Monday, March 11, 2013

கனாத் தழுவல்


மாலைச் சூரிய கிரணம் போல்
தகதகத்த
இரட்டை ஆண்மகவுகளை
ஈன்றெடுத்தேன்
இப் பாலையின் சாலையோரம்
திடீரென முளைக்கும்
ஏற்கனவே பூத்த மரங்களைப் போல்
கண் விழித்ததும்
எழுந்துநின்றுகுதித்துதாவிஓடிஆடி
நொடிக்கு நொடி பூப்பூவாய் விரிந்தனர்
நிலாத் தேய்ந்த இரவுகளில்
எதையோ மீட்டெடுக்க வேண்டி
வற்றிய நதியின் மணற் புதைவுகளெங்கும்
அலைந்துவிட்டு திரும்புபவனின்
அரவம் கேட்டு
வாயிலுக்கு ஓடிவருகிறார்கள்*
தொய்வடைந்த அவன் உடல் மீது
தாவுகிறார்கள்
கருவடைந்து குழிவிழுந்த அவன் முகத்தை
பூவிரல்களில் ஏந்தி முத்தமிடுகிறார்கள்
சோர்ந்து விழுந்து
உறங்கிப்போனவனின் உடலைத்
தம் பிஞ்சு மடியில் கிடத்தித்
தலைக் கோதுகிறார்கள்
அலைகளற்ற சமுத்திரத்தில்
உருவான பேரலையொன்று
அவன் கால் நனைத்துப் போனதை
அறியாமலே உறங்கிப் போனான்
காலையில் சற்றுத் தாமதமாய்
அவனும் நானும்
ஒரு தங்க மணற் துகளும்
விழித்தெழுந்தோம்

* ஓடிவருகிறார்கள் பதம் ராசு அண்ணன் தந்தது

No comments:

Featured Post

test

 test