Thursday, June 13, 2019

முள்ளம்பன்றிகளின் விடுதி





லீமா இன்றைக்குள் உறுதிபடுத்தச் சொன்னாள். நாங்கள் வசிக்கும் அடுக்கு மாடிக் கட்டிடத்தின் எண்பதாவது தளத்தில் இருக்கும் பறக்கும் கார் நடைமேடையில் நடந்து கொண்டிருந்தோம். இருவரின் அலுவலகத்திற்கும் எதிரெதிர் திசையில் பயணிக்க வேண்டும். லீமா அவளது அலுவலகப் பறக்கும் காரில் ஏறியபடியே மீண்டும் சைகையில் நினைவூட்டினாள். காலை ஏழு மணி ஆகியிருந்தது. இந்த உயரத்திலிருந்து பார்க்கும் போது கீழேயும் மேலேயும் வெறும் புகைமூட்டமே சூழ்ந்திருந்தது. வானம் பூமி இரண்டுமே அற்பக் கற்பனைகளாகத் தோன்றின. தொலைவில் இருந்த நூறு மாடிக் கட்டிடங்கள் லேசாய் தென்பட்டன. சூரியன் எப்போதாவது வரும். வெளிச்சத்தைப் பார்த்தே நாட்களாகின்றன. சூரிய ஒளிக்கதிரின் மினுமினுப்பு நினைவிற்கு வந்தது. உடன் மிளாவின் நினைவும். அவசரமாய் தலையை உலுக்கிக் கொண்டேன். மிளாவின் நினைப்பு வரவே கூடாது. என் அலுவலகப் பறக்கும் கார் வந்தது ஏறிக் கொண்டேன்.

இரண்டரை நிமிடம். அலுவலகத்தின் என் அறைக்குள் இறங்கினேன். இன்றைக்காவது நியூரோ சர்ஜனை சந்தித்து விட வேண்டும். லீமா குழந்தை பெற்றுக் கொள்ளும் திட்டத்தை எப்போது சொன்னாளோ அன்றிலிருந்தே தமிழ் பேசும் நியூரோ சர்ஜனை தேடிக் கொண்டிருந்தேன். நளன் என்கிற ஒரு மருத்துவர் கிடைத்தார். ஆனால் சந்திக்கத்தான் முடியவில்லை. இன்று கிடைத்திருக்கிறது.  காலைப் பதினோரு மணிக்கு சந்திக்க வேண்டும். அவரின் அலுவலகத்தை அலைபேசியில் பார்த்துக் கொண்டேன். வாகனத்தை முன்பதிவு செய்தேன். வேலையில் விழுந்தேன்.

பத்து ஐம்பதிற்கு வாகனம் சன்னலுக்காய் வந்தது. சன்னலைத் திறந்து கொண்டு ஏறினேன். ஐம்பத்தேழிற்கு மருத்துவமனை வரவேற்பரையில் இறங்கிக் கொண்டேன். பதினோரு மணிக்கு உள்ளே அழைக்கப்பட்டேன். மருத்துவர் நளன் எழுந்து கைக்குலுக்கினார். தமிழ் பேசுபவர் என அறிந்ததும் மகிழ்ந்ததாகச் சொன்னார். நல்ல தமிழில் பேசினார்.
எனக்கு எங்கிருந்து ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை. மிளாவிலிருந்து தொடங்குவது சரியாக இருக்குமென நினைத்து எங்களின் முதல் சந்திப்பிலிருந்து ஆரம்பித்தேன்.

”முள்ளம்பன்றி விடுதியில்தான் நாங்கள் முதலில் சந்தித்துக் கொண்டோம். அங்கு வைத்தா? என்றால், இல்லை. அதற்கு முன்பும் பார்த்திருக்கிறோம். அவசரத் தீண்டல்கள், காதலின் தீவிர தாப சமிக்ஞைகள் எல்லாமும் முன்பே இருந்தன. ஏன், இந்த விடுதிக்கு வரும் வரும் வழியில் கூட காரில் ஓட்டுனர் அசந்த நேரம் பார்த்து அடிக்கடி முத்தமிட்டுக் கொண்டோம். வழியில் ஓர் உணவகத்தில் உணவருந்திவிட்டு, வெளியே வருகையில் கிடைத்த யாருமில்லா கணமொன்றில் கூட அவளைப் பின்புறமாய் அணைத்துக் கொண்டு அவளின் மீதிருந்தப் பித்தைச் சொன்னேன். ஆனாலும் விடுதியில்தான் முதல் சந்திப்பெனக் கூறுவேன். இரு உடல்களின் ஆரத் தழுவுதலே உயிரின், ஆன்மாவின் முதல் சந்திப்பாக இருக்க முடியுமல்லாவா, அது இங்குதான் நிகழ்ந்தது. இந்த முள்ளம் பன்றி விடுதி, கடல் மட்டத்திலிருந்து எத்தனையோ ஆயிர அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. மேற்கு மலைத் தொடர்களின் அசல் வசீகரத்தை நாங்கள் தங்கியிருந்த அறையின் விஸ்தாரமான பால்கனியிலிருந்து பார்க்க முடியும். பூச்சிகளின் அடர் பின்னணி இசையோடு இரவு முழுக்க குளிரில் நடுங்கியபடியே அந்தப் பால்கனியில் உடல்கள் புதைந்து கிடந்தோம். அறைக்குள் சென்றால் அனுமதியற்றப் படுக்கைகளை கண்காணிக்கும் கேமிராவிற்குள் விழுந்துவிடுவோம் எனப் பயந்ததை விட தூங்கிவிடுவோமே என்றுதான் அதிகம் பயந்தோம். எங்களுக்கே எங்களுக்காய் அந்த அடர் இருள், குளிர் இரவு இருந்தது. நாங்களும் அதனோடு இருந்தோம். “

பேச்சைத் தொடரமுடியவில்லை. மூச்சை ஆழமாய் இழுத்து விட்டுக் கொண்டேன். என் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த நளன் எழுந்து நின்றான்.

”ஏதாவது அருந்துகிறீர்களா?”

”தேநீர்” என்றேன்.

நளன் கதவிற்காய் மெல்ல நடந்துபோய் அதன் பக்கவாட்டில் இருப்பதே தெரியாமல் இருந்த தொடுதிரையை உயிர்ப்பித்து தேநீருக்குச் சொன்னான்.

திரும்பி வந்து இருக்கையில் அமர்ந்து கொண்டு

“பிறகு?” என்றான்.

”அடுத்த நாள் திரும்பிவிடுவதுதான் திட்டம். எனவேதான் ஒவ்வொரு நொடியையும் எங்களுக்கானதாய் பாதுகாத்தோம். ஆனால் எங்களால் எங்களிடமிருந்து மீளமுடியவில்லை. நகரத்தில் காத்துக் கிடக்கும் எங்களின் தனித்தனி சொந்த அழுத்தங்கள், வேலைகள், நிர்பந்தங்கள் யாவும் மறந்து போயின. என் நாற்பது வருட வாழ்வில் முதன்முறையாய், இந்த வாழ்வு என்னுடையது, எனக்குப் பிடித்தபடி இருப்பதில் என்ன தவறு எனத் தோன்றியது. அடுத்த நொடியே அவளும் இதை ஆமோதித்தாள். இது குறித்து நான் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் கடந்த மூன்று மாதங்களாக இப்படித்தான் நடக்கிறது. எனக்குத் தோன்றுவது எல்லாமே அவள் காண விரும்பியது. அவள் விரும்புவது எல்லாமும் என் அத்தனை வருடக் கனவாய் இருந்தது. இந்த அபாரமான சங்கமத்தின் ஆச்சரியக் கரைகளைக் காணவே இந்த விடுதிக்கு வந்திருந்தோம். அவள் இதற்கு ஒரு பெயர் வைத்திருந்தாள். ’சோல்மேட்ஸ்’. இந்த வார்த்தையைச் சொல்லிவிட்டு கூடவே ”இது ஆன்மாவின் இணைப்பு. நீயும் நானும் வெறும் நண்பர்களல்ல, காதலர்களுமல்ல; சோல்மேட்ஸ். இப்படி எல்லாம் நடந்தாக வேண்டுமென்பதுதான் விதி.” எனச் சொல்லியபடியே என்னில் இன்னும் அழுந்தப் புதைந்து கொள்வாள். நான்கு நாட்கள் அங்கிருந்தோம். மூன்று நாட்கள்தாம் ஆனதாய் நினைத்துக் கொண்டிருந்ததுதான் விநோதம். விடுதியறையை காலி செய்யும்போதுதான் தேதியைப் பார்த்தோம். எங்களைத் தனித்தனியாய் விழுங்கக் காத்திருக்கும் கடமையெனும் திறந்தவாய் முதலைகளை நினைத்து அப்போதுதான் பயமே எழுந்தது. இருவரும் சில்லிட்ட உள்ளங்கைகளைப் பிணைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறி, நகரம் வந்தடைந்தோம்.”

அறைக்கதவு திறந்தது. மேற்சட்டை அணிந்திராத ஒரு நாயர் இரண்டு கண்ணாடிக் குவளைகளில் தேநீர் கொண்டு வந்து தந்தார்.

 ”இது ஸோரோ”

என அறிமுகப்படுத்தியபடியே அந்த நாயரின் தலைக்காய் நளன் கையை அசைத்தான். அவருக்கு மேற் சட்டை வந்தது.
ஸோரோ அவசரமாய் பேசியது,

”மன்னித்துக் கொள்ளுங்கள், பக்கத்து அறை அஜிதனுக்கு தேநீர் கொண்டு சென்றேன். அவருக்கு எல்லாவற்றிலும் நீரில் மூழ்கிப் போன அவரின் கேரளம் இருந்தாக வேண்டும். உங்கள் அறைக்கு வரும்போது தவறுதலாக அப்படியே வந்துட்டேன். உடனே சரி செய்து விடுகிறேன்”

என்றபடியே ஸோரோ தன் வலது கண்ணைத் தொட்டது. நீலநிறத் தொடுதிரை அதன் முன்னால் உயிர்த்தது. எண்ணற்ற அல்கரிதம்கள் அந்த அறையில் மிதந்தன. ஸோரோ ஒன்றை அழுத்தித் திருத்தியது. பிறகு கண்ணை மூடிக் கொண்டது
நளன் புன்னகைத்தான்.

ஸோரோ வெளியேறியது.

எல்லாவற்றையும் சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அது ஒரு வெள்ளை நிற அறை. எதிரெதிரே இருந்த இரண்டு மர இருக்கைகளில் நாங்கள் அமர்ந்திருந்தோம். அறையில் வேறெந்தப் பொருளுமில்லை. உரையாடலை ஆரம்பிக்கும்பொழுது என் பின்னங் கழுத்தில் சின்னஞ்சிறு குமிழொன்றை நளன் பொருத்தினான். இது உறுத்தாது, நம் உரையாடலையும் உங்கள் மன உணர்வையும் வெறுமனே பதிவு மட்டும் செய்யும். நம்முடைய சிகிச்சைக்கு அத்தியாவசியமானது எனச் சொல்லியிருந்தான். அந்த சாதனத்தை வைத்த உணர்வு கூட எனக்குத் தோன்றவில்லை.

”சொல்லுங்க” 

நளன் என் கவனத்தைத் திருப்பினான். தொடர்ந்தேன்,

"இருவரும் எங்கள் தினசரிகளுக்கு வந்து சேர்ந்தோம். கடந்து போன நான்கு நாட்களுக்கான கேள்விகளைச் சமாளித்தோம். அதற்கு அடுத்த நாள் இயல்பான நாளாக மாறிப்போனது. நம்மைச் சுற்றி உள்ள உலகத்தில் நாம் இல்லை என்றால் அது இயங்காது என எண்ணியது எத்தனை முட்டாள்தனம் எனப் புரிந்தது. எங்களின் உலகங்களை அவ்வப்போது துண்டித்துக் கொண்டோம். எந்த பயமும் இல்லாமல் அடுத்தடுத்து சந்தித்துக் கொண்டோம்.

மலைகள்தாம் எங்களை ஈர்த்தன. குறிப்பாக மேற்கு மலைத் தொடர். மனிதர்கள் போக முடிந்த எல்லை வரை போனோம். காலம், அகாலம் என இலக்கில்லாமல் அதன் மடியில் விழுந்து புரண்டு எழுந்தோம். ஒவ்வொரு பயண முடிவிலும் அவ்வளவு புதிதாய் மலைகளிலிருந்து கீழே இறங்கினோம். அடுத்த முறையோ இன்னும் ஆசையாய் மலைகளின் மீதேறினோம். எங்களுக்கு இயற்கை மீதான அச்சம் இல்லாமல் இருந்தது. வனத்தின் ரகசிய இடங்களைத் தேடித் தேடி அலைந்தோம். மலையருவிகளை, ஓடைகளைத் தொடர்ந்து போய் அதன் ரகசிய ஊற்றுக்களை அறிந்தோம். பகலே எங்களின் கொண்டாட்டப் பொழுது. அடர் வனங்களில், மரச்சரிவுகளில் சூரிய ஒளி அவ்வளவு ஆசையாய் ஊடுறுவும். வெளிச்சமிருந்தாலே மகிழ்ச்சிதான். அதன் உதவியுடன் மலைத்தாயின் ரகசிய அடுக்குகளை கண்டறிந்து, அதன் இடுக்குகளில் எங்களைப் புதைத்தபடி கலவி கொண்டோம். விலங்குகள், பாம்புகள், பூச்சிகள், பள்ளத்தாக்குகள், சரிவுகள், கடும் மழை, கொடுங்குளிர் என இயற்கையின் எந்த ஒரு வடிவமும் எங்களைத் தொந்தரவு செய்யவில்லை. இரவில் மட்டும் எங்காவது அடைந்து கொள்வோம். அந்த சந்தர்ப்பங்களில் ஏதாவது ஒரு கானக விலங்கின் இரையாவது குறித்தும் எங்களுக்கு சம்மதமிருந்தது. ஒரு பசித்த புலிக்கு எங்களைத் தின்னக் கொடுக்கவும் தயாராக இருந்தோம். எனவே இயற்கையின் அகண்ட பேரதிசயங்களில் முழுமையாய் திளைத்துக் கிடந்தோம்.

மலைகளையும் காடுகளையும் தவிர்த்து புராதன இடங்களைக் காணுவதிலும் எங்களுக்கு ஆர்வம் இருந்தது. இயற்கைச் சீற்றங்களால் முற்றிலும் அழிந்து போன தமிழ்நாட்டின் எச்சங்களை அடிக்கடி போய் பார்த்து வருவோம். புத்தகங்கள் வழியாய் அறிந்திருந்த நகரங்களின் எச்சங்களைத் தேடுவோம். உடைந்து விழுந்து கிடக்கும் கோபுரங்கள், சிதைந்த கோவில்கள், சரிந்த மலைகள் என எல்லாவற்றையும் தேடித் தேடிப் பார்ப்போம். அதெப்படி ஒரே இரவில் தமிழ்நாட்டின் அத்தனை வீடுகளும் மண்ணிற்குள் புதைந்தன என ஆச்சரியமாய் பேசிக் கொள்வோம். மரங்களோ பறவைகளோ வேறு எந்த உயிரினங்களோ இல்லாத பிரதேசத்தை பார்ப்பதும் விநோதமானதுதான். எங்களுக்கு இந்த மாதிரியான சாகசங்களும் பிடித்திருந்தன."


நளன் ஆச்சரியமாய் கேட்டான்.

“தமிழ் நாட்டிற்குள் செல்ல எப்படி அனுமதி வாங்கினீர்கள்? அதன் எல்லைகள்தாம் அடைக்கப்பட்டிருக்கின்றனவே!”

சிரித்தபடி பதில் சொன்னேன்.

”ஏற்கனவே சொன்னது போல எங்களுக்கு பயங்கள் கிடையாது. துப்பாக்கி ரவைகளுக்கும் எங்கள் உடலைத் தர தயாராக இருந்தோம்”

நளன் இறுக்கமாய் சொன்னான்

”சட்டப்படி நீங்கள் இருவரும் செய்தது குற்றம். கவனமாக இருங்கள்.”

நான் அதை பொருட்படுத்தவில்லை. பயங்களற்ற இருப்பு என்கிற சொல்லைக் கூட இவர்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். புன்னகைத்து வைத்தேன். 

அவனிடம் ஆரம்பத்தில் இருந்த இலகுத் தன்மை மெல்ல காணாமல் போயிருந்தது. அதை இன்னும் அதிகமாக்க விரும்பினேன்.தொடர்ந்து பேசினேன்.

”காதலின் உச்சத்திற்கான எங்கள் பயணம் சீராகவே இருந்தது. மூன்று வருடங்கள் இப்படியே போனது. ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் பேசுவோம். இதில் இரண்டு மணிநேரம் எங்காவது பொது இடத்தில் சந்தித்துப் பேசுவோம். நாங்கள் பேச அவ்வளவு இருந்தது. ஆனால் இரவு ஒரு போதும் எங்களுக்கானதில்லை. அவள் தன் கடமைகளுக்குள்ளும் நான் என் கடமைகளுக்குள்ளும் போக வேண்டியிருந்தது”

நளன் இடைமறித்து,

”ஏன்? திருமணம் செய்து கொண்டிருக்கலாமே? இப்போது விதிகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன. ஒரு முறை திருமணம் செய்து கொள்ளலாம். குழந்தைதான் பெற்றுக் கொள்ள முடியாது.”

நான் நளனை நிமிர்ந்து பார்த்து சொன்னேன்.

“எனக்கொரு மனைவியும் அவளுக்கொரு கணவனும் ஏற்கனவே இருக்கிறார்கள்”

நளன் சற்றுக் கோபமாய் சொன்னான்.

”நீங்கள் தவறான இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். இது மருத்துவமனை. காவல் நிலையமில்லை”

”பதற்றப்படாதீர்கள். நான் இன்னும் என் சிக்கலுக்கே வரவில்லை.”

நளன் மீண்டும் ஸோரோவை அழைத்து தண்ணீர் கொண்டு வரச் சொன்னான்.

இவன் மிகக் கட்டுப்பாடாக வளர்த்தெடுக்கப்பட்ட முதல் அரச தலைமுறைப் பையனாக இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

ஸோரோ தண்ணீரோடு வந்தது.

ஒரு புட்டித் தண்ணீரையும் குடித்து முடித்தவன் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு,

”சீக்கிரம் பிரச்சினைக்கு வாருங்கள்” என்றான்.

”சென்ற மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையை நினைவிருக்கிறதல்லவா. அன்று மாலைதான் அவளைக் கடைசியாகச் சந்தித்தது”

நளன் அவசரமாய் குறுக்கிட்டான்

“மழைப் பிரளயத்தில் சிக்கி விட்டார்களா?”

இல்லை என தலையசைத்து விட்டுத் தொடர்ந்தேன்.

“உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையும் ஐந்து செண்டி மீட்டர் மழை பொழியும். ஆனால் அன்றோ காலையில் ஆரம்பித்த மழை நிற்கவேயில்லை. அரசின் தகவல் தொடர்பு சாதனங்கள் அலறிக் கொண்டிருந்தன. நம் நாட்டு மக்கள் தொகையின் ஐம்பது சதவிகிதமான விஞ்ஞானிகள் அன்று மழையை நிறுத்த வானவியலின் எல்லா வித சாத்தியங்களையும் முயன்று கொண்டிருந்த மாலை நேரம், அவளிடமிருந்து அழைப்பு வந்தது. உடனே சந்திக்க வேண்டும் என்றாள். அப்போது மழையின் அளவு பதினைந்து செண்டிமீட்டர்களை கடந்திருந்தது. மகிழ்ச்சியாய் சரியென்றேன். ஒரு புது இடத்தின் வரைபடத்தை அனுப்பி ’இங்கு வந்துவிடு’ என்றாள்.  அந்த அடுக்கு மாடி குடியிருப்பு தன் கடைசி நாளில் இருந்தது. நாளையோடு அந்தக் கட்டிடம் கட்டப்பட்டு ஐந்து வருடங்கள் நிறைவடையும் நிலையில் அதை இடிப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அவள் அனுப்பிய வரைபடம் முதல் தளத்திலிருக்கும் வீட்டிற்கு அழைத்துச் சென்றது. கதவு திறந்தே இருந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. வெளியே மழை ஆக்ரோஷமாய் தொடர்ந்து கொண்டிருந்தது. நான் என் மழைக்கோட்டை கழற்றி வைத்து விட்டு உள்ளே நுழைந்தேன். பரந்த வரவேற்பறை. நாங்கள் வழக்கமாய் பயன்படுத்தும் வாசனை மெழுகு வர்த்தி சன்னமாய் எரிந்து கொண்டிருந்தது. அவள் அதன் அருகே நின்று கொண்டிருந்தாள். மஞ்சள் வெளிச்சத்தில் ஒளிர்ந்தபடி என்னைப் பார்த்து புன்னகைத்தாள். அருகில் சென்றுத் தழுவிக் கொண்டேன். முத்தங்களால் நிறைத்தேன். எரிந்து கொண்டிருந்து மெழுகுவர்த்தி எங்கள் உடலசைவால் உண்டான காற்றில் அணைந்தது. எப்போதும் போல் கலவினோம்” அரை மணி நேரம் கழித்து மீண்டவள். மெழுகு வர்த்தியை உயிர்ப்பித்தாள். என் முகத்தைக் கைகளில் ஏந்தி கண்களை ஆழமாய் பார்த்துச் சொன்னாள்.

’இன்றோடு நம் தொடர்பை முடித்துக் கொள்ளலாம். நாளையிலிருந்து நாமிருவரும் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள வேண்டாம்’ 

அவள் விளையாடுகிறாள் என நினைத்து 

’சரி அப்படியே பண்ணிடலாம்’ என்றபடியே அவளை இழுத்து முத்தமிட்டேன். வலுக்கட்டாயமாய் தன்னை விலக்கிக் கொண்டவள், 

‘நான் சொல்வது நிஜம். இன்றோடு எல்லாமும் முடிந்தது’ என்றாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவள் தொடர்ந்து பேசினாள்.

’இப்போதெல்லாம் உன் தொலைபேசி அழைப்புகளோ, பேச்சோ, உன் இருப்போ, முத்தங்களோ, கலவியோ எனக்கு ஆரம்பத்தில் தந்த உணர்வுகளை, படபடப்பை, எழுச்சியைத் தருவதில்லை. எல்லாமும் மிகச் சாதாரணமாக இருக்கிறது. என் எல்லா வியப்புகளும் பரவசங்களும் காணாமல் போய்விட்டன. நீயும் என் கணவனைப் போலாகிவிட்டாய். என் தினசரிகளில் நீயும் ஒருவனாய் கரைந்துபோய் விட்டாய். இதற்கு ஏன் இவ்வளவு மெனக்கெட வேண்டும் எனத் தோன்றுகிறது. போதும் இது. இத்தனை வருடங்களாய் திளைத்த காதல் உணர்வு என்னிடம் இப்போது சுத்தமாய் இல்லை. பிரிந்து விடலாம். நம் விடைபெறலும் இயல்பாய் நிகழட்டும்  என விரும்புகிறேன் அவ்வளவுதான்’

அவள் பேசுவதை நிறுத்தினாள். கண்கள் கலங்கி இருந்தன. வெளியே மழை சத்தம் இல்லை. எங்கும் மயான அமைதி.
என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எனக்குமே கூட ஆரம்பகாலத்தின் பரவசங்கள் இப்போது இல்லைதான். ஆனால் இதுதான் யதார்த்தம் எனத் தெரிந்திருந்தது. எனினும் அவளை சமாதானப்படுத்த முயன்று தோற்றேன். ஒரு வேளை அலுவலக அல்லது குடும்ப அழுத்தங்கள் காரணமாக இவள் இப்படிப் பேசலாம். ஓரிரு நாட்கள் தனிமையில் இருந்தால் சரியாகிவிடுவாள் என நினைத்து நானும் அதிகம் அவளை தொந்தரவு செய்யவில்லை. விடைபெற்று வீடு திரும்பினேன்.
அடுத்த நாள் அவளைத் தொடர்பு கொள்ளவில்லை. அதற்கு அடுத்த நாள் அவள் அலைபேசிக்கு அழைத்தேன். அணைத்து வைக்கப்பட்டிருந்தது. மின்னஞ்சல், சமூக வலைத் தளங்கள் என எல்லா வித தொடர்புகளையும் முடக்கி இருந்தாள். ஒரு விதமான பயமும் இறுக்கமும் மனதைக் கவ்வியது. பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது. அவள் பணிபுரியும் அலுவலகத்தின் பெயர் தெரியும் விலாசம் தேடிக் கண்டுபிடித்துச் சென்றேன். அவள் அங்கிருந்தும் விடைபெற்றிருந்தாள். அவள் நண்பர்களிடம் வீட்டு முகவரியை வாங்கிக் கொண்டு அங்கும் சென்றேன். வேறொரு நகரத்திற்குப் போய்விட்டதாகவும் அந்த விலாசம் எதுவும் தரவில்லையென்றும் சொன்னார்கள். அவ்வளவுதான். எனக்கு உலகமே சுழன்றது. இனி அவளைத் தேடுவதும் வீண். திரும்பி வந்தேன். வாழ்வு இயந்திரத்தைப் போலானது. வழமைகள் தவறாத தினசரிகளில் இருந்தேன் என்றாலும் என் நினைவு முழுக்க அவளாகவே இருந்தாள்.

எங்கள் முதல் சந்திப்பிலிருந்து கடைசிச் சந்திப்பு வரைக்குமான ஒவ்வொரு தருணமும் சதா நினைவிலாடியபடியே இருந்தது. எதிலேயும் ஒன்றமுடியவில்லை. எவ்வளவு நடித்தும் இதை என் மனைவி கண்டுபிடித்து விட்டாள். வேறுவழியில்லாமல் எல்லாவற்றையும் அவளிடம் சொன்னேன். அவளால் நான் சொன்னதை நம்பமுடியவில்லை.

’இப்படியெல்லாம் நடக்க சாத்தியமா? அதெப்படி ஏற்கனவே ஒரு பந்தத்தில் இருக்கும் ஆணும் பெண்ணும் இப்படி பழக முடியும். இது தண்டனைக்குறிய குற்றமல்லவா?’ 

என்றெல்லாம் மாய்ந்து போனாள்.

நான் பேசிப்பேசி அவளைக் கரைத்தேன். உடல் ரீதியாக எதுவும் நடக்கவில்லை எனப் பொய் சொன்னேன். சில நாட்கள் கழித்து அவள் சமாதானம் ஆனாள்”

பேச்சை நிறுத்திவிட்டு தண்ணீர் குடித்தேன்.
நளன் பெருமூச்சு விட்டான்.

”தப்பித்தீர்கள். உங்கள் காதலி செய்ததுதான் சரி. இல்லையென்றால் உங்கள் இருவருக்குமே இது பெரிய சிக்கலாய் போய் முடிந்திருக்கும்”

நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

”சரி நான் என்ன செய்ய வேண்டும்?”

”சொல்கிறேன். என் மனைவி, எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தால் சரியாகிவிடுவேன் என நம்புகிறாள். இப்போது அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தால் இரண்டு வருடம் காத்திருக்க வைத்து அனுமதிக்கிறார்களாம்”

நளனும் ஆமோதிப்பாய் தலையசைத்தான்

“ஆனால் விண்ணப்பத்தோடு அங்கு நடக்கும் உடல் பரிசோதனையிலேயும் தேற வேண்டும். கணவன் மற்றும் மனைவியின் மூன்று வருட நினைவுகளை சேகரித்து ஒவ்வொன்றாய் ஆராய்கிறார்கள். அதில் அவர்கள் எதிர்பார்க்கும் தகுதியுடைய நினைவுகள் இருந்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும்.”

நளன், “ ஆம்” என்றான்.

என்னுடைய நினைவில் என்ன இருக்கும் என்பதைத்தான் இவ்வளவு நேரம் சொன்னேன்

நளன் எழுந்து நடந்தான்.

”புரிகிறது. உங்கள் மெமரியில் படிந்திருக்கும் இந்தப் பெண் தொடர்பான சம்பவங்களை அழிக்க வேண்டும் அதானே?”

ஆம் என தலையசைத்தேன்.

”அரை மணி நேர வேலைதான். ஆனால் இதில் சட்ட சிக்கல்கள் உள்ளன. முதலில் உங்களின் கேஸ் ஹிஸ்டரியை எழுதி அரசாங்கத்திடம் அனுமதி வாங்கவேண்டும். திருமண பந்தத்திற்கு வெளியிலான உறவு என்பது தண்டனைக்குறிய குற்றம் என்பதால் அது கடினம். அதை விட சிக்கல் உங்களின் தமிழ்நாட்டுப் பயணங்கள். அரசாங்கம் இதை அறிந்தால் உங்கள் இருவருக்குமே மரண தண்டனை நிச்சயம்”

நான் அயர்ந்தேன். இது நடக்காது என உணர்ந்தேன். இருந்தாலும் கேட்போமே எனக் கேட்டேன்.

“இதற்கு வேறு தீர்வே இல்லையா?”

நளன் மெளனமாக இருந்தான்.

நான் மேலும் அழுத்திக் கேட்டேன்.

“ப்ளீஸ் எந்தக் குற்றமும் செய்யாத என் மனைவிக்காக நீங்கள் உதவித்தான் ஆக வேண்டும்”

நளன் தன் விரலை உயர்த்தினான். கணினித் தொடுதிரை ஒன்று அவன் முன்னால் வந்தது.

“என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் இயலுமா எனப் பார்க்கலாம்” என்றான்

தயாரானேன்.

”உங்கள் காதலியின் பெயர் என்ன?”

”மிளா”

”என்ன?”

”மிளா”

”உண்மைப் பெயரா?”

”ஆம் இதுதான் அவள் பெயர். மிளா ஒரு வகையான காட்டு மானின் பெயர்”

”சரி அவரின் அலைபேசி எண், மின்னஞ்சல்?”

சொன்னேன்.

நளன் அரசுத் தகவல் வங்கியில் அவள் விவரங்களைத் தேடினான். அவள் தற்சமயம் வேறொரு நகரத்திற்கு குடிபெயர்ந்திருப்பது தெரிய வந்தது. ஆழமாய் யோசித்தான். பின்பு என்னுடைய தகவல்களை வாங்கி அதையும் தகவல் வங்கியில் அலசினான். சரியாக வரிகளை கட்டும் எந்தவித குற்றப் பின்னணியுமில்லாத பிரஜை நான் என்பதை அறிந்து கொண்டான்.

”சரி செய்துவிடலாம். ஆனால் அதற்கு கொஞ்சம் செலவாகும்”

”மருத்துவக் காப்பீடு இருக்கிறது”

”பணம் மருத்துவமனைக்கல்ல எனக்கு” எனச் சிரித்தான்.

”லஞ்சமா? இது குற்றம்”

நளன் தாழ்வாய் என்னைப் பார்த்தபடி

“நீங்கள் செய்தது மட்டும் என்ன புரட்சியா?”

என்னால் பேசமுடியவில்லை.

“எவ்வளவு? எனக் கேட்டேன்.

“அரை மில்லியன்”.

எழுந்து கொண்டேன். எனக்கிது வேண்டாம். வருகிறேன். எனச் சொல்லியபடியே திரும்பினேன்.

நில்லுங்கள் என்ற நளன் இதைப் பாருங்கள் என அவன் ஆட்காட்டி விரலை நீட்டினான். உரையாடல் ஆரம்பத்தில் என் கழுத்தில் வைத்த சின்னக் குமிழ் அவன் விரல் நுனியில் இருந்தது.

”உங்கள் ஒட்டு மொத்த நினைவும் இதில் பதிவாகி இருக்கிறது. சாம்பிள் பார்க்கிறீர்களா?”

நளன் அந்தக் குமிழை கணினித் தொடுதிரையில் பொருத்தினான்.

மிளா அந்தத் திரையில் தோன்றினாள். நளன் காற்றில் விரலை நகர்த்தினான். நான் மிளாவை அணைத்துக் கொண்டிருந்த காட்சி திரையில் நகர்ந்தது. நளன் மீண்டும் விரலை நகர்த்தினான். என் மனைவி உள்ளாடைகளோடு திரையில் தோன்றினாள்.
நிறுத்து எனக் கத்தினேன். நளன் ஒரு சின்னச் சிரிப்போடு திரையை அணைத்தான்.

”உங்கள் மனைவி மற்றும் காதலி இருவருமே மிக அழகாக இருக்கிறார்கள்” என்றான்

அவன் மீது பாய்ந்தேன்.

நாசூக்காய் விலகிக் கொண்டவன், தொடர்ந்தான்,

”வன்முறை எனக்குப் பிடிக்காது. உங்கள் உயிருக்கு அரை மில்லியன் விலை மிகக் குறைவு. மேலும் உங்களின் சம்பளம், கடன் இதையெல்லாம் கருத்தில் கொண்டே இந்தக் குறைவான தொகையைக் கேட்டேன். நாளை வங்கி நபரை அனுப்புகிறேன். அவர் உங்கள் சம்பள விவரங்களை வாங்கிக் கொண்டு கடன் தருவார். நாளை மறுநாள் பணம் என் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதும் இங்கு வாருங்கள், அரை மணிநேரம்தான். மிளா தொடர்பான எல்லா நினைவுகளையும் அழித்து விடுகிறேன். மேலும் சில நல்ல பொறுப்பான தகப்பனுக்கான நினைவுகளையும் உங்கள் மூளையில் பதிகிறேன். நிச்சயம் குழந்தைக்கான அனுமதி கிடைக்கும்”

நளன் நிறுத்தாமல் பேசினான். அவனுக்கு இது போன்ற அனுபவங்கள் ஏற்கனவே இருந்திருக்கும் போல. அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

”என்னவோ உங்களை எனக்குப் பிடித்துவிட்டது ஆகவே கேஸ் ஹிஸ்டரிய மாற்றி எழுதுகிறேன். வேலை தொடர்பான அதிக அக்கறையால் உருவான அழுத்தங்களை நினைவிலிருந்து நீக்கும் சிகிச்சை என்று எழுதி அரசாங்கத்திற்கு அனுப்பி விடுகிறேன். மருத்துவ காப்பீடும் கிடைக்கும். உங்கள் அலுவலகத்திலேயும் பதவி உயர்வு கிடைக்கலாம். ஆல் த பெஸ்ட்” என முடித்தான்.

நான் சிக்க வைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தேன். எதுவும் பேசாமல் கதவிற்காய் நடந்தேன். அவனை அடிக்கத்தான் முடியவில்லை ஆத்திரம் தீர வசையலாம். ஆனால் வார்த்தைகளே வரவில்லை. ஆனாலும் இப்படி எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் போய்விட முடியாது. அவனிற்காய் திரும்பி வெறுப்பாய் சொன்னேன்.

“நீ உன் அம்மாவிற்கு கூட ஒரு நல்ல விலை வைத்து விற்றுவிடுவாய்”

நளன் இன்னும் சத்தமாய் சிரித்தான்.

”எனக்கு அம்மா கிடையாது. டிஎன்ஏ க்ளோனிங்”

ஆத்திரத்தில் மூச்சிறைத்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து சிரிப்பதை நிறுத்திய நளன் இறுக்கமாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான்.

“என்ன செய்வது நண்பா, ஒரு மில்லியன் டாலர் கொடுத்தால் என்னால் மூன்று நாட்கள் இந்த நரகத்தை விட்டு வெளியே போய் வர முடியும். இதை விட்டுத் தற்காலிகமாக வெளியேற எல்லாமும் செய்யலாம்தானே, கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் எந்தக் கண்காணிப்புகளுமில்லாத முழு மூன்று நாட்கள். சுதந்திரம். இந்தச் சொல்தான் எத்தனை இனிக்கிறது. சுதந்திரம்… ம்ம் ”

பரவசத்தில் நளன் கண்களை மூடிக் கொண்டான்.

எனக்கு மீண்டும் மிளாவும் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் நினைவிலாடின. தலையை உலுக்கிக் கொண்டு மறுவார்த்தைப் பேசாது வெளியேறினேன்.

ஸோரா நாயர் மேற்சட்டை இல்லாமல் தேநீர் குவளையோடு அஜிதனின் அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தது.





Thursday, April 11, 2019

தில்லி க்ரைம்- இந்திய மகள்களின் துயரம்




நெட்ஃபிலிக்ஸின் சமீபத்திய வரவான Delhi Crime குறுந்தொடரைப் பார்த்து முடித்தேன். ஒரே நாளில் பார்த்துவிட முடிந்தது. அதைத் தொடரின் வெற்றியாகத்தான் கருதவேண்டும். இந்தியாவையே உலுக்கிய நிர்பயா வழக்கின் பின்னணியை அலசும் தொடர். பின்னணி என்பதை விட காவலர்கள் மற்றும் சட்டத்தின் பணி என்னவாக இருந்தது என்பதைப் பேசுகிறது. மிகச் சுருக்கமாக சொல்லவேண்டுமெனில் போலிஸ், குற்றவாளிகளைப் பிடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளை கொஞ்சம் உணர்வுப்பூர்வமாகவும் சாகச மனப்பாங்கோடும் கதைகளாகப் பார்க்க முடிகிறது. 

நிறைய போதாமைகள் உள்ளன என்றாலும் மிக இறுக்கமான திரைக்கதையும் அபாரமான நடிகர்களும் மிகப்பெரிய பலம். குறிப்பாக டிசிபி வர்த்திகா சதுர்வேதி யாக நடித்திருக்கும் Shefali Shah வின் உணர்வுப்பூர்வமான பங்களிப்பு தொடரின் தரத்தை உயர்த்துகிறது. எப்படி Sacred Games தொடரில் சாயிஃப் அலி கான் மின்னினாரோ அதற்கு இணையாக இவரது நடிப்பைப் பேசலாம். ஒரு சாயலில் நம் ஶ்ரீவித்யாவைப் போல இருக்கிறார். அதே அளவில் பெரிய, கருணை மிகுந்த கண்கள் இவருக்கும் இருக்கிறது. இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே எனத் தேடியதில் காந்தி மை ஃபாதர் படத்தில் கஸ்தூரிபா காந்தியாக நடித்தவர் இவர்தான் என்பது தெரியவந்தது.

போலிஸ்காரர்களின் அர்ப்பணிப்பு மட்டுமே பிரதானமாகப் பேசப்படுவதால் இந்தத் தொடர் ஒற்றைப் பார்வையாகச் சுருங்கி விடுகிறது. இந்தியா முழுக்க கிளர்ந்தெழுந்த மக்களின் எழுச்சியும், போராட்டங்களும் சரியாகக் காட்சிப்படுத்தப்படவில்லை. நிர்பயா வழக்கின்போது இருந்த மக்களின் மன உணர்வையாவது குறைந்த பட்சம் கொஞ்சம் நெருங்கிப் பார்த்திருக்கலாம்.

தொடரின் ஆரம்ப பயங்கரத்தை மட்டும் முதல் நாள் பார்த்துவிட்டு இனிமேல் இதைத் தொடர்ந்து பார்க்கவேண்டுமா அல்லது இயலுமா என்கிற கேள்விகள் எழுந்தன. இப்போது இருக்கும் மனநிலையில் நெஞ்சை உலுக்கும் தினசரி செய்திகளைக் கூட நான் வாசிப்பதில்லை. நம் நாளிதழ்கள் முழுக்க புனைவெழுத்தாளர்கள் நிரம்பி வழிவதால் அவர்கள் எழுதும் வன்புணர்வுக் கதைகள் நிஜ வன்புணர்வு நிகழ்வுகளை விட மோசமாக இருக்கின்றன. மேலும் ஒரு பூதத்தைப் போல பெருத்து நிற்கும் நியூஸ் மீடியாக்களுக்கு தீனி போட குற்றங்களின் போதாமையும் உள்ளதால் இவர்கள் இட்டுக் கட்டும் கதைகளில் அருவெருப்பு நிறைந்து வழிகிறது. 

இருப்பினும் ஏதோ ஒரு மன தைரியத்தில் நேற்று காலையில் பார்க்க ஆரம்பித்து இரவு முடித்தேன். வயதின் காரணமாக நிர்பயா வழக்கில்  தப்பித்த  குற்றவாளி யைக் குறித்து வெகு நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். தன் அடையாளங்களை மறைத்துக் கொண்டு அவன் எங்கோ, ஏதோ ஒரு வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தாலும்  தினசரி அவனால் நிம்மதியாக உறங்கி விட முடியுமா என்ன?.

தொடரில் இந்த இளம் குற்றவாளி அகப்படும்போது அவன் வயது கேட்கப்படுகிறது. அவனால் அதற்கு சரியான பதிலைத் தர முடியவில்லை. பதினேழு அல்லது பதினெட்டு இருக்கலாம் என்கிறான். பதினெட்டுதான் என உடனிருக்கும் ஒரு ஆண் போலிஸ் சொல்லி கைது செய்ய முனைய, ஒரு பெண் சப் இன்ஸ்பெக்டர் ''இல்லைப் பதினாறுதான் இருக்கும் முகத்தைப் பார்த்தால் தெரியவில்லையா' என வலுக்கட்டாயமாக அவனை இளங் குற்றவாளிப் பிரிவில் கைது செய்கிறார். நிஜத்தில் என்ன நடந்தது எனத் தேடிப் பார்க்க வேண்டும். மேலும் இந்த வழக்கின் பின்னாலிருந்த அதிகாரிகள், அவர்களது செயல்பாடுகள் குறித்தும் தேடி வாசிக்க வேண்டும் என்கிற உந்துதலை இந்தத் தொடர் ஏற்படுத்தி இருக்கிறது. காட்சிப்படுத்தப் பட்டவைகளில் எத்தனை சதவிகிதம் புனைவு என்பது தெரியவில்லை. ஒருவேளை நிகழ்வுகளை அப்படியே வைத்துக் கொண்டு கதாபாத்திரங்களை மட்டும் புனைந்திருக்கலாம் என்பது என் யூகம்.

என் நண்பன் ஒருவன் கேரளத்தையே உலுக்கிய சூரியநெல்லி விவகாரத்தைக் களமாகக் கொண்டு ஆங்கிலத்தில் ஒரு நாவலை எழுதியிருக்கிறான். அவன் அந்த நாவலை எழுதும்போது  தினசரி என்னோடு உரையாடுவான். அவன் தொடர்ந்து எழுத சில திரைப்படங்களையும் படைப்புகளையும் பரிந்துரை செய்தேன். நூலாக்கம் முடிந்து அடுத்த வாரம் புத்தகம் கைக்கு கிடைக்கும். சொல்ல வந்தது சூரியநெல்லி வழக்கின் பயங்கரம் குறித்துத்தான். ஒரு பதினாறு வயதுப் பெண்ணை நாற்பதிற்கும் மேற்பட்டோர் சீரழித்த பயங்கரம்தான் இந்த சூரியநெல்லி விவகாரம். ஒரு முக்கியமான அரசியல்வாதியும் இந்த விவகாரத்தில் அடிபட்டதால் வழக்கு திசைதிருப்பப்பட்டதா அல்லது உண்மையில் நடந்தது என்ன என்கிற தெளிவு நீதிமன்றத்திற்கு கிடைக்கவே இல்லை. தல்வார் பயங்கரம் எப்படி இன்றும் சந்தேகத்தைக் கிளப்புகிறதோ அப்படியே சூரிய நெல்லி விவகாரமும் ஏராளமான சந்தேகங்களைக் கொண்டிருக்கிறது. 

நிர்பயா வழக்கும் இப்படி சந்தேகங்களால் மூடப்படாமல் போவதற்கு இரண்டு காரணங்கள்தாம் பிரதானம். ஒன்று இவ்வழக்கின் குற்றவாளிகள் அனைவரும் விளிம்பு நிலை மனிதர்கள். இரண்டு நிர்பயா வை இந்தியா தன் மகளாகப் பார்த்தது.

வன்புணர்விற்கும் சீரழிவிற்கும் நசிவிற்கும் உள்ளாகும் அனைத்துப் பெண்களும் இந்தியாவின் மகள்தாம் என்கிற பார்வை அரசாங்கத்திற்கு எப்போது வருகிறதோ அப்போதுதான் பெண்கள் மீது நிகழும் வன்முறைகள் குறையும்.



Tuesday, March 5, 2019

கும்ப்ளாங்கி நைட்ஸ்- நட்சத்திர மினுக்கம்



ஷீலா நான்கு கிடாக்களுடன் வசிக்க நேரிடும் வீட்டை விட்டுப் போய்விடுவதாக சொல்லும் காட்சி இது. 

தன் காதலனுடன் ஓடி வந்தபோது அழிந்து மண்ணாகப் போய்விடுவாய் என்கிற அம்மாவின் சாபத்தையும் ஏற்றுக் கொண்டிருப்பதால், தான் எங்கு சென்றாலும் அந்த இடம் விளங்காமல் போய்விடும். எனவே இங்கிருந்து போய்விடுவதாய் சொல்கிறார். வாயில் கதவில்லாத அந்த வீட்டின் முன்திட்டில் அமர்ந்திருக்கும் பாபி, பின்னால் நின்று இதைச் சொன்ன ஷீலாவின் பக்கமாய் திரும்பிச் சொல்வான்.  அப்படியானால் நீங்கள் சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கிறீர்கள். இனி அழிந்து மண்ணாகப் போக இந்த வீட்டில் ஒன்றுமில்லை.

தியேட்டரில் சிரிப்பு அள்ளுகிறது. 

அவ்வளவு பெரிய துக்கத்தை, இழப்பை, வெறுமையை இந்தக் கதாபாத்திரங்கள் இப்படித்தான் கேலியாகக் கடந்து போகிறார்கள்.

'கும்ப்ளாங்கி நைட்ஸ்' திரைப்படம் கேரளத்தின் நிலத்திலிருந்து ஆழமாய் வேர்கொண்டு மலர்ந்திருக்கிறது.  இதை வேறெந்த மொழிக்கும் சூழலுக்கும் கொண்டு போக முடியாது. திருட்டுப் பயம் தேவைப்படாத அசலான திரைப்படம். 

சமகாலக் கவிதை, சமகால எழுத்து,மற்றும் சமகாலத் திரைப்படம் என சிலவற்றை என்னால் அடையாளம் காட்ட முடியும். சிக்கல் என்னவென்றால் தமிழிலக்கியச் சூழலில் இதுகாரும் தரப்பட்ட 'லிஸ்ட்' கள் தந்த அவநம்பிக்கை இதைச் செய்ய தடையாக இருக்கிறது. மேலும் இதுதான் சமகாலக் கவிதை, எழுத்து என எழுதிவிட்டு அதற்குப் பிறகு ஏற்படும் கலகத்தை எதிர்கொள்ளவும் நான் தயாரில்லை. ஆனால் திரைப்படங்களை அடையாளம் காட்ட முடியும்.

ராஜீவ் ரவி, ஷ்யாம் புஷ்கரன், ஷெளபின், பகத் ஃபாசில், ஆஷிக் அபு, சனல் குமார், திலீஷ் போத்தன்  போன்ற மலையாள முகங்கள்தாம் சமகால திரைப்படத்தின் முகவரிகள். தமிழில் இப்படிச் சொல்ல சில ஆட்கள் இருக்கிறார்கள்தாம். எழுத நினைக்கும்போதே அவர்கள் அடுத்த படத்தில் தங்களின் இன்னொரு முகத்தைக் காட்டி நம்மை விரட்டிவிடுகிறார்கள். 

கும்ப்ளாங்கி நைட்ஸ் ன் முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரைக்குமாய் நம் முகத்தில் அப்படி ஒரு புன்னகை வந்து அமர்ந்து கொள்கிறது. இடைவேளைக்கு முன்பு ஒரு பதற்றம். இறுதிக்கு முன்பு இன்னொன்று. அதுவும் பெரும் புன்னகையாக முடிகிறது. காரணம் பகத் ஃபாசில் என்றொரு முழுமையான நடிகன்.

சஜி யாக வாழ்ந்திருக்கும் ஷெளபின்  மனதை அள்ளுகிறார். கேரளத்தின் இந்த வருட சிறந்த நடிகர் விருதிற்கும் தகுதியானவர். மேல் சட்டை இல்லாமல் சாரத்தை இழுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு அவர் வரும் காட்சிகள் எல்லாமும் அவ்வளவு புதிதாய் இருக்கிறது.  தேங்காயைய் பற்களால் சுரண்டி தின்றபடி அதனுடன் வெல்லத்தையும் ஒரு கடி கடித்துக் கொண்டு படுத்திருக்கும் காட்சிக்கு தியேட்டரில் பலத்த சிரிப்பலை எழுகிறது. போனியிடம் அடி வாங்கிய இரவில் ரமேஷூடன் குடிக்கும் காட்சியும், ரமேஷும் சஜியை ஓசி தான் என்க, ஓடிப்போய் தன்னை மாய்த்துக் கொள்ள முனையும் காட்சியும் இன்னும் மனதிலேயே நிற்கிறது.

படத்தின் கவித்துவ தருணங்களை மெருகூட்டுவது பேபி மோல் ஆக நடித்திருக்கும் அன்னா பென். குட்டையான சுருண்ட முடி கொண்ட இந்தப் பெண் அவ்வளவு அழகு. காயல் பின்னணியில் வெயிலும், இளமை மின்னும் பாபியும் பேபியும் படத்தின் கனவுத் தன்மைக்குப் பாலமாக இருக்கிறார்கள்.

மகேஷிண்ட ப்ரதிகாரம், தொண்டிமுதலும் திருக்சாக்‌ஷியும் படங்களை கும்ப்ளாங்கி நைட்ஸ் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. இனி இந்தக் குழாம் எடுக்கப் போகும் படங்கள் கும்ப்ளாங்கியை பின்னுக்குத் தள்ள வாழ்த்துகள்.




Monday, March 4, 2019

ஹாருகி முரகாமித்தனம் - Burning 2019


கொரியப் படங்களைப் பார்ப்பதை நிறுத்தியிருந்தேன். அலுப்பூட்டும் அளவிற்கு வரிசையாய் கொரியப் படங்களைப் பார்த்துத் தள்ளியதன் பலனாக இருக்கும். தொடர்களையும் விட்டு வைக்காததால் கொரியா என்கிற பெயரைப் பார்த்தாலே தெறித்துவிடும் மனநிலையில்தான் சில வருடங்களாக இருந்து கொண்டிருந்தேன். இவ்வருட ஆஸ்கரில் Burning படம் தென்பட்டதும் தேடிப் பார்த்தேன். இயக்குனர் Chang-dong Lee யின் இதற்கு முன்பு வெளிவந்த 'பொயட்ரி' திரைப்படம் பார்த்திருக்கிறேன். வழக்கமான கொரியத் தனங்கள் இல்லாத படம். எனக்குப் பிடித்திருந்தது. மேலும் கதை முரகாமி என்பதால் இயல்பாகவே படம் பார்க்கும் ஆர்வம் இருந்தது. 

இரண்டு அமர்வில் Burning படத்தைப் பார்த்து முடித்தேன். படம் நிச்சயமாய் ஏமாற்றவில்லை. சொல்லப் போனால் முரகாமியின் கதைக்கு நியாயம் செய்திருக்கிறது. முரகாமியின் கதைகளை வாசிக்கும்போது உருவாகும் மனநிலை படம் பார்க்கும்போதும் இருந்தது. ஜப்பானிற்கும் கொரியாவிற்கும் பின்புலக் காட்சி அளவில், முகங்கள் அளவில் பெரிய வித்தியாசங்களில்லை என்பதால் படத்தோடு ஒன்றிவிட முடிந்தது.

முரகாமியின் புகழ்பெற்ற நாவலான 'நார்வேஜியன் வுட்' திரைப்படமாக வெளிவந்தது. நாவலைத் திகட்டத் திகட்ட வாசித்திருந்த எனக்கு படம் சுத்தமாய் பிடிக்கவில்லை. இறுதிகட்ட ஒளிப்பதிவு மட்டும் முரகாமியின் கதைக்கு நியாயம் செய்திருப்பதாய் தோன்றியது. ஆனால் 'பர்னிங்' திரைப்படமோ நார்வேஜியின் வுட்டிற்கு தலைகீழ். 'பர்னிங்' கில் இறுதிக் காட்சிதான் சினிமாத்தனமாக இருந்தது. முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரைக்குமாய் அசலான ஹாருகி முரகாமித் தனம் இருந்தது. 

முரகாமியின் கதைகள்  வழக்கமான முடிவுகளைக் கொண்டிருப்பதில்லை. அவர் தன் கதை முடிச்சுகளை ஒரு போதும் அவிழ்ப்பதில்லை. எப்படி இந்தக் கதை வழக்கமான முடிவிற்கு வந்தது என்கிற சந்தேகம் எழவே இத்திரைப்படத்தின் மூலக் கதையான "Barn Burning" ஐத் தேடி வாசித்தேன். "Barn Burning" இடம்பெற்றிருக்கும் The Elephant Vanishes அபாரமான தொகுப்பு. On Seeing the 100% Perfect Girl One Beautiful April Morning, Sleep போன்ற நல்ல கதைகள் இடம் பெற்றிருக்கும். ஸ்லீப் கதையை குறித்து முன்பு எழுதியிருக்கிறேன். 

எதிர்பார்த்தது போலவே Barn Burning கதையின் முடிவும் திரைப்படத்தின் முடிவும் வேறு. கதை சொல்லியின் பின்புலம், வயது, நாயகிக்கும் அவனுக்குமான உறவு, நாயகியின் அறை, அவள் வளர்க்கும் பூனை என எல்லாமும் இயக்குனரின் கற்பனையில் மெருகூட்டப்பட்டவை. அசல் முரகாமிக் கதையில் கதை சொல்லியின் வீட்டிற்கு வரும் நாயகியும் அவள் காதலனும் கஞ்சா புகைப்பார்கள். நாயகி தூங்கி விடுவாள். அவளின் காதலன் இவரிடம் தனக்கு கொட்டகைகளை  எரிக்கும் பழக்கம் இருப்பதை சொல்வான் -  Green house burning. பிறகு நாயகி இவர்கள் இருவரின் தொடர்பிலும் இல்லாமல் போய்விடுவாள்.

இதையே சற்று மாற்றி புதிரும் புனைவுத் தன்மை கொண்டதுமான திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.  நாயகியின் அறை, கலவி மற்றும் சுய இன்பக் காட்சிகள் 'Kafka on the Shore' நாவலையும். பணக்கார நண்பன், அவன் வைத்திருக்கும் 'போர்ஷ்' கார். உணவருந்தும் கடைகள். தொடர்ந்து குடிப்பது. கஞ்சாப் புகை இதெல்லாம் 'Dance, Dance, Dance' நாவலையும் நினைவூட்டின.  ஆட்டிசப் பூனை, அதற்கு உணவு வைப்பது என்பவையெல்லாம் பெரும்பாலான முரகாமியின் கதைகளில் தென்படுபவை.

இயக்குனர், முரகாமியின் சிறந்த வாசகராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.




Featured Post

test

 test