Sunday, December 29, 2013

நிகழ் திரை : உலகத் திரை பிம்பங்களின் பரவச நடனம்




இந்த வருடத்தின் துவக்கத்தில் வந்திருக்க வேண்டிய புத்தகமிது. ஜனவரி மாத விடுமுறைக்கு திருவண்ணாமலை வந்த  முதல் நாளில் ஷைலைஜாக்கா என்னிடம் கேட்ட சினிமாப் புத்தகம் ஒரு வழியாய் வருடக் கடைசியில் சாத்தியமாகி இருக்கிறது. ஆரம்பத்தில் என் வலைப்பக்கத்தில் எழுதப்பட்ட சினிமாக் கட்டுரைகளை தொகுத்து விடும் எண்ணமிருந்தது. அதைச் செயல்படுத்தும் நோக்கில் என் கட்டுரைகளை மீண்டும் வாசித்துப் பார்த்தேன். அவை மிகப்பெரும் அவநம்பிக்கையைத் தந்தன. என் வலைப்பக்க கட்டுரைகள் புத்தக வடிவில் வர எவ்வித முகாந்திரமுமில்லாத உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தன. ஆகவே அந்த எண்ணத்தைக் கைவிட்டு புதிதாய் எழுதிக் கொள்ளலாம் என்கிற முடிவிற்கு வந்தேன். ஷைலஜாக்கா விடம் பதினைந்தே நாளில் புத்தம் புதிதாய் ஒரு சினிமாப் புத்தகம் எழுதித் தருவதாக சொன்னேன்.  ஆனால் நான் நினைத்தது போல் இந்தப் புத்தகம் பதினைந்தே நாளில் எழுதிவிடும் அளவிற்கு எளிமையானதாய் இருக்கவில்லை அல்லது எனக்குப் பதினைந்தே நாளில் ஒரு சினிமாப் புத்தகம் எழுதும் அளவிற்கு எழுத்து இன்னமும் கைகூடி வரவில்லை.

ஊரிலிருந்த வரை ஒரு வரி கூட என்னால் எழுத முடியாமல் போனது. மீண்டும் துபாய்க்கு வந்ததும் பத்து சம கால இயக்குனர்களின் படங்களைக் குறித்து விரிவாய் எழுதும் எண்ணம் உதித்து, புத்தகம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. பத்து இயக்குனர்களைத் தேர்வு செய்ய ஒரு மாதம் போனது. அடுத்த ஆறு மாதங்கள், மிகச் சரியாய் ஜூன் மாதத்திற்குப் பிறகு மீண்டும் எழுதா நிலைக்குப் போனேன். இதற்கு இடையில் வலைப்பக்கத்தில் இரண்டு குறு நாவல்களை ஒரே சமயத்தில் எழுதிக் கொண்டிருந்தேன். அதையும் மே மாதத்தோடு ஊற்றி மூடி விட்டு எதையுமே எழுதாமல் நாட்களைக் கடத்தினேன்.

நவம்பர் மாதத்தின் சோர்வுற்ற ஒரு பிற்பகலில் பவா வைத் தொலைபேசியில் அழைத்தேன். பவா சினிமாப் புத்தகம் பற்றிக் கேட்டார். பாதியிலேயே நிற்கிறது பவா என்றேன். பரவாயில்லை உங்கள் வலைப்பக்கத்தில் சினிமா பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளின் சுட்டிகளை மட்டும் மடலிடுங்கள் நாங்களே எடுத்து தொகுத்துக் கொள்கிறோம் என்றார். என் மீதான பவா வின் மிதமிஞ்சிய நம்பிக்கையின் உயரம் எப்போதும் உயிர்ப்பாய் இருக்கும் என் சோம்பலை அசைத்துப் பார்த்தது. அவரிடம் மீண்டும் பதினைந்து நாள் அவகாசம் கேட்டேன்.  இந்த முறையும் பதினைந்து நாளில் என்னால் மூன்று கட்டுரைகளை மட்டுமே எழுத முடிந்தது. எடுத்துக் கொண்ட இயக்குனர்கள் யாவரும் மிக சிக்கலான தளத்தில் இயங்குபவர்கள் என்பதால் அவர்களின் அனைத்து படங்களையும் மீண்டும் பார்க்க வேண்டி வந்தது. மேலும் புனைவல்லாத கட்டுரைகளை எழுதுவதில் நான் தேர்ச்சி பெற்றிருக்கவும் இல்லை என்பதை இக்கட்டுரைகள் எழுதும்போது அறிந்து கொண்டேன். கட்டுரை நடைக்கு என் புனைவு மூளை ஒத்துப் போகவுமில்லை.

போதாத குறைக்கு என் அரசு அலுவலகத்தின் செத்த மூளைகள் யாவும் நெடிய தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு, என்னை விரட்டி விரட்டி வேலை வாங்க ஆரம்பித்தன. ஆகவே வழக்கமாய் எழுதும் என் அலுவலக மேசையில் உட்காரக் கூட முடியாமல்  போனது. இந்தப் பத்து கட்டுரைகளும் விடுமுறை நாட்களில், நள்ளிரவில், அதிகாலைகளில் எழுதப்பட்டன. எழுதும்போது பயல்கள் லாப்டாப்பின் மீது பாய்ந்து விடாதபடி கல்பனா பார்த்துக் கொண்டாள். அதோடு நிற்காமல் என்னால் எழுத முடியவில்லை அய்யனார் விஸ்வநாத் அவ்வளவுதான் எனச் சோர்ந்து இப்புத்தகம் எழுதும் திட்டத்தைக் கைவிட்ட போதெல்லாம் என்னைத் தேற்றி எழுதவும் வைத்தாள். ஷைலஜாக்காவின் தொடர்ச்சியான மின்னஞ்சல் விசாரிப்புகளின் மூலம் ஒரு வழியாய் இந்தப் புத்தகம் முடிந்தே விட்டது.

என் சினிமாப் பைத்தியம் பற்றி நண்பர்கள் நன்கறிவர். அந்தப் பைத்தியம் இந்தப் புத்தகம் எழுதப்படும் நாட்களில் முற்றியிருந்தது. என் எல்லாப் புத்தகங்களும் எழுதப்படும்போது தந்த பரவசங்களையும் திளைப்பையும் இப்புத்தகத்தை எழுதும்போதும் பெற்றுக்கொண்டேன். எழுதுபவனாய் ஒருவனுக்கு இதற்கு மேல் என்ன வேண்டும்? எழுத்து எழுதப்படும்போதே எல்லாவற்றையும் தந்து விடுகிறது.

உலக சினிமாவை அறிமுகப்படுத்தியதோடு மட்டும் நிற்காமல் இன்றளவும் என் சினிமா அறிவின் எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டிருக்கும் என் மூத்த சகோதரன் ரமேஷிற்கும், இணையப் பக்கங்களில் ஏழு வருடங்களாக என்னோடு சினிமா பற்றி உரையாடிக் கொண்டும் புதுப்புது படங்களை அறிமுகப்படுத்திக் கொண்டுமிருக்கும் நண்பர்களுக்கும் எல்லாவற்றிற்கும் மேலாய் சினிமாவை உன்னதமான கலை வடிவம் என நம்பும் அத்தனை உள்ளங்களுக்கும் இப்புத்தகத்தை சமர்ப்பிக்கிறேன்.

வழக்கம் போல இந்தப் புத்தகமும் வெளிவருவதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுத்து, என் அநியாயச் சோம்பலைச் சகித்துக் கொண்ட ஷைலஜாக்காவிற்கும் சந்தித்த முதல் நாளிலிருந்து நம்பிக்கையும் அன்பையும் ஆன்மாவிலிருந்து தந்து கொண்டிருக்கும் என் ப்ரிய பவா விற்கும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இந்நூலாக்கத்திற்கு மெனக்கெட்ட வம்சித் தோழமைகளுக்கு என் அன்பு.


அய்யனார் விஸ்வநாத்
டிசம்பர் 28, 2013
துபாய்
ayyanar.v@gmail.com


Featured Post

test

 test