Wednesday, April 12, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் பத்து


சாமி தெறித்து ஓடின வாத்தியை நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டிருந்தார். வாயில் மென்றுகொண்டிருந்த சோற்றுப் பருக்கைகள் துர்க்கா மீது தெறித்தது.


“ஏ சோத்த வாயில வச்சிகினு என்னா சிரிப்பு” துர்க்கா நொடித்தாள்.


“பாருடி அந்த பைத்தியக்காரன உன்ன நெலா வெளிச்சத்துல பாத்து மிரண்டு ஓடுறான்”


“ஐயே நீ வேற.. ஏதோ போத.. ஓடுது.. லூசு..யார் பையன்?”
“உனக்கு தெரியல? “


“தெர்லயே”


உனக்கு எங்க ஒலகம் தெரியுது.. ராம்சாமி வாத்தியார் மொவன்”


“அட அவரு செத்துட்டாரு இல்ல?!”


“ஆமா..பையனுக்கு ஏதோ கிறுக்கு. பொம்பள கிறுக்கு. ஒரு வாட்டி கூட்டி போய் மந்திரிச்சி வுடுறியா?”


“அட நீ வேற ரொம்ப சின்ன புள்ளையாட்டம் இருக்கு”


“நாளைக்கு வந்து உன்ன சாமி ம்பான்”


“சர்தான…”


“என்ன சர்தான்?”


“எல்லா பொம்பளயும் சாமிதான”


சாமி ஒரு கணம் தடுமாறினார்.


சரி நேரமாச்சு நீ கெளம்பு என்றார்.  எதுவும் பேசாமல் எழுந்து கொண்டாள். சிறுமி எல்லா பாத்திரங்களையும் ஏற்கனவே கூடைக்குள் வைத்திருந்தாள். இருவரும் சாமிக்கு முதுகு காட்டி ரவி ஓடிய திசைக்காய் நடக்க ஆரம்பித்தார்கள்.

சாமி நாதன் துண்டை உதறி தலைக்கு வைத்துக் கொண்டு படுத்துவிட்டார். நிலவொளி இன்னும் பிரகாசமாக அந்த மைதானத்தை நிறைத்தது. சாமி படுத்த வாக்கிலேயே ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டார். தூக்கம் வரவில்லை. வயிறு நிறைந்திருந்தாலும் போதை இல்லாததால் மூளை விழிப்பாக இருந்தது. சாமி, தன் முதல் கலவியை நினைத்துக் கொண்டார்.

0

சாமி என்கிற சாமிநாதனின் பூர்வீகம் தேனிமலை. சரியாய் பள்ளிக்கூடத் தெரு. பிரசவத்திலேயே அம்மா இறந்து போக, ஆயா வீட்டில் தான் வளர்ந்தான். மனைவி செத்துப் போன துக்கத்தில் தூரதேசம் போன அப்பா திரும்பி வரவில்லை. ஆயா அவனைப் பத்து வயது வரை வளர்த்தது. அதற்கு மேல் அதனாலும் முடியவில்லை. யாரிடமாவது வேலைக்கு சேர்த்துவிடச் சொல்லி அக்கம் பக்கம் சொல்லிக் கொண்டிருந்தது. ஜவுளி வியாபாரத்திற்காக மூங்கில் துறைப்பட்டு அடிக்கடி செல்லும் கோவிந்தன் அங்குப் பிரசித்தமாக இருந்த ஒரு ஜோசியரிடம் இவனைச் சேர்த்துவிட்டார். சாமிநாதனுக்கு படிப்பு ஏறவில்லை. பள்ளிக்கூடம் போவதைத் தவிர வேறு எதையும் செய்யத் தயாராக இருந்தான். மூங்கில் துறைப் பட்டு ஜோசியர் அவனைத் தன்னோடு வைத்துக் கொண்டார்.

ஜோசியர் தனி ஆள். சாமிநாதன் அவரோடு இருந்த பதினைந்து வருடத்தில் ஒருவர் கூட உறவு எனச் சொல்லிக் கொண்டு அவரைப் பார்க்க வந்ததில்லை. கரும்புத் தோட்டங்கள் தாண்டி மரங்களடர்ந்த ஏரிக்கு சமீபமாய் ஒரு குடிசையில்தான் அவருடைய ஜாகை. அது யாருடைய நிலம் என்பது கூட சாமிநாதனுக்குத் தெரியாது. ஜோசியர் அபூர்வமாகத்தான் பேசுவார். காலை எழுந்தது முதல் இரவு படுக்கப் போகும் வரை அவனுக்கு வேலைகள் இருந்து கொண்டிருக்கும். குடிசைக்குப் பின்னால் சிறிய தோட்டம் ஒன்றிருந்தது. கீரைச் செடிகள், மிளகாய், தக்காளி, வெண்டைக்காய் போன்றவற்றை பராமரிக்க வேண்டியதும் இவன் வேலைதாம்.

சாமி அதிகாலையில் ஜோசியரோடே எழுந்து கொள்வான். மணியக்காரர் நிலத்தில் பம்பு செட்டு அதிகாலை நான்கே முக்காலுக்கு இறைக்க ஆரம்பித்துவிடும். காலைக் கரண்ட் ஆறு மணி வரைதாம். ஐந்து மணிக்கு ஜோசியரோடு குளித்து விட்டு வருபவன், ஆட்கள் அமர்வதற்காக போடப்பட்டிருக்கும் பெஞ்சுகளைத் துடைத்து, முற்றத்தைக் கூட்டி, தோட்டத்தை ஒழுங்கு செய்து நிமிர்கையில் ஆறு மணி ஆகிவிட்டிருக்கும். சூரியன் மேலெழ ஆரம்பிக்கும்போது ஆட்கள் வர ஆரம்பிப்பார்கள். பெரும்பாலும் ஜாதகப் பொருத்தம், வரன் அமையுமா எனக் கேட்பது, வீடு நிலம் குறித்தான சந்தேகங்கள், வீட்டில் சுப துக்க காரியங்களுக்கான ஆலோசனைகள் இவைதாம். எட்டு அல்லது அதிகபட்சம் ஒன்பது மணிக்கெல்லாம் கூட்டம் கலைந்துவிடும்.

அதற்குப் பின்பு ஜோசியரும் இவனுமாய் பழைய சாதத்தில் மோர் ஊற்றி, தோட்டத்துச் செடியில் தொங்கிக் கொண்டிருக்கும் பச்சை மிளகாயை பறித்து வந்துக் கடித்துக் கொண்டு சாப்பிடுவார்கள். ஒரு கடி மிளகாய்க்கு இரண்டு உருண்டை சோறு இறங்கும். சாப்பிட்டதும் ஜோசியர் குடிசைக்கு எதிரில் புங்கை மரத்தடியில் கிடக்கும் கட்டிலில் போய் படுத்துக் கொள்வார். சாமிக்கு தூக்கம் கண்ணைச் சுழற்றினாலும் அடுத்தடுத்த வேலைகள் அவனுக்காக காத்துக் கொண்டிருக்கும். மாலை அடுப்பெரிக்கத் தேவையான சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டுவருவதும், மாட்டுச் சாணம் எடுத்து வந்து பிசைந்து எருமட்டை தயாரிப்பதும் அவனுடைய முற்பகல் வேலைகள்.

ஊரிலிருக்கும் அத்தனைக் கால்நடைகளும் ஏரிக்கரைக்குதான் மேய வரும். காலை ஒன்பது மணி வாக்கில் மாடுகளை மந்தையாக ஓட்டிக் கொண்டு அவன் வயதையொத்த சிறுவர்களும் சிறுமிகளும் மாட்டின் பின்னால் வருவார்கள். சாணியள்ளப் போகும் சாக்கில் அவர்களோடு விளையாடிவிட்டு வருவான். ஏராளமான விளையாட்டுக்களை விளையாடுவார்கள். சீசனுக்குத் தகுந்தார் போல விளையாட்டுகள். இந்த சீசன் என்பது என்ன, எப்படி துவங்கும் என்பதெல்லாம் யாருக்குமே தெரியாது. கோட்டி புல்லை ஒரு கும்பல் அடித்துக் கொண்டிருக்கும்போது யாராவது ஒரு பயல் கோலி குண்டை விளையாடினால் அன்றிலிருந்து வேறு சீசன் துவங்கிவிடும். செதுக்குவது என்கிற விளையாட்டுதான் சீசனில் அடிக்கடி வரும். சிகெரெட் அட்டையில் செய்த சதுரமான அட்டையை மண்ணிற்குள் புதைத்து வைத்து, அதைச் சுற்றி வட்டமாய் பெரிய கோட்டைப் போட்டு விட வேண்டும். பின்பு அம்மண் குவியலில் புதைந்துள்ள பண மதிப்பு கொண்ட சிகரெட் அட்டைகளை ஒரு சதுர அல்லது முக்கோணக் கல்லால் செதுக்கி வட்டத்தை தாண்டி வெளியே வரவழைக்க வேண்டும். சிகரெட் அட்டைக்கேற்ப பண மதிப்பு. எளிதில் கிடைக்கும் சிசர்ஸ் அல்லது சார்மினார் அட்டைகளுக்கு மதிப்பு பத்து, சாதா கோல்ட் ப்ளேக் சிகரெட் மதிப்பு ஐம்பது. கிங்க்ஸ் சிகரெட் அட்டை மதிப்பு நூறு. யாரிடம் அதிக பணம் இருக்கிறதோ அவனே வென்றவன். சாமி ஜெயித்த சிகரெட் அட்டைகளை ஜோசியருக்கு தெரியாமல் குடிசையின் பின்புறத்தில் உள்ள எரவாணத்தில் சொருகி வைத்திருப்பான்.

எவ்வளவு சுவாரசியமான ஆட்டமாக இருந்தாலும் பனிரெண்டு மணி அவனுக்குத் தெரிந்துவிடும். சூரியன் தலைக்கு நேராய் வந்துவிட்டிருக்கும் அல்லது மண்ணில் எச்சிலைத் துப்பிப் பார்ப்பான். எச்சிலை மண் வேகமாக இழுத்துக் கொண்டால் பனிரெண்டு மணி என அர்த்தம். வேகவேகமாக கொண்டு வந்திருக்கும் புட்டுக் கூடையில் சாணிக் குவியலை அள்ளிப் போட்டுக் கொண்டு குடிசைக்குத் திரும்புவான். அப்போது ஜோசியர் எழுந்து பூஜையில் ஆழ்ந்திருப்பார். வீட்டிலேயே வைத்திருக்கும் சாமி படங்களுக்கு நண்பகல் பூஜை. சரியாய் பணிரெண்டு மணிக்கு மந்திர உச்சாடனங்களை சொல்லி காளியையும் மாரியம்மனையும் வழிபடுவார். அந்நேரத்தில் சாமிநாதன், கொண்டு வந்த சாணியை உருட்டி அதற்காகவே போடப்பட்டிருக்கும் கருங்கற்களில் வட்டமாகத் தட்டிக் கொண்டிருப்பான். மனம் முழுக்க விளையாட்டில் குவிந்திருக்கும்.

உச்சிக்கு சமையல் கிடையாது. துணிகளை துவைப்பது, பாத்திரம் கழுவுவது, சாயந்திர சமையலுக்கு காய்கறிகளை நறுக்குவது போன்றவை இவன் வேலைகள். ஜோசியர் பூஜை முடித்து பஞ்சாங்கத்தை எடுத்துக் கொண்டு அமர்ந்துவிடுவார். நோட்டில் ஏதேதோ கணக்குகளைப் போட்டுப் பார்ப்பார். அங்கும் இங்குமாய் நடந்து வேலைகளைப் பார்க்கும் சாமிநாதனுக்கு எதையும் அவர் சொல்லிக் கொடுக்கவில்லை. அவனும் எதையும் கேட்டுக் கொள்வதுமில்லை.

மாலை நான்கு மணிக்கு மேல் விளையாட்டு இன்னும் சூடு பிடிக்கும். பள்ளிக்கூடம் போன பிள்ளைகள் கைவசம் இருக்கும் விளையாட்டு சாமான்களோடு நேராய் ஏரிக்குத்தான் வருவார்கள். ஒரே கூச்சலும் சப்தமுமாய் இருக்கும். சாமி எப்படியாவது அந்த சமயத்தில்  நழுவி விடுவான். இரண்டு குழுவாகப் பிரிந்து கொண்டு  கோட்டி புல் அடிப்பது, தோற்றுப் போன அணியை கஞ்சி வாங்குவது என ஒரே ஆர்ப்பாட்டமாக இருக்கும். பேந்தா கோலி விளையாட்டு கோட்டி புல் விளையாட்டைப் போல சப்தமானது அல்லதான் என்றாலும் நுணுக்கமானது. இந்த இரண்டு விளையாட்டுக்களையும் தாண்டி செதுக்குவது மிகுந்த உற்சாக சப்தத்தை வரவழைக்கும்.

இப்படியாய் இருள் கவியும் வரை விளையாடிக் கழிப்பான். ஒப்புக்காக மாலை நேரத்திலும் கூடை வழிய வழிய சுடச்சுட மாட்டுச் சாணத்தை சேகரித்துக் கொண்டு வருவான். ஜோசியர் ஏதாவது சொல்லிவிடுவாரோ என்கிற பயம் அவனுக்கு இருந்தது. ஆனால் ஜோசியர் எதையும் சொல்வதில்லை. அங்கிருந்த பதினைந்து வருடங்களில் அவனைக் கடிந்தோ அறிவுறுத்தியோ அவர் ஒருவார்த்தை கூடச் சொன்னதில்லை. சாமிநாதனும் அப்படி நடந்து கொண்டான்.

மாலையில் வரும் ஓரிருவருக்கும் ஜாதகம் பார்த்துவிட்டு ஜோசியர் சமைக்க ஆரம்பிப்பார். பெரும்பாலும் கீரைக் குழம்பு, சோறு, ஒரு பொரியல் இருக்கும். அவையும் தோட்டத்தில் கிடைத்தவையாக இருக்கும். ஆனாலும் அவ்வளவு ருசியாகச் சமைப்பார். சாப்பிட்டுவிட்டு எட்டு மணிக்கெல்லாம் மரத்தடியில் கிடக்கும் கட்டிலைத் தூக்கி வந்து குடிசை முற்றத்தில் போட்டு ஜோசியர் படுத்துவிடுவார். சாமிநாதன் குடிசைக்குள் பாயை விரித்துப் படுத்துக் கொள்வான். பதினைந்து வயதுவரை அவனது நாட்கள் இதே வரிசையில் இதே ஒழுங்கில்தான் கழிந்தது. கோவில் திருவிழா, தீபாவளி பொங்கலுக்கு புதுத் துணி, அபூர்வமாய் சினிமா இதைத்தாண்டி வேறெதுவும் நடந்துவிடவில்லை.

பதினைந்தாவது வயதில் ஆயா செத்துப் போனதாய் தகவல் வந்தது. போய் வெறுமனே பிணத்தின் முன்னால் நின்றுவிட்டு வந்துவிட்டான். அவன் உறவினர்கள் குறித்தோ சொத்து குறித்தோ எதுவும் தெரியவில்லை. எவரும் அவனைக் கண்டுகொள்ளவும் இல்லை.
இருந்த ஒரே சொந்தமும் போனது என்கிற வருத்தம் உள்ளூர இருந்தது. தான் இனியொரு முழு அநாதை என்கிற எண்ணமும் வந்து போனது.
பெரும்பாலும் இரவில் இந்த எண்ணம் மேலெழுந்து வரும். சன்னமாய் அழவும் செய்வான். என்னவோ ஆயா சாவிற்குப் போய்விட்டு வந்த பின்பு அவன் தன்னை பெரிய ஆளாகி விட்டதாய் நினைத்துக் கொண்டான். அன்றிலிருந்து விளையாடப் போவதை நிறுத்தி விட்டான். ஜோசியர் வருபவர்களுக்கு ஜோசியம் சொல்வதை உற்றுக் கேட்க ஆரம்பித்தான். குடிசைக்குள் ஒரு பழைய பெட்டியில் பழைய பஞ்சாங்கங்கள், ஜாதகப் பலன் தொடர்பான புத்தகங்களை எடுத்து, எழுத்துக் கூட்டி படிக்க ஆரம்பித்தான். பல விஷயங்கள் அவனுக்குப் புரியவில்லை. இது என்ன எப்படி என ஜோசியரிடம் கேட்கவும் தயங்கினான். அப்படி ஒரு பேச்சோ உரையாடலோ அவர்களிடம் இருந்ததே இல்லை. எல்லாம் குழப்பமாய் தோன்றும்போது சாமிக்கு ஜோசியர் மீது ஆத்திரமும் கோபமும் வந்தது. தன் வாழ்வையே அவர் சீரழித்து விட்டதாய் எண்ணினான். ஆனால் அந்தக் கோபத்தை அவர் மீது காண்பிக்கவோ, அங்கிருந்தோ கிளம்பவோ அவனுக்குத் துணிச்சல் வரவில்லை. ஒரே மாதிரி நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

ஒரு நண்பகலில் மணியக்காரர் நிலத்து கிணற்றடிக்காய் நடந்து போய்கொண்டிருந்தான். கிணத்திற்குள் மார்பு வரை ஏற்றிக் கட்டிய பாவாடையோடு லட்சுமி நீச்சல் அடித்து குளித்துக் கொண்டிருந்தாள். லட்சுமிக்கும் அவன் வயதிருக்கும் பல வருடங்களாய் பார்த்த பெண் தான் என்றாலும் அவளை இப்படி இதற்கு முன்பு பார்த்ததில்லை. சாமிக்கு முதன் முறையாய் காதலுணர்வும் காம உணர்வும் ஒரே சமயத்தில் மேலெழுந்தது. அதுவரை அவன் கனவில் கூட பெண்ணைப் பற்றி யோசித்ததில்லை. ஏற்கனவே தெரிந்த பெண் என்பதால் என்ன லட்சுமி குளிக்கிறியா எனக் கேட்டபடியே கிணறில் இறங்கினான். லட்சுமியும் நீயும் குளிக்க வரியா என சாதாரணமாக கேட்டாள். சாமிக்கு உடல் புல்லரித்தது. நீருக்கு சமீபமான திட்டில் அமர்ந்து கொண்டு அவளைப் பார்த்தான். குறு முலைகள் நீரில் நனைந்து சன்னமான நீலப் பாவாடையோடு ஒட்டிக் கொண்டிருந்தன மொட்டுப் போன்ற காம்புகள் துலக்கமாய் தெரிந்தன. சாமியின் உடலில் என்னவோ ஆனது. ஒரு புது உலகம் அவனுக்காய் திறந்து கொண்டது. அந்த நிமிடத்திலிருந்து அவன் லட்சுமியைக் காதலிக்க ஆரம்பித்தான்.

மேலும்



Sunday, April 9, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் ஒன்பது


அகத்திய மாமுனியின் காதுகளில் வாத்தி என்றழைக்கப்பட்டவரின் வார்த்தைகள் கேட்டுக் கொண்டே இருந்தன. எவ்வளவு எளிமையாய் சொல்லிவிட்டார். தானென்ற அகம்பாவம் அத்தனையும் நொடிப்பொழுதில் பொடிப்பொடியாய் நொறுங்குவதைப் பார்த்தபடி அவரால் சமுத்திர ஏரிக்கரையில் அதிக நேரம் நிற்க முடியவில்லை. நர உடல் என்பதால் ஏராளமான அமிலங்கள் உடலில் சுரக்க ஆரம்பித்திருந்தன. எப்போதுமில்லாதபடி புதுப்புது உணர்வுகள் மேலெழுவதையும் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.  சாமியும் வாத்தியும் நுணா மரத்தடிக்காய் போன பின்பு, மாமுனி எதிரில் நின்றிருக்கும் பிரம்மாண்ட அண்ணாமலையைப் பார்த்தார். பிறகு மலையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அடிவாரம் வந்ததும் மலையேறும் பாதை அவர் கண்ணிற்குப் புலப்படவில்லை. ஆனாலும் மலையுச்சியைத் தொடும் ஆவல் அவர் மனதில் சுரந்தது. காரைச் செடிகளும் கோரைப் புற்களும் பாறை இடுக்குகளில் மண்டிக் கிடந்தன. வழியில்லா வழியில் அவர் சிறு சிறு பாறைக் கற்களின் மீதேறி உச்சியை அடைய விரைந்து கொண்டிருந்தார். உடலும் மனமும் தகித்துக் கொண்டிருந்தது.


வாத்தி என அழைக்கப்பட்ட  நபர் போகர்தான் என்பதை ஆழமாக   நம்பினார். அவரால் மட்டுமே இப்படி பட்டுத் தெறிக்கும்படியான   அறிதலை தந்துவிட முடியும். இத்தனை வருட அலைவிற்குப் பிறகு  நிகழ்ந்த திறப்பிது. அடேயப்பா! அகத்திய மாமுனி அந்தத் திறப்பு   நிகழந்த நொடியை நினைத்து  நினைத்து மருகினார். ”ஓரிதழ்ப்பூ ஒரிதழ்ப்பூ” என அவர் உதடுகள் முணுமுணுத்தபடி இருந்தன. அந்தச் சொல் உதட்டில் இருந்து வெளிப்படும்போது நடையின் வேகம் கூடியது. காரைச் செடிகள் அவர் பாதத்தையும் கால்களையும் பதம் பார்த்தன. ஒரு பாறையிலிருந்து இன்னொரு பாறைக்குத் தாவும்போது அவர் கணுக்கால் சிக்கி உயிரைப் பிழியும் வலி ஏற்பட்டது. மாமுனி அவரின் ஆயிரம் வருடத்திற்கு மேற்பட்ட வாழ்வில் முதன்முறையாய் ”அம்மா” என முனகினார்.

மாமுனியின் வேதனையும் ஆற்றாமையும் தன் ஸ்கந்தாசிரமக் குளிர் கல் வீட்டில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாய் உறங்கிக் கொண்டிருந்த ரமணரை எழுப்பியது. தன் நெடியத் தூக்கத்தை ஒரு சிறு கொட்டாவியால் உணர்த்தியபடி, அவர் நெடுந்துயில் கொண்டிருந்த அறையின் மிகச் சிறு நுழைவாயிலில், தன் உருவத்தை இரண்டாய் மடித்து வெளியே வந்தார். கமண்டலத்தையும் கைத்தடியையும் எடுக்க மறந்ததை உணர்ந்து திரும்பி நின்று வாயிலைப் பார்த்தார்.  நூற்றைம்பது வயதான அவரின் வளர்ப்புக் காகம் சற்றுத் தளர்வாய் இரண்டையும் அலகினால் கவ்விக் கொண்டு வந்து தந்தது. கைத்தடியை ஊன்றி மலைப்பாதையில் நடக்க ஆரம்பித்தார். பத்தடி நடந்து சென்று அங்கிருந்த பெரிய பாறை ஒன்றின் மீது ஏறி நின்றார். வெயிலை உள்ளங்கையால் விலக்கி, அகத்தியரை இடுக்குகளில் தேடினார்.  

தென்படாது போகவே அகத்தியா எனப் பெருங்குரலெடுத்து கத்த முயன்றார். தொண்டையிலிருந்து காற்றுக் கூட வரவில்லை. மீண்டும் காகத்தை திரும்பிப் பார்த்தார். அது பறக்க ஆரம்பித்தது. மலைச்சரிவில் கிடந்த பாறை இடுக்கில் மாமுனி சிக்கிக் கொண்டிருந்தார். அவரால் எழ முடியவில்லை. காகம் அவர் அருகில் சென்று "காக்" என்றது. முன்பொரு காலத்தில்  கமண்டலத்தில் அடக்கி வைத்திருந்த நதியைத் தட்டி விட்ட அதே காகமாக இருக்குமோ? என்கிற சந்தேகத்தோடும் எரிச்சலோடுமாய் 

”என்ன?” என்றார். 

இரமணர் நின்றிருந்த பாறைக்காய் தலையை உயர்த்திக் காட்டி 

”அங்கே பார்” என்றது. 

மாமுனியால் நம்ப முடியவில்லை. அன்று வரை இரமணரை ஒரு சாமியார் என்ற அளவில் மட்டுமே பார்த்து வந்திருந்தார். அவரும் தம்மைப் போல காலங்கள் கடந்து வாழும் சித்தர் என்பதை அறிந்ததும் அவர் உள்ளம் உவகை கொண்டது. ஆ! ரமணா என்னை இரட்சித்தாயா? என்றபடியே  எழுந்து அவரை நோக்கி ஓட ஆரம்பித்தார்.

மாமுனியை ஆரத்தழுவிக்கொண்ட ரமணர், தன் வீட்டிற்கு அழைத்துப் போனார்.  போனதுமே ஒரு வார்த்தை கூட பேசாமல் ஒருவர் மட்டுமே அமர  இயலும்  அந்தக் குறுகிய பொந்தில்  மாமுனி உடல் நீட்டிப் படுத்து விட்டார். அடுத்த நொடியே ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தார். ரமணர் செய்வதறியாது வீட்டை ஒட்டி இருக்கும் அருவியைப் பார்த்து வரச் சென்றார். அங்கே மிகப் பிரம்மாண்டமாய் பாறை மட்டும் நின்று கொண்டிருந்தது. முன்பொரு  காலத்தில்  அங்கே  ஓர் வற்றாத அருவி இருந்தது என்பதற்கான  தடயம்  கூட அப்பாறையில்  இல்லாததுகண்டு சிறிது நேரம்  மனம் வெதும்பி நின்றார்.  

அந்தப் பக்கமாய் போன ஓர் ஆன்மீக பக்தர். 

“பெரிஸு தள்ளி நில்லு, வூந்திர கீந்திரப் போற” என தன் அன்பைச் சொல்லிச்  சென்றார். 

அநிச்சையாய் ரமணரின் பாதங்கள் இரண்டடிப் பின்னால் நகர்ந்தன.

திரும்பி வந்தபோது, மாமுனி எழுந்து அமர்ந்து காகத்துடன் பேசிக் கொண்டிருந்தார். 

”என் கமண்டலத்தைத் தட்டி விட்ட காகம் உனக்கு என்ன முறை வேணும்?” 

எனத் திரும்பத் திரும்ப அவ்வயோதிக காகத்திடம் கேட்டுக் கொண்டிருந்தார். அருகில் வந்த இரமணர் தொண்டையை கனைத்துக் கொண்டு, 

“இந்தப் பயல் அந்தப் படத்தைப் பார்க்காததால் விவரங்கள் தெரியல” 

என மெல்லமாய் சொன்னார்.

சமாதானமான மாமுனி, பரிதாபமாய் முகத்தை வைத்துக் கொண்டு  

”பசிக்குது சாமி” என்றார்.

ரமணர், காகத்தை அதே மாதிரிப் பார்க்க, சலிப்பை வெளிக்காட்டிக்கொல்லாமல் அது பறந்தது. ஐந்து நிமிடம் கழிந்து இவ்வளவுதான் கிடைத்தது என்பது போல் இரண்டு மாம்பழங்களை மாமுனியின் முன்னால் கொண்டு வந்தது போட்டது.

மாமுனி பாய்ந்து எடுத்து வாயில் போட்டுக்கொண்டதை ரமணர் சலனமில்லாமல் பார்த்தார். 

சரி எனச் சொல்லி மெல்ல எழுந்து சென்று அவர் வீட்டிற்குள் ஒடுங்கிக் கொண்டார்.

உச்சி வெயில் தகிக்க ஆரம்பித்தது. பாறைகள் வெயிலை வாங்கி, இருமடங்காய் திரும்பத் தந்து கொண்டிருந்தன. மாமுனி அருவிப் பாறைக்காய் நடந்து போனார். மஞ்சப் புற்கள் மண்டியிருந்த புதர் ஒன்று பாறைக்கடியில் நிழலாய் இருந்தது. அங்கு போய் ஒடுங்கிக் கொண்டார். மீண்டும் நித்திரையில் ஆழ்ந்து போனார்.

அகத்திய மாமுனி மீண்டும் கண் விழித்தபோது இரவாகியிருந்தது. பசியும் சோர்வும் அவருடலை வதைத்தன. எழுந்து நின்றார். கணுக்கால் விண்ணென வலித்தது. கமண்டலம் காலுக்கடியில் கிடந்தது. காகத்தின் கருணையாக இருக்கும். தன் சக்திகளை மீட்டுக் கொண்டு மீண்டும் பொதிகைமலைச் சாரலுக்கு போய் விடலாமா என யோசித்தார். பின்பு ’ஓரிதழ்ப்பூ’ என்கிற சொல் அடிமனதிலிருந்து மேலெழுந்து வந்தது. வேண்டாம் என்பது போல் தலையை அசைத்து மறுத்தவராய் மெல்லப் புதரிலிருந்து வெளியே வந்தார். மலைச்சரிவிலிருந்து பார்க்கையில் கீழே திருவண்ணாமலை கோவில் கோபுரங்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அதை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.  மேகங்களற்ற வானில் நிலா பெரும் வெளிச்சத்தை அம்மலைச்சரிவிற்குத் தந்துகொண்டிருந்தது. முழு நிலவிற்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இருக்கும் போல. கோடை கால நிலவின் குளுமை அந்தத் தகித்த பகலுக்குச் சற்று ஆசுவாசம் தந்தது.

சிறிது தூரம் நடந்ததும் கையில் வைத்துக் கொண்டிருந்த கமண்டலத்தைப் பார்த்தார். இதை ஏன் சுமந்து கொண்டிருக்கிறோம், என்கிற எண்ணம் அவருக்குத் தோன்றியது. வெறுமனே வீசாமல் தன்னுடைய அத்தனை அறிதலையும் சக்திகளையும் ஞானத்தையும் கையிலிருந்த சிறு  கமண்டலத்தில் அடைத்து எறிந்துவிட முடிவு செய்தார்.  அங்கனமே அகத்திய மாமுனியின் சர்வமும்   கமண்டலத்திற்குள் போனது.  அருகிலிருந்த பாறை     உச்சிக்குப் போய் கமண்டலத்தைக் கீழே எறிந்ததும் பசியால்  துவண்டார். அவரது ஒடிசல் உடம்பில் சோர்வு அடையென மண்டியது. தளர்ந்து போய் பாறையின் மீதிருந்து  கீழிறங்கினார். மெல்ல நடக்க ஆரம்பித்தவரின் கால்களை  ஏதோ இடற  தடுமாறி விழப்போய்   நின்றார். குனிந்து பார்த்தால், அவரது கமண்டலம்.  

மாமுனி வெளிறினார். 

”ஐயோ இது என்னை விடாது போலிருக்கிறதே” 

எனப் புலம்பியபடியே விரைந்து நடக்க ஆரம்பித்தார்.  மரங்கள் அடர்ந்த அப்பகுதியில் இருள் முழுமையாக   சூழ்ந்திருந்தது.  மலைச்சரிவாக இருந்ததால் சிரமமின்றி வேகமாக நடக்க முடிந்தது. நடக்க நடக்க கமண்டலம் மென் சப்தத்தோடு  அவரைத் தொடர்ந்தது. அச்சப்தம் அவருக்கு பயத்தை ஏற்படுத்தியது. ஓட ஆரம்பித்தார்.  

பாதையில் இடறும் சிறு  பாறைகளின்  மீதேறி குதித்தும்  விரைந்தும் மாமுனி  கீழே  இறங்கிக் கொண்டிருந்தார்.  கமண்டலம் உருளும்  ஓசை அந்த முன்னிரவில் மிகத் துல்லியமாய் அவர்    காதில் விழுந்து கொண்டே  இருந்தது. 

அவர் அந்த ஓசையிலிருந்து தப்பிக்க விரும்பினார். பறந்தே பழகிய  அவர்  உடல் வெகுதூரம்   ஓட அனுமதிக்கவில்லை.  மேலும்  செங்குத்தான சரிவை வந்தடைந்த போது  சறுக்கி   விழுந்தார்.  சற்று தூரம் உருண்டு எழுந்து ஓடினார். மனதிற்குள் “ரமணா காப்பாற்று”   எனக் கத்தினார். விருபாட்சிக் குகையை தாண்டிய பிறகு கமண்டலம் உருளும் ஓசை நின்று போனது.  மாமுனியின் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது. 

 ரமணர் குகைத் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து விட்டிருக்க வேண்டும். ”நல்லது நண்ப” என மாமுனி மனம் ததும்பினார். அடுத்த அரைமணி நேரத்தில் மாமுனி திருவண்ணாமலை நகரத்திற்குள் பிரவேசித்தார். 

பே கோபுரத்தை ஒட்டிய  ஒரு சாப்பாடுக் கடையின் முன்பு போய் நின்றார். பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த பெண்மணி எதுவும் பேசாமல் எழுந்து, கடைக்குள் போய் ஒரு இலையில் இரண்டு தோசைகளை வைத்து சட்னி ஊற்றித் தந்தார். நின்றபடியே தொசையைப் பிட்டு வாயில் அவசர அவசரமாகப் போட்டுக் கொண்டார். மாமுனியின் ஆயிரம் ஆண்டு வாழ்வில் அருந்தும் முதல் நர உணவு. வயிறு நிறைந்ததும் அமிர்தம் அற்பம் என்பதை உணர்ந்தார். மானிட வாழ்வு தரும் ஆனந்தத்தை மிக ஆதாரப்பூர்வமாக உணர்ந்தார். 


”யோவ் ரமணா நீ அப்பளப்பாட்டு எழுதியில் தப்பில்லையா”

என வாய்விட்டு சொல்லியபடியே மிக உற்சாகமாய் இலையை வீசிவிட்டு கால்போன போக்கில் நடக்க ஆரம்பித்தார்.


- மேலும்


Thursday, April 6, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் எட்டு

 அங்கையற்கன்னி மீண்டும் தன் கனவில் மானைக் கண்டாள். அவள் கனவில் வரும் மானிற்கு, முகம் மட்டும் மனித முகம். உடலும் கொம்புகளும் புள்ளிமானிற்கு உரியவை. அவளின் பதினைந்து வயதிலிருந்து இந்தக் கனவு வந்து கொண்டிருக்கிறது. முதல் முறை கொஞ்சம் பயந்தாள். யாரிடமாவது சொன்னால் என்ன என்றும் கூட யோசித்தாள். ஆனால் சொல்லத் தைரியம் வரவில்லை. நாளையடைவில் அந்தக் கனவு வராதா என ஏங்க ஆரம்பித்தாள். அந்த மானின் மனித முகம் அத்தனை வசீகரமானது. அந்த முகத்தை எத்தனை முறை நினைவில் நிறுத்த முயன்றும் இயலவில்லை.  வழுக்கிக் கொண்டே போனது. ஆகவே அந்தக் கனவை மெல்ல நேசிக்க ஆரம்பித்தாள். சுற்றத்தை, சக மனிதர்களை, ஆண்களை, ஏறிட்டுப் பார்த்தாள் இல்லை. சதா அவள் நினைவில் முகம் நினைவில் இல்லாத, அந்த மனித மானே கொம்புகளை உயர்த்திக் கொண்டு நின்றுகொண்டிருந்தது. 

பள்ளிப்படிப்போடு நிறுத்திக் கொண்டாள். படிப்போ இன்னபிற செயல்பாடுகளோ அவளின் கவனத்தை மானின் மீது குவிக்க விடாமல் சிதறடித்தது. எப்பாடுபட்டாவது அம்முகத்தை விழித்திருக்கும்போது நினைவில் கொண்டு வந்து விடவேண்டும் என்பதுதான் அவளின் ஒரே சிந்தனையாக இருந்தது. பெற்றோரும் சுற்றத்தாரும் அவள் நிலையைக் குறித்துப் பயப்பட ஆரம்பித்தார்கள். அங்கையற்கன்னிக்கு  குறிக்கோளோ பயமோ இல்லாமல் போனது. அம்முகத்தை விழித்திருக்கையில் பார்த்துவிடுவது மட்டுமே லட்சியமாக இருந்தது. அவள் கண்கள் சதா மிதந்து கொண்டிருந்தன. இத்தனைக்கும் அவள் ஒரு மானைக் கூட நேரில் பார்த்ததில்லை.  

ஒருநாள் சேஷாத்ரி ஆசிரமத்திற்கு ஒரு புள்ளி மான் குட்டி வந்திருப்பதாக அவள் தம்பி சொன்னான்.  அதன் உடல், வெல்வெட் துணி போல் இருப்பதாகவும், பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தான். அங்கையற்கன்னிக்கு மானைப் பார்க்கும் ஆசை எழுந்தது. அன்று மாலையே தங்க அரளிப் பூக்களையும், நித்யமல்லியையும் பறித்து மாலையாய் தொடுத்துக் கொண்டு சேஷாத்ரி ஆசிரமத்திற்குப் போனாள். ஆசிரமத்தை ஒட்டிய ஒரு சிறு பூங்காவில் அந்தக் குட்டி மான் திரிந்து கொண்டிருந்தது. சின்னஞ்சிறு மான். தன் பெரிய கண்களால் அருகில் வந்து நின்ற இவளைப் பார்த்தது. 

அங்கையற்கன்னிக்கு தொண்டை அடைத்துக் கொண்டது. அழுகை பீறிட்டது சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள்.  நடுங்கும் கைகளால் அந்த மானைத் தொட்டாள். அதன் பட்டுடலைத் தடவிப் பார்த்தாள். மான், அவளிடம் இன்னும் நெருங்கி வந்தது. கழுத்தை கரங்களால் வளைத்து அணைத்துக் கொண்ட கணம், அவள் முதன்முறையாய் தன் உச்சம் அடைந்தாள். 

அடுத்த நாளிலிருந்து  காலையும் மாலையும் சேஷாத்ரி ஆசிரமம் போக ஆரம்பித்தாள்.  மானோடு பூங்காவில் மெளனமாய் உரையாடுவாள். அதனோடு பூங்காவைச் சுற்றிச் சுற்றி வருவாள். மானிற்கு உணவையும் வீட்டிலிருந்து கொண்டு வர ஆரம்பித்தாள். தினம் அவளின் தம்பி வந்து அப்பா கத்துவதாக சொல்லி, அவளை மானிடமிருந்து பிரித்துக் கூட்டிப் போவான். அவளின் அம்மா  மிகவும் பயந்து போனாள். மகளின் மனநிலை குறித்த அச்சம் அவளுக்கு ஏற்கனவே இருந்தது. இடையில் இந்த மான் விவகாரமும் சேர்ந்துகொள்ளவே மொத்தக் குடும்பமும் தவித்தது. ஏற்கனவே இவளின் ஜாதகமில்லாத புரோக்கர்களே இல்லை என்கிற நிலை வந்துவிட்டது. அங்கையற்கன்னியின் ஜாதகம் ஆண் ஜாதகம். அரசாளும் தன்மை கொண்ட பலாபலன்கள். அவளுக்கான தோதுபட்ட ஜாதகம் ஒன்றுமே அமையவில்லை. சிலர் அவளின் நட்சத்திர அமைப்புகளைப் பார்த்து மிரண்டனர். இது வேலைக்காகாது எனத் தெரிந்த அவளின் அப்பா ஒரு போலி ஜாதகத்தை உருவாக்கினார். மிகப் பெரும் தேடலுக்குப் பிறகு தேனிமலையிலிருந்த ரவியைப் பிடித்தார். அரசுப் பணி. வாத்தியார் உத்தியோகம். புரோக்கருக்கு தாராளமாகப் பணம் கொடுத்து பெண் பார்க்க வரச் செய்துவிட்டிருந்தார். 

ரவி அங்கையற்கன்னியைப் பார்த்த மட்டில் நடுங்கினான். அவளின் மருதாணிப் பூசிய பாதங்களுக்கு முன்பு கூட தான் ஈடில்லை என மருகினான். அவன் அம்மாவின் பிடிவாதத்தால் இருவருக்கும் திருமணம் முடிந்தது. மணவறையில் தாலிகட்டும் நேரத்திற்கு சற்று முன்பாகத்தான் அங்கையற்கன்னி அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவன் முகம் நரியைப் போலிருந்தது. ஆணுடலொன்று நரியின் முகத்தோடு அருகில் அமர்ந்திருப்பதாய் உணர்ந்தாள். எதுவும் பேசாமல் தலை குனிந்து கொண்டாள். மந்திரப் பின்னொலியில், புகைமண்ட அவள் கழுத்தில் ரவி தாலி கட்டினான்.

ஓவியம் : காயத்ரி காமூஸ்

- மேலும்

Wednesday, April 5, 2017

ஓரிதழ்ப்பூ - மீளுதல்




ஓரிதழ்ப்பூ - குறுநாவலை விட்ட இடத்திலிருந்து எழுத ஆரம்பிக்கிறேன். இந்நாவலின் முதல் அத்தியாயத்தை 2013 ஆம் வருடம் மே மாதம் 27 ஆம் தேதி வெளியிட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் இதை மனதால் மட்டும் சுமந்து கொண்டிருக்கிறேன். ஒரு நாவலை இரண்டு இடைவெளிகளில் எழுத முடியுமா, அதே மனநிலை வாய்க்குமா என்கிற சந்தேகங்கள் எனக்கும் இருக்கின்றன. ஆனால் பழியையும் இரண்டு பாகங்களாகத்தான் எழுதினேன். முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் ஆறு மாத கால இடைவெளி என நினைக்கிறேன். நன்றாகத்தான் வந்தது. என்றாலும் ஓரிதழ்ப்பூவிற்கு விழுந்து விட்ட இடைவெளி அதிகம்தான். வெளியிட்ட ஏழு அத்தியாயங்களை வாசித்த நண்பர்கள் நன்றாக வந்திருப்பதாகவும் விரைவில் எழுதி முடிக்கும்படியும் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்காவது இதை எழுதி முடிக்க வேண்டும் என விரும்பினேன். நடக்கவில்லை. இப்போது நிகழும் போல் தோன்றுகிறது.

 பழி, மழைக்காலம், இருபது வெள்ளைக்காரர்கள் மூன்றும் குறுகிய காலத்தில் எழுதப்பட்டவை. உடனடியாக அச்சிலும் புத்தகமாக வெளிவந்தது. அந்த உற்சாகத்தில் மூன்று குறுநாவல்களை தனித் தனியாய் எழுத ஆரம்பித்தேன். மூன்றில் ஓரிதழ்ப்பூ படபடவென விரிந்தது. இதன் களமும் எனக்குப் பிடித்திருந்தது. இதே நினைவில் கிடந்துழலுவது சிறிய போதையாகக் கூட இருந்தது. எதனால் முடிக்க முடியாமல் போனது என்பதைத் துழாவிக் கொண்டிருக்கப் போவதில்லை. தினம் சில பத்திகளையாவது எழுத முடியும் என்கிற நம்பிக்கை தோன்றுகிறது. மேலும் நினைவில் இந்நாவலை சுமந்து கொண்டு அலைவது அலுப்பாகவும் இருக்கிறது.

 இப்போது வாசிப்பவர்களுக்காக, ஏழு அத்தியாயங்களின் சுட்டிகளைத் தருகிறேன். புகைப்படங்கள் அனைத்தும் நண்பன் பினு பாஸ்கருடையவை. அத்தியாயங்களுக்கு மிகப் பொருத்தமாக அவை இருந்தன.

  ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் ஒன்று

  ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இரண்டு

  ஓரிதழ்ப்பூ அத்தியாயம் மூன்று

  ஓரிதழ்ப்பூ : அத்தியாயம் நான்கு

  ஓரிதழ்ப்பூ : அத்தியாயம் ஐந்து

  ஓரிதழ்ப்பூ : அத்தியாயம் ஆறு

  ஓரிதழ்ப்பூ : அத்தியாயம் ஏழு


 இனி எட்டிலிருந்து துவங்குகிறேன்.

Monday, April 3, 2017

ட்ராகன் நெருப்பு




கேம் ஆஃப் த்ரோன்ஸின் ஆறு சீசன்களையும் பார்த்து முடித்தேன். பிப்ரவரி இரண்டாம் வாரம் துங்கி மார்ச் கடைசி நாளில் முடித்தேன். இந்த ஒண்ணரை மாத காலகட்டத்தில் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட சில படங்களையும் இரண்டு தமிழ்படங்களையும் மட்டுமே பார்த்தேன். முழுக்க இந்தத் தொடரில் மூழ்கிக் கிடந்தேன். இப்படி ஏதோ ஒன்றில் முழுமையாய் தொலைவதும் நன்றாகத்தான் இருக்கிறது. அடிப்படையில் ’ஃபேண்டஸி’ அல்லது ’சயின்ஸ் பிக்சன்’ கதைகளின் மீது எனக்கு ஆர்வம் குறைவு. எனவேதான் இத்தனை வருடம் கழித்து இத்தொடரை ஆரம்பித்தேன். ’எலைட் எலக்ஸ்’ மோஸ்தர் மற்றும் ’பாப்புலர் ஃபார்ம்’ மீதான ஒவ்வாமையையும் இந்த இணைய வருடங்களில் அநியாயத்திற்கு வளர்த்துக் கொண்டுவிட்டேன். எல்லாவற்றையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, கொஞ்சம் இளகி, எவ்வளவு இயலுமோ அத்தனை எளிமைக்கு நகர வேண்டிய காலகட்டம் இது என்பதையும் உணர்ந்திருக்கிறேன். அதற்கான உத்வேகத்தையும் ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடர் தந்திருக்கிறது. 

இத்தொடரில் வரும் மிகச் சிறிய கதாபாத்திரங்கள் கூட வேர்களோடு இணைக்கப்பட்டிருக்கிறது. போரில் மடியும் வீரர்களைத் தவிர்த்து அந்தரத்தில் தொங்கும் அல்லது வந்து போகும் கதாபாத்திரங்களெனக் கிட்டத்தட்ட எதுவுமில்லை. ஆறு பாகங்கள் முடிந்திருக்கும் நிலையில் இரண்டு வலிமையான பெண்கள் எதிர் எதிர் நிலையில் நின்று கொண்டிருக்கிறார்கள். குயின் செர்ஸிக்கும் குயின் டனேரிஸ் க்குமான போட்டி இனி நேரடியாக இருக்கும். இத் தொடரின் மிகு புனைத் தன்மை குறையும்போதெல்லாம் அதை டனேரிஸ் டகேரியனின் பகுதியே ஈடு செய்தது. ஒரு பகுதிக்கும் இன்னொரு பகுதிக்கும் இடையே Can't wait எனப் பார்வையாளர்களைப் புலம்ப வைக்கப் பெரும்பாலானப் பகுதிகளின் இறுதிக்காட்சியாக டனேரிஸ் கதாபாத்திரமும், ட்ராகன்களும் வரும்படியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

முட்டையிலிருந்து அப்போதுதான் பொரிந்த ட்ராகன் குஞ்சுகள் தோளின் மீது சிறகடிக்க தீயிலிருந்து வெளியே வரும் டனேரிஸின் உருவத்தையும், அந்தச் சிலிர்ப்பூட்டும் காட்சியையும் மறக்கவே முடியாது. அதன் பிறகுதான் டனேரிஸ் கதாபாத்திரம் முழுமையான மாயப் புனைவிற்குள் செல்கிறது. வலிமையான தலைவியாய் டனேரிஸ் தன்னைச் செதுக்கிக் கொள்கிறாள். அடிமைகள் விலங்குகளை உடைத்து, முதலாளிகளைத் தகர்த்து தன்னை ஈடு இணையற்ற ராணியாய் வடிவமைத்துக் கொள்கிறாள். மூன்று ட்ராகன்கள், டத்ரோகிகளை உள்ளடக்கிய வலிமையான ஆர்மி மற்றும் ட்ரியன் லானிஸ்டரின் மூளையுடன் எஸோஸிலிருந்து வெஸ்டரஸின் இரும்பு இருக்கையைக் கைப்பற்ற வருகிறாள்.

 தன் பிள்ளைகளைப் பறிகொடுத்துவிட்டு முழு அதிகாரத்தோடும் வெஞ்சினத்தோடுமாய் செர்ஸி இரும்பு இருக்கையில் அமர்ந்திருக்கிறாள். இனி என்னாகும் என ஜூலை வரைக் காத்திருக்க வேண்டும். இடையில் இருக்கும் இம்மாதங்களில் George R.R. Martin ன் எழுதி வெளிவந்த 'A Song of Ice and Fire'தொடர் நாவல்களை வாசிக்கத் திட்டமிட்டிருக்கிறேன்.

 இந்தக் கதைகளின் சில பகுதிகளை -ஒநாய்களும் ட்ராகன்களும் வரும் பகுதியை - அப்படி இப்படி மாற்றி பிள்ளைகளுக்கு இரவு நேரக் கதைகளாக சொல்லி வருகிறேன். சுவாரசியமாய் இருக்கிறது. நேற்றுப் பேரங்காடியில் ட்ராகன் ஃப்ரூட்டைப் பார்த்த பயல்கள் பாய்ந்து எடுத்தார்கள். இதைச் சாப்பிட்டால் வாயிலிருந்து ட்ராகனைப் போல் ஃபயர் வருமா எனக் கேட்டதற்கு ஆமாமெனத் தலையசைத்து வைத்தேன். மாலை சர்வ ஜாக்கிரதையாய் ட்ராகன் ஃப்ரூட்டை வெட்டிச் சாப்பிட்டோம். எவ்வளவு முயன்றும் வாயிலிருந்து ஃபயர் வரவே இல்லை. 

Thursday, March 30, 2017

முதல் சினிமா



சினிமா எழுத்தாளனாய் என்னுடைய முதல் அறிமுகம் மலையாளத்தில் இருக்குமென எதிர்பார்த்திருக்கவில்லைதாம். ஆனால் அது நிகழ்ந்தே விட்டது. நண்பன் பினு பாஸ்கர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் கோட்டையம் என்கிற மலையாளப் படத்திற்கு எழுதியிருக்கிறேன். கனடாவில் வசிக்கும் சஜித் தயாரிக்கும் படமிது. 'என்ஆர்ஐ ப்ரடியூசர்' என்கிற பதமெல்லாம் சஜித்திற்கு பொருந்தாது. அவரும் என்னைப் போல மாத சம்பளத்திற்கு ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிபவர். சினிமா மீதிருக்கும் ஆர்வம் மற்றும் பினு மீதிருக்கும் நம்பிக்கை NITEVOX எனும் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கக் காரணமாக இருக்கலாம். இந்நிறுவனத்தில் நானும் ஒரு அங்கம். 

எங்களின் முதல் படம் 30 நிமிடக் குறும்படமான Road Song. இதில் வரும் தமிழ் பகுதியை நான் எழுதினேன். போர்ச்சுகல் நாட்டிலிருந்து பினுவும், கனடாவிலிருந்து சஜித்தும், துபாயிலிருந்து நானுமாய் மூன்று தேசங்களிலிருந்தபடியே இந்தப் படத்தை உருவாக்கினோம். படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 'ரோட் சாங்' தந்த நம்பிக்கையில் என்னுடைய இருபது வெள்ளைக்காரர்கள் குறு நாவலை திரைக்கதையாக எழுதினோம். பினுவிற்கு இந்த நாவலின் மீதும் அதன் உலகளாவியக் கட்டமைப்பின் மீதும் பைத்தியம் இருந்தது. எப்படியாவது திரையில் இருபது வெள்ளைக்காரர்களைக் கொண்டு வந்துவிட வேண்டுமென இரண்டு வருடங்கள் அலைந்தான். பணம் இருபது வெள்ளைக்காரர்களை காத்திருக்க வைத்திருக்கிறது. கோட்டையம் எங்களைக் கரைசேர்த்தால் அடுத்த படம் இருபது வெள்ளைக்காரர்கள்தாம்.

 கோட்டையத்தின் மூலக் கதை கஃபூரினுடையது. சஜித்தும் பினுவும் ஒருவருடமாக இக்கதையை வேறு வேறு வடிவில் எழுதிப்பார்த்து, பணம் கிடைக்கும் நேரத்தில் காட்சிகளை எடுத்து வைத்திருக்கிறார்கள். இறுதி வடிவத்திற்கும் முழுமை செய்வதற்குமாய் என்னை அழைத்தார்கள். நானும் பினுவும் சஜித்தும் சேர்ந்து இத் திரைக்கதையை முழுமை செய்தோம். பத்து இரவுகளை இத்திரைப்படத்திற்காய் அர்ப்பணித்தேன். நிச்சயம் புது அனுபவம்தான். சினிமா வேலை ஒன்றும் நான் நினைத்துக் கொண்டிருந்தது போல அத்தனை ஆடம்பரமானதில்லை. முதல் மூன்று நாட்களிலேயே விழி பிதுங்கியது. மிக சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கும் என்னால் உழைக்க முடியவில்லை. இரவு முழுக்க தூங்காமல் கதையிலோ எழுத்திலோ விழுந்து கிடக்க முடியவில்லை. நான்கு நாட்கள் குருவாயூரில் இருக்கும் பினுவின் புராதன வீட்டிலும், நான்கு நாட்கள் என் திருவண்ணாமலை வீட்டிலும், இரண்டு நாட்கள் பினுவின் குடிலிலுமாய் அமர்ந்து எழுதி முடித்தோம்.

எங்கள் மூவருக்குமிடையே இருக்கும் அலைவரிசை ஒற்றுமையால் கறாராய் கருத்துகளை முன் வைக்கவும், நிறைய விஷயங்களை களையவும் முடிந்தது. மிக சுதந்திரமாய் இயங்கினேன். இதுவரைக்கும் ஒரு படத்திற்கு மூன்று மொழிகளில் எழுதியிருக்கிறார்களா என்பது தெரியாது. ஆனால் இப்படத்திற்கு தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் பயன்படுத்தினோம். திரைப்பட உருவாக்கத்தில் வேறு சில சாகசங்களையும் செய்திருக்கிறோம் அவற்றைப் பிறகு எழுதுகிறேன். ஸ்க்ரிப்ட் அளவில் படம் பிரமாதமாய் வந்திருக்கிறது. ஒரு சினிமாவின் மற்ற அம்சங்களும் சரியாக சேர்ந்தால் நிச்சயம் கோட்டையம் வெற்றி பெறும்.

எந்தப் பின்புலமும் இல்லாமல் திறமை ஒன்றையே நம்பி அசுரத்தனமாய் உழைத்துக் கொண்டிருக்கும் கோட்டையம் குழுவினற்கு வாழ்த்துகள். படம் வெளிவந்த பிறகு விரிவாய் நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

Featured Post

test

 test