Sunday, July 29, 2007

சந்தர்ப்பங்களைத் துய்த்தல்



செய்து முடிக்கப்பட வேண்டியதின் தரம் குறித்தான நிலைப்பாடுகளின் தீவிரத்தன்மை காரணமாக பொறுப்புகளை எப்போதும் தட்டிக் கழிக்கவே விரும்புவேன்.எதிர்பார்த்தலும்,நம்பிக்கை வைத்தலும்,காத்திருத்தலும் என்னை என் நிலையில் இயங்கவிடாதவை.தீவிரமான அன்பைக் கூட ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.எல்லா அன்பின் பின்னாலும் குளமெனத் தேங்கி நிற்கிறது தேவைகளின் எதிர்பார்ப்புகள்.

எதன் அடிப்படையில் நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது பலரின் கேள்விகளாக இருக்கிறது.எந்த அடிப்படையில் இவனைத் தேர்வு செய்தார்கள் என்பதும் சிலரின் கேள்விகளாய் இருக்ககூடும்.அடிப்படைகளை நிரூபிக்கும் விதமாகவோ கொடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களை சரியாய் பயன்படுத்திக்கொள்ளும் விதமாகவோ செயல்பட்டிருந்தால் அமைப்பியல் ரீதியாக கட்டமைவுகளின் ஒழுங்குகளை காப்பாற்றிய நிம்மதி என்னை வந்து சேரலாம்.

ஆசுவாசமான இந்த எழுத்தை எப்படி எழுதினால்தான் என்ன?ஏதோ ஒரு வடிவம்.அவரவர் அவரவருக்குப் பிடித்தமான பெயர்களை வைத்துக் கொள்ளட்டும்.குப்பை என்றோ கவிதை என்றோ ஆபாசம் என்றோ அசிங்கம் என்றோ வலியத் திணித்தல் என்றோ அவரவர் உள்ளங்கைக்கு ஏத்தாற்போல் அள்ளிக்கொள்ளட்டும் இல்லை முற்றிலுமாய் புறக்கணிக்கட்டும்.

ஒரு வாரத்தில் சில விதயங்களை பரிசோதித்துக்கொள்ள முடிந்தது(எழுதும் மொத்தமே பரிசோதனைதான்..சிலருக்கு சோதனையாகவும் இருக்ககூடும்).எழுத்து எல்லாரையும் சென்றடையும் வடிவம் எனக்கு சலிப்பைத் தந்தாலும் அசைக்கப் பட்ட சுயங்களின் கைத் தட்டல்களில் சற்றுக் குழம்பித்தான் போனேன்.வாழ்வின் எல்லா அசைவுகளும் புகழ் அல்லது வெளிச்சத்திலிருத்தலுக்கான விழைவுகள்தானோ?

நட்சத்திர வாரத்திற்க்கு தெரிவு செய்த தமிழ்மணத்திற்க்கும்,பின்னூட்டத்தைப் புறக்கணித்த நண்பர்களுக்கும் நெருங்கிய நண்பர்களின் பாசக்கார பின்னூட்டங்களுக்கும் நன்றிகள்.
இதெல்லாம் ஒரு எழுத்தா?நீயெல்லாம் ஒரு ஆளா?என எவரும் இந்த வாரத்தில் திட்டவில்லை.வலையில் புதிதான நண்பர்களின் அறிமுகமும் இந்த வாரத்தில் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.மேலதிகமாய் நம்பகத்தன்மைக்கு வெகு அருகில் வாசகர்களை சில இடுகைகளின் மூலம் கொண்டு சென்றது மிகவும் நெகிழ்வாக இருக்கிறது.

ஒரு வாரத்தில் வாசிக்காமல் விட்ட இடுகைகள் குவிந்திருக்கிறது.பல மடல்களுக்கு இன்னும் பதில் போடவில்லை.எல்லாம் முடிந்து கிளம்புகையில் நீ ஒரு அப்பட்டமான சந்தர்ப்பவாதி என சமீபத்தில் விழித்த சிவப்புக் குரல்காரன் பின் முதுகைத் தட்டுகிறான்.

ஏன் இவ்வளவு நாட்களாய் வெறும் புரியாத கவிதை மட்டும் எழுதிக்கொண்டிருந்தாய்?வேறு வடிவங்களை முயற்சித்திருக்கலாமே என எல்லாத் தரப்பிலிருந்தும் முன் வைக்கப்படும் கேள்விகளுக்கு…

பிறிதொருவர் கேட்காதவரை தரப்படாத அன்பிற்க்கு வீர்யம் இல்லையென்றாகிவிடுமா என்ன?

Saturday, July 28, 2007

மனதின் பைத்திய நிழல் – நகுலனின் சுசீலா



நகுலனின் மொத்த நாவல்களும் கைக்கு கிடைத்தபோது சிறிது பதட்டமாகத்தானிருந்தது அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்திருந்த சில கவிதைகளே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.இந்த மொத்த எழுத்தையும் படிக்கும்போது ஒரு வெளியில் தன்னைத்தானே தொலைக்க நேரிடுமோ என்கிற பயம் நிகழ்ந்தேவிட்டது.1965 லிருந்து 2002 வரை அவரால் எழுதப்பட்ட நிழல்கள்,நினைவுப்பாதை,நாய்கள்,நவீனன் டைரி,சில அத்தியாயங்கள்,இவர்கள்,வாக்குமூலம்,அந்த மஞ்சள் நிற பூனைக்குட்டி என்கிற வெவ்வேறு பெயரில் எழுதப்பட்ட ஒரே தளத்தில் இயங்குகிற நாவல்களின் தொகுப்பு அல்லது ஒரே ஒரு நாவலின் வெவ்வேறு அத்தியாயங்கள் என்பதுதான் பொருத்தமாக இருக்க கூடும்.

மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட சுயத்தின் வெளிப்பாடாய் இருக்கிறதவர் எழுத்துக்கள்.வேறெந்த பாத்திரத்தையும் முன் வைக்காது நவீனன் அல்லது நகுலன் என்கிற பெயரில் உலவும் ஒருத்தருக்கு நேரும் மிகவும் தனிமைப்பட்ட அனுபவங்களே இவரின் படைப்புகள்.எழுத்து என்பதின் போதையை இவர் நன்கு அனுபவித்திருக்கிறார்.எழுத்தின் தாத்பர்யம் இவரை வேறெதிலும் இயங்கவிடாது இறுக்கப்பிடித்து கொண்டுள்ளது.பரவலாய் வாசிப்பதும் மிகவும் உள் சார்ந்த தனிமையில் ஆழ்ந்துபோவதும் வளர்ச்சிக்காய் புகழுக்காய் தன் சுயங்களை தொலைக்கும் மனிதர்களை விட்டு விலகியும் அவர்களின் மீதான எள்ளலும் எல்லாவிடங்களிலும் வெளிப்படுகிறது.

பெரும்பாலான வாசகர்கள் நகுலனை அவர் படைத்த சுசீலாவின் மூலம்தான்
அடையாளப்படுத்துகிறார்கள்.நகுலன் இறந்த அன்று எல்லாரும் சுசீலா வை நினைத்துக்கொண்டோம்.இனி சுசீலாவின் கதியென்ன என்பதுதான் என் நண்பர்களின் வருத்தமாக இருந்தது.தான் படைத்த ஒன்று தன்னை முன்னிருத்துவது எத்தனை ஆனந்தமாக இருந்திருக்கக்கூடும்.நினைவுப்பாதையில் சிவன் யார் சுசீலா எனும் கேள்விக்கு என் மனதின் பைத்திய நிழல்தான் சுசீலா என்கிறார்.மேலும் அவள திருமணமாகிப்போய்விட்டாள் என்கிற தகவலையும் சொல்லுகிறார்.இல்லாத ஒன்றினை உருவாக்கி கொண்டு உருகும் அந்த மனத்தை பிரம்மிப்பாய் பார்க்க வேண்டியிருக்கிறது.

தன்னை ஒரு தோல்விக்கலைஞன் என சொல்லிக்கொண்ட நகுலன் தோற்பதின் சுவையறிந்திருக்க வேண்டும்.உள்விழிப்புபெற்ற மனிதனால் மட்டுமே தோல்வியை கொண்டாட முடியும்.ஒஷோ வாழ்வைப் பற்றிக் குறிப்பிடும்போது தோற்பவர்கள் மட்டுமே இந்த விளையாட்டில் ஜெயிக்க முடியும் என்கிறார் நகுலனுக்கும் அதே போன்றதொரு மனோநிலை வாய்த்திருக்க வேண்டும்.இந்த அளவுகோல்களைப் புரிந்துகொள்ளமுடியாத ஞானக்கூத்தன் போன்றோர் அவருக்கான இரங்கல் கட்டுரையிலும் கூட இவர் பெரிதாய் ஒன்றும் சாதித்துவிடவில்லை என்பது போன்ற கூற்றையே ஆனந்தமாக முன் வைக்கிறார்கள்.

சமூகத்திலிருந்து விலகியிருப்பது தப்பித்தலுக்கான ஒரு முயற்சியின் நீட்டிப்பே.தன்னை தன் எழுத்துக்களை அடையாளப்படுத்திக்கொள்ள/பெரிதாய் நிரூபிக்க படைப்பாளிகள் துணியும்போது அவர்களின் தனித்தன்மை அடிப்பட்டுப்போய்விடலாம்.சமூகம் என்பதே சமரசங்களின் கூடாரம் அல்லது பெரும்பான்மைகளின் ஆக்கிரமிப்புதானே.ஆனாலும் கைத்தட்டல்கள் மீதான வசீகரங்கள் எல்லாக் கலைஞனுக்கும் பொதுதான்.தன் எழுத்துக்களை தன் நண்பர்களிடம் கொடுத்துவிட்டு கூடவே அஞ்சலட்டையும் இணைத்து கொடுக்கும் வழக்கமும் கடிதத்திற்க்கான எதிர்பார்ப்புகளும் தாமதமானால் எழும் கோபங்களும் எந்த பாசாங்குமில்லாமல் பதியப்பட்டிருக்கிறது.

மாற்றுக் கருத்துக்கள் மாற்று சிந்தனைகள் வழக்கொழித்தல் போன்றைவைகளின் மீதான வெறுப்பும் பயமும் பெரும்பான்மைகளுக்கு சற்று அதிகம்தான்.உன் படைப்பு விலைபோகவில்லை! உன் எழுத்து எவனுக்கும் புரிவதில்லை நீ! என்ன கிறுக்கா? என்பது போன்ற கேள்விகளின் மூலமாய் தங்களின் இருப்பை உறுதிசெய்துகொண்ட எழுத்து வணிகர்களை அவர்களின் சொந்த பெயர்களிலேயே தன் படைப்புகளில் கிண்டலடித்திருக்கிரார்.

சுசீலா நிஜமா? என்பது போன்ற பத்தாம்பசலித்தனமான கேள்விகள் எழும்பினாலும் அந்த சுசீலா வின் மீதான இவரின் காதல் பைத்தியம் கொள்ளச் செய்கிறது.மனதின் அக அடுக்குகள் ஏற்படுத்திக்கொள்ளும் பிம்பங்கள்தான் எத்தனை துயரமானவை. காதல், காமம், ஆராதனை, போகம்,வெறுப்பு,கோபம் என எல்லா உணர்வுகளும் சுசீலாவை முன்நிறுத்துகிறது. கிட்டதட்ட 37 வருடங்களாக சுசீலா பிம்பம் அவரை விட்டகலவில்லை.வாழ்வின் அபத்தங்களை,துயரங்களை எள்ளலோடும் வெறுமையோடும் பதிவித்தவர்களில் நகுலன் முக்கியமானவர்.

நவீனன் டைரி யிலிருந்து சில துளிகள்.

3.12.73
வரிகள்
பல கட்டங்களில் நான் அவளை சந்தித்திருக்கிறேன் பல அனுபவ உச்ச கட்டங்களில்-நான் அவள் பேசுவாள் என்று எதிர்பார்த்த சமயங்களில் அவ்ள் பேசவில்லை-ஏன் அவள் என்னிடம் பேசினதே இல்லை.எதிர்பார்த்த நேரங்களில் அவள் வந்ததுமில்லை.இனி வரவும் மாட்டாள் என்று எனக்குத் தெரியும்.

ஆனால் நான் தனியாகப் போகும்பொழுது,இருக்கும்பொழுது,இந்தத் தெருவிலிருந்து அந்தத் தெருவிவுக்குத் தாண்டும்போது யாரோ எனக்கு முன் சென்று மறைவது போன்ற ஒரு தோற்றம்.
நான் வாழ்க்கையில் எவ்வளவோ ஆட்களைப் பார்த்திருக்கிறேன்.பல்லாக்கித் தூக்கிகளை,வாடகைக்குப் பிணம் சுமப்பவர்களை புதுப்பணம் படைத்தவர்களை சாதாரன மனிதனைக் கண்டால் புருவம் உயர்த்திப் பேசுபவர்களை இலக்கிய ரெளடிகளை இயற்கையாகவே கோபத்தினால் வசைபாடும் விற்பன்னர்களை பணக்கார வீட்டுப் பெண்களை எனக்கு நான்

சிலுவையாக இருக்கும் என்னை
எங்கிருந்தோ
வந்தவள்
யாரையோ மணந்தவள்
இன்று இருக்கிறாளோ
இல்லையோ
என்று கூடத் தெரியாத

ஒருத்தி ஒரு கணத்தில் கண்டது முதல் இந்த கட்டை கீழே விழும் வரை என்னில் இருக்கும் சுசீலா என்ற என் சாபத்தை இவர்களையெல்லாம் இவர்களையெல்லாம் இவைகளையெல்லாம்விட
நீதான் எனக்கு
வேண்டியிருக்கிறது
நீ வரவும் மாட்டாய்
போகவும் மாட்டாய்
நீ இருக்கிறாயோ
இல்லையோ
என்பதுகூட
எனக்கு நிச்சயமாகத் தெரியாது
இருந்தாலும் எங்கு சென்றாலும் எதைச் செய்தாலும் என்ன நேர்ந்தாலும் எப்படிப்போனாலும் யார் வந்தாலும் யார் போனாலும் உன்னைத் தூண்டில் இட்டுப் பிடிக்க முடியுமானால் கடிவாள்ம் கட்டி செலுத்த முடியுமானால்

பல்லக்குத் தூக்கிகளால் பிரயோஜன
மில்லை
கிருஷ்ணன் என்று

புதிய வாசகர்களுக்கு நகுலனின் நடை சற்று சலிப்பைத் தரலாம்.ஒன்றும் புரியாமல் என்ன எழுத்து இது? என்பது போன்ற சலிப்புகளும் கூடவே எழலாம். தன்னை தன் அனுபவங்களை எந்த சமரசங்களுக்கும் வியாபார நோக்கங்களுக்கும் உட்படுத்திக்கொள்ளாமல் பதிவித்த கலைஞனின் எழுத்துக்களை சற்று மெதுவாகத்தான் அணுகவேண்டியிருக்கிறது.அந்த தடத்தினைப் பிடித்து விட்டால் அது உங்களைக் கொண்டு செல்லுமிடம் உங்கள் மனதின் பைத்திய நிழலாய்க்கூட இருக்கக்கூடும்.

சன்னாசியின் நகுலன் நாவல்கள் இடுகை இப்புத்தகத்தை அணுக உதவியாக இருக்கும்

நகுலன் நாவல்கள்
தொகுப்பாசிரியர்: காவ்யா சண்முகசுந்தரம்
காவ்யா, டிசம்பர் 2004.
விலை: ரூ. 450.00

கொடுத்த புத்தகப் பட்டியல்களை இந்தியாவிலிருந்து தவறாமல் வாங்கி வந்த சார்ஜா சிங்கம் கோபிக்கு நன்றியும் அன்பும்.

வடிவங்களற்ற மேகம்

Photo Sharing and Video Hosting at Photobucket

எதிர் நகர்த்துதல்களை முன் கூட்டியே தீர்மானித்தபடி
இயங்கும் உன் அணுகுமுறை வெகு நேர்த்தியானது
இந்த உணர்வுகளுக்கு இந்த வார்த்தைகளென
நீ திட்டமிட்டு வெளித்துப்பும் சொற்கள்
தனக்கான பணியை செவ்வனே முடிக்கின்றன
சில கணங்களின் திடுக்கிடலோ
சில நம்பிக்கைகளின் தகர்வுகளோ
ஒரு இதயத்தின் நொறுங்குதலோ
கேட்காத தொலைவிலிருந்தபடி
உன் இயக்கம் வெகு சீராய் இருக்கிறது.

நிகழின் பிரதியென பிரகடணப்படுத்தியபடி
கணங்களின் உணர்வுகளை
வெளித்துப்பும் இன்னொருவனை
சொற்கள் அகல பாதாளத்தில் தள்ளிவிடுகிறது.
நாகரீகத்தின் பூச்சுகளிலோ
நட்பின் முகமூடிக்குள்ளோ
ஒளிந்திருக்கிறது வன்மத்தின் கசடுகள்.
கோபத்தின் விதையொன்றினை
எதிராளியின் விளை நிலத்தில் ஊன்ற செய்யும் கணங்களையாவது
இனி முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும்.

எவ்விதத் தீர்மானங்களுமில்லாமல்
புல்வெளியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்
ஃபாத்தீனும் மரியமும்

பொறாமையின் கங்குகளணைக்க
அன்பின் நீர்த்துளி சுமந்தலைகிறது
வடிவங்கள் எதுவுமற்ற வெண்ணிற மேகம்.

Friday, July 27, 2007

நீ என்னை விட்டுப் போயிருக்க வேண்டாம் ஹேமா!



தொன்னூற்றி ஏழாம் வருட நவம்பர் மாத ஏழாம் தேதியன்றுதான் நாம் முதலில் சந்தித்துக் கொண்டோம்.எலெக்ட்ரானிக்ஸ் லேப் முன்பா? அல்லது சிவில் நூலகத்திலா? எந்த இடம் என்பது மறந்து போய்விட்டது.ஐந்தாவது செமஸ்டர் ஆரம்பமாயிருந்த சமயம் மெர்க்குரிப்பூக்கள் திரும்ப நூலகத்தில் கொடுங்களேன்.. நான் படிக்க வேண்டும்.. எனக் கேட்டிருந்தாய்.தகவல் சொன்ன அந்த நூலகனை உதைக்க வேண்டும் என மனதில் கறுவிக்கொண்டே திருப்பிக் கொடுத்தேன்.கல்லூரி மலரில் உங்கள் கவிதை படித்தேனென்று ஒருமுறையும் நான் உங்க பக்கத்து ஊருதான் என்று ஒருமுறையும் கேண்டீனில் பார்த்துக்கொண்டபோது சொன்னாய்.நள்ளிரவு சீட்டுக் கசேரிகளினூடே ரவி சொன்ன அந்த பிகர் நல்லா கீரா மச்சி! தான் உன்னைப் பற்றி யோசிக்க வைத்தது.ஒரு வெள்ளிக்கிழமை மாலையில் ராமஜெயம் பஸ்ஸில் எனக்காக காத்திருந்ததை நான் எதிர்பார்க்கவில்லை.நேருக்கு நேர் எங்கெங்கே பாடல் எனக்கு ரொம்ப பிடிக்குமென்று சொல்லிக்கொண்டிருந்தாய்.நீ ஏதோதோ பேசிக்கொண்டு வர மிக அருகில் மல்லிகைப்பூ வாசனைகளுடன் ஒரு பெண்ணை எதிர்பார்த்திராததால் வாயடைத்து மெளனமாகவே வந்து கொண்டிருந்தேன்.சனிக்கிழமை காலை தொலைபேசியில் உன் குரல் கேட்கத் தவிப்பாய் இருந்தது.அந்த திங்கட்கிழமையா? அடுத்த திங்கட்கிழமையா? மெக்கானிகல் பில்டிங் பின்னாலிருந்த மைதானத்தில் வைத்து உன்னை காதலிப்பதாய் சொன்னேன் என நினைவு.சற்றுப் பெரிய விழிகள் உனக்கு சட்டெனக் குளமானதில் தவித்துப் போனேன்.பதிலெதுவும் சொல்லாமல் விலகிப்போனாய்.அகிலாவிடம் இந்த ஆம்பள பசங்க இப்படித்தான் என வன்மத்துடன் சொல்லியிருந்தாய்.அகிலா அவ கிடக்கிரா விடுறா என ஆறுதல் சொன்னபோது அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

பிரியும் தருணங்களில் நட்புக்கரம் நீட்டியபோது குழந்தையின் குதூகலத்துடன் விரல் பிடித்துக் கொண்டாய்.என்றென்றைக்குமான தோழி ப்ரிய ஸ்நேகிதி என உளறிக் கொட்டி முப்பது பக்க கடிதம் கொடுத்தேன் (இன்னும் வைத்திருக்கிறாயா அதை?)உலகின் அடிவானத்தை மீறிய அழகு இரண்டு மிகச்சிறிய இதயங்களின் நட்பில் இருக்கிறதென அறிவுமதியை துணைக்கழைத்தேன்.ஓசூரிலிருந்த முதல் இரண்டு மாதங்களில் வாரம் இரண்டு முறையாவது பேசிக்கொண்டோமில்லையா?உனக்கு தொலைபேச எடுத்துக்கொண்ட சிரமங்கள் நீ அறியாதது.தொலைபேசியில் கூட ஆண் குரல் அனுமதியில்லை என்பாளே உன் வார்டன் அவள் பெயரென்ன ஏதோ பாட்டுடன் சம்பந்தப்படுத்தி கிண்டலடிப்போமே.அண்ணாமலை நகர் எஸ் டிடி பூத் பெண்கள் என்னை எங்கு பார்த்தாலும் நமுட்டு சிரிப்பொன்றை உதிர்ப்பார்கள்.குளிக்கும்போது எட்டிப்பார்த்ததுபோல் கூசிப்போவேன்.

அடுத்த எட்டு மாதங்கள் உன் பிறந்த நாள்,என் பிறந்த நாள், நியூ இயர், உன் நினைவு வந்தது என ஒருமுறை இப்படியாய் தொலைபேசிக்கொண்டோம்.நான் எத்தனை கடிதங்கள் போட்டேன் என நினைவில்லை.ஒரு நள்ளிரவில் உனக்கு கடிதமெழுதிக்கொண்டிருந்தபோது அண்ணா பார்த்து விட்டார் ஆனால் எதுவும் கேட்கவில்லை.பின்பு பாண்டிச்சேரிக்கு மாற்றலாகிப் போய்விட்ட இரண்டு மாதங்கள் கழித்து தொலைபேசினாய்.படிப்பு முடிந்தது வேலைக்கு முயற்சிப்பதாய் கேட்டவுடன் மகிழ்ந்து போனேன்.உடனடியாய் அலுவலக ஏ.ஜி எம் மை அருவி பாருக்கு கூட்டிபோய் உன் வேலையை உறுதி செய்தேன்.உனக்கு ஹாஸ்டல் தேடியது நினைவிருக்கிறதா? அந்த அப்ளிகேசனில் கார்டியன் என்ற இடத்தில் என் கையொப்பமிட்டது இன்னமும் மகிழ்வைத் தருகிறது.

இரண்டாயிரம் வருட ஜீன் மாத ஒன்றாம் தேதி விஜயன் பைக்கில் ஆஸ்டலில் இருந்து உன்னை கூட்டி வந்தேன்.அந்த ஆறு மணி குளிர்.. ஆளில்லாத நேரு வீதி.. என் காதோரத்தில் உன் மூச்சுக் காற்று.. மற்றும் உன் பிரத்யேக வாசனை(ஒரு நள்ளிரவில் இது என்னடி வாசனை என கிறங்கியபோது ஃபேர் எவர் க்ரீம் பா என சொல்லி என் முகம் சுருங்கியதைப் பார்த்து சிரித்தாயல்லவா) இவைகளோடு அலுவலகத்தில் இறக்கி விட்டது மறக்க முடியாத தருணம்.அதற்கெனவே தொடர்ந்து இரவுப்பணி வாங்கிக்கொண்டேன்.எல்லா மாலைகளிலும் கடற்கரைக்கு போவதை விடவில்லை இல்லையா? கடற்கரைக்கெதிர்த்தார் போலிருந்த பூவரச மரமொன்றின் கீழிருக்கும் மரப்பெஞ்சு நமக்கெனவே உருவானதாய் சொல்லி சிலாகிப்போம்.இதற்க்கு ஏன் காதலர் பூங்கா எனப் பெயர்? நண்பர்கள் நாம் கூடத்தான் வருகிறோம் என கள்ளச் சிரிப்பை மறைத்தபடி நீ கேட்ட மாலையில் தான் கங்கா வைப் பற்றி சொன்னேன் அப்போதுதான் முதன் முதலில் என் உள்ளங்கை பிடித்தாயல்லவா?ஆங்! இன்னொரு சந்தர்ப்பம் ராமன் திரையரங்கில் அலைபாயுதே பார்த்துக் கொண்டிருந்த போது சட்டென உணர்ச்சி வயப்பட்டு என் உள்ளங்கையை கெட்டியாக பிடித்துக்கொண்டாய் என்ன? என்ன? எனப் பதறிக்கேட்டதற்க்கு எதுவுமில்லையென தலையசைத்தாய் ஆனால் உன் விழியோரம் துளிர்த்திருந்த நீர் அந்த இருட்டிலும் மின்னியது.

ஆகஸ்ட் இருபத்தேழாம் தேதி மதியம்தான் நான் முதலில் தங்கியிருந்த அந்த மொட்டை மாடி இருட்டறையில் உன்னை முத்தமிட்டேன். (உலகிலேயே மிகவும் பிடித்த இடமென்று அடிக்கடி சொல்வாயே) அந்த துணிவு எப்படி வந்ததெனத் தெரியவில்லை அதற்க்கு முன்பு எத்தனையோ நாட்கள் தனித்திருந்தும் எதுவும் நேர்ந்து விடவில்லை அன்று உன்னை முத்தமிட எந்த முன் தீர்மாணங்களுமில்லை வெகு இயல்பாய் நிகழ்ந்தது அது… ஒரு பூ இதழ் விரிப்பது போல.அதற்க்குப்பின் முதல் ஷிப்ட் முடித்துவிட்டு நேராய் என் அறைக்கு வந்து விடுவாய் மூன்று மணிக்கு கதவையே பார்த்தபடி உட்கார்ந்திருப்பேன்.எத்தனை முத்தங்கள் ஹேமா! அப்பா ஏன் அப்படி செய்தோமென இருக்கிறது.கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம் முத்தம்தான்.உலகத்திலேயே உடல்மொழியை முதலில் பேசிவிட்டு காதலை உறுதி செய்தவர்கள் நாமாகத்தான் இருக்கமுடியும்.ஃபார்மலாக நீ எப்போது என்னை காதலிக்கிறேன் என சொன்னாய் என மறந்து போய்விட்டது(தேதிகளை நினைவுபடுத்திக் கொள்ள பச்சை நிற டைரியை இப்போது படிப்பதில்லை ஹேமா)

புயலும் மழையுமாயிருந்த ஒரு நாளின் இரவில் பார்த்தே ஆக வேண்டுமெனத் தொலைபேசினாய்.ஏழு மணிக்குப் போன மின்சாரம் ஒன்பது மணி வரை வந்திருக்கவில்லை.ஒரு மரம் விழும் சப்தம் கேட்டது வா! போய் பார்க்கலாம் என ரோமண்ட் ரோலண்ட் நூலகத்திற்க்காய் சென்றோமே. மின்சாரம் இல்லாத அந்த இரவில் ஒளிர்ந்த பிரஞ்சு வீதிகள் எத்தனை அழகு ஹேமா!
நூலகத்தை ஒட்டியிருந்த அசோக மரம் புயலுக்கு இரையாகியிருந்தது மிகுந்த வருத்தங்களுடன் பார்த்தபடி தெருவை கடந்து மூலை திரும்புகையில் என்னைக் கட்டிக் கொண்டாய் அந்த இருளில் உன் உதட்டில் முத்தமிட்டதுதான் என் சிறந்த முத்தமென கிறக்கமான மதியங்களில் சிலாகிப்பாய்.

டிசம்பர் இருபத்து மூன்றாம் நாள் கார்த்திகை தீபத்திற்க்கு ஊருக்குப் போகாமல் அறைத்தோழனை சரிகட்டி ஊருக்கனுப்பி உன் வருகைக்காக காத்திருந்தேன் கைக்கொள்ளாமல் அகல் விளக்குகளை வாங்கி வந்திருந்தாய்.தாழ்பாளில்லாத என் குளியலறையில் எவ்வளவு நம்பிக்கைகளோடு குளித்துவிட்டு வந்தாயென சிலாகித்தபோது பாக்கறதுன்னா பாத்துக்கோங்க என கிறங்கடித்தாய் மேலும் உன் மேல உன்ன விட அதிக நம்பிக்கை விஸ்வா! எனக்கு எனச் சொல்லி என் வன்மையான முத்தத்திலிருந்து அந்த தருணத்தை பாதுகாத்துக் கொண்டாய். பாவாடை தாவணியில் உன்னைப் பார்த்தது இல்லை என எப்போதோ சொல்லியிருந்ததை நினைவில் வைத்திருந்து கையோடு கொண்டு வந்திருந்த மல்லிகைப்பூ, கொலுசு, பாவாடை தாவணி சகிதமாய் நீ சடுதியில் மாறிப்போனாய் எப்படி இருக்கேன் என முன் வந்து கேட்ட தருணம் வெகு நாட்கள் கனவில் வந்தது ஹேமா!.

மின்சார விளக்குகளை அணைத்து விட்டு அறைமுழுக்க அகல் விள்க்குகளை ஏற்றி வைத்தோம் தீபத்தின் ஒளியில் ஒளிர்ந்த அறையின் நடுவில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தோம்.எண்ணெய் தீர்ந்து அகல் விளக்குகள் குளிர்ந்தபின்பும் விளக்குகளைப் பொருத்தாமல் பால்கனி சன்னல்களினூடாய் உள் விழுந்த நிலவொளி வெளிச்சத்தில் புதைந்தபடி வானம் பார்த்தோம். நட்சத்திரத்தினுள் ஒன்றைத் தெர்ந்தெடுத்து அதனிடம் சொன்னாய் ஏ! நட்சத்திரமே பார்த்துக்கொள் இதே போன்றொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் உன்னிடம் பேசும்போது இவரின் குழந்தையை நான் சுமந்திருப்பேன்.(நீ எப்போதும் என்னை ஒருமையில் கூப்பிட்டதில்லையே ஏன் ஹேமா?) ஏதாவது பாடுங்களேன் எனக் கேட்டதற்க்கு கண்கள் மூடி..சுவற்றில் சாய்ந்து உன் மடி மீது கால் தூக்கிப்போட்டு கனாக் காணும் கண்கள் மெல்ல பாடினேனே..செத்துடனும் போலிருக்கு விஸ்வா என உருகிப்போனாய்.. அந்த பின்னிரவில் ஈரமான தொடுகையில் விழித்துப் பார்க்கையில் நீ என்னை முத்தமிட்டுக் கொண்டிருந்தாய் ஏய் தூங்கு என கோபித்தபோது தூங்குமூஞ்சி எனச் சொல்லி நெருங்கி வந்து படுத்துக் கொண்டாய்.

நம் காதலை நீ அவசரப்பட்டு சொல்லியிருக்க வேண்டாம் ஹேமா! எவ்வளவு விரைவாய் நடந்தது அந்தப் பிரிவு.மீண்டும் வேலை மாற்றம்,உன் அக்காவின் பிரச்சினைகள்,அம்மாவின் பிடிவாதம், என் தற்கொலை முயற்சி, உன் கதறல்கள், நமது குடும்பத்திற்க்குள் நடந்த அடிதடி……..

எதுவிருப்பினும் நீ என்னை விட்டுப் போயிருக்க வேண்டாம் ஹேமா!

கங்காவைப் பற்றி சில தகவல்கள்



கங்காவிற்க்கு அப்போது வயது இருபது
கங்கா வணிகவியல் மூன்றாமாண்டு படித்து வந்தான்
கங்கா விற்க்கு அதிகம் நண்பர்களில்லை
கங்கா கூச்ச சுபாவி
கங்காவிற்க்கு பெண் தோழிகள் யாருமில்லை
கங்காவிற்க்காக காத்திருந்த அத்தைப்பெண்ணுக்கு முடி நீளம்
கங்கா எல்லா சனிக்கிழமைகளிலும் தேவிகருமாரியம்மன் கோயிலுக்குப் போவான்
கங்காவிற்க்கு இரக்க குணம் அதிகம்
கங்காவிற்க்கு குழந்தைகளைன்றால் கொள்ளைப் பிரியம்
கங்காவிற்க்கு கோபம் அதிகம் வரும்
கங்கா உடம்பை நன்றாக வைத்திருப்பான் உடற்பயிற்சிகளில் நல்ல ஆர்வம்
கங்காவின் அப்பா ஒரு சவரத் தொழிலாளி விடுமுறை தினங்களில் கங்காவும் அவருக்கு உதவியாய் முடி திருத்துவான் / சவரம் செய்வான்
கங்காவிற்க்கு பிடித்த நடிகர் பிரபு பிடித்த நடிகை நதியா
பிடித்த படம் சின்னப்பூவே மெல்லப் பேசு
கங்காவிற்க்கு சண்டைப் படங்கள் அதிகம் பிடிக்கும்
சாமோ ஹியூங்க் மற்றும் ஜாக்கி ஜான் படங்களை விரும்பிப் பார்ப்பான் அவனுக்கு மிகவும் பிடித்த ஆங்கிலப் படம் ஆர்மட் ஃபார் ஆக்சன்.
சின்னத் தம்பி படம் பார்க்கப்போன கங்கா அங்கு பிச்சையெடுத்துக் கொண்டிருந்த மூதாட்டியை பார்த்து மனமிரங்கி கையிலிருந்த பணத்தை கொடுத்துவிட்டு வீடு திரும்பினான்
வெங்கடேசன் வீடு மழையில் அடித்துக்கொண்டு போனதற்க்கு மறுநாள் கங்கா தன்னிடம் இருந்த ஒரே போர்வையை அவனுக்கு கொடுத்து விட்டான்.
கங்காவிற்க்கு இரும்புக் கை மாயாவியை பிடிக்கும் நாமும் இப்படி மறைந்தபடி எல்லாம் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென சிலாகித்துக் கொள்வான்.
கங்காவிற்க்கு பாலகுமாரனின் இரவல் கவிதை மிகவும் பிடித்த புத்தகம்
கங்கா தன்னம்பிக்கை நூல்களை அதிகம் படிப்பான் எம்.எஸ் உதயமூர்த்தியின் எண்ணங்கள் அவன் அடிக்கடி படித்தது. பொன் மொழிகள்,தன்னம்பிக்கை வரிகள் இவற்றை தனது ரஃப் நோட்டில் எழுதி வைத்துக் கொள்வான்
கங்காவிற்க்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாது.கிட்டி புல் நன்றாக விளையாடுவான்.
சிறுவர்களுடன் விளையடும்போது மரங்கள் பின்னால் ஒளிந்து கொண்டு கத்தியபடி நீண்ட குச்சியை வைத்து சுடுவான்
கங்காவிற்க்கு சுயமைதுனப் பழக்கம் இருந்தது
கங்காவிற்க்கு மிகவும் பிடித்த தலைவர் பிரபாகரன்.
கங்கா சில நாட்களாய் கல்லூரி போவதை நிறுத்தியிருந்தான்
நண்பர்களைப் பார்ப்பதையும் தவிர்த்தான்
உடம்பு சரியில்லை என அடிக்கடி சுருண்டு படுத்துக் கொண்டான்
1996 ஆம் வருடம் ஜனவரி 4 ம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு பெரிய அந்த வீட்டின் குறுகலான அறை ஒன்றில் கங்கா தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டான்.

Thursday, July 26, 2007

எனக்குப் பிடித்த இயக்குனர்கள் மற்றும் திரைப்படங்கள்



எந்த ஒரு திரைப்படத்தை பார்க்க நேரிட்டாலும் முதலில் தெரிந்து கொள்ள விழைவது அதன் இயக்குனர் யார் என்பதுதான்.நடிகர் நடிகைகளை காட்டிலும் என்னை அதிகம் கவர்வது ஒரு திரைப்படத்தின் இயக்குனர்தான்.எனக்குப் பிடித்த சில இயக்குனர்கள் மற்றும் அவர்களின் திரைப்படங்கள் மேலும் நான் தேடிக்கொண்டிருக்கும் அவர்களின் திரைப்படங்களை இங்கே பதிவிக்கிறேன்.அதிகம் மெனக்கெடாததால் சிலரை விட்டிருக்கலாம்.

1 அகிராகுரசோவா -ஜப்பான்

Seven samurai (1954)
The Hidden fortress (1958)
The lower depths (1957)
இவரின் மற்ற திரைப்படங்களான ran/ikiru/rashoman/dreams போன்றவைகள் தேடுதல் வேட்டையிலிருக்கின்றன.

2 ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் - பிரிட்டிஷ் / ஹாலிவுட்

Black mail (1929)
Murder (1930)
The 39 Steps (1935)
The shadow of a doubt (1943)
The Rope (1948)
I Confess (1953)
Psycho (1960)
Birds (1963)
Marnie (1964)
Frenzy (1972)

தேடிக் கொண்டிருக்கும் படங்கள் rear window / rebacca

3 இங்க்மெர் பெர்க்மென் - ஸ்வீடிஷ்

wild strewberries (1957)
The silence (1963)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் Fanny och Alexander /The virgin spring /Cries and Whishpers

4 விட்டோரியா டெசிகா - இத்தாலி

The bicycle theif (1948)
Umberdo D (1952)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் The children are watching / miracle in milan
Shoeshine

5 கீஸ்லோவெஸ்கி-போலந்து

Three colors Blue / White /Red (1993 &1994)
A short film about Love (1989)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் The decalogue / Short film about killing

6 அந்திரேய் தர்க்கோயெவ்ஸ்க்கி - ரஷ்யா

solaris (1972)
The Mirror (1975)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் My name is Ivan / Nostalghia

7 ஸ்டேன்லி குப்ரிக் - ஹாலிவுட்

Spartacus (1960)
2001:A Space Odyseey (1968)
The Shining(1980)
Full Metal Jacket (1987)
Eyes wide Shut(1999)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் A Clockwork orange / Barry lyndon

8 கோடார்ட் - பிரெஞ்ச்

Band of outsiders
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் two three things i know abot her / pierrot le fou

9 பெட்ரிகோ ஃபெலினி - இத்தாலி

Nights of cabiria (1957)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் Amarcord (டிசே மனது வைப்பாராக)
10 கர்-வாய்-வொங் - சீனா
chunking Express (1994)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள்
Inthe mood for love / Happy togather

11 ரோமன் போலன்ஸ்கி - போலந்து

The pianist (2002)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் china town/rosemary's baby

12 ஸ்பீல்பெர்க் - ஹாலிவுட்

Jaws (1975)
Indiana jones (1989)
Jurassic park (1993)
Schindleers List (1998)
Artificial Inteligence(2001)
Catch me If you can(2002)
The terminal(2004)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் Munich

13 கிளிண்ட் ஈஸ்ட்வுட் -ஹாலிவுட்

A Fist fulof dollars (1964)
The good,the bad and the ugly (1966)
Unforgiven (1992)
Mystic River(2003)
Million Dollar Baby(2004)
Flags of our Father(2006)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் Bird / Letters from iwo jimbo

14 ப்யெர் பாலோ பாசோலினி - இத்தாலி

The Decameran(1971)
Edipo re (1967)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள்
The Gosepel According to St.Mathew
The Witches

15 ஷாங்க் யுமூ - சீனா

Red sorghum (1987)
The Road Home (1999)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் To live / Not One less

16 மஜித் மஜித் - ஈரான்

childern of Heaven
color of paradise
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் The willow Tree / Rain / Father

17 வால்டர் செலஸ் - பிரேசில்

The Motorcycle Diaries (2004)
Dark Water (2005)
Behind the Sun (2001)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் central station / Life somewhre else

18 பெட்ரோ அல்மதோவர்- ஸ்பானிஷ்

volver (2006)
Talk to Her (2002)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் All about my mother / Live flesh

Life is Beautiful படம் எடுத்த Roberto Remigio Benigni எமிலி படம் எடுத்த Jean-Pierre Jeunet ஆலிவர் ஸ்டோன் ,கெவின் காஸ்ட்னர் போன்ற இயக்குநர்களும் பிடித்தவர்கள்தாம்.
முக்கியமாய் யாரேனும் விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.அப்படியே உங்களுக்குப் பிடித்த இயக்குனர்களையும் தெரிவியுங்களேன்.

Wednesday, July 25, 2007

விழிகளில் மழையைத் தேக்கி வைத்திருப்பவளின் நினைவுக்குறிப்புகள்



Memories of a Geisha (2005)

மிதந்து கொண்டிருக்கும் இவ்வுலகின் வெளியை நடனப்பெண் தனது பாவனைகளால் நிரப்புகிறாள். உங்களை மகிழ்விக்க இசைக்கருவிகள் மீட்டுகிறாள்.தனது நடனத்தின் மூலம் உங்களின் பொழுதுகளை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறாள்.கருநிழல் படிந்த அவளின் பின்புலம் யாரும் அறியாதது மேலும் அது மிகவும் ரகசியமானதும் கூட.


கேளிக்கைக்காக பயன்படுத்தப்படும் பெண்களின் வாழ்வு சந்திக்கநேரிடும் துயரங்களை.உடலாக மட்டுமே பார்க்கப்படும் பெண்ணின் உணர்வுகளை.சட்டென மாறிப்பொகும் அழகின் நிரந்தரமில்லாத தன்மையை பதிவு செய்திருக்கும் இப்படம் ஜப்பானின் கலாச்சார பிரதிகள் என்றைழக்கப்படும் நடனப்பெண்களின் வாழ்வு பற்றிய சிறந்த பதிவு.1930 களின் இறுதிவாக்கில் சம்பவங்கள் நடைபெறுகின்றன.ஆர்தர் கோல்டன் நாவலின் திரைவடிவத்தை இயக்கி இருப்பது ராப் மார்ஷல் இவர் சிகாகோ படத்தை இயக்கியவர்.ஸ்பீல்பெர்க் தயாரித்த இப்படம் சிறந்த ஓளிப்பதிவு,ஆடை வடிவமைப்பு,மற்றும் சிறந்த கலை நுட்பத்திற்க்கான மூன்று அகாடமி விருதுகளை குவித்தது.சயூரியாக நடித்திருப்பது zhank ziyi இவர் The road home திரைப்படத்தில் நடித்தவர்.இத்திரைப்படம் 2005 ல் வெளிவந்து.


ஒரு கடற்கரையோர கிராமத்தின் சிறுகுடிலிலிருந்து இரண்டு சிறுமிகள் மழை வலுத்த இரவொன்றில் பலவந்தமாய் பெயர்த்தெடுக்கப்பட்டு ஜப்பானின் நடனப்பெண்கள் வசிக்கும் வீடுகளுக்கு அடிமைகளாய் விற்க்கப்படுகின்றனர்.கண்களில் நீர் மிகுந்த ஒன்பது வயதான சியோ தனது அக்கா சாட்சு வை பிரிய நேரிடுகிறது.சியோ வின் வீட்டில் அவள் வயதையொத்த பம்ப்கின் என்ற மற்றொரு சிறுமியும் ஏற்கனவே விற்கப்பட்டிருக்கிறாள்.வேலை ஓய்ந்த நேரம் போக இருவரும் நடனப்பெண்களை உருவாக்கும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.அங்கே நடனமும் இசையையும் பயிற்றுவிக்கப்படுகிறது.சியோ விற்க்கு நடனப்பெண்ணாகும் ஆசையை விட அந்த இடத்திலிருந்து தப்பித்து தனது அக்காவுடன் எங்காவது சென்றுவிட வேண்டும் என்கிற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. ஹாட்சுமோமா எனும் தலைமை நடனப்பெண்ணுக்கு சியோ வை பிடிக்காமல் போகிறது மேலும் அவள் தன் காதலனுடன் தனித்திருக்கும்போது சியோ பார்த்துவிடுகிறாள். விதிமுறைகளின் படி நடனமாதுக்கள் யாருடனும் உறவு கொள்ளக்கூடாது.சியோவின் மீது வன்மமும் கோபமும் அவளுக்கு அதிகரிப்பதின் நீட்சியாய். அவ்வில்லத் தலைவி சியோ வை நிரந்தர அடிமைப்பெண்ணாக இருக்கும்படி பணித்து விடுகிறாள்.


ஓர் உறைபனி மாலையில் பம்ப்கின் தவறவிட்ட இசைக்கருவியை கொடுக்க கேளிக்கை விடுதிக்கு செல்கிறாள் எதிர்பாராவிதமாய் அக்கணவானை மீண்டும் நேருக்கு நேர் சந்திக்கிறாள்.அவளின் அழகில் கவரப்படும் அக்கணவான் மெம்ஹா என்ற மற்றொரு நடனப் பெண்ணை அனுப்பி சியோ வை ஒரு நடனப்பெண்ணாய் தயார்படுத்த பணிக்கிறார்.மெம்ஹா சியோ வை அவளின் அடிமை உலகிலிருந்து மீட்டெடுக்கிறாள்.ஓற்றைப் பார்வையில் ஓர் ஆணை சாய்க்கும் வித்தை கற்றுத்தருகிறாள் நடனம்,இசை,நேர்த்தி,பாவம் என எல்லாம் தேர்ந்த நடனப்பெண்ணாக மாறுகிறாள்.இப்போது சியோ வின் பெயர் சயூரி.

சயூரி புகழடைகிறாள்.எல்லா பணக்கார கிழவர்களும் சயூரி யின் மேல் காதல் கொள்கின்றனர்.இவள் அடிமையாய் இருந்த வீட்டின் தலைமை நடனப்பெண்ணான ஹாட்சுமோமா வின் அறை சயூரியின் வசமாகிறது.சரியான விலைக்கு சயூரி யை விற்க ஆள்தேடிக்கொண்டிருப்பாள் மெம்ஹா.இந்த நிலையில் சயூரியின் காதலரான அக்கணவான் தன் நண்பரை மகிழ்விக்க சயூரியைப் பணிக்கிறார்.பெண்கள் மேல் ஆர்வமில்லாத நெபு சோன் சயூரியின்பால் ஈர்க்கப்படுகிறான்.சயூரியின் காதல் சொல்லமுடியாமலே போய்விடுகிறது.திடீரென வரும் போர் எல்லாக் கதவுகளையும் அடைக்கிறது.அத்தனை கேளிக்கைகளும் வண்ணங்களும் நிறமிழக்கத் தொடங்குகின்றன.உயிர் பிரதமானமாய் திசைகளற்று இடம்பெயர்கின்றனர் மக்கள். சயூரி நெபு சோனின் பாதுகாப்பில் ஒரு மலைக்கிராமத்திற்க்கு கொண்டு செல்லப்படுகிறாள். சாதாரண தொழிலாளியாய் சயூரி விழிப்பதும் வேலை செய்வதுமாய் இரண்டு வருடங்கள் கழிகின்றன.ஒருநாள் நெபு சோன் அவளை சந்திக்க வருகிறான். தான் புதிதாக ஆரம்பிக்க இருக்க்கும் வியாபாரம் பற்றியும் அதன் கூட்டாளிகளை மகிழ்விக்க மீண்டும் சயூரியை நடனப்பெண்ணாக மாறும்படிம் கோருகிறான். பம்கின்னின் வனமத்தில் விரும்பத்தகாத சூழலில் அக்கணவான் சயூரியை பார்க்க நேரிடுகிறது.தன் நம்பிக்கைகளை மொத்தமாய் இழந்த சயூரி ஒரு வெளியில் தான் பத்திரமாய் வைத்திருக்கும் அக்கணவானின் கைக்குட்டையை காற்றில் எறிகிறாள்.மீண்டும் மெம்ஹா வுடன் நடனப்பெண்ணாக வாழ்வை தொடருகிறாள்.ஒருநாள் மெம்ஹா பணக்காரர் ஒருத்தரை சந்திக்க சயூரியை அனுப்புகிறாள். அங்கே இவளின் காதலை மொத்தமாய் சுமந்திருக்கும் அக்கணவான் இவளின் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.அற்புதமான சூழலில் இருவரும் இணைகின்றனர்.

இதுவரை யராலும் சொல்லப்படாத கதை என்னுடையது என்றபடி சன்னமான பின்குரலோடு துவங்கும் இத்திரைப்படம் கீஷாக்கள் என்றழைக்கப்படும் நடன பெண்களின் வலிகளை பதிவிக்கிறது.உலகம் முழுக்க மதம்,கலாச்சாரம்,பண்பு,குடும்பம்,கட்டமைப்பு என்ற வெவ்வேறு பெயர்களில் பெண்ணின் உணர்வுகளை நசுக்கி சமூகம் தன் போலிக்கட்டமைப்புகளை பெருமையாய் வடிவமைத்துக்கொண்டுள்ளது. மேல்தட்டு மக்களை கேளிக்கைகளில் திளைக்க செய்ய தன் நேர்த்தியான, நளினமான பணிவிடைகள் மூலமாய் அவனை பெருமைப்படுத்த அழகான அடிமைகளான இந்த நடனப் பெண்களை கலாச்சார பிரதிநிதிகள் என பெருமையோடு அழைத்துக் கொள்ளும் ஜப்பானிய கலாச்சாரம் திரைமறைவில் இப்பெண்களை உடலாக மட்டுமே பார்க்கும் அவலத்தையும் இத்திரைப்படம் பதிவு செய்ய தவறவில்லை.

உடல் என்ற ஒற்றை பரிமாணத்தில் இச்சமூகத்தால் உற்றுநோக்கப்படும் பெண்ணின் துயரங்களை,தனக்கான ஒரு சிறுஅசைவைக்கூட மறுக்கும் அவள் சார்ந்த சமூக கட்டுகளை, மேலும் தான் நசுக்கப்படுகிறோம் என்பதைக்கூட அறிந்து கொள்ளமுடியாத அப்பெண்களின் விளிம்புநிலை வாழ்வை,சகப் பெண்களின் போட்டிகளை சமாளிக்க கையாலும் தந்திரங்களை,அழகு மெல்ல நிறமிழக்கும்போது அல்லது போட்டி வலுக்கும்போது மீண்டும் சமூக விளிம்பிற்க்கு துரத்தப்படும் அவலத்தை இப்படம் பதிவு செய்கிறது.

ஹாலிவுட்டில் பெரும்புகழ் குவித்த இத்திரைப்படம் ஜப்பானியர்களின் விமர்சனத்திற்கும் உள்ளானது.கீஷாவின் வடிவம் முழுமையடையவில்லை என அவர்கள் குறைபட்டு கொண்டார்கள்.

Featured Post

test

 test