Featured Post

எனக்கு மனிதர்களைப் பிடிக்காது - கவிதைத் தொகுப்பு - அய்யனார் விஸ்வநாத்

இக்கவிதைகள் தனிமையின் இசை மற்றும் நானிலும் நுழையும் வெளிச்சம் கவிதைத் தொகுப்புகளிற்குப் பிறகு எழுதப்பட்டவை. 2010 ஆம் வருடத்திலிர...

Tuesday, March 29, 2016

காட்சிகளின்றி காணுதல் - SPOTLIGHT 2015


திரைப்படம் அடிப்படையில் ஒரு காட்சி ஊடகம். அதற்கு உரையாடல்கள் பலமே தவிர அவசியம் கிடையாது என்பது ஒரு பொதுவான கருத்து. தமிழ் சினிமா பார்வையாளர்களாகிய நாம், அதுவும் செவி கிழிய - பக்கம் பக்கமாக வசனங்களையும், பஞ்ச் டைலாக்குகளையும் கேட்டு நசிந்து போன நாம், சினிமாவை காட்சி ஊடகம் தானென உடனடியாக ஒப்புக் கொள்வோம். உலகத்திலேயே சினிமாவை ரேடியோவில் பார்த்த மகத்தான பார்வையாளர்களும் நாமென்பதால் திரும்பத் திரும்ப இந்தக் காட்சி ஊடகம் என்கிற சொல், எல்லா தரப்பு சினிமா விமர்சகர்களாலும் முன் வைக்கப்படுகிறது. ஆனால் சினிமா காட்சி ஊடகம் மட்டுமே அல்ல என்பதையும் சில திரைப்படங்கள் நமக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றன. 

மிகச் சரியான உரையாடல்கள் மூலம், ஒரே ஒரு காட்சிப் பதிவு கூட இல்லாமல் சொல்ல வந்த விஷயத்தை ஆழமாகக் கடத்தி விட முடியும்  என்பதற்கான உதாரணப் படங்களும் ஏராளம் உண்டு. ஹிட்சாக்கின் ரோப் பிலிருந்து தொடங்கி டாம் மெக்ராத்தியின் சமீபத்திய படமான ஸ்பாட்லைட் வரை இந்தக் காட்சிகளற்ற காட்சிப் படங்கள் திரையின் வேறொரு சாத்தியத்தை முன் வைக்கின்றன.

ஸ்பாட் லைட் திரைப்படம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவானது. பாஸ்டன் குளோப் பத்திரிக்கையில் வேலை பார்த்த- குறிப்பாக மார்ட்டி என்பவர் 2001 ஆம் வருடம் பாஸ்டன் குளோப் பத்திரிக்கையின் எடிட்டராக சேர்ந்த பிறகு – ஸ்பாட் லைட் குழுவினரான ராபி, ரெஸண்டஸ், சாஷா, பென் ஆகியோர் துப்பறிந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த ஒரு மிகச் சிக்கலான நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம்தான் இது. கதாபாத்திரங்களின் பெயரைக் கூட மாற்றிப் போடாது, எவ்வித பின் விளைவுகள் குறித்தும் பயப்படாமல் உருவாகியிருக்கும் மிக நேர்மையான படமிது. 

பாஸ்டனைச் சேர்ந்த கத்தோலிக்கப் பாதிரிமார்கள் தங்களின் கடவுள் பிம்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அறியாச் சிறார்களைப் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆரம்பத்திலேயே பத்திரிக்கையின் கவனத்திற்கு இச் செய்தி வந்திருந்தாலும் ஏதோ ஒன்று இரண்டு அல்லது தப்பிப் போன ஒன்று என்பதாய் பத்திரிக்கைக் குழுவினரால் கை விடப்படுகிறது. மெட்ரோ பகுதியில் பெட்டி நியூஸாய் வந்திருக்கும். பின்பு மார்ட்டியின் வருகைக்குப் பிறகு ஸ்பாட்லைட் குழுவினரிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. தொடர் விசாரணைகளின் மூலம் இந்தச் சம்பவத்தின் பூதாகரம் மெல்ல வெளிப்பட ஆரம்பிக்கிறது. சிறு வயதில் பாதிரியார்களால் பாதிக்கப்பட்ட சிலர் ஒரு குழுவாய் இணைந்து, இந்த குரூரத்தை உலகிற்கு வெளிப்படுத்த முனைகின்றனர். நீதியிடம் செல்கின்றனர். ஆனால் அதிகாரம் மிக்க  கத்தோலிக்கத் தேவாலயங்கள் இவ்விஷயங்களை வெளியே கசிய விடாது, திறமையான வக்கீல்கள் மூலம் சமன்படுத்தி விடுகின்றன.

ஸ்பாட்லைட் குழுவினரின் ஆத்மார்த்தமான மற்றும் தீவிரமான உழைப்பின் மூலம் இது ஏதோ ஓரிரண்டு பாதிரிமார்களின் பிசகு இல்லை ஒட்டு மொத்த பாதிரியார்களில் ( பாஸ்டனில் மட்டும் 1500 பாதிரியார்கள்)  6 சதவிகிதம் பேர் ஃபீடோபில் ஆக இருப்பது கண்டறியப்படுகிறது. யூதரான மார்ட்டி ஆரம்பத்திலேயே சொல்வது போல குற்றம் இழைத்த தனிப்பட்ட பாதிரிமார்களை தண்டிக்காமல் அமைப்பை சரி செய்வதை இந்தக் குழு நோக்கமாகக் கொண்டு அதில் வெற்றியும் அடைகிறது.

இறை நம்பிக்கைக் கொண்ட, சிறு வயதுக் குழந்தைகளை வைத்திருக்கும் நம் மிடில் க்ளாஸ் மனதை பதற்றப் படுத்தக் கூடிய, மிக உணர்ச்சிப் பூர்வமான மையக் கதை இது. இந்தப் பதற்றத்தை விளக்குவது போன்றோ அல்லது சுட்டிக் காட்டுகின்ற நேரடியான காட்சிகளோ இப்படத்தில் இல்லை என்பதுதான் இதன் விசேஷம். ஓர் ஓரினச் சேர்க்கையாளர் தான் பாதிக்கப்பட்டதைச் சொல்கையில் உடைந்து அழுவதும், வெளிவரும் உண்மைகளின் அழுத்தம் தாங்காது குழுவில் ஒருவரான ரெஸிண்டஸ் ஓரிரு காட்சிகளில் உணர்ச்சியவயப்படுவதைத் தவிர வேறந்த காட்சிப் பூர்வமான பதிவும் கிடையாது.

முதற் பத்தியில் சொன்னதைப் போல இத்திரைக்கதை அடர்த்தியான உரையாடல்களால் நெய்யப்பட்டிருக்கிறது. அந்த உரையாடல் நமக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகள் நாம் காட்சியாகக் காண முடிந்தால் எழும் அதிர்வுகளுக்கு எவ்விதத்திலும் குறையாமல் இருக்கிறது.

பத்து வருடங்களுக்கு முன்பு இணையத்தில் சும்மா எழுதிப் பார்த்த காலகட்டங்களில் பத்திரிக்கைத் துறை மீது எனக்கு பெரும் விருப்பம் இருந்தது. தோளில் ஒரு ஜோல்னாப் பையை மாட்டிக் கொண்டு, வீதி வீதியாக மக்களைச் சந்தித்து, அவர்களின் பாடு களை எழுதிப் பார்க்க வேண்டும் என்கிற பகற் கனவுகளும் இருந்தன. ஆனால் அடுத்த மூன்று வருடத்தில் தமிழ் நாட்டில் நியூஸ் மீடியா வேறொரு இடத்திற்கு நகர்ந்தது. மஞ்சள் பத்திரிக்கை என்று தனியாக வருவது நின்று போய் தமிழில் வெளியாகும் எல்லாமும் மஞ்சள் நிறத்தை வந்தடைந்தன. சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப, மக்களின் மனநிலைக்கு ஏற்ப மீடியாக்கள் நிறங்களை மாற்றிக் கொண்டே இருப்பதையும் காண முடிந்தது. பின்பு அந்த எண்ணம் அடியோடு காணாமல் போனது. ஸ்பாட்லைட் பார்த்த இரவில் பத்திரிக்கைத் துறை மீதான என் பழைய கிலேசம் மெல்ல எட்டிப் பார்த்தது. பத்து வருடங்களிற்கு முன்பு எல்லாம் சரியாகத்தான் இருந்தது என நினைத்துக் கொண்டேன்.

0

மதம், நீதியின் மீது செலுத்தும் அதிகாரம் குறித்தும் இத்திரைப்படம் வெளிப்படையாகப் பேசுகிறது. அதுவும் பெரும்பான்மைச் சமூத்தினரின் மதம் என்பதால் அதன் அதிகார நீட்சி எல்லா எல்லைக்கும் ஏற்கனவே நீண்டிருக்கிறது. இந்த குரூரத்தை வெளியே கொண்டு வந்தே ஆக வேண்டுமென்கிற பத்திரிக்கையாளர்களின் அர்ப்பணிப்பும், அதிகார மட்டத்திற்கு ஏற்படும் நொடிநேர மனிதத் தன்மையுமே  இந்தக் குற்றவாளிகளை அடையாளம் காண உதவுகின்றன. சிறார் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 87 கத்தோலிக்க பாதிரியார்களின் பெயர்களை பாஸ்டன் குளோப் பத்திரிக்கை உலகிற்கு அறிவிக்கிறது. அறிவித்த நொடி முதல் ஏராளமான பாதிக்கப் பட்டோரின் அழைப்புகள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு வந்த வண்ணம் இருக்கின்றன.
படம் முடிந்த பிறகு காண்பிக்கப்படும் கண்டறியப்பட்ட பீடோபில் பாதிரியார்களின் புள்ளி விவரங்கள் இன்னும் அதிக கசப்பை நமக்குள் ஏற்படுத்துகிறது. இந்த குரூரத்திற்கு முடிவு இன்னும் வந்துவிடவில்லை என்பதை படத்தின் துவக்கக் காட்சியும், விஷயம் வெளிப்பட்டுவிட்டது என்கிற வெற்றிச் செய்தித்தாளோடு ரெஸிண்டஸ்  கரிபீடியனை சந்திக்கும் போது அவர் இன்னொரு பாதிக்கப்பட்ட சிறுமியை பார்த்துக் கொண்டிருப்பார். அது இக்குரூரத்தின் முடிவின்மையை மிக நுணுக்கமாக காட்சிப்படுத்தியிருக்கும்.


ஒரு காட்சியில் ரெஸண்டஸ் தனக்கு மிக முக்கியமான தகவல்களைத் தந்த கரிபீடியனோடு உரையாடிக் கொண்டிருப்பார். அவர் இந்த வேலை மிக முக்கியமானது அதற்காகத் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை எனச் சொல்லுவார். கரிபீடியன் ஒரு ஆர்மீனியன், ரெஸண்டஸ் ஒரு போர்த்து கீசியர், இந்த முயற்சியை ஆரம்பித்து வைத்த மார்ட்டி ஒரு யூதர். இவர்கள் அனைவரும் மண்ணின் மைந்தர்கள் என சொல்லிக்கொள்ளும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்துக் கொண்டிருப்பார்கள்.  அமெரிக்கா என்பதே வந்தேறிகளின் நாடுதான் என்றாலும் எதன் அடிப்படையில் அனைவரையும் இந்த மதம் ஒன்றாய் உணரச் செய்கிறது.? எப்படி ஒரே கடவுள் இவர்கள் அனைவருக்குமான கடவுளாக இருக்க முடியும் என்பதெல்லாம் விரிவாக யோசிக்க/ பேசப்பட வேண்டிய விஷயம்தான்.

Monday, May 18, 2015

ஓநாய்கள்


ஓநாய்கள்

விரட்டி வந்ததின்
நிறம் தெரியவில்லை
ஓநாய்தானா?
தெரியவில்லை
ஆனால்
நாயில்லை
முன்பொரு இரவில்
வாகன வெளிச்சத்தில் பார்த்திருந்த
கழுதைப் புலி
செந்நாய்
பல்லிழந்த நரி
இவையெதுவுமில்லை

ஓநாயாய் இருக்கலாம்

இருள் விலகியிராத கருக்கல்
மரங்கள் தூங்கும் சரிவு
சகலக் கருமை
ஒரு திசையிலிருந்து உறுமல்
இன்னொன்றின் வன்மச் சீற்றம்
பக்க வாட்டு ஊளை
பின்னிருந்து இன்னொன்றின்
கணுக் கால் கவ்வல்

ஓநாய் கூட்டம்தான்

சதையொழுகும் காலினை
இழுத்துக் கொண்டு
ஓடமுடியவில்லை
மலைச்சரிவின்
ஒரு முனையிலிருந்து
உருளுகிறது உடல்
நீர்பூச்சி வளையம் வளையமாய்
சுவாசித்துக் கொண்டிருக்கும்
ஓடையின்
குட்டி நீள் கரங்கள்
இன்னொரு நீர்பூச்சியாய்
என்னையும் வாங்கிக் கொள்கிறது

குமிழ்களை
உண்டாக்கியபடி
உள்ளமிழும் என்னுடல்
ஓநாய்களின்
நிறக் கவலையை

விட்டிருக்கும்.

Sunday, January 11, 2015

சமீபத்திய மூன்று சண்டைகள்


” நீ கேக்குற கேள்விக்குலாம் பதில் சொல்லிட்டு, உன் காசுல திங்குற மூணு வேள சோத்துக்கு பதிலா, நாலு பேரோட படுத்து சம்பாதிக்கலாம், வைடா ஃபோன.. வைடா.. ஃபோன”

தொடர்பு அறுந்துபோனது.

நளன் ஆழமாய் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டான். அலைபேசியை சில நிமிடம் வெறித்தான். பின் அதைப் பத்திரமாய் கட்டிலில் எறிந்துவிட்டு குளிக்கப் போனான்.

நளன். வயது 34. ஏதோ ஒரு ஊரில் வேலை பார்க்கிறான். கதையின் முதல் வரியைச் சொன்னது அவன் மனைவி தமயந்தி. அவளும் ஏதோ ஒரு ஊரில் இருக்கிறாள். இருவருக்கும் திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகியிருந்தன. ஒரு மகள். வாரத்திற்கு இரண்டு சண்டைகளை தவறாமல் நிகழ்த்துவார்கள். ஒவ்வொரு சண்டையையும் அடுத்த சண்டை தன் தீவிரத்தாலும், உக்கிரமான வார்த்தைகளாலும் மலிவாக்கி விடுவாதால் புதுப்புது சச்சரவுகள் அதன் உச்சத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கின்றன.

நளன் கறாரானவன். ஒரு நிறுவனத்தில் நிதிப் பிரிவில் வேலை பார்க்கிறான். அதே கணக்குப் பிள்ளை புத்தி வாழ்வின் சகல கூறுகளிலும் தென்படும்.  தமயந்தி தன் ஆடைகளைத் தவிர வேறெதையும் பெரிதாய் பொருட்படுத்தாதவள். சதா இவனிடம் கணக்கு சொல்லவேண்டுமே வென கவலைப்பட்டுக் கொண்டிருப்பாள். நேற்று காலை வாங்கிய உப்பு அரை கிலோவா? ஒரு கிலோவா? என்கிற குழப்பத்தோடுதான் அவளின் பெரும்பாலான அடுத்த நாள் காலைகள் விடியும். ஆனால் சண்டை என்று என்று வந்து விட்டால் யாரையும் ஒரு கை பார்க்கும் வல்லமை கொண்டவள்.

அலைபேசியில் கத்திவிட்டு கட்டிலில் சுருண்டு படுத்து அழுதுகொண்டிருந்த தமயந்தி, தன் நினைவிற்கு உடனே வந்த பழைய சண்டையை நினைத்துக் கொண்டாள். 

அன்று காலை நளன் ஊரிலிருந்து வந்திருந்தான். மகள் நிலா பள்ளிக்கூடம் போயிருந்தாள். வந்த உடனேயே அவளைக் கட்டிக் கொண்டு படுக்கையில் தள்ளினான். அவர்களின் சண்டைகளைப் போலவே கலவியும் ஆக்ரோஷமானது. மதியம் நிலா பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பும் வரை படுக்கையிலேயே கிடந்தார்கள். நளன் மதிய உணவை ஓட்டலில் சொல்லிவிட்டு நிலாவோடு விளையாடிக் கொண்டிருந்தான். அப்பாவைப் பார்த்த மகிழ்ச்சியில் நிலா வழக்கத்தை விட சற்று அதிக குறும்புகளை செய்துகொண்டிருந்தாள். அவன் வாங்கி வந்திருந்த இரண்டு பொம்மைகளை பத்தே நிமிடத்தில் உடைத்து எறிந்தாள். எரிச்சலான தமயந்தி, நிலா முதுகில் இரண்டு அடி வைத்தாள். பதிலுக்கு நிலா ஏதோ திட்ட,

“இந்த வயசுல என்ன பேச்சுடி பேசுற?” என அவள் மீதுப் பாயப் போனவளின் தலைமுடியை நளன் பிடித்து இழுத்து நிறுத்தினான்.

“எதுக்கு இப்ப முடிய பிடிச்சி இழுக்குற? அவ என்ன பேச்சு பேசுறா தெரியுமா, என்ன தடுக்கிற” என்றபடியே இவன் தலையில் ஒரு தட்டு தட்டினாள்.

அவ்வளவுதான் இவனுக்கு ஆத்திரம் பொங்கிவிட்டது.

”பச்ச குழந்தைய அடிக்கிற, ஏன்னு கேட்ட புருஷனையும் அடிக்கிற, என்னடி ரொம்ப குளிர் விட்டு போச்சா?”

என கன்னத்தில் ஒரு அறை விட்டான். அவளும் இவன் மீது பாய முயன்று தோற்றாள். ஆனால் திருப்பி அடிக்க முடியாததின் இயலாமையை அவனை கடுமையாய் வசைந்து தீர்த்துக் கொண்டாள்.

”தேவ்டியாப் பையா, திருட்டுத் தேவ்டியாப் பையா, அடிடா அடி.. என்னக் கொன்னு போட்டுடு..” என அலறினாள்

திடீர் வசையால் திகைத்தவன் “என்னது.. என்னது.. என இன்னும் ரெண்டு அடியை அவளின் வாய் மீது போட்டான்

நிலா இதையெல்லாம் பார்த்து பயந்து, வீறிட்டழுதபடியே அடுத்த வீட்டிலிருக்கும் பாட்டி வீட்டிற்கு ஓடினாள்.

இவர்கள் போட்ட சப்தம் தெருவிற்கே கேட்டது. பக்கத்து வீட்டிலிருந்த நளனின் அப்பாவும் அம்மாவும் உள்ளே வந்தார்கள்

தமயந்தி குளியலறையில் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு, குத்துக் காலிட்டு உட்கார்ந்து கொண்டு தேவ்டியாப் பையன்… தேவ்டியாப் பையன்… என முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

பதற்றமாய் உள்ளே வந்த அப்பா, “என்னடா பையா, என்னடா சண்ட?” என்றார்

எதுவும் சொல்லாமல் நளன் கோபத்தில் மூச்சிரைத்து நின்று கொண்டிருந்தான்.

“படிச்ச பசங்கதானடா நீங்க, இவ்ளோ அசிங்கமாவா சண்ட போட்டுப்பீங்க?”

எதுவும் பேசாமல் வெளியே போனான். இருட்டிய பிறகு பீர் வாசனையோடு வந்தான். நிலா தூங்கிப் போயிருக்க. இவள் காத்துக் கொண்டிருந்தாள். சமாதானமாகிவிட்டார்கள்.

குளித்து விட்டு வந்த பின்பும் ”படுத்து சம்பாதிச்சி” என்கிற சொல்லே நளன் காதில் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தது. அருகில் இருந்தால் அடித்து நொறுக்கியிருக்கலாம். என்ன செய்வது?.. என்ன செய்வது?.. என அறையின் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான். மறுபடியும் அவளைத் தொலைபேசியில் கூப்பிட்டு ஆத்திரம் தீர திட்டினால் என்ன?  அலைபேசியில் அழைத்துப் பார்த்தான். சுவிட்ச் ஆஃப் செய்து விட்டிருக்கிறாள்.

இத்தனைக்கும், ”போன மாசம் கொடுத்த பணத்துல ஐயாயிரம் ரூபாய்க்கு கணக்கு வரலயே என்ன செலவு பண்ண?” என சாந்தமாய்த்தான் கேட்டான்.

“எழுதி வைக்க மறந்து போய்ட்டேன், பன்ற செலவுக்கு எல்லாத்துக்கும் கணக்கு சொல்லியே ஆகனுமா?”

என அவள் கோபமாய் திரும்பக் கேட்க, இவன் பதில் பேச, பிரச்சினை முதல் வரியில் வந்து நின்றது. 

பதிலுக்கு எதுவும் செய்ய முடியாத ஏமாற்றத்தோடு கிளம்பிக் கீழே வந்து பைக்கை உதைத்தான். முன்பு நடந்த சண்டை ஒன்று அவன் நினைவில் ஓடியது.

நளனின் ஃபேஸ்புக் தோழிகள் இருவர் அவனைப் பார்க்க வீட்டிற்கு வந்திருந்தனர். சிடுசிடுப்பை சிரமப்பட்டு மறைத்துக் கொண்டு தமயந்தி அவர்களுக்கு காபி கொடுத்து விட்டு, மதிய உணவு பற்றி மூச்சு விடாமல் இருந்தாள்.

பஸ் ஏற்றி விட்டு வருவதாக சொல்லிவிட்டு அவர்களோடு கிளம்பிப் போன நளன் மாலை வரை திரும்பவில்லை. அவனின் அலைபேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

தமயந்தி கொதித்துக் கொண்டிருந்தாள்.

நளனின் தோழிகள் இருவரும் நளனிடம் ட்ரீட் கேட்டார்கள். மதியம் அவர்களை சாப்பிட்டுப் போகச் சொல்லாத தமயந்தியின் மீது கோபத்திலிருந்தவன், அவர்களைக் கூட்டிக் கொண்டு அருகிலிருந்த மூன்று நட்சத்திர ஓட்டலுக்குப் போனான். மூவரும் பியர் அருந்தினார்கள். கொறிக்க நல்ல உணவும் சேர்ந்து கொள்ளவே பேச்சும் பியரும் மாலை வரை நீண்டது.

ஒரு வழியாய் பில்லைக் கொடுத்துவிட்டு, பஸ் ஏற்றி விட்டு தள்ளாட்டமாய் வீடு வந்தவனை தமயந்தி எரித்து விடுவது போல் பார்த்தபடியே கேட்டாள்.

”எந்த லாட்ஜூல ரூம் போட்ட, ஒருத்தியா? ரெண்டு பேருமேவா?

நல்ல போதையிலும், ஏகத்திற்கும் பணம் செலவாகியிருந்த துக்கத்திலும் இருந்தவன் அவளை ஓங்கி அறைய முயன்றான். சுதாரித்து விலகிக் கொண்ட தமயந்தி அவன் இடுப்பின் மீது உதைத்தாள். கீழே விழுந்தவனின் சட்டையைப் பிடித்து தூக்கி கன்னத்தில் மாறி மாறி அறைந்தாள். நளன் திருப்பி அடிக்கத் தெம்பில்லாமல் அப்படியே சரிந்தான்.

அதிகாலையில் விழிப்பு வந்தவன் அவசரமாய் படுக்கையைத் திரும்பிப் பார்த்தான். அருகில் தமயந்தி இல்லை. படுக்கையின் மறு முனையில் நிலா கிடந்தாள். நடந்த சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் நினைவிற்கு வந்ததும் ஆத்திரமாய் எழுந்து ஹாலிற்கு வந்தான். ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு முகத்தை குத்துக் காலில் புதைத்திருந்தவளைப் பார்த்தான். அவள் அருகில் போய் தலைமுடியைப் பிடித்து நிமிர்த்தினான். கண்கள் ரத்தச் சிவப்பில் குளமாகி இருந்தன. 

எழுந்து இவனை அணைத்துக் கொண்டாள். சமாதானமாகி விட்டார்கள்.

நளனால் தலைக்குள் ஓடும் பழைய சண்டைகள் குறித்தான சப்தங்களை அலுவலகம் போகும் வரை  தாக்குப் பிடிக்க முடியவில்லை. வண்டியை பாதி வழியில் ஓரம் கட்டினான். அலைபேசியில் அவளை அழைத்தான். இப்போது ரிங் போனது. எடுத்தாள்.

”குடும்பப் பொண்ணு மாதிரியா பேசுற? என்ன செலவு பண்ணோம்னு எழுதி வச்சா என்னா? நான் என்ன நாலு பொண்ணுங்களோட படுத்தா சம்பாதிக்கிறேன். ஒழைச்சுதாண்டி சம்பாதிக்கிறேன் “ 

லேசாய் விசும்பும் சப்தம் கேட்டது. 

அலைபேசியை அவசரமாய் துண்டித்துவிட்டு பைக்கை உதைத்தான்.

 * ரேமண்ட் கார்வரின் படைப்புகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அந்த பாதிப்பில் இதை எழுதிப் பார்த்தேன். சரியாக வந்திருப்பதாக உணரவே இங்கு.. 

Friday, January 9, 2015

வம்சி வெளியீடுகள் 2015

1. நிலம் - பவா செல்லதுரை

பவா வின் நிலம் தொகுப்பை கையெழுத்துப் பிரதியாகவும், கணினிப் பிரதியாகவும் சென்ற வருடமே வாசித்திருந்தேன். மேலும் சில மனிதர்களை இந்நூலில் சேர்த்தால் கச்சிதமாகவிருக்கும் என நானும் ஷைலஜாக்காவும் நம்பினோம். பவா நிதானமாக இன்னும் சில மனிதர்களை இந்நூலில் கொண்டு வந்திருக்கிறார்.

2. கவர்னரின் ஹெலிகாப்டர் - எஸ்.கே.பி. கருணா

கருணாவின் கட்டுரைகள் சுவாரசியமானவை. திருவண்ணாமலை நகரத்தின் இன்னொரு முகத்தை இவரின் சிறுகதைகளும் கட்டுரைகளும் காட்சிப்படுத்துகின்றன. இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள்  அனைத்தும் நல்ல சிறுகதைக்கான எல்லாக் கூறுகளும் உடையவை. எங்கள் ஊரிலிருந்து இன்னொரு எழுத்தாளர் என மகிழ்ந்து கொள்ளும்படியான மொழியும் விவரணையும் கொண்டவரின் முதல் தொகுப்பு.3. புள்ளிகள் கோடுகள் கோலங்கள் -பாரதிமணி

பல பரிமாணங்களையும் நெடிய அனுபவங்களையும் கொண்ட பாரதிமணி அவர்களின் குறிப்புகளாலான சுயசரிதையாக இந்நூல் வடிவம் பெற்றிருக்கிறது. பாரதி மணி அவர்களை நேரில் சந்தித்திராத சந்திக்க விருப்பம் கொண்டிருக்கும் பலருக்கும் இத் தொகுப்பு வடிகாலாக இருக்கும்.4. யாதுமாகி - எம்.ஏ.சுசீலா

அசடனை மொழி பெயர்த்த எம்.ஏ.சுசீலா அவர்களின் முதல் நாவல்.


5. தெக்கத்தி ஆத்மாக்கள் - பா. ஜெயப்பிரகாசம்

6. எட்டு கதைகள் - இராஜேந்திர சோழன்

7. கவிஞர் சக்தி ஜோதியின் கவிதைத் தொகுப்புகள்

8. விரிசலுக்குப் பிறகு - பத்மநாபபுரம் அரவிந்தன்

9. 7.83 ஹெர்ட்ஸ் - க.சுதாகர்

புத்தகத் திருவிழாவில் வம்சி பதிப்பகத்தின் அரங்கு எண்கள் 582 மற்றும் 583Thursday, January 1, 2015

BIRD MAN - துபாய் திரைப்பட விழா - 3

BIRD MAN or The Unexpected Virtue of Ignorance அலெஹாந்த்ரோ யொன்ஸேல்ஸ் இனாரித்து வின் முதல் ஹாலிவுட் படமிது மெக்சிகோ வைச் சேர்ந்த இனாரித்து நான்லீனியர் கதை சொல்லல் மூலம் உலகம் முழுக்கப் பிரபலமடைந்தவர். மன உணர்வுகளை மிக ஆழமாய் ஊடுருவும் கதாபாத்திரங்களை வடிவமைப்பதில் தேர்ந்தவர். அமரோஸ் பெர்ரோஸ். பாபேல், 21 கிராம்ஸ், பியூட்டிபுல் ஆகிய நான்கு அற்புதமான திரைப்படங்களைத் தந்தவர். அவரின் முதல் ஹாலிவுட் படம் என்பதால் எனக்கு நிறையவே எதிர்பார்ப்பிருந்தது. ஹாலிவுட் வழமைக்குள் சிக்கிக் கொள்வாரா? அல்லது தன் பாணி கதை சொல்லலை ஹாலிவுட்டில் நிகழ்த்திக் காண்பிப்பாரா? என்பது போன்ற பல கேள்விகள் எனக்குள் இருந்தன. திரைப்படம் பார்த்து முடிந்ததும் இந்தக் கேள்விகளுக்கு ஒரு குழப்பமான பதில்தாம் கிடைத்தது. ஒரு திரைப்படமாக BIRD MAN எனக்குப் பிடித்திருந்தது. மைக்கேல் கீடனின் அசாதரணமான நடிப்பு, புதிதான கதைக்களம், விநோதமான சம்பவங்கள் என திரைப்படம் புத்தம் புது அனுபவமாகத்தான் இருந்தது ஆனால் இனாரித்துவின் வழக்கமான கதை சொல்லும் பாணியிலிருந்து இத்திரைப்படம் முற்றாய் விலகியிருந்தது.
ஹாலிவுட் கருப்பு நகைச்சுவைத் திரைப்படங்களுக்குப் பெயர் போனது. Coen brothers இந்த வகைமையில் உச்சங்களைத் தொட்டவர்கள். இந்த வகைமையில் இனாரித்து பலப் புது விஷயங்களை பரீட்சித்துப் பார்த்திருக்கிறார். இத்திரைப்படத்தை Black comedy என்பதை விட சர்ரியலிசக் காமெடி என்பது மிகப் பொருத்தமாக இருக்கும். கிட்டத்தட்ட எமீர் கஸ்தூரிகா வின் Arizona dream திரைப்படம் தந்த உணர்வையே இந்த படமும் தந்தது. அரிஸோனா ட்ரீமின் புதிரும் அபத்தமும் கிண்டலும் BIRD MAN திரைப்படத்திலும் இருந்தது.
BIRD MAN திரைப்படத்தின் கதையே மைக்கேல் கீடன் என்கிற நிஜமான நடிகனின் வாழ்வைப் பார்த்துதான் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்த நிஜமான நடிகனின் பாதிப்பு இருக்கும் புனைவு நாயகனாக, நிஜமான நாயகனே நடித்திருப்பது இத்திரைப்படத்தின் மெட்டா தன்மையைக் கூட்டுகிறது. அசலில் மைக்கேல் கீடன் காமிக்ஸ் கதாபாத்திரமான பேட்மேனின் திரைவடிவ நாயகன். கீடன் நடிப்பில் 1989 ஆம் வருடம் BATMAN திரைப்படமும் 1992 இல் BATMAN RETURNS திரைப்படமும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. புனைவு நாயகனான ரிக்கன் தாம்ஸன் BIRDMAN சாகசக் கதாபாத்திரத்தில் நடித்து ஹாலிவுட்டில் பெரும் புகழ் பெற்ற நாயகன். தொடர் தோல்விகளுக்குப் பிறகு ஹாலிவுட்டில் ஓரம் கட்டப்பட்டு நாடகம் பக்கம் ஒதுங்குகிறான். தனிமையில் இருக்கும்போது ரிக்கன் தாம்ஸனுக்கு தொடர்ச்சியாக சாகஸக் கதாநாயகனான BIRDMAN னின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. மீண்டும் பழைய புகழ் அடைய வேண்டுமென்கிற மனத் துரத்தல்கள் அவனிடம் இருந்து கொண்டே இருக்கிறது. பார்வையால் பொருட்களை உடைக்கச் செய்வது, விரல் அசைவில் பொருட்களை நகரச் செய்வது (telekinesis) அந்தரத்தில் உடலை மிதக்கச் செய்வது( Levitation) போன்ற சில வித்தைகளையும் ரிக்கன் தாம்ஸன் கற்று வைத்திருக்கிறான். இதனால் முழுமையாகவே தன்னை ஒரு சாகஸநாயகனாக கருதிக் கொள்கிறான். யதார்த்தம் அப்படி இல்லாததை அவனால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
ரிக்கன் தாம்ஸனுடைய நாடகக் குழுவினர் ரேமண்ட் கார்வரின் “What We Talk About When We Talk About Love எனும் சிறுகதையை நாடகமாக நிகழ்த்துகிறார்கள். ரிக்கனுடைய நண்பனும் வக்கீலுமான ஜேக் இந்நாடகத்தின் தயாரிப்பாளராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறான். ரிக்கனின் மகள் அவனுக்கு உதவியாளரகவும் ஜேக்கின் காதலி, முன்னாள் மனைவி, ப்ராட்வே நடிகன் மைக் மற்றும் அவன் காதலி ஆகியோர் நடிகர்களாகவும் பங்காற்றுகிறார்கள். இந்த நாடக ஒத்திகையில் நிகழும் அபத்தங்கள், முரண்கள், விநோதங்கள், தனிமனித நெருக்கடிகள் யாவும் மிகப் புதிதான உணர்வை நமக்குத் தருகின்றன. மொத்த திரைப்படமும் நாடக அரங்கிற்குள்தான் படமாக்கப்பட்டிருக்கிறது. இருட்டான ஒப்பணை அறைகள், குறுகலான நடைபாதைகள், சதா அதிர்ந்து கொண்டே இருக்கும் ட்ரம்ஸ் ஒலி என மொத்த காட்சிப் பதிவும் நம்மை ஒரு பழைய தியேட்டருக்குள் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு மிகப் புதிதாக இருந்தது. பெரும்பாலான காட்சிகளை க்ளோஸ் அப் ஷாட்டில் படம்பிடித்திருக்கிறார்கள். கதாபாத்திரங்களின் பேச்சுக்கேற்ப காமிரா சதா அசைந்து கொண்டே இருந்தது. ஏதோ நாமே திரைப்படத்திற்குள் விழுந்து கதாபாத்திரங்களுக்கு நடுவில் நடந்து போவது போன்ற தோற்ற மயக்கமெல்லாம் எனக்கு உருவானது.

போதை மருந்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டுகொண்டிருக்கும் ரிக்கனின் மகள் கதாபாத்திரமும் அவளுக்கும் மைக்கிற்கும் இடையே நிகழும் பால்கனி உரையாடல்களும் படத்தில் இன்னொரு சுவாரசியமான இழை. ரிக்கனின் மகளான சாம் (Emma Stone) தந்தையின் மன நிலையை உணர்ந்து கொள்கிறாள் அவருக்கு சம காலத்தின் நகர்வை, சமூக வலைத்தளங்களின் நிமிடப் புகழை, அவர் மிகப் பழைய ஆள் என்பவற்றையெல்லாம் புரிய வைக்க மெனக்கெடுகிறாள். அது ரிக்கனை மேலும் மன உளைச்சலுக்குக் தள்ளுகிறது. அக்குழுவில் புதிதாக உள்ளே வரும் ப்ராட்வே நடிகனான மைக் (Edward Norton) நாடகத்தின் மொத்த பெயரையும் தட்டிக் கொண்டு போகிறான். விமர்சகர்கள் மைக்கைப் புகழ்ந்து தள்ள ரிக் மிக மோசமான சுய பச்சதாப நிலைக்கு ஆளாகிறான். பின்பு அவனே எதிர்பார்க்காத சில விஷயங்கள் அசந்தர்ப்பமாக நடந்து மீண்டும் ரிக்கன் மீடியாவில் பேசப்படும் நபராகிறான். அதிகப் புகழடைகிறான். இறுதிக் காட்சியின் புதிரை சாம் மட்டுமே அறிந்தவளாகிறாள். அவளின் அப்புன்னகைக்கு பின்னால் என்ன இருக்கும் என்பதை நம்மிடமே விட்டுவிடுகிறார்கள்.
ஹாலிவுட் வணிகத் திரைப்படங்கள் மீதான நுட்பமான கிண்டல், சமூக வலைத்தளங்களின் ஹிப்போக்ரசி போன்றவை சமதளத்திற்கு கதையை இழுத்தாலும் கீடனின் பறவை மனிதன் கீடனின் முதுகிற்குப் பின்னாலேயே நடந்து கொண்டிருப்பது, கீடன் நகரத்தின் மீது பறந்தபடியே பாய்ந்து வரும் அசாதரண மிருகங்களை நொடிப்பொழுதில் அழிப்பது போன்ற காட்சிகள் மாயவெளிக்கு நம்மை நகர்த்துகின்றன. ரேமண்ட் கார்வரின் What We Talk About When We Talk About Love சிறுகதையை நாடகமாகவே நான்கு முறைகள் நிகழ்த்தப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் அதே கதையில் பலப் புது சம்பவங்கள் நிகழ்கின்றன. அந்த சம்பவங்கள் The Unexpected Virtue of Ignorance என்கிற உப தலைப்பிற்கு காரணமாக அமைகின்றன.
BIRD MAN திரைப்படம் திரைப்பட விழாவில் இரண்டு முறை திரையிடப்பட்டது. நான் ஒரு வாரநாளில் மாலை ஆறு மணிக் காட்சிக்குப் போயிருந்தேன். அரங்கின் முன்னிருக்கைகள் கூட முழுவதுமாய் நிரம்பி இனாரித்துவின் புகழைப் பறைசாற்றின. வழக்கமாய் பிரபல இயக்குனர்களின் திரைப்படங்கள் முடிந்த பின்பு உரையாடல் இருக்காது. இத்திரைப்படத்திற்கும் அதுவே நிகழ்ந்தது. துபாய் திரைப்பட விழாவைக் கடந்த ஏழு வருடங்களாக கவனித்துக் கொண்டிருக்கிறேன். அதன் ஒழுங்கு நேர்த்தியும் விளம்பரமும் புகழும் கூடிக் கொண்டே போகின்றன என்றாலும் திரைப்படத் தேர்வுகளில் அவ்வப்போது சறுக்கிறார்கள். இது அம்மாதிரியான ஒரு வருடம்.

காக்கா முட்டை - துபாய் திரைப்பட விழா -2

kaakaa_muttai

தனுஷ் மற்றும் வெற்றி மாறன் கூட்டுத் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம் காக்கா முட்டை. இயக்குனர் மணிகண்டனின் முதல் திரைப்படம். இதுவரை திரைப்பட விழாக்களில் மட்டும் திரையிடப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் அடுத்த மாதம் திரையங்குகளில் வெளியிடப்படுமாம். மால் ஆஃப் எமிரேட்ஸின் எழாவது திரையரங்கம் கிட்டத்தட்ட நிரம்பியிருந்தது. சொற்ப தமிழ் முகங்களையும் அதிக அளவில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர் முகங்களையும் காண மகிழ்ச்சியாக இருந்தது. குழந்தைகளுக்கான சினிமாப் பிரிவில் இடம்பெற்றிருந்ததால் அரங்கில் சில குழந்தைகளையும் பார்க்க முடிந்தது. நம் மொழி திரைப்படத்தை வெளிநாட்டு ஆட்களுடன் சேர்ந்து பார்ப்பது அலாதியான அனுபவம்தான்.
தமிழில் கடைசியாய் வெளிவந்த குழந்தைகளுக்கான படமெது என யோசித்துப் பார்த்தேன். உடனடியாய் எதுவும் நினைவிற்கு வரவில்லை. தமிழில் எல்லோருக்கும் தெரிந்த ஒரே குழந்தைகள் திரைப்படம் அஞ்சலிதான். அசமஞ்சமாக எனக்கும் அத்திரைப்படம்தான் நினைவிற்கு வந்தது. அஞ்சலி திரைப்படம் வெளிவந்தபோது திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து பள்ளிக் குழந்தைகளுக்கும் பள்ளிக் கூடத்தின் வழியாகவே அத்திரைப்படம் காண்பிக்கப்பட்டது. கிராம்புற பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள், ட்ராக்டரில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வந்து திரையரங்கில் திரைப்படத்தைக் காண்பித்தார்கள். நானும் அப்படித்தான் பார்த்தேன். மல்லி, பசங்க மற்றும் நாசர் நடிப்பில் வெளிவந்த கண்ணாடி என தொடங்கும் ஒரு படம் என ஒன்றன் பின் ஒன்றாக சில படங்கள் நினைவிற்கு வந்தன. ஆனால் அவை யாவுமே குழந்தைகள் சினிமா கிடையாது. இதுவரை தமிழில் குழந்தைகளை மையமாக வைத்து திரைப்படங்கள் வந்திருக்கின்றனவே தவிர குழந்தைகளுக்கான சினிமா என்ற ஒன்று நிகழவேயில்லை. இப்படி ஒரு வெற்றிடப் பின்புலத்தில் காக்கா முட்டைத் திரைப்படம் குழந்தைகள் சினிமா என்பதற்கான நியாயத்தை ஓரளவிற்குப் பூர்த்தி செய்திருக்கிறது.
kakkamuttai_2
காக்கா முட்டை திரைப்படம் சென்னை கூவம் ஆற்றை ஒட்டிய சேரிப்பகுதியில் குறிப்பாக திடீர் நகரில் வசிக்கும் இரண்டு சிறுவர்களின் சில நாட்களைப் பற்றி பேசுகிறது. அண்ணன் தம்பிகளான இருவரும் காகத்தை ஏமாற்றிவிட்டு அதன் முட்டையைத் திருடிக் குடிக்கும் வழக்கத்தைக் கொண்டிருப்பதால் மற்ற சிறுவர்களிடம் காக்கா முட்டை எனும் அடைமொழிப் பெயரைப் பெற்றவர்கள். அண்ணன் பெரிய காக்கா முட்டை, தம்பி சின்ன காக்கா முட்டை. இதில் தம்பி தன் அம்மாவை வெறுப்பேற்ற தன் பெயரை சின்ன காக்கா முட்டை என்றே அழைத்துக் கொள்கிறான். காக்கா முட்டை சகோதரர்களின் தந்தை ஜெயிலில் இருக்கிறார். தாய் பட்டறையில் வேலை பார்த்து குடும்பத்தை நடத்துகிறார். தாயால் சிறுவர்களை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப இயலாமல் போகிறது. இருவரும் பள்ளிக்குப் போகாமல் அருகிலிருக்கும் ரயில் தண்டவாளத்திற்குப் போய் கூட்ஸ் ரயிலில் இருந்து கீழே விழும் கரியை சேகரித்து கடையில் போட்டு அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருவாயை குடும்ப செலவிற்கு தருகிறார்கள். இவர்களுடன் தந்தை வழிப் பாட்டியும் ஒரு நாயும் அந்த மிகச்சிறு வீட்டில் வசிக்கிறார்கள்.
இவர்கள் வழக்கமாய் காக்கா முட்டையை திருடிக் குடிக்கும் மிகப் பெரிய அரச மரம் ஒரு நாள் வெட்டப்படுகிறது. அங்கிருந்த காலி இடம் ஆக்ரமிக்கப்பட்டு பீட்ஸா ஹட் கடை கட்டப்படுகிறது. அந்தக் கடையின் பிரம்மாண்டமும் அங்கு வந்து பீட்ஸா அருந்தும் மனிதர்களையும் காக்கா முட்டை சகோதரர்கள் வியப்பாய் பார்க்கிறார்கள். அதே நேரத்தில் அரசு இலவசமாய் தரும் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றுக்கு இரண்டாய் அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்கின்றது. தொலைக்காட்சியில் பீட்ஸா விளம்பரத்தைப் பார்க்கும் சிறுவர்கள் பீட்ஸாவை எப்படியாவது ருசித்துப் பார்த்துவிட விரும்புகிறார்கள். அதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகளும் அதனால் ஏற்படும் அபத்த விளைவுகளும்தான் இத்திரைப்படத்தின் கதை.
தமிழில் வெளிவந்த விளிம்பு நிலை மனிதர்கள் குறித்தான சினிமாக்களில் வெளிப்படும் மிகைப்படுத்தப்பட்ட பொதுத் தன்மைகள் எதுவும் இத்திரைப்படத்தில் கிடையாது. சமீபத்தில் மெட்ராஸ் திரைப்பட இயக்குனர் ரஞ்சித் ஒரு பேட்டியில் பெரும்பாலான தமிழ் திரைப்படங்களில் பேசப்பட்ட சென்னை மொழி ”கய்தே” ”கஸ்மாலம்” போன்ற சொற்களை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. அதுவே வட சென்னையின் மொழியாக பிறரால் நம்பப்பட்டது. ஆனால் வடசென்னையில் அவ்வார்த்தைகளை யாருமே பிரயோகிப்பதில்லை என்றார். அவை தமிழ் சினிமாக்களில் மட்டுமே இடம்பெறுகின்றன எனவும் ஒரு குறிப்பிட்ட பகுதியை சார்ந்த சினிமா அதன் அசல் மொழி குறித்து கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை என்பது மாதிரியாகவும் அவரின் பேச்சு சில ஆழமான விஷயங்களை தொட்டுச் சென்றது. வெற்றிமாறனும் தனுஷும் வட்டார வழக்கில் கவனமுள்ளவர்கள் என்பது அவர்களின் முந்தைய படங்களான பொல்லாதவனும் ஆடுகளமும் நமக்கு நிரூபித்திருந்தன. எனவே இருவரின் கவனத்தோடு உருவான காக்கா முட்டையின் மொழியும் கதை சொல்லப்பட்ட முறையும் பாவணைகளை உடைத்து யதார்த்ததிற்கு சமீபமாக வெளிப்பட்டிருக்கிறது. திரைப்படத்தின் களமாக வறுமையும் துயரும் இருக்கிறதுதான் என்றாலும் அதை மிகக் கிண்டலாக கேலியாக அத்தனை வெள்ளந்தித்தனத்தோடு படமாக்கியிருக்கிறார்கள். குழந்தைகளின் கள்ளங் கபடமற்ற உலகம் மிகச் சரியாய் பதிவாகியிருக்கிறது. இரண்டுச் சிறுவர்களும் அபாரமாக நடித்திருக்கிறார்கள். இவர்களின் தாயாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் படங்களில் நடித்த பெண்ணா இது! என வியக்க வைக்கும் அளவிற்கு நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். சிறுவர்களின் பாட்டி மற்றும் நைனாவாக நடித்திருக்கும் ரமேஷ் போன்றோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
குழந்தைகளைப் படிக்க வைக்க இயலாத ஒரு சமூகத்தினர் சென்னையின் மையப் பகுதியில், சுழித்தோடும் சாக்கடைக் கழிவு நதிக்கு அருகாமையில் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாத நம் அரசு வீட்டிற்கு இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகளை இலவசமாக வழங்குகிறது. இம்மாதிரி அபத்தங்களை கொதிப்பாக, பிரச்சாரமாக சொல்லாமல் மிக இயல்பாக சொல்லியிருப்பதில் இத்திரைப்படம் தனித்துவம் பெறுகிறது. தங்களுக்கு வாய்த்த வாழ்வைப் பற்றி சதா புகார் கூறிக்கொண்டிருக்காமல் அவ்வாழ்விலும் கிடைக்கும் உயிர்ப்பான தருணங்களில் கதாபாத்திரங்கள் நிறைந்து தளும்புகின்றன.
வர்க்க வித்தியாசம் உலகம் முழுக்க பொதுவான ஒன்று. பணம், நிறம், மொழி போன்றவை இந்த ஏற்றத் தாழ்வுகளுக்கான அடிப்படை காரணங்களாக இருக்கின்றன. ஆனால் இந்தியா அளவிற்கு மலைக்கும் மடுவிற்குமான வர்க்க வித்தியாசங்கள் மற்ற நாடுகளில் அரிதாகத்தான் காண முடியும். இந்த வர்க்க பேதம்தான் இத்திரைப்படத்தின் அடிநாதமாக இருக்கிறது. அதே சமயத்தில் மேல்தட்டு மனிதர்களைப் பார்த்து கீழ்தட்டு மக்கள் வெறுப்பும் வன்மமும் அடையா வண்ணம் தம் விளிம்பு வாழ்வின் சவால்களை, ரகசியங்களை, வியப்புகளை, காக்க முட்டை திரைப்படம் மிக மென்மையானதொரு மொழியில் பதிவு செய்கிறது.
திரையிடலில் இயக்குனர் மணிகண்டனும் கலந்து கொண்டார். படம் பார்த்து முடிந்த பிறகு அவருடன் பார்வையாளர்கள் மிக ஆர்வமாய் உரையாடினார்கள். பெரும்பாலானவர்களின் கேள்வி அச்சிறுவர்களைக் குறித்தே சுழன்றது. மணிகண்டன் இத்திரைப்படத்தை சென்னை திடீர் நகரில்தான் படம் பிடித்திருக்கிறார். பெரும்பாலும் அங்கு வசிக்கும் மக்களையே படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார். பல பகுதிகளை இரவில் படிம்பிடித்ததாகக் கூறுகிறார். ஆரம்பத்தில் சிறுவர்களிடம் வேலை வாங்கக் கடினமாக இருந்ததென்றும் போகப்போக அவர்கள் படத்தோடு ஒன்றிப்போனதையும் தெரிவித்தார். கதையைப் போலவே நிஜத்திலும் சிறுவர்கள் இறுதிக் காட்சியில்தான் பீட்ஸா உணவையே முதன்முறையாய் ருசித்தார்களாம். நிஜத்திலும் அவர்களுக்கு பீட்ஸாவின் சுவை பிடிக்கவில்லை என தெரிவித்தார். பின்பு பார்வையாளர்களிடமிருந்து தொடர்ந்து காக்கா முட்டை போன்ற நல்ல படங்களைக் கொடுங்கள் தமிழ் சினிமா மசாலா உலகிற்குள் போய் விடாதீர்கள் என்பன போன்ற தமிழ் சூழல் சார்ந்த வேண்டுகோள்கள் இயக்குனருக்கு விடுவிக்கப்பட்டன. இயக்குனரும் தமிழில் நல்ல படம் பண்ண ஆட்கள் இருக்கிறார்கள்தாம் ஆனால் தயாரிப்பாளர்கள் தாம் இல்லை என இந்த காக்காமுட்டை எதிர்கொண்ட தயாரிப்புச் சிக்கல்களைப் பகிர்ந்து கொண்டார். வெற்றிமாறனும் தனுஷூம் இத்திரைப்படம் உருவாவதற்கு முக்கியமான காரணங்களாக இருந்திருக்கிறார்கள். மணிகண்டன் அவர்களுக்கு தன் நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.
kaakaa_muttai_3
தமிழில் மாற்று சினிமாக்கள் வெளிவரும் சூழல் எப்போதுமே இருந்தது கிடையாது என்பது ஓரளவிற்கு உண்மையான வாதம்தான். பார்வையாளர்கள் இன்னும் தயாராகவில்லையா அல்லது திறமையான திரைப்பட ஆளுமைகள் உருவாகவில்லையா என்பது போன்ற விவாதங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதாம் இருக்கின்றன என்றாலும் தமிழில் நல்ல சினிமாக்கள் வெளிவர என்றுமே வணிகரீதியிலான தடை இருந்தது கிடையாது. இந்த நல்ல சினிமாவிற்கான கூறுகளை பார்வையாளர்களும் படைப்பாளிகளும் சேர்ந்தேதான் வரையறுக்க வேண்டும். அதிநாயக பிம்பங்களை, துதிமனப்பான்மைகளை சினிமாவில் இருந்து முற்றாக களைந்தால் மட்டுமே தமிழில் தொடர்ந்து நல்ல சினிமாக்கள் வர வாய்ப்பிருக்கிறது. பார்வையாளர்களை அத்தகைய பிடிகளில் இருந்து வெளிவரச் செய்ய ஆழமான விமர்சனங்கள் மற்றும் சினிமா குறித்தான விரிவான பார்வைகள் உதவலாம். அத்தகைய சூழல் சமூக வலைத்தளப் பரவலாக்கம் மூலம் உருவாகி வருவதாகவே நம்புகிறேன். இது ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தி விடும் என்பதை விட தமிழ் சினிமாவில் நிறைந்திருக்கும் அபத்தங்களை ஓரளவிற்கு குறைக்கும் என எதிர்பார்க்கலாம். காக்கா முட்டை போன்ற திரைப்படங்கள் இந்நம்பிக்கையை வலுப்படுத்துவதாக அமைகின்றன.
இத் திரைப்படம் வணிக ரீதியிலாகவும் தமிழ் நாட்டில் வெற்றிபெற நம் வாழ்த்துகள்.

மேலும்

துபாய் சர்வதேசத் திரைப்பட விழா 2014 - 1

பதினோராவது துபாய் சர்வதேசத் திரைப்பட விழா டிசம்பர் பத்தாம் தேதி துவங்கி பதினேழாம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் நூற்றுப் பதினெட்டுத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. வழக்கமாய் Arabian Nights, Gulf Voices, Celebration of Indian Cinema, Cinema of Asia Africa, Cinema for Children & Cinema of the World எனும் உப பிரிவுகளில் திரைப்படங்கள் தொகுக்கப்படும். இந்த வருடம் Celebration of Indian Cinema – Cinema of Asia Africa ஆகிய இரண்டு பிரிவுகளும் இல்லை. மொத்தமாய் இந்திய ஆசிய ஆப்பிரிக்கத் திரைப்படங்களை Cinema of the World எனும் ஒரே பிரிவில் கொண்டுவந்து விட்டனர். இதைத் தவிர்த்து உள்ளூர் படைப்புகளுக்கென முஹர் பிரிவும் உண்டு. இந்தப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளூர் படைப்புகளுக்கு மொத்த பரிசுத் தொகையான 575,000 யு.எஸ் டாலர்கள் பிரித்து அளிக்கப்படும். துபாய் திரைப்பட விழாவில் மத்திய கிழக்கின் திரைப்படங்கள் அதிக அளவில் திரையிடப்படும். மற்ற திரைப்பட விழாக்களில் இல்லாத அளவிற்கு பிராந்தியம் சார்ந்த படைப்புகள் அதிகம் இடம்பெறும்.

இவ்வருடப் பட்டியலில் நான் பெரிதும் எதிர்பார்த்த துருக்கி இயக்குனர் நூரி பில்ஜெ ஜிலானின் Winter Sleep திரைப்படம் இடம்பெறவில்லை. Winter sleep கான் திரைப்பட விழாவில் தங்கப் பனை விருதைப் பெற்றிருந்ததாலும் சமீபமாய் பார்த்திருந்த Three monkeys, distant மற்றும் once upon a time in Anatolia ஆகிய நூரியின் திரைப்படங்கள் தந்த புத்துணர்வாலும் இத்திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க ஆர்வமாக இருந்தேன். இதை சரிகட்டும் வகையில் எனக்கு மிகப்பிடித்த இயக்குனரான அலெஹாந்த்ரோ யொன்ஸேல்ஸ் இனாரித்து வின் BIRDMAN திரைப்படம் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. கூடுதலாக தமிழ் திரைப்படமான காக்கா முட்டையும் பார்க்க முடிந்தது. இவை தவிர இடம்பெற்றிருந்த மற்ற படங்களின் மீது ஈர்ப்பு வரவில்லை. ஏனோ இந்த வருடம் மத்தியக் கிழக்கின் திரைப்படங்களை காணும் ஆர்வமும் வரவில்லை.

சில வருடங்களுக்கு முன்பு குர்து படவிழா என்கிற உபதலைப்பில் குர்திஸ்தானைக் களமாகக் கொண்ட திரைப்படங்களை திரையிட்டார்கள். அதில் சில படங்களைப் பார்த்து மிகுந்த மன உளைச்சல் அடைந்தேன். மேலும் இரானிய யதார்த்த சினிமாக்களின் மீதும் சமீபமாய் அலுப்பு படர்ந்திருக்கிறது. ஓரிரண்டு எகிப்து மற்றும் லெபனான் படங்களையும் சென்ற வருடங்களில் கடனே என்று பார்த்த அனுபவமும் இருப்பதால். இவ்விழாவில் என்னுடைய தேர்வு மிகக் குறைவானதாக இருந்தது. தேர்ந்தெடுத்த இரண்டு படங்களின் தலைப்புகளும் பறவை சம்பந்தமாய் அமைந்தது மிக யதேச்சையான ஒன்றுதான்.
மேலும்