Tuesday, March 29, 2016

காட்சிகளின்றி காணுதல் - SPOTLIGHT 2015


திரைப்படம் அடிப்படையில் ஒரு காட்சி ஊடகம். அதற்கு உரையாடல்கள் பலமே தவிர அவசியம் கிடையாது என்பது ஒரு பொதுவான கருத்து. தமிழ் சினிமா பார்வையாளர்களாகிய நாம், அதுவும் செவி கிழிய - பக்கம் பக்கமாக வசனங்களையும், பஞ்ச் டைலாக்குகளையும் கேட்டு நசிந்து போன நாம், சினிமாவை காட்சி ஊடகம் தானென உடனடியாக ஒப்புக் கொள்வோம். உலகத்திலேயே சினிமாவை ரேடியோவில் பார்த்த மகத்தான பார்வையாளர்களும் நாமென்பதால் திரும்பத் திரும்ப இந்தக் காட்சி ஊடகம் என்கிற சொல், எல்லா தரப்பு சினிமா விமர்சகர்களாலும் முன் வைக்கப்படுகிறது. ஆனால் சினிமா காட்சி ஊடகம் மட்டுமே அல்ல என்பதையும் சில திரைப்படங்கள் நமக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றன. 

மிகச் சரியான உரையாடல்கள் மூலம், ஒரே ஒரு காட்சிப் பதிவு கூட இல்லாமல் சொல்ல வந்த விஷயத்தை ஆழமாகக் கடத்தி விட முடியும்  என்பதற்கான உதாரணப் படங்களும் ஏராளம் உண்டு. ஹிட்சாக்கின் ரோப் பிலிருந்து தொடங்கி டாம் மெக்ராத்தியின் சமீபத்திய படமான ஸ்பாட்லைட் வரை இந்தக் காட்சிகளற்ற காட்சிப் படங்கள் திரையின் வேறொரு சாத்தியத்தை முன் வைக்கின்றன.

ஸ்பாட் லைட் திரைப்படம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவானது. பாஸ்டன் குளோப் பத்திரிக்கையில் வேலை பார்த்த- குறிப்பாக மார்ட்டி என்பவர் 2001 ஆம் வருடம் பாஸ்டன் குளோப் பத்திரிக்கையின் எடிட்டராக சேர்ந்த பிறகு – ஸ்பாட் லைட் குழுவினரான ராபி, ரெஸண்டஸ், சாஷா, பென் ஆகியோர் துப்பறிந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த ஒரு மிகச் சிக்கலான நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம்தான் இது. கதாபாத்திரங்களின் பெயரைக் கூட மாற்றிப் போடாது, எவ்வித பின் விளைவுகள் குறித்தும் பயப்படாமல் உருவாகியிருக்கும் மிக நேர்மையான படமிது. 

பாஸ்டனைச் சேர்ந்த கத்தோலிக்கப் பாதிரிமார்கள் தங்களின் கடவுள் பிம்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அறியாச் சிறார்களைப் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆரம்பத்திலேயே பத்திரிக்கையின் கவனத்திற்கு இச் செய்தி வந்திருந்தாலும் ஏதோ ஒன்று இரண்டு அல்லது தப்பிப் போன ஒன்று என்பதாய் பத்திரிக்கைக் குழுவினரால் கை விடப்படுகிறது. மெட்ரோ பகுதியில் பெட்டி நியூஸாய் வந்திருக்கும். பின்பு மார்ட்டியின் வருகைக்குப் பிறகு ஸ்பாட்லைட் குழுவினரிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. தொடர் விசாரணைகளின் மூலம் இந்தச் சம்பவத்தின் பூதாகரம் மெல்ல வெளிப்பட ஆரம்பிக்கிறது. சிறு வயதில் பாதிரியார்களால் பாதிக்கப்பட்ட சிலர் ஒரு குழுவாய் இணைந்து, இந்த குரூரத்தை உலகிற்கு வெளிப்படுத்த முனைகின்றனர். நீதியிடம் செல்கின்றனர். ஆனால் அதிகாரம் மிக்க  கத்தோலிக்கத் தேவாலயங்கள் இவ்விஷயங்களை வெளியே கசிய விடாது, திறமையான வக்கீல்கள் மூலம் சமன்படுத்தி விடுகின்றன.

ஸ்பாட்லைட் குழுவினரின் ஆத்மார்த்தமான மற்றும் தீவிரமான உழைப்பின் மூலம் இது ஏதோ ஓரிரண்டு பாதிரிமார்களின் பிசகு இல்லை ஒட்டு மொத்த பாதிரியார்களில் ( பாஸ்டனில் மட்டும் 1500 பாதிரியார்கள்)  6 சதவிகிதம் பேர் ஃபீடோபில் ஆக இருப்பது கண்டறியப்படுகிறது. யூதரான மார்ட்டி ஆரம்பத்திலேயே சொல்வது போல குற்றம் இழைத்த தனிப்பட்ட பாதிரிமார்களை தண்டிக்காமல் அமைப்பை சரி செய்வதை இந்தக் குழு நோக்கமாகக் கொண்டு அதில் வெற்றியும் அடைகிறது.

இறை நம்பிக்கைக் கொண்ட, சிறு வயதுக் குழந்தைகளை வைத்திருக்கும் நம் மிடில் க்ளாஸ் மனதை பதற்றப் படுத்தக் கூடிய, மிக உணர்ச்சிப் பூர்வமான மையக் கதை இது. இந்தப் பதற்றத்தை விளக்குவது போன்றோ அல்லது சுட்டிக் காட்டுகின்ற நேரடியான காட்சிகளோ இப்படத்தில் இல்லை என்பதுதான் இதன் விசேஷம். ஓர் ஓரினச் சேர்க்கையாளர் தான் பாதிக்கப்பட்டதைச் சொல்கையில் உடைந்து அழுவதும், வெளிவரும் உண்மைகளின் அழுத்தம் தாங்காது குழுவில் ஒருவரான ரெஸிண்டஸ் ஓரிரு காட்சிகளில் உணர்ச்சியவயப்படுவதைத் தவிர வேறந்த காட்சிப் பூர்வமான பதிவும் கிடையாது.

முதற் பத்தியில் சொன்னதைப் போல இத்திரைக்கதை அடர்த்தியான உரையாடல்களால் நெய்யப்பட்டிருக்கிறது. அந்த உரையாடல் நமக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகள் நாம் காட்சியாகக் காண முடிந்தால் எழும் அதிர்வுகளுக்கு எவ்விதத்திலும் குறையாமல் இருக்கிறது.

பத்து வருடங்களுக்கு முன்பு இணையத்தில் சும்மா எழுதிப் பார்த்த காலகட்டங்களில் பத்திரிக்கைத் துறை மீது எனக்கு பெரும் விருப்பம் இருந்தது. தோளில் ஒரு ஜோல்னாப் பையை மாட்டிக் கொண்டு, வீதி வீதியாக மக்களைச் சந்தித்து, அவர்களின் பாடு களை எழுதிப் பார்க்க வேண்டும் என்கிற பகற் கனவுகளும் இருந்தன. ஆனால் அடுத்த மூன்று வருடத்தில் தமிழ் நாட்டில் நியூஸ் மீடியா வேறொரு இடத்திற்கு நகர்ந்தது. மஞ்சள் பத்திரிக்கை என்று தனியாக வருவது நின்று போய் தமிழில் வெளியாகும் எல்லாமும் மஞ்சள் நிறத்தை வந்தடைந்தன. சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப, மக்களின் மனநிலைக்கு ஏற்ப மீடியாக்கள் நிறங்களை மாற்றிக் கொண்டே இருப்பதையும் காண முடிந்தது. பின்பு அந்த எண்ணம் அடியோடு காணாமல் போனது. ஸ்பாட்லைட் பார்த்த இரவில் பத்திரிக்கைத் துறை மீதான என் பழைய கிலேசம் மெல்ல எட்டிப் பார்த்தது. பத்து வருடங்களிற்கு முன்பு எல்லாம் சரியாகத்தான் இருந்தது என நினைத்துக் கொண்டேன்.

0

மதம், நீதியின் மீது செலுத்தும் அதிகாரம் குறித்தும் இத்திரைப்படம் வெளிப்படையாகப் பேசுகிறது. அதுவும் பெரும்பான்மைச் சமூத்தினரின் மதம் என்பதால் அதன் அதிகார நீட்சி எல்லா எல்லைக்கும் ஏற்கனவே நீண்டிருக்கிறது. இந்த குரூரத்தை வெளியே கொண்டு வந்தே ஆக வேண்டுமென்கிற பத்திரிக்கையாளர்களின் அர்ப்பணிப்பும், அதிகார மட்டத்திற்கு ஏற்படும் நொடிநேர மனிதத் தன்மையுமே  இந்தக் குற்றவாளிகளை அடையாளம் காண உதவுகின்றன. சிறார் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 87 கத்தோலிக்க பாதிரியார்களின் பெயர்களை பாஸ்டன் குளோப் பத்திரிக்கை உலகிற்கு அறிவிக்கிறது. அறிவித்த நொடி முதல் ஏராளமான பாதிக்கப் பட்டோரின் அழைப்புகள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு வந்த வண்ணம் இருக்கின்றன.
படம் முடிந்த பிறகு காண்பிக்கப்படும் கண்டறியப்பட்ட பீடோபில் பாதிரியார்களின் புள்ளி விவரங்கள் இன்னும் அதிக கசப்பை நமக்குள் ஏற்படுத்துகிறது. இந்த குரூரத்திற்கு முடிவு இன்னும் வந்துவிடவில்லை என்பதை படத்தின் துவக்கக் காட்சியும், விஷயம் வெளிப்பட்டுவிட்டது என்கிற வெற்றிச் செய்தித்தாளோடு ரெஸிண்டஸ்  கரிபீடியனை சந்திக்கும் போது அவர் இன்னொரு பாதிக்கப்பட்ட சிறுமியை பார்த்துக் கொண்டிருப்பார். அது இக்குரூரத்தின் முடிவின்மையை மிக நுணுக்கமாக காட்சிப்படுத்தியிருக்கும்.


ஒரு காட்சியில் ரெஸண்டஸ் தனக்கு மிக முக்கியமான தகவல்களைத் தந்த கரிபீடியனோடு உரையாடிக் கொண்டிருப்பார். அவர் இந்த வேலை மிக முக்கியமானது அதற்காகத் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை எனச் சொல்லுவார். கரிபீடியன் ஒரு ஆர்மீனியன், ரெஸண்டஸ் ஒரு போர்த்து கீசியர், இந்த முயற்சியை ஆரம்பித்து வைத்த மார்ட்டி ஒரு யூதர். இவர்கள் அனைவரும் மண்ணின் மைந்தர்கள் என சொல்லிக்கொள்ளும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்துக் கொண்டிருப்பார்கள்.  அமெரிக்கா என்பதே வந்தேறிகளின் நாடுதான் என்றாலும் எதன் அடிப்படையில் அனைவரையும் இந்த மதம் ஒன்றாய் உணரச் செய்கிறது.? எப்படி ஒரே கடவுள் இவர்கள் அனைவருக்குமான கடவுளாக இருக்க முடியும் என்பதெல்லாம் விரிவாக யோசிக்க/ பேசப்பட வேண்டிய விஷயம்தான்.

Featured Post

test

 test