Friday, March 24, 2017

சாதாரணங்களின் கலைஞன்

நேற்று முன்னிரவு சுவறின் மூலைக்காய் மேக் கைத் திருப்பி வைத்துக் கொண்டு கேம் ஆஃப் த்ரோனில் ஆழ்ந்திருந்தபோது வந்த குறுஞ்செய்தியின் வாயிலாக அசோகமித்ரனின் மரணத்தை அறிந்து கொண்டேன். வழக்கமாய் எதிர் கொள்ளும் எழுத்தாளர்களின் அகால மரணங்களைப் போல அதிர்ச்சியோ பதட்டமோ இல்லை. கல்யாணச் சாவுதானே. மிகப் பரிதாபகரமான தமிழ் சூழலில் அசோகமித்ரனின் படைப்புகள் மிகச் சரியாய் எல்லோராலும் உள்வாங்கப்பட்டன. எந்த விமர்சகராலும் அவரது படைப்பின் மேன்மை மீது சிறு கீறலைக் கூட ஏற்படுத்திவிட முடியவில்லை. தமிழ் சூழலில் ஒரு படைப்பாளி பரவலாய் அறியப்பட்டதும் மிகக் குறைவான எதிர்ப்புகளைப் பெற்றதும் இவராகத்தான் இருக்க முடியும். அந்த அளவிற்கு அசோகமித்ரனின் படைப்புகள் யாராலும் நெருங்க முடியாததாக இருந்தன. தனிப்பட்ட அளவில் அவர் எளிமையானவராகவும் இருந்தார். கடைசிக் காலங்களில் பிராமணர்களைக் குறித்து ஓரிரு அபிப்பிராயங்களைப் பகிர்ந்து இணையப் பரப்பில் விமர்சனங்களைப் பெற்றுக் கொண்டாலும் - தினம் யாரிடமாவது இரண்டு வசவுகளை வாங்கிக் கட்டிக் கொள்ளாவிட்டால் அவர்கள் தமிழ் எழுத்தாளர்கள் கிடையாது எனும் தமிழிணைய சூழலில் இந்த விமர்சனங்கள் ஒன்றுமே கிடையாது - அசோகமித்ரன் அடைந்த புகழ் மீது எந்தக் களங்கமும் ஏற்படவில்லை.

 தனிப்பட்ட முறையில் அசோகமித்ரன் எனக்குப் பிடித்தமானவர். நிறைய கதைகளை திரும்பத் திரும்ப வாசித்திருக்கிறேன் அவற்றின் கச்சிதம் குறித்தும் நுணுக்கம் குறித்தும் அறிந்து கொள்ள, ஒவ்வொரு முறையும் புதிதாய் ஒன்றிருக்கும். பொதுவாக எனக்கு மிகப் பிடித்த நாவல்களின் நாயக / நாயகிப் பெயர்கள் அப்படியே மனதில் தங்கிப் போகும் ஆனால் அசோகமித்ரன் படைப்புகளைப் பொறுத்தவரை தண்ணீர் நாவலின் ஜமுனா கதாபாத்திரத்தைத் தவிர வேறெந்த கதாபாத்திரப் பெயர்களும் மனதில் இல்லை. அவரின் ஒட்டு மொத்த படைப்புகளிலேயும் பெரிதான நாயக பிம்பங்கள் கிடையாது என்பதே அவரின் தனிச் சிறப்பு. அசோகமித்ரனின் படைப்புலகத்தை இப்படி ஒரு வரியில் சாதாரணங்களின் கலை என்று சொல்லி விட முடியுமா என எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதை ஒரு கூற்றாக வைத்துக் கொள்ளலாம். கும்பல்களில் தனித்து தெரிவதை மட்டுமே கவனித்து வந்த நம் இலக்கிய முகத்தை சற்றே மாற்றியமைத்தவர். இந்த அம்சமே அவரது படைப்புலகத்தின் மீது உடனடியாய் கவனத்திற்கு வரும் விமர்சனம் அல்லது பாராட்டு.

 மரணத்தை தம் படைப்பால் எதிர் கொண்டவர். தமிழில் படைப்பிலக்கியம் உள்ள வரை இவரது பெயரை நீக்கிவிட்டு எவராலும் சிறு குறிப்பைக் கூட எழுதிவிட முடியாது போன்ற சம்பிரதாயமான வார்த்தைகளை இந் நாளில் அவசர அவசரமாய் எழுதுவது போலித்தனமானது அல்லது வெறும் மேம்போக்கானது என்பதைப் புரிந்து கொள்கிறேன். வரும் நாட்களில் அசோகமித்ரனின் கதைகளை நாவல்களை கட்டுரைகளை மீள் வாசித்து சில குறிப்புகளை இந்தப் பக்கங்களில் எழுத முயல்கிறேன். ஒரு மகத்தான தமிழ் எழுத்தாளனுக்கு, வாசகனாய் என்னால் செய்ய இயன்ற அஞ்சலி அதுவாகத்தான் இருக்க முடியும்.  
Post a Comment

Featured Post

தம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா

கினோகுனியா - சிறுகதைத் தொகுப்பை அமேஸான் கிண்டிலில் வாங்க https://www.amazon.in/dp/B077DHX1FX பத்துக் கதைகளை கிண்டிலில்...