Tuesday, May 21, 2013

திரும்புதல்


உன்னிடமே வந்துவிட்டேன்.

இதோ இந்தக் கோடைக்கும், நம் நகரத்திற்கு சிவப்பு மலர்கள் வந்துவிட்டன. நெருப்பு மலர். நெருப்பு பூத்த மலர். மலர்த்தீயில் உன்னை மலர்த்தி முத்தமிட்ட நாளும் நினைவிற்கு வருகிறது. ஐயோ, நினைவின் குரல் வளையைக் கடித்து துப்பிவிடலாம் போலிருக்கிறது. சரி இக்கோடையில் மலர்ந்த தீ மலரில் நாம் வேறுவிதம் மலர்வோம்.

அவநம்பிக்கை மிளிரும் உன் கண்களிலிருந்து இது இன்னுமோர் உச்சத்திற்கான வேட்கைஇன்னொரு வேட்டைக்கான பசப்புஇன்னும் ஒரு, இன்னும் ஒரே ஒரு நரம்பதிர்விற்கான குயுக்திஎன்பதாய் உணர்ந்து கீழ்மையடைகிறேன். என் சிறுமைகளை களைந்துவிட்டு வந்தேன். உன்னிரு விழியுயர்வில் அத்தனையும் உயிர்த்துவிட்டன. உன் கருணை மொத்தமும் ஒளிரும் விழிகளினால் என்னைச் சகலத்திலிருந்தும் தப்புவி.

உன்னை விடச் சிறந்த இன்னொன்றைக் கண்டடைய முடியாமல் உன்னிடமே திரும்பி வருகிறேன். கண்டிருந்தால் அப்படியே போயிருப்பேன்தான். என்னிலும் சிறந்த இன்னொன்றை நீ தேடிப்போகவில்லை என்பதறிவேன். உன்னுடனிருக்கும்போதே நான் சிறந்தவனில்லை என்பதையும் அறிந்திருந்தேன். உன் அலகிலாக் கருணை என்னையும் சேர்த்தணைத்துக் கொண்டது. அக்கருணையின் மீதிருக்கும் நம்பிக்கையிலேயே திரும்பி வந்தேன்.

இம்முறை சற்றுத் தெளிந்து, மலர்ந்து, கனிந்திருக்கிறேன். இந்நிதானம் ஒரு போதும் என்னைப் பிறழச் செய்யாதென நம்பிக்கையுறுகிறேன். பரவசமோ சிலிர்ப்போ பிறழ்வின்றி யறியா என்னின் பழகிய நான் திகைத்துப் போகலாம்தான். இதுநாள்வரை அதன் கால்தடம் தடவித் தொடர்ந்து பரவச சிலிர்ப்படைந்த குருட்டு வெளவால், திசைகளற்ற வெளியில் தோன்றிய திறப்பையும் கைவிட்டு அந்தரத்தில் தலைகீழாய் தொங்கும்தான். கைவிடப்படுவேன்தான். ஆனாலும் என் கண்ணே, என்னின் பழைய அறிதல் சிலிர்ப்பின் கசடாய் சலிப்பைத் தந்தது. ஒரு கட்டத்தில் சிலிர்ப்படங்கி சலிப்பு மட்டுமே மிகுந்திருந்தது. போதும். கருணையே, சகலத்திலிருந்தும் என்னைத் தப்புவி.

என்னில் நாமை உணர்ந்த கணம்நான் கரைந்த முத்தநொடிசகலமும் கரைந்த உடற் தழுவல் - பிறழ்வைத் தடம் பிடித்த பரவச முதற் கணம்- எல்லாமும் தொலைத்து வந்திருக்கிறேன். சிலிர்ப்பின் மறைமுள் என் தொண்டையைத் தைத்தது உட்பட. உன்னை புத்தம் புதிதாய் அறிவதிலிருந்து என்னைப் புதுப்பிப்பேன்.

நான் உன்னிடமே வந்துவிட்டேன். என்னைத் தப்புவி

No comments:

Featured Post

test

 test