Wednesday, July 5, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்து நான்கு


நினைவு திரும்பியபோது காலம் இடம் யாவும் குழப்பமாக இருந்தன. மூத்திரமும் மருந்தும் டெட்டாலும் கலந்த சகிக்க முடியாத நெடிதான் நாசியை முதலில் அறைந்தது. எழுந்து ஓடிவிட வேண்டும் போலிருந்து. உடலை அசைக்க முடிந்தாலும் இடது கையை அசைக்க முடியாத அளவிற்குக் கட்டுப் போட்டிருந்தனர். குழந்தைகளின்  அழுகையும் இரைச்சலுமாய் அந்த சூழல் அத்தனைக் கொடூரமானதாக இருந்தது. எழுந்து உட்கார்ந்தேன். பக்கத்து பெட்டில் ஒரு முதியவரின் கால் மாட்டில் அமர்ந்திருந்த நடுத்தர வயதுப் பெண் என்னைப் பார்த்து பரபரப்படைந்தாள்.

”இவ்ளோ நேரம் இங்கதான் இருந்தாங்க. இரு கூட்டியாரேன்.”

எனச் சொல்லிக் கொண்டே வெளியே ஓடினாள்.  அந்தப் பெண்ணை எங்கேயோ பார்த்தார் போலிருந்தது.  எங்கே மறுபடியும் அங்கையைக் கூட்டி வந்து விடுவாளோ, அவள் வந்து கழுத்தை நெறிப்பாளோ எனப் பயமாக இருந்தது. நல்ல வேளையாக உள்ளே ஓட்டமும் நடையுமாக வந்தது அம்மாதான். படபடப்பாய் வந்து தலையைத் தடவினாள்.

“ஒண்ணுமில்லடா மூட்டுதான் நழுவியிருக்காம். எலும்புலாம் எதுவும் உடையல. சீக்கிரம் சரியாகிடும்”

எனக்கு உடனே அங்கிருந்து ஓடிப்போக வேண்டும் போலிருந்தது.

“அப்புறம் என்னம்மா வா வீட்டுக்குப் போகலாம்” என எழுந்தேன்.

”இருடா டாக்டர் வந்ததும் அவர் கிட்ட கேட்டுட்டு போய்டலாம்.”

அதுவரைக்குலாம் இங்க இருக்க முடியாது என எழுந்தவனை டேய் டேய் என்றபடியே என்னைப் பிடித்து இழுத்து படுக்கையில் அமர வைத்தவள். இது யார்னு தெரியுதா பார்டா என சின்னச் சிரிப்போடு கேட்டாள். நான் அந்தப் பெண்ணை நிமிர்ந்து பார்த்தேன். அமுதா அக்கா. தூக்கிவாரிப் போட்டது. அமுதா அக்காவா இவள். ஒடுங்கிப் போயிருந்தாள். அந்தச் செழுமையும் மினுமினுப்புமான முகம் இப்படியா வற்றிப் போகும். என்னால் ஆற்றாமையை மறைத்துக் கொள்ள முடியவில்லை. அமுதாக்கா என சத்தமாகவே கத்திவிட்டேன். ஓடிவந்து என்னை அணைத்துக் கொண்டாள். அவள் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது. நானும் உடைந்தேன். அம்மாதான் எங்கள் இருவரையுமே தேற்றினாள். பக்கத்து பெட்டிலிருந்த முதியவரின் உடல் ஒரு முறை சப்தமாய் இருமி அடங்கியது. அமுதா ஒரு நொடி வெறுப்பாய் அவரை நோக்கி விட்டு மீண்டும் அவ்வளவு கருணையோடு என்னைப் பார்த்தாள். புரிந்து கொண்டேன்.

அழுகையைத் துடைத்துக் கொண்டு அமுதா கேட்டாள்.

”இத்தன வருசமா இருக்கனா செத்துட்டனான்னு கூட யாரும் நினைச்சுப் பாக்கல இல்ல?”

அம்மா ஏதோ சொல்ல முயன்றாள். நான் அப்படியே அமர்ந்திருந்தேன்.

”நானும் மறுபடியும் அந்தப் பக்கம் வரமுடியாமப் போய்டுச்சி யார் சாவுக்கும் சொல்ல முடியல”

அம்மா அடடா என உச்சுக் கொட்டினாள். நீ கூட ரொம்ப வத்திட்டியேம்மா என்றாள் வாஞ்சையுடன்.

"ம்ம் என் காலம் போச்சு. ஆனா வாழ வேண்டிய பையன். உனுக்கு என்னடா ஆச்சு. உன் கழுத்த நெறிச்சி கொல்லப் பாத்தாளே அவ யாரு உம் பொண்டாட்டியா?"

எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தேன்.

அம்மா அழ ஆரம்பித்து விட்டாள்.

"ஐயோ எம்புள்ள வாழ்க்கைய நானே நாசமாக்கிட்டனே"

 என வயிற்றில் அறைந்து கொண்டாள். அதுவரைக்குமில்லாத கோபம் அடிவயிற்றிலிருந்து மேலெழுந்தது.

"இப்ப வாய மூடப் போறியா இல்லையா?" எனக் கத்தினேன்.

என்ன ஏதுன்னு எனக்கும் தெர்லக்கா இனிமேதான் விசாரிக்கனும் என அமுதாவிடம் சொன்னேன். அதற்கு மேல் இருப்பு கொள்ளவில்லை. நான் வீட்டுக்குப் போறேன் என எழுந்து கொண்டேன். அதுவரை உடலில் சட்டை இல்லை என்பதே பிரக்ஞையில் இல்லை. அதானால் என்ன. நடக்க ஆரம்பித்தேன். பின்னாலேயே அமுதாக்காவும் அம்மாவும் ஓடி வந்தனர். நான் நிதானமாய் திரும்பி வீட்டு சாவி கொடு என்றேன்.

டாக்டர பாத்துட்டு போய்டலாம்டா என அம்மா கெஞ்சினாள். நீ பாத்துட்டு மருந்து மாத்திர வாங்கிட்டு வா. நான் முன்னால போறேன். சாவி எங்க என்றேன். அம்மா சற்றுச் சமாதானமாய்  பக்கத்து வீட்ல இருக்கு என்றாள். வெற்றுடம்போடு கட்டுப் போட்ட கையைக் கழுத்தில் மாட்டியபடி வெளியே வந்தேன்.

சாமி உள்ளே வந்து கொண்டிருந்தார்.

“அட வாத்தி நூறாசுய்யா உனக்கு” என இளிப்பாய் நெருங்கி வந்து அணைத்தார். ஏனோ அந்த நேரத்தில் சாமியை அவ்வளவுப் பிடித்தது.

“இங்க இருக்க முடியல வீட்டுக்குப் போலாம்” என்றேன்.
“எலும்பு கிலும்பு ஒடஞ்சிருச்சா?
“இல்ல மூட்டுதான் நழுவி இருக்காம்”
“ஹா அப்ப ஒண்ணும் இல்ல வூட்டுக்கு போலாம். காசு வச்சிருக்கியா போய் வாங்கியாந்திர்ரேன்”
“வீட்ல இருக்கும் எடுத்துக்கலாம். இப்ப ஒரு ஆட்டோவ கூப்டு” என்றேன்

சாமி போய் ஆட்டோவைக் கூட்டி வந்தார். பதினோரு மணி வெயில் முற்றியிருந்தது. நேற்று  முழுக்க ஆஸ்பத்திரியில் கிடந்திருக்கிறேன். அங்கையின் ஆத்திரம் மிகுந்த முகமும்  என்னை நெறித்த அக் கைகளின் வலிமையும் மீண்டும் மீண்டும் நினைவில் வந்து விழுந்தது. என்னால் சுத்தமாய் நம்ப முடியவில்லை. அதுவா அங்கை. அவ்வளவுச் சாதுவான முகத்திற்குப் பின்னால் இப்படியொரு உணர்வா புதைந்திருந்தது. ஆற்றுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. சாமிக்காய் திரும்பி இடுப்புல ஏதாவது வச்சிருக்க என்றேன். ஒரு வாய் இருக்கும். என்றபடியே வேட்டி இடுப்பு மறைவிலிருந்து ஒரு கோட்டர் பாட்டிலை எடுத்தார். பிடுங்கி வாயில் சரித்துக் கொண்டேன்.  நெஞ்சு எரிந்து நரம்பை அமைதிப் படுத்த முயன்றது. போவட்டும் என வாய்விட்டு சொல்லிக் கொண்டேன்.

”உன்ன இடிச்சவன் செத்துட்டானாமே?” என்றார் சாமி

 ”நான் செத்திருக்கலாம் சாமி”  குழப்பமாய் பார்த்தார்.

என்னா வாத்தி? என்றார்.

“நான் ஏன் சாவலன்னு நேத்து எம் பொண்டாட்டி வந்து என் கழுத்த நெறிச்சி சாவடிக்க பாத்தா சாமி.”

”அப்ப வண்டி ஓட்டியாந்தவன்?

”எம் பொண்டாட்டி லவ்வராம்” என் கண்ணில் இருந்து தாரை தாரையாய் நீர் வழிந்தது

சாமி ஆழமாய் மூச்சை இழுத்து விட்டார். என் தோளின் மேல் கை போட்டு அணைப்பாய் உலுக்கியபடியே சொன்னார்.

”எம் பொண்டாட்டியும்தான் என்ன சாகடிக்கப் பாத்தா. உனுக்குப் பரவால்ல அவளுக்கு எத்தினி லவ்வர்னே எனக்கு தெரியாது. அவளோட இப்பத்தி லவ்வர் கிட்ட அம்பது ரூபா வாங்கிதான் இந்த கோட்டரையே வாங்கினேன். இதுல போய் என்னபா” என்றார்.

நான் அவரை நிமிர்ந்து பார்த்தேன். அவர் ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு வெளியே வெயிலில் நகரும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆட்டோ விரைந்து கொண்டிருந்தது. நேற்று பெய்த மழையின் கடைசிச் சுவட்டையும் இந்தச் சூரியன் இன்று அதிகாலையிலேயே தின்றுத்  தீர்த்துவிட்டிருக்கிறது. திருவண்ணாமலை ஒரு வெயில் நகரம்தான்.

- மேலும்

No comments:

Featured Post

test

 test