Thursday, August 10, 2017

உதிரி

இந்த விடுமுறை வழக்கத்திற்கு மாறாகத்தான் இருந்தது. சொல்லி வைத்தார்ப்போல ஒரே மாதிரியான நட்பு சந்திப்புகள், தொலைபேசி அழைப்புகள் என எதுவும் இல்லை. எப்படித் தோன்றியதோ அப்படி இருந்தேன். மரியாதை நிமித்தம், வழமை நிமித்தம் போன்ற எந்த நிமித்தங்களாலும் என் இயல்பை மாற்றிக் கொள்ளாமல் இருந்தது எனக்கே ஆச்சர்யமாகக் கூட இருந்தது. திடீர் பயணங்கள் எதிர்பாராத சந்திப்புகள் நிகழவும் வாய்ப்பாக இருந்தது. நன்றாக ஊர் சுற்றியது இன்னும் விசேஷம்.

இரமணாசிரமப் பகுதிகளில் உலவிக் கொண்டிருந்தபோது ஓரிதழ்ப்பூவின் காட்சிகள் வந்து வந்து விழுந்து கொண்டிருந்தன. ஒரு விதப் பரவச உணர்வில் திளைத்திருந்தேன். இதுதான் அந்த விபத்து நிகழும் இடம். இதுதான் துர்க்காவின் பூக்கடை . புனைவில் வந்த ஏற்கனவே இருக்கும் அந்த டீக் கடையில் ஏலக்காய் மணக்க டீக் குடித்தேன். செங்கம் சாலையில் நடந்து, வலது புறச் சந்தில் திரும்பினால் கொஞ்சம் தூர்ந்து அடையாளம் மாறிப் போயிருந்த பலாக்குளம். என் பதின்மத்தில் அக்குளம் மினுமினுக்கும். பெருமூச்சோடு கருமாரியம்மன் கோவிலுக்கு வந்தேன். புற்று மாரியம்மன் என அதன் பெயர் மாறியிருந்தது. புற்றுகள் சீரமைக்கப்பட்டு செயற்கையாக இருந்தது. அது ஒரு ஆடி வெள்ளிக்கிழமையின் காலை. தெய்வீக மணம் கமழ நடுத்தர வயதுப் பெண்கள் கோவிலில் நிரம்பியிருந்தனர். ஒரு பெண் கூழ் கொடுத்தார். இன்னொருவர் பொங்கல் உருண்டையைக் கையில் திணித்தார். அங்கையின் துர்க்காவின் மலர்ச்செல்வியின் சாயல்களில் யாருமில்லை. இரமணாசிரமத்தில் நாகலிங்கப் பூ மரங்களை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தேன். வாசம் இருந்தது. மரங்களில் ஓரிரு பூக்களிருந்தன. முன்பு அப்பூவின் மயக்கும் வாசம் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும். இப்போதில்லை. கருத்த இரமணர் சிலையைப் பார்த்துப் புன்னகைத்தேன். என் கதையில் அவர் வருவதை விரும்பியிருப்பாரா எனத் தெரியவில்லை. தியான அறையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். பின்பு ஆசிரமக் குடியிருப்புப் பகுதிகளில் வேர்களின் பிடிப்பில் நின்றிருக்கும் ஆலமரங்களைப் பார்த்து வந்தேன்.  இந்தப் பயணம் முழுமையடைய இந்தக் காலை ஒன்று மட்டுமே போதும் என இருந்தது.

அவ்வளவுதான் அலைந்து திரிந்து இன்னும் கருத்து ஊர் திரும்பியாயிற்று. இந்தப் பாதுகாப்பான பொந்தில் வந்து ஆசுவாசத்தோடு அடைந்து கொண்டேன். நேற்று இங்கிருக்கும் வானொலியில் ஆவணப்படங்கள் குறித்துப் பேசினேன். இரவு ’கேம் ஆஃப் த்ரோனின்’ இரண்டு பகுதிகளைப் பார்த்தேன். அப்புனைவின் நினைவுகளோடு தூங்கிப் போனேன்.

இலக்கிய வாழ்வைப் பொறுத்தவரை - அப்படி ஒன்று இருக்கிறதா என்ன?!-  நான் நம்பி இயங்கும் தளத்தைப் பொறுத்த வரை, எந்தக் குழுவிலும் பதுங்காத, எந்த முத்திரையும் விழுந்துவிடாத, எதன் சாயல்களும் இல்லாத நானாய் இருந்துவிட்டாலே போதும் எனத்தான் தோன்றுகிறது. சில தருணங்களை அப்படிக் கடக்க முடியாதுதான் என்றாலும் இந்தத் தொலைவு என் விருப்பம்போல் இயங்க என்னை அனுமதித்திருக்கிறது. முன்பு எப்போதுமே விரும்பியிராத இத்தொலைவை இப்போது முத்தமிடுகிறேன். உதிரியாய் இருப்பதே இருப்பு. தேவதேவன் பாணியில் சொல்லப் போனால் உயிரின் சுபாவம் உதிரி.

No comments:

Featured Post

test

 test