Tuesday, June 4, 2013

ஓரிதழ்ப்பூ : அத்தியாயம் ஐந்து


இதான் நாகலிங்கப் பூ

அய்யோ என்ன வாசன! ஒரு மாதிரி நெஞ்ச அடைக்குது. இந்த வாசனைக்கு பாம்பு வருமா?”

ஆமா. அதுவும் இல்லாம இந்தப் பூவ பாரு லிங்கம் மாதிரி இருக்கு. அதுனாலயும் இந்தப் பேர்

இது ஏன் மரத்துல பூக்குது?”

தெரில

எவ்ளோ ஒசரமான மரம் இல்ல

ம் அண்ணாந்து பாத்தா கழுத்து வலிக்குது

இந்த பக்கம் நிறைய முற போயிருக்கேன். அப்பலாம் இந்த வாசனய இரமணாசிரமத்தோட வாசனைன்னு நினைச்சிப்பேன். இன்னிக்குத்தான் தெரியுது இது பூ வாசம்னு

ஆசிரமத்துக்கு கூடவா வாசன இருக்கும்?”

இருக்குமே எல்லா இடத்துக்கும்  வாசன இருக்கும்

எப்புடி?”

எப்படின்னு கேட்டா எப்படி சொல்றது? உங்க வீட்டுக்கு ஒரு வாசன எங்க வீட்டுக்கு ஒரு வாசன அமுதாக்கா வீட்டுக்கு ஒரு வாசன இப்படி

ஆமா உன் மேல கூட ஒரு வாசன இருக்கு

ஐயே நெஜமாவா

ஆமா. எங்கம்மா கோகுல் சாண்டல் பவுடர் அடிக்கும்போது உன் நினைவு வரும்

நீ என்ன நினைக்க வேற செய்வியா?”

நான் நினைக்கனும்னு நினைக்க மாட்டேன் அதுவா வரும்

நான் உன்ன அடிக்கடி நினைப்பேன்

ஏன் நினைப்ப

தெரியல. நினைப்பேன்

எப்பலாம் நினைப்ப

நைட்ல தூக்கம் வராதப்ப நினைப்பேன்

அப்புறம்

சொன்னா சிரிக்க மாட்டியே

மாட்டேன் சொல்லு

குளிக்கறப்ப நினைப்பேன்

ஐயே

ஆமாடா

ரமா மழ வர்ர மாதிரி இருக்கு வா போலாம்

ஏய் மழ வர்ர மாதிரி இருந்தா மயில்லாம் தோக விரிச்சி ஆடும்டா பாத்துட்டு போய்டலாம்

அய்யோ பயங்கரமா இருட்டிட்டு வருது. வீட்ல தேடுவாங்க

சைக்கிள்தான் இருக்கில்ல வேகமா போய்டலாம். இரு

வேணாம் ரமா வா போலாம்

மலையைக் கருமேகங்கள் சூழ்ந்திருந்தன. மழை உடைவதற்கு முன்பான நேரம், மேகங்கள் கணத்து, கரும் அமைதியுடன் நகர்ந்து கொண்டிருந்தன. ரமா இரமணாசிரமம் வரை போய்விட்டு வந்து விடலாம் வா என அழைத்த போது வானம் வெளிச்சமாகத்தான் இருந்தது. அரை மணி நேரத்திற்குள் எப்படி இருட்டியதென தெரியவில்லைரமா, கருநீலப் பாவாடையையும் பஃப் வைத்த மெருன் சட்டையும் அணிந்திருந்தாள். நான் முன்னால் நடக்க வேண்டா வெறுப்பாய் பின் தொடர்ந்தாள். சைக்கிளை ஸ்டாண்ட் விலக்கி பின்னால் ரமாவை உட்காரச் சொன்னபோது பெரிய மழைத்துளி ஒன்று ஹேண்டில் பாரில் விழுந்தது. பரபரப்பாய் சைக்கிளை மிதித்தேன். அடர்த்தியான மரங்கள் சூழ்ந்த வெள்ளைக்காரர்கள் தெருவில் நுழையும்போதே மழை சடசடவெனப் பிடித்துக் கொண்டது

எங்கயாவது நின்னுட்டு போலாம்டா” 

என்ற ரமாவின் குரலை உதாசீனப் படுத்தி மிதிக்க ஆரம்பித்தேன். தெரு வளைவில் கருவேலந் தோப்பு அதைத் தாண்டினால் ஒரே மிதியில் வீடுதான். இரு பக்கமும் முள் மரங்கள் வளர்ந்திருக்கும், நடுவில் நீண்ட ஒற்றைப் பாதை. மழை சுழன்று சுழன்று அடித்தது. இருவரும் மொத்தமாக நனைந்து போயிருந்தோம். ஒற்றைப் பாதை முழுவதும் செம்மண் குழம்பலாய் மழை நீர் தேங்கியிருந்தது. இறங்கி விடலாம் என நினைத்த நொடியில் சைக்கிள் வழுக்கியது. நான் ஒரு புறமும் அவள் ஒரு புறமுமாய் சிதறினோம். முற்கள் இடறியதைப் பொருட்படுத்தாது எழுந்து ரமாவைப் பார்த்தேன். எழுந்தவள்  சட் டென மீண்டும் மடங்கி உட்கார்ந்தாள். முகம் கோணலானது. அடி பட்ருச்சா என்றபடியே அவளை நெருங்கினேன்கீழுதட்டை அழுந்தக் கடித்துக் கொண்டே, பார்வையைத் தாழ்த்திக் கொண்டு, தலையை இடமும் வலமுமாய் அசைத்தாள். அவள் கையைப் பலவந்தமாய் பிடித்துத் தூக்கி நிறுத்த முயற்சித்தேன். பாதி எழுந்தவள் இடையில் மீண்டும் உட்கார விரும்பி என் கையை உதறியவள் நிலை தடுமாறி மல்லாக்க விழுந்தாள். கருநீலப்பாவாடை மேலேறி, தொடைகள்  நீரில் பளபளக்க இரத்தக் குழம்பலாய் ஒரு பூ அவள் கால்களின் இடுக்கில் மலர்ந்து நின்றதை அரை நொடிக்கும் குறைவான இடைவெளியில் பார்த்தேன். தலை கிறுகிறுக்க கீழே விழுந்து மயக்கமானேன்.



- மேலும்

No comments:

Featured Post

test

 test