Thursday, June 20, 2013

ஓரிதழ்ப்பூ : அத்தியாயம் ஏழு



ஹெலிகாப்டர்கள் நிற்பதற்காக போடப்பட்ட சிமெண்ட் திட்டில் சம்மணமிட்டு சாமி உட்கார்ந்திருந்தார். நான் நடந்துகொண்டே சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தேன். ராஜீவ்காந்தியின் ஹெலிகாப்டர் இங்கு நின்றிருக்கிறது. ஜெயலலிதா வந்திறங்கிய ஹெலிகாப்டர் நின்ற இடம் வேறு. அருகாமையில் அரசு கலைக் கல்லூரி ஹாஸ்டலும் சற்றுத் தொலைவில் கல்லூரிக் கட்டிடமும் நிலவொளியில் மெளனமாய் நின்றுகொண்டிருந்தன. வேனிற் கால நிலவு தன் அகலக் கண் விரித்து பூமியின் சகல இடுக்கையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. சாமி கைகளைப் பின்னே ஊன்றி அண்ணாந்து வானத்தைப் பார்க்க ஆரம்பித்தார். நட்சத்திரங்கள் இறைந்து கிடந்த முன்னிரவு வானம். புகைத்து முடித்துவிட்டு அவருக்கு எதிரில் போய் அமர்ந்து கொண்டேன். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

இன்று காலை நீண்ட விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்கூடம் போனேன். நான்கரை மணி வரை நெருப்பு மேல் நின்றுவிட்டு பெல் அடித்ததும் முதல் ஆளாய் வெளியே வந்து ரன்னிங்கில் இருந்த திருவண்ணமலை பஸ்ஸைப் பிடித்து பஸ் ஸ்டாண்ட் வந்தேன். வழக்கமாகப் போகும் பாருக்காய் நடந்து கொண்டிருந்தபோது சின்ன கடைத் தெருவில் சாமி எதிரில் வந்தார்

வாத்தி வா உன்ன பாக்கதான் வந்தேன் வா போலாம்” 

என கலைக்கல்லூரி மைதானத்திற்கு அழைத்து வந்தார். நான் பதில் எதுவும் பேசவில்லை. அவர் பின்னாலேயே நடந்து வந்தேன். ஒரு மணி நேரம் ஆகியிருக்கும் ஒன்றுமே பேசிக்கொள்ளாமல் உட்கார்ந்தும் நடந்துமாய் மெல்லச் சூழ்ந்த இருளை நிலவை நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்இன்னும் பத்து நிமிடங்கள் கழிந்திருக்கும். என் முதுகிற்குப் பின்னால் கொலுசொலியும் புடவை சரசரப்பையும் செருப்பு சப்தத்தையும் கேட்க முடிந்தது. சப்தம் நின்றதும் மெல்ல முகம் உயர்த்திப் பார்த்தேன். அகலப் பொட்டு வைத்த ஒரு பெண்மணி நின்றுகொண்டிருந்தார். அருகில் ஒரு சிறுமி. சாமி தொண்டையைக் கனைத்துக் கொண்டு உக்காருங்க என்றார்

எதுவும் பேசாமல் அந்தப் பெண்மணியும் சிறுமியும் அமர்ந்தனர். நான் இருவரையும் பார்க்க சங்கோஜப்பட்டேன்ஒருவழியாய் அவரைப் பார்த்து புன்னகைத்தேன். அந்தப் பெண்மணி என்னை ஆழமாய் பார்த்தார் போலிருந்தது. நாற்பத்தைந்து வயதிருக்கலாம். மாநிறம். கனத்த சாரீரம். அமானுஷ்ய புதிர் முகம். முகத்தை மீண்டும் மீண்டும் பார்க்கவேண்டும் போலிருந்தது. ஒருவேளை அந்த அகலச் சிவப்புப் பொட்டு காரணமாய் இருக்கலாம். அவ்வளவு பெரிய பொட்டு வைத்த யாரையும் அதுநாள் வரை நான் பார்த்திருக்கவில்லை. சிறுமிக்கு பத்து வயதிருக்கும். பாவடை சட்டை அணிந்திருந்தாள். கனத்திருந்த மெளனத்தை உடைத்துக் கொண்டு

”என்ன க்ளாஸ் படிக்கிற பாப்பா” என்றேன்

”அஞ்சாவது”

“எங்க படிக்கிற”

”தேனிமலை ஸ்கூல்ல”

அப்போதுதான் சாமி கேட்டார்

“நீ எந்த பள்ளிகோடத்துலயா இருக்க?”

”கீழ்பெண்ணாத்தூர் ஹை ஸ்கூல்”

”தெனம் போய்ட்டு வந்துர்ரயா”

”ஆமா”

மீண்டும் மெளனமானோம்

இப்போதுதான் கவனித்தேன். அந்தப் பெண்மணி கையோடு ஒரு ஒயர் கூடையை எடுத்து வந்திருந்தார். அதில் ஒரு சாப்பாட்டுக் கேரியர் இருந்தது. ஒரு வார்த்தை கூட பேசாமல் கேரியரை திறந்து டிபன் பாக்ஸின் மூடிகளைத் திறந்தார். மீன் வாசனை இதமாய் பரவியது. ஒரு பாக்ஸில் பொரித்த மீன்கள் இருந்தன அதை எங்கள் முன் வைத்தார். சாமி இடுப்பிலிருந்து ஒரு குவாட்டர் பாட்டிலை உருவினார். ஒயர் கூடையில் இரண்டு எவர்சில்வர் டம்ளர்களும் தண்ணீர் பாட்டிலும் இருந்தன. அந்தப் பெண்மணியே எல்லாவற்றையும் வெளியில் எடுத்து வைத்தார். எனக்கு வேணாம் சாமி என மறுத்தேன். அவர் சட்டைசெய்யாமல் குவாட்டரை இரண்டாய் டம்ளரில் ஊற்றினார். லேசாக தண்ணீர் ஊற்றி கையில் எடுத்துக் கொடுத்தார்.



பெண்கள் முன்னால் குடித்ததில்லை. மீண்டும் மறுக்க வாயெடுத்தேன். குடி என்ற குரல் அழுத்தமாய் கேட்டது. சற்றுத் திகைத்து அப்பெண்மணிக்காய் திரும்பினேன். பரவால்ல குடி என்றார். வெண்கலக் குரல். லேசாகத் தடுமாறிப் போய் ஒரே மூச்சில் இழுத்துவிட்டு முன்னே வைக்கப்பட்டிருந்த ஒரு மீன் துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டேன். சாமி நிதானமாக குடித்தார். இரண்டு தட்டுகளை முன்னால் வைத்து சாதம் போட்டார். கிண்ணத்திலிருந்து மீன் குழம்பு ஊற்றினார். நல்ல வாசனை. நல்ல பசி. அவசர அவசரமாய் அள்ளிப் போட்டுக் கொண்டேன்.  

அந்தப் பெண்மணி ஒரு காலை மடித்தும் ஒரு காலை ஊன்றியும் அமர்ந்திருந்தார். நிலவு அவரின் தலைக்குப் பின்னே ஒளிர்ந்து கொண்டிருந்தது. என் கூச்சம் குறைந்து அவர் முகத்தைப் பார்த்தேன். அணிந்திருந்த மூக்குத்தி நிலா வெளிச்சத்தில் பளீரிட்டது. கருத்த முகத்தில் வட்டப் பொட்டும் ஒளிர்விடும் மூக்குத்தியும் உயர்ந்த ஆகிருதியும் எனக்குள் மெல்லிய நடுக்கத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் அவரைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். கருமாரியம்மனைப் போலிருப்பதாகப் பட்டது.. மெல்ல என்னவென்று தெரியாத பயம் அடிவயிற்றைக் கவ்வியது. ஒரு வேளை இதெல்லாமே மாயமோ? இந்த சாமி சிவனோ? இந்த அம்மா அம்மனோ?... என்னோடு விளையாடிப் பார்க்கிறார்களோ?.. பயம் இப்போது வயிற்றிலிருந்து பந்தாய் சுருண்டு மேலெழுந்தது.. இன்னும் கொஞ்சம் போட்டுக்கோ என்றவாறே அந்த அம்மா சாமியைப் பார்த்து சொன்ன போது அவரின் பெரிய கண்கள் மினுங்கின. குரல் கோவில் மணியைப் போலிருந்தது. அந்த பயப்பந்து இப்போது தொண்டைக்கு வந்துவிட்டது. உடல் நடுங்க எழுந்தேன். என்னைச் சுற்றி என்னவோ நடக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். ஒரு கணம் கூட தாமதிக்கவில்லை. என் வீடிருக்கும் திசையைப் பார்த்து ஓட ஆரம்பித்தேன்.

- மேலும் 

Featured Post

test

 test