Sunday, November 30, 2014

கூண்டுப் புளி

நேற்று இரவு முழுவதும் ஒரு நொடி கூட என்னால் தூங்க முடியவில்லை. ஒரு முழு இரவையும் கொப்பளிக்கும் எண்ணங்களோடும், குற்ற உணர்வோடும், இயலாமையோடும் கழித்தது இதுவே முதன்முறை என நினைக்கிறேன். வாழ்வில் ஏரளமான தூங்க முடியாத நிசிகள் இருந்திருக்கின்றனதாம் என்றாலும் விடியலில் எப்படியாவது தூக்கம் இழுத்துக் கொண்டுவிடும். ஆனால் நேற்று அப்படி ஒன்று நிகழவேயில்லை. மனம் குழப்பத்திலும் கழிவிரக்கத்திலும் சஞ்சலித்தபடியே இருந்தது. இப்படியான போராட்ட மனநிலைக்கான காரணத்தை எழுதக் கூச்சமாக இருக்கிறது. வெட்கமும் அவமானமும் பிடுங்கித் தின்றபடியே இருக்கிறது. இனி தனியாகக் குடிப்பதில்லை. அப்படியே குடித்தாலும் இணையத்தைத் திறப்பதில்லை என்கிற கறாரான முடிவிற்கும் வந்திருக்கிறேன். வெள்ளி இரவு நிலையில்லாமல் உளறிக் கொட்டி ஒரு ஆன்மாவின் முகச் சுளிப்பிற்கும் கோபத்திற்கும் உள்ளானதை எண்ணி வெட்குகிறேன். அதற்குப் பிராயச்சித்தமாக என் ஃபேஸ்புக் கணக்கை முடக்கியிருக்கிறேன். கூகுல் ப்ளஸ் என்னை அத்தனை விகாரங்களோடும் ஏற்றுக் கொண்டு விட்ட இடம் என்பதால் முதல் நாள் உளறி அடுத்த நாள் அழிப்பது வழக்கமாகவே மாறிவிட்டது. அதைக் குறித்து வெட்கமேற்படாதவாறு வழமை பார்த்துக் கொள்கிறது.

என் தனிமையை எந்த அளவிற்கு கொண்டாடுகிறேனோ அந்த அளவிற்கு அதைக் கண்டு பயப்படுபவனாகவும் இருக்கிறேன். கட்டவிழ்த்த வனாந்திர வெளியும் சுதந்திரமும் என்னை அதிக உற்சாகமடைய வைக்கும் அதே நேரத்தில் அந்த மிகு வெளி குறித்து மிரட்சியும் அடைகிறேன். எனக்கு கூண்டுதான் சரியாக இருக்கும். கூண்டில்தான் என்னால் மனச் சமாதானங்களோடு வாழ்ந்து கொள்ள முடிகிறது. கூண்டின் பாதுகாப்பு குறித்து அதன் வழமைகள் குறித்து அதன் சோம்பல் தன்மை குறித்து இந்தப் புளிக்கு மிகுந்த ஆசுவாசங்கள் இருக்கின்றன. செய்ய ஒன்றுமே இருக்காத வாழ்வை எப்படி ஒரு மனம் விரும்ப முடியும்? ஒரு நாள் முழுக்க எதையுமே செய்யாமல் கடத்தும் தடித்தனம் எப்படியோ வந்து ஒட்டிக் கொண்டுவிட்டது. அந்த தடித்தனத்தில் ஊறி மூளையும் உடலும் மட்கிக் கொண்டிருக்கிறது. இலைகள் மட்கினால் சரி. மரமே மட்குவதை என்ன செய்து சரி செய்ய முடியும்?

 சும்மா இருப்பதுதான் பெரிய விஷயமாகிற்றே. "கிட சும்மா" என சமாதானமாகிவிடலாமென்றாலும் சதா பகற் கனவில் மூழ்கும் மனதின் ஓயாத பேராசையைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதென்ன சுயமிது? இத்தனை ஆசைகளையும் கனவுகளையும் இதன் ஆழத்தில் யார் வந்து கொட்டியிருப்பார்கள்? மனம் பேராசையின், சுயப் பெருமிதத்தின், பகட்டு வெளியின் நாயகனாகத் தன்னை அலங்கரித்துக் கொள்கிறது. போகுமிடமெல்லாம் ராஜாதி ராஜப் பின்னணிக் குரல் காதில் விழுந்து கொண்டே இருக்கவேண்டுமென விரும்புகிறது. பச்சையாக சொல்வதென்றால் சில சினிமாக்காரர்களின் பகட்டு வாழ்வை அருகிலிருந்துப் பார்த்துவிட்டு தானும் அதுபோல மாறிவிட இந்தப் புளி கொட்டையைப் பிதுக்கிக் கொண்டிருக்கிறது.

இந்த சினிமாப் பித்திலிருந்து வெளிவர புத்தக வாசிப்பைத் துரிதப்படுத்தி யிருக்கிறேன். என் நமுத்த வழமைகளில் இருந்து சீக்கிரம் வெளியே வர வேண்டும். மாலையில் கர்ம சிரத்தையாய் நடப்பது. இசை கேட்பது. புத்தகம் படிப்பது. குறைவாய் படம் பார்ப்பது. குறைவாய் உண்பதென திடீரென வாழ்வு நம்ப முடியாத ஒழுங்கிற்கு திரும்பிவிடும். அந்த கணத்திற்காக காத்திருப்பதைத் தவிர இப்போதைக்கு செய்ய ஒன்றும் இல்லை. ஃபேஸ்புக்கைத் தொலைத்திருப்பதால் மீண்டும் வலைப்பூ வில் நாட்டம் செல்லத் துவங்கியிருக்கிறது. எழுதாமல்தான் நான் துருப்பிடித்துப் போனேன். இனி எழுதி எழுதி என்னை மீளக் கொணர்வேன்.



No comments:

Featured Post

test

 test