Thursday, April 6, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் எட்டு

 ங்கையற்கன்னி மீண்டும் தன் கனவில் மானைக் கண்டாள். அவள் கனவில் வரும் மானிற்கு, முகம் மட்டும் மனித முகம். உடலும் கொம்புகளும் புள்ளிமானிற்கு உரியவை. அவளின் பதினைந்து வயதிலிருந்து இந்தக் கனவு வந்து கொண்டிருக்கிறது. முதல் முறை கொஞ்சம் பயந்தாள். யாரிடமாவது சொன்னால் என்ன என்றும் கூட யோசித்தாள். ஆனால் சொல்லத் தைரியம் வரவில்லை. நாளையடைவில் அந்தக் கனவு வராதா என ஏங்க ஆரம்பித்தாள். அந்த மானின் மனித முகம் அத்தனை வசீகரமானது. அந்த முகத்தை எத்தனை முறை நினைவில் நிறுத்த முயன்றும் இயலவில்லை.  வழுக்கிக் கொண்டே போனது. ஆகவே அந்தக் கனவை மெல்ல நேசிக்க ஆரம்பித்தாள். சுற்றத்தை, சக மனிதர்களை, ஆண்களை, ஏறிட்டுப் பார்த்தாள் இல்லை. சதா அவள் நினைவில் முகம் நினைவில் இல்லாத, அந்த மனித மானே கொம்புகளை உயர்த்திக் கொண்டு நின்றுகொண்டிருந்தது

பள்ளிப்படிப்போடு நிறுத்திக் கொண்டாள். படிப்போ இன்னபிற செயல்பாடுகளோ அவளின் கவனத்தை மானின் மீது குவிக்க விடாமல் சிதறடித்தது. எப்பாடுபட்டாவது அம்முகத்தை விழித்திருக்கும்போது நினைவில் கொண்டு வந்து விடவேண்டும் என்பதுதான் அவளின் ஒரே சிந்தனையாக இருந்தது. பெற்றோரும் சுற்றத்தாரும் அவள் நிலையைக் குறித்துப் பயப்பட ஆரம்பித்தார்கள். அங்கையற்கன்னிக்கு  குறிக்கோளோ பயமோ இல்லாமல் போனது. அம்முகத்தை விழித்திருக்கையில் பார்த்துவிடுவது மட்டுமே லட்சியமாக இருந்தது. அவள் கண்கள் சதா மிதந்து கொண்டிருந்தன. இத்தனைக்கும் அவள் ஒரு மானைக் கூட நேரில் பார்த்ததில்லை.  

ஒருநாள் சேஷாத்ரி ஆசிரமத்திற்கு ஒரு புள்ளி மான் குட்டி வந்திருப்பதாக அவள் தம்பி சொன்னான்அதன் உடல், வெல்வெட் துணி போல் இருப்பதாகவும், பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தான். அங்கையற்கன்னிக்கு மானைப் பார்க்கும் ஆசை எழுந்தது. அன்று மாலையே தங்க அரளிப் பூக்களையும், நித்யமல்லியையும் பறித்து மாலையாய் தொடுத்துக் கொண்டு சேஷாத்ரி ஆசிரமத்திற்குப் போனாள். ஆசிரமத்தை ஒட்டிய ஒரு சிறு பூங்காவில் அந்தக் குட்டி மான் திரிந்து கொண்டிருந்தது. சின்னஞ்சிறு மான். தன் பெரிய கண்களால் அருகில் வந்து நின்ற இவளைப் பார்த்தது

அங்கையற்கன்னிக்கு தொண்டை அடைத்துக் கொண்டது. அழுகை பீறிட்டது சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள்.  நடுங்கும் கைகளால் அந்த மானைத் தொட்டாள். அதன் பட்டுடலைத் தடவிப் பார்த்தாள். மான், அவளிடம் இன்னும் நெருங்கி வந்தது. கழுத்தை கரங்களால் வளைத்து அணைத்துக் கொண்ட கணம், அவள் முதன்முறையாய் தன் உச்சம் அடைந்தாள்

அடுத்த நாளிலிருந்து  காலையும் மாலையும் சேஷாத்ரி ஆசிரமம் போக ஆரம்பித்தாள்மானோடு பூங்காவில் மெளனமாய் உரையாடுவாள். அதனோடு பூங்காவைச் சுற்றிச் சுற்றி வருவாள். மானிற்கு உணவையும் வீட்டிலிருந்து கொண்டு வர ஆரம்பித்தாள். தினம் அவளின் தம்பி வந்து அப்பா கத்துவதாக சொல்லி, அவளை மானிடமிருந்து பிரித்துக் கூட்டிப் போவான். அவளின் அம்மா  மிகவும் பயந்து போனாள். மகளின் மனநிலை குறித்த அச்சம் அவளுக்கு ஏற்கனவே இருந்தது. இடையில் இந்த மான் விவகாரமும் சேர்ந்துகொள்ளவே மொத்தக் குடும்பமும் தவித்தது. ஏற்கனவே இவளின் ஜாதகமில்லாத புரோக்கர்களே இல்லை என்கிற நிலை வந்துவிட்டது. அங்கையற்கன்னியின் ஜாதகம் ஆண் ஜாதகம். அரசாளும் தன்மை கொண்ட பலாபலன்கள். அவளுக்கான தோதுபட்ட ஜாதகம் ஒன்றுமே அமையவில்லை. சிலர் அவளின் நட்சத்திர அமைப்புகளைப் பார்த்து மிரண்டனர். இது வேலைக்காகாது எனத் தெரிந்த அவளின் அப்பா ஒரு போலி ஜாதகத்தை உருவாக்கினார். மிகப் பெரும் தேடலுக்குப் பிறகு தேனிமலையிலிருந்த ரவியைப் பிடித்தார். அரசுப் பணி. வாத்தியார் உத்தியோகம். புரோக்கருக்கு தாராளமாகப் பணம் கொடுத்து பெண் பார்க்க வரச் செய்துவிட்டிருந்தார். 

ரவி அங்கையற்கன்னியைப் பார்த்த மட்டில் நடுங்கினான். அவளின் மருதாணிப் பூசிய பாதங்களுக்கு முன்பு கூட தான் ஈடில்லை என மருகினான். அவன் அம்மாவின் பிடிவாதத்தால் இருவருக்கும் திருமணம் முடிந்தது. மணவறையில் தாலிகட்டும் நேரத்திற்கு சற்று முன்பாகத்தான் அங்கையற்கன்னி அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவன் முகம் நரியைப் போலிருந்தது. ஆணுடலொன்று நரியின் முகத்தோடு அருகில் அமர்ந்திருப்பதாய் உணர்ந்தாள். எதுவும் பேசாமல் தலை குனிந்து கொண்டாள். மந்திரப் பின்னொலியில், புகைமண்ட அவள் கழுத்தில் ரவி தாலி கட்டினான்.

ஓவியம் : காயத்ரி காமூஸ்

- மேலும்

No comments:

Featured Post

test

 test