Monday, February 25, 2008

தொலைந்துபோன குழந்தைகளின் / பதின்மர்களின் உலகம்Pedar aka The Father (1996)

சிறுவர்களை மய்யமாக கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் தேர்ந்தவரான மஜித் மஜித்தின் இன்னொரு படம் தான் இது.ஈரான் போன்ற நாடுகளிலிருந்து தேர்ந்த திரைப்படங்கள் சாத்தியமாகும்போது எல்லா பாதுகாப்பான வழிகளையும் கொண்டிருக்கும் நம் சூழலின் மீதும், global வரவேற்பு இல்லாததால் சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என சப்பை கட்டிக் கொண்டிருக்கும் நம்மவரின் கலைத்தாகத்தின் மீதும் படியும் கசப்புகளும் வெறுப்பும் இந்தப் பின்னிரவிலும் காறித் துப்ப வைக்கிறது.அய்ரோப்பியத் திரைப்படங்களைப் பார்க்கும்போது ஒப்பீட்டு புத்தி உள்நுழைவதில்லையென்றாலும் ஈரானிய நாடுகளிலிருந்து தொடர்ச்சியாய் வந்துகொண்டிருக்கும் வீச்சு மிகுந்த கலைப்படைப்புகள் என் மொழியின் / கலையின் மீதான என் நம்பகத் தன்மைகளைப் புறந்தள்ளி குற்ற உணர்வுகளை அழுத்தமாய் பதிவித்துப் போகிறது.

தொலைந்துபோன குழந்தைகளின் உலகம்தான் மஜித் மஜித் வசிக்குமிடமாக இருக்கிறதோ என்னமோ!.சிறார்கள் தொலைத்துவிட்ட உலகத்தை இழந்துபோன, அவர்களுக்கு மட்டுமே உரித்தான இயல்புகளை இன்னொரு சிறுவனின் மனோபாவங்களோடு உள்வாங்கிப் பதிவிக்கிறார். இழந்தவைகளின் மீது எப்போதும் படிந்திருக்கும் குருதியின் வாடை தாங்கமுடியாததாய் இருக்கிறது.Children of heaven னின் கடைசிக் காட்சி ஏற்படுத்திய தாக்கத்தினோடு ஒப்பிடுகையில் Father ன் கடைசிக் காட்சியின் தாக்கம் சற்றுக் குறைவுதான் என்றாலும் இரண்டுமே நிச்சயம் வலிகளைக் கடத்துபவைதான். நீரினடியில் துழாவும் விரல்கள எத்தனை அழகான படிமம்/பார்வை இது!..நீ ..ரி..ன..டி....யி..ல் துழாவும் இரத்தம் தோய்ந்த கால்விரலகள்.....நெடிய பாலை அலைக்கழித்த சோர்வில் அபூர்வமாய் கிடைத்த நீரில் புதைந்திருக்கையில் விரல்களில் சிக்கும் தன் குடும்ப புகைப்படம்......மரணத்தின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்கும் நீர்..நெடிய பாலையில் பளிங்கினைப் போல நீர்..நீர்..நீர்...எல்லாம் நீர்..


தந்தை பின்னாலமர்ந்தபடி தன் மகனுக்கு(Mehrollah) பைக் ஓட்டக் கற்றுத் தருவதாய் ஒரு காட்சி..அடுத்த காட்சியில் தந்தையின் உடலை மூடியிருக்கும் துணியில் இரத்தம் தோய்ந்திருக்கிறது.பைக் முறுக்கிக் கிடக்கிறது. இடித்த லாரி நின்றுகொண்டிருக்கிறது.லாரியை ஓட்டி வந்தவன் பிணத்தின் முன் குத்துக்காலிட்டு அமர்ந்தபடி உரத்த குரலில் அழுகிறான். சிராய்ப்புகளோடு அச்சிறுவன் ஓரமாய் அமர்ந்தபடி தேம்பிக் கொண்டிருக்கிறான்.இவ்வளவுதான் அந்த சிறுவனின் Flash back. இப்போது அவன் ஒரு நகரத்தில் அடிமை வேலைக்கு நிகரான ஒரு வேலையைச் செய்கிறான்.சொற்பமான தன் சம்பளத்தை வாங்கிக்கொண்டு வீடு திரும்புகிறான்.திரும்பும் வழியில் வயலில் வேலை செய்துகொண்டிருக்கும் தன் நண்பன் மூலமாய் அவனின் அம்மா உள்ளூர் போலிஸ்காரனொருவனை திருமணம் செய்துகொண்டதாய் கேள்விப்பட்டு ஆத்திரமடைகிறான்.அவளைப் பார்ப்பதைத் தவிர்க்கிறான்.தன் பழைய வீட்டைத் திருத்தி தனியாய் வசிக்கத் துவங்குகிறான்..அந்தப் போலிஸ்காரனை பழிவாங்கத் துடிக்கிறான்.இரவில் அந்த வீட்டின் செடிகளை துவம்சம் செய்கிறான் சன்னலில் கல்லெறிகிறான். ஒரு நாள் உடல்நிலை சரியில்லாமல் போகிறது. அவனை வீட்டிற்குத் தூக்கி வந்து கவனித்துக் கொள்கிறாள் அவனின் தாய்.உடல் சரியான இரவொன்றில் தாயைத் தங்கைகளை தன்னிடமிருந்து பிரித்த அக்காவலதிகாரியை அவரின் துப்பாக்கி கொண்டே கொல்ல நினைக்கிறான்.பின் முடியாததால் அவரின் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, நண்பனைக் கூட்டிக்கொண்டுத் தான் வேலை செய்யும் நகரத்திற்கு அந்த இரவில் ஓடிப்போகிறான்.

எனக்கு குழந்தைகளென்றால் மிகவும் உயிர்..ஆனால் எனக்கு அப்பாக்கியம் இல்லை.. என் மனைவி என்னை விட்டுப் போய்விட்டாள்.. எவருமே இல்லாத என் வாழ்க்கையில் நான்கு குழந்தைகளோடு நீ கிடைத்தது கடவுளின் கருணை.. என மகிழ்ந்து அச்சிறுவனின் தாயை மணந்துகொள்கிறார் ஒரு காவலதிகாரி.தன் தாயை ஏமாற்றி / பயமுறுத்தி திருமணம் செய்து கொண்டதாய் நினைக்கும் அச்சிறுவனுக்கும் அன்பான அக்காவலதிகாரிக்கும் சபிக்கப்பட்ட இயற்கையின் சூழலில் இடையே நிகழும் போராட்டம்தான் இத்திரைப்படம்.Mehrollah வின் நண்பனாக வரும் Latif மிக அழகான கதாபாத்திரம்.

வாழ்வை அதன் இயல்புகளோடு பதிவிப்பதுதான் சிறந்த திரைப்படமாக இருக்க முடியும்.பாலையின் தகிப்புகளை,இயலாமைகளை, அன்பை, நேசிப்பை, வன்முறையை எவ்வித பிரச்சாரத் தன்மைகளுமில்லாது மிக இயல்பாய் பதிவிப்பதும், நீளமான வசனங்களை விடுத்து காட்சிகளின் மூலமாகவே நம்மைக் கட்டிப்போட வைப்பதுமே மஜித் மஜித்தின் அடையாளமாக இருக்கிறது மேலதிகமாய் இவரின் திரைப்படங்கள் ஓரிரண்டு நாளைக்கு நம்மை அதிலிருந்து மீளவிடாமலும் செய்துவிடுகின்றன.
Post a Comment

Featured Post

தினசரிகளின் துல்லியம் - கிண்டில் வெளியீடு

தினசரிகளின் துல்லியம்             புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் சில உதிரிக் குறிப்புகள் உள்ளே.. 1.    தினசரிகள...