
குவாண்டின் டராண்டினோவின் சமீபத்திய படமான இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் பார்த்துவிட்டு வெளியில் வந்த போது புனைவின் அதிகபட்ச சாத்தியங்களில் ஒன்று என நினைத்துக் கொண்டேன். இதே மாதிரி உணர்வைத்தான் ஆயிரத்தின் ஒருவனும் தந்தது. வரலாற்றை தம் வசதிக்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்வது அல்லது தம் கதைக்குள் வரலாறை உலவவிடுவது போன்றவையெல்லாம் புனைக்கதையாளனின் தந்திரமாய்த்தான் இருக்க முடியும். பார்வையாளன் அல்லது வாசகனுக்கான புதிய அனுபவத்தினை தருவதின் நோக்கம் மட்டுமே இவையென்பதால் fantasy எனப் பெயரிட்டுக் கொண்டு இம்மாதிரி சிலத் திரிபுகளை அனுபவிப்பதில் நமது தமிழ் சினிமாவின் அறம் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாதுதான்.
இயக்குனர் செல்வராகவன் தமிழின் மிக சொற்பமான நம்பிக்கை. கதாநாயகர்களின் படம் என்கிற நெடுங்கால அடையாளத்தை இயக்குனரின் படமாக மாற்றிய மிகச் சில இயக்குனர்களில் ஒருவர். சற்றே மந்தமான நாயகர்கள், புத்திசாலிப் பெண்கள், வெளிப்படைக் காமம், வன்முறையின் பரவசம், விளிம்பு நிலை வாழ்வு, ஆண் மய்ய பிம்பங்களின் தகர்வுகள் இவற்றையெல்லாம் தமிழ் திரையில் சாத்தியமாக்கியவர். கிட்டத் தட்ட இதே கூறுகளைக் கொண்ட இன்னொரு படம்தான் ஆயிரத்தில் ஒருவன். இவரது எல்லா படங்களிலும் வரும் வழக்கமான நெருப்பு நடனத்திற்கு 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ மன்னனான பார்த்திபனும் சம காலத்தைச் சேர்ந்த கார்த்தியும் நடனமாடும்போது நான் புனைவின் உச்ச பட்ச சாத்தியங்களை கொஞ்சம் தள்ளி வைத்துக் கொண்டேன்.
வரலாற்றையும் சமகாலத்தையும் இணைக்கும் துணிச்சல் அசாத்தியமானது. இம்மாதிரியான ஒரு துணிச்சல் நம்மவரிடையே இருக்கிறது என்பதில் இலேசான பெருமிதமும் எனக்கு ஏற்பட்டது. சினிமா இரசிகன் என்கிற முறையில் தமிழ் சினிமாவின் அபத்தங்களின் மீதும் நாயக பிம்பங்களின் மீதும் கடுமையான கோபங்களும் எரிச்சலும் ஆழ்மனதில் விரவியிருக்கின்றன. இம்மாதிரியான சில முயற்சிகளே மிகப் பெரும் கொண்டாட்ட மனநிலையைத் தந்து விடுவதற்கான காரணம் பெருகிப்போன அபத்தங்கள்தாம் என்றால் அது மிகையில்லை.
சிறுவர் படக்கதைகளிலும் மாயாஜாலக் கதைகளிலும் மூழ்கிக் கிடந்த என் சிறுபிராயத்து உற்சாகங்களை இப்படத்தின் முதல் பாதியில் மீட்டெடுத்தேன். விட்டலாச்சார்யா காலத்திலிருந்தே நமது சூழலில் ஏழு கண்ணிகள் பாதுகாவலுடன் உயிர் ஒன்று உலவிக் கொண்டிருக்கிறதுதான் என்றாலும் அதைக் கச்சிதமாகவும் பிரம்மாண்டமாகவும் பார்க்க மிகவும் பிடித்திருந்தது. இரு கன்னியருடன் உயிரைப் பணயம் வைத்து ஏழு கண்ணிகளை கடந்த பின்பு தென்படும் சிதிலமான புராதண நகரம் சுவாரசியத்தின் துளியைப் பார்வையாளனுக்குப் பருகத் தருகிறது. ஒட்டகக் கறி மற்றும் மதுவினோடு கச்சிதமான பாடலும் சேர்ந்து கொள்ள மரண பயத்திலிருந்தும் நெடிய பசியிலிருந்தும் மீண்ட மன நிலையை பார்வையாளனும் அடைகிறான். திடீரென கேட்கும் பெரும் சப்தத்தினால் மூவரும் மனம் பிறழ்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும் மரணத்தை விளையாட்டாக்குவதும் இதுவரைக்குமான தமிழ் திரையின் முதல் காட்சியின்பக் காட்சிகள். மிகத் தட்டையாக சொல்லப்போனால் இந்த ஒரு காட்சியினுக்காகவே இந்தப் படத்தை மிகத் தாரளமாகக் கொண்டாடலாம்.

மிக அடர்த்தியான இரண்டாம் பகுதி பார்வையாளனை வேறொரு திசையில் பயணிக்க வைக்கிறது. வரலாறையும் நிகழையும் ஒன்றுடன் ஒன்று பொருந்துவதில் தவிர்க்க முடியாத நடைமுறைச் சிக்கல்கள் இடை இடையே தலை காட்டுகிறதுதாம் என்றாலும். மக்களின் மொழி அரச மொழி இவற்றில் காண்பிக்கப் பட்டிருக்கும் வித்தியாசங்கள், இரும்புக் குண்டு சகிதமாய் அடிமைகளை கொன்று குவிக்கும் மல்லனுடனான யுத்தக் காட்சி, வசீகரமும் அடர்த்தியான நஞ்சும் கொண்ட நாகத்தினை நினைவூட்டும்படியான ரீமாசென்னின் கதாபாத்திரம் மற்றும் எம்மாதிரியான வாழ்வியல் சூழலிலும் அரசர்கள் சுகபோகமாகவே இருந்தனர் என்பதைக் காட்சிப்படுத்தியிருப்பதும் அதிமாயா நெருடல்களை குறைக்க உதவியிருக்கின்றன.
செல்வா, யுவன், அரவிந்த் கிருஷ்ணா கூட்டணி உடைந்த பின்னர் வரும் முதல் படமென்பதால் தரம் குறித்தான சந்தேகங்கள் எனக்கிருந்தன. ட்ரெய்லரில் பார்த்திருந்த உன் மேல ஆசதான் பாடலெல்லாம் இம்மாதிரியான படத்தினுக்கு தேவையா என்கிற வருத்தமுமிருந்தது. ஆனால் படம் எந்த வித நெருடல்களையும் ஏற்படுத்தவில்லை மேலதிகமாய் கொண்டாட்ட மனநிலையையும் தந்தது. ஜி.வி. பிரகாஷின் இசையனுபவத்தைப் பொறுத்தவரை இம்மாதிரியான படத்தின் பின்னணி இசையென்பது குருவி தலையில் பனங்காய்தான். இசை படத்தினுக்கு உறுத்தலில்லாமல் இருந்ததே மிகப் பெரிய சாதனைதாம். ராம்ஜியின் ஒளிப்பதிவும் கச்சிதம்.
குவாண்டின் டராண்டினோவின் அனுகுமுறையே செல்வராகவனின் அனுகுமுறையாகவுமிருக்கிறது. அதிகாரத்தின் வரலாற்றை அதற்கு இணையான அல்லது அதைவிட பலம் வாய்ந்த அதிகாரத்தின் பக்கம் நின்று புனைவுகளின் துணைக் கொண்டு சிதைப்பதைத்தான் செலவராகவனும் நிகழ்த்தியிருக்கிறார். எல்லா அதிகாரங்களும் தின்று வளர்வது சாமன்யர்களின் உடல்களாக இருக்கிறதென்பதையும் எல்லா அதிகாரக் குறிகளும் நீள்வது உயிரை மட்டும் கொண்டிருக்கும் நைந்துபோன எம் பெண்டிர்களையும் சிறுமிகளையும் நோக்கித்தாம் என்பதையும் செல்வா காட்சிப்படுத்தத் தவறவில்லை.

செல்வராகவனுக்கு அடுத்தபடியான அபாரம் ரீமாசென். இனிமேல் இதுபோன்றதொரு கதாபாத்திரத்தில் இவரால் நடித்து விட முடியுமா என்பது நம் இந்தியச் சூழலில் சந்தேகமே. பருத்தி வீரன் ‘உதிரி’ கார்த்தி யினுக்கும் ஆ.ஒ ‘சாமான்ய’ கார்த்தி யினுக்கும் வித்தியாசங்கள் அதிகமில்லை. ஒரே ஒரு அழுக்கு நிஜாருடன் திரையில் அறிமுகமாகும் கதாநாயகனும் நமது புர்ச்சி, வீர, அதிரடி, தல, கால், கை, கன்றாவிகள் உலவும் சூழலில் இருக்கிறான் என்பதே ஆறுதலாக இருக்கிறது. பிரபலங்களின் குடும்பப் பின்னணி, முதல் படத்தின் மாபெரும் வெற்றி போன்றவைகள் இருந்தும் கூட ஆ.ஒ மாதிரியான கதாபாத்திரத்தினுக்காக இரண்டு வருடங்கள் செலவழித்த கார்த்தியினுக்குப் பாராட்டுக்கள். மேலதிகமாய் இப்படத்தின் பிரதான பாத்திரம் ரீமா சென்னாக இருந்தபோதும்கூட முழுமையான ஈடுபாட்டுடன் நடித்துக் கொடுத்தமைக்கும் ஒரு விசேச பாராட்டு. ஆண்ட்ரியாவின் குரலில் சிறப்பாய் வந்திருந்த மாலை நேரம் பாடல் இடம்பெறாதது குறித்து வருத்தமெதுவுமில்லை. கிங்ஸ் அரைவல் போன்ற யுவனின் சாயல்களைத் தவிர்த்திருக்கலாம்.
ஆங்கிலத்தில் fantasy படங்கள் மாதத்தினுக்கு மூன்று என்கிற கணக்கில் மிகப் பிரம்மாண்டமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆயிரத்தில் ஒருவன் படமாக்கப் பட்டிருந்ததை விட பன்மடங்கு அதிகத் தரத்துடன் பிரம்மிப்புகளை திரையில் பெரும்பாலானோர் பார்த்திருக்கிறோம் என்றாலும் சன்குழுமங்களின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பரிதாபமான தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நிச்சயம் இஃதொரு மாற்றுப் படமே.