Thursday, June 29, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தி மூன்று

யாகத்திற்குப் பிறகு மழை நின்றுவிட்டது. ஊரே சாமிநாதனை மெச்சியது. சர்வ சக்தியையும் அடக்கி ஆளும் ஆற்றல் அவனுக்கு உண்டு எனப் பேசிக் கொண்டனர். சாமி போதையில் மிதந்தான். வீட்டில் ஒரு முழுக் கிடாயை நேற்றிலிருந்து துர்க்கா வறுத்தும் அரைத்துமாய் வாசனையைப் படறவிட்டுக் கொண்டிருந்தாள். குடித்தே இராத தன் மாமனாருக்கு எவர்சில்வர் டம்பளரில் சரக்கை ஊற்றிக் கொடுத்தான். சமைத்துக் கொண்டிருந்த துர்க்காவைப் பிடித்து இழுத்து அவள் வாயிலும் சீமச்சரக்குடி குடிச்சிப் பாரு எனப் புகட்டினான். மடக் மடக் கென முழுங்கியவள் அந்த எரிச்சலுக்கும் போதைக்கும் தன்னை ஒப்புக் கொடுத்தாள். சாமியின் ஆட்டம் அரைப்புட்டியில் அடங்கியது. அவன் ஒரு மூலையிலும் அப்பன் ஒரு மூலையிலும் மடங்கினார்கள்.

சமைத்து முடித்திருந்த துர்க்கா மெல்ல எழுந்து போய் அந்த விஸ்கி பாட்டிலைத் திறந்து ஒரு டம்பளர் நிறைய ஊற்றிக் கொண்டாள். ஒரு வாய் குடித்துவிட்டு கறியை எடுத்துக் கடித்தாள். மிதமான போதையோடு முழு டம்ளரையும் குடித்தாள். சாமிக்கு வாயில் எச்சில் ஒழுகிக் கிடந்தது. ஏனோ அவனை மிகக் கேவலமாகப் பார்த்தாள். இந்த ஈனப்பயல் என்றாவது மாட்டுவான் என நினைத்தாள். டம்பளர் காலியானதும் அதைத் தூக்கி எறிந்துவிட்டு பாட்டிலை எடுத்துக் கொண்டு சமையல் அறைக்குப் போய் உட்கார்ந்து கொண்டாள். மழை விட்டிருந்த இரவு கூதலாய் இருந்தது. அந்தக் குளிருக்கு விஸ்கி மிகக் கதகதப்பாக இருந்தது. துர்க்கா ஏனோ அச்சமயத்தில் தன்னைப் பார்த்துக் கொள்ள விரும்பினாள். கையகலக் கண்ணாடி ஒன்று எரவாணத்தில் சொருகி வைத்திருந்தது நினைவிற்கு வந்தது. தேடி எடுத்தாள். குண்டு பல்பின் மஞ்சள் வெளிச்சத்தில் பாதி மட்டுமே தெரிந்த அவள் முகம் தகித்தது. கண்ணாடியால் அவள் முழுமுகத்தையும் பார்க்க முடியவில்லை. ஒரு ஆளுயரக் கண்ணாடிஇருந்தால் நன்றாக இருக்குமென நினைத்துக் கொண்டாள். தன் உருவம் முழுக்கத் தெரியும் கண்ணாடியை நாளையே வாங்க வேண்டுமெனவும் உறுதி பூண்டாள். சாமிநாதனிடம் பணம் விளையாடியது. பூஜை முடித்து விட்டு வந்தவன் மிக கவனமாய் வெள்ளைத் துணியில் சுற்றிய நூறு ரூபாய் தாள்களைச்  அடுக்குப் பானையில் வைத்துவிட்டுத்தான் பாட்டிலைத் திறந்தான். துர்க்கா அதைப் பார்க்காதது மாதிரி இருந்து கொண்டாள். இந்தக் கண்ணாடி வாங்கும் உந்துதல் எழுந்ததும் அவள் எழுந்து போய் பானைகளை இறக்கி அத் துணியைத் திறந்து ஒரு நூறு ரூபாய் தாளை மட்டும் எடுத்துக் கொண்டு மீண்டும் கவனமாய் மூடினாள். தலை கிறுகிறுத்து வந்தது. பணத்தை ஜாக்கெட்டில் சொருகிக் கொண்டு புடவையை அவிழ்ந்து மூலையில் எறிந்து விட்டு, பாயை உதறிப் போட்டுப் படுத்துக் கொண்டாள்.காலை எழுந்ததும் முதல் வேலையாய் சங்கராவரம் போய் கண்ணாடி வாங்க வேண்டும். இனி வயலுக்குப் போகக்கூடாது எனவும் தீர்மானித்தாள். இனி ஒழச்சு ஓடப்போவமாட்டண்டா தேவ்டியாப்பசங்களா என உரக்கக் கத்தினாள். வாய் உரக்ககெட்ட வார்த்தைகளை முணுமுணுத்தபடியே தூங்கிப் போனாள்.

 அடுத்த நாள் காலை சாமிநாதனுக்கு ஆச்சரியமாய் விடிந்தது. பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் வீட்டின் முன் குழுமியிருந்தனர். மாமனார் காலையில் வழக்கம் போல் எழுந்து வயலுக்குப் போய் விட்டிருந்தார். தள்ளாட்டமாய் எழுந்தவன் சமயலறைக்குப் போனான். துர்க்கா அப்படி ஒரு தூக்கத்தில் இருந்தாள். சேலை காணாமல் போய் இருந்தது. உடல் கோணி தூங்கிக் கொண்டிருந்தவளை தட்டி எழுப்பினான். பின் வாசலுக்குப் போய் முகம் கழுவிக் கொண்டு திண்ணையில் வந்து அமர்ந்தான். ஏற்கனவே அவனைச் சாமி என்றழைக்க ஆரம்பித்திருந்தனர்.

 யார் மொதல்ல வந்தது? வந்து உட்கார்.

எனத் தோரணையாய் அமர்ந்தான். தலைவலி மண்டையைப் பிளந்தது. ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாமல்

ஒரு டீ போடு என உள்ளே கழுத்தைத் திருப்பிக் கத்தினான்.

என்னா பிரச்சின? என முன்னால் அமர்ந்தவரிடம் கேட்டான்.

அவர் மகள் திருமணம் தள்ளிப்போகிறது என்றார். ஜாதகத்தை கொடுக்கச் சொல்லி வாங்கிப் பார்த்தான். தயாராய் கிடந்த சிலேட்டில் சில கணக்குகளைப் போட்டுப் பார்த்தான். வாராவாரம் மாரியம்மன் கோவிலுக்குப் போய் புற்றுக்குப் பாலூற்றச் சொன்னான். ஒரு மண்டலத்தில் திருமணம் நடக்கும் என்றான். அவர் வணங்கி ஐந்து ரூபாயைக் கொடுத்துவிட்டுப் போனார். இப்படியாக சாமிநாதனின் பீஸ் ஐந்து ரூபாயானது. அவன் சொன்னது நடந்ததா என்பது அவனுக்கே தெரியாத அளவிற்கு ஆட்கள் அவனைச் சூழ ஆரம்பித்தனர். ட்ராக்டர் வாங்க, நாற்று நட,  பம்ப் செட் போட அவனிடம் யோசனை கேட்டார்கள். எந்த லாட்டரி சீட் வாங்க வேண்டும் எனக்கூட கேள்வி வந்தது அதையெல்லாம் ஒருவாறாக சமாளித்தான். மெல்ல அவன் புகழ் பக்கத்து ஊர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. மழ நிறுத்தின சாமி என அவனை அழைத்தார்கள். ஊரில் எல்லா பொது நிகழ்வுகளுக்கும் அவனே முன் நின்றான். அடுத்த ஆறு மாதம் உச்சத்தில் திளைத்தான். துர்க்கா வீட்டோடு நின்று கொண்டாள். வாரம் ஒரு முறை சாமி சங்கராவரம் போய் விஸ்கி பாட்டில்களைப் பிடித்து வந்தான். துர்க்காவும் அவனுமாய் குடித்து கொண்டாடினார்கள். இதையெல்லாம் பார்க்க சகிக்காத அவன் மாமனார் வயலிலேயே தங்கிக் கொண்டார்.

சாமிநாதன் தன்னை அம்மனின் கடாட்சம் பெற்றவனாய் காட்டிக் கொண்டான். ஒவ்வொரு வார்த்தைக்கும் முன்னால் அம்மனின் கடாட்சம் பெற்ற என்னால் என்பதைச் சேர்த்துக் கொண்டான். மாண்புமிகு என்பது போல அம்மனின் கடாட்சம் ஆகிவிட்டது. ஊரின் பெரிய தலைகட்டுகளுக்கு சாமிநாதன் தான் சகலமும் என்றானது. அவனைக் கேட்காமல் ஒருவரும் ஒரு வேலையையும் செய்வதில்லை. சாமிநாதனுக்கு அவன் மனைவியின் வீடு இப்போது எலிப்பொந்தாகத் தெரிந்தது. பெரியசாமி கவுண்டரின் வீட்டிற்குள் என்று நுழைந்து விட்டு வந்தானோ அன்றிலிருந்தே இந்த வீடு ஆசூசையாகப் போய்விட்டது. பெரியசாமி கவுண்டர் பயன்படுத்தாத ஓட்டு வீடு ஒன்று வெகுநாட்களாகப் பூட்டிக் கிடந்தது. சாமிக்கு அந்த வீட்டின் பூர்வீகம் ஒன்றும் தெரியவில்லை. அவரிடம் பூஜை ரூம் இல்லாத வீட்டில் வசிப்பதால் சக்தி தன் மீது கோபத்தில் இருக்கிறாள் சீக்கிரத்தில் வேறு வீட்டிற்குப் போய்விட வேண்டுமெனப் பணித்திருக்கிறாள். ஆகவே நீங்கள் பயன்படுத்தாத இந்த வீட்டைத் தாருங்கள் எனக் கேட்டிருந்தான். அது அவரின் மகளிற்காய் பார்த்துப் பார்த்து கட்டிய வீடு. அவள் படிக்கப் போன இடத்தில் இன்னொருவனைக் காதலித்து வீட்டில் சொன்னால் கொன்றுவிடுவார்கள் எனப் பயந்து எங்கேயோ ஓடிப்போனாள். மகளோடு அந்த வீட்டையும் பெரியசாமி தலைமுழுகினார். சாமிநாதன் கேட்டதும் முதலில் அசெளகரியமாய் உணர்ந்தவர் மீண்டும் அவன் அழுத்திக் கேட்கவும். போய் இருந்துக்கோங்க சாமி என்றுவிட்டார். அடுத்த நாளே சாமி தடபுடலாய் அந்த வீட்டிற்கு குடியேறினான்.

துர்க்காவிற்கு இதெல்லாம் ரொம்ப நாள் இல்லை என்கிற எண்ணம் மட்டும் வந்து வந்து விழுந்து கொண்டிருந்தது. ஆனாலும் மெளனமாய் அவன் இழுத்த இழுப்பிற்குப் போனாள். அந்த விஸ்தாரமான வீடு அவளுக்கு எந்த மகிழ்ச்சியையும் தரவில்லை. அடுத்த ஆறு மாதத்தில் சாமி சொன்னது எதுவும் நடக்கவில்லை என மக்கள் சலித்துக் கொண்டனர். பெரிய வீடுகளில் பூஜை,  புனஸ்காரம் என சாமிநாதனும் பிழைப்பை ஓட்டிக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் ஜோசியம் கேட்க வென காலையில் மக்கள் வருவது நின்று போயிற்று. சாமிக்கு மெல்ல பயம் ஆரம்பித்தது. மிகவும் பாடுபட்டுக் கிடைத்ததை விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். மூங்கில் துறைப் பட்டிலிருந்து கொண்டு வந்த பழம் பெட்டி நினைவிற்கு வந்தது. அதிக மிதப்பில் அந்தப் பெட்டியை துர்க்கா வீட்டிலேயே போட்டுவிட்டு வந்தாயிற்று. சாமி ஆட்கள் யாரும் வராத அன்றைய காலையில் எழுந்து பழைய வீட்டிற்குப் போனான். மூலையில் கிடந்த பெட்டியைத் திறந்து பார்த்தான். அபூர்வமான புத்தகங்கள், ஜாதகக் கட்டுக்கள் யாவும் செல்லரித்து, மண்பிடித்துப் போய் கிடந்தன. ஒரே ஒரு ஏட்டைக் கூட அவனால் எடுக்க முடியவில்லை. ஆத்திரத்தில் பெட்டியை உதைத்துவிட்டு வெளியே வந்தான். ஏதாவது செய்ய வேண்டும் என அவன் மூளை பரபரத்தது.

- மேலும்

Sunday, June 25, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தி இரண்டு


மழை விட்டிருந்தது. அங்கையும் சங்கமேஸ்வரனும் சுய நினைவிற்கு திரும்பி இருந்தனர். விழுந்து புரண்டதில் உடல் முழுக்க சேறு அப்பியிருந்தது. உடைகள் முழுக்க சக்தியாகியிருந்தன. அங்கையற்கன்னி எழுந்து கொண்டாள். மரத்தடியில் கிடந்த புடவையை எடுத்து அணிந்து கொண்டாள். சற்றுத் தொலைவில் நீர் தேக்கத் தொட்டி ஒன்றிருந்தது. சங்கமேஸ்வரன் அவளை அங்கு கூட்டிக் கொண்டு போனான். தொட்டியில் நீர் நிறைதிருந்தது. அங்கையும் அவனும் உடைகளோடு நீர் தொட்டியில் இறங்கினர். கழுத்து வரை நீரில் மூழ்கி எழுந்தார்கள். சகதியும் சேறுமாய் இருந்த அவர்கள் சுத்தமானார்கள். அங்கைக்கு இதெல்லாமே கனவு என மனம் சொல்லிக் கொண்டிருந்தது. உடல் முழுக்க வலி தெறித்தது. நீர் பட்ட உடன் உடலின் பல இடங்கள் எரிந்தன. முற்கள் உடலைக் கிழித்திருக்கலாம்.

வானம் தெளிவடைந்திருந்தது. ரவி வீடு திரும்பியிருப்பானோ என்கிற எண்ணம் தோன்றி மறைந்தது. வாய்ப்பில்லை. இரவு அடங்கியதும் ஒரு திருடனைப்போலத்தான் அவன் வருவான். ரவியை அங்கை மன்னித்திருந்தாள். சங்கமேஸ்வரன் களைத்திருந்தான். அவன் கண்களில் சாந்தம் குடியேறியிருந்தது. இருவரும் பைக் நிறுத்தப்பட்டிருந்த அரச மரத்தடியை நோக்கி நடந்தார்கள். அவர்கள் விழுந்து புரண்ட இடத்தில் அங்கை சிறிது நேரம் நின்றாள். முன்னால் சென்றவனை அழைத்தாள். வந்தவனை இறுக அணைத்துக் கொண்டாள். அவளுடல் ஒரு கோழிக் குஞ்சைப் போல நடுங்கிக் கொண்டிருந்தது. அவன் அவள் முதுகை ஆதூரமாய் தேய்த்து இன்னும் இறுக அணைத்தான். பைக்கில் கொஞ்ச தூரம் போனால் காற்றில் ஈரம் காய்ந்து விடும் என சொன்னான். காயலனாலும் பரவால்ல என முறுவலித்தாள். அவன் பைக்கை உதைத்தான். மழையில் நனைந்திருந்ததால் இரண்டு மூன்று முறை உதைக்க வேண்டி இருந்தது. அங்கை ஏறி அமர்ந்தாள். காற்றை கிழித்துக் கொண்டு பைக் விரைந்தது. உடலும் துணிகளும் படபடத்தன.

அவள் தன்னை உணர்ந்திருந்தாள். தன் உடலை அறிந்திருந்தாள். ஓர் அநாசய தைரியம் அவள் நெஞ்சில் குடியேறியிருந்தது. இனி என்ன ஆனாலும் இவன் தான் என்கிற உறுதி படர்ந்தது. முடிந்தால் இன்று இரவே ரவியிடம் பேசி விட வேண்டும். பைக் பிரதான சாலையைத் தொட்டதும் அவன் காதருகில் சொன்னாள். எனக்கு இப்ப வீட்டுக்கு போக வேணாம். சங்கமேஸ்வரன் பைக்கை மலை சுற்றும் பாதைக்காய் திருப்பினான். பிரதான சாலையிலிருந்து மலை சுற்றும் பாதைக்குள் நுழைந்தது. முதலில் வந்த கல் மண்டபத்திற்காய் வண்டியை நிறுத்தச் சொன்னாள். ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்தது. மழையின் காரணமாய் அங்கு அமர்ந்திருக்கும் சாமியார்களையும் பார்க்க முடியவில்லை. லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த அந்தப் பழையக் கல் மண்டபத்திற்குள் நுழைந்தாள். லிங்கத்தின் அருகில் அகல் விளக்கொன்று சுடர் விட்டுக் கொண்டிருந்தது. கைகூப்பி வணங்கினாள். சங்கமேஸ்வரன் அருகில் எதுவும் பேசாமல் நின்றிருந்தான். மண்டபத்தை விட்டு வெளியே வந்தார்கள். ஒரு கல் தூணில் அமர்ந்தார்கள்.

 ஏதாச்சும் பேசு என்றாள். அவன் ஏதோ ஒரு உலகத்தில் தொலைந்திருந்தான். அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். முகத்தில் வந்து விழுந்த முடிக் கற்றைகளை மெதுவாய் ஒதுக்கினான். அவள் உதடுகளில் அசாதாரணச் சிவப்புக் குடியேறியிருந்தது. முத்தமிடும் எண்ணத்தை மறக்கப் பார்வையைத் திருப்பிக் கொண்டான். அவள் அவன் முகவாயைத் தனக்காகத் திருப்பி உதடுகளில் முத்தினாள். அவன் அங்கை என முனகினான்.

" என்ன நடக்குதுன்னே புரியல இல்ல" எனச் சொல்லிப் புன்னகைத்தாள்.

" ஆமா அங்கை. மலர்செல்வி போனதில இருந்து அவ்வளவுதான் என் வாழ்க்கைன்னு தோணுச்சி. தற்கொல பண்ணிக்க தைரியமில்ல. ஒரு பொணம் மாதிரிதான் வாழ்ந்துட்டு இருந்தேன். நீ எங்கிருந்த? எப்படி நான் உன் மனசுக்குள்ள இத்தன வருஷம் இருந்தேன். இதெல்லாம் ஒண்ணுமே புரியலை"

" இல்ல மானு இதெல்லாம் இப்படி நடக்கணுங்கிறது ஏற்கனவே எழுதப்பட்டிருக்கு"

" என்ன சொன்ன மானா?"

" ஆமா நீ எனக்கு மான் தான். உன்ன மானுன்னுதான் கூப்டப் போறேன்."

" கூப்டு நல்லாருக்கு கேக்க. உன்னை நான் தேனுன்னு கூப்டவா?"

" ஓ, ஆனா கூப்டறோத நிறுத்திக்க. நக்கிப் பாக்காத சரியா?"

"இல்ல நக்குவேன்"

ஏய் ஏய் என அவள் திமிற சங்கமேஸ்வரன் அவள் கழுத்தை நாவினால் துழாவினான். இருவருமே சாலையில் இருபுறங்களையும் பார்த்தார்கள்.

"சாமி இருக்க இடம் கிளம்பலாம்" என்றாள்.

" இனிமே எப்படி" என்றான்.

" நான் இன்னிக்கு நைட்டே ரவிகிட்ட பேசிடுறேன். அவன் புரிஞ்சிப்பான். நீ காலைல வீட்டுக்கு வந்துடு இதே பைக்ல ஏறி உன் கூட வந்துடுறேன். மலர் செல்விய மட்டும்தான் டூர் கூட்டிப் போவியா என்ன கூட்டிப் போவ மாட்டியா?"

" ஏய் ச்சீ நீதான் இனி என் உலகம். நாம இதே பைக்ல நாளைக்கு காலைல பறந்துடலாம். நம்ம ரெண்டு பேரையும் யார்னே தெரியாத ஒரு மலை கிராமத்துக்குப் போய் புதுசா ஒரு வாழ்க்கைய ஆரம்பிக்கலாம்."

 அங்கைக்கு கண்கள் சொருகின.

"நெனைக்கவே நல்லாருக்கு மானு. ஏன் நான் வீட்டுக்கு போவனும். இப்பவே இப்படியே போய்டலாமே"

" இல்லமா எனக்குச் சின்ன சின்ன வேலைகள் இருக்கு எல்லாத்தையும் நைட்டே முடிச்சிட்டு காலைல ஏழு மணிக்கெல்லாம் உன் வீட்டுக்கு வந்திடுறேன்."

" ம்ம் சரி வா கிளம்பலாம்"

 மீண்டும் பைக்கை உதைத்து, வந்த சாலையிலேயே திரும்பினான்.

" ஏன் மானு மலைய சுத்திட்டு போலாமே?"

" இல்லடி தேனு இப்படியே போய்டலாம். உன்ன வீட்ல விட்டுட்டு கிளம்புறேன்"

" இல்ல நீ என்ன சேஷாத்ரி ஆசிரம வாசல்ல விட்டுடு நான் போய்க்குறேன்"

" ம் சரி"

 பைக் நிதானமாய் விரைந்து பிரதான சாலையைத் தொட்டது. அரசு கலைக் கல்லூரி தாண்டியதும் பைக்கின் வேகத்தைக் கூட்டினான்.

" ஏய் நிதானமா போ" என்றாள்

" உன் தலை இன்னும் காயல. வேகமா போன காத்துல காய்ஞ்சிடும்" என்றபடியே பைக்கைத் திருகினான். மழைச் சாலை வழுக்கியது.

இரமணாசிர காம்பவுண்டில் ஒரு மயில் தோகை விரித்தபடி நின்று கொண்டிருந்தது. பரவசமான அங்கை ஏய் ஏய் இங்க பாரு மயில் தோகை விரிச்சிருக்கு எனக் கத்தினாள்.

எங்க என திரும்பியவன் சடாரெனக் குறுக்கில் வந்தவனை கவனிக்கவில்லை. அங்கைதான் ரவியை அடையாளம் கண்டு அய்யோ ரவி எனக் கத்தினாள். வெகு சமீபத்தில் பார்த்து ப்ரேக்கை அழுத்த வண்டி அவனை மோதிவிட்டு வழுக்கியது. பதினைந்தடி தூரம் சறுக்கிக் கொண்டு போய் இஞ்சின் உறுமி நின்றது. சங்கமேஸ்வரன் தலை தார்ச்சாலையில் மோதியது. அங்கையின் மீது வண்டி விழுந்தது. ரவி தெறித்திருந்தான்.

- மேலும்

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தொன்று


"பூ மொழம் எவ்ளோப்பா?"

அகத்திய மாமுனி நிமிர்ந்தார். பூக்கட்டிக் கொண்டிருந்த விரல்கள் நின்றன.

"ரெண்ரூவாம்மா"

" நாலு மொழம் கொடுப்பா"

 மாமுனி சுற்றி வைக்கப்பட்டிருந்த பூச்சரத்தை மெதுவாய் அளந்து நாலாவது முழ முடிவில் நூலை அறுத்து ஒரு வாழையிலையில் வைத்து நீட்டினார்.   பத்து ரூபாய் தாளிற்கு மீதிச் சில்லறையக் கொடுத்து விட்டு மீண்டும் பூத்தொடுக்க ஆரம்பித்தார். சாலையில் நடமாட்டம் கூடியது. அருகிலிருந்த கேசட் கடையில் இருந்து மாரியம்மன் பாடலொன்று சப்தமாய் உயிர் கொண்டது. வெயில் ஏற ஏற பேருந்துகளின் இரைச்சல் அதிகமானது. ஒரு சிறுமி சாமிக்கு பூ கொடுங்க எனக் கை நீட்டினாள். குவித்து வைத்திருந்த சாமந்திப் பூவை அப்படியே அள்ளி சாமி அவளின் சிறு கையில் போட்டார். சிறுமி போனதும் துர்க்கா கையில் எவர் சில்வர் தூக்குப் போசியோடு கடைக்குள் நுழைந்தாள்.

சாப்ட்ரு என்றாள்.  மாமுனி எழுந்து கொண்டார். பின் புறமாய் போய் கைகழுவி வந்தார். கிண்ணத்தில் நான்கைந்து இட்லிகள் சாம்பாரில் ஊறி இருந்தன. மெதுவாய் பிட்டு வாயில் போட்டுக் கொண்டார். இட்லி கரைந்தது. வேக வேகமாய் உண்டார். பின் தூக்குப் போசியோடு பின்புறம் போய் கையையும் பாத்திரத்தையும் கழுவி மீண்டும் வந்து இருக்கையில் அமர்ந்து கொண்டார். விரல்கள் தாமாகவே பூத் தொடுக்க ஆரம்பித்தன. துர்க்கா கல்லாவைத் திறந்து நான்கைந்து பத்து ரூபாய் தாள்களை எடுத்துக் கொண்டாள்.

"மத்யானத்துக்கு என்னா வோணும்?" என்றாள். மாமுனி நிமிர்ந்து அவளையே பார்த்தார். அவளாகவே
"வர்ர வழில விரால் மீனு வித்துகினு போனான். வாங்கிரவா?" என்றாள் 

சரி என தலையசைத்தார். துர்க்கா கடையை விட்டு வெளியேறினாள். சாமி மீண்டும் பூத் தொடுக்க ஆரம்பித்தார்.

ஒரு நண்பகலில் துர்க்காவின் வீட்டிலிருந்து இறங்கிய மாமுனி நேராய் மலையை நோக்கி நடந்தார். ரமணரிடம் போய் விடைபெற்றுக் கொண்டு அவர் உதவியோடு கமண்டலத்தை மீண்டும் கண்டறிந்து, தன் சக்திகளைத் திரட்டிக் கொண்டு பொதிகை மலைக்குச் சென்றுவிடும் திட்டத்தோடுதான் நடந்தார். நடக்க நடக்க அவர் உள்ளம் துர்க்காவிடமே திரும்ப வந்தது. முந்தின நாள் இரவின் மகாக் கலவி அவர் உடலின் ஒவ்வொரு செல்லிலும் நினைவுகளாய் தேங்கி விட்டிருந்தது. இன்று காலையில் அவர் அரைக் கண்ணில் கண்ட துர்க்காவின் குளித்த முடித்த உடல். குளிக்கும் ஓசை, அந்த ஸ்ஸ் சப்தம் அவரை மேலும் நடக்க விடவில்லை. ரமணாசிரமம் வரைப் போய் நின்றுவிட்டார். மலையின் மீது கால் வைக்க அவர் பாதம் அனுமதிக்கவில்லை. திரும்பி நடந்தார். ஆசிரமத்தை ஒட்டி இருந்த பூக்கடையில் அந்தச் சிறுமி இருந்தாள். அவரைப் பார்த்து புன்னகைத்தாள்.

"எங்க போற சாமி?" என்றாள்.

அப்படியே நின்றார்.

"ஏன் நிக்குற  உள்ள வா " என்றாள்.

மாமுனி கடைக்குள் போய் அமர்ந்து கொண்டார். அவள் தன் சின்னஞ்சிறு விரல்களால் முல்லைப் பூவை நேர்த்தியாய் நூலில் கட்டிக் கொண்டிருந்தாள். அதையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவர். எங்கிட்ட கொடு என அச்சரத்தை வாங்கி கட்ட ஆரம்பித்தார். பத்து நிமிடத்தில் பூ கட்டும் லாவகம் அவருக்குப் பிடிபட்டது. வாழ்வின் ஒட்டு மொத்த நோக்கமே பூத்தொடுப்பதுதான் என்பது போல அதில் ஆழ்ந்து போனார்.

"த இங்கியா இருக்க, குள்ச்சிட்டு வர்ரதுக்குள்ள ஆள  காணமேண்ணு நினைச்சேன்"

என்றபடியே துர்க்கா உள்ளே வந்தாள். சிவப்பு நிற ஜாக்கெட்டும் மஞ்சள் நிறப் புடவையையும் அணிந்திருந்தாள். நிலவைப் போல நெற்றியில் அத்தனை பெரிய குங்கமப் பொட்டு. சாமி அநிச்சையாய் காளி என முணுமுணுத்தார். அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார். மலையின் மீது தன் பாதம் படாததற்கான காரணம் அவருக்குப் புரிந்தது.

" ந்தா சாப்ட்ரு" என்றபடியே அவள் கொண்டுவந்திருந்த சாதத்தை போசியிலிருந்து தட்டில் போட்டு நீட்டினாள். மாமுனி சாதுவாய் அதை வாங்கி மெதுவாய் சாப்பிட ஆரம்பித்தார். அவ்வளவுதான். அவரின் சகலமும் சாஸ்வதம் அடைந்தது. பகல் முழுக்கப் பூத் தொடுப்பார். உணவு வேளாவேளைக்கு வந்துவிடும். பூக்கள் தீர்ந்ததும் சாலையைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவார். வித விதமான மனிதர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார். வாகனங்களின் விரைவு ஆரம்பத்தில் மிரட்சி ஏற்படுத்தினாலும் போகப் போகப் பழகியது. பணம் குறித்து அறிந்து கொண்டார். கணக்கை சிறுமி சொல்லித் தந்தாள். எழுத்துக்களையும் அவளே அறிமுகப்படுத்தினாள். இரவு ஏழு மணி வரை கடையில் இருப்பார். கடைசி வாடிக்கையாளரான பேங்க் அலுவலர் பூ வாங்கிக் கொண்டு போனதும் டாப்பை இழுத்து மூடி பூட்டு போட்டுவிட்டு தேனிமலைக்காய் நடக்க ஆரம்பிப்பார். அவர் போகும் நேரத்திற்கு துர்க்கா சமையலை முடித்திருப்பாள். இவர் பின்புறமாய் போய் கொல்லையில் தயாராய் இருக்கும் நீரில் குளித்து விட்டு கம்பியிலேயே காய்ந்து கொண்டிருக்கும் இன்னொரு வேட்டியை சுற்றிக் கொண்டு உள்ளே வருவார். துர்க்கா தட்டு நிறைய சோறு போட்டு சுடச் சுடக் குழம்பு ஊற்றிக் கொடுப்பாள். நிதானமாய் சாப்பிட்டு முடிப்பார். சாப்பிட்டதும் பாயை உதறிப் போட்டு படுத்துவிடுவார்.

துர்க்கா மெதுவாக சாப்பிட்டு விட்டு அடுக்களையை ஏற கட்டிவிட்டு புடவையை அவிழ்ந்து கொடியில் போட்டுவிட்டு அவர் அருகில் வந்து படுப்பாள். மாமுனி அதற்காகக் காத்துக் கொண்டிருப்பார். சாமிநாதன் பெரும்பாலும் இரவு வருவதில்லை. எங்கேயாவது குடித்துவிட்டு விழுந்து கிடப்பான். அல்லது மலை சுற்றும் பாதையில் படுத்து தூங்கிவிட்டு காலை நேராய் கடைக்கு வந்து துர்க்காவிடம் காசு வாங்கிப் போவான். ஒரு நாள் இரவு போதையேறாமல் வீட்டிற்கு வந்தவன் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாமுனியைப் பார்த்து நெற்றியைச் சுருக்கினான்.

"நீ அந்த மெண்டல் கேஸ் இல்ல, ங்கோத்தா எங்கூட்ல என்னடா பன்ற?" என மாமுனி மீது பாய்ந்தான். துர்க்கா அவனைப் பிடித்து வெளியே தள்ளினாள்.

"இனிமே வூட்டுப் பக்கம் வராத. இது இங்கதான் இருக்கும்" என அழுத்தந்திருத்தமாக சொல்லிவிட்டாள். சாமிநாதன் தெருவில் நின்று வண்ட வண்டையாய் அவளையும் மாமுனியையும் திட்டித் தீர்த்தான். அக்கம் பக்க வீடுகளிலிருந்து ஆண்கள் வந்து அவனைச்
 சமாதானப்படுத்தினர். இருட்டிலிருந்து ஒரு குடிகாரன் குழறலாய் கத்தினான்

"அந்த சாமியாரு ஒரு மாசமா ஒம்பொண்டாட்டிய ஓக்குறான் ங்கோத்தா உனக்கு இப்பதான் தெரிஞ்சதா" எனக் காறித் துப்பினான்.

சாமிநாதன் ஆத்திரத்தை அடக்க முடியாமல்  "அடங்கோத்தா தெவ்டியாப் பையா, ஒம் பொண்டாட்டிய ஊரே ஓக்குது நீலாம் பேச வந்துட்டியாடா" என கையில் கிடைத்த கல்லை அவன் மீது எறிந்தான். இருளில் அது எங்கேயோ போய் விழுந்தது. குடிகாரன்  மனைவி  அவனைத் துடைப்பத்தால் அடித்து நொறுக்கி வீட்டிற்குள் இழுத்துப் போனாள். அந்த ரகளைக்குப் பிறகு சாமிநாதன் வீட்டுப் பக்கம் வருவதில்லை. ஆனால் தவறாமல் காலையில் வந்து துர்க்காவிடம் காசு வாங்கிப் போவான். என்றாவது நிதானமான போதை மாலை வேளைகளில் வந்து அவளிடம் ஆசையாகப் பேசுவான். மீன் கொழம்பு வச்சி கொடம் பொண்ணே எனக் கெஞ்சுவான். ஞாயித்துக் கெழம வூட்டாண்ட வா என்பாள். சில நாட்களில் மாமுனியிடம் வந்தும் பணம் வாங்கிக் கொண்டு போவான்.

அன்று மதிய வாக்கில் கடைக்கு வந்தான். காலையிலிருந்து சுற்றிச் சுற்றி வந்தவனுக்கு யாரும் சரியாய் மாட்டவில்லை. வாத்தி எங்காவது தென்படுவானா எனப் பார்த்துக் கொண்டே கடைக்குள் அமர்ந்து கொண்டிருந்தான். எங்கிருந்தோ வந்த மழை திடீரென அடித்துப் பெய்தது. சாமிநாதன் திகைத்தான். இன்னாபா இது அதிசியம் என்றபடியே ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு கடையில் உட்கார்ந்து விட்டான். பூக் கட்ட பூவும் இல்லை. உதிரிப் பூ வாங்க ஜோதி மார்க்கெட்டிற்குப் போன துர்க்கா மழையில் மாட்டிக் கொண்டாளோ எனக் கவலையாய் மாமுனி சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.அப்போதுதான் அந்த பைக் கின் ப்ரேக் சப்தம் கேட்டது. சாமி அவசரமாய் எழுந்து சாலைக்கு வந்தார். ஏ ஏ எனக் குரல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கேட்டன. பைக்கால் தூக்கி எறியப்படது ரவி என்பதை சாமி கண்டுகொண்டான். அட நம்ம வாத்திய அடிச்சிட்டானுங்களே எனக் கத்தியபடியே ஓடினான். மாமுனி மொத்த சம்பவத்தையும் பார்த்துக் கொண்டு எந்த அலட்டலும் இல்லாமல் அமர்ந்து கொண்டிருந்தார்.

- மேலும்

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபது


ஸ்கந்தாசிரமத்தை சென்றடைந்தபோது நேரம் உச்சியைத் தாண்டியிருந்தது ஆனாலும் வெயில் தெரியவில்லை. உயர்ந்த மரங்களின் நிழல் அந்தச் சிறு வீட்டை முழுமையாய் மூடியிருந்தது. பிரதான வீட்டிலிருக்கும் சிறு புத்தக அடுக்கின் அருகாமையில் ஒரு வெள்ளைக்காரர் அமர்ந்து புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார். குறுகலான தியான அறையில் இன்னொரு வெள்ளைக்காரப் பெண் கண்மூடி அமர்ந்திருந்தாள். சப்தமெழுப்பாமல் காம்பவுண்ட் சுவருக்கு அருகாமையில் சென்றேன்.மலை இறக்கம் பார்க்க சற்றுக் கிறுகிறுப்புத் தோன்றியது. மீண்டும் திரும்பி வந்தேன். ஒரு நல்ல மணம் நாசியை நிறைத்தது. இதென்ன மணம் என யோசித்தபோதுதான் தலைமீது ஒரு பவழமல்லிப் பூ வந்து விழுந்தது. இரண்டு மூன்று பவழமல்லி மரங்கள் ஒடிசலாய் நின்று கொண்டிருந்தன. சற்று உற்றுப் பார்த்தேன். காற்றின் பாடலுக்கு அப்பூக்கள் சிறுசிறு கிளைகளில் தொற்றியபடி காம்பை அசைத்துக் கொண்டிருந்தன. மனம் அப்படி ஒரு உவகை அடைந்தது. முதன்முறையாக வாஞ்சை என்ற உணர்வு எனக்குள் எட்டிப் பார்த்தது.மெல்ல நடந்து ஆசிரமத்தின் பின் பக்கம் போய் அங்கு ஆண்டாண்டுகளாய் நின்று கொண்டிருக்கும் மாமரத்தின் மிகப் பருத்த வேர்களின் இடைவெளியில் அமர்ந்தேன். என்றுமே உணர்ந்திராத பசியை உணர்ந்தேன். அந்தப் பசி உணர்வு அவ்வளவு நன்றாக இருந்தது. குடியும் புகையும் என் மூளையை மட்டுமல்ல சுவை நரம்புகளையும் துண்டித்து விட்டிருக்கிறது.

வீட்டின் அமைதி நினைவிற்கு வந்தது. குளுமையான பின்புறத் தோட்டம் நினைவில் வந்து அழைத்தது. அங்கையின் அகலப் பொட்டு வைத்த முகம். பசி. உடல் திண்மமானது. பயம் அகன்றதைப் போலிருந்தது. உடனே வீட்டிற்குப் போய் அவளை அணைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. எழுந்தேன். தியான அறையைக் கடக்கும்போது அநிச்சையாய் கைகள் கூப்பின. ரமணரை விழுந்து வணங்கிவிட்டு மலைச்சரிவில் நடக்க ஆரம்பித்தேன். காற்று சுழன்றது. திடீரென சூரியனை மேகங்கள் மூடின. வானம் பத்து நிமிடத்தில் கருத்தது. மனம் திக் கென ஆகியது. இதென்ன திடீர் இருள். நடையை துரிதப்படுத்தினேன். அடுத்த பத்து நிமிடத்திற்குள் மூக்கின் மீது முதல் மழைத்துளி வந்து விழுந்தது. மெல்ல மெல்ல தூறல் வலுக்க ஆரம்பித்தது. மழை தொடங்கியதும் பயம் போனது.

முதன் முறையாய் மழை பெய்யும் போது மலையில் நிற்கிறேன். உடல் சிலிர்த்தது. மேகம் அடர்வாய் மலை உச்சியில் இறங்குவது தெரிந்தது. மலைச்சரிவில் காய்திருந்த பாறைகள் அனைத்தும் ஈரத்தில் மினுமினுத்தன. நடக்க நடக்க கால் வழுக்கியது. இறக்கம் என்பதால் நீர் கால்களை நனைத்துத் தாண்டி வழிந்தது. சற்று நேரம் இந்த மழையில் அமர்ந்திருக்கத் தோன்றியது. படிக்கட்டுகளை விட்டு விலகி மேற்குப் பக்கமாய் இருந்த ஒரு உயரமான பாறையின் மீது வழுக்கலாய் ஏறி அமர்ந்து கொண்டேன். மலைச்சரிவும், சரிவிற்கு அப்பால் விரிந்த வயல் வெளிகளும் தென்பட்டன. பசுமை பசுமை அவ்வளவு பசுமை. இவ்வளவு பசுமையானதா நம் நகரம் என்ற ஆச்சரிய உணர்வு தோன்றியது. திருவண்ணாமலை ஒரு வறட்சிப் பகுதி. வெயில் நகரம் என்றுதான் அதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். இந்த மழை என் ஊரையே எனக்குப் புதிதாய் அறிமுகப்படுத்தியது. இந்த உயரத்தில் இருந்து பார்க்கும்போது எவ்வளவு மரங்கள் தென்படுகின்றன. ஒரு நாள் கூட இவ்வளவு மரங்கள் சூழ வாழ்கிறோம் என்ற எண்ணமே தோன்றாமல் இருந்திருக்கிறோம். என்ன மாதிரியான பைத்தியம் என்னை பீடித்திருந்ததோ எல்லாமும் மழையில் கழுவி காலடியில் வழிந்து ஓடுவதைப் போலிருந்தது.

மழை மேலும் வலுத்தது. மழைத்தாரைகள் உடலில் ஊசியாய் குத்தின. உணர்வுகளை மறந்து மொத்தமாய் மரத்துப்போன உடல் புத்துணர்வடைந்தது. கொஞ்சம் கூட அசையாமல் அம்மழையை முழுவதுமாய் எனக்குள் வாங்கிக் கொண்டேன். எவ்வளவு நேரமானதெனத் தெரியவில்லை. வானம் மெல்ல மெல்ல தெளிவடைந்தது. மழை, தூறலாய் ஓய்வெடுத்தது. கடைசிச் சொட்டு மழைத்துளி நிற்கும் வரை அசையாமல் அமர்ந்திருந்தேன். காற்றில் ஈரம் கூடியது. உடல் மெல்ல நடுங்க ஆரம்பித்தது. மறந்திருந்த பசி மீண்டும் நினைவில் வந்தது. பாறையில் இருந்து தளர்வாய் இறங்கினேன். இனி நான் சரியாகிவிடுவேன் எனத் தோன்றியது. சரியாகிவிட்டேன். மனம் உறுதியடைந்தது. மீண்டும் படிக்கட்டுகளில் இறங்க ஆரம்பித்தேன். மழை உலகையே சுத்தமாய் கழுவித் துடைத்து விட்டிருக்கிறது. அத்தனையும் பரிசுத்தம். மஞ்சம் புற்களின் ஈர வாசம் கிளர்வாய் இருதது. காமம் துளிர்விட்டது. வேக வேகமாய் இறங்கினேன். ரமணாசிரமத்தின் கம்பிக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். ஒரு சிறு ஓடை உருவாகியிருந்தது. செம்மண் குழம்பலாய் நீர் பாய்ந்து கொண்டிருந்தது. வெளியில் வந்தேன்.

செங்கம் சாலையில் மக்கள் நடமாட்டமே இல்லை. ஆசிரமத்தின் எதிரிலிருக்கும் டீக் கடை திறந்திருந்தது. குளிருக்கு ஒரு டீ குடிக்கலாம். தெப்பலாய் நனைந்திருந்த என்னை கடையில் வித்தியாசமாய் பார்த்தார்கள். டீ சொன்னேன். சூடான அந்த டீயை வாங்கும்போதுதான் ஈரத்தில் விரல்கள் விரைத்திருப்பதைப் பார்த்தேன். சிறுவயதில் கிணற்றில் ஊறிக் கிடந்து வெளியே வரும்போது இப்படித்தான் கை விரல்கள் நமுத்திருக்கும். டீ யை வாங்கி ஊதி ஊதிக் குடித்தேன். ஒரே வார்த்தைதான். அமுதம். அந்த டீயில் ஏலக்காய் மணத்தது. ஸ்நேகமாய் கண்களை உயர்த்தி டீ மாஸ்டரைப் பார்த்து தலையசைத்தேன். அவர் புரிந்து கொண்டிருப்பார். இன்னோர் டீ போடவா எனக் கேட்டார். வேண்டாம் என தலையசைத்து விட்டு வெளியில் வந்தேன். கால்களில் செருப்பில்லாததை அப்போதுதான் உணர்ந்தேன். ஆசிரமத்தில் செருப்பை விட்டது நினைவிற்கு வந்தது. மீண்டும் போய் எடுத்துக் கொள்வதற்காக சாலையை கவனிக்காமல் கடக்க முற்பட்டேன்.

ஏய் ஏய் ஏய் என்கிற குரல்கள் என்னைச் சூழந்தன. என்ன நடக்கிறது எனப் புரிவதற்குள் ஒரு பைக் எனக்கு அருகாமையில் வந்துவிட்டிருக்கிறது. அதன் ப்ரேக்குகளின் கதறலை ஈரச் சாலை கேட்கவில்லை. பேங்க் என மூளைக்குள் குரல் கேட்டது. என் அடிவயிற்றில் ஏதோ பலமாய் மோதியது. தூக்கி வீசப்பட்டேன். உடல் காற்றில் இருப்பதை உணர்ந்தேன். பைக்கை ஓட்டி வந்தவன் சறுக்கி விழுந்தான். அவன் பின்னால் அமர்ந்திருந்த பெண் பக்கவாட்டில் விழுந்தபோதுதான் கவனித்தேன். அவள் அங்கை. என் ப்ரிய அங்கை. என் மனைவி அங்கையற்கன்னி. கீழே விழுந்தபோது கையைத் தரையில் கவனமாய் ஊன்றிக் கொண்டேன். கையின் எலும்பு உடைந்திருக்கலாம். ரத்தம் வழிந்தது. சுதாரித்து எழுந்து கொண்டேன். விழுந்து கிடந்த அவர்களை நோக்கி ஓடினேன். அங்கையின் ஒரு கால் பைக்கிற்கு அடியில் மாட்டியிருந்தது. ஓட்டி வந்தவன் தலையை தரையில் இடித்துக் கொண்டதால் நினைவைத் தப்பி இருந்தான். ஓடிப்போய் பைக்கை தூக்க இன்னும் இரண்டு மூன்று கரங்கள் நீண்டன. அங்கை வலியில் முனகினாள். ஆறுதலாய் அணைத்துக் கொண்டேன். ஓட்டி வந்தவன் எழவில்லை. ஆட்டோவை யாரோ கை காட்டி நிறுத்தினார்கள். டீ மாஸ்டர் அவனைத் தூக்கி ஆட்டோவில் போட்டோர். ஏறுங்க எல்லாரும் ஆஸ்பத்திரி போலாம் என்றார். அங்கையின் கால் முட்டியிலும் கையிலும் ரத்தம் வழிந்தது. என் கையைத் தூக்க முடியவில்லை. ஏறினோம். அருகாமையில் இருந்த பெரியாஸ்பத்திரியில் போய் விழுந்தோம். பசியிலும் திகைப்பிலும் நான் மூர்ச்சையானேன்.

 கண் விழித்தபோது அங்கை எனக்கு அருகாமையில் அமர்ந்திருந்தாள். அவள் பார்வை நிலைக்குத்தியிருந்தது. என் கையில் பலமான கட்டு  போடப்பட்டிருந்தது. அசைக்க  முடியவில்லை. அங்கையைப் பார்த்து புன்னகைக்க முயன்றேன். அவள் பார்வை இன்னும் தீவிரமானது. கண்களில் இருந்து நீர் வழிந்தது.

 "எனக்கு ஒண்ணும் இல்ல அங்க" என்றேன் பலகீனமாக.

 அங்கை பற்களைக் கடித்தபடி சொன்னாள். "நீ என் புள்ளிமான கொன்னுட்டடா"

நான் அதிர்ந்தேன். "என்ன, என்ன சொல்ற?"

 அவள் குரல் உயர்ந்தது அந்த ஆஸ்பத்திரியே திரும்பிப் பார்க்கும்படி கத்தினாள். "நீ என் புள்ளிமானக் கொன்னுட்டடா கொலகாரப் பாவி" என்றபடியே என் மீது பாய்ந்தாள். என் கழுத்தை நெருக்கினாள். மூச்சுத் திணறியது. கையை அசைக்க முடியாததால் அவளை விலக்கவும் முடியவில்லை. தொண்டை நசிந்தது. உயிர் பிரியும் கணத்திற்கான முன் நொடியில் யாரோ அவளை என் மீதிருந்து இழுத்து கீழே போட்டனர். நெஞ்சே வெடித்துவிடும்படி இருமினேன். அங்கையின் ஆக்ரோஷமான அழுகை அந்த பெரியாஸ்பத்திரியின் சுவர்களில் மோதியது. நான் மீண்டும் நினைவை இழந்தேன்.

 - மேலும்  

Saturday, June 24, 2017

ஓரிதழ்ப்பூ அத்தியாயம் பத்தொன்பது


சாமிநாதனின் தினசரி மீண்டும் ஒழுங்கிற்கு வந்தது. கரும்பலகையால் துர்க்கை ஜோதிட நிலையம் என்றெழுதி வீட்டு வாசலில் திண்ணையை ஒட்டி இருந்த தூணில் மாட்டினான். சாமியாரிடம் இருந்து கொண்டு வந்திருந்த சில ஜோதிட சம்பந்தமான புத்தகங்கள் மற்றும் பஞ்சாங்கங்களை வருவோர் பார்வையில் படுமாறு வைத்தான். வீட்டின் இரு புறமும் இருந்த மண் திண்ணைகள் அவனுக்குப் போதுமானதாக இருந்தது. ஒரு திண்ணை அமர்ந்து கொண்டு ஜோசியம் பார்க்கவும்  இன்னொரு திண்ணை வருவோர் அமர வசதியாகவும் இருந்தது. துர்க்கா காலை எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அதிகாலையில் எழுந்து வயலுக்குப் போன தந்தைக்கு காலை உணவை எடுத்துக் கொண்டுச் சென்றுவிடுவாள். சாமிநாதன் திண்ணையில் இடுப்பில் கட்டிய காவி வேட்டி துண்டு சகிதமாய் அமர்வான். பெரும்பாலும் யாரும் வரமாட்டார்கள். அப்படியே வருபவர்கள் "நல்ல நாள் பார்த்து சொல்லுபா" என தெருவில் நின்று கேட்டபடியே சென்று விடுவார்கள். கொடுக்க அவர்களிடமும் ஒன்றும் இல்லை. சாமிநாதனுக்கு அலுப்பாகத்தான் இருக்கும் ஆனால் வெளிக் காட்டிக் கொள்ள மாட்டான். ஏதாவது ஒன்று நிகழ்ந்தால்தான் அவனை ஊருக்குத் தெரியும். அந்த சம்பவத்திற்காக வெறுமனே காத்துக் கொண்டிருந்தான்.

துர்க்காவின் தந்தைக்கு மூன்று ஏக்கர் நிலமிருந்தாலும் மானம் பார்த்த பூமி தான். ஏதோ ஓடிக்கொண்டிருந்தது. அவரும் துர்க்காவும் கடுமையாக உழைத்தார்கள். ஒரு சம்சாரியைத்தான் மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க நினைத்திருந்தார். ஆனால் நடக்கவில்லை. சாமிநாதன் அன்னக்காவடியாக இருந்தாலும் வீட்டோடு ஒருவன் கிடைத்தானே என்கிற நிம்மதி இருந்தது. நாள் முழுக்க வயலில் பாடுபட்டுக் கிடந்தே அவர் வாழ்நாள் கழிந்ததால் ஊரில் நல்லது கெட்டது எதிலேயும் அவர் தலையிட்டுக் கொண்டது கிடையாது. சாமிநாதன் இந்த இடைவெளியை நிரப்ப முயன்றான். மாலைவேளைகளில் அந்த ஊரில் இருந்த பஜனை கோவிலுக்குப் போய் அமர்ந்து கொள்வான். சும்மா வருவோர் போவோரைப் பார்த்து ஏதாவது சொல்வான். முகத்தைப் பார்த்தே எதிர்காலத்தைத் துல்லியமாக கணிக்கும் ஆற்றல் தன்னிடம் இருப்பதாக சொல்லுவான். எளிய அம்மனிதர்கள் வாய்பிளந்து அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஊர் எல்லையில் மாரியம்மன் கோவில் ஒன்று இருந்தது அங்கும் வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளில் போய் சத்தமாக அம்மனுக்கு சொல்லும் மந்திரங்களை சப்தமாய் உச்சரிப்பான். பெரும்பாலும் அங்கு வரும் பெண்கள் வாய் பிளந்து அவனைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். சிறுவர்கள் அவனிடம் போய் விபூதி பூசிக் கொள்வார்கள். இப்படியாக மெல்ல மெல்ல சாமிநாதன் அந்த ஊரில் தன் பெயரை வளர்த்து வந்தான். ஆனாலும் மிக முக்கியமான சம்பவமென ஒன்றும் நிகழவில்லை. பத்து பைசா கூட வருமானமென இல்லை.

துர்க்காவிற்கு இது ஒரு பொருட்டாக இல்லை. அவள் நாள் முழுக்க உழைத்தாள். தந்தை தூங்கியது உறுதியானதும் இரவில் சப்தமெழுப்பாமல் அவனோடு உறவு கொண்டாள். மீண்டும் காலையில் தன் வேலைகளில் மூழ்கிவிடுவாள். சாமிக்கு இந்த இருள் சம்போகம் மெல்ல அலுக்கத் துவங்கியது. மதியம் வீட்டிற்கு வரச் சொல்லி அவளை நச்சரிப்பான். அவளோ உறுதியாய் அதை மறுத்துவிடுவாள். சாமிநாதனுக்கு மதியப் பொழுதைத் தள்ளுவதுதான் சாதனையாக இருந்தது. நாய்கள் கூட மதியம் நடமாடாத தெருவது. பக்கத்திலிருக்கும் பெரிய ஊரான சங்கராவரத்துக்குப் போய்வரும் ஆசை இருந்தாலும் காசிருக்காது. தூங்கியோ அல்லது புரட்டிப் புரட்டி நைந்து போன பஞ்சாங்கத்தை மீண்டும் நைய வைத்துக் கொண்டிருப்பான். ஆறு மாதம் இப்படியே ஓடியது.

மழைக்காலம் ஆரம்பித்தது. மழையென்றால் அப்படி ஒரு மழை. இடைவிடாத மழை. வெளியில் மக்கள் தலைகாட்ட முடியவில்லை. வயல் வேலைகள் முடங்கின. ஊரே வெள்ளக்காடானாது. அந்தத் தெருவில் இருந்த பெரும்பாலான வீடுகள் மண்வீடுகள்தாம். எல்லாமும் மழையில் ஊறி சரிந்தன. இருந்த சொற்ப பொருட்களையும் இழந்த மக்கள். பஜனைக் கோவிலில் தஞ்சமடைந்தனர். அங்கும் இடமில்லாமல் பெரியசாமி கவுண்டர் வீட்டு முற்றம் உட்பட ஊரில் இருந்த ஓடுவேய்ந்த வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். என்னசெய்வதென்று மக்கள் திகைத்தபோது ஊரின் பெரிய தலைக்கட்டுகளுக்கு சாமிநாதனின் இருப்பு நினைவிற்கு வந்தது.

"ஊர்ல ஒரு ஜோசியன் இருக்கானே அவன கூட்டி வாங்கய்யா" என்றனர்.

அந்த மழை நாளில் துர்க்கா கொடையாய் மாற்றித் தந்த  ஒரு கோணிப்பையை தலையில் மாட்டிக் கொண்டு கவுண்டர் வீட்டிற்குப் போனான். நல்ல அகலமான திண்ணைகள் வைத்து மிக உயரமாய் சுவரெழுப்பி கட்டப்பட்டிருந்த வீடது. முற்றத்தில் மட்டுமே ஐம்பது பேர் அமரலாம். ஊரில் இருந்த சம்சாரிகள் அனைவரும் அங்கு ஒண்டிக் கொண்டிருந்தனர். சாமி  சம்பவம் என்ன என்பதைப் புரிந்து கொண்டான். தன் குரலைத் திடமாக்கிக் கொண்டான். ஊர் பெரியவரான பெரியசாமி கவுண்டரின் தந்தைப் பேச்சைத் துவங்கினார்.

" ஜோசியர் தம்பி இந்த மழைய நிறுத்த வழி இருந்தா சொல்லு. மக்க இவ்ளோ கஷ்டப்படுதுங்க நாலு விஷயம் தெரிஞ்சவன் நீ நல்லது கெட்டதுக்கு முன்னாடி வர வேணாமா? "

"சர்தாங்கய்யா. சொல்றேன்னு கோவிச்சுக்க கூடாது. நான் போவாத ஊர் கிடையாது பாக்காத மக்க மனுசங்க கிடையாது. ஆனா இந்த ஊரும் ஆளுங்களும் அப்படி இல்லிங்களே அதனாலதான் நான் உண்டு என் வேல உண்டுன்னு இருந்தேன். தல ஆடினாதானய்யா வாலும் ஆடும்"

"என்னப்பா சொல்ற?"

" ஆமாங்கய்யா, ஊர்ல ஒரு கோவில் கிடையாது. பூஜை புனஸ்காரம் கிடையாது. அப்புறம் எப்படிங்க சாமி நம்ம ஊரக் காப்பாத்தும். இதெல்லாமே ஊருக்கு வரும் வினைங்க சாமின்னு ஒண்ணு இருக்கறதையே நாம மறந்திட்டா, சாமி யாருன்னு நமக்கு இப்படிக் காட்டுங்க "

"ஆமாய்யா நீ சொல்றதும் சரிதான். இத்தன வருசம் எல்லாஞ் சரியாத்தான் இருந்தது.   மாரியாத்தா கோவில் பூஜாரி போன வருசம் கோவிலுக்கு போன பொம்பளய இழுத்துட்டு வெளியூருக்கு ஓடிப்போயிட்டான். அவ புருசன் குடிச்சிட்டு வந்து இதோ இந்த வீட்டு முன்னாடி வந்து மண்ண வாரி விட்டுப் போனான்.  அதுக்குப் பிறகு நாங்களும் வெட்கப் பட்டுட்டு அந்தக் கோவில் பக்கம் போகல. அங்க பூஜ ஒண்ணும் பண்ணல. ஆனா வருசா வருசம் பஜனை கோவில்ல தெருக்கூத்து போட்டுற்றமே"

"மழ வற்றதுக்கு தெருக்கூத்து போடுறீங்க, வந்த மழைய நிறுத்த என்ன பண்றீங்க? மொத்த கும்பலும் அமைதியானது. சரி என்ன பண்ணனும்னு சொல்லுங்க பன்னிடுவோம்."

சாமிநாதனுக்கும் உள்ளூர என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமால்

"மழயோட சாமி வருண பகவானுங்க. அது கோவமாயிட்டதாலதான் இப்படி ஒரு ஊழித் தாண்டவம் ஆடுதுங்க. வருண சாமிய அமைதிப்படுத்தனும். கூடவே சேத்து இப்படி சொழட்டி சொழட்டி அடிக்கிற காத்த நிறுத்த வாயு பகவானையும் சாந்தப்படுத்தனுங்க." என்றான்

"சரி பண்ணிடுவோம். நீங்க ஆக வேண்டிய காரியங்களை கவனிங்க"

எனப் பெரியசாமி கவுண்டர் வாய் திறந்தார்.

"ஒரு யாகம் ஒண்ணு வளக்கனும். யாகம் முடிஞ்சதும் பலி கொடுக்கனும் அவ்வளாவுதாங்க" என்றான்.
"வண்டிய எடுத்துக்கோங்க திர்ணாமல வேணும்னாலும் போய் எல்லாத்தையும் வாங்கிட்டு வந்துருங்க. பலிக்கு எத்தன கெடா வேணும்?"

"வருணனுக்கு ஒண்ணு, வாயுக்கு ஒண்ணு பூஜாரிக்கு ஒண்ணு ஆக மூணுங்க."

" சரி,   பண்ணிடலாம். "

மாரிமுத்து என குரல் கொடுத்தார். ஓட்டுனர் முன்னாடி வந்தார்.

"இப்பவே கெளம்பிடுங்க இருட்டறதுக்கு முன்னாடி வந்துடுங்க.ரோடுடாலாம்  ஒரே வெள்ளக்காடா இருக்கும். பாத்துப் போய்ட்டு வாங்க" என்றார்.

சாமிநாதனுக்கு மகிழ்ச்சி கரைபுரண்டது உடலில் ஒரு தோரணை கூடியது.

வீட்ல பூஜ அற எங்கைங்க என பெண்கள் இருந்த திசைக்காய் பார்த்துக் கேட்டான். ஒடிசலாய் சிவப்புப் பெண்ணொருத்தி வாங்க என அவனை உள்ளே அழைத்துச் சென்றாள். சாமிநாதன் முதன் முறையாய் அப்படி ஒரு வீட்டிற்குள் நுழைகிறான். மிகப் பெரிய கூடம். எங்கு பார்த்தாலும் தேக்கு மரச் சாமான்கள். நடுநாயகமாய் மரக்கதவு வைத்த பெரிய சாலிடர் டிவி. கூடத்தைக் கடந்ததும் வலது புறம் மணிக்கதவு வைத்த பூஜை அறை. சாமிநாதன் தோளிலிருந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டினான். இரண்டு பெரிய குத்து விளக்குகளை ஏற்றினான். மகமாயி மாரியாத்தா காளியாத்தா என சத்தமாய் முனகியபடியே விழுந்து வணங்கினான். உடன் வந்த ஒடிசல் பெண் கலக்கமாய் கன்னத்தில் போட்டுக் கொண்டாள். எழுந்தவன். அம்மா ஒரு வாய் காபி கிடைக்குமா என்றான். இதோ சாமி என அவள் சமையலறைக்காய் ஓடினாள்.

சாமிக்கு அந்த உடல் மொழி புரிந்தது. மிதப்பாய் அந்த அறையை ஒரு நோட்டம் விட்டு வெளியே வந்தான். வண்டி ரெடியா என குரல் கொடுத்தான். காபி டம்பளர் முன் நீண்டது. அவன் வாழ்நாளில் அப்படி ஒரு காப்பியை முதன் முறையாய் குடித்தான். நல்லதும்மா என அந்தப் பெண்ணை வணங்கி வெளியே வந்தான். வெள்ளை அம்பாசிடர் தயாராக இருந்தது. பின் சீட்டில் ஏறி அமர்ந்து போலாம்பா என்றான். மழை தொடங்கியது. வண்டி மழையைக் கிழித்துக் கொண்டு சாலையில் விரைந்தது. குண்டும் குழியுமான அச்சாலையில் நிமிடத்திற்கொருமுறை சாமி இருக்கையிலிருந்து அரையடி எம்பி மீண்டும் விழுந்தான். ஒவ்வொருமுறைக்கும் பாத்துப்பா பாத்துப்பா என்றான்.

சங்கராபுரம் முழுக்கவே அடைந்து கிடந்தது. ஒரு கடை கூட இல்லை. ஒரு ஒயின் ஷாப் மட்டும் திறந்திருந்தது. சாமி அங்கு நிறுத்தச் சொன்னான்.

"மாரிமுத்து சாமிக்கு படையல்ல சாராயமும் இருக்கனும் நம்ம நல்ல சீமச்சாராயம் வச்சிட்டா ஒடனே மனங்குளுந்துரும், போய் வாங்கியாரேன்" எனச் சொல்லிவிட்டு இறங்கிக் கொண்டான். காரில் வந்து இறங்கியவனுக்கு கிடைத்த மரியாதை பலமாக இருந்தது. சாமி உள்ளே போய் அமர்ந்தான். பீர் என்பதைத் தவிர அவனுக்கு வேறு பெயர் எதுவும் தெரியாது. கடை முதலாளியே அருகில் வந்தார். உங்கள பாத்ததில்லையே என தலை சொறிந்தார்.

"நமக்கு வெளியூரு. என்ன இருக்கு? என்றான்
" இங்க என்னங்க பீரும் பிராந்தியும்தான் மிராசுங்களுக்காக ஸ்காட்ச் வச்சிருப்பங்க அத தர்ட்டுங்களா" என்றார்.

"ம்ம் எடுங்க கூட ரெண்டு மூணு பார்சலும் பண்ணிடுங்க என்றதும் கடை ஓனர் மிரண்டார்.

ஓடிப்போய் ஒரு வாட் 69 எடுத்து வந்து உடைத்து க்ளாசில் ஊற்றினார். சாமிக்கு இப்போதும் உள்ளூர நடுக்க மிருந்தது. அவன் கையில் ஒன்றுமில்லை எல்லாமும் ஓட்டுனரிடம்தான் இருந்தது. மடக்கென க்ளாசில் இருந்ததை எடுத்துக் குடித்தான். தொண்டையில் ஆரம்பித்து அடிவயிறு வரை எல்லாமும் எரிந்தது. சமாளித்துக் கொண்டான். கடை ஓனர் சோடா சேக்கிறதில்லைங்கிலா என்றார். சாமி மையமாய் சிரித்தான். சோடா சேக்கனும் மனதில் குறித்துக் கொண்டான். சரி சோடா சொல்லுங்க என்று அடுத்த ரவுண்டை அவனே ஊற்றினான். இரண்டாவது ரவுண்ட் உள்ளே போனதும் சாமிக்கு உச்சத்தில் போய் அமர்ந்து கொண்டது. தலையை உதறிக்கொண்டான். சிகரெட் என்றான். உடனே வந்தது. ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தான். சகலமும் சுழன்று நின்றது. மிதந்தான். ஆனாலும் வந்த வேலையை மறந்து விடக் கூடாது. இதுதான் ஆரம்பம். முதலிலேயே கோணக்கூடாது. அவனுடைய சகல நரம்பும் விழிப்படைந்தது. டரைவரைக் கூப்டுங்க என குழறலைக் கட்டுப்படுத்திக் கொண்டு சொன்னான்.

மாரிமுத்து வந்து நின்றான்.

"தம்பி இதுக்கு காசு கொடுத்திரு, ஐயா கொடுக்கரத வாங்கி வண்டில வை. சாமிக்கு வைக்கறது நல்லாருக்கனும். அதான் அடிச்சி பாத்தேன். நீ வாங்கிடு "

என தள்ளாட்டத்தை வெளிக்காட்டிக்கொள்ளாது கடையில் இருந்து இறங்கிப் போனான். ஓட்டுனர் கடை முதலாளியிடம் புட்டிகளை வாங்கிக் கொண்டு வந்தான். போலாங்களா என்றதற்கு பின் சீட்டில் சரிந்திருந்த சாமி சரியென்றான். போகப்போக மழை குறைந்திருந்தது. சாமிக்கு போதையும் தெளிந்திருந்தது. ஏனோ அவனுக்கு மூங்கில் துறைப் பட்டு போகும் எண்ணம் உதித்தது. இயன்றால் தன்னை விரட்டிய அந்த சாமியையும் பார்த்து வர வேண்டும்.

மாரிமுத்துவிடம், மாரி மூங்கில் தொர பட்டுக்கு வண்டிய விடு. அங்கதான் எல்லாமும் சரியா கெடக்கும் என்றான். மாரி வண்டியைத் திருப்பினான். மூங்கில் துறைப் பட்டு பஸ் ஸ்டாண்டில் பழங்களை வாங்கிக் கொண்டான். பஜாரில் செட்டியார் கடையில் பூஜைப் பொருட்களை வாங்கினான். இனி ஏரிக்கரைக்குப் போக வேண்டும். ஆனால் கார் போகாது. சாமி காரை வயல் எல்லை வரை கொண்டு போய் நிறுத்தச் சொன்னான். மழை ஆரம்பித்திருந்தது. போதை சுத்தமாய் இறங்கி அவன் வன்மம் மெல்ல மேலெழ ஆரம்பித்திருந்தது. மாரிமுத்துவை காத்திருக்கச் சொல்லிவிட்டு வரப்பில் தெளிவாய்  நடந்து போனான். சாமியாரின் குடிசைக் கதவு சாத்தியிருந்தது. மழை மொத்த பகுதியையும் நாசமாக்கி விட்டிருந்தது. குடிசையின் கூரைக் கீற்றுக்கள் சிதறிக் கிடந்தன. கூரை திறந்திருந்தது. சாமி படலைத் திறந்து கொண்டு உள்ளே போனான். தரையில் முட்டி அளவிற்கு தண்ணீர் நின்றிருந்தது. சாமியார் இல்லை. அவன் மூளை பரபரப்பானது. அவரின் பெட்டியைத் தேடினான். அந்த ட்றங்குப் பெட்டி ஒரு மூலையில் தண்ணீரில் மூழ்கி இருந்தது. ஓடிப்போய் எடுத்துக் கொண்டான். அவ்வளவு கனமில்லை. மிகுந்த உற்சாகத்தோடு அதைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தான். வரப்பில் நடந்து காரிடம் சென்றான். மாரிமுத்து ஓடிவந்து அதை வாங்கிக் கொண்டான். வண்டியின் டிக்கியைத் திரந்து அதில் வைத்தான். சாமிக்கு வானமே வசப்பட்டதைப் போலிருந்தது. மாரி அந்த பாட்டில்ல ஒண்ண தொற என்றான். மாரி தயங்கினான்.

"மாரி இப்ப உள்ள வச்சியே அத என்னன்னு  நினைச்ச? பொக்கிஷம். அத்தனையும் பொக்கிஷம். உன்ன ஒரே நாள்ள கோடீஸ்வரனாக்கவா?" அதெல்லாமும் அதுல இருக்கு"

மாரி மிரண்டான். ஏற்கனவே திறந்திருந்த பாட்டிலை சாமியிடம் நீட்டினான். சாமி அதைப்பிடுங்கி மடக் மடக் எஎனக் குடித்தான். பின் ஆழமாய் மூச்சை இழுத்து  அந்த சிகெரெட்டை எடு என்றான்.


Wednesday, June 21, 2017

மஞ்சள் இரைச்சலைக் கேட்க விரும்பாத உறக்கம்


உலக வரலாற்றில் நிகழ்ந்த மிகப் பெரும் துயரங்களில் ஆஸ்விட் வதை முகாங்களுக்கு முக்கிய இடமுண்டு. ஜெர்மனியின் பிடியிலிருந்த போலந்தில் நாஜிக்களால் உருவாக்கப்பட்ட ஆஸ்விட் வதை முகாம்களில் யூத இன மக்கள் கும்பல் கும்பலாக கொன்றொழிக்கப்பட்டனர். குழந்தைகள், பெண்கள், ஆண்களென கிட்டத்தட்ட இருபது இலட்சம் பேர் இந்த வதைமுகாம்களில் விஷ வாயு மூலமாய் கொல்லப்பட்டனர். இந்த குரூரத்திலிருந்து தப்பிப் பிழைத்தவர்களின் வாழ்வு, மரணத்தை விடக் கொடியதாக இருந்தது. இவ்வளவு பெரிய இனப்படுகொலையை நேரில் பார்த்து உயிர் பிழைத்த மக்கள் அந்நினைவு தந்த துக்கத்தைத் தாளமுடியாது தற்கொலை செய்து கொண்டனர்.  தங்களின் பிள்ளைகளை, குடும்ப உறவுகளை பலியிட்டுவிட்டு தான் மட்டும் வாழ்வதின் அபத்தத்தைத் தாளமுடியாது பைத்தியமாயினர்.

உலகப் படைப்பாளிகள் இந்த குரூரத்தை மிக ஆழமாகப் பதிவு செய்தனர்.  எண்ணற்ற படைப்புகள் கவிதைகளாக, நாவல்களாக, திரைப்படங்களாக, ஆவணப்படங்களாக இன்றளவும் வந்து கொண்டிருக்கின்றன. இச் சம்பவங்களை ஒட்டி வெளியாகிய திரைப்படங்களைத் தொகுப்பாக ஹாலோகாஸ்ட் படங்கள் என்கிறார்கள். சோஃபிஸ் சாய்ஸ் இவ்வகையில் மிக முக்கியமான நாவல் மற்றும் திரைப்படம்.

ஆஸ்விட்ஸ் வதை முகாமில் தன் தகப்பன், கணவன், குழந்தைகளைப் பறிகொடுத்துவிட்டு உயிர் தப்பும் போலிஷ் பெண்ணாக மெரில் ஸ்ட்ரீப் நடித்திருக்கிறார். அவரது நெடிய சினிமாப் பயணத்தில் இந்தக் கதாபாத்திரம் மிக முக்கியமானது. ஏராளமான விருதுகளை இதன் மூலம் பெற்றார்.1979 இல் வில்லியம் ஸ்டைரனால் எழுதப்பட்ட இந்நாவல் 1982 இல் திரைப்படமானது. நாவலைப் போலவே திரைப்படமும் மிகப் பரவலான கவனத்தைப் பெற்றது.

சோஃபிக்கும் நேதனுக்குமான காதல் காட்சிகள் மிகப் பரவசமானவை.  அதிகபட்ச அன்பும் அதே அதிகபட்ச சந்தேகமும் கொண்ட காதலனாக நேதன். அவன் அன்பில் திக்குமுக்காடும் சோஃபி, அவன் பைத்தியத் தன்மையும் சேர்த்து ஆழமாய் நேசிக்கிறாள். ஸ்டிங்கோ போன்ற ஒழுங்கான ஒருவனின் அன்பின் மேல் அவளுக்கு அத்தனை ஈடுபாடு இல்லாமல் போய்விடுகிறது.

வாழ்வில் இதற்கு மேல் எதிர்கொள்ள குரூரங்கள் ஒன்றுமே இல்லை எனும் அளவிற்கான துன்பங்களை அனுபவித்த சோஃபியை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சாந்தப் படுத்தும் நேதன் கூடவே அவன் பைத்திய இயல்புகளையும் அவள் மேல் திணிக்கிறான்.
படத் தலைப்பான சோஃபியினுடைய தேர்வு நேதனா, ஸ்டிங்கோவா என நாம் யோசித்துக் கொண்டிருக்கும்போது, அசலான சோபியின் தேர்வு என்கிற தலைப்பிற்கான காரணம் இறுதியில் வெளிப்படுகிறது. அது நம்மை நடுநடுங்க வைக்கிறது.

 ஸ்டிங்கோ எழுதிக் கொண்டிருக்கும் நாவலைப் பிடுங்கி வாசித்து விடும் நேதன் அன்று இரவு அவனையும் சோபியையும் ப்ரூக்லின் பாலத்திற்கு அழைத்துப் போகிறான். நள்ளிரவில் அப்பாலத்தின் தூணின் மீதேறி நின்று மதுவருந்தும் காட்சியைப் பார்க்க அவ்வளவு பரவசமாக இருந்தது. தானொரு உயிரியில் விஞ்ஞானி என்றும் தன் புதிய மருந்து கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசை வழங்கப்போகிறார்கள் என்றுமாய் பரிசுகளோடு சோஃபியையும் ஸ்டிங்கோவையும் பார்க்க வரும் நேதன் பரவசத்தின் உச்சத்திலிருப்பான். நண்பனையும் காதலியையும் அணைத்தபடியே குடித்துக் கொண்டாடும் காட்சிகளில் நேதனின் இயல்பு அத்தனை உயிர்ப்பாகக் காட்சிப் படுத்தப்பட்டிருக்கும்.

எமிலி டிக்கன்சனின் மிகப் புகழ் பெற்ற கவிதையான  Ample make this bed ஐ   சூரிய உதயத்தின் மஞ்சள் இரைச்சலைக் கேட்க விரும்பாத நேதன் மற்றும் சோஃபியின் முன்பு ஸ்டி ங்கோ வாசிப்பதோடு திரை உறைகிறது. படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இசைத் துணுக்குகளைக் கேட்கக் கேட்க காலமும் உறைகிறது.

கான்சண்ட்ரேஷன் காம்ப் படங்களை அத்தனை எளிதாய் என்னால் பார்த்துவிடமுடியாது. சமீபமாய் வந்த  Son of Saul உட்பட பல படங்களை பாதியில் நிறுத்தியிருக்கிறேன். சொல்லப் போனால் சோபிஸ் சாய்ஸ் வதை முகாம்களைப் பற்றிய படம் என எனக்குத் தெரியாது.  முக்கியமான படம் என்கிற வகைமையில் வெகு நாட்களாய் கிடப்பில் கிடந்ததைப்  பார்க்க ஆரம்பித்து இடையில் அயர்ந்து நிறுத்தப் போய்,  முடியாமல் பார்த்தேன். ஆனால் இந்த வரலாற்றுத் துயரங்களை நாம் அறிந்து கொள்ளத்தான் வேண்டும். மனிதன் எத்தனைப் பயங்கரமானவன் என்பதை உணரவாவது இந்த ஹாலோகோஸ்ட் படங்களைப் பார்த்தாக வேண்டும். இவ் வகைமையில் நான் பார்த்த சில படங்களின் பட்டியலைத் தருகிறேன்.

01. 2013 Ida
02. 2009 Inglourious Basterds
03. 2008  The Reader
04. 2002  The Pianist
05. 1993 Schindler's List
06. 1990 Korczak
07. 1974 The Night Porter
08. 1959 The Diary of Anne Frank
09. 1999 Gloomy Sunday
10. 2007 The Counterfeiters
11. 2008 The Boy in the Striped Pajamas

இவை ஓரளவிற்கு அமர்ந்து பார்க்கும் அளவிற்கான குரூரங்களைக் கொண்டவை. இப்பட்டியலில் இருக்கும் நைட் போர்டர் மற்றும் ஆன்ரேஜ் வாஜ்டா இயக்கிய கோர்சாக் போன்றவை மிக நேரடியாகக் குரூரத்தைப் பேசும் படங்கள். மன திடத்தோடு பார்த்துவிடுங்கள். மேலும் ஹிட்லரின் கடைசி நாட்களைப் பேசும் படமான 2004 இல் வெளிவந்த Downfall ம்  மிக முக்கியமான திரைப்படம்.  

Thursday, June 15, 2017

இருளில் மறைந்திருக்கும் யானை

பேரண்ட் மீட்டிங் என்றாலே ஒரு அசெளகரிய மனநிலை வந்துவிடும். இரண்டு பயல்களைப் பெற்றவர்கள் இதை உணர்ந்திருப்பார்கள். இருவருக்கும் ஒரே நாளில் என்றால் பெரியவனை மனைவியிடம் தள்ளிவிட்டு சின்னவனோடு நான் ஒட்டிக் கொள்வேன். இருவருமே படிப்பில் சூரப்புலிகள்தாம் என்றாலும் பெரியவன் மற்ற விஷயங்களிலும் புலி. சின்னவன் காமெடி பீஸ் என்பதால் அவனைக் குறித்த புகார்கள் எதுவும் இருக்காது. அகில் ”சூப்பர்” என ஒரே வார்த்தையில் முடித்துக் கொள்வார்கள். பெரியவனுக்கு லெக்சர்கள் நீளும். இருக்கையில் உட்கா
ர்வதில்லை. ஒரே அடிதடி கலாட்டா என புகார் வாசிப்பார்கள். அவனை உருட்டி மிரட்டி பார்த்தபடியே இனி தொடராமல் பார்த்துக் கொள்கிறோம் என வீடு வருவோம். நான் பள்ளி நாட்களில் அநியாயத்திற்குப் பழமாய் இருந்தேன். முதல் வரிசை. முதல் ரேங்க். நல்லவனோ நல்லவன். ஒரே ஒரு சிறு கீறல் கூட என நடத்தையிலோ படிப்பிலோ இல்லை. நம் மீது இன்னொருவரின் கம்ப்ளைண்ட் என்பது இந்த வயதிலும் சற்றுப் பதட்டமாகத்தான் இருக்கிறது.  என் அப்பாவை பள்ளியில் சேர்க்க, டிசி வாங்க என இரண்டு முறைதாம் தொந்தரவு செய்திருக்கிறேன். இவர்களோ ஓட விடுகிறார்கள் என புலம்பித் தள்ளுவேன்.

டீச்சர்கள் வாசிக்கும் புகார்கள் உருவாக முதல் காரணம் அவர்கள் பிள்ளைகளுக்கு செவி கொடுக்காமல் இருப்பதுதான். குழந்தைகளுக்கும் ஒரு தரப்பு இருக்கிறது என்பதை உணராமல் அவர்களைப் பொதுவான தண்டனைக்கு உட்படுத்துவதுதான் நாளையடைவில் அவர்களை வன்முறையாளர்களாக மாற்றுகிறது. உடன் படிக்கும் சக மாணவர்களோடு உருவாகும் முரணை ஒரு ஆசிரியர் சரியாகக் கையாண்டால் பெரும்பாலான பிரச்சினைகள் முளையிலேயே கிள்ளி எறியப்படும். இந்தப் பொறுப்பற்ற சோம்பேறி ஆசிரியர்களாலும் மிக மோசமான புறச் சூழலாலும் சரியான கவனிப்பின்றி வளரும் பிள்ளைகள், மிக இளம் வயதிலேயே குரூரமான வன்முறையாளர்களாக மாறுகிறார்கள். அப்படிப்பட்ட இரண்டு மாணவர்களையும் அவர்களின் குரூரத்தையும் 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த எலிபெண்ட் திரைப்படம் நம் முன் வைக்கிறது.

இயக்குனர் கஸ் வான் சாண்ட் உண்மைச் சம்பவங்களைத் திரைப்படமாக்குவதில் வல்லவர். நிதானமான திரைமொழியைக் கையாள்பவர். எலிபெண்ட் திரைப்படம் குறித்து எதுவும் தெரியாமல் பார்ப்போருக்கு முதல் நாற்பது நிமிடங்கள் மிக அலுப்பாக இருக்கக் கூடும்.  1999 இல் கொலம்பியாவில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை இது.  இரு மாணவர்கள் தங்களின் பள்ளிக்கூடத்தில் ஈடுபட்ட வன்முறை வெறியாட்டத்தை அப்படியே பதிவு செய்திருக்கும் படம். திரை மொழியாக இப்படம் ஒரு பள்ளிக்கூடத்தின் வெவ்வேறு மாணவர்களின் பின்னால்  தொடர்ந்து செல்கிறது. மிக நீளமான அந்த வராண்டாவை, பள்ளி வளாகத்தை, விளையாட்டுத் திடலை, காண்டீனை, லைப்ரரியை, லேப்பை கேமரா மிக நிதானமாகப் பதிவு செய்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் இன்னொரு கதாபாத்திரத்தைக் கடக்கும் காட்சிகள் திரும்பவும் வருகின்றன. அதாவது ஒரே சம்பவம் வெவ்வேறு பார்வையில் பதிவாகிறது. இந்தப் படத்திற்கு ஏன் எலிபெண்ட் எனப் பெயர் வைத்திருக்கிறார்கள் என்கிற கேள்விக்கான பதிலை இந்தக் காட்சி அமைப்பில் வைத்திருக்கிறார்.

இருளில் மறைந்திருக்கும் யானையைத் தடவிப் பார்த்து புரிந்து கொள்ள முடிகிற அபத்தத்தைப் போன்றது  இம்மாணவர்களின் செயல்பாட்டை மட்டும் வைத்துக் கொண்டு தீர்ப்பெழுதிவிடுவது
என்கிற இயக்குனரின் நிலைப்பாடு காட்சி மொழியாகவும் தலைப்பாகவும் வெளிப்பட்டிருக்கிறது. மினிமலிசம் இந்தக் கறாரான அரசியல் நம்மை வந்தடைய உதவுகிறது.

மேற்பார்வைக்கு ஒரு நாளில் பள்ளியில் நடக்கும் சம்பவங்களை மட்டுமே இத்திரைப்படம் பதிவு செய்திருப்பதாகத் தோன்றும். ஆனால் மிக ஆழமாக இம்மாணவர்களுக்கு செவி கொடுங்கள். அவர்களின் தரப்பைக் கேளுங்கள். நெருக்கடிக்குத் தள்ளாதீர்கள். எனப் பள்ளியையும் நம்மையும் இந்தத் திரைப்படம் ஸ்தூலமாகக் கோருகிறது. படம் முடிகையில் எழும் அழுத்தமும் உணர்வெழுச்சியும்  கஸ் வான் சாண்ட் கையாண்ட மினிமலிசத் திரைமொழியின் வெற்றியாகக் கருதலாம்.

படத்தின் துவக்கத்தில் குடிபோதையில் வண்டி ஓட்டி வரும் தகப்பனிடமிருந்து வண்டியை வாங்கி ஜான்  தன் பள்ளிக்கு  வருகிறான். தகப்பனை முன் சீட்டில் உட்கார வைத்துவிட்டு தன் சகோதரனை போனில் அழைத்து அவரை மீண்டும் வீட்டில் விடச் சொல்கிறான். இந்த நெருக்கடியில் பள்ளியின் முதல்வர் வேறு இவன் தாமதமாக வந்ததற்காகக் கடிந்து கொள்கிறார். தன்னுடைய அலுவலகத்திற்கு வரச் சொல்லி அறிவுறுத்துகிறார். இன்னொரு மாணவன் மாலை சந்திப்பிற்கு தன்னால் வரமுடியாது எனவும் தன் தாயும் தந்தையும் மிகக் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்கள் எனவுமாய் சொல்லிக் கொண்டு போகிறான்.

படுகொலையை நிகழ்த்தும் அலெக்ஸ்அறிவியல் லேப் பில் மற்ற மாணவர்கள் பாடத்தைக் கவனிக்கும்போது அவன் மட்டும் தனியாக அமர்ந்து படம் வரைகிறான். அவன் மீது ஒரு மாணவன் நுரைக்கும் ஸ்பிட் பாலை எறிகிறான். மிஷல் எனும் இன்னொரு பெண் சக மாணவிகளால் கிண்டலடிக்கப்படுகிறாள். இப்படி சிதறலாய் மாணவர்களின் பல்வேறு நெருக்கடிகள் சிறு சிறு சம்பவங்களாக உரையாடலாக சொல்லப்படுகின்றன.

அலெக்ஸ் மிகப் பிரமாதமாக பியானோ வாசிக்கிறான். படுகொலைக்கு மிகத் துல்லியமாக திட்டம் தீட்டுகிறான். இணையத்தில் துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை வாங்குகிறான். சக தோழனான எரிக்கிடம் கொலைகளுக்கு முன்பு ஹாவ் ஃபன் என்கிறான். கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளிவிட்டு கடைசியில் எரிக்கையும் சுடுகிறான்.

எரிக் பள்ளி முதல்வரிடம் துப்பாக்கி முனையில் பேசும் காட்சி மட்டுமே அவர்களின் அழுத்தத்தை வெளிப்படையாகச் சொல்கிறது. உன்னை உயிரோடு விடுகிறேன் எனவே நீ இனி வரும் மாணவர்களுக்கு செவி கொடுப்பாய் எனச் சொல்லி அவரை விட்டுவிடுகிறான். பின்பு மனம் மாறி சுடுகிறான்.

நல்லவேளையாக இந்தத் திரைப்படத்தை நுணுக்கம் தெரிந்த இயக்குனர் எடுத்திருக்கிறார். வேறு யாரிடமாவது இக்கதை சிக்கியிருந்தால் இரத்தத்தைத் தெறிக்கவிட்டு மற்றவர்களுக்கான ஒரு ஊக்கமான படமாய் மாற்றியிருப்பார்கள். கஸ் வான் சாண்ட் எடுத்துக் கொண்ட களத்தை மிகச் சரியாய் கையாண்டிருக்கிறார்.

எலிபெண்ட் திரைப்படம் கானில் தங்கப் பனை விருதை வென்றது.

Wednesday, June 14, 2017

குரங்குப் புத்தியும் பிழைகளற்ற நிகழும்


இரண்டு வாரங்களாக ஓஷோவின் சொற்பொழிவைக்  கேட்டுக் கொண்டிருக்கிறேன்.  நோன்புக் காலம் என்பதால் அலுவலக நேரம் மிகக் குறைவு. அலுவலகத்தில் ஐந்து மணி நேரமென்றால் அதற்குச் சரிபாதி காரில் இரண்டரை மணி நேரம். ஓஷோவைத் துணைக்கு அழைத்துக் கொண்டதால் இந்த அலுப்பு சுத்தமாய் தெரியவில்லை. வழக்கத்திற்கு மாறான உற்சாகத்துடன் பயண நேரத்தைக் கடந்து விட முடிகிறது. 1984 ஆம் வருடம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அமெரிக்காவில் ஓஷோ நிகழ்த்திய உரைகள்  From Unconciousness to Consciousness என்கிற தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கிறது.  முப்பது மணி நேரத்திற்கு மேல் நீளும் பேச்சு. ஒரு நொடி கூடத் தொய்வடைய வைக்காத பேச்சு. வெடிச்சிரிப்பும் கும்மாளமுமாய் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

மதங்கள், வழிபாட்டு முறைகள்,  தேவதூதர்கள், மெசையாக்கள், தீர்த்தங்கரர்கள், புத்த பிட்சுகள், சங்கராச்சாரியார்கள், போப்புகள், என ஒருவரையும் விடாமல் காய்ச்சி எடுக்கிறார். மிக ஆணித்தரமான வாதங்களை இவற்றிற்கு மற்றும் இவர்களுக்கு எதிராக முன் வைக்கிறார். கேட்க கேட்க புதுப் புது கதவுகள் திறக்கின்றன. காந்தியின் எளிமை குறித்தும் உணவு குறித்தும் ஓஷோ கிண்டலாய் விமர்சிக்கும்போது எழும் சிரிப்பு அடங்க வெகு நேரமாகிறது. ஆனால் இந்த அத்தனை தர்க்கங்களையும் உள்வாங்கிக் கொள்வதோடு நிறுத்திக் கொள்கிறேன். அவரே சொல்வது போல் அவரைப் பின் தொடர்பவர்களென யாரும் இருக்க கூடாது. சுயத்தை மீட்டெடுக்க வைப்பதே இத்தனைப் பேச்சுக்களின் நோக்கம். அந்த நோக்கத்தை நான் சரியாகப் புரிந்து கொண்டதாய் நினைக்கிறேன்.

குரங்கின் வழி வந்ததால் மனிதன் இயல்பாகவே குரங்கின் தோற்றத்தோடு அதன் சுபாவத்தையும் ஒத்திருக்கிறான்.  குரங்கால் ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க முடியாததைப் போலவே  நம் மனமும் புத்தியும் எண்ணங்களும் சதா அலைபாய்ந்து கொண்டே இருக்கின்றன. இரண்டாவது விஷயம் இன்னொருவரைப் போலச் செய்வது.  குரங்கிடமிருந்துதான்  இந்த இமிடேட் செய்யும் சுபாவமும் நமக்கு வந்திருக்கிறது. நாம் எப்போதுமே பிறரைப் போல வாழ்கிறோம் அல்லது மற்றவர்களைப் போலாக மெனக்கெடுகிறோம். மற்றதைப் பார்த்து ஏங்கியே செத்தும் போகிறோம். தனித்தன்மை என்பது குறித்து யோசிக்கக் கூட மறுக்கிறோம். இந்தக் குரங்குப் புத்தியிலிருந்து வெளிவந்து விட்டாலே நிறைய துன்பங்களைத் தவிர்க்க முடியும் எனத் தோன்றுகிறது. 

பயல்களிடம் ஓஷோ சொன்ன குரங்கு குல்லாய் கதையை சொன்னேன். இந்த இரண்டு அடிப்படை புத்திகளை மட்டும் சிறு வயதிலேயே களைந்து விட்டால் போதும். பெரும்பாலான பிரச்சினைகளைத் தாண்டி வந்து விடலாம்.

மதம் என்கிற பெயரில் சித்தாந்தம் என்கிற பெயரில் சொர்கத்தில் சிறப்பான வாழ்வு என்ற பெயரில் மனிதன் தன்னை வதைத்துக் கொள்வதை ஓஷோ மிகக் கடுமையாய் சாடுகிறார். எளிமை மிகப் போலித்தனமானது என்கிறார். எளிமை மீது எனக்கும் பெரிய மதிப்பில்லை. பெரும்பாலான எளியர்கள் அதை தங்களின் வலிமைக்கான, அதிகாரத்தைச் சென்றடைவதற்கான கருவியாகத்தான் பயன்படுத்துகிறார்கள் என்பது தமிழ் சூழலில் கண்கூடு. காந்தியின் எளிமை இன்றளவும் வியந்தோந்தப்படுகிறது. ஆனால் ஓஷோ அதை தரைமட்டமாக்குகிறார்.  காந்தி வறுமையை மக்களிடம் புகுத்தினார் என்கிறார். தன்னை வருத்திக் கொள்பவன் மாசோகிஸ்ட். பிறரை வருத்துபவன் சாடிஸ்ட். மிக அபூர்வமானவர்களே ஒரே நேரத்தில் சாடிஸ்டாகவும் மாசோகிஸ்டாகவும் இருக்கின்றனர். காந்தி அத்தகைய மாசோ சாடிஸ்ட் என வறுத்தெடுக்கிறார். காந்தி ஆசிரமத்தில் வழங்கப்படும் வேப்பிலைச் சட்னியையும், கொசுக் கடிக்காமல் இருக்க மண்ணென்ணையை உடம்பில் பூசிக் கொள்வதையும் காந்தியின் மாசோகிஸ சாடிசங்களுக்கான உதாரணங்களாகச் சொல்கிறார். ஒரு அமெரிக்கர் காந்தி ஆசிரமம் வந்து வேப்பிலைச் சட்னியை சாப்பிடும் அனுபவத்தை விவரிக்கும் போது சிரிப்பை அடக்கமுடிவதில்லை.


ஒரேகனில் இருக்கும் ரஜனீஷ்புர ஆசிரமம் ஏன் இவ்வளவு ஆடம்பரமாக இருக்கிறது என்பதற்கு, ”மன்னித்துக் கொள்ளுங்கள் இப்போதைக்கு இவ்வளவு வசதிதான் முடிந்தது விரைவில் இன்னும் வசதியாக இந்த ஆசிரமத்தை மாற்றுகிறோம்” எனப் பதில் சொல்கிறார். 

சுயவதை போலித்தனமானது. மதம், கடவுள், ஆன்மீகம், ஒழுக்கம், கர்மா எனப் பல்வேறு பெயர்களில் அதை இன்னொருவரின் மீது செலுத்துவது என்பது குரூரமானது. மேலும் ஓஷோ தன்னிடம் வருபவர்களிடம் இப்படி இருக்கச் சொல்கிறார். அவரது வார்த்தைகளில்,

I teach you to live tremendously, ecstatically, in every possible way. On the physical level, on the mental level, on the spiritual level, live to the uttermost of your possibility. Squeeze from each single moment all the pleasures, all the happinesses possible, so that you don't repent later on that, "that moment passed and I missed."

நிஜமாகவே இப்படி வாழத்தான் எனக்குப் பிடித்திருக்கிறது. ”நினைவின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் பிழைகளின் அவமானம் ” என்ற சுராவின் வரியை இலக்கியவாதிகளான நாம் நினைவில் வைத்திருப்போம். பிழையற்ற அவமானமற்ற நினைவுகளிற்கு, நிகழை முழுமையாய் வாழ்வதுதான் சரியான வழிமுறையாக இருக்கும். நானும் அதை நோக்கி நகர்வதாத்தான் தோன்றுகிறது.



Thursday, June 1, 2017

பார்போஸோ வின் குரங்கு


Pirates of the Caribbean திரைப்பட வரிசையை நான் பார்த்ததில்லை. இப்போது வெளிவந்திருக்கும் அதன் ஐந்தாம் பாகம் குறித்து நண்பர்கள் இணையத்தில் பேசிக் கொண்டதை வாசித்ததும் பார்க்கத் தோன்றியது. முதலில் இருந்து ஆரம்பிக்க எண்ணி  இவ்வரிசையின் முதல் படமான The Curse of the Black Pearl ஐ நேற்றுப் பார்த்தேன். அரை மணி நேரம் கடந்தும் படத்தோடு ஒன்ற முடியவில்லை. இடையில்  நிறுத்திவிடலாமா என்றும் கூட தோன்றியது. எதையும் உடனே முடிவெடுத்துவிடக் கூடாது, ஒன்றுமில்லாமலா ஐந்து பாகம் வரை வந்திருக்கும் என என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு தொடர்ந்து பார்த்தேன். ஒரு மணி நேரம் கடந்தும் ஒரு விஷயம் கூட உள்ளே போகவில்லை. கடனே  என்று பார்த்து முடித்தேன். எந்த ஆழமான பின்புலக் கதையுமில்லாமல், வியப்பூட்டும் கற்பனையுமில்லாமல் எப்படி இந்தப் படம் தொடர்ந்து எடுக்கப்படுகிறது என்பது விளங்கவில்லை. ஒருவேளை கேம் ஆஃப் த்ரோன் தந்த மயக்கத்தில் இருந்து நான் இன்னும் விடுபடாததால் இந்த மேலோட்டமான ஃபேன்டஸி படங்கள் ஈர்க்கவில்லையோ என்னவோ. இத்தனைக்கும் கதாநாயகியான கெய்ராவைக் குறித்து இரண்டு நாட்கள் முன்னர்தான் வியந்து எழுதியிருந்தேன்.

கேப்டன் ஜாக் ஸ்பேரோ ஓர் அதிநாயகன் கிடையாது. கோமாளித்தனமான சாகஸங்களும், அங்கும் இங்குமாய் தாவுவதும் நாயக பிம்பத்தைக் கட்டமைக்கவில்லை. டர்னரிடம் கொஞ்சம் வீரம் இருப்பதுபோல் தோன்றினாலும் இருவருமே எதையும் சாதிப்பதில்லை. பின்புலக் கதையோ அரதப் பழசு. மொத்த குழுவினரும் மறை கழண்ட கேசுகளைப் போன்ற தோற்றம் எழுந்தது. ஒருவேளை இந்தக் கேணைத்தனம்தான் இத்தொடரின் சிறப்போ என்னவோ. நாயகி மட்டும் கொஞ்சம் தமிழ்த்தனத்தோடு வில்லன்களிடம் இருந்து - அதுவும் சாகா ‘வரம்’ பெற்றவர்களிடமிருந்து - தன்னைக் காத்துக் கொள்ள பழக்கத்தியை எடுத்து மறைத்து வைத்துப் பயன்படுத்துகிறார். மனதிற்குள் அடேய் என்கிற குரல் எழுந்து அடங்குகிறது.

பைரேட்ஸ் களின் சாகஸ வாழ்வைக் குறித்துச் சொல்ல ஏராளம் இருக்கிறது. கடற்பேய்கள் இவ்வளவு பரிதாபமாகவா இருக்கும். நிச்சயமாக நான் ஃபேண்டஸி படங்களில் லாஜிக்கைத் தேடவில்லை. ஆனால் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஆன்மா அல்லது மெனக்கெடல் என்ற ஒன்று இருக்க வேண்டும்தானே, அது இதில் இல்லை.

ஜானி டெப் நடிப்பில் வெளிவந்த 'அரிஸோனா ட்ரீம்ஸ்' எனக்கு மிகப் பிடித்த படம். எமீர் கஸ்தூரிகா உருவாக்கிய ஆக்ஸல் என்கிற கதாபாத்திரத்திற்கு மிகச் சரியாகப் பொருந்தியிருப்பார். போலவே 'சார்லி அண்ட் சாக்லேட் ஃபேக்டரி' படத்தில் வரும் வில்லி வோன்கா கதாபாத்திரமும் எப்போதும் நினைவில் நிற்பவை. துரதிர்ஷ்டவசமாக ஜானி டெப் இந்த பைரேட்ஸ் வரிசைத் திரைப்படங்களில்தான் வெகுசன புகழடைந்திருக்கிறார். நடிகருக்கான அதிகபட்ச சம்பளமும் இத்திரைப்பட வரிசைக்காக அவர் பெற்றிருக்கிறார்.

மொத்த வரிசையையும் பார்க்காமல் இப்படி தீர்ப்பெழுதக் கூடாதுதான் என்றாலும் முதல் படத்தையே பார்க்க முடியவில்லையே நான் எப்படி மற்ற படங்களைப் பார்ப்பேன். மொத்த படத்திலும் என்னை ஈர்த்த விஷயம் பார்போஸோ வின் குரங்கு மட்டும்தான். அத்தனைக் கூட்டத்திலேயும் அக்குரங்கு மட்டும்தான் அவ்வளவு விழிப்பாக இருந்தது. டர்னாரால் நீரில் மூழ்கியும் கண்டுபிடிக்க முடியாத மெடலினை, குரங்கு அசால்டாக வாயில் கவ்விக் கொண்டு வந்து பார்போஸாவிடம் சேர்த்துவிடுகிறது. அபாரமான குரங்கு.

இந்த ஹாலிவுட் சாகஸ்ப் படங்களின் மீது எனக்கு எப்போதுமே விருப்பமிருந்தது கிடையாது. மனதளவில் பேணும் தூய இலக்கியத்தைப் போலவே சினிமாவையும் தூயதாகக்
கருதுபவன். அப்படியும் ஓரிரு படங்களைப் பார்த்து அதில் ஒன்ற முடியாமல் போய் இப்படிப் புலம்புவதுண்டு.  

Fast & Furious இன்னொரு ஒன்றமுடியாத டப்பா பட வரிசை. கருமம் இது எப்படி எட்டு பாகம் வருகிறது என வியந்து கொள்வதுண்டு. சிறுவர்களுக்கான திரைப்படமான cars வரிசைப் படங்கள் FF வரிசைத் திரைப்படங்களைக் காட்டிலும் பன் மடங்கு மேலானவை. மெக் குயின் எனப் பெயரிடப்பட்ட அந்தக் கார், ஓர் அபாரமான கதாபாத்திரமாகவே மாறியிருக்கும். இந்த திரைப்படங்களில் இருக்கும் புத்துணர்வும் விரிவான பார்வையும் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்படங்களில் இல்லை.

அடுத்தடுத்த பாகங்களாக எடுக்கப்படும் சிறுவர் திரைப்படங்கள் அனைத்துமே எனக்குப் பிடித்தமானவை. டாய் ஸ்டோரி வரிசையிலிருந்து ஹாரி பாட்டர் திரைப்பட வரிசை வரைக்குமாய் பலமுறை இத்திரைப்படங்களை சேர்ந்து பார்த்து குடும்பம் சகிதமாய் வியந்திருக்கிறோம்.
பெரியவர்களுக்கான சாகஸப் படங்கள் தான் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அதுவும் கேம் ஆஃப் த்ரோன் போல விரிவும் ஆழமான பின்னணியும் அபாரமான நுட்பமும் கொண்ட தொடரைப் பார்த்த பின்னர் சாகஸப் படங்களுக்கான எதிர்பார்ப்பின் எல்லை சற்று விரிவடைந்திருக்கிறது. 

என்னை ஏமாற்றாத சில தொடர் வரிசைப் படங்களில் மேட் மேக்ஸ் முக்கியமானது. இத்தொடரின் சமீபத்திய படமான Fury Road ஐப் பார்த்துப் பிடித்துபோய் அதன் முந்தைய படங்களை வரிசையாய் பார்த்து முடித்தேன். இத் தொடரின் தீவிரத் தன்மை எல்லாத் தரப்பையும் ஈர்க்கும் ஒன்று. ஜார்ஜ் மில்லர் புறவயமான காட்டுத்தனமான விஷயங்களை மட்டும் உருவாக்குவதில்லை, ஒவ்வொரு திரைப்படமும் ஒரு முக்கியமான அரசியலைப் பேசுவதால் இத் தொடர் வெகுசன விஷயங்களைத் தாண்டியும் கவனம் பெறுகிறது. சாகஸப் படங்களில் உள்ளீடாய் இருக்க வேண்டிய அம்சமும் அதுதான்.

Featured Post

test

 test