Sunday, July 1, 2012

Gangs of Wasseypur - 1

நிலக்கரிச் சுரங்கத்தில் கொத்தடிமை வேலை பார்க்கும் ஷாகித் கானிற்கு ஒரு செய்தி வருகிறது. அவன் மனைவியின் பிரசவத்தில் சிக்கல். செய்தி கொண்டு வந்தவனை சுரங்க முதலாளியின் அடியாட்கள் விரட்டிவிடுவதை பார்த்துவிடும் சக அடிமை ஒருவன் கிசுகிசுப்பாய் அச்செய்தியை சொல்கிறான். கண்காணிக்கும் அடியாட்களிடம் வீட்டிற்கு போக அனுமதி கேட்கிறான். மறுக்கப்படுகிறது. பலவந்தமாய் வெளியே போகிறான். கொட்டும் மழையில் வீட்டை அடைகிறான். ஆறு மணி நேரம் வலியில் துடித்த அவன் மனைவி ஆண் குழந்தையை பிரசவித்துவிட்டு இறந்துபோகிறாள். மனைவியைப் புதைத்துவிட்டு நிலக்கரிச் சுரங்க அடியாட்களை ஷாகித் கான் நையப் புடைக்கிறான். தடிதடியான அடியாட்களை சக கொத்தடிமைகளின் உற்சாக ஊக்குவிப்புக் குரல்களின் பின்னணியில் ஷாகித் கான் அடித்து வீழ்த்துவதை முதலாளி பார்க்கிறார். ஷாகித் கானை வேலையிலிருந்து விடுவித்து மேய்க்கும் அடியாளாக மாற்றுகிறார். இப்போது ஷாகித் கான் முன்னாள் சக வேலையாட்களை நையப் புடைக்கிறான். வீடுகளை எரிக்கிறான். ஆற்றாமையில் ஒருவன் ”நீயும் எங்களில் ஒருவன் தானே?”  என கேட்கிறான். ஷாகித் கான் அவனை நெட்டித் தள்ளி உதைக்கிறான்.

 கேங்ஸ் ஆஃப் வாஸிபூர் படத்தில் வரும் மேற்சொன்ன காட்சி படத்தை முழுவதுமாகப் புரிந்து கொள்ள ஒரு சின்ன உதாரணம். முதலாளி வர்க்கத்தின் அசல் முகத்தையும் முதலாளி களாக விரும்பும் சாமான்யர்களின் ரத்தமும் சதையுமான போராட்டத்தையும் எழுபது வருட இந்திய அரசியல் பின்னணியோடு மிக அழுத்தமாய் நம் முன் வைத்திருக்கிறார் அனுராக் காஷ்யப். இவரின் இதற்கு முந்தைய அரசியல் படமான 2009 இல் வெளிவந்த குலால் ராஜபுத் அரசியலின் ‘பின்னணி’ யைத் தோலுரித்துக் காட்டிய படம். இந்திய சினிமாக்களைப் பொறுத்தவரை சரியான அரசியலை முன் வைக்கும் படங்கள் மிக சொற்பமானவை. அதில் குலால் படத்திற்கு மிக முக்கியமான இடம் உண்டு. தற்போது வந்திருக்கும் கேங்க்ஸ் ஆஃப் வாஸிபூர் படம் குலாலைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. அனுராக் காஷ்யப் தன் சாதனையைத் தானே முறியடித்திருக்கிறார்.

வாஸிபூர் தற்போது ஜார்கண்ட்  மாநிலத்திலுள்ள தன்பாத் மாவட்டதிலிருக்கும் சிறுநகரம். இதற்கு முன்பு பீஹார் மாநிலத்தின் கீழும் அதற்கும் முன்பு பெங்கால் கீழும் இருந்தது. இங்கு பெரும்பான்மையினர் முஸ்லீம்கள். முஸ்லீம்களில் இறைச்சி வெட்டும் தொழிலைப் பிரதானமாகக் கொண்டிருக்கும் குரேஷிகளுக்கும் இன்னொரு பிரிவினரான சன்னி முஸ்லீம்களுக்கும் (பட்டான் என்று பொதுவாக அழைக்கப்படுவர்) எப்போதும் பகை இருந்தது. இந்த இரண்டு குழுக்களுக்கு இடையே நிகழும் வன்முறையும், போட்டியும், பழியும்தான் வாஸிபூரின் கதைக் களம். மொத்தக் கதையும் ஷாகித் கான் என்கிற பட்டான் குடும்பத்தின் பார்வையிலிருந்து சொல்லப்படுகிறது. நல்ல Vs கெட்ட என்கிற வழக்கமான சினிமாக் கதை சொல்லும் உத்திக்குப் பதிலாய் கெட்ட Vs கேடுகெட்ட என்கிற அடிப்படையில் பொருத்தி கதை சொல்வது. இந்த வகைக் கதை சொல்லும் உத்தியை செர்ஜியோ லியோனிலிருந்து, குவாண்டின் டராண்டினோ வரைக்குமாய் மிக சிறப்பாய் கையாண்டார்கள். இந்திய சினிமாவில் இவ் வகைக் கதை சொல்லும் உத்தி இப்படத்தில்தான் முழுவதுமாகச் சாத்தியமாகி இருக்கிறது. பின்னணி வரலாறை விவரிக்கும் டாக்குமெண்டரி ஸ்டைல் குரல், பரவசமான கொலைகள், களிப்பூட்டும் பாலியல் வசைகள் என படம் முழுக்க டராண்டினோவின் சாயலில் எடுக்கப்பட்டிருக்கிறது. டைட்டில் கார்ட் உள்ளிட்ட சில காட்சிகளில்  இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் படத்தின் நேரடி உத்தி- பாதிப்பு தெரிகிறது. 


இதுவரை படம் பார்க்காதோர் இனிமேல் வரும் பதிவுகளை படம் பார்த்துவிட்டு வாசிக்கவும். கதையை முழுவதுமாகப் பேச வேண்டிய தேவை இருக்கிறது. 


மேலும்

4 comments:

ராம்ஜி_யாஹூ said...

நன்றி அய்யனார்

உங்கள் பதிவே (பதிவுகளே) படம் பார்க்கும் உணர்வைத் தந்து விடும்

அதுவும் ஹிந்தி வசனகளைக் கேட்டாலே காதில் ஈயத்தைக்
காய்ச்சி ஊற்றும் உணர்வு கொள்ளும் என்னைப்
போன்ற பார்வையாளனுக்கு

பிச்சைப்பாத்திரம் said...

//இனிமேல் வரும் பதிவுகளை படம் பார்த்துவிட்டு வாசிக்கவும். கதையை முழுவதுமாகப் பேச வேண்டிய தேவை இருக்கிறது.

// என்னா வில்லத்தனம்?

Unknown said...

நானும் படம் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறேன். ஆனால் இந்தி புரியாமல் எப்படி என்று யோசிக்கிறேன். ஆனால் எப்படியும் பார்த்து விடுவேன்.
-ஜெகன்

Unknown said...

நானும் படம் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறேன். ஆனால் இந்தி புரியாமல் எப்படி என்று யோசிக்கிறேன். ஆனால் எப்படியும் பார்த்து விடுவேன்.
-ஜெகன்

Featured Post

test

 test