Thursday, October 5, 2017

அகி கரிஸ்மாகி - புகைக்கலைஞனின் நிரம்பி வழியும் கோப்பை





கடந்த ஒரு மாதமாக பின்லாந்த்தைச் சேர்ந்த இயக்குனரான அகி கரிஸ்மாகி யின் படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை பதினைந்து படங்களைப் பார்த்திருக்கிறேன். இந்த வருடம் வெளிவந்த The Other Side of Hope மட்டும் கிடைக்கவில்லை. அகியின் மொத்த படங்களுமே மிக நேரடியான படங்கள். பின்லாந்தின் சூழலை வாழ்வியலை  மக்களைப் பற்றி மிகக் குறைவான காட்சி மொழியின் வழியாய் ஆழமான சலனங்களை உருவாக்குகின்றன. தனிப்பட்ட வகையில் என்னைப் புரட்டிப் போட்ட இயக்குனர்களான  டோனி காட்லிஃப், ஹோ வரிசையில் அகியும் இடம்பெறுகிறார். இவரது திரைப்படங்களின் முகத்திலறையும் நேரடித் தன்மை அசாத்தியமான திறப்பை அளிக்கிறது.

திரைப்படங்களைத் தவிர்த்த இவரது தனிப்பட்ட வாழ்க்கையும் குணாதிசயமும் குறைந்த பட்ச சுரணையோடு வாழ விரும்பும் அனைவரையும் ஈர்த்துவிடும் ஒன்று. இவரது நேர்காணல்களைத் தேடிப் பார்த்தேன். அவ்வளவு உயிர்ப்பும் தனித்தன்மையும் கொண்ட அசல் மனிதன். ஒரு போதும் அதிகாரத்திற்கோ வெளிப்பூச்சுகளுக்கோ மசியாத கலைஞன்.

நேற்று இரவு 1996 இல் வெளிவந்த Drifting Clouds படத்தைப் பார்த்து முடித்தேன். இத் திரைப்படத்தில் துக்கமும் ஏமாற்றமும் இழப்பும் இசையாக மட்டும் வெளிப்படும். இவரது திரைப்படங்களில் ஒரே ஒரு வார்த்தை கூட மிகையாய் இருக்காது.  இவ்வளவு மினிமலாகவும் ஒரு கதையை சொல்ல முடியும் என்பதுதான் அகியின் தனித் தன்மை. திரைப்படங்களில் நான் விழுந்து விழுந்து தேடிக் கொண்டிருக்கும் பிராந்திய அசல் தன்மை இவரது எல்லாத் திரைப்படங்களிலும் நிரம்பி வழிகிறது.

அகி ஆஸ்கர் விருதுகளை நிராகரித்தார். உலக நாடுகளின் அமைதிக்கு அச்சுறுத்துலாக இருக்கும் அமெரிக்க பெரியண்ணனின் நடவடிக்கைகளை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். மேலும் தன்னை முன் நிறுத்திக் கொள்ளாத கலைஞன் என்பதால் வெகுசனப் பரப்பில் அதிகம் அறியப்படவில்லை. அதைக் குறித்து அகிக்கோ அல்லது அவரது ரசிகர்களுக்கோ ஒரு பிராதும் கிடையாது. அவரது பியர் கோப்பை இன்னும் இன்னும் நிரம்பி வழிகிறது. லீ ஹார்வி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாக சொல்லியிருக்கிறார்.

அகி கரிஸ்மாகியின் பதினேழு படங்களில் Ariel 1988 மற்றும் The Man Without a Past 2002 இவை இரண்டும் அதிகமான விமர்சகர்களின் பாரட்டைப் பெற்றிருக்கிறது. அகிக்குமே ஏரியல் மிகப் பிடித்தப் படம். எனக்கோ இதுவரை பார்த்த பதினைந்துமே பிடித்திருக்கிறது. Crime and Punishment, 1983 படம் துவங்கி 2011 இல் வெளிவந்த லீ ஹார்வி வரை அத்தனையுமே பிரமாதமான மிக முக்கியமான படங்கள்.  முடிந்த வரையில் ஒவ்வொரு படத்தையும் தனித்தனியாக எழுதப் பார்க்கிறேன்.






No comments:

Featured Post

test

 test