Sunday, May 28, 2017

அன்னா கரேனினாவும் அடல்டரியும்


ஸ்லீப் கதை தந்த உந்துதலால் அன்னா கரேனினா நாவலைத் தேடிப் பிடித்து வாசிக்க ஆரம்பித்தேன். இ-வாசிப்பில் இரண்டாயிரம் பக்கங்கள். முதல் ஐம்பது பக்கங்களைக் கடக்கவே சிரமப்பட வேண்டியதாகிற்று. மூடி வைத்துவிட்டு எப்போதும் பயன்படுத்தும் உத்தி யான திரைப்படத்தைத் தேடினேன். நாடுகள் வாரியாக இந்த நாவல் பல முறை திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது தவிர தொலைக்காட்சித் தொடர்கள், மேடை நாடகம், ஓபரா என எல்லா வடிவங்களிலும் அன்னா கரீனா நூற்றைம்பது வருடங்களுக்கும் மேலாய் தன் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறாள். நான் பார்த்தது 2012 இல் ’ஜோ ரைட்’ இயக்கத்தில் வெளியான ’ப்ரிட்டிஷ்’ திரைப்படம். 

வழக்கமான க்ளாசிக் நாவல் திரைப்படமாக இல்லாததுதான் இதன் தனித்துவம். முதல் அரைமணி நேரம் இது திரைப்படமா, ஓபரா வா என்கிற சந்தேகம் தோன்றுமளவிற்கு முற்றிலும் புதுமையாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. கதை நடக்கும் பின்னணி, காட்சிகள் மாறும் தன்மை எல்லாமும் பிரமாதம். சர்ரியலிஸ்டிக், மேஜிக்கல் என்றெல்லாமும் கூட சொல்லிவிடலாம். அவ்வளவு கச்சிதமான ’ஆர்ட் வொர்க்’  பிரபுக்களின் கதை என்பதால் திரையில் செல்வச் செழிப்பை காண்பிக்க  உடைத் தேர்வுகளில் அத்தனை கவனத்தையும் செலுத்தியிருக்கிறார்கள். நடனக் காட்சிகளில் ஒரு ஓரமாய் வந்து போகும் பெண்ணிற்குக் கூட அவ்வளவு பிரமாதமான உடைகளைத் தேர்வு செய்திருக்கிறார்கள். ருஷ்யப் பின்னணி குறித்து கவலைப்படாமல் அசல் பிரிட்டிஷ் பிரபுக்களின் கதை போன்ற தோற்றத்தை இத் திரைப்படம் ஏற்படுத்துகிறது. 

என் கற்பனையில் சிறு வயதிலிருந்து தருவித்துக் கொண்டிருக்கிற ரஷ்ய நிலப்பரப்பின் காட்சிகள் மற்றும்  மனிதர்களின் முகங்களாக இத் திரைப்படம் இல்லை.  Kostya என்றழைக்கப்படும் Konstantin முகம் மட்டுமே ரஷ்ய முகமாக இருந்தது. அவரின் நிலம், வீடு, சகோதரன் மற்றும்  அறுவடைக் காட்சிகள் மட்டுமே ரஷ்யத் தன்மையைக் கொண்டிருந்தன. ஆனாலும் ஒரு திரைப்படமாக இதை முழுமையான படமென்றுதான் குறிப்பிட வேண்டும்.

அன்னா கரேனினா கதாபாத்திரத்தில் நடித்திருப்பது. பிரிட்டிஷ் நாயகியான Keira Christina Knightley. கெய்ராவிற்கு  இத் திரைப்பட இயக்குனாரான ஜோ ரைட்டுடன் மூன்றாவது படம். அன்னா கரேனினாவிற்கு முன்பு ப்ரைட் அண்ட் ப்ரைஜுடிஸ் மற்றும் அடோண்ட்மெண்ட் படங்களில் சேர்ந்து பணிபுரிந்திருக்கிறார்கள். அடோண்ட்மெண்ட் படம் குறித்து முன்பு எப்போதோ எழுதிய நினைவிருக்கிறது ப்ரைட் அண்ட் ப்ரைஜூடிஸ் படத்தைப் பார்க்கவில்லை.  சில வருடங்களுக்கு முன்பு  வரிசையாக நாவல்களைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்களைப் பார்த்தேன். ஜோர்பா த க்ரீக், டின் ட்ரம், ப்ளைண்ட்னஸ், அன்பியரபிள் லைட்னஸ் ஆஃப் பீயிங் போன்ற படங்களை வரிசை யாகப் பார்த்து முடித்தேன். அப்போது நவீன நாவல்களிற்குக் கொடுத்த முக்கியத்துவத்தை க்ளாசிக் நாவல்களிற்குத் தரவில்லை. இம்முறை அக்குறையை நிவர்த்தி செய்துவிட வேண்டும்.

அடல்டரி அல்லது திருமணத்திற்கு வெளியிலான உறவு குறித்த படைப்புகள்தாம் எப்போதுமே சாகா வரம் பெற்றவை என்பது என் எண்ணம். உலகின் மிகச் சிறந்த படைப்புகள் பல அடல்டரி யை மையமாகக் கொண்டவை. ஏன் இதே பக்கத்தில் நான் எழுதிக் கொண்டிருக்கும் ஓரிதழ்ப்பூவையும் கூட அடல்டரி என வகைமைப்படுத்த முடியும். காதலுணர்வும் சாகசமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை.  ஏதோ ஒன்று குறையும்போது அதில் சுவாரஸ்யம் போய்விடுகிறது. இன்னொருவருக்குச் சொந்தமான ஒன்றைத் திருடுவது என்பது எப்போதுமே ஆழ்மனதைத் திருப்தியடைய வைப்பதுதான்.

இடர்னல், ஸோல்ஃபுல் போன்ற பிதற்றல்களெல்லாம் தான் அடல்டரியின் மிக முக்கியமான குறியீட்டுச் சொற்கள். பெரும்பாலான உறவுகள் இந்த ஸோல்ஃபுல் என்கிற வார்த்தையில்தான் விழுகின்றன. உண்மையிலும்  அப்படித்தான் தோன்றும்.  ஈகோவிலிருந்தும் பொஸசிவ்தன்மையிலிருந்தும் விடுபட்ட சுதந்திர உறவு எனக் கூறியபடியே அடல்டரியும்  மெல்ல  பொறாமையில்தான் போய் முடியும்.  ஒரு கட்டத்தில் எங்கே மற்ற துணை நம்மை விட்டு விலகிவிடுமோ என்கிற பாதுகாப்பற்ற தன்மையும்  தலை தூக்கும். பின்பு இச் சாகஸக் காதலும் தோல்வியில் முடியும். இதில் ஆண் பெரும்பாலும் தப்பித்துக் கொள்வான். பெண் பலியிடப்படுவாள். ஆனால் இப்பேஸ்புக் யுகத்தில் ஆண் பெண் இருவருமே சாகஸம் தீர்ந்தபின் தத்தமது சொந்த இணைகளுடன் மீண்டும் போய் சத்தம்போடாமல் வாழ்ந்து கொள்ள முடிவது காலமும் டெக்னாலஜியும் தந்த வரம் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அன்னாவும் வெரோன்ஸ்கியும் கலவும் காட்சிகள் கவித்துவமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. கெய்ராவின் உடல்மொழியும் அற்புதம்.  மதுவால் வீழும் இறுதி கட்டங்களில்,  துக்கமும் காதலுமான வெளிப்பாட்டுத் தருணங்களில் இவரின் நடிப்பு பிரமாதம்.  அன்னா என்கிற சாகா வரம் பெற்ற  கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்.  ஒரு நாவலாக இம் மகத்தானப் படைப்பை இன்னும் வாசிக்காமல் இருப்பது குறித்த வெட்கம் இருக்கிறதுதான் என்றாலும் தற்சமயம் இப் பெரும் படைப்புகளிற்கு ஒதுக்க நேரமில்லை என்பதுதான் உண்மை. மேலும் பிற்கால  ஓய்வு நாட்களுக்கென்று சிலவற்றை விட்டு வைக்க வேண்டும்தானே.

படத்தைப் பார்த்து முடித்தப் பிறகு முரகாமி ஏன் ஸ்லீப் கதை நாயகி வாசிக்கும் நாவலாக அன்னா கரேனினாவை வைத்திருக்கிறார் என்பதன் சூட்சுமம் புரிந்தது.  நிஜமாகவே இப்போது ஸ்லீப் கதை இன்னும் அடர்த்தியானதாய் மாறுகிறது.  இன்று ப்ரைட் அண்ட் ப்ரைஜுடிஸ் படம் பார்க்கப் போகிறேன். இந்த தொடர் சங்கிலி தன்னைத் தானே வடிவமைத்துக் கொள்கிறது. நான் அதன் பின் போகும் வழி தப்பிய குழந்தையாக மாறியிருக்கிறேன்.



No comments:

Featured Post

test

 test