ரொம்ப நேரம்..
என்றாள் நான் சத்தமாய் சிரித்தபடி பூநூல் போட்டும் பைத்தியமானவர்களுக்கு மட்டுமே சிலை வைக்கப்படும் எனச் சொல்லிவிட்டு வந்தேன்.

Saturday, October 20, 2007

ராமின் பிரபாகரும் நாஞ்சில் நாடனின் பூலிங்கமும்

நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக
அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக
.........
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே



சிவாஜிக்கு அடுத்தபடியாய் கற்றது தமிழுக்குதான் அதிக பதிவுகள் வந்திருக்கின்றன.வலையில் படத்தை விலாவரியாய் அலசி பிழிந்து காயப்போட்டாயிற்று.குசும்பன், தருமி, ஆடுமாடு, கொங்குராசா,உண்மைத் தமிழன் என கலந்து கட்டி விமர்சித்திருந்தது படம் ஏதோ ஒரு விதத்தில் எல்லாரையும் பாதித்திருப்பதையே தெளிவுபடுத்தியிருந்தது.படத்தில் ஏகப்பட்ட நெருடல்கள் இருந்தாலும் பிரபாகரையும் ஆனந்தியையும் அத்தனை எளிதில் கடந்துபோய்விட முடியவில்லை.தருமி ஐயா சொல்லியிருந்தது போல ஏதோ ஒரு சங்கடம் படம் பார்த்து முடித்தபின்னும் இருந்துகொண்டேயிருந்தது. இரவு பத்து மணி காட்சிக்கு கலேரியாவில் என்னோடு சேர்த்து பதினோரு பேர் மட்டுமே திரையரங்கில் அமர்ந்திருந்தோம்.ஓய்வான மனநிலையில் கூட்டமே இல்லாத நல்ல திரையரங்கில் இரவு காட்சிக்கு உகந்ததாய் இருந்தது கற்றது தமிழ்.

ஜீவா வின் நடிப்பில் நல்ல மெருகு டிஷ்யூம் படத்திலும் இவரின் இயல்பான நடிப்பு மிகவும் பிடித்திருந்தது.பிரபாகர் கதாபாத்திரம் சில குறைகளோடு நன்றாகவே இருந்தது.மண்டைக்குள் மணியொலிக்க தனியறையில் தவிக்கும் காட்சி சிறப்பாய் வந்திருந்தது.அம்பாசமுத்திரம்,அச்சன் கோவில்,பாளையங்கோட்டை,திருவண்ணாமலை,மகாராஷ்டிரா,சென்னை என திரைப்படத்தோடு நாமும் அலைந்து விட்டு வந்த உணர்வை ஒளிப்பதிவு ஏற்படுத்தியிருந்தது.குறிப்பாய் திருவண்ணாமலை வீட்டில் எடுக்கப்பட்டிருந்த சில காட்சிகள்,மலை சுற்றும் வழியில் பதிவித்திருந்த கொஞ்ச நேரமே வந்து போகும் காட்சிகள்,அந்த வடநாட்டு மலைக்கிராம வெட்ட வெளி,ஆரம்பத்திலும் முடிவிலும் வந்து போகும் ரயில் குகை யென சிறப்பான இடத் தேர்வுகள்.கதை சொல்லும் பாணியில் எடுக்கப்பட்ட படங்கள் தமிழில் மிக குறைவு (இதற்கு முன் விருமாண்டி) இதில் வசனங்களும் மிக இயல்பாய் கவித்துவமாய் வந்திருந்தது. “பத்து வார்தைக்கு ஒருமுற நெசமாத்தான் சொல்றியான்னு எந்த பொண்ணாவது கேட்டா அவதான் ஆனந்தி” “கடிதம் எழுத தேவப்படுறதெல்லாம் ஒரு பெயர் மட்டும்தான் மத்தபடி அத அவங்க படிக்கிறாங்களா அவங்களுக்கு போய் சேருதாங்கிறதெல்லாம் முக்கியமில்லை. ””சாவுதான் என்னோட விசிட்டிங்க் கார்டு”.எல்லாவற்றையும் விட இறுதிக் காட்சி ஒரு மேஜிக்கல் ரியலிச கவிதை..

கொஞ்சம் யூமாவாசுகியின் கதாபாத்திரம்போல ஆரம்பித்த பிரபாகரை அப்படியே விட்டிருக்கலாம்.எதை எதை யோ திணித்து பிரபாகர் முழுமையடையாது போனது வருத்தமே.


திரைப்படம் போவதற்கு முன்பு நாஞ்சில் நாடனின் எட்டுத் திக்கும் மத யானை நாவலை படித்து முடித்திருந்தேன்.பி.காம் கடைசி வருடம் படிக்கும் பூலிங்கம் தன் வகுப்பில் படிக்கும் பெண்ணிடம் வெகு சாதாரணமாய் பேசிய காரணத்திற்காக தவறாய் புரிந்து கொள்ளப்பட்டு அபபெண்ணின்(செண்பகம்)தகப்பனாரால் அவமானப்படுத்தப் படுகிறான்(டீகடையில் நையப்புடைக்கிறார்கள்).வன்மம் கொண்ட பூலிங்கம் அவரின் வைக்கோல் போருக்கு தீவைக்கிறான் உயிருக்கு பயந்து ஊரை விட்டு ஓடுகிறான்.ஆந்திரா,கர்நாடகா,கோவா என அலைந்து திரிகிறான்.பெரும்பாலும் ரயில் நிலையங்கள்,ப்ளாட்பாரங்கள் என நாட்கள் போகிறது.ரயிலில் ஐஸ்கிரீம் விற்பது,கோவாவிலிருந்து மது புட்டிகள் கடத்துவது.போதை மருந்து கடத்தல், லாரியில் ஓடுவது என வாழ்வு மாறிக்கொண்டே இருக்கிறது.எங்காவது யாராவது எதிரியாக முளைத்து விடுத்துவிடுகிறார்கள்(பல சமயங்களில் இவனே இவனுக்கு).
ஒருவழியாய் பாம்பாயில் ஒரு பெரிய சாராய வியாபாரியிடம்(அண்ணாச்சி) தஞ்சமடைகிறன்.மிகுந்த பாதுகாப்புகளோடு சாராயம் கடத்துகிறான்.நண்பர்கள் வட்டம்,புதிதாய் தொழில் ஆரம்பித்தல் (வேன் வாங்கி ஆள் போட்டு ஓட்டுகிறான்) என நிலைபெறுகிறது.இவனின் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணமான செண்பகம் பம்பாய்கு திருமணமாகி வருகிறாள்.அவளின் கணவரிடம் அல்லல்படுகிறாள்.பூலிங்கம் அவளை அவனிடமிருந்து மீட்டு புதிதாய் வாழ்வை தொடங்குகிறான்.

ஒரு தேர்ந்த திரைக்கதை போன்ற எழுத்து நாஞ்சில் நாடனுடையது.மனக்கண் முன் காட்சிகளாக விரியும் வார்த்தையாடல்கள்.மிகத் தெளிவான,ஆர்வமான எழுத்து என வாசிப்பின்பத்திற்கு நாஞ்சில் நாடன் முழு உத்திரவாதம்.இவரின் மற்றொரு நாவலான சதுரங்க குதிரைகள் பற்றிய கதிரின் குறிப்புகள் இங்கே.இவரின் தலைகீழ் விகிதங்கள் நாவலை தங்கர் சொல்ல மறந்த கதை என படமாக்கி இருந்தார்.நாவல்களை திரைப்படமாக்குவதின் சிக்கல்கள்,தமிழில் ஏன் சிறந்த நாவல்கள் திரைப்படமாவதில்லை என்பது குறித்து பிறிதொரு முறை பேசலாம்.

Featured Post

test

 test