Thursday, August 21, 2008

சாராவின் இறக்கைகளும் ஜோவின் பியானோவும்...


சாரா
விற்கு பனிப்புகை விலகியிராத காலைகளில் பசிய இலைகளில் தேங்கியிருக்கும் பனித்துளியைப் பருக மிகவும் பிடிக்கும்.ஜோ இந்த வினோத பழக்கத்தை கிண்டலடிப்பான்.'பூனைக்குட்டிகளின் சாபம் வாங்கிக்கொள்ளாதே' என பயமுறுத்துவான். சாரா தன் கண்களிமைத்துப் புன்னகைப்பாள்.இரு கண்களையும் வேகமாய் இமைத்துவிட்டு புன்னகைப்பது சாராவின் தனியடையாளம்.அவள் இந்த நளினங்களை எங்கிருந்து, யாரிடமிருந்து பெற்றாள் என ஜோ சில தேநீர் அருந்தும் மாலைகளில் யோசித்துக் கொண்டிருப்பான்.

சாரா கோபித்தோ,முகம் சுருங்கியோ,ஒருபோதும் கண்டதில்லை.பிடிக்காத ஒன்றினை எதிர்கொள்ளும் நொடியில் சின்னதாய் ஒரு நெற்றிச்சுருக்கம் உடனே அதையும் அவசரமாய் மாற்றிக்கொள்வாள்.ஜோ விற்கு சாராவுடன் வசிப்பது மிகவும் இணக்கமாயிருந்தது.அதீத அன்போ, அதீத வெறுப்போ, எதிர்பார்ப்போ, ஏமாற்றங்களோ, இல்லாமல் இயல்பாய், மிருதுவாய் நகரும் நாட்கள் வெகுசுவாதீனமாய் இருந்ததவனுக்கு. ஜோவிற்கும் சாராவிற்குமான பொதுப்புள்ளிகள் இருவருமே மாற்றங்களை பெரிதாய் விரும்புவதில்லை. தினந்தோறும்களில் சலிப்பும் ஏற்படுவதில்லை.விட்டுக்கொடுத்தல் என்கிற வார்த்தையினை இருவருமே வெறுத்ததால் வாலசைத்து நகரும் நாய்குட்டியினைப்போல் நாட்கள் ஓடிப்போனது.

ஒரு நாளில் மழை துவங்கிய விடியலின் நசநசப்பில் ஜோ விற்கு சாராவும், சாராவிற்கு ஜோ வும் பரஸ்பரம் அலுத்துப்போனார்கள்.(இப்போது இந்த வீட்டில் யாரை அனுப்பிவிட்டு யாரை வைத்துக்கொள்வதென கதை சொல்லி சிறிது குழம்பினான் பின்பு தானொரு ஆண் என்பதினை உணர்ந்து சாராவை அனுப்பிவிட்டான்)

சாரா போன பத்து நிமிடத்தில் நசநச மழை நின்றது.விட்டுக்கொடுத்தல் என்ற நேரடிப் பெயரில் இல்லாமல் நிறைய விசயங்களை சாராவிற்காக மாற்றிக் கொண்டது அப்போதுதான் அவனுக்கு உறைக்க ஆரம்பித்தது.நடு வீட்டில் அமர்ந்து சிகரெட் பிடித்தான்.அவனுக்கு மிகவும் பிடித்தமான, இசைத்து வெகுநாளாகியிருந்த, குளிரில் ஒரு மூலையில் ஒண்டிக்கிடந்த பியானோ வை எவ்வித இசைக்குறிப்புகளின் துணையில்லாமல் அதிர்க்க ஆரம்பித்தான்.பியானோ அதிர்வில் வீடு தலைகீழானது.அணிந்திருந்த உடைகளை கழட்டிப் போட்டான்.பியானோவின் மீது கால் தூக்கிப்போட்டுப் புகைத்தபடி சுயமாய் இன்பித்தான்.உச்சதிர்வில் உள்ளடங்கிய எழுச்சிகளை மீண்டுமெழுப்பும் பொருட்டு எழுந்து நின்றுக்கத்தினான். ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ.........ஏற்கனவே தலைகீழான வீடு இப்போது ஒட்டிக்கொண்டிருந்த இடத்திலிருந்து உதிர ஆரம்பித்தது.உதிர்வுகளிலிருந்து ஒரு துகளென செந்நிறப்பூனையொன்று பியானோவின் மீது குதித்தது.தன் கூறிய நகங்களினால் பியானோவை இசைக்க ஆரம்பித்தது.விட்டிருந்த நசநச மழை பெருமழையின் வடிவம் கொண்டு நேரடியாய் அறை நிறைத்தது.

சாராவிற்கு நிறைய நண்பர்கள்.சிறிது நேரம் யோசித்து ஆனெட் வீட்டிற்குப் போவதாய் முடிவெடுத்தாள்.ஆனெட் சாராவினை எதிர்பார்க்காதது அவளின் விரிந்த சிறுவிழியில் தெரிந்தது.கடற்கரைக்கு வெகு சமீபமான ஆனெட்டின் வீடு சாராவிற்குப் பிடித்திருந்தது.மிகப்பெரும் சன்னல்கள் வழியே மழை சிறு கோடுகளாய் கடலில் இறங்கிக் கொண்டிருந்தது.சாராவிற்கு கடைசியாய் எப்போது அழுதோம் என யோசிக்கத் தோன்றியது. சன்னல் திரைச்சீலைகளை கெட்டியாய் பிடித்தபடி கடலைப் பார்த்துக்கொண்டே யோசித்தாள்.நினைவில் வரவில்லை.அறைக்கதவை சாத்தி விட்டு அதிரும் இசையை நிரப்பினாள்.சத்தம் வெளியில் கேட்காதென உறுதிபடுத்திக்கொண்டு பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.பல வருடங்களாய்த் தேங்கி இருந்த த/கண்ணீர் விழிகளின் வழியிறங்கி அறையை நிறைத்தது. அறையிலிருந்த அனைத்தும் எடையிழந்து மிதக்கத் துவங்கின.

அறை வெகு நேரமாய் தட்டப்படுவதை உணர்ந்த சாரா நிரம்பியிருந்த கண்ணீரை வழித்தெடுத்து சன்னல்வழிக் கொட்டினாள்.திரைச்சீலைகளை அகல விரித்தாள் கண்ணீர் கழுவிய அறையும் சாராவும் சூரிய ஒளி பட்டு மினுமினுத்தனர். திருப்தியாக கதவைத் திறந்தாள்.ஆனெட் உணவிற்காக அழைக்க வாயெடுத்தவள் திடீரெனப் பிரகாசிக்கும் சாராவைப் பார்த்துப் பிரம்மித்தாள்.சாராவின் கண்கள் நீல நிற ஒளி யினை உமிழ்ந்தன.ஆனெட்டின் இதயம் பனிக்கட்டியாக உருகத் துவங்கியது.தாங்க இயலாத பிரம்மிப்போடு சாராவினை அணைத்துக் கொண்டாள்.சாரா ஆனெட்டின் முகமேந்தி உதடுகளில் மென்மையாய் முத்தமிட்டாள்.

ஜோ இந்த யாருமில்லாத கணத்தை நேசித்தான்.எதனிலிருந்தோ விடுபட்ட உணர்வை உணரமுடிந்தது. இது இத்தனை நாளாய் எங்கிருந்தது எனப் பிதற்றினான்.'பெண் கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரிய சுமை' எனக் கத்தினான். வைன்கள் மட்டுமே இருந்த குளிர்ப்பெட்டியை எட்டி உதைத்தான்.அலமாரி கலைத்து. அவளுக்குப் பிடிக்காத உடையணிந்து கிளம்பினான். தானின்று மிக வசீகரமாயிருப்பதாய் நம்பினான்.ஸ்ட்ரிப்டீசை வெறித்தபடி பியரும் ரம்மும் கலந்ததாய் இரண்டு ரவுண்ட அடித்தான். மேலதிகமாய் நாலு ஷாட் டகீலா அடித்தான்.பேரரிடம் தாட்டியான கருப்பு தேசப் பெண்ணொருத்தி வேண்டுமென்றான். பேரர குனிந்து ஆசோல் எனத் திட்டியதில் வெளிறி வெளிவந்தான்.ரத்தம் தெறிக்க ஒரு வலிமையான பெண்ணைப் புணர வன்மம் கொண்டான்.சாலையோரப் பெண்ணொருத்தி அவனின் நிலை கொள்ளாமையுணர்ந்து அவளிருப்பிடம் அழைத்துப் போனாள்.மிகுந்த எழுச்சிகளோடு அவளை உண்ண வெறிகொண்டான்.உடல் சுத்தமாய் அவன் எண்ணங்களோடு ஒத்துழைக்கவில்லை.போராடித் தோல்வியுற்றவனைப் பார்த்து அவள் சிரிக்கவாரம்பித்தாள்.அவளின் வெண்கலச் சிரிப்பு அக்குறுகலான அறையின் சுவர்களில் மோதிப் பட்டுத் தெறித்தது.காதுகளைப் பொத்திக் கொண்டான்.வாரிச்சுருட்டிபடி வெளிவந்தான். மிகவும் அவமானமாய் உணர்ந்தான்.நடுச்சாலையில் முகம்பொத்தியமர்ந்து அழத்தொடங்கினான்.

சாரா இப்போதெல்லாம் பனித்துளி குடிப்பதில்லை.ஆனெட் வீட்டில் செடிகளோ மரங்களோ இல்லை சன்னல்களின் முன்பு விரிந்திருந்தது கடல்.விழித்தெழுந்தவுடன் புகைக்கும் பழக்கமும் எப்படியோ வந்து விட்டிருந்தது. புகையும் தேநீருமான காலைகள் பனித்துளி காலைகளைப் போலவில்லை என்றாலும் இந்த மெல்லிய போதையும் பிடித்தமானதாகத்தான் இருந்தது. ஆனெட் சாராவைக் கொண்டாடினாள்.தானெப்போதும் சந்தித்திராத பேரழகியென நள்ளிரவுகளில் புலம்பினாள்.தன் நாவுகள் மிகப்பெரும் புனிதம் செய்தவை எனப் பிதற்றினாள்.சாராவிற்கும் ஆனெட்டின் பைத்தியம் பிடித்திருந்தது. புதுமையாகவிருந்தது.மிக விடுதலையாய் உணர்ந்தாள்.இருப்பினும் பழகிய உச்சங்களில்லாத நொடிகளில் அவளுக்கு ஆனெட்டை எட்டி உதைக்கத் தோன்றியது.ஒரு நாள் விடியலில் எட்டி உதைத்தே விட்டாள்.சற்றுத் தள்ளி விழுந்த ஆனெட் ,மிக அவமானமாய் உணர்ந்தாள்.சாராவின் துணிகளை பெட்டியில் அடைத்து, அவள் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளிக் கதவை மூடினாள்.

இரவு ஆடையோடு வெளிவிழுந்த சாரா நடுச்சாலையில் முகம்பொத்தியமர்ந்து அழத்தொடங்கினாள். ஏற்கனவே அவளால் வழித்தெடுத்து வெளிக்கொட்டப்பட்டிருந்த கண்ணீர், தரையிலிருந்து கண்களுக்குள் பாயவாரம்பித்தது.

ஜோ சாராவின் மீதமிருக்கும் உடைகளை எரிக்க விரும்பினான்.அவள் வார்ட்ரோபை குடாய்ந்ததில் தங்க நிற இறக்கைகள் இரண்டும், ஒரு மீன் வாலும் தரையில் விழுந்தன. உள்ளில் பதித்து வைக்கப்பட்டிருந்த கண்ணாடியில் சாரா நடுச் சாலையில் அழுதுகொண்டிருப்பது தெரிந்தது.ஜோ சத்தமாய் சிரிக்க ஆரம்பித்தான்.அவன் வாழ்நாளில் இதுவரை சிரித்திராத அளவுக்கு சத்தம் போட்டு சிரித்தான்.கண்ணாடியைப் பார்த்துப் பார்த்துச் சிரித்தான்.மெல்லச் சிரிப்படங்கி மீண்டும் கண்ணாடி பார்த்ததில்,தரையில் விழுந்த மீன் வாலையும், இறக்கைகளையும், சாரா அணிந்திருந்தாள்.அவன் பார்த்துக்கொண்டிருந்தபோதே அவள் கடலில் நீந்தி, வானத்தில் பறந்தாள். ஒரே சமயத்தில் வானத்திலும், கடலிலும் சாராவிருந்தாள்.கடல் விரிந்து வானம் தொட்டதா இல்லை வானம் குறைந்து கடல் தொட்டதா என்பதை உணர அங்கே எதுவுமில்லை.கடலும் வானமும் சேர்ந்து மொத்தமும் நீலமாயிருந்தது.

Saturday, August 16, 2008

திரை இசை பாடல்கள்- வெகு சன ரசனை-காதல் கவிதைகள் மற்றும் திரைப்படங்கள்

திரும்பிவர இயலா ஒற்றையுலகத்தில்
நம்மைத் தொலைத்தது அந்த இசை
வீணையின் அதிர்வுகளில்
நினைவு
முடிவிலியின் சுவர்களில் மோதி
இரத்தமிழந்தது
இப்போது உன் உதடுகளிலிருந்து துவங்குவதே
மிகச்சரியானதாயிருக்கக்கூடும்


வெகுசன ரசனைகள் குறித்தான புரிதல்களையும் திரையிசையின் மீதும் திரை இசைப் பாடல்களின் மீதும் விருப்பம் கொண்ட நண்பர் ஒருவருடனான உரையாடல் திரை இசை பாடல்கள் மீதிருந்த சில இறுக்கங்களை விடுவித்தது போலிருந்தது.குறுக்கெழுத்துப் புதிர்களுக்கு நிகரான ஒரு கட்டமைப்பிலேயே கவிஞர்களுக்குப் பாடல்களெழுத சுதந்திரம் வழங்கப்படும் சூழலில் கவிஞன்/ பாடலாசிரியன் தனது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள பாடல்களைச் செய்துகொண்டிருக்கிறான்.கவிஞர்களை விட திறமைசாலிகளை வளர்த்தெடுக்கும் இடமாக அல்லது திறமைசாலிகள் மட்டுமே கோலோச்சும் இடமாக திரை இசைப் பாடல்கள் உருக்கொண்டுள்ளன.இத்தகைய வெளி யிலிருந்து சில நல்ல பாடல்கள் வெளிவருவதைக் கண்டிப்பாகப் பாராட்டியே தீர வேண்டும்.சமீபத்தில் வந்துகொண்டிருக்கும் சில நல்ல பாடல்களும்,இசையும் தமிழ்த்திரையிசையை இன்னும் உயிர்ப்பாக வைத்துக்கொண்டிருக்கின்றது.பெரும்பான்மைக் குப்பைகளை கண்டிக்காமலிருக்கவும் முடியவில்லை.சமீபத்தில் சத்யம் எனும் தெலுங்கு டப்பிங் படத்தில் நயனை பால்பப்பாளி என விளித்து ஒரு குத்துப் பாடல்.எழுதியவனைச் சொல்வதா? எழுதத் தூண்டியவனைச் சொல்வதா? கேட்டு இன்புறுவனைச் சொல்வதா? இந்தக் கருமாந்திரங்களை வெகுசன ரசனை என பொத்தாம் பொதுவாக வகைப்படுத்தி தன் சுய அரிப்புகளுக்கு கூட்டம் சேர்க்கும் புல்லுருவிகளினை எதைக் கொண்டும் அடிக்கலாம்.வெகு சன ரசனை என்பது கீழ்த்தரமானதாய் ஒரு போதும் இருக்கமுடியாது.வெகு சன ரசனை என்பது இலகுவானதும், பொழுதுபோக்கு சார்ந்ததுமாய்த்தான் இருக்கமுடியும்.அதிக ஆபத்தில்லாத ராமராஜன் திரைப்படங்கள் குறித்து இப்போது நாம் பேச ஆரம்பித்திருப்பது வெகு சன ரசனைக்கு சரியான புரிதல்களாய் இருக்க முடியும்.

ADNAN SAMI யின் "bhigi bhigi rato mein..." பாடலை இசையுடன் மொழிபெயர்க்க நண்பர்களுடன் ஓர் இரவைப் பகிர்ந்துகொள்ள முடிந்தது.இந்தி,உருது போன்ற பிற மொழிப் பாடல்களை தமிழில் இசையோடு மொழிபெயர்ப்பது சிறிது கடினமானது.சந்தத்துடனும்,பொருள் மாறாமலும், மூலத்தைச் சிதைக்காமலும் மொழிபெயர்க்க வேண்டுமென்கிற எங்களின் ஆவல் ஓரளவிற்கு நிறைவேறியது.ஆனால் பாடல் மிகச் சாதாரண பிற தமிழ்பாடலைப் போலத்தானிருந்தது. பெரிதாய் கவித்துவமில்லாமல் போனது குறித்து எனக்கு சிறிது வருத்தமே ஆனால் மூலத்தை மாற்றுவதில் / சிதைப்பதில் எனக்கு உடன்பாடும் இல்லை.என் அறிவுக்கெட்டியவரை பிற மொழிப்பாடல்கள் / கவிதைகளில் தெறிக்கும் கவித்துவத்தை விட தமிழில் நாம் எட்டிய கவித்துவ உச்சம் சிறிது அதிகமாகத்தான் தோன்றுகிறது.நமது மொழியின் ஆளுமை அல்லது நமது மொழியின் மிக அதிக வார்த்தைகள் வெவ்வேறு உணர்வுகளுக்கு ஒரே வார்த்தைகளை கையாள வேண்டிய சிக்கல்களில்லாதிருக்கின்றது.நிறைய வார்த்தைகளை பல்வித உணர்வுகளுக்கு வழங்க ஏதுவாக அமைந்திருப்பது நமது மொழியை இன்னமமும் நேசிக்கத் தூண்டுகிறது.

பண்புடனில் தொடர்ச்சியாய் காதல் கவுஜை/கவிஜை/கவிதை களை எழுதிக்கொண்டிருப்பது இலகுவான மனநிலையை வெளிப்படுத்துவதாய் உள்ளது.விளையாட்டாகத்தான் எழுத ஆரம்பித்தது.ஒரு வித கிண்டலடிக்கும் மனநிலையில்தான் எழுதத் தொடங்கினேன்.சில சுமாராய் வந்திருப்பதால் தொடரும் எண்ணமும் இருக்கின்றது.

கூடுகளை விரும்பிடாத பறவையொன்றின் பின்
தொடர்ச்சியாய் பயணித்துக் கொண்டிருக்கிறேன்
இளைப்பாறல்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவனெனினும்
பறவையின் வசீகரம் இளைப்பாறல்களை
தொலைத்துவிடச் செய்தது
இதுவரை கடந்திடாத தொலைவுகளை கடந்தபின்னும்
பறவை பறந்துகொண்டிருக்கிறது
வழி தப்பும் பயத்தில்
நானும் தொடர்ந்துகொண்டிருக்கிறேன்....


காதல், உறவு, வாழ்வு என எல்லாவற்றையும் இதனுள் பொருத்திக்கொள்ளலாம் போலத்தானிருக்கிறது.

ட்விட்டர் பக்கம் ஒதுங்கியதில் நிறைய சுட்டிகளைப் பெறமுடிந்தது.சுரதா கொடுத்திருந்த கடவுளின் குழந்தைகள் எனும் பாலுமகேந்திராவின் குறும்படம் மனதைத் தைத்தது.தொடர்ச்சியாய் மனநலம் குறித்தாய் கண்ணில் பட்டு இம்சிக்கிறது.உள்ளே இருந்து சில குரல்கள் தந்த அயர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் வெகு நாட்களாய் பார்க்காமல் வைத்திருந்த One Flew Over the Cuckoo's Nestதிரைப்படத்தையும் கடந்த வாரத்தில் பார்த்தேன்.முடிவை ஏனிப்படி குரூரமாக்கினார்கள் என புலம்பியபடியிருந்தேன்.சில நெருடல்களிருப்பினும் இந்தப் படம் எனக்குப் பிடித்தேயிருந்தது.இத்திரைப்படத்தில் வரும் குழு உரையாடல்கள் மிகச் சிறந்த முறையில் வந்திருந்தன.கோபியும் இந்த அணுகுமுறையை விரிவாய் பேசியிருப்பார்.தொடர்ச்சியாய் பேச முடியாத billy கதாபாத்திரம் ஏற்படுத்திய பரிதாபம் வெகுநேரம் நீடித்திருந்தது.

ஜெய மோகனின் காமரூபினி படித்தேன்.ஜெமோவின் அடுத்த படியென நண்பர் ஒருவரால் சிலாகிக்கப்பட்டிருந்த அளவிற்கு இதில் ஒன்றுமில்லை.பெண்ணை தொடைகளாய், முலைகளாய், யட்சியாய், காமாந்தகியாய் மட்டுமே பார்க்கத் தெரிந்த புனிதர்.ரப்பர், எசமாடன், டார்த்தீனியமென இவரது புனைவுகளிலிருந்தே சுட்டு எழுதப்பட்டிருந்த இன்னொரு புனைவாகத்தான் என்னால் இதை அணுகமுடிந்தது.வார்த்தைகளைக் கொட்டி ஜெமோ படைக்கும் பிரம்மாண்ட படையல்களின் மீது உண்மை சாவகாசமாய் கால் தூக்கி ஒன்றுக்கிருந்து போகிறது.மாறாய் உயிர்மை ஜீலை இதழில் வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன சிறுகதை மனதில் வெகு நேரம் தங்கியிருந்தது.அகம் புறம் என சிறுமியின் வினோத உலகத்தை பறவைகள் கொண்டு புனைந்திருந்தது அற்புதமாய் வந்திருந்தது.சுகி திடீரென சொல்லும் புல் புல் லில் சிறிது அதிர்ந்து போனேன்.

AKira வின் Dreams படத்தை இரண்டாம் முறையாக பார்க்கவாரம்பித்து முடிக்க முடியாத மன உணர்வில் நிறுத்திவிட்டேன்.நிகழிலிருந்து பிடுங்கி பெருங்கனவொன்றில் எறிந்தார்போன்ற உணர்வைத்தான் இத்திரைப்படம் தருகிறது.சிறுவனின் கனவுகளில் உயிர்கொள்ளும் peech மரங்கள்,மழையும் வெய்யிலும் அடிக்கும் பொழுதொன்றில் நரியின் திருமணம் பார்க்கபோய் வினோத மனிதர்களை பார்த்து ஆபத்தில் சிக்கும் இன்னொரு சிறுவன்,வான் கோவின் ஓவியங்கள் வழிப் பயணித்து வான்கோ வை சந்தித்து திரும்பும் பார்வையாளன், போரில் இறந்த வீரர்கள் உயிர்கொண்டு கமாண்டரினை கலங்கடிக்கும் வினோத tunnel என வினோதங்களாலும் பிறழ்வுகளாலும் நிரம்பிய வெளி.பிரம்மிப்பையும் அயர்ச்சியையும் ஒன்றாய் தரவல்ல tarkoyevski யின் திரைப்படங்களினையொத்த Akira வின் படம். காட்சியூடகத்தின் வலிமையை அழுத்தமாய் சொன்ன படமிது.பிரம்மிப்பொழிந்த மனநிலையில் இத்திரைப்படத்தை விரிவாய் பதியவும் எண்ணம்.

ஒரு மாலையின்
மேகக் கவனித்தலின்போது
நினைவை அசைத்தது
அந்தியின் பொன்னிறம்
மேகத்தை விட்டு
அடிவான நிறங்களில் கரையும்போது
இரவுப்பெண் தன் நீளக் கருங்கூந்தலினால்
வானத்தை மூடவாரம்பித்தாள்
அது உன் கூந்தலிழைகளில் புதையும்
என் முகத்தினையொத்தபடி
நிறங்களை விடுவித்து
கருமையில் புதைந்து கொண்டது...

Friday, August 8, 2008

சில குரல்களும் நிறைய பம்மாத்துக்களும்


நிகழ் எப்போதும் யாராலாவது,எதனாலாவது பழிக்கப்பட்டோ பழிவாங்கப்பட்டோதான் வந்திருக்கிறது.எதையாவது ஒன்றினை சமாதானத்திற்காக,ஆறுதலுக்காக துணைக்கழைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது."நீ அப்படி பண்ண!அதுக்கான தண்டனை இது" இப்படி எதையாவது சொல்லித் தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.கிட்டத்தட்ட நினைவு தெரிந்த நாள் முதல் எனக்கிப்படித்தான் நேர்கிறது.சில பொழுதுகளில் "எனக்கு மட்டும்தான் இப்படியா?" என்றெல்லாம் சிந்திக்கத் தோன்றும்.கவிழ்ந்த மாலையில், தூக்கம் போன அதிகாலைகளில், இப்படி தன் சார்ந்த இரக்கங்களும் புலம்பல்களும் அதிகமாக இருக்கும்.என் நிகழை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது தோன்றும் சுய பச்சாதாபம் தாங்க இயலாதது.ஆரம்பகாலத்தில் சிகெரெட் புகைத்தேன்.அதன் எண்ணிக்கைதான் கூடியதே தவிர என்னை சமதளத்திற்கு கொன்டு வர அதனால் இயலவில்லை.பின்பு மது.இது கொஞ்சம் உதவி புரிந்தது.ஆனால் அது அடுத்த நாள் காலையில் இன்னும் குற்ற உணர்வுகளை அதிகப்படுத்தும்.என் குடும்பத்தில் யாருக்கும் எந்த பழக்கமும் இருந்திராததால் என் குடும்ப பரம்பரையையே இழிவுபடுத்தியதாய் உணர்வேன்.அடுத்த முறை குடிக்கும் தருணத்திற்கு முன்பு வரைக்கும் அந்த எண்ணங்கள் இருக்கும்.குடிக்கும்போது மட்டும் அந்த எண்ணங்களோ,குற்ற உணர்வுகளோ ஏற்படுவதில்லை.ஆனால் அடுத்த நாள் காலையில் மீண்டும் அதே எண்ணங்கள். இன்னும் அடர்த்தியாய்.இந்த தாங்கொணா வேதனையை என்னால் சரியாய் எழுத முடியவில்லை.ஒரு கட்டத்தில் குடிப்பதையும் நிறுத்திவிட்டேன். இப்போது 'மாற்று'க்கான எந்த வழியும் இல்லை.

இது போன்ற ஒரு சூழலில் நான் என்ன செய்திருக்க வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்கள்?.

0.தியானம் செய்வது.
அ.தற்கொலை பண்ணி செத்துப்போவது.
ஆ.காதலிப்பது.
இ.திருமணம் செய்துகொள்வது.
ஈ.திருமணமாகி இருந்தால் டைவர்ஸ் செய்வது.

0.தியானம் செய்வது:
முதலில் இந்த தியானம் என்னவென்றால் என்ன இழவென்று எனக்கு சரியாய் புரியவில்லை. ஒரு முறை சூப்பர் ஸ்டார் தியானம் செய்ததால்தான் சூப்பர்ஸ்டாரானேன் என ஒரு டிவி பேட்டியில் சொன்னாராம்.அதை அடியொற்றி எண்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ்குடிமகன்/ள் கள் தியானம் செய்தார்களாம்.பெரும்பாலான மகன்களின் மனத்திரையில் முலைகளும்,மகள்களின் மனத் திரையில் குறிகளுமாய் நினைவில் மோத,சிறிது நாட்களில் அதைக் கைவிட்டு வழமைக்கு திரும்பினார்களாம்.இதைச் செவி வழி கேட்டிருந்த நான் அந்த கருமத்தை முயற்சிக்காமலேயே இருந்தேன்.ஆனால் இந்த எண்ணங்களின் இம்சை பொறுக்கமாட்டாமல் இதை செய்துதான் பார்க்கலாமே என ஒரு முடிவினுக்கு வந்தேன்.எதையும் முறையாக தொடங்குவதில் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது.மொறையா சரக்கு ஊத்தி சைட்டிஷ் தொட்டு ச்சீ கருமம்..

ஒரு குருவின் மூலமாய் கற்றுக்கொள்வது சரியாயான வழி் என நண்பர் ஒருவர் சொன்னபடியால் நகரின் பிரதான குப்பைத்தொட்டி,குட்டிச்சுவர் மற்றும் காம்பவுண்டு சுவர்களில் சினிமா, மூல, பவுத்திர போஸ்டர்களோடு போஸ்டர்களாய் ஒட்டப்பட்டிருக்கும் தியான சாமியார்களின் விளம்பரங்களை வரிவிடாமல் படிக்கத் துவங்கினேன்.எல்லா சாமியார்களின் பெயர்களும் ஆனந்தாவில் முடிந்தது.ஒரு வேளை அவர்களிடம் போகும் நமக்கும் ஆனந்தம் பொங்குமோ என்னவோ?.

இறுதியாய் ஒரு சாமியாரைத் தேர்ந்தெடுத்தேன்.அவர் இளைஞராக இருந்ததும் ஒரு காரணம். ஒரு இளைஞன் மனச இன்னொரு இளைஞனாலதான் புரிஞ்சிக்க முடியும்..சாமியாருக்கு வயசு 24.ரொம்ப சின்ன வயசுலே ஞானம் அடைஞ்சிட்டாராம்.இந்த ஞானம் அப்படிங்கிறது இன்னாங்கிறதுதான் அடுத்த பெரிய டவுட்..மொதல்ல தியானம் அடுத்து ஞானம்..மலை சுற்றும் வழியிலிருக்கும் அவரின் ஆசிரமத்துக்குப் போனேன்.உள்ளே எங்கெங்கு காணினும் பெண்கள்.18 வயதிலிருந்து 25 வயதிற்குள் இருக்கும் பெண்களின் ஆடைகள் பச்சை நிறத்திலும், 25ல் இருந்து 35 வயதிற்குள்ளான பெண்களின் ஆடைகள் இளஞ்சிவப்பு நிறத்திலேயும், 35 ல் இருந்து 45 வயதுவரை அடர் நீலத்திலுமாய் ஆடைகள் (புடவை)அணிந்திருந்தார்கள்.இந்த கும்பல்ல என்னத்த தியானம் பண்ரது?..சரி இவ்ளோ தூரம் வந்துட்டமேன்னு அந்த நீளமான வரிசைல நிக்க ஆரமிச்சேன்.ரொம்ப தூரத்தில சாமியார் உட்கர்ந்திட்டிருக்கார்.சுத்தி கட்டை வேலி கட்டப்பட்ட நீளமான வரிசைல மெதுவா நகர்ந்து, நகர்ந்து கிட்ட போனேன்.கொஞ்ச தூரத்தில அவர் முகம் தெரிஞ்சது.அட! இந்த முகத்த எங்கயோ பார்த்திருக்கேன். இந்த சிரிப்பு,பேச்சு,முகம் எல்லாம் பழக்கமானதுதான்.இது..இது...இது... அய்யோ!! இளங்கோ அடப்பாவி!! இளங்கோ!! கண்டிப்பா இது இளங்கோதான் ..எனக்கு இவன நல்லா தெரியும். சண்முகா ஸ்கூல்ல படிச்சான்..அப்பவே யார்கிட்டயும் ஒட்ட மாட்டான்.என்ன விட ஒரு க்ளாஸ் கம்மி..ரமணாஸ்ரமத்துக்கு பின்னால இருக்க குளக்கரைல உட்கார்ந்து படிச்சிட்டிருப்போம். அப்ப இந்த பையனும் அங்க படிக்க வருவான்..என் கிட்ட நல்ல பேசுவான் ரெண்டு மூணு பேச்சு போட்டில கூட இவன பார்த்திருக்கேன்..இவன் எப்படி திடீர்னு இவ்ளோ பெரிய ஆளா ஆனான்?..என்ன நடக்குது நம்ம ஊர்லனே தெரிலயே..இதோ கிட்டக்கப் போய்ட்டேன்..இ..இ..இள..பேச்சு வரமாட்டேங்குது ..அவன் புன்னகைக்கிறான்.ஆசிர்வாதம் பன்றான்.ஒரு 23 வயசு பொண்ணு என்ன "நகர்ந்து போய்ட்டே இருங்க சார்!" ன்னு தள்ளுது.நான் வந்துட்டேன்.ரொம்ப குழப்பமா இருக்கு. இவன் எப்படி சாமியாரா ஆனான்?.ஏன் இத்தன பெண்கள் இந்த ஆசிரமத்துல?.ஒண்ணும் புரியல.தியான பயிற்சிக்கான அட்மிசனுக்கு தனி அலுவலகம் இருந்தது.அங்க ஒரு வெள்ளைக்கார பெண்மணி இருந்தாங்க. சொல்ல விட்டுப்போச்சு,இந்த வெள்ளைக்கார பெண்களுக்கு அடர் சிவப்பில் புடவை.அவங்க கலரும் புடவை கலரும் சேர்ந்து ஒரு மாதிரி பண்ணிடுச்சி.எனக்கு இதுலாம் சரிப்படாது. ஒரு வார பயிற்சிக்கு என் ஒரு மாச சம்பளத்த வேற கேட்டாங்க.ஒண்ணும் பேசாம வந்திட்டேன்.

அ. தற்கொல பண்ணி செத்துப்போவது.

இத பத்தி ஏற்கனவே நெறய சொல்லியிருக்கேன்.இப்பலாம் சொன்னதையே,எழுதினதயே திரும்ப திரும்ப சொல்றனான்னு ஒரு பிரம்மை வருது.எங்கனாச்சிம் போனா இந்த எடத்துக்கு ஏற்கனவே வந்திருக்கமோன்னு நிழலா சில எண்ணம் வருது.எனக்கு ஒரு மலையருவில இருந்து குதிச்சி செத்துப்போகனும்னு ஆசை.என் ஆத்மார்த்த ஸ்நேகிதியிடம் ஒரு முற இத பத்தி சொன்னேன்.அவ சொன்னத வச்சி ஒரு கவிதை கூட எழுதினனே.படிச்சிருப்பிங்கன்னு நெனைக்கிறேன்.திரும்பவும் அவகிட்ட இந்த ஆசைய சொன்னேன்.சரி செத்துப்போ ன்னு சொன்னா.நான் ஆவியா வந்து உன்ன பிடிச்சிக்கவான்னு கேட்டேன்.வந்தா பார்த்துக்கலாம் நீ மொதல்ல செத்துப்போன்னு சொன்னா.அப்புறம் நான் பேச்ச மாத்திட்டேனா இல்ல அவ கெளம்பி போய்ட்டாளான்னு தெரில.தற்கொலைலாம் சும்மா பேச்சுக்குதான் பாஸ்!.சும்மா கொஞ்ச நேரம் ஏதாச்சிம் பேசனுமேன்னு பேசனும்.அவ்ளோதான்.என் ஸ்நேகிதிக்கு தெரியும் என்ன பத்தி. இந்த மாதிரி ஏதாச்சிம் உளறினா கண்டுக்க மாட்டா.நீங்களும் பெரிசா கண்டுக்காதீங்க..

ஆ.காதலிப்பது

இது மேட்டர்.இந்த அய்டியா வ சொன்னவங்கள நான் ரொம்ப லைக் பண்றேன்.எனக்கு காதலிக்க பிடிக்கும்ங்க.இதுவரை எத்தனை பேரை காதலிச்சிருக்கேன்னு யாராச்சிம் டக் னு கேட்டா ஒடனே சொல்ல வராது.பத்து நிமிசமாவது டைம் எடுத்துக்குவேன்.உங்களுக்கு இன்னொரு ரகசியம் சொல்லவா? நான் காதலிச்ச எல்லாரும் என்னையும் காதலிச்சிருக்காங்க.அட ஆமாங்க.நெசமாத்தான் சொல்றேன்.காதல் ஒரு ஆர்ட் பாஸ்!.அட்டகாசமான கலை!!.மனச தொடனும் பாஸ்! மனச தொடனும்!!.ஒரு குழந்தைகிட்ட பெரிய மனுசத்தோரணை இல்லாம பேசினாத்தான் உங்ககிட்ட ஒட்டும்.அது மாதிரிதான் பெண்களும்.பெரும்பாலான மக்க என்னா பன்றாங்கன்னா பெண் அப்படின்னவுடனே ஏதோ வேற்று கிரக ஜந்து ரேஞ்சிக்கு பேச ஆரம்பிச்சிடுவாங்க. எக்கச்செக்கமா பதறி, உருகி, வழிஞ்சி, காத்திருந்து, பொலம்பி, கத வுட்டு, பந்தா பண்ணி, பிகு பண்ணி,.. இயல்பாவே எந்த ஆணும் ஒரு பெண்கிட்ட பேசுறதில்ல.சாதாரணமா எந்த உறவு நிலையிலும் உண்மையா இருந்தாவே அதில ஒரு 'க்ரிப்' இருக்கும்.எல்லார்கிட்டவும் எப்பவும் உண்மையா இருக்க முடியாது.ஆனா ஒரு பெண்கிட்ட பழகும்போது பெரும்பாலும் உண்மைய பேசினா அந்த பெண் சுலபமா நம்ம நம்ப ஆரம்பிக்கும். ஒருமுற நம்பிக்கை வச்சிட்டாங்கன்னா அதுக்கு பிறகு லேசில அது போகாது.ஆனா எல்லாமே டக் னு கலைஞ்சிடும் பாஸ்!. அதிகபட்சம் ஒரு ஆணும் பெண்ணும் ஆறு மாசத்துல இருந்து ஒரு வருசம் பழகுவாங்க. அப்புறம் சூழல், வேற மனிதர்கள் னு தடம் மாறி போய்டும். நீடித்த அன்பு, நிலைத்த உறவுன்னு ஒண்ணு கெடயவே கெடயாது.அப்படி இருந்தா அது போலித்தனமாத்தான் இருக்க முடியும்.இப்படி சொல்ரனேன்னு கோச்சிக்காதீங்க நம்ம இயல்பு அதான்.இவ்ளோ தெளிவா பேசுற. அப்புறம் இன்னாயா உனக்கு கொழப்பம்னு கேக்குறீங்களா?.அது அப்படித்தாங்க. எனக்கு எதில ஆர்வமும் அனுபவமும் இருக்கோ அதில நான் சுமாரான தெளிவா இருப்பேன்.இந்த அய்டியா எனக்கு ரொம்ப தெரிஞ்ச ஒண்ணுதாங்கிறதால இதாலயும் ஒண்ணும் பிரயோசனமில்ல பாஸ்!.

இ.திருமணம் செய்துகொள்வது
அட போங்க..அதான் மேலயே சொன்னனே.. தியான பயிற்சிக்கு போகற அளவுக்கு கூட சம்பாதிக்கல.அப்புறம் எந்த லட்சணத்தில கல்யாணம் பண்ணிக்கிறது?.எனக்குலாம் காதலோட சரிங்க.கல்யாணத்துக்குலாம் வழியில்லை.யாராச்சிம் வீட்டோட மாப்ளைன்னு கேட்டு வந்தாங்கன்னா ரெடியா இருக்கேன்.உங்களுக்கும் அப்படி யாரையாச்சிம் தெரிஞ்சதுன்னா சொல்லுங்க.

. இ க்கே வழியில்லை அப்புறம் எங்க ஈ?

இத படிச்ச ஒடனே உங்க மனநிலை எப்படியிருக்கு?.எரிச்சலா? குழப்பமா? இதுலாம் என்ன இழவுடா ங்கிற டென்சனா?எதுவா இருந்தாலும் சொல்லுங்க பாஸ்.இதுக்கும் புனைவுன்னே லேபிள் போட்டுடுறேன். நீங்களும் நம்பிடுங்க.

Monday, August 4, 2008

சில காதல் கவிதைகள்



விளக்குகளை அணைத்ததும்
அவள் பிரகாசிக்கத் துவங்குவாள்
இருளில் ஒளிரும் பாஸ்பரஸ் நீயென்பேன்.
வெட்கத்தில் குழைந்து இன்னும் இறுக்குவாள்.
அவள் உடலிலிருந்து வெளியேறும் வெளிச்சம்
நட்சத்திரங்களின் பிரகாசத்திற்கு ஒப்பானது.
கருத்த வயல் வெளியில் அலையும்
மின்மினிப்பூச்சுகளின்
ஒளிச் சமிக்ஞைகளுக்கு ஒப்பானது.
ஒளியில் சிதறும் கருமை நான்
நானிலும் நுழையும் வெளிச்சமவள்..

*************************

கிளைகளற்ற நதியொன்றினுக்கான
காத்திருப்புகளென்கிறேன்.
நதியென்பதே பல ஆறுகளின்
சங்கமம்தானென்கிறாய்.
அதனாலென்ன
பல நூற்றாண்டுகளாய்
மணலோடிய பாலை இது
தேவை நதிகள் மட்டுமே

*************************

உனது வழமைகளை மாற்றிக் கொள்ளதே
அளவான புன்னகை
நறுக் பேச்சு
தடம் விலகலில் வெளியேறும் லாவகம்
என உனக்கான பிம்பங்களை
அப்படியே வைத்துக்கொள்
தாங்கமுடியவில்லை
விழிகள் விரியச் சிரிக்கும்
எனக்கான அப்பெரும் புன்னகையை

*************************

தோட்டத்து நாகலிங்கப்பூக்கள்
பின்னிரவு மழையில் கரைந்து
எழுப்பும் வாசம்
மீதமுள்ள இரவை
தூங்கவிடாமல் செய்துவிடுகின்றது
இந்தக் கிளர்வில்
இருளைக் கலைக்காது
மழையை வெறிக்கலாம்
ஆழப் புகைக்கலாம்
அத்தோடு
உன்னை முத்தமிட்ட
தருணத்தை நினைத்துக் கொள்ளலாம்.

*************************

ஆவாரம்பூக்களைத் தெரிந்திருக்கவில்லை
மரமல்லியென்றால் என்ன ஸ்வீட்டா? என்கிறாள்
நல்லவேளையாய் கொன்றை மரங்களைப் பார்த்திருக்கிறாள்
பூக்கோக்களையும் ஈக்கோகளையும்
அவள் தெரிந்துவைத்துக்கொள்ளாமல் போனதில்
பெரிதாய் இழப்பேதுமில்லை
ஆனால் தெரியவில்லை என்பதை
அவள் சொல்லும்விதம் அலாதியானது
உதடு சுழித்து
தலையசைத்து
இல்லையெனும்போது
......
அவசரமாய் முத்தமிடத் தோன்றுகிறது

*************************

புத்தகங்களாலும் அழுக்குத் துணிகளாலும்
நிரம்பிக் கிடக்கும்
என் மொட்டைமாடித் தனியறையில்
இப்போது இரண்டு மீன்கள்
கண்ணாடித் தொட்டிக்குள் உலவுகின்றன.
நானில்லாத பொழுதுகளில் அவை
சத்தமாய் பேசிக்கொள்வதாய் சொல்கிறார்கள்
இரண்டில் அழகானதிற்கு
உன் பெயர் வைத்திருக்கிறேன்.
ஒரு முறை வந்து பார்த்துவிட்டுப்போயேன்..

Tuesday, July 29, 2008

உள்ளேயிருந்து சில குரல்கள் - 1



யார் பிரகாரம் ஒருத்தன் மன நோயாளிங்கிறது இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைதானே.யார் சரி யார் தப்புங்குறது எப்பவுமே ஒரு பிரச்சினதான்

சிலவருடங்களுக்கு முன்பு என் நண்பணின் சகோதரரைப் பார்க்க அரசு மன நல மருத்துவமனை - பாகாயத்திற்கு சென்றிருந்தேன்.எலெக்ட்ரிகல் டிப்ளமா முடித்து ஒரு நல்ல பணியிலிருந்த நண்பரின் சகோதரர், ஏதோ ஒரு நாளில் எதையோ கண்டு பயந்ததாயும், அதற்குப் பின்னர் அவர் தன் வசம்மீறி தன்னெதிரில் இருப்பவர்களைப் பார்த்து சத்தம் போடுவதாகவும்,கோபம் மிகுந்த சமயங்களில் வன்முறையில் இறங்குவதாகவும், நண்பண் சொன்னான்.தொடர்ச்சியாய் சிகிச்சைகள் எடுத்துக்கொண்டிருப்பதாகவும் இப்போது எப்போதாவதுதான் இப்படி நேர்கிறதெனவும் சொன்னான்.அந்த வினோதமான சூழல் என்னை ஏற்கனவே பயந்த,நெகிழ்ந்த ஒரு மனநிலைக்குத் தள்ளியிருந்தது.குழந்தைகள் சிகிச்சைப் பிரிவைக் கடந்தபோது எதுவோ அடைத்தது.ஆனாலும் வலிந்த இயல்புடன் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.மறந்தும் அவரிடம் எதையும் நோண்டவில்லை.பேசிமுடித்து வெளியில் வந்தவுடன் அவரைவிட பல விதயங்களில் நான் பின்தங்கி இருப்பதாய் உணர்ந்தேன்.மிகத் தெளிவான ஒரு நபர் அவர்.எந்த ஒரு நொடியில் சகலமும் காணாமல் போகிறது. எந்த நிமிடத்தின் துவக்கத்திலிருந்து மனதின் வினோதங்கள் நம்மை முழுதாய் ஆக்ரமிக்கின்றன என்பது புரியாத ஒரு புதிராகத்தான் இருக்கிறது.

கோபிகிருஷ்ணனின் இந்தப் புத்தகம் மிகப்புதியமுறையில் எழுதப்பட்ட ஒரு நாவல்.வெறும் தகவல்களாய் சொல்லப்பட்டிருக்கும் மனதின் பல்வேறு நிலைகள்.முதுநிலை உளவியல் படித்த ரவீந்திரனும் ஸ்டெல்லாவும் மனநோயாளிகளைப் பற்றின சமூகத்தின் தவறான புரிதலினை களையும் பொருட்டு ஒரு மனநல காப்பகத்தில் சந்தித்த மனநோயாளிகளின் விவரங்களை பதிவு செய்வதுதான் இந்நாவல்.அய்ம்பத்தி ஒன்பது மன நிலைகள் தனித்தனியாய் சொல்லப்பட்டிருக்கின்றன.அதனோடு பார்க்கும் காட்சிகளையும் பதிவு செய்திருக்கிறார்.19 காட்சிகளையும் 59 நிலைகளையும் இன்றும் தொடரும் பழமையெனும் தலைப்பில் ஆறு தனித்தனி குறிப்புகளும் சில செய்திகள் சிந்தனைகள் எனும் தலைப்பில் எட்டு குறிப்புகளும் உள்ளன.வெளியீட்டாளர்கள் (வம்சி புக்ஸ்)சிறுகதைகள் என வகைப்படுத்தியுள்ளனர்.கோபி இதனை படைப்பு என்பதோடு நிறுத்திக்கொள்கிறார். சிறுகதையா? நாவலா? என பதிப்பகத்தார் குழம்பியிருக்கக்கூடும்.ஒரு ஆராய்ச்சி நூலின் வடிவத்திலும், பல சிறுகதைகளின் வடிவத்திலும், மொத்தமாய் பார்த்தால் நாவலின் வடிவத்திலுமாய் இப்படைப்பை பல விதங்களில் பொருத்திக்கொள்ளலாம்.என்னைக்கேட்டால் கோபியின் ஒட்டு மொத்த படைப்புகளும் ஒரே நாவலின் வெவ்வேறு பக்கங்கள் என்பேன்.

ஏன் மன வினோதங்களையும் இயல்பாய் அங்கீகரிக்கக்கூடாது? எனக்கேட்கும் கோபி சுவாதீனம்,சுவாதீனமின்மை என்கிற பாகுபாடுகள் அற்ற சமூகத்தை உண்டாக்க உதவுவது தனது இலட்சிய கனவு என்கிறார்.மன நோயாளி,பைத்தியக்காரன் என சக மனிதனை அழைப்பது மிகப்பெரிய வன்முறை.மேலும் அவ்வாறழைக்க யாருக்கும் உரிமையும் இல்லை எனும் கோபி இப்படைப்பில் அவ்வார்த்தைகள் புரிதல் நிமித்தமாக கையாண்டதற்கு மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறார்.

இந்தப் புத்தகத்தை படித்த முடித்தவுடன் இதில் சொல்லப்பட்டிருக்கும் பல நிலைகளில் நான் இருப்பதாக உணர்ந்தேன்.என் குணாதிசயங்களை ஒத்த பல நண்பர்கள் இப்புத்தகத்தில் காணக் கிடைத்தார்கள்.என்னுடைய அபார போலித்தனத்தின் காரணங்களோ என்னமோ நான் சமதளத்தில் இருந்துகொண்டிருக்கிறேன் அல்லது அது போன்ற ஒரு பிம்பத்தினை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்.இந்த 59 நிலைகளில் உலவும் மனிதர்களின் அடிப்படைப் பிரச்சினை பயம்தான்.பயம்.. பயம்.. பயம்.. வாழ்வைப் பற்றின பயம்.. சமூகத்தினை பற்றின பயம்.. அடுத்தவர்களின் மதிப்பீடுகள் பற்றிய பயம்.. கட்டமைக்கப்பட்டவைகளின் மீதான பயம்.. புனிதங்களை மீறுவதன் பயம்.. புனிதங்களாய் இல்லாமல் போனதின் பயம்.. ஒருகட்டத்தில் மிகுந்த பயங்கள் தாங்காது, தன்னைக் காத்துக்கொள்ளும்பொருட்டு,வன்முறையாளர்களாக சடுதியில் மாறிப்போகிறார்கள் அல்லது சந்தேகிக்கிறார்கள்.தொடர்ச்சியான சந்தேகித்தல் வினோதமான நடவடிக்கைகளுக்கு அவர்களை உட்படுத்துகிறது.சில சந்தேகங்கள் கொலையிலும் சில சந்தேகங்கள் தற்கொலையிலும் முடிந்துபோகின்றன.

புத்தகத்திலிருந்து.....

நிலை 11

"இங்கெ எவ்வளவு நாளா இருக்கிங்க?"
"பதினஞ்சு நாளு இருக்கும் சார்"
"ஒங்க பேரென்ன?"
"பாளையம் சார்"
"என்ன வேல செய்யுறீங்க?"
"எனக்கு டெய்லர் வேல தெரியும்:எங்க வீட்டுல எல்லாரும் டெய்லருங்க சார்"
"ஏன் இங்க இருக்கீங்க?"
"நான் பீ துன்னுவேன் சார்"
"என்னது?"
"நா பீ துன்னுவேன் சார்"
"ஏன் அந்த மாதிரி?"
"அது கொஞ்சம் டேஸ்டா இனிப்பா இருக்கும் சார்"
"அது ஒங்களுக்கு தப்புன்னு தோணலயா?"
"என்ன தப்பு சார்?"
"ஒண்ணுமில்ல அத ஒங்களால நிறுத்த முடியலயா"
"இல்ல சார் இன்னிக்கு காலெயிலகூட ஒரு தடவ துண்ணேன்.என் கிராமத்தில என் சிநேகிதன் ஒருத்தன கூட எம்மாதிரி இருக்கான்."
"அவரும் இங்க இருக்காரா?"
"தெரியல்ல சார்"
"ஒங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?"
"ஆயிரிச்சி.ஒரு பொண்ணு இருக்கா.நா வேணாம்னு சொல்ல சொல்ல என்னெ எங்கப்பா கல்யாணம் பண்ணிவச்சிட்டாரு்"
"ஏன் கல்யாணம்னா ஒங்களுக்குப் பிடிக்காதா?"
"எனக்கு அது தப்புன்னு தோணுது சார்.நான் என் பொண்டாட்டிகிட்ட தப்பா நடந்துகிட்டேன்.அவ பஞ்சு போல இருப்பா.நா தான் அவள கெடுத்துட்டேன்."
...........
"அவங்க ஒங்ககிட்ட நீங்க அந்த மாதிரி நடந்துகிட்டதா சொன்னாங்களா?"
"இல்ல சார் பஞ்சு போல இருக்குற ஒடம்பக் கெடுத்தா அது தப்புதான சார்"
"நீங்க ஒங்க மனைவி கூட எத்தன வருசம் வாழ்ந்திருப்பீங்க?"
"நாப்பது அம்பது வருசம் சார்"
"ஒங்க வயசென்ன?"
"இருபத்தி ஒம்பது இருக்கும் சார்"
"ஒங்க கொழந்த பேர் என்ன?"
"அருண் சார்.ஆனா பொண்ணா மாறி செல்வியாயிடுச்சி.ஆஸ்பத்திரில இருந்தப்ப ஆம்பிளக்கொழந்தையா இருந்திச்சி.வீட்டுல ஒரு வாரமாய் பொண்ணா வளர்த்து செல்வியாக்கிட்டாங்க."
........................
.......................
"ஒங்கள் ஒங்க மனைவி ஏத்துப்பாங்களா?"
"மாட்டா சார் நா தான் அவளக் கெடுத்திட்டன்.அம்மாவக்கூட கெடுத்திட்டேன்."
"அப்படின்னு யார் சொன்னா?"
"தெரியல்ல சார்"
"சரி பாளையம் நீங்க வார்டுக்கு போய் ஓய்வெடுத்துக்குங்க"
"சரி செல்வி சார்"

நிலை - 23.

எந்தலையில மூளையே இல்ல. நரம்புங்க அறுந்திருச்சி. குடல் போட்ற சத்தம் காது வரைக்கும் கேக்குது.சிறுநீரக நரம்புங்க,முதுகு நரம்புங்க அறுந்திருச்சி.கை நரம்புகளும் அறுந்திருச்சி. நரம்புங்களாம் இழுத்திட்டிருக்கு. கண்ணுலேயிருந்தும், காதுலேயிருந்தும், மூக்குலேயிருந்தும், உண்ணிப்பூச்சிங்க விழுந்திட்டு இருக்கு. தலையில இருந்து பேன், பேனா விழுந்திட்டிருக்கு. தலமுடியெல்லாம் நெட்டுக்குத்தலா நிக்குது. எப்பவும் தாகமா இருக்கு. பல்லெல்லாம் ஒண்ணொன்னா கீழ விழுந்துட்டே இருக்கு. ஒடம்பு பூரா வலிக்குது. ஒடம்புல ரத்தமே சுண்டி போச்சி. ரத்தம் சுண்டுற வாசன எனக்கு நல்லாவே கேட்குது. என்கிட்ட வராதீங்க. என் ஒடம்பு, ஒங்க ஒடம்புல இருக்கிற ரத்தத்த உறிஞ்சிரும். எல்லாமே என் ஊர் சனங்க என் மேல ஏவி விட்டிருக்க சாத்தானோட வேல.

காட்சி 11

புறநோயாளிகள் பிரிவு. தங்கள் பெயர் அழைக்கப்படுவதற்காக நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள், பெஞ்சுகளில் அமர்ந்து காத்திருந்தனர். ஒரு மூலையில் ஒரு வாலிபன். கைகள் பின்புறம் ஒரு கயிற்றினால் இறுக்கமாக கட்டப்பட்டிருந்தன. கால்களும் அப்படியே. வாலிபன் திமிறிக்கொண்டிருந்தான். இருவர் அவனருகில் இருந்தார்கள். வாலிபன் "ஒலகத்தில இருக்க அத்தென பேரும் தேவடியாபசங்க.. இந்த டாக்டருங்க என் பிரச்சினைக்கு என்ன பெரிசா தீர்வு சொல்லிடப்போறாங்க?" எனக் கத்தினான்.அவனை அழைத்து வந்திருந்த இருவரின் ஒருவன் அவனது தாடையில் ஒரு குத்து விட்டான். வாலிபன் இன்னும் திமிறினான்.மீண்டும் ஒரு குத்து விழுந்தது. "அடிங்கடா டேய்.. கட்டிப்போட்டுதான என்ன அடிக்கமுடியும்" என்று வாலிபன் கத்தினான்.

Sunday, July 27, 2008

இன்னும் சில குப்பைகள்



மிகுந்த பாதுகாப்புணர்வுகளோடு
நீ உதிர்க்கும்
ஒவ்வொரு சொல்லும்
பதுங்குவதற்கு குழிகளற்ற
பசுஞ்சமவெளியின்
பிரம்மாண்டம் கண்டு மிரளும்
முயல்குட்டியையே
நினைவுபடுத்துகின்றது.
முயல் மொழியறிந்தோர்
யாராவது சொல்லுங்களேன்
பசுஞ்சமவெளிகளில்
பயங்களில்லையென..


Laybrinth ஐ போலிருக்கின்றன இத்தெருக்கள்.எத்தனை முறை வந்தாலும் குழம்பிப்போகிறேன்.சொல்லிவைத்தாற்போல ஒவ்வொருமுறையும் வழியைத் தவற விட்டு,சிறிது நேரம் நின்று, சுத்தி, கடுப்பாகி, வியர்த்து வழிந்து, பின்பு முளையின் ஏதோ ஒரு அடுக்கில் படிந்திருக்கும் ஏதோ ஒரு நினைவு தூண்டின பிரகாசத்தில் செல்ல நினைத்த இடத்திற்கு சென்றடைகிறேன்.இதென்ன வீதிகள்!!..இத்தனை குறுகலாய், இடைஞ்சலாய், அங்கங்கே திடீரென வளைந்து, நீண்டு, சிறுத்து, குறுகி பார்க்கவே எரிச்சலாக இருக்கிறது.பிதுங்கி வழியும் கட்டிடங்கள்.இடைவெளிகளே இல்லாத அளவுக்கு மிக இடுக்கமான உயரமான கட்டிடங்கள்.நடந்து செல்கையில் மூச்சு முட்டுகிறது.இங்கு வந்த பின் வானம் என்கிற வஸ்துவே இருக்கிறதா இல்லையா என்பது மறந்து போயிற்று.ஆறு மணிக்கு அடிக்கத் துவங்கும் வெயிலில் வியர்த்து அலுவலக வண்டியைப் பிடித்து வேலைக்குப்போய் நேரத்தைக் கடத்தி மீண்டும் ஆறு மணி வெயிலில் வியர்த்து இந்த பொந்தினை அடைவது மிகச் சலிப்பாய் இருக்கிறது.என்னக் கருமாந்திரன்டா இது ச்சே..

வார இறுதி இரவுகள் தூங்குவதற்கானதில்லை.மாய உலகின் வழிகாட்டிகளை சூழல் மறக்கடிப்பவைகளை அந்த இரவில் துணைக்கழைக்கலாம்.அவர்களின் துணையோடு பழகிய பொந்தில் சஞ்சரிப்பது சற்று ஆசுவாசமானது.விடியற்காலை மூன்று மணியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நடமாட்டங்கள் குறைந்த கருப்பு வெளி.கிடைத்த இடுக்குகளில் துருத்திக்கொண்டிருந்தன சிற்றுந்துகள்.சற்று உயரமான இடத்திலிருந்து பார்த்தால் சிற்றுந்துகளின் மீதுதான் இந்நகரம் எழுப்பப்பட்டிருக்கிறதோ என்கிற பிரம்மைகள் எழுகின்றன.சில கருப்புதேசத்து பெண்கள் மட்டும் சாலையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டிருந்தனர்.கும்பலாய் நின்றபடியும், பேசியும், புகைத்தும், நடந்தும், இரவு தீரப்போவதற்கான முனைப்புகளை, தவிப்புகளை வெளித் துப்பிக் கொண்டிருந்தனர்.பதுங்கி பதுங்கி வந்த சில இந்திய ஆண்கள், பைஜாமா அணிந்த பாகிஸ்தானிகள் தேர்வு செய்த பெண்களுடன் கட்டிடங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தனர்.ஒரு பெண் மட்டும் வெகு நேரமாய் நின்றுகொண்டிருந்தள்.ஒருவேளை அவள் வசீகரம் குறைந்தவளாய் இருக்கக்கூடும் அல்லது வந்தவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவளாயுமிருக்கலாம்.வெகுநேரம் காத்திருந்து சலித்த அப்பெண், அந்தப் பின்னிரவு தேவதை தான் புகைத்துக் கொண்டிருந்த சிகெரெட் துண்டினை சுண்டி விட்டெறிந்தாள்.அது கருப்பு நிறச் சாலையில் நெருப்பைத் தெறித்தபடி,செந்நிற அனலைக் கக்கியபடி கடைசி மூச்சை விட்டது.

வெறுப்புகள், வன்மங்கள், துவேஷங்கள், மிகவும் பாதுகாப்பானவை.நட்பு, அன்பு,ஸ்நேகம், சாப்டியா? எப்படியிருக்க? எனவெல்லாம் கேட்க நேரிட்டால் எரிச்சலாக வருகிறது.எல்லாமே தன்முனைப்பு சார்ந்தவைதாம்.எல்லாமும் சுய நலங்களாலானவைதாம். எல்லாமே பயன்படுத்திக்கொள்ளல்தாம்.மேலும் அதில் தவறேதுமில்லை.தன்னை நேசிப்பதில் சுயநலமாய் இருப்பதில் என்ன தவறு?.western philosophy படித்த குரங்கு ஒன்று வெகு நாட்களாக இப்படிச் சொல்லித் திரிகிறது.doing,happening இரண்டிற்குமான வித்தியாசங்களை உன்னால் புரிந்து கொள்ள முடிகிறதா? எனக் கேட்டேன்.குரங்கு சிறிது யோசித்தது.செய்வது நிகழ்வது இரண்டும்தான் சுயநலம் பற்றிய புரிதல்களுக்கான விளக்கமாய் இருக்க முடியும்.நானொரு அப்பட்டமான சுயநலவாதி என்பதை உணர்வது அதே நிலையில் தொடர்ந்து நீடிப்பதற்காக அல்ல.அதிலிருந்து மெதுவாய் வெளிவருவதற்காகவே.Ayn rand கள் அதே நிலையில் நீடித்திருக்கிறார்கள்.தான் தான் என்கிற குப்பைகளை பிறரிடம் சேர்த்த அமெரிக்க மூளைகள் பைத்தியம் பிடித்துதான் செத்தன.வேடிக்கைபார்த்தல்(witnessing) மட்டுமே எல்லாக் குழப்பங்களுக்குமான திறப்பு.

தொடர்ச்சியாய் ஒரே செயல்களை செய்துகொண்டிருப்பது எத்தனை அலுப்பான ஒன்று.இந்த முறையை வேண்டுமானால் கொஞ்சம் முயற்சித்துப் பாருங்கள்.ஜே கிருஷ்ணமூர்த்தி awareness குறித்தான discourse ஒன்றில் சொல்லியிருப்பார்.ஒரு நாளில் நீங்கள் செய்யும் செயலை அடுத்த நாள் reverse ஆக செய்துபாருங்கள்.உதாரணம் காலை எட்டு மணிக்கு எழுபவராய் இருந்தால் ஐந்து மணிக்கு எழ முயற்சியுங்கள்.நகர அடைசல்களற்ற அமைதியான சாலையில் நடங்கள்.துயிலெழும் பட்சிகள்,மினுங்கிக் கொண்டிருக்கும் வெள்ளி, நீல நிற ஆகாயம், தவழும் மேகங்கள், மெல்லியக் குளிர் எல்லாம் உள்வாங்கியபடி நடந்து விட்டு வரும்போது தினசரி யின் பிடியிலிருந்து கொஞ்சம் உங்களை விடுவித்துக் கொள்ள முடியும் என்பார்.முயற்சித்துப் பாருங்கள்..

அடையாளங்களை அழித்தல் குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன்(இதை எழுவது எத்தனை அபத்தமானது!)ஏதோ ஒன்று தன்னை மீறி வளர்ந்து நிற்கும்போது அதன் வளர்ச்சி, ஆகிருதி, அல்லது பிம்பங்களால் கட்டமைக்கப்பட்ட அதன் உருவம் பயம்கொள்ளச் செய்கிறது.தன்னிலிருந்து பெருக்கிக் கொண்டவைதான் இவைகளே தவிர இவற்றுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை.ஏதோவொரு சந்தர்ப்பங்களில் வெளிப்படும் இவை மீதான நம்பகத்தன்மைகள் சிறிது வியப்பை மட்டுமே தருகின்றன.அதே சமயத்தில் அவ்வியப்புகள் எப்படித் தோன்றினவோ அப்படியே காணாமல் போவதும் உருவாக்கிக் கொண்டவற்றின் பிழையா? அல்லது கொண்டவர்களின் பிழையா? என்னுடைய பிழையா? பிழை பிழை பிழை மழை மழை :))

எல்லாம் தவிர்த்துக், கடந்து, துறந்து, மூச்சடக்கி, காதுபொத்தி, நினைவுதவிர்த்து, உள்ளமிழும்போது உயிர்த்தெழுகிறது நிசப்தம்.

உன் பேச்சுக்கு
பூனைக்குட்டிகளின் முகங்களை
மனதில் தருவிக்கிறேன்
அவை உன் பேச்சின் மீது
இன்னும் வாஞ்சையைத் தூண்டுகின்றன
உன் கோபம்
எரிச்சல்
மகிழ்வு
சிரிப்பு
கிண்டல் அழுகை
என உணர்வுகளுக்கேற்றார்போல்
பூனைக்குட்டிகளின் முகங்கள்
வந்து வந்து போகின்றன
சொல்
நீயொரு பூனைக்குட்டியா?

புகைப்படம்: www.joelane.com/images/trash-use1a.jpg

Friday, July 18, 2008

சில திரைப்படக் கவிதைகள்:அவளைப்பற்றியாதவுமிருக்கலாம்..




மீன்கள் பாதங்களில் துழாவிக் கொண்டிருந்த
மாலையில் (சில்ரன் ஆஃப் ஹெவனின் கடைசிக் காட்சியை நினைத்துக்கொள்ளுங்கள்..)
அவளென் முதுகுப்பின்னால் நின்று கொண்டிருந்தாள்.
பாதங்களை விடுவிக்காது தலைதிருப்பிப் பார்த்ததில்
அவளின் மிகப்பெரிய கண்கள் இன்னும் வீங்கிப் பெருத்திருந்தன.
தன் வாழ்வின் மிக முக்கியமான தீர்மானங்களை
எடுக்கும் தருணம் வந்துவிட்டதென்றும்
தனியாய் பேச வேண்டியுமாய் விழைந்தாள்.
நான் தலையை திருப்பிக்கொண்டு
மீண்டும் மீன்களைப் பார்க்க ஆரம்பித்தேன்.
சற்று நேரம் கழித்து
எதுவும் பேசாமல் அருகில் வந்து அமர்ந்துகொண்டாள்.
என்னைத் துழாவிக் கொண்டிருந்த மீன்கள்
அவளின் பக்கமாய் போகவாரம்பித்தன...

******************************************

அருவியில் குதித்து செத்துப்போவதைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன்.
பென்கிங்ஸ்லியைப்போல் மூச்சடைத்து இறப்பதையே அவள் விரும்பினாள்.
உயரத்திற்கும் தரைக்குமான இடைவெளியில்
சகலத்தையும் சில்லிடவைக்கும்
அபூர்வ நொடியினை உணர்ந்த பின்,
செத்துப்போவதின் அபரிதத்தை வலியுறுத்தியபடி இருந்தேன்.
அவள் உடல் சிதறுவதின் பயங்கரத்தை நினைத்து முகம் சுழித்தாள்.
"இறப்பு கோரமாய் இருக்கக்கூடாது"
(அவளெப்போதும் இப்படித்தான் குரூரங்களை விரும்புவதில்லை பர்ஃபியூம் பரிந்துரைத்ததினுக்காய் மூன்று நாட்கள் பேசாமலிருந்தாள்)
குரூரங்களை அழகியலாக்குவதும்
அழகியலை குரூரங்களாக்குவதும்
சூழலின் தேவை என்றேன்.
எனக்கவசியமில்லை என பதில் வந்தது,
மேலும் அழகு அழகில்லை எனவும்
குரூரம் குரூரம் இல்லை எனவும்
பிரசங்கிக்கத் தொடங்கினேன்.
அவள் தன் செருப்புகளை பொருத்திக்கொண்டாள்
விடைபெறும் நொடிக்கு முன்
மாலைத் தேநீருக்கு வரவேண்டாமென
சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

******************************************

வெப்பம் மிகுந்த இரவுகளில் நடைக்குப் போவதில்லை
இரவில் வியர்த்து வழிவது எனக்குப் பிடிக்காது.
இருப்பினும் கார்னீஷ் ஓரமாய் சந்திப்பதெனச் சொல்லியிருந்தேன்.
ஜெயமோகன்களைப் படிக்காதேவெனத் திட்டி
கோபியைக் கொடுத்திருந்தேன்.
வந்தவுடன் பிடிக்கவில்லையெனத் திருப்பிக்கொடுத்தாள்
ஏன் என்றதற்கு முனகலாய் பதில் வந்தது
"அசிங்கமா இருக்கு"
எது அசிங்கமென்றதெற்கு பதில் எதுவும் சொல்லாமல் போய்விட்டாள்.
நான் பாலகுமாரனை கொடுத்திருந்தால்
இன்றிவளை முத்தமிட்டிருக்கலாமென
நினைத்துக்கொண்டேன்.

image:http://alethakuschan.blogspot.com/2007_03_01_archive.html&h=354&w=400&sz=40&hl=en&start=29&tbnid=bQe_g4oGLNp1WM:&tbnh=110&tbnw=124&prev=/images%3Fq%3Dfishes%2Bin%2Bpond%26start%3D18%26gbv%3D2%26ndsp%3D18%26hl%3Den%26sa%3DN

Featured Post

test

 test