Sunday, November 25, 2007

சில வியாழக்கிழமை பிற்பகல்களும் ஒரு காதலும்காதல் உணர்வு எதனால் வருகிறது?ஒரு பெண் ஆணின் மீதும் ஆண் பெண்ணின் மீதுமாய் எதனால் காதல் கொள்கிறார்கள்?உடலின் தேவை,பாலியல் ஈர்ப்பு என்பதோடு மட்டும் காதல் முடிவடைந்துவிடுகிறதா? அல்லது அதையும் தாண்டி புனிதமானது என்பது போன்று வேறேதேனும் காரணங்கள் இருக்கிறதா?சூழல், சமூகம், வாழ்வியல் முறை என்பதையெல்லாம் தாண்டி அல்லது ஒரு பொருட்டாய் மதிக்காமல் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட எது தன்முனைப்பாய் இருக்கிறது? என்பது போன்ற சிந்தனைகளை The Brief Encounter திரைப்படம் கிளரச்செய்தது.1945ல் வெளிவந்த பிரிட்டிஷ் திரைப்படமிது.இதன் நாடக வடிவம் 1936 களின் இறுதியிலேயே நிகழ்த்தப்பட்டது எனினும் இரண்டாம் உலகப்போரினால் ஒன்பது வருடங்கள் தாமதமாக 1945 ல் இந்நாடகம் திரைப்படமாக்கப்பட்டது.டேவிட் லீனின் இயக்கத்தில்
வெளிவந்திருந்த இப்படத்தில் லாரா கதாபாத்திரமாக Celia Johnson நடித்திருக்கிறார்.

ஏற்கனவே திருமணமான ஆணும் பெண்ணும் காதல் வயப்படும் கதை.புறநகரில் அன்பான கணவன் மற்றும் குழந்தைகளோடு வசிக்கும் இல்லத்தரசி லாரா எல்லா வியாழக்கிழமைகளிலும் நகரத்திற்கு வருவாள்.கடைவீதிக்கு சென்றுமுடித்த பின் மதிய திரைப்படக்காட்சி ஒன்றை பார்த்துவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.ஒரு நாள் ரயில் நிலைய புத்துணர்வு அறையில் Alec Harvey (Howard) யை சந்திக்கிறாள்.அலெக் ஒரு டாக்டர் திருமணமான இரண்டு குழந்தைகளின் தகப்பன்.இருவரின் ரசனைகள், நாகரீக அனுகுமுறைகள், பேச்சுக்கள் எல்லாம் பிடித்துப்போகவே அடுத்த சந்திப்பிற்காக ஏங்க ஆரம்பிக்கிறார்கள்.அடுத்த சந்திப்பில் காதல் வயப்படுகிறார்கள்.வியாழக்கிழமைகளில் மதியம் 12.30 திலிருந்து இரவு 9.30 வரைக்குமாய் இணைந்திருக்கிறார்கள். திரைப்படம், படகு சவாரி, கார்ப்பயணம் என இவர்களின் காதல் மெல்ல இறுக்கமாகிறது.லாரா ஒவ்வொரு வாரமும் தன் கணவனிடம் தகுந்த பொய்களை மிகுந்த உறுத்தல்களோடு சொல்கிறாள்.தனிப்பட்ட காதலும் பொதுப்பட்ட வாழ்வும் லாராவை அலைக்கழிக்கிறது.போகவே கூடாதென்னும் அவளது உறுதிப்பாடுகள் வியாழக்கிழமைகளில் காணாமல் போகிறது.


தன் நண்பனின் அறைக்கு ஒரு நாள் லாரவை கூட்டி செல்கிறான் அலெக்.அப்போது எதிர்பாராத விதமய் அலெக்கின் நண்பன் அறைக்குத் திரும்புகிறான்.லாராவை பின்புறமாய் வெளியேற்றிவிட்டு நண்பனை வரவேற்கிறான்.அந்த நிகழ்வில் திடுக்கிட்டு அவமானமடைந்த லாரா அவர்களின் உறவின் அபத்தங்களை உணர்ந்துகொள்கிறாள்.இரவில் ஆளற்ற சலையில் மழையில் நனைந்தபடி ஓடுகிறாள்.யாருமற்ற ஓரிடத்தில் புகைத்தபடி வெகுநேரம் அமர்ந்திருக்கிறாள்.பின் பிரிந்துவிடுவது மட்டுமே இத்தகைய அலைகழிப்புகளுக்கு தீர்வாய் இருக்க முடியும் என முடிவெடுக்கிறாள்.இருவரும் பேசி பிரிவதென்று முடிவெடுக்கிறார்கள்.தொந்தரவுகளுடன் நேரிடும் பிரிவின் துயர் தாளமல் ஒரு கணம் தற்கொலைக்கு முயன்று பின் மீள்கிறாள் லாரா.அவளின் சமீபத்திய சலனங்களை புரிந்துகொள்ளும் கணவன் என்னிடம் திரும்ப வந்ததிற்கு நன்றி என கட்டிக்கொள்கிறான்.

திருமணமான ஆண் எவ்வித உறுத்தல்களும்,தயக்கங்களும்,அலைக்கழிப்புகளும் இல்லாமல் இன்னொரு பெண்ணை மிகுந்த சுதந்திரத்தோடு காதலிக்கிறான்.ஆனால் திருமணமான பெண்ணிற்கான காதலில் இந்த சுதந்திரம் இருப்பதில்லை.தாய் என்கிற இன்னொரு வடிவம் பெண்ணிற்கான தனிப்பட்ட வாழ்வினை கேள்விக்குட்படுத்துகிறது.கணவன் நல்லவனாய் இருப்பதையும் மீறி பெண்ணிற்கான தேவைகள் தன் எல்லைகளை நீட்டிக்கிறது.அந்த சுதந்திர தன்மை தன் அழகியலையும்,அபத்தங்களையும்,அலைக்கழிப்புகளையும் உள்ளடக்கி இருக்கிறது.
ஒரு பெண்ணின் மன உணர்வுகளை துல்லியமாய் இந்தத் திரைப்படம் பதிவு செய்திருக்கிறது.பெரும்பாலான காட்சிகள் ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது.கடைசி ரயிலை பிடிக்க ஒரு பிளாட்பாரத்திலிருந்து இன்னொரு பிளாட்பாரத்திற்கு ஓடுவது, சப் வே யில் முத்தமிடுவது, தவிப்புகளோடு காத்திருப்பது, துயரங்களோடு பிரிவது, தற்கொலைக்கு முயன்று வீச்சமான வெளிச்சத்தில் பயந்து பின் வாங்குவதென இவர்களின் காதல் முழுக்க முழுக்க ரயில் நிலையம் சார்ந்தே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.திரைப்படம் லாராவின் தன் சார்ந்த மொழியாய் வெளிப்பட்டிருப்பது ஒரு நாவலை படிக்கும் மன உணர்வை தருகிறது.திருமணமாகி காதலித்து கொண்டிருப்பவர்கள் இப்படத்தை தவிர்ப்பது நல்லது.என் நண்பனொருவனால் முழுமையாய் பார்க்கமுடியவில்லை.இத் திரைப்படத்தின் வீச்சம் அவனை அலைக்கழிப்புக்குள்ளாக்கியது.
Post a Comment

Featured Post

தம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா

கினோகுனியா - சிறுகதைத் தொகுப்பை அமேஸான் கிண்டிலில் வாங்க https://www.amazon.in/dp/B077DHX1FX பத்துக் கதைகளை கிண்டிலில்...