Thursday, March 7, 2013

கடைசி நாளில்....3



மேடைப் பேச்சில் பள்ளிக் காலங்களில் சிறந்து விளங்கினேன். டிபன் பாக்ஸ், எவர்சில்வர் தட்டு, எவர் சில்வர் பூக்கூடை, தம்மாதூண்டு பித்தளை கப், பிளாஸ்க் என நான் வாங்கி குவித்திருந்த பரிசுகளின் எண்ணிக்கை அதிகம்தான். இது போக சான்றிதழ்கள். நான்கு வருடங்களுக்கு முன்பு திருவண்ணாமலை வீட்டில் பழைய குப்பைகளை கிளறிக் கொண்டிருக்கும்போது இச்சான்றிதழ்கள் அடங்கிய ஃபைல் கைக்குக் கிடைத்தது. சுவாரசியமாய் எடுத்துப் பார்த்துக் கொண்டே வந்தபோது ஒரு சான்றிதழில் பவாயின் கையெழுத்திருந்தது. ஆச்சரியமும் சந்தோஷமுமாக இதை பவா விடம் சொன்னேன். 93 ஆம் வருட கலை இலக்கிய இரவு நிகழ்வுகளின் ஒரு பாகமாக பள்ளி மாணவர்களுக்கு நடத்திய பேச்சு போட்டி ஒன்றில் நான் முதல் பரிசு வாங்கியிருக்கிறேன். சான்றிதழில் பவா வின் கையொப்பம். ஆனால் அதை அவரிடமிருந்து வாங்கினேனா என்பது நினைவில்லை. மேடை, மைக், பேச்சு என்பதெல்லாம் என் நினைவிலிருந்து மங்கியே போனது. கூச்ச சுபாவியாக, கூட்டுக்குள் அடங்கிகொள்ளும் ஆமையாக மாறிப்போனேன். பதினைந்து வருடங்கள் கழித்து என் புத்தக வெளியீட்டு விழா மேடையில்தான் மீண்டும் மைக்கைப் பிடிக்க நேர்ந்தது. பேசிமுடித்தவுடன் ஆரம்பிக்கும்போது சொன்ன வணக்கமும் முடிக்கும்போது சொன்ன நன்றியும் மட்டுமே நினைவிலிருந்தது. அநிச்சை செயல் என்பதின் அர்த்தம் எனக்கு அப்போதுதான் விளங்கியது. நல்லா பேசின என பெருந்தன்மையாக பிரபஞ்சன் தேற்றினார். தமிழ் ஏதோ கிண்டலடித்த நினைவு. இப்பின்புலத்தில் எஸ்கேபி கல்லூரியில் சினிமா குறித்து ஒரு மணி நேரம் பேசவேண்டும் என்பதை நினைத்து இரண்டு நாள் திகிலாகத் திரிந்தேன். ஆனால் பேசித்தான் ஆகவேண்டும். விழா அழைப்பிதழில் பெயரெல்லாம் வந்துவிட்டது. முதல் நாள் வம்சிக்குப் போய் சினிமா தொடர்பான புத்தகங்களை அள்ளிக் கொண்டு வந்தேன். ஒரு உரையை தயாரித்துவிட்டு படித்துவிடும் திட்டம். ஆனால் ஒரே ஒரு புத்தகத்தைக் கூட வாசிக்க நேரம் வாய்க்கவில்லை. துண்டு சீட்டு குறிப்புகள் கூட இல்லாமல் அடுத்த நாள் காலை எஸ்கேபி கல்லூரிக்குப் போய்விட்டேன்.

எஸ்.ராமகிருஷ்ணனை முதல் முறையாய் சந்தித்தேன்.  முன்பு தொலைபேசியில் பேசியிருந்ததோடு சரி. எழுதிக் கொண்டிருக்கும் நாவல், சினிமா குறித்தெல்லாம் பகிர்ந்துகொண்டார். விழாவின் அறிமுக உரையை கருணா நிகழ்த்தினார். வெகு இயல்பான பேச்சு. பொறியியற் கல்லூரியில் Film Club தொடங்குவதன் பின்புலத்தை விவரித்துக் கொண்டிருந்தார். தன் கல்லூரியிலிருந்து வெளியே போகும் மாணவர்கள் வெறும் மதிப்பெண்களை மட்டும் கொண்டு போகிறவர்களாக இருக்ககூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார். கலை, இலக்கியம், சினிமா என சகல விஷயங்கள் குறித்தும் மாணவர்களுக்கு சரியான அறிமுகத்தைத் தருவதில் முனைப்பாக இருக்கிறார். அடுத்த சிறப்புரை எஸ்.ராமகிருஷ்ணனுடையது.  விலாவரியாக சினிமா குறித்து ஒரு பேருரையை நிகழ்த்தினார். பிறகு சில குறும்படங்களைப் பார்த்தோம். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு முதல் பேச்சு என்னுடையது. வழக்கம்போல வணக்கம் சொன்னதும் நன்றி சொன்னதும்தான் நினைவில் இருக்கிறது. வெகுநேரம் பேசிவிட்டதைப் போல் தோன்றவே திடீரென நிறுத்திவிட்டேன். இன்னும் சிறிது நேரம் பேசியிருக்கலாம் என எல்லோரும் வருத்தப்பட்டார்கள். நான் சொன்ன சில்ரன் ஆப் ஹெவன் கதையில் சில தகவல் பிழைகளை வம்சி சுட்டினான். "ஆனா நீங்க கத சொன்ன ஃப்ளோவுல அதுலாம் யாருக்கும் தெரிஞ்சிருக்காதுண்ணே" எனவும் தேற்றினான். வம்சி மிகக் கூர்மையான பார்வையைக் கொண்டிருக்கிறான். நிறைய வாசிக்கிறான். நிறைய படங்கள் குறித்து விவாதிக்கிறான். அவன் வளர்ச்சி மகிழ்வளிக்கிறது. ஷாஜியும் அஜயன் பாலாவும் இந்திய சினிமா மற்றும் தமிழ் சினிமாக்கள் குறித்துப் பேசினார்கள். ஷாஜியிடம் கே.ஜி.ஜார்ஜ் குறித்துப் பேசிகொண்டிருந்தேன். ஷாஜிக்கும் கே.ஜி.ஜார்ஜை மிகவும் பிடித்திருக்கிறது. ஒரு கட்டுரை எழுதச் சொல்லி கேட்டேன். அஜயன் தன் அடுத்த படம் குறித்து பகிர்ந்து கொண்டார். மாலை எஸ்கேபி கல்லூரியின் திறந்த புல்வெளி அரங்கில் ஐரோப்பிய பெண்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. திபெத்திய பெண் புத்தர் வழிபாட்டு முறைகளை மேடையில் நிகழ்த்தினார்கள். அக்குழுவின் தலைமைப் பெண்மணியோடும் கிதார் கலைஞரோடும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.

விழாவின் இரண்டாம் நாள் காலை எடிட்டர் லெனின்  எடிட்டர் லெனின் பேசிக் கொண்டிருக்கும்போதுதான் உள்ளே நுழைந்தேன். வாயிலில் ராம் உலாத்திக் கொண்டிருந்தார். லெனின் பேசி முடிக்கும்வரை  கிடைத்த ஒருமணிநேர இடைவெளியில் இரண்டு டீ குடித்து மூன்று சிகரெட் பிடித்து அரங்கிற்கு வெளியே எங்களின் பேச்சு நீண்டு கொண்டிருந்தது. ராம் ஒரு அற்புதமான கலைஞன். பினுவைப் போல, செளக்கத்தைப் போல, அருணைப் போல, நான்கு வருடங்களுக்கு முன்பு பார்த்த உடனேயே ராமை எனக்குப் பிடித்துப் போனது. எங்களுடைய புத்தக வெளியீட்டு விழாவில் ராம், ஷைலஜாக்காவின் சூர்ப்பணகை குறித்து நிகழ்த்திய உரை இன்னும் நினைவில் இருக்கிறது. இந்நிகழ்விலும் ராமின் பேச்சு அபாரமாக இருந்தது. கற்பனையை, மிதத்தலை, போலிமதிப்பீடுகளை செவிட்டில் அறைந்து யதார்த்தத்தை, அழகியல் போர்த்தப்பட்ட குரூரத்தை ராமின் பேச்சு முன் வைத்தது. அரசியல், கலை, இலக்கியம்,சினிமா குறித்தெல்லாம் மிக வெளிப்படையாக, கறாரான விமர்சனப் பார்வை ராம் முன்வைத்தார். இந்த உரை இரண்டு நாள் விழாவின் சிறப்பம்சமாக இருந்தது. பேச்சை முடித்துக் கொண்டு வந்தவரிடம் ராம் மைக்கின் முன்னால் நீங்கள் வேறொரு ஆள் எனச் சொன்னேன்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு  கிளம்பி பாண்டிச்சேரி போனேன். நாகரத்னம் கிருஷ்ணாவின் புத்தக வெளியீடு. வாசு மற்றும் நண்பர்கள் போவதாய் சொல்லியிருந்தார்கள். வாசுவிற்கு தொலைபேசி மாலை அவர்களோடு திண்டிவனத்தில் இணைந்து கொண்டேன். இங்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் உரை இருந்தது. தமிழவனை முதன் முறையாகப் பார்த்தேன்ரமேஷ் வந்திருந்தார். போப்பு, பரமேஸ்வரி, மதுமிதா, யுகபாரதி மணிகண்டன், வா.மணிகண்டன் உள்ளிட்ட பல நண்பர்களை சந்தித்தேன். விழா முடிந்து பாண்டிச்சேரி கடற்கரைக்குப் போனோம். அஜந்தா மாடியில் அமர்ந்தபடி, பவுர்ணமி நிலவை, அலைகளை பார்த்தபடி குடித்தேன். இரவு முழுக்க பாடல்களைப் பாடியும் பேசியுமாய் கழிந்தது. இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வாய் அந்த இரவு இருந்தது. வாசுவிற்கு நன்றி. அதிகாலையிலேயே சின்னவனுக்கு ஜூரம் என மனைவியிடமிருந்து அழைப்பு வந்தது. போக திட்டமிட்டிருந்த சித்தப்பா வீட்டிற்கு போகாமல் வீடு திரும்பினேன்.

தொடர் பயணங்களின் விளைவாக நால்வருமே சளியும் இருமலும் ஜூரமுமாய் அவதிப்பட்டோம். பயல்கள் விளையாடப் பெரிய வெளியும், நாய்குட்டியும் இருந்ததால் உடல்நலன் குறித்து அவர்கள் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. ஒரு நாளின் மொத்த வெயிலையும் தலையில் வாங்கினார்கள். தெருவின் எல்லா வீடுகளுக்கும் மிக இயல்பாய் சென்று வந்தார்கள். வீதி நாய்களின் வாலைப் பிடித்து இழுக்க மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்கள். ஆட்டுகுட்டிகளை விரட்ட, மாடுகளுடன் சண்டையிட விரும்பினார்கள். இருவரையும் கட்டுக்குள் வைத்திருக்க பெரும் சிரமப்பட்டோம்.

எஸ்கேபி கல்லூரி விழாவின் தாக்கம் தணியுமுன்னரே பவா அடுத்த நிகழ்விற்கு அழைப்பிதழை தயாரித்துவிட்டார். இம்முறை பவா வின் ஆங்கிலப் புத்தக வெளியீடு. ஆங்கிலத்திலேயே பேசுவதாக சொன்னேன். குவாவாடிஸ் என்பதால் இடம் குறித்த  அச்சம் குறைவாக இருந்தது. இம்முறை எழுதி வைத்து வாசித்துவிட்டேன். வழக்கம்போல பவா தன் ஆத்மார்த்தமான உரையை நிகழ்த்தினார். ஷைலஜாக்கா புத்தகத்திலிருந்து அப்பா கட்டுரையை வாசித்தார். போப்பு பேசினார். இறுதியாக ஜேபி ஒரு பிரமாதமான உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தினார். ஜேபி பவாவின் பள்ளிக்காலத்திலிருந்து நண்பர். இருவரின் நட்பையும் குவாவாடிஸ் உருவான விதத்தையும் மிக ஆதூரமான நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டார். குவாவாடிஸ் இடமே வேறொரு மனநிலையைத் தந்தது

ஊருக்கு கிளம்பும் நாள் வந்தே விட்டது. கடைசி நிகழ்வாக எங்கள் வீட்டின் மூன்று குட்டிப் பயல்களுக்கும் மொட்டையடித்து காதுகுத்தினோம். பிரபஞ்சன் மிக சாதுவாய் இரண்டு கண்டங்களையும் தாண்டினான். ஆகஷூம் அகிலும் களேபரப்படுத்தினார்கள். ஒரு வழியாய் நிகழ்ச்சி நல்லபடியாய் முடிந்தது. அடுத்த நாள் மிகப்பரபரப்பாய் இருந்தது. தொடர்பு விட்டுப்போன என் பால்ய நண்பர்கள் மூவர் தொலைபேசினார்கள். மதியம் பவாவிடம் விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்பும்போது மழைத்துளியொன்று முகத்தில் பட்டது. மிக உற்சாகமாய் கடைசி மணிநேரங்கள் கடந்தன. மழை விட்டதும் என் பால்ய நண்பர்களில் ஒருவன் சந்திக்க விரும்பினான். இரமணாசிரமம் எதிரில் இருந்த தேநீர் கடையில் அமர்ந்தபடி வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். தொடர்பு விட்டுப்போன பத்துவருடங்களை பேச்சால் மீண்டும் இணைத்தோம். இன்னொரு பால்ய நண்பனும் வந்து இணைந்துகொண்டான். அவர்களுக்கு தொடர்பிலிருக்கும் நண்பர்களோடு தொலைபேசியில் பேசினேன். இனி எல்லோருடனும் தொடர்பில் இருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டே வீடு வந்து நள்ளிரவில் விமான நிலையத்திற்கு கிளம்பினோம்.

இடையில் சினிமாபற்றி ஒரு புத்தகம் கொடுங்கள் என ஷைலஜாக்கா கேட்டார்கள். இந்த வலைப் பக்கத்திலிருக்கும் சினிமாக் கட்டுரைகள், வவெதொஅவெகு கட்டுரைகளை  ஏற்கனவே நிகழ் திரை கனவு என்ற பெயரில் தொகுத்து வைத்திருந்தேன். அதை லேசாக தட்டி ஒரு வாரத்தில் தந்துவிடுவதாய் சொன்னேன். ஆனால் அத்தொகுப்பை மீண்டும் வாசித்துப் பார்த்தபோது மிக சாதாரணமாய் இருப்பதாய் பட்டது. இதையெல்லாம் புத்தகமாய் வேறு போட வேண்டுமா என்கிற தயக்கமும் மேலெழுந்தது. ஆகவே புதிதாய் ஒரு சினிமா புத்தகம் எழுத முடிவெடுத்திருக்கிறேன். அதிகம் அறியப்படாத இயக்குனர்களின் மொத்த திரைப்படங்கள் குறித்தும் விலாவரியாய் எழுதும் திட்டம். எமீர்கஸ்தூரிகா, டோனி காட்லிப், பார்க் வூ, கிடானோ என இந்தப் பட்டியல் நீளுகிறது. இந்தியாவிலிருந்து இயக்குனர் கே.ஜி.ஜார்ஜ் குறித்த ஒரு முழுமையான கட்டுரையும் புத்தகத்தில் இடம்பெறும். ஏற்கனவே எழுத ஆரம்பித்துவிட்டேன். இரண்டு மாதத்திற்குள் முடித்துவிடும் ஆசை இருக்கிறது. இந்த புத்தகம் முழுமையாய் வருவதற்கான எல்லா உழைப்பையும் இடவேண்டும்.


நான் கடவுள்

என் அப்பாவிற்கு கடவுளர்கள் குறித்துப் பெரிதாய் புகார் கிடையாது ஆகவே வீட்டில் பக்தியின் தாக்கங்களான பூஜை, வழிபாடு,விசேஷங்கள் என எதுவும் இருந்தது கிடையாது. ஆனால் நான் பதினைந்து வயது வரை பக்திப் பழமாகத்தான் வளர்ந்தேன். பதின்மத்திற்குப் பிறகு சாமியார் பித்தும் சேர்ந்துகொண்டது. போன மாதம் கூட ஒரு வளரும் சித்தரைப் பார்த்துப் பேசிவிட்டுத்தான் வந்தேன். இப்பித்திற்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது என் ஊரைத்தான். இரமணர் ஆசிரமத்திற்கு சமீபமான வீடென்பதால் என் பள்ளி விடுமுறைப் பகல்கள் முழுக்க ஆசிரமமும் அதையொட்டிய மலையடிவாரத்திலேயும் விளையாட்டாய் கழிந்தன. படிப்பு,விளையாட்டு,புகை,காதல் என எல்லாமும் பருவங்களுக்கேற்ப மாறினாலும் இடங்கள் மட்டும் மாறவேயில்லை. கூரையை முட்டும் உய:ரத்திற்குப் புற்றுகொண்ட கருமாரியம்மன் கோவிலைத் தாண்டினால் வரும் பலாக் குளம், தலைப்பிரட்டைகளை மீனெனப் பிடித்த காலத்திலிருந்து ஓர் அந்திக் கருக்கலில் கவிதாவை முத்தமிட்ட தருணம் வரை என்னை அறிந்திருந்தது. எங்கள் குழாமின் அனைத்து சதியாலோசனைகளும் குளம் சாட்சியாகத்தான் நிகழ்ந்தன. யார்ரா இந்த லூசு என ராஜசேகரை இக்குளத்திற்கு சமீபமாய் நிற்கவைத்துக் கிண்டலடித்ததும் உண்டு. ஓரிரு முறை பியர் குடித்தோம். முதல் குடி நிகழ்வில் இரண்டு மிடறு குடித்து விட்டு நாச்சி உளறினான். மூன்று நாட்களுக்கு முன்பு பாருவின் முலைகளை இங்கு வைத்துதான்…. இருங்கள் நான் சொல்ல வந்தது சாமியார்கள் குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் இந்த பலாக்குள சம்பவங்களை சொல்கிறேன்.

 சிறு வயதிலிருந்து ஆசிரமத்திற்குப் போய்கொண்டிருப்பதாலோ என்னவோ இரமணரின் மீது பயங்கலந்த பக்தி இருந்தது. எட்டாம் வகுப்பில் இரமணாசிரம நிர்வாகம் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்தியது. மாணவர்களுக்கான சிறப்பு வெளியீடுகளாய் இரமணரின் வாழ்க்கை வரலாறு, உரைகள், தத்துவங்கள், பாடல்கள் போன்றவை எங்களுக்கு இலவசமாய் தரப்பட்டன. அவற்றிலிருந்து போட்டிகள் வகுக்கப்பட்டன. எல்லாவற்றையும் வாசித்து முடித்ததும் இரமணரை முழுமையாய் அறிந்து கொள்ள முடிந்தது. ‘நான்’ தத்துவம் புகைமூட்டமாய் புரிவது போலிருந்தது ஆனால் புரியவில்லை. நான் யார்? ஆன்மாவுக்கும் உடலுக்கும் என்ன சம்பந்தம்? ரெண்டும் வேற வேறன்னா உறவுகள் ஏன்? வாழ்க்கை முறை என்ன? வெற்றி தோல்வி ன்னா என்ன? ஏன் படிக்கனும் வேலைக்கு போகனும்?என பயங்கர குழப்பம் ஏற்பட்டது. ஆனால் பதிமூன்று வயதில் அய்யங்குளத்தில் மொட்டையடித்துக்கொண்டு கோவணத்தோடு ஒரு ஒல்லிப் பதின்மன், அண்ணாமலையார் கோவிலை நோக்கி கொட்டும் மழையில் ஓடும் சித்திரம் எனக்குள் பதிந்து போனது. பெரிய கோவிலில் இரமணர் அமர்ந்திருந்த இடமான பாதாள லிங்கம் இன்று வரை எனக்குப் பிடித்த இடமாக இருக்க காரணம் இந்தச் சித்திரமாகத்தான் இருக்க வேண்டும். 

 இந்த ‘நான்’ குழப்பங்கள் எல்லாம் சில மாதங்கள்தாம் நீடித்தன. எங்கள் பகுதியில் மிகப் பரந்த அளவில் வயல்களை அழித்துவிட்டு தமிழ்நாட்டு வீட்டு வசதி வாரியம், ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொண்டிருந்தது. சில HIG வீடுகள் தயாராகி புதிதாய் குடும்பங்களும் வர ஆரம்பித்திருந்தன. சம வயதை ஒட்டிய பெண்களை அங்கும் இங்குமாய் பார்த்ததும் எல்லாம் மறந்து போனது. பத்தாம் வகுப்பில் ஞானப் பிரசன்னா என்கிற பேரழகியைத் தொடர்ந்து போய் பிரம்மகுமாரிகள் அமைப்பைத் தெரிந்து கொள்ள நேரிட்டது. தியானம் கற்றுக் கொள்ளும் ஆர்வம் குபீரென முலைத்து தினம் மாலை இராஜயோக தியான நிலையத்திற்குப் போக ஆரம்பித்தேன். ஆரம்பம் வேறாக இருந்தாலும் நல்ல பயன் இருந்தது. நான் பற்றிய கேள்விகளுக்கு அங்கு வெள்ளையுடை அணிந்தவர்களிடம் பதில் இருந்தது. ஒரு காரின் படத்தைக் காட்டி இந்த என்ஜின் தான் ஆன்மா என்றார்கள். சுலபமாகப் புரிந்தது. தியானம் பற்றிய அடிப்படைகளை கற்றுக் கொண்டதும் அங்கு போவதை நிறுத்திக் கொண்டேன். இல்லையென்றால் ராஜஸ்தான் அனுப்பியிருப்பார்கள். 

அடுத்த ஆறுவருடம் சாமி, பக்தி, கோவில், ஆன்மீகம், சிந்தனை, குழப்பம், என எதுவும் என்னைத் தாக்காதவாறு கல்வியும் நண்பர்களும் தோழிகளும் காதலியும் பியரும் பார்த்துக் கொண்டார்கள். 

இருபத்தோரு வயதில் Prodigal son ஐப் போலத்தான் என் சகோதரனிடம் திரும்பி வந்தேன். ஓசூர் நகரம் அக்காலகட்டத்தில் எனக்கான எல்லாவற்றையும் கொண்டிருந்தது. தனிமை வீடும், ஏராளமான புத்தகங்களும், பிடித்த வேலையுமாய் அந்நாட்கள் நகர்ந்தன. இலக்கியத்தோடு ஓஷோவும் புத்தகங்கள், கேசட்டுகள் வழியாய் அறிமுகமானார். தமிழில் வந்த என் இளைமைக்கால நினைவுகள், புல் தாமாகவே வளர்கிறது, வெற்றுப்படகு போன்ற புத்தகங்கள் ஓஷோவின் மீது பிடித்தத்தை ஏற்படுத்தின. The new man கேசட்டை திரும்பத் திரும்பக் கேட்டுத் தேய்த்தேன். Individuality, Responsibility, Freedom குறித்தெல்லாம் மிகப் பெரிய திறப்பு ஒன்று எனக்குள் நிகழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக திருச்சி, கோவை, போபால், குச்வாடா என பயணித்ததும் Swami Prem aika எனப் பெயர் வந்ததும் போதியமட்டில் இதே பக்கங்களில் புனைவாகவும் கட்டுரைகளாகவும் எழுதித் தீர்த்திருக்கிறேன். இதனோடே வேதாத்திரி மகரிஷி கும்பலோடும் நெருக்கமான தொடர்பிருந்தது. ஓசூரில் மனவளக் கலை மைய நண்பர்களோடு தினம் உடற்பயிற்சி, தியானம், அவ்வப்போது கோவில்களுக்குப் பயணம் என வேறொரு பாதையில் உற்சாகமாய் பயணித்துக் கொண்டிருந்தேன். உலக சமாதானத்திற்கு தியானம் செய்வது, மழை வேண்டி தியானம் செய்வது போன்றவற்றையெல்லாம் மிகுந்த ஆத்மார்த்தமாக செய்து கொண்டிருந்தேன். எப்படி ஓஷோ,வேதாத்திரி என்ற இரு வேறு துருவங்களையும் அப்போது ஒன்றாகப் பார்க்கமுடிந்தது என்ற ஆச்சரியம் எனக்கு இப்போதும் உண்டு. சில நேரங்களில் அப்போது மிகத் தூய்மையான மனதோடு இருந்ததாக நினைத்துக் கொள்வேன்.                               

ஒரு நாள் என் நண்பன் ஒரு ஜோசியரைப் பார்க்க அழைத்துச் சென்றிருந்தான். ஒரு தாளில் என் பெயர், பிறந்த நாள், நேரம் எல்லாவற்றையும் எழுதிக் கொடுத்தேன். சில மணி நேரங்கள் கழித்து என்னை உள்ளே கூப்பிட்டார். எனக்கு அப்போது நீளத் தாடி வைத்த யாரைப் பார்த்தாலும் ஓஷோ போல இருக்கும். அவரும் நீளத்தாடி வைத்திருந்தார். அவர் சொன்னது 

1. உனக்கு உன் குலதெய்வமே தெரியாது. தேடி கண்டுபிடி. குடும்பத்தோடு போய் கும்பிடு 

2. ஈரோடு தாண்டி கொடுமுடிக்கு போ. பவானி ஆற்றில் வேட்டியோடு இறங்கி குளித்துவிட்டு வேட்டியை ஆற்றோடு விட்டுவிட்டு அரசமரத்தடி பிள்ளையாரை கும்பிடு 

3. நங்கநல்லூர் ஆஞ்சநேயரைப் போய் கும்பிடு 

அடுத்த வாரமே ஊருக்குக் கிளம்பிப்போய் நம் குலசாமி எதென வீட்டில் கேட்டேன். அய்யனார் என்றார்கள். "எங்கிருக்கிறது கோவில்?"  "பெண்ணாத்தூர்ல எங்கயோ.." என விட்டேத்தியாய் பதில் வந்தது. அப்பாவை கழுவி ஊற்றிவிட்டு பெண்ணாத்தூர் போய் என் தாத்தாவின் சகோதரரைக் கண்டுபிடித்து அவர் மூலமாய் அந்த கோவிலையும் கண்டுபிடித்தேன். அது கோவில் அல்ல நுணாமரத்தடியில் மண்ணில் ஊன்றப்பட்ட ஒரு மைல்கல். அவ்வளவுதான். பிறகு எல்லோரையும் கூட்டிக் கொண்டு போனேன். அடுத்த வாரமே கொடுமுடி. நல்லவேளையாக பவானியில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. இடுப்பளவு ஆழத்தில் அந்த அதிகாலையில் இதெல்லாம் என்ன பைத்தியக்காரத்தனம்? என்ற அவ நம்பிக்கையோட வேட்டியை ஆற்றில் விட்டு வந்தேன். அதற்கடுத்த வாரம் சென்னை. சென்னை பால்ய நண்பர்கள் குழாம் போதையோடு வரவேற்று மிகுபோதையோடே வழியணுப்பியது. ஒரு மாதத்தில் பொட்டியை கட்டிக் கொண்டு சென்னை வந்துவிட்டேன். வேறுவேலை. இப்போது நான் இங்கிருக்க காரணமான வேலை. அபாரமான தற்செயலாகக் கூட இருக்கலாம். ஆனால்.. ஆனால்.. 

சென்னை வாழ்க்கை ஓசூர் வாழ்க்கையைப் போல தூய்மையானதாக இல்லை. மீண்டும் பெண்கள், குடி, நண்பர்கள் குழாம் என அல்லோகலப்பட்டது. ஒரு திடீர் வெறுமையில் பத்து நாட்கள் தொடர்ச்சியாய் விடுமுறை எடுத்துக் கொண்டு திருமுடிவாக்கம் விபாசனா மையத்திற்குப் போய்விட்டேன். வழக்கம்போல உபயம் என் சகோதரர்தான். மொழியை எல்லா வகையிலும் துறந்துவிட்டு மெளனத்திற்குள் செல்வது எனக்கொரு பிரச்சினையாக இல்லை. சொல்லப்போனால் மிகுந்த மகிழ்ச்சியோடே மெளனத்திற்குள் புக முடிந்தது. முதல் மூன்று நாட்கள் கடும் பசியில் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தாலும் நான்காம் நாள் பழகிவிட்டது. நாள் முழுக்க சுவாசத்தையும், புலன்களையும் வேறொரு ஆளாய் பார்த்துக்கொண்டிருந்தது தனி அனுபவம். ஆறாம் நாளோ ஏழாம் நாளோ எனக்கு Exhibitionist என்கிற புதிய சொல்லும், ஒரு மனிதனும் அறிமுகமானார்கள். 

மாலை ஆசிரமத்தை சுற்றி ஒரு நடை போவது எல்லோருடைய வழக்கமாகவும் இருந்தது. சூரியன் மறைந்துபோன அந்தி. அப்போது அங்கு கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்தன. எங்களோடு பயிற்சிக்கு வந்த ஒரு கண்ணாடி அணிந்த குண்டு இளைஞன் கட்டிடத்தின் மீதேறி நின்றுகொண்டிருந்தான். இவன் ஏன் மேலே ஏறி நிற்கிறான்? என குழப்பத்தோடே அவனைப் பார்த்தபடி நடந்துகொண்டிருந்தோம். எங்களோடு சில வெளிநாட்டுப் பெண்களும் பயிற்சிக்கு வந்திருந்தனர். இரண்டு அழகான பெண்கள். அந்தப் பயல் மேலே நின்றுகொண்டு அவ்விரு பெண்களையும் பார்த்தபடியே தன் பேண்ட் ஜிப்பை அவிழ்த்து… அதிர்ச்சியில் உறைந்தேன். எல்லோருமே பார்த்துவிட்டு தலையை குனிந்துகொண்டோம். விஷயம் நிர்வாகிகளுக்குப் பரவி அவனை வெளியேற்றிவிட்டார்கள். தனிப்பட்ட முறையில் என்னை இந்நிகழ்வு பாதித்தது. இரான் சினிமா, ரஷ்ய இலக்கியம், ஆங்கிலத் துப்பறியும் நாவல்கள் தாண்டி பெரியதாய் என் உலகம் விரிவடைந்திராத காலகட்டம் அது. காமமும் மனப்பிறழ்வும் அத்தனை நெருக்கமாக இருக்கமுடியுமா? என்கிற உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது.


அடுத்த நாள் மன ஒருமை கைவிட்டுப் போனது. போலவே சிலருக்கும். எல்லோருமாய் கிசுகிசுப்பாய் பேச ஆரம்பித்துக் கொண்டோம். மாலையில் மதிலேறி குதித்து வெகுதூரம் நடந்து போய் சிகரெட் பிடித்தோம். ஒன்பதாவது நாளைக் கடக்க பெரும் சிரமப்பட வேண்டியிருந்தது. பத்தாம் நாள் அடித்துப் பிடித்து ஆசிரமத்தை விட்டு வெளியேறிஒரு வழியாய் பஸ்ஸை பிடித்து அலைபேசியில் நண்பர்களை பிடித்து நேரா பாருக்கு வந்துருங்கடா” எனச் சொல்லிவிட்டு வழக்கமாய் செல்லும் பாரில் போய் விழுந்தேன்.

ஆன்மீகத்தின் வழியாய் தன்னை அறிவது ஒரு குழப்பமான சித்திரமாகவே எனக்குள் இன்னும் இருந்துவருகிறது. இன்னும் சரியாகச் சொல்லப்போனால் இந்தக் கட்டுரையில் இழையோடியிருக்கும் விடலைத் தனம்தான் தன்னையறிதலில் என் நிலை. திருவண்ணாமலையில் சில இளம் சாமியார்களை சந்தித்துப் பேசியிருக்கிறேன். எல்லாம் உதறி தனியாய் வந்து அண்ணாமலையைப் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தத்துவார்த்தமாகப் பேசினாலும் அவர்களும் சராசரி லெளகீக வாழ்க்கையை இரகசியமா வாழ்கிறார்கள். சரியாய் சொல்லப்போனால் இன்னும் வசதியான லவ்கீகம். வாழ்ந்துவிட்டுத்தான் போகட்டுமே என்கிற மனப்பான்மைதான் என்னிடம் எப்போதுமிருக்கிறது. அந்த லெளகீக வாழ்வு நூறு ஏக்கர் நிலம்கோடிகள்ரஞ்சிதாபோலீஸ்ஜீப்பில் புளகாங்கிதமாய் ஏறுவதென விரிவடையும் போதுதான் பொறாமை எட்டிப் பார்க்கிறது. ஸ்ரீதர் கிண்டலடித்திருக்கும் இக்கட்டுரைதான் இந்நினைவுகளைக் கிளறிப்போட்டது. நித்தியை விஞ்சும் சாமியாராகும் எல்லாத் தகுதிகளும் என்னிடம் உண்டு. ஆன்மீகம்இலக்கியம்,அரசியல்வரலாறுபுவியியல்,சினிமா என எல்லாவற்றைக் குறித்தும் ஆழமாய் பேசுவது போன்ற பாவணையை எளிதில் உருவாக்கிவிடுவேன். திருவண்ணமலையின் அடுத்த நித்தியாய் நான் வரவேண்டும் என நீங்கள் அனைவரும் உளமாற வேண்டிக்கொள்ளுங்கள். அதுவே இப்போதைக்குச் செய்ய வேண்டியது.



Wednesday, February 27, 2013

கடைசி நாளில் மழை... 2


திருச்சூரிலிருந்து குருவாயூர் செல்லும் சாலையில் 13 ஆம் கிமீ யில் விலகி உள்நுழைந்த வாகனம் அடர்ந்த இருளில் ஒற்றைப் பாதையில் முண்டூர் கிராமத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. கேரளம் எட்டுமணிக்கெல்லாம் தூங்கிவிடுகிறது. பத்துமணிக்கு சாலையில் ஒன்றும் இல்லை. அந்த சாலை இருப்பதே கூட காலையில்தான் தெரிந்துகொள்ள முடிகிறது. பல வளைவுகளுக்குப் பிறகு ஒரு பெரிய தோப்பை வந்தடைந்தோம். உயர்ந்து வளர்ந்திருந்த மரங்களுக்கு நடுவில் இரண்டு வீடுகள். கேரளப் பாரம்பரிய வீடுகளில் ஒன்றான நாலுகட்டில் வீடொன்றும் மண்ணால் மட்டுமே கட்டப்பட்ட கெஸ்ட் அவுஸ் ஒன்றும் எங்களுக்காய் காத்துக் கொண்டிருந்தது. வீட்டிற்கு சொந்தக்காரரான திவாகரன் திருவண்ணாமலையில் ஜெயஸ்ரீ வீட்டில் இருந்தார். அவர் மகன் தன் நண்பர்கள் சகிதமாய் எங்களை வரவேற்றான். அந்த இரவில் பயணக்களைப்பையும் மீறி அடுத்த இரண்டு மணி நேரம் நாங்கள் யாருமே தூங்கவில்லை. அந்த இரண்டு வீடுகளின் நேர்த்தியை அங்குலம் அங்குலமாய் சிலாகித்துக் கொண்டிருந்தோம். , முற்றத்து மாடம், கல்தூண்கள் குறிப்பாய் அந்த மண்வீடு பற்றி திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருந்தோம். மண் வீட்டை எப்படிக் கட்டினோம் எவ்விதம் இவ்வளவு அழகாய் வந்தது என்பதை பத்தாவது முறையாக ஒரே பதிலை சலிக்காமல் ஆர்வமுடன் அப்பதின்மன் எங்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தான்.


காலைச் சூரியன் தான் அந்த தோப்பின், அந்தப் பழைய வீட்டின் முழு அழகையும் எங்களுக்கு உணர்த்தியது. அந்த வீட்டின் மாடியின் மீது நின்று கொண்டு ஜெயஸ்ரீ தந்த தேநீருடன் மரங்களுக்கு இடையில் மேலெழும் சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்தோம். பவா அதிகாலையிலேயே வெட்டுக்கல் குறித்த ஆராய்ச்சியில் இறங்கிவிட்டிருந்தார். கேரளத்தின் அழகான வீடுகள் எல்லாமும் வெட்டுக்கல்லில் தான் கட்டப்படுகின்றன. அல்லது வெட்டுக்கல்லால் கட்டப்படும் எல்லா வீடுகளும் தனித்த அழகைக் கொண்டிருக்கின்றன. இக்கற்கள் எங்கே கிடைக்கும் எப்படித் திருவண்ணாமலைக்குக் கொண்டுபோவது என கேட்கப்போன பவா தன் வாசகரோடு திரும்பவந்தார். தேசாபிமானியில் பவா எழுதிய தொடரைப் படித்திருந்த ஒரு முதிர்ந்த வாசகர் பவாவைக் கண்டுகொண்டு அவரோடு பேசிக்கொண்டே வீடுவந்தார். அந்த வீட்டின் சூழலோ என்னவோ எல்லாருமே நிறைவாய் பேசிக்கொண்டிருந்தோம். தூண்களுக்கு சமீபமாய் அமர்ந்துகொண்டு சந்துரு தோழர் கோழிச் சண்டைக் கதைகளை விலாவரியாய் சொல்லிக் கொண்டிருந்தார். அது ஆடுகளம் படத்தை ஒட்டிய நுட்பமான விவரிப்பாய் நீண்டு கொண்டிருந்தது. பவாவின் முதிர் வாசகர் எங்களை அவர் வீட்டிற்கு அழைத்தார். தன் சகோதரனும் மலையாளத்தில் எழுதுபவர்தான் என்றார்.

எல்லோருமாய் கிளம்பி அவர் வீட்டிற்குப் போனோம். மிகச் சாதாரணமான அந்த வீட்டு முகப்பைத் தாண்டி உள்நுழைந்தோம். பிரதான வீட்டின் முற்றத்தில் சாய்வு இருக்கைகளில் இரண்டு பெரியவர்கள் அமர்ந்திருந்தனர். வாரப்பத்திரிக்கைகளும் தினப்பத்திரிக்கைகளும் இருக்கைகளுக்கு முன்பிருந்த சிறு மேசை மீது கிடந்தன. அந்த எழுத்தாளர் எழுந்து எங்களை வரவேற்றார். தன் பெயர் மாடாம்பு குஞ்சுகுட்டன்  என அறிமுகப்படுத்திக்கொண்டார். அதன் பிறகு அவர் சொன்ன செய்திகள் எல்லாமும் எங்களை வியப்பில் ஆழ்த்தின. மலையாளத்தில் இருபது நாவல்களை எழுதியுள்ளார். கேரள சாகித்ய அகடாமி விருது பெற்றவர். தவிர ஜெயராஜ் இயக்கத்தில் வெளிவந்த கருணம் படத்தின் திரைக்கதையை எழுதியவர். அதற்காக தேசிய விருது பெற்றவர். அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போதே அருகாமையிலிருந்த வீட்டின் பழமை எங்களை ஈர்த்தது. ஆம் 300 வருடப் பழமையான தரவாடு அது. ஒரு வீடு முன்னூறு வருடங்கள் இருக்கமுடியும் என்பதே திகைப்பாக இருந்தது. அவ்வப்போது அவ்வீட்டைப் பழுது பார்த்துக் கொண்டு அதன் பழமை சிதையாமல் பார்த்துக் கொள்கிறார்கள். பிரதான வீட்டில்தான் நூலகம் இருந்தது. குறுகலான மண்படிகள் வழியாய் அவ் வீட்டின் முதல் தளத்தை அடைந்தோம். அவரின் மிகப் பழைய விஸ்தாரமான நூலகம் எங்களை வரவேற்றது. ஏராளமான புத்தகங்கள் மிகப் பழைய வாசனையுடன் உயிர்த்திருந்தன. அவர் பயன்படுத்திய பேனாக்கள், இங்க்புட்டிகள், எல்லாமும் காலத்தை அழித்துக் கொண்டு அப்படியே இருந்தன. இந்தப் பயணத்தின் மொத்த உன்னதத்தையும் அந்த நூலகம் எங்களுக்குத் தந்துவிட்டது. பல ஆங்கிலப் புத்தகங்கள் இருந்தன. சமகாலப் படைப்புகளையும் பார்க்க முடிந்தது. எழுத்தாளரின் தந்தை யானை வைத்தியம் அறிந்தவர். அந்தப்பகுதியில் பிரபலமானவர். சுவரில் மாட்டப்பட்டிருந்த அவரின் புகைப்படங்கள் இன்னும் இன்னும் பழமையைக் கண்முன் கொண்டுவந்தன.


ஒரு மிகப் பழைய வீட்டில் மூன்று பெரியவர்கள் முற்றத்து சாய்விருக்கைகளில் அமர்ந்துகொண்டு யாருக்காவது காத்துக் கிடக்கும் காட்சி எனக்குள் ஒரு ஓவியம்போல படிந்துபோனது. வெளியேறவே மனமில்லாமல்தான் அவ்வீட்டை விட்டு வெளியேறி விடை பெற்றோம்.

அதிகாலைக் குளிரை சுமந்துகொண்டு வீடுவந்தேன். போர்வைக்குள் தூங்கிக் கொண்டிருந்த பெரியவனை மெல்ல அணைத்தபோது கண்ணைத் திறக்காமல் கழுத்தைச் சுற்றிக் கட்டிக்கொண்டான். எங்கபா போன? என்றான். கடந்த இரண்டு வருடத்தில் அவனை விட்டுப் பிரிந்திருந்த முதல் மூன்றுநாட்கள். இடையிடையே என்னைக் கேட்டு அழுததாக சொல்லிக் கொண்டிருந்தாள். அடுத்த ஒரு வாரத்திற்கு பயல்களை விட்டு நகரவில்லை.

புத்தகக் கண்காட்சியை ஒட்டி சென்னைக்குப் போனேன். என்னுடைய பால்ய நண்பர்களில் பெரும்பாலானோர் சென்னையில்தான் வாசம். ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் அவர்களின் வீடுகளுக்குப் போகாதது குறித்து குறைபட்டுக் கொள்வார்கள். அதையும் நிவர்த்தி செய்துவிடும்பொருட்டு ஒரு நாளைக்கு ஒரு நண்பன் வீடு எனப் பிரித்துக் கொண்டு தங்கினேன். ஏழு வயதிலிருந்து நாங்கள் நண்பர்கள். இன்று வரை எங்கள் நட்பில் எந்தக் குறையுமில்லை. எங்களை இணைத்திருந்த பால்ய நட்புச் சங்கிலி கண்ணாடியினால் ஆனது. அக்கண்ணாடியில் சதா மது நிரம்பி வழிந்து கொண்டிருக்கும். ஆக எங்கள் இரவுகள் முழுவதும் மதுவால் நிரம்பின.  இதனால் சென்னையில் சந்திக்க விரும்பியிருந்த இணைய நண்பர்கள் ஒருவரையும் தொலைபேசியில் கூட அழைக்க முடியாமல் போனது. ஒரு மதியமும் இன்னொரு மாலையும் புத்தகக் கண்காட்சிக்குப் போக வாய்த்தது. எழுத ஆரம்பித்து அதன் மூலமாய் நட்புத் தொடர்புகள் ஏற்பட்ட புதிதிலிருந்தே புத்தக கண்காட்சியின் மீது ஒரு ஏக்கம் இருந்தது. அங்கு நடக்கும் சந்திப்புகள் குறித்தெல்லாம் வாசிக்கும் ஒவ்வொரு முறையும் அடுத்த ஆண்டு நாமும் அவசியம் போகவேண்டும் என நினைத்துக் கொள்வதுண்டு. அச்சில் எழுத்து வந்தபோது இந்த ஆர்வம் இன்னும் இரட்டிப்பானது. ஆனால் நேரில் அப்படி எதுவுமே இல்லை. கற்பனை தான் இருப்பதிலேயே மிக உயர்ந்த விஷயம். கற்பனையை விட இன்பம் தரக்கூடிய இன்னொன்று கிடையவே கிடையாது. கண்காட்சிக்குப் போன இரண்டு நாட்களில் நண்பர்களை சந்திக்க முடிந்ததுதான் ஒரே ஆறுதல். சந்தித்த நண்பர்களில் வாசுவைத் தவிர அனைவரையுமே முதன்முறையாய் சந்தித்தேன். மிஷ்கின் அலுவலகத்தில் ஒரு நாள் இரவு போனது.

திருவண்ணாமலை வந்ததும் மீண்டும் அடுத்த நிகழ்விற்கு தயாரானோம். எஸ்கேபி கல்லூரியில் இரண்டு நாட்கள் திரைப்பட விழா

- மேலும்

Monday, February 25, 2013

கடைசி நாளில் மழை பெய்தது - 1

விடுமுறைக்குப் போவதற்கு முன்பு உற்சாகம் தரக் கூடியதாய் இருந்த எண்ணங்களில் முதலாவது மழை. இருக்கப்போகும் நாற்பது நாட்களில் எப்படியும் நான்கைந்து நாட்களாவது மழை இருக்கும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் கடைசி நாளில் கிளம்புவதற்கு ஆறு மணிநேரங்களுக்கு முன்புதான் மழையை தரிசிக்க முடிந்தது. பயல்களாகிய நாங்கள் பெரியவர்களின் பாதுகாப்பு வேலிகளை உடைத்து மழையில் நனைந்து குதூகலித்தோம். திருவண்ணாமலையிலிருந்த ஒவ்வொரு நாளுமே புதிதாகத்தான் இருந்தது. எதிர்பார்த்திராத பல விஷயங்கள் நடந்தன. ஒவ்வொரு நாளுமே ஒரு வியப்பைத் தக்க வைத்திருந்தது. பவா வும் ஷைலஜாக்காவும் ஒரு நாளை அப்படியே சாதாரணமாய் கடந்து போய் விட அனுமதிக்கவே இல்லை. ஏராளமான நிகழ்ச்சிகள், நிகழ்வுகள், புதுப்புது மனிதர்கள் என ஒரு நொடி கூட சலிப்போ அலுப்போ இல்லாமல்தான் கடந்தது.

 ஊருக்குப் போய் சேர்ந்த அடுத்த நாள் மதியவாக்கில் வம்சிக்குப் போனேன். என் வருகையை யாரிடமும் தெரிவித்திருக்கவில்லை. பவா வைக் கண்டதும் கட்டியணைத்துக் கொண்டேன். எல்லோரிடமும் ஒரு உற்சாகம் தொற்றிக் கொண்டது. முருகன் காரில் எல்லோருமாய் கிளம்பி ஒரு நிச்சயதார்த்த விழாவிற்குப் போய் பிரியாணி சாப்பிட்டோம். மலையைப் பின்புறமாக சுற்றிக்கொண்டு சமுத்திர ஏரிக்கரையை ஒட்டியிருக்கும் ஆனந்த் காயத்ரி வசிக்கும் நிலத்திற்குப் போனோம். அங்கங்கு சிறுசிறு குடில்கள், மண்ணால் செய்த உருவபொம்மைகள், நிறைய பூச்செடிகள், பழமரங்கள் என இரண்டாண்டுகளுக்கு முன்பு பார்த்த அந்த வயல்வெளி ஒரு சின்னஞ்சிறு சோலையாக மாறியிருந்தது. ஒரு பெரிய கொட்டகைக்கு அடியில் ஆனந்தும் காயத்ரியும் ஆதித்யாவும் பிற நண்பர்களோடு குழுவாய் சமைத்து, மண்தரையில் அமர்ந்து அந்த எளிய உணவை சாப்பிட்டுக் கொண்டு ஆனந்தமாய் வாழ்ந்துவிடுகிறார்கள். என்னுடைய வழக்கமான வீடு பற்றிய கற்பிதங்கள் ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனது. ஒரு ஓலைக் கொட்டகைக்குள் அமர்ந்துகொண்டு, இடையறாது வீசிக்கொண்டிருக்கும் காற்றின் தழுவலை அனுமதித்தபடி, கம்பீரமாய் அமர்ந்திருக்கும் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் உன்னதம் என்பதை மீண்டும் எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். என்னுடைய வருங்காலம் பற்றிய கனவு கூட இதுமட்டுமேதான். இதை எவ்வளவு சீக்கிரம் அடைகிறேன் என்பதுதான் என் முன்னால் வைக்கப்பட்டிருக்கும் மிகப் பெரிய சவால். எனக்காக இங்கே ஒரு துண்டு நிலம் தன் எல்லா அற்புதங்களையும் உள்ளடக்கிக்கொண்டு காத்திருக்கிறது என்பதை மந்திரம்போல் உச்சரித்துக் கொண்டேன்.

 இரண்டு நாட்கள் கழித்து கேரளாவிற்குப் போனோம். ஒரு டெம்போ ட்ராவலரில் பவா மற்றும் ஜெயஸ்ரீ குடும்பத்தாருடன் பயணம். பவாவிற்கு உணவு குறித்த பிரக்ஞை அதிகம். முதல்நாளே அரூர் ஹோட்டலுக்கு போன்செய்து இவ்வளவு பேர் வரப்போகிறோம் எல்லாமும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள் என்கிற தகவலைத் தந்துவிட்டிருந்தார். நாங்கள் போய்சேர்ந்த போது எல்லாமும் இருந்தது. ஒரு முழு ஆட்டின் சகல பாகங்களையும் தனித்தனியே விதம்விதமாய் சமைத்துத் தருகிறார்கள். ருசியும் அற்புதம். அந்தக் காலை வேளையில் வயிறு புடைக்க சாப்பிடமுடிந்தது. திருப்பூரை நெருங்க நெருங்க அரங்கசாமி யிடமிருந்து தொடர் அழைப்புகள். மதிய உணவை அவருடனும் அவர் பயல்களுடனும் வைத்துக் கொண்டோம். கேரள எல்லையில் ஒரு சிற்றூரில் பவாவின் வாசக நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த மாலைச் சந்திப்பில் கலந்துகொண்டோம். பவா பாவண்ணனின் பயணம் கதையையும் ஜெமோவின் ஊமைச் செந்நாய் கதையையும் சொல்லி முடித்தபோதுதான் எங்களை ஏற்கனவே இரவு சூழ்ந்திருந்ததை உணர்ந்தோம். ராத் தங்கல் அருண் வீட்டில். ஊர் பெயர்களெல்லாம் மறந்துவிட்டேன். வளைந்து நெளிந்து போகும் மங்கை மேகக் கூந்தல் பாதைகள். தெருவிளக்குகள் ஏதுமற்ற அசல் இருள் பயண முடிவில் ஒரு தன்னந்தனி வீட்டை அடைந்தோம். எங்களுக்காக காத்துக் கொண்டிருந்த நட்பின் இணக்கங்கள் நல் உணர்வைத் தந்தன.

  மீண்டும் காலையில் வளைந்து நெளிந்து செல்லும் அதே பாதைகளில் பயணம். வழிநெடுக பசுமையின் ஊழித் தாண்டவத்தைப் பார்த்துக் கொண்டே பயணித்தோம். பவாவின் நண்பர் அருணின் இரப்பர் தோட்டங்களை மலையேறிப் பார்த்தோம். மாலை போர்ட்கொச்சினில் நடைபெற்றுக் கொண்டிருந்த பினாலே வைப் பார்க்கப் போனோம். கண்களை விரிய வைத்த நிகழ்வு அது. உலகின் பல பாகங்களிலிருந்த படைப்பாளிகளின் பங்களிப்புகள் இடம்பெற்றிருந்தன மாயாவின் படைப்புகளை கண்டேன். அந்த இடமே எனக்கு மிகவும் பிடித்துப் போனது. மிகப் பழைய பிரெஞ்சுக் கட்டிடங்கள். தொட்டடுத்து கடல். புகைப்படங்கள், ஓவியங்கள், அசைபடங்கள், டாக்குமெண்டரிகள், நுண்கலைகள் என சகலமும் ஒரே இடத்தில் காணக் கிடைத்தன. வல்சனை சந்தித்துப் பேசினோம். அவர் காட்சிக்கு வைத்திருந்தவற்றைப் பார்த்து வியந்தோம். தமிழ்நாட்டில் இப்படி ஒரு நிகழ்வு நடக்க வாய்ப்பே இல்லை என மிகை உணர்ச்சி ததும்ப ஷைலஜாக்காவிடம் சொன்னேன்.

  ஃபோர்ட்கொச்சினின் Ambiance எனக்குப் பிடித்திருந்தது. கிட்டத்தட்ட பாண்டிச்சேரியின் வார்ப்பு. இந்த பிரெஞ்சுக்கார கிராதகர்கள் எங்கே போனாலும் தமக்கான தனித்தன்மையோடுதான் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனந்தின் சகோதரி ஏற்பாடு செய்திருந்த தங்குமிடம் எங்களுக்கு உவப்பில்லாமல் போய்விட்டது. தனிப்பட்ட முறையில் என்னால் எங்கு வேண்டுமானாலும் தங்கிக் கொள்ள முடியும். இந்த ஆறுவருட அயல்வாழ்வில் என் தோல் தடித்துவிட்டது. ஆனால் பவா மிகத் தூய்மையான திருவண்ணாமலைவாசி. அவரால் ஒருபோதும் நகர நெருக்கடிக்கு தம்மை ஒப்புக்கொடுத்துவிட முடியாது. நண்பர்களைத் தொடர்புகொண்டு திருச்சூரை அடுத்திருக்கும் ஒரு நண்பர் வீட்டில் தங்க முடிவு செய்தோம். நாங்கள் எடுத்த முடிவின் மகத்துவம் குறித்து அப்போது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

 மேலும்

Featured Post

test

 test