Monday, March 7, 2011

அத்தியாயம் மூன்று. குணா என்கிற குணாளன்

நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது. நட்சத்திரங்கள் வானில் பூத்தூவலாய் சிதறிக்கிடந்தன. இரவுக் கரையக் கரைய வெளிச்சம் கூடிக் கொண்டிருப்பதாய் தோன்றியது. சாப்பிடத் தட்டுகள், மதுக்குப்பிகள், தம்ளர்கள், யாவும் அகல மேசையில் திசைக்கொன்றாய் கிடந்தன. சீராளனும் தாமசும் படுக்கப் போய்விட்டார்கள். குணா புகைத்தபடி நடந்து கொண்டிருந்தான். நான் சாய்விருக்கையில் சாய்ந்தபடி கண்களால் வானத்தைத் துழாவிக் கொண்டிருந்தேன். மதியம் முழுக்க நன்றாகத் தூங்கிவிட்டதால் புத்துணர்வாகவே இருந்தது. எல்லையில்லாத மெளனம் எங்கும் சூழந்திருப்பதாய் உணர்ந்தேன். நிதானமான போதை, நிச்சலனமான இரவின் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது.

குணா அருகிலிருந்த இருக்கையில் வந்து அமர்ந்தான்.

“தூங்கல?” என்றேன்
“ம்ம்..என்னன்னு தெரியல இன்னிக்கு ஒரு மாதிரி இருக்கு. நான் ரொம்ப உடைஞ்சிருக்கேன். தூக்கமும் வரல.”
“இன்னும் குடிக்கலாமா?”
“வேணாம். திடீர்னு ஏனோ நான் பண்ண முதல் கொலை நினைவுக்கு வருது. இந்த மாதிரி ஒரு பின்கட்டு வச்ச வீடுதான் அது. இதே போல ஒரு விஸ்தாரமான களம். இதே மாதிரியான நிலவு வெளிச்சம் அன்னிக்கும் இருந்தது. கிட்டத்தட்ட இதே நேரம்தான். என்னோட பதினெட்டு வயசில, ஒரு கிழவனோட கழுத்த அறுத்துக் கொன்னேன்.”

பேச்சை நிறுத்திவிட்டு குணா மேசையில் கவிழ்ந்து கிடந்த தம்ளரை எடுத்து புட்டியிலிருந்த மதுவை சாய்த்துக் கொண்டான். அண்ணாந்து அப்படியே வாயில் கவிழ்த்துக் கொண்டான். தம்ளரை கீழே வைக்கும்போது குணாவின் விரல்கள் லேசாய் நடுங்கியது போலிருந்தன. குணா பேச ஆரம்பித்தான். முகத்தில் திடீரெனப் பிரகாசம் கூடியது. அவனுடைய ஆகிருதியான உருவம் மறைந்து போய் சிறுவனின் தோற்றத்தைச் சடுதியில் அடைந்தான். அவன் பேசப்பேச பசுமையான மலைகள் என் முன் தோன்றின. வனங்களையும் மிருகங்களையும் அவன் பேச்சு கட்டி இழுத்து வந்தது. அவன் பேச்சு என்னை ஒரு அருவியிலிருந்து குப்புறத் தள்ளியது. நான் தலைகீழாய் விழுந்து கொண்டிருந்தேன்.

0
குணாவிற்கு சொந்த ஊர் நீலகிரி. மதுரையில் ட்ராவல்ஸைத் தொடங்கிய நாளிலிருந்து கடைசியாய் இங்கு வரும் நாளுக்கு முந்தின தினம் வரை, கொடைக்கானல் சவாரியை மட்டும் அவன் தவிர்ததில்லை. இந்தப் பைத்தியம் பிடித்த நகரங்களில் சுற்றியலையும்போது கூட அவன் நினைவில் ஓயாது மலைகள் நகர்ந்து கொண்டிருக்கக் கூடும். மலையின் வளைவுகளும், பள்ளத்தாக்குகளும், உயரமான மரங்களும், அவனது சொந்த இருப்பிடத்தை நினைவு கூற வைக்கின்றன போலும். மலைகள் அவன் பால்யத்தை மீட்டுக் கொண்டு வருகின்றன. பதினெட்டு வயது வரை குணாவின் வாழ்வு அற்புதமாகத்தான் இருந்தது. இயற்கையின் அதி சொந்த இருப்பில் அவன் வாழ்வு லயித்திருந்தது. தன் தாயைப் பார்த்தே இராத குணா,கானகத்தின் மகனாகத் தன்னை நினைத்துக் கொள்வதுண்டு.



திர்ஹட்டியிலிருந்து உதகை செல்லும் குறுக்குப் பாதையில், இரண்டு கி.மீ நடந்தால் கும்பலாய் இருபது சிறிய குடிசைகளை காண முடியும். அந்த இருபது குடிசைகளும் குணா குடும்பத்தாருக்குச் சொந்தமானவை. குணாவின் தாத்தாவிற்கும், திர்ஹட்டி ஊருக்கும் ஒத்துப்போகவில்லை. குணாவின் அப்பா சிறுவனாய் இருக்கும்போதே இந்த உள்ளடங்கிய பகுதிக்கு குணாவின் தாத்தா வந்துவிட்டார். கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கும் மேலாக இவர்களுக்கும், அருகாமை ஊரிற்கும் எந்தத் தொடர்புமில்லை. ஊர் என்றால் தலைவன்தான் எல்லாமும். அவர் சொல்லுக்கு மக்களனைவரும் கட்டுப்பட்டாக வேண்டும். அவருக்கும் தாத்தாவிற்கும் ஒத்துப்போகவில்லை. என்ன பிரச்சினை என்பது குணா வயதையொட்டிய யாருக்கும் தெரியவில்லை. பெரியவர்களிடம் கேட்கவும் பயமாக இருந்தது. திர்ஹட்டி கிராமத்தினை குணாவின் குடும்பத்தாரும், குணாவின் குடும்பத்தாரை திர்ஹட்டி கிராமமும் பரஸ்பரம் புறக்கணித்துக் கொண்டன. குணாவின் குடும்பத்தார் பொருட்களை வாங்கவோ விற்கவோ உதகைக்கு வரப் பழகிக் கொண்டனர்.

குணாவின் தாத்தாவிற்கு நான்கு ஆண் மற்றும் நான்கு பெண் குழந்தைகள். மொத்தம் எட்டுத் தனித்தனிக் குடித்தனங்கள். குணாவின் அப்பாதான் மூத்தவர். ஊர்தலைவருடைய மகள்தான் பாட்டி என்றும் சிறுவயதில் தூக்கக் கலக்கத்தில் கேட்ட நினைவுண்டு. குணா பாட்டியைப் பார்த்ததில்லை. அவன் அம்மாவும் நினைவு தெரிவதற்கு முன்பே போய் சேர்ந்தாயிற்று.
தாத்தா ஒரு குடிசையில் தனியாக இருந்தார். காடுகளை பிழைப்புக்காக அண்டியிருந்தாலும் எருமைகளையும் வளர்த்து வந்தனர். பத்து வயது வரை சித்தப்பாவின் பிள்ளைகளோடும் அத்தையின் பிள்ளைகளோடும் காடு முழுக்க குணா திரிந்து கொண்டிருந்தான். அவனுக்கான உலகம் மிகுந்த சாகசங்களைக் கொண்டிருந்தது. அவற்றைத் தேடித் தேடிக் கண்டுபிடித்து அடைவதுதான் அவனின் தினசரியாக இருந்தது.

கண்களுக்கெட்டியவரை பசுமை, அரண்களாய் மலைகள், மலைச்சரிவில் ஓங்கி உயர்ந்த மரங்கள், முகத்தை வருடிச் செல்லும் மேக கூட்டங்கள், கானகம் முழுக்க பறவைகள், வன் மென் மிருகங்கள் என அவனுள் முழுக்க காடும் மலைகளும் மட்டுமே நிறைந்திருந்தன. பள்ளிக்கூடம், நண்பர்கள், மக்களோடு வாழ்தல் போன்ற இயல்பு வாழ்வு அவனுக்கு கிடைக்காமல் போனது. அன்றைய தினத்திற்கான உணவைச் சேகரிக்க மட்டுமே குணாவிற்குச் சொல்லித் தரப் பட்டிருந்தது. பாதுகாப்பான வாழ்க்கைக்காக பிற உயிரினங்களிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் அவன் பழகியிருந்தான். மலைப்பிரதேசங்களின் குளிரமைதிதான் குணாவின் இயல்பாய் இருந்தது. எந்த ஒரு ஆபத்தான, பயங்கரமான சூழலிலும் குணா பதட்டமடைவதில்லை.

பத்து வயதிற்கு மேல்தான் குணா பெரியவர்களால் வேட்டைக்குத் தயார் செய்யப்பட்டான். தேனெடுக்கவும், கிழங்கெடுக்கவும் அவன் உறவுப் பெண்களோடு காடுகளில் அலைந்தான். பதினேழு வயது வரை குணாவின் வாழ்வு எந்த சிக்கலும் இல்லாமல்தான் நகர்ந்து கொண்டிருந்தது. அவன் தாத்தாவின் மரணம்தான் அந்தப் பருவத்தில் நிகழ்ந்த மிகப் பெரும் துயர சம்பவமாக இருந்தது. விடாது பெய்து கொண்டிருந்த ஒரு அடர் மழை நாளில் அவன் தாத்தா இறந்து போனார். அந்த குடும்பங்கள் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. எல்லாவற்றுக்கும் அரணாய், ஆதாரமாய், விதையாய், இருந்த ஒரு முதியவரை இழப்பதின் துக்கத்தை அக்குடும்பத்தின் கடைசி வாரிசு வரை அறிந்திருந்தது. குணாவின் அப்பாதான் மூத்தவர் என்பதால் அவர் தாத்தாவின் குடிசைக்குத் தன்னை மாற்றிக் கொண்டார்.

குணா தன் வாழ்வும், பார்வையும், எண்ணங்களும் மெல்ல மாறிக் கொண்டிருப்பதை உணர்ந்தான். பருவமெய்திய அவனின் அத்தைப் பெண்களை அவன் புதிதாய் பார்க்கத் துவங்கினான். வாளிப்பான அவனுடைய கடைசி அத்தையின் மீதும் இனம் புரியாத உணர்வொன்று அவனுள் படர்ந்தது.

குணா மிகத் திரட்சியான இளைஞனாகத் தோற்றமளித்தான். அவனுடைய கட்டுக்கோப்பான உடல் அந்தக் குடும்பத்தினரை மகிழ்ச்சிக் கொள்ள வைத்தது. எல்லாரையும் விட தைரியமான, துடிப்பான இளைஞனாகத்தான் குணா வளர்ந்தான். அவனுள் நிறைய கேள்விகள் இருந்தன. ஏன் தம்முடைய குடும்பம் மட்டும் இந்த வனாந்திரத்தில் தனித்து வாழ்கிறது? என்ற கேள்விக்கான பதிலை யாருமே தரத் தயாராக இல்லை. அவன் பார்த்தே இராத அருகாமை ஊரின் மீது ஈர்ப்பு படர்ந்தது. கானகத்தில் பிற மனிதர்களைப் பார்க்க நேரிட்டாலும் அவனுடனோ, அவன் குடும்பத்தாருடனோ யாருமே பேசுவதில்லை. இரண்டு மைல் தள்ளி இருக்கும் சிறு நகரத்தை அவனுட்பட யாருமே மிதித்ததில்லை.

இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எல்லா ஆண்களும் உதகைக்குப் போகும் வழக்கம் இருந்தது. அப்படி ஒரு நாளில்தான் குணாவிற்கு அந்த எண்ணம் உதித்தது. இருள் துவங்க ஆரம்பித்திருந்த மாலையில், தன் இரு இளைய சகோதரர்களைச் சரிகட்டி உடன் அழைத்துக் கொண்டு திர்ஹட்டியினுள் பிரவேசித்தான். ஒரு சிறிய பேருந்து நிறுத்தம், அதையொட்டிய சில டீ கடைகள், நான்கைந்து மளிகை கடைகள், மிகச் சிறிய உணவு விடுதி ஒன்று, இவைதாம் திர்ஹட்டியின் முகமாய் இருந்தது. சற்று உள்ளே நடந்தால் மேடும் பள்ளமுமாய் நான்கு வீதிகள். வரிசையாய் ஓட்டு வீடுகள். அவ்வளவுதான். இந்தச் சிறிய ஊரில் வசிக்கக் கூட நமக்கு அருகதை இல்லையா? என குமைந்தான். நம்மை இங்கு வாழ அனுமதிக்காத இந்த ஊர் தலைவனை இப்போதே கொன்று சாய்த்துவிட வேண்டுமென்கிற வெறி குணாவிடம் வேர் விட்டது. ஊரில் வித்தியாசமாய் யாரும் உணர்வதற்குள் மூவரும் வந்த வழியை நோக்கித் திரும்பினர். குணாவின் பழி உணர்ச்சி அந்த ஊரை நேரில் பார்த்ததிலிருந்து இன்னும் அதிகமாயிற்று. தானும் தம் குடும்பமும் ஏன் இந்த சமூகத்தோடு ஒட்டி வாழமுடியவில்லை? என்கிற கேள்வி அவனுள தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. இந்த புறக் கணிப்பு அவனை மிகப் பெரும் அவமானத்தினுள் தள்ளியது. இரவுகளில் தூங்கப் பிடிக்கவில்லை. இதற்கு முன்பு பார்த்தே இராத அந்த ஊர் தலைவனைக் கொல்ல முடிவு செய்தான். தினம் இரண்டு முறையாவது அவனைக் கற்பனையாய் கொன்று கொண்டிருந்தான். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் திர்ஹட்டிக்குச் சென்று வந்தான். அந்த ஊர் தலைவனையும், அவன் வீட்டையும், நோட்டம் பார்த்துக் கொண்டான். விரைவில் அந்தக் குடும்பத்தையே வேரருக்க வேண்டுமென்கிற துடிப்பு அவனுக்கு அதிகமானது.

ஆண்கள் உதகைக்குப் போகும் நாளுக்காக காத்திருந்தான். அடுத்த வருடம் குணாவையும் அழைத்துப் போகவெண்டுமெனப் பேசியபடியே அப்பாவும், சித்தப்பாக்களும், மாமாக்களும் விடைபெற்றனர். நட்சத்திரங்கள் ஒளிரத் துவங்கிய முன்னிரவில், பெண்கள் அனைவரும் உறங்க ஆரம்பித்தவுடன் குணா, தயார் செய்து வைத்திருந்த ஒரு கூரியக் கத்தியுடன், குடிசையை விட்டு வெளியேறினான். ஏற்கனவே தலைவன் வீட்டை அறிந்து வைத்திருந்ததால், விரைந்து நடக்க ஆரம்பித்தான். அந்த வீட்டின் பின்புறம் அடர்த்தியான மரங்கள் சூழ்ந்த ஒரு சிறிய தோட்டம் இருந்தது. தோட்டத்தினுள் புகுந்து, பின் கட்டை ஒட்டிய சந்து வழியாக வீட்டினுள் நுழைந்து, தூங்கிக் கொண்டிருக்கும் அந்த முதியவனின் கழுத்தை அறுத்து விடும் திட்டத்தை நடந்து வரும்போது மனதில் தீட்டிக் கொண்டான். திட்டம் விரைவாய் நிறைவேறினால், அங்கிருக்கும் மற்றவர்களையும் கொல்லவும் குணா மனதளவில் தயாராக இருந்தான்.

தலைவன் வீட்டிற்குப் பின்னாலிருந்த தோட்டத்தை நெருங்கினான். முனிப்பழ செடிகள் புதர்களாய் மண்டியிருந்தன. முட்கள் கீற அதைத் தாண்டி குதித்தான். வீட்டை நெருங்கினான். எங்கும் நிசப்தம் கவிழ்ந்திருந்தது. பதுங்கிப் பதுங்கி சந்தில் முன்னேறினான். பின் கட்டு முடிந்ததும் சற்று நின்றான். விஸ்தாரமான காலி இடத்தில் கயிற்றுக் கட்டில் போடப்பட்டிருந்தது. அதில் ஒரு உருவம் படுத்திருப்பதை உணர்ந்தான். சற்று முன் நகர்ந்தான். முன் கட்டு கதவும் பின் கட்டு கதவும் மூடியிருந்தன. சப்தமெழுப்பாமல் கட்டிலுக்கருகில் போனான். தலைமைக் கிழவன்தான் தூங்கிக் கொண்டிருந்தான். சற்றும் தாமதிக்காமல் இடது கையால் கிழவனின் வாயை அழுத்தமாய் பொத்தினான். வலது கையில் கத்தியை வாகாய் பிடித்துக் கொண்டு கழுத்தை அறுக்க ஆரம்பித்தான். கிழவனின் உடல் திமிறியது. இரத்தம் குணாவின் கைகளை பிசுபிசுப்பாய் நனைத்தது. அதிக நேரம் நீட்டிக்காமல் கிழவனின் தலை துவண்டது. குணாவிற்கு லேசாய் உடல் நடுங்க ஆரம்பித்தது. வேறு எவரையும் தேடிக் கொல்லும் திராணியை அவன் இழந்திருந்தான். பதபதைக்கும் நெஞ்சோடு வந்த வழியே திரும்பி ஓடினான். கைகள் முழுக்க இரத்தமாக இருந்தது. ஒற்றையடிப் பாதையைத் தவிர்த்துவிட்டு, புதர்களைத் தாண்டிக் குதித்து, மலைச்சரிவுகளில் தடதடவென ஓடினான். நிலா பிரகாசமாய் பார்த்துக் கொண்டிருந்தது. எதிர்ப்படும் மரங்கள் கருத்து ஒளிர்ந்தன. குணாவின் மனம் முழுக்க பயம் பூனையைப் போல சுருண்டு கொண்டிருந்தது. அவன் இருப்பிடத்தின் தொலைவு நீண்டுகொண்டே போனதாய் தோன்றியது. இடையில் குறுக்கிட்ட காட்டு ஓடையில் கத்தியை வீசினான். கைகளை கழுவிக் கொண்டான். இரத்தத்தின் வாசனை தன்மீது படர்ந்திருப்பதாய் உணர்ந்தான். ஒருவழியாய் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தான். சப்தமெழுப்பாமல் முன் படலைத் திறந்து உள்ளே நுழைந்தான். தன்னுடைய குடிசை இருக்கும் பக்கமாய் நடக்கத் துவங்கினான்.

அவனுடைய கடைசி அத்தை இரண்டு குடிசைகளுக்கு நடுவிலிருந்து புடவையை கீழிறக்கியபடி வெளியே வந்தாள். ”எங்க போய்ட்டு வர இந்த நேரத்துல என அதட்டினாள்” தூக்கம் வராமலிருக்கவே நடந்து விட்டு வருதாகச் சொன்னான். ”ஏன் தூக்கம் வரல? உடம்பு சரியில்லயா?” என நெருங்கி வந்தாள். குணாவின் உடல் சூடாகியது. உயரமான அவனின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள். ஜாக்கெட் அணிந்திராத அவளின் பருத்த முலைகளில் ஒன்று, நிலவின் ஒளியில், கருப்பு முயலென எட்டி இவனைப் பார்த்தது. ஏற்கனவே அவளின் மீது இனப்புரியாத உணர்வு இவனுக்கு வந்து விட்டிருப்பதால் மனதிற்குள் நடுங்கினான். அவள் கையை விலக்கி” நான் போறேன்” என நகர்ந்தான். அவள், அவன் கையை கெட்டியாய் பிடித்தாள். ”உள்ள வந்து தைலம் தேய்ச்சிட்டு போய் படு” வென இழுக்காத குறையாய் அவளின் குடிசைக்கு இழுத்துப் போனாள்.

அந்தக் குடிசைக்குள் மரிக்கொழுந்துவின் வாசமும், பச்சைத் தைலத்தின் மணமும் சேர்ந்து மூச்சை முட்டியது. ஓரமாய் பாய் தலையணை போடப்பட்டிருந்தது. அவள் படுத்திருந்த போர்வைகள் கசங்கி கிடந்தன. குணாவின் இதயம் வேகமாய் துடிக்க ஆரம்பித்தது. அவள் படு என்றாள். குணா நான் போறேன் எனத் திரும்பினான். அவனை அவள் மூர்க்கமாய் கீழே சாய்த்தாள். அவனின் மீது வன்மமாய் படர்ந்தாள். குணா ”வேணாம் வேணாம்” என முனகியபடியே அவளை இறுக அணைத்துக் கொண்டான். அவள் நிதானமாய் அவன் உதடுகளைக் கவ்வினாள். போர்வையாய் சுற்றியிருந்த புடவையை கழற்றி எறிந்தாள். அவன் மீது அமர்ந்தபடி இயங்கத் துவங்கினாள். குணா வாழ்வின் உச்சத்தை வெகு சீக்கிரம் தொட்டான். அவள் வெட்கி சிரித்தாள். மேலே அமர்ந்திருந்தவளை பிடித்து தள்ளிவிட்டு குணா அங்கிருந்து ஓட்டமாய் வெளியில் ஓடி, தன் குடிசையினுள் புகுந்து கொண்டான்.

குணாவை அவமானம் பிடுங்கித் தின்றது. தன்னை நரகலாய் உணர்ந்தான். தலையணைக்குள் முகம் புதைத்து அழுதான். நிமிடம் நகராமல் நின்று கொண்டதைப் போலிருந்தது. காலையில் மற்றவர்களின் முகத்தை எப்படி பார்ப்பது? எனக் குமைந்தான். படுக்கையிலிருந்து எழுந்து குடிசைக்கு வெளியே வந்தான். விடியலில், இரண்டு பசும் மலைகளுக்கு நடுவில், மெதுவாய் மேலேறி, பனி போர்த்தித் தூங்கும் பூமிச் சிறுமியை எழுப்பவரும் சூரியனைக் காண குணா அங்கிருக்கவில்லை.

ஓவியம் : Salvador Dali

மேலும்

7 comments:

அருண் said...

ரெண்டாம் பாகத்தின் அத்துணை அத்தியாயங்களையும் ஒரே மூச்சில் படித்து விட்டேன் முதலாம் பாகத்தை போலவே,தொடர்ந்து எழுதுங்கள்.
-அருண்-

Anonymous said...

இவ்வளவு அற்புதமான எழுத்துக்களை எந்த அங்கீகாரமும்மில்லாத பதிவுலகில் எழுது வதோடு விட்டு விடாதிர்கள்.கண்டிப்பாக புத்தக வடிவில் கொண்டு வாருங்கள்.வாழ்த்துக்கள்.

Nithi said...

GREAT.....

Anonymous said...

தொடர்ந்து ரீடரில் படித்துவருகிறேன், மறுமொழி போட வேண்டுமென நினைத்தாலும் முடியவில்லை(சோம்பல்). மிகவும் நன்றாக உள்ளது, படித்த பின் பல முறை கதையை யோசித்தும், நினைத்தும் உள்ளேன். என்னை பாதிக்கும் அளவு அற்புதமாக உள்ளது.

தொடருங்கள், வாழ்த்துக்கள்

Ayyanar Viswanath said...

அருண், தொடர்ந்த வாசிப்பிற்கு நன்றி

பிரகாஷ்,
புத்தகமாக கொண்டு வரும் எண்ணம் உண்டு. நன்றி.

நித்தி, நன்றி

மோகனா, நன்றி. மீள்வருகைக்கு வாழ்த்துகள். ரீடரில் இணைத்துள்ளேன் ஆகையால் தொடர்ந்து எழுத வேண்டும் :)

vinthaimanithan said...

அய்ஸ், இரண்டாம்பாகம் எப்போது என்று கேட்ட இரண்டாம் நாளில் அட்டகாசத்தை ஆரம்பித்தமைக்கு நன்றி. என் நண்பர் கேஆர்பி செந்திலின் 'ழ்' பதிப்பகத்தின் மூலம் உங்கள் நாவலை வெளியிட விரும்புகிறோம். பரிசீலிக்கவும்.

முதல்கொலையையும் முதல்புணர்வையும் ஒரே இரவில் அனுபவித்தவனின் மனோநிலை எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்கிறேன். ஹப்பா...!

vinthaimanithan said...

அய்ஸ், இரண்டாம்பாகம் எப்போது என்று கேட்ட இரண்டாம் நாளில் அட்டகாசத்தை ஆரம்பித்தமைக்கு நன்றி. என் நண்பர் கேஆர்பி செந்திலின் 'ழ்' பதிப்பகத்தின் மூலம் உங்கள் நாவலை வெளியிட விரும்புகிறோம். பரிசீலிக்கவும்.

முதல்கொலையையும் முதல்புணர்வையும் ஒரே இரவில் அனுபவித்தவனின் மனோநிலை எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்கிறேன். ஹப்பா...!

Featured Post

test

 test