Tuesday, June 19, 2012

உயிர்த்திருத்தல்

சதத் ஹசன் மண்ட்டோவின் தலைப்பு மறந்து போன சிறுகதை ஒன்றில் அப்பா கதாபாத்திரமொன்று தொடர்ந்து வீட்டை/ தரையை சுத்தம் செய்தபடி இருக்கும். சிறு சிறு கூரான துரும்புகள் எங்கே தன் சின்னஞ்சிறு மகனை காயப்படுத்திவிடுமோ வென தொடர்ந்து அஞ்சியபடி இருக்கும். கடந்த மூன்று வருடங்களாய் நானும் அக்கதாபாத்திர மனநிலையில்தான் பெரும்பாலும் உழல்கிறேன். இந்த அசட்டுத்தனமான எண்ணங்கள், தேவையற்ற பயங்கள் யாவும் புதுத்தகப்பர்களின் இயல்பு - போகப்போக சரியாகிவிடும் என என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்ட ஆரம்ப நாட்கள், இப்போதைய என்னைப் பார்த்து கேலியாகச் சிரிக்கின்றன. இன்னமும் மோசமான, பயங்களின்/ கற்பனைகளின் உச்சத்திற்குத்தான் நகர்ந்திருக்கிறேனே தவிர எவ்வித சமநிலை திரும்பலும் இல்லை. சொல்லப்போனால் பயம் துவங்கிய நாளிலிருந்து அடுத்த ஒண்ணரை வருடத்தில் இரட்டிப்பானதே தவிர சமநிலைக்குத் திரும்பவேயில்லை. இந்த பயங்களும், கற்பனைகளும், மிகைகளும் என்னைப் பலவீனனாக்கி இருப்பதை தனிமையில் புரிந்து கொள்கிறேன். ஏற்கனவே சோம்பேறியான என்னை வீட்டை விட்டு நகரவே நகராத அதி சோம்பேறியாக மாற்றியிருப்பதும் உண்மை. ஆனால் என் வாழ்வின் மிக சந்தோஷமான,உயிர்ப்பான நாட்கள் இவை என்பதையும் மறுப்பதற்கில்லை ( ஆமாம் நீ எப்போதுதான் துக்கமாயிருந்தாய்?)

பெரியவன் லொடலொட வென பேசிக்கொண்டே இருக்கிறான். சின்னவன் அவன் பேச்சைப் பார்த்து சொற்களற்ற குரலை அதே பாவத்தில் உயர்த்துகிறான். நால்வருமே சேர்ந்து கோரஸாய் கத்தி அவ்வப்போது வீட்டை அலற வைக்கிறோம். ஓடி, குதித்து, விழுந்து, வாரி, சுவறில் மோதி, பொருட்களை உடைத்து, கத்தி, சிரித்து, பயந்து, பயமுறுத்தி, பாடி, ஆடி ஒவ்வொரு நொடியையும் உயிர்ப்பாக்குகிறோம். புற உலக மனிதர்கள் தவிர்த்து எண்ணற்ற கதைகள், கதாபாத்திரங்கள், விலங்குகள், பூச்சிகள், பறவைகள், பேய்கள்(Bயா,காஞ்சனா) என எங்களின் உலகம் சகல வஸ்துக்களாலும் நிரம்பி வழிகிறது. பிங்குவும் ஷான் த ஷீப்பும் எங்களின் மூன்றாம் நான்காம் பிள்ளைகள். ஒரு உச்சத்தில் இதயம் விரிந்து கண்ணில் படும் அத்தனை சிறார்களும் எங்களின் பிள்ளைகளாக பாவிக்கும் பெரும்கருணையும் வந்து சேர்ந்திருக்கிறது.


அவதார், ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட், ஹேப்பிஃபீட், குங்க்பூபாண்டா, தமிழ் ரைம்ஸ், காக்கா –நரி கதைகள், குத்துபாட்டுக்கள் போன்றவைகளால் கூடம் நிறைகிறது. சோதனை முயற்சியாக சென்ற வாரத்தில் காஸ்ட் அவே வை பெரியவனோடு சேர்ந்து பார்த்தேன். டாம் ஹாங்க்ஸ் நெருப்பை வரவழைக்கும் காட்சிக்கு கண்கள் வியந்து ஆர்ப்பரித்தான். மெல்ல கதையை அவனுக்கேற்றார்போல் மாற்றி அங்கிள் டாமின் அவல நிலையை அவன் வார்த்தைகளில் மொழி பெயர்த்து ( பல்ல சரியா தேய்க்காததால அங்கிள்க்கு சொத்த பல்லு வந்திருச்சி, பிஷ் சாப்ட்றாம்பா, அங்கிள பியா கட்ச்சிருச்சா, காஞ்சனா(படம் வரையப்பட்ட பந்து) கடல்ல வுந்திரிச்சி, செம செமயா மழ, போட்ல போறான்) பாதிப் படம் பார்த்தோம். அலைகள் டாமை மீண்டும் கரை சேர்த்தபோது இவன் சோர்ந்து ”டி.வி பாத்தா கண்ணு கெட்டுடும்” என திடீர் நல்ல பிள்ளையாகி எழுந்து போய் சுவிட்சை நிறுத்தினான். பின்போர் இரவில் சில்ரன் ஆப் ஹெவன் படத்தையும் அவனுக்கு மொழி பெயர்த்தேன். சாகஸ காட்சிகள் எதுவும் இல்லையென்றாலும் அச்சிறுவர்களின் முக பாவனைகள் இவனைப் பெரிதும் ஈர்த்தது. அலி ஓடி ஜெயிக்கும் காட்சிக்கு பெரியவன் ஆர்ப்பாட்டமாய் சிரித்தும், என் மனைவி கண்கள் நிறைந்துமாய் இரு வேறு மனப் பதிவுகளை வெளிப்படுத்தினர். தாய்மையின் உச்சத்தில் அலியும் சாராவும் இப்போது வளர்ந்திருப்பார்களா? சினிமா நடிக்கிறார்களா? எனக்கேட்ட மனைவிக்கு இணையத்தில் தேடிப் பார்த்து சொல்வதாய் சொன்னேன்.
 0 
சமீபமாய் மீண்டும் ஓஷோவை கேட்க ஆரம்பித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை கேட்கும்போதும் ஓஷோவின் உரைகள் புத்துணர்வைத் தருவதென்னவோ உண்மை. தம்மபதா குறித்த உரைகளை தொடர்ந்து கேட்டதன் விளைவு, முன்பொரு காலத்தில் நான் விபாஸனா பயின்றது நினைவிற்கு வந்தது. இணைய நண்பர்கள் வழியாய் தம்மபதாவின் மூல வடிவம், மகாவசம்சம் போன்றவைகளை படிப்பதற்காக தரவிறக்கி வைத்திருக்கிறேன். மிக முக்கியமாக விபாஸனாவை மீண்டும் தூசி தட்ட வேண்டும் என்ற எண்ணமும் வந்திருக்கிறது. செய்ய வேண்டியவைகளின் பட்டியலில் தினம் ஒன்று கூடுவதாக இன்றளவும் வாழ்வு அமைந்திருப்பதில் திருப்தியே. என் ப்ரியத்திற்குறிய சோம்பலன் மிக நீளமான to-do பட்டியலில் புதிய வார்த்தை ஒன்றை இன்றும் எழுதிவிட்டு தூங்கப் போகிறான். தூக்கம் தழுவுவதற்கு முன்பு என்னுடைய கனவு இடத்தின் (மரங்கள் சூழ்-நீர் சூழ்-மலைகள் சூழ் ) சாணத் தரையில் பாய் விரித்து சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களில் ஒன்றைத் தேடியெடுத்து முதல் பக்கத்தைப் பிரிக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக அந்த மென்சூழலிலும் தூக்கமே தழுவுகிறது. நீங்கள் கிம்-கி-டுக் கின் the isle படத்தில் நீர் அசைவுடன் -படகு வீட்டில்- காற்றின் முணுமுணுப்போடு இருவர் தூங்கும் காட்சியை நினைவுபடுத்திப் பார்க்கலாம். நானும் அக்காட்சியைத்தான் கனவப்போகிறேன்.

Featured Post

test

 test