Wednesday, January 11, 2012

தமிழ் நாவல்கள்- ஒரு அழகியல் பார்வை பாகம் 2

நகுலன் கவிதைகளை முன்பே வாசித்திருந்தாலும் இரண்டாயிரத்து ஏழாம் வருட வாக்கில்தான் நகுலன் நாவல்களின் தொகுப்பு - ஐ வாசிக்க முடிந்தது. 1965 லிருந்து 2002 வரை அவரால் எழுதப்பட்ட நிழல்கள், நினைவுப்பாதை, நாய்கள்,நவீனன் டைரி,சில அத்தியாயங்கள்,இவர்கள்,வாக்குமூலம்,அந்த மஞ்சள் நிற பூனைக்குட்டி என்கிற வெவ்வேறு பெயரில் எழுதப்பட்ட ஒரே தளத்தில் இயங்குகிற நாவல்களின் தொகுப்பை மொத்தமாய் படிக்க முடிந்தது. வாசித்தவரை நகுலன் கதை என்ற ஒன்றை சொல்ல மெனக்கெடவே இல்லை. நனவோடையில் தன் எண்ணங்களை,கொந்தளிப்புகளை, உதிர்த்துக் கொண்டே செல்கிறார். அது வாசகரிடத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்தோ அவை கதையாக, படைப்பாக உருமாறுகிறதா என்பதைக் குறித்தோ நகுலனும் சரி அவர் படைப்புகளும் சரி பெரிதாய் கவலைப் பட்டுக்கொள்ளவில்லை.

மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட சுயத்தின் வெளிப்பாடுதான் நகுலனின் எழுத்து. நவீனன் அல்லது நகுலன் என்கிற பெயரில் உலவும் ஒருத்தருக்கு நேரும் மிகவும் தனிமைப்பட்ட அனுபவங்களே இவரின் படைப்புகள். எழுத்தின் போதையை இவர் நன்கு அனுபவித்திருக்கிறார். பரவலாய் வாசிப்பதும் மிகவும் உள் சார்ந்த தனிமையில் ஆழ்ந்துபோவதும் இவரது பிரதான பாத்திரத்தின் இயல்பாய் நாவல்களில் வெளிப்படுகிறது. வளர்ச்சிக்காய் புகழுக்காய் தத்தமது சுயங்களை தொலைக்கும் மனிதர்களின் மீதான எள்ளலும், கோபமும் எல்லாவிடங்களிலும் வெளிப்படுகிறது.

பெரும்பாலான வாசகர்கள் நகுலனை அவர் படைத்த சுசீலாவின் மூலம்தான்
அடையாளப்படுத்துகிறார்கள். நினைவுப்பாதையில் சிவன் பாத்திரம் யார் சுசீலா? எனும் கேள்விக்கு என் மனதின் பைத்திய நிழல்தான் சுசீலா என்கிறார் மேலும் அவள் திருமணமாகிப் போய்விட்டாள் என்கிற தகவலையும் சொல்லுகிறார்.இல்லாத ஒன்றினை உருவாக்கி கொண்டு உருகும் மனதை பிரம்மிப்பாய் பார்க்க வேண்டியிருக்கிறது. தன்னை ஒரு தோல்விக்கலைஞன் என சொல்லிக்கொண்ட நகுலன் தோற்பதின் சுவையறிந்திருக்க வேண்டும்.உள்விழிப்புபெற்ற மனிதனால் மட்டுமே தோல்வியை கொண்டாட முடியும். ஒஷோ வாழ்வைப் பற்றிக் குறிப்பிடும்போது தோற்பவர்கள் மட்டுமே இந்த விளையாட்டில் ஜெயிக்க முடியும் என்கிறார். நகுலனுக்கும் அதே போன்றதொரு மனோநிலை வாய்த்திருக்க வேண்டும்.

தன் எழுத்துக்களை நண்பர்களிடம் கொடுத்துவிட்டு கூடவே அஞ்சலட்டையும் இணைத்து கொடுக்கும் வழக்கமும், கடிதத்திற்கான எதிர்பார்ப்புகளும், தாமதமானால் எழும் கோபங்களும் எந்த பாசாங்குமில்லாமல் புனைவாகவும் பதியப்பட்டிருக்கிறது. எழுத்து வணிகர்களை அவர்களின் சொந்த பெயர்களிலேயே தன் படைப்புகளில் கிண்டலடித்திருக்கிரார். நகுலனின் எழுத்தை நனவோடை உத்தி என விமர்சகர்கள் வரையறுக்கிறார்கள். இன்னும் சிலர் நகுலன் பெரிதாய் எதையும் சாதித்து விடவில்லை எனவும், நோயின் தாக்கத்தால் எழுத்தாய் கொட்டியவற்றை வாசகர்கள் புரிந்து கொள்ளாமல் பிரம்மிப்பாய் அனுகுகிறார்கள் என்றுமாய் எழுதி வருகிறார்கள். அவை குறித்து தேர்ந்த வாசகர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. உண்மை என்கிற ஒன்று கூரிய வாளினைப் போல இவர் படைப்புகளின் பளபளத்துக் கொண்டிருப்பதை நெருங்கினால் அறிய முடியும். வாழ்வின் அபத்தங்களை,துயரங்களை எள்ளலோடும் வெறுமையோடும் பதிவித்தவர்களில் நகுலன் முக்கியமானவர்.

பின்நவீனம் குறித்தான ப்ரக்ஞை தமிழில் ஏற்பட்ட பின்பு பெண்ணியம், தலித் இலக்கியம், விளிம்பு நிலை மொழி போன்ற பல்வேறு திறப்புகள் தமிழில் நிகழ்ந்தன. பல புதிய கவிதைகள் பெண் மொழியில் எழுதப்பட்டன. ஆண் பெண் பேதமில்லாமல் கவிதைகளில் உடல் மொழி பேசப்பட்டது. போலவே தலித் எழுத்துக்களும் வட்டார வழக்குகளும் செல்வாக்கு பெறத் துவங்கின. தமிழில் பின் நவீனத்துவ நாவல் எழுதுவதற்கான முயற்சிகள் பலரால் மேற்கொள்ளப்பட்டன. சிலரால் அதில் வெற்றியும் பெற முடிந்தது. அந்த வகையில் ரமேஷ்-ப்ரேம்களின் சொல் என்றொரு சொல் நாவலை பின்நவீனத்துவ நாவல் வகைமையில் சேர்த்து விட முடியும்.

இந்நாவல் தமிழின் அகமரபுக்கும் புறமரபுக்கும் இடையூடாக ஓடும் ஒரு குறியியல் நாவலாகவும் கதையாடல்கள் பற்றிய கதையாடல்களின் நாவலாகவும் அமைந்திருக்கிறது.சில கதைகளால் கட்டப்படும் தமிழ் மனம்தான் வேறு கதைகளால் கட்டவிழ்க்கவும் படுகிறது என்கிறது. வார்த்தையாடல்களின் கவர்ச்சியும் மொழியின் வசீகரமும் நம்மை வேறு ஏதோ ஒரு உலகத்தில் புரியாத ஒரு வெளியில் தொலைக்கச் செய்து விடுகிறது. காமமும்,புணர்வும், விலங்குகளின் நடமாட்டங்களும், மனித மனங்களின் உள்ளூடாக பயணித்திருப்பதும் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது. புரட்சிகளின் வடிவமாக, அடக்குமுறைகளின் மீறலாக, புனிதங்களின் கட்டுடைப்பாக அதீதன் வரையறுக்கப்படுகிறான். காலத்தை மந்தமாக்கி சொற்கள் எங்கெங்கோ அலைகின்றன. இதன் உள்ளடக்கம் 24 தலைப்புகளில் வெவ்வேறு கதையாடலை முன் வைக்கிறது.வாசிப்பின்பம் என்பதை பிரதியோடே உணர முடிவதும். சிதறலாய் கதையல்லாத கதை ஒன்றை சொல்வதும், மய்யமான கதை சொல்லும் பாணியை தகர்த்திருப்பதும் இந்நாவலின் பின்நவீனத்துவ வடிவத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.

தொடர்ந்து இறுக்கமான எழுத்துக்களை பற்றியே பேசுவது போன்ற உணர்வை எழுதும் போதே பெற முடிகிறது. இறுக்கத்தைத் தளர்த்த நாஞ்சிலாரைப் பற்றிப் பேசலாம். வெகுசனக் கதைப் பரப்பில் இருந்தபடியே இலக்கியத் தரத்தை தொடும் எழுத்துதான் இவருடையது. ஒரு தேர்ந்த திரைக்கதைக்கான முழு உத்திரவாதமும் இவரது நாவல்களில் காண முடியும். வழக்கமான கதைகளாக இருந்தாலும் அவற்றை தன் கூர்மையான அவதானிப்பால், நுட்பமான விவரணைகளால் நாஞ்சில் தேர்ந்த இலக்கியப் பிரதியாக மாற்றிவிடுகிறார். நாஞ்சிலின் தலைகீழ் விகிதங்கள் அதிகம் பேசப்பட்ட நாவல். தங்கர் பச்சான் இயக்கத்தில் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாகவும் வந்தது. கதையின் சிவதாணுவை சேரன் கச்சிதமாகவே காட்சிப்படுத்தியிருப்பார். நாவலை சிதைக்காத நல்லதொரு சினிமாவில் சொல்ல மறந்த கதையும் அடக்கம். அடுத்ததாய் எல்லோருக்கும் பிடித்த இவரின் நாவல் சதுரங்க குதிரைகள் .

என்னளவில் மிகவும் ஒன்றிப்போய் வாசித்த இவரின் படைப்பு எட்டுத் திக்கும் மதயானை ஒரு வகையில் இந்நாவல் என் நாடோடி மனநிலைக்கு தீனி போடுவதாய் அமைந்திருந்தது. பி.காம் கடைசி வருடம் படிக்கும் பூலிங்கம் தன் வகுப்பில் படிக்கும் பெண்ணிடம் வெகு சாதாரணமாய் பேசிய காரணத்திற்காக தவறாய் புரிந்து கொள்ளப்பட்டு அபபெண்ணின் தகப்பனாரால் அவமானப்படுத்தப்படுகிறான். வன்மம் கொண்ட பூலிங்கம் அவரின் வைக்கோல் போருக்கு தீவைக்கிறான். உயிருக்கு பயந்து ஊரை விட்டு ஓடுகிறான். ஆந்திரா,கர்நாடகா,கோவா என அலைந்து திரிகிறான். பெரும்பாலும் ரயில் நிலையங்கள், ப்ளாட்பாரங்கள் என நாட்கள் நகர்கின்றன. ரயிலில் ஐஸ்கிரீம் விற்பது,கோவாவிலிருந்து மது புட்டிகள் கடத்துவது. போதை மருந்து கடத்தல், லாரியில் ஓடுவது என வாழ்வு மாறிக்கொண்டே இருக்கிறது. எங்காவது யாராவது எதிரியாக முளைத்து விடுத்துவிடுகிறார்கள். பல சமயங்களில் இவனே இவனுக்கு எதிரியாகிறான். ஒருவழியாய் பாம்பாயில் ஒரு பெரிய சாராய வியாபாரியிடம் தஞ்சமடைகிறன். மிகுந்த பாதுகாப்புகளோடு சாராயம் கடத்துகிறான். நண்பர்கள் வட்டம், புதிதாய் தொழில் ஆரம்பித்தல் என நிலைபெறுகிறது. இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணமான செண்பகம் பம்பாய்கு திருமணமாகி வருகிறாள். அவளின் கணவரிடம் அல்லல்படுகிறாள். பூலிங்கம் அவளை அவனிடமிருந்து மீட்டு புதிதாய் வாழ்வை தொடங்குகிறான். மிகவும் சாதாரண கதை மாதிரித் தோன்றினாலும் கதையோடு முழுவதுமாய் ஒன்றிப் போக வைக்கும் எழுத்து. நாஞ்சிலின் தனித் தன்மையும் அதுதான்.

என் பாட்டி எங்கள் பகுதியிலேயே நல்ல கதை சொல்லி. ஏராளமான நாட்டுப் புறக் கதைகளையும் இதிகாசக் கிளைக் கதைகளையும் தெரிந்து வைத்திருந்தாள். வெற்றிலை எச்சில் தெறிக்க எல்லா மாலைகளிலும் வீட்டு வாசலில் உட்கார்ந்து தெருக் குழந்தைகள் அனைவரும் படையெனச் சூழ்ந்திருக்க உரத்த குரலில் கதை சொல்லுவாள். அவளின் மகன் வயிற்றுக் கடைசிப் பேரன் என்பதால் மிகுந்த உரிமைகளோடும் பெருமிதங்களோடும் அவள் மடியில் புதைந்து கொண்டு கதை கேட்பேன். தமிழ் இலக்கியத்தில் இத்தகையதொரு பாட்டி- பேரன் மடிப்புதைவு உறவு கி.ராஜநாராயணனுக்கும் அவருடைய வாசகர்களுக்கும் நிச்சயம் இருக்கும். தமிழின் ஆகச் சிறந்த கதை சொல்லி கி.ராஜநாயணன்தான். இதை தமிழ் இலக்கிய அறிமுகமுள்ள அனைவரும் வழிமொழிவார்கள் என்பதில் சந்தேகமே கிடையாது. கோபல்ல கிராமம்- கோபல்ல கிராமத்து மக்கள் –அந்தமான் நாயக்கர் இந்த மூன்று நாவலையும் ஒரே மூச்சில் வாசித்து பாட்டியின் அருகாமையை மீண்டும் உணர்ந்தேன்.

கோபல்ல கிராமத்தின் விடியல் - கோட்டையார் வீட்டின் சகோதரர்களின் அறிமுகம்-வழிப்பறி- கொள்ளையர்களை கோபல்ல கிராம மக்கள் எதிர் கொள்ளும் சாகசம்- இடை இடையே அக்கிரமத்தின் நீண்ட நெடிய வரலாறு என ஒரு தேர்ந்த கதை சொல்லி அடுக்கடுக்காய் கதைகளை உயிர்ப்பித்துக் கொண்டே போகும் மாயம் நாவலில் தொடர்ந்து நிகழும். கிராமங்களில் இயல்பாகவே உலவும் மிகைக் கதைகள், முனிக் கதைகள் படிக்கும்போதே பரவசத்தையும் புன் முறுவலையும் ஏற்படுத்தும். பெண் பிம்பங்கள் குறித்தான மிகு புனைவுகள், இயல்பாய் நடக்கும் காமம், உறவு மீறல், கள்ளம் எல்லாமும் அடுக்கடுக்காய் இக் கதைகளில் சொல்லப்படும்.

நாயக்கர் சமூகம் ஆந்திராவிலிருந்து புலம் பெயர்ந்த கதையை விலாவரியாகச் சொல்லி இருப்பார். காடுகளை அழித்து விளை நிலங்களை உருவாக்கியது, பசுக்களை கொண்டு விவசாயத்தைத் தழைக்கச் செய்தது, சமூக அடுக்குகளை உருவாக்குவதென நம் முன்னோர்களின் வாழ்வு கதைகளாய் விரியும். கோபல்ல கிராமத்து மக்களில் இந்தியச் சுதந்திரம், மக்களின் வாழ்வில் அரசாங்கத்தின் தாக்கம் எனவாய் வளர்ச்சியடையும். முழுக்க கரிசல் மண்ணின் வாசனையை இக்கதைகளின் வழியாய் நுகர முடியும். யதார்த்த வாதம், வட்டார வழக்கு போன்ற எழுத்து வகைமைகள் தமிழில் செழிக்க விதையாக இருப்பவர் கி.ரா. இவரை அடியொற்றியே ஏராளமான கரிசல் மண் சார்ந்த படைப்பாளிகள் உருவாகினர். கோவில் பட்டியிலிருந்து தமிழிலக்கியத்திற்கு செரிவான படைப்பாளிகள் கிடைத்தனர். கி.ரா ஒரு வாழும் வரலாறு.

பதின்மத்தின் இறுதியில் என்னை மிகவும் சுழற்றியடித்த நாவலாக தி.ஜானகிராமனின் மோகமுள் ஐ சொல்லலாம். பாலகுமாரன் பெண் பிம்பங்களிலிருந்து மெல்ல விடுபட்டு தி.ஜா வின் பெண் பிம்பங்களில் மாட்டிக் கொண்ட தருணம் அது. யமுனாவையும் பாபுவையும் மோகத்தீயில் எரிந்து போகும் மாமியையும் எனக்குள் வாங்கிக் கொண்ட தருணம் அது. யமுனா என்ற பெயர் கொண்ட பெண்ணையாவது பார்த்துவிட மாட்டோமா? எனப் பைத்தியமாய் திரிந்த காலம் அது. எழுத்து வாசிப்பவர்களை என்னவெல்லாம் செய்யும் என்பதை முழுக்க உணர்ந்தே வந்திருக்கிறேன். மோகமுள்ளின் கனவுத் தன்மை தந்த எழுச்சி தி.ஜா வின் புத்தகங்களை தொடர்ந்து தேட வைத்தது. பாலகுமாரனின் காயத்ரிகளை, ஸ்வப்னாக்களை, மரப்பசு அம்மிணி நிர்மூலமாக்கினாள். மரப்பசு அம்மிணிக்குப் பிறகு நிறமிழந்து போன பெண் பிம்பங்களை நினைத்துத் துக்கமாக இருந்தாலும் பதின்மம் முழுக்க பரவசத்தைத் தந்தவர்கள் என்கிற நன்றியும் எனக்கு எப்போதும் உண்டு. அம்மா வந்தாள், செம்பருத்தி, அன்பே ஆரமுதே, மலர் மஞ்சம் என தி.ஜா வின் நாவல்கள் அனைத்துமே நாவல்களின் ஒழுங்கமைவிற்கான உதாரணங்கள். தமிழ் நாவலின் வடிவத்தையே தி.ஜா ஒரு கட்டுக் கோப்பிற்குள் கொண்டு வந்தார்.

தி.ஜாவை வாசித்து முடித்த பின்பு லா.ச.ரா விற்குத் தாவினேன். இன்றைய மனம் பிறழ்ந்த எழுத்துகளுக்கு முன்னோடியாக லா.ச.ராவைச் சொல்லலாம். நிறைவேறாக் காமம், பால்யத்தின் மீதான ஏக்கம், முழுக்க கனவுப் பிரதேசமென லா.ச.ராவின் கதைக் களன் மாயத் தன்மைக்கு அருகாமையில் வருவது. லா.ச.ராவின் எனக்குப் பிடித்த சிறு நாவல் பச்சைக் கனவு மற்றும் கழுகு. அவரின் புகழ் பெற்ற படைப்பான அபிதா வின் மீது எனக்கு மாற்றுக் கருத்துகள் உண்டெனினும் எழுதப்பட்ட வகையில் அபிதா ஒரு சவாலான படைப்புதான். கழுகு நாவலில் ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலேயும் ஒரு கவிதை வரும். நான் பற்றிய விசாரணைகள், தத்துவத்திற்கும் இருப்பிற்குமான போராட்டம், பெண், உடல், காமம் குறித்தான மிகைகள் என எல்லாமும் கலந்து கட்டிய தெறித்த எழுத்து லா.ச.ரா வினுடையது. சொற்களில் ஒரு வித லயமும் இசைத் தன்மையும் மிகுந்திருக்கும்.

அசோகமித்திரனை வந்தடைந்த போது சற்று நிதானத்திற்கு வந்திருந்தேன். அல்லது அசோக மித்திரன் இந்த நிதானத்தை வர வழைத்தாரா? என்பதும் தெரியவில்லை. உரத்து சொல்லுதலை, நெகிழ்வை, கரைதலை அசோக மித்திரன் சற்று நிதானப்படுத்துகிறார். எந்த வித மிகையுணர்ச்சியும் இல்லாத எழுத்து. மிகு கற்பனைகள், உவமை, உதாரணம், கனவு என எதுவுமே இல்லாத நேரடி முகத்திலறையும் எழுத்து. ஒரு வித மிகை மனதோடு இவரை வாசிக்க ஆரம்பித்த புதிதில் இவர் தந்த அப்பட்டம் சற்று எரிச்சலைக் கூட வரவழைத்தது. அமி யின் தண்ணீர் என்னை அசைத்துப் பார்த்த நாவல். கீழ் மத்திய தர வர்கத்தின் கிட்டத்தட்ட விளிம்பு நிலை வாழ்வின் அவலத்தை சன்னமான குரலில் சொல்லும் நாவல். சென்னையின் பொந்து குடித்தன வாழ்வை, தண்ணீர் பற்றாக்குறை அவலத்தை, மிகையே இல்லாது புகாரே இல்லாது போகிர போக்கில் சொல்லிப் போன நாவல். யமுனா, தாட்சாயணி போன்ற மிகை பிம்பங்களை கற்பனையில் சுகித்த மனது ஜமுனாவை வியர்வையும் சதையுமாய் எழுத்தில் கண்டபோது வெலவெலத்துப் போனது. என்னை நெடுநாட்கள் அலைக்கழித்த பிம்பம் தண்ணீர் ஜமுனாதான்.

கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில்தான் வண்ண நிலவனை வாசித்தேன். வண்ண நிலவனுடைய கடல் புரத்தில் எப்போதைக்குமான பிடித்த நாவல். கம்பா நதி,ரெய்நீஸ் அய்யர் தெரு, எஸ்தர் என எல்லா வ.நி யின் படைப்புகளும் எனக்கு பிடித்தமானவைதாம் என்றாலும் கடல் புரத்தில் தனிதான். சில நாவல்களின் ஆரம்ப வரிகள் மனதில் அத்தனை அழுத்தமாய் பதிந்து போகும். பாலகுமாரனின் மெர்க்குரிப் பூக்கள் நாவலின் முதல் வரி, சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள் முதல் வரி, போலவே கடல் புரத்தில் ‘குருஸ் மிக்கேலுக்கு யாரையும் பிடிக்காது ‘என்கிற முதல் வரி. வண்ண நிலவன் குலசேகரப் பட்டிணத்தில் வாழ்வுச் சுழலின் நிமித்தம் சில மாதங்கள் சைக்கிள் கடை ஒன்றில் பணி புரிய நேர்ந்தது. அக்காலகட்டத்தில் மீனவர்களின் வாழ்வை மிக நெருக்கமாகக் காணும் வாய்ப்பும் கிட்டியது. அப்பாதிப்பில் உருவானதுதான் கடல் புரத்தில். மீனவர்களின் வாழ்வு குறித்தான மிக முக்கியமான பதிவாகவும் இந்நாவலைப் பார்க்கலாம். பிலோமி கதாபாத்திரத்தின் சித்தரிப்பும் துரதிர்ஷட முடிவும் மிகப்பெரும் சங்கடத்தைத் தந்தது. நாவல்கள் மூலமாக என்றும் வாழும் கதை மாந்தர்களில் இந்தப் பிலோமி முக்கியமானவள்.

தமிழில் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வை, அப்பட்டமான மொழியில் பேசிய முக்கியமான நாவல் ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே. ஒரே ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களை மட்டுமே காட்சிப்படுத்தும் இந்நாவல், மொழி அடிப்படையிலும், வடிவ அடிப்படையிலும் நம் சூழலின் புதிய திறப்பு. கந்தன் கதாபாத்திரத்தின் மூலமாக மரபான தமிழ் நாவலை சற்றே கலைத்துப் போட்டிருப்பார். இலக்கிய உலகம் பதிவு செய்யத் தவறிய, தினசரி வாழ்வில் நாம் காண மறுக்கும் மக்களின் வாழ்வை ஜி.நாகராஜன் ஆழமாகவும் நுட்பமாகவும் பதிவு செய்திருப்பார்.

இதையொட்டி பேசவேண்டிய இன்னொரு முக்கியமான நாவல் ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி. மற்றும் இதன் இரண்டாம் பாகமான கடலுக்கு அப்பால். சற்று வியப்பாக சொல்ல வேண்டுமெனில் தமிழில் இதைப் போன்ற ஒரு படைப்பு இன்னும் எழுதப்படவில்லை. காலத்திற்கும் நிலைத்து நிற்கும் ஒரு படைப்பை எழுதிவிட்டு எந்தச் சத்தமும் சலம்பலும் இல்லாமல் ஒற்றைத் தனியறையில் வாழ்ந்து கொண்டு, மதுரை தினந்தந்தி அலுவலகத்தில் ப்ரூஃப் பார்த்துக் கொண்டிருந்த சிங்காரத்தை நினைத்தால் மேதமைத் தனத்தின் மீது மதிப்பு பன்மடங்காகிறது. அதே நேரத்தில் தொடர்ந்து உண்மையான கலைஞர்களை நசுக்கும் வாழ்வின் குரூரத்தின் மீதும் வெறுப்பு படராமல் இல்லை.

மலேசியாவின் பினாங்கு நகரத்தின் செட்டித் தெருவை, சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய INA படைகளின் சாகசத்தை தமிழில் சங்க இலக்கிய உரையாடல் சகிதமாய் படிக்க முடியும் என்பதே தமிழ் வாசகருக்கு மிகப்பெரிய உவகைதான். அப்படி ஒரு பெரும் வியப்பும் திகைப்பும்தான் புயலிலே ஒரு தோணி. இலட்சியவாத இளைஞனான பாண்டியன் மற்றும் அவன் சகாக்கள் லேவாதேவி வாழ்விலிருந்தபடியே ஐஎன் ஏ விற்கு ரகசியமாய் உதவுவது. ஜப்பான் மற்றும் சீனப் படைகளை எதிர்கொள்வது என முற்றிலும் புதிய களத்தை, புதுமாதிரியான எழுத்து நடையை புயலிலே ஒரு தோணி நமக்குப் பரிசளிக்கிறது. பினாங்கில் கொடிகட்டிப் பறந்த மதுரைச் செட்டியார்கள் வாழ்வும். பாண்டியனுக்கு ஏற்படும் மெல்லிய காதலும் நாவலிடையே உண்டு. இரண்டாம் பாகமான கடலுக்கு அப்பால் இலட்சிய வாத மிகைகளும் சாகசங்களும் தீர்ந்து தத்துவத்தில் அடங்குவதை பதிவு செய்திருக்கும். தமிழின் பெரும்படைப்புகளைப் பட்டியலிட்டால் அதில் முதலிடம் புயலிலே ஒரு தோணிக்குத்தான்.

கொங்கு வட்டாரத்தின் வாழ்வினை களமாகக் கொண்ட இலக்கிய படைப்புகளை அறிமுகப்படுத்தியதில் பெருமாள் முருகனுக்கு முக்கியப் பங்கு உண்டு.திருச்செங்கோடு பகுதியின் மொழியை, மக்களின் வாழ்வை, குறிப்பாய் சக்கிலிய இன மக்களின் பதிவுகளை தமிழில் நாவல் வடிவில் மிகச் சிறப்பாக பதிவு செய்தவர் பெருமாள் முருகன். இவருடைய ஏறு வெயிலும் கூளமாதாரியும் என் மனதிற்கு வெகு நெருக்கமான படைப்புகள்.

எண்பதுகளில் வீட்டு வசதி வாரியம் தமிழ் நாடு முழுவதும் விளை நிலங்களை அழித்து விட்டு வீடுகளைக் கட்டியது. எண்பத்தெட்டில் இவ்வாரியம் திருவண்ணாமலையில் என் வீட்டிற்கு சமீபமாகவிருந்த வயல்கள், கிணறுகள், தோப்புகள், சிறு சிறு குட்டைகள் எல்லாவற்றையும் அழித்து விட்டு மிகுந்த பரப்பளவில் வீடுகளைக் கட்டின. பறவைகளும், சிறுசிறு விலங்குகளும், என் போன்ற சிறாரும் இனி எங்கு போவது என திகைத்துப் போனோம். விவசாயிகள் அனைவரும் காடுகரைகளை விற்றுவிட்டு கிடைத்த பணத்தை குடித்தே அழித்து விட்டு, அதே வீட்டு வசதி வாரியம் கட்டும் கட்டிடங்களுக்கு சித்தாளாகப் போக ஆரம்பித்தனர். இந்த மாபெரும் அவலத்தை கண்கூடாகப் பார்த்திருந்ததால் பெருமாள் முருகனின் ஏறுவெயில் நாவல் என்னால் எப்போதுமே மறக்க முடியாத ஒரு நாவலாக மாறிப்போனது. விளை நிலங்களை விற்ற விவசாயின் சீரழிந்த வாழ்வுதான் ஏறுவெயிலின் கதை. வன்மம் தகிக்கும் வாழ்வின் உக்கிரத்தை நாவல் முழுக்கப் பதிவு செய்திருப்பார். இவருடைய மற்றொரு படைப்பான கூளமாதாரி சக்கிலிய குடி சிறார்களை முன் வைத்து எழுதப்பட்ட சிறப்பான நாவல்.

இதே வட்டார வழக்கில் எழுதப்பட்ட வா.மு.கோமுவின் கள்ளி யும் என்னளவில் முக்கியமான நாவலே. இந்நாவல் தொடும் தளம் விடலைத் தனம்.எவ்வித திரிபுகளுமற்ற கொங்கு மொழியின் அசாத்தியம் இந்நாவலில் சாத்தியமாகி இருக்கின்றத. இலக்கிய வடிவில் சேர்க்க விரும்பாத,சேர்க்கத் தயங்கிய பல கூறுகளை எவ்வித தயக்கமும் இல்லாது நேரடியாய் பேசுகிறது இவரின் மொழி. கற்பு, ஒழுக்கம் என எவ்வித பம்மாத்துகளுமில்லாது காமத்தை இவரின் கதை மாந்தர்கள் ஒரு விளையாட்டாய் விளையாடித் தீர்க்கிறார்கள். நள்ளிரவு, விடியல், முன்னிரவு, என எல்லாப் பொழுதுகளிலும் வெட்ட வெளி, பாறை இடுக்கு, முட்காடு, எவருமற்ற அந்நியன் வீடென எங்கெங்கிலும் புணர்ந்து திரியும் இவரது கதை மாந்தர்களுக்கான அடிநாதம் தீராக்காமமாயும் பருவத் தெறிப்பாகவுமிருக்கிறது.

இது தவிர்த்து இந்நாவல் தொட்டுச் செல்லும் இன்னொரு தளம் மாதாரிகளின் கொண்டாட்டமும் அவலமுமான வாழ்வு.மேலதிகமாய் கவுண்டர்களின் ஆதிக்கத் திமிர்களையும் பண்ணைய முறைகளின் வன்முறைகளையும் கோடிட்டுச் சென்றிருக்கிறது. விடலைத் தனம் நிரம்பியிருப்பதால் மிக அழுத்தமாய் சொல்லப்பட்டிருக்க வேண்டிய பல விதயங்களை சற்றே தொட்டுவிட்டு மதுவில் கரைந்து போகிறது. முதல் அத்தியாயத்தில் தொடங்கிய வீச்சும், புதுத்தளமும், புதுமொழியும், அசாத்திய நகைச்சுவையும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் வலுவிழந்து போகிறது. எனினும் கிண்டலும், கேலியும், காமமும் சேர்ந்து நாவலை ஒரே மூச்சில் படிக்க வைக்கும் மனநிலையைத் தந்துவிடுகிறது. கடைசி அத்தியாயத்தில் தாங்கிப் பிடிக்கும் ஆதிக்க மனோபாவ கொடி முதல் அத்தியாயத்திலிருந்து சொல்லப்பட்ட விளிம்புசார் நிலையை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. எழுத்தாளனுக்கான கடமை இதுவென எதையும் வலியுறுத்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும் தான் எழுதும் தளத்தின் வீச்சை, தேவையை உணர்ந்து கொள்ள வேண்டியது எழுத்தாளன் செய்ய வேண்டியது.

புனைவுத் தளத்தில் குறிப்பிடப்பட வேண்டிய எழுத்தாளர் யுவன் சந்திரசேகர். இவரின் கானல் நதி எனக்குப் பிடித்தமான நாவல். குள்ளச் சித்தன் சரித்திரமும் முக்கியமான நாவலே. கானல் நதி இசையை பின்புலமாக கொண்ட நாவல். தனஞ்செய் முகர்ஜி என்றொரு இசைக்கலைஞனின் இசை ஞானம், கல்கத்தா நகர வாழ்க்கை, சரயூ என்கிற பெண்ணின் மீது தோன்றும் நிறைவேறாக் காதல். மேதமைத் தனத்திற்கு பரிசாய் வந்து சேரும் பித்து என வழக்கமாய் யூகிக்க கூடிய தளம்தான் என்றாலும் யுவனின் புனைவு மொழி இந்நாவலின் தரத்தை உயர்த்துகிறது. பால்யம், வாலிபம், நாட்குறிப்பு, அழைப்பு என நான்கு பாகங்களாக நாவல் பிரிக்கப்பட்டிருக்கிறது. மனதின் ஆழ்நிலைகளை, நுட்பமான சலனங்களை, அசைவுகளை, துல்லியமாய் இந்நாவல் பதிவு செய்திருக்கிறது.

எழுத எழுத போதாமை இருந்து கொண்டே இருக்கிறது. இன்னும் குறிப்பிட ஏராளமான படைப்புகள் உள்ளன. ஆனால் பதினைந்து பக்கத்திற்கும் மேலாக ஒரு இதழில் அடைந்து கொள்ள என்னவோ போல் இருக்கிறது. எனக்குப் பிடித்த இன்னும் சில முக்கியமான நாவல்களை பட்டியலாக மட்டும் குறிப்பிடுகிறேன். இது என்னுடைய சொந்த அரசியலுக்கு உட்பட்டதுதான்.

1. வாடிவாசல் - சி.சு.செல்லப்பா
2. காதுகள் - எம்.வி. வெங்கட்ராம்
3. பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு
4. வாசவேஸ்வரம் – கிருத்திகா
5. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
6. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
7. சாயாவனம் - சா. கந்தசாமி
8. குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி
9. சோளகர் தொட்டி – ச.பாலமுருகன்
10. கருக்கு -பாமா
11. தலைமுறைகள் - நீல.பத்மநாபன்
12. வெக்கை - பூமணி
13. ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகமது மீரான்
14. மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்
15. என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
16. பாய்மரக்கப்பல் – பாவண்ணன்
17. பாழி – கோணங்கி
18. செடல்- இமையம்
19. தகப்பன்கொடி – அழகிய பெரியவன்.
20. கொரில்லா – ஷோபா சக்தி
21. ரத்தஉறவு - யூமாவாசுகி
22. அளம் - தமிழ்செல்வி
23. அஞ்சலை - கண்மணி குணசேகரன்
24. ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ்
25. கள்ளம் – தஞ்சை பிரகாஷ்.
26. பிளம் மரங்கள் பூத்துவிட்டன, ஒப்பந்தம் - வாசந்தி.
27. தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி.
28. ஒரு மனிதனின் கதை - சிவசங்கரி.
29. மெர்க்குரிப் பூக்கள், கரையோர முதலைகள், பந்தயப்புறா - பாலகுமாரன்
30. நெடுங்குருதி,யாமம் – எஸ்.ராமகிருஷ்ணன்
31. பின்தொடரும் நிழலின் குரல், காடு, ஏழாம் உலகம் – ஜெயமோகன்
32. ராசலீலா, ஜீரோ டிகிரி – சாரு நிவேதிதா

தமிழ் நாவல் மரபு அதற்கே உண்டான கட்டமைவுகளோடும் அவ்வப்போது மீறல்களோடும் மிகச் சரியாகவே பயணிப்பதாக உணர்கிறேன். முன்னோடிப் படைப்பாளிகள் தொட்டுச் சென்றிருக்கும் உயரத்தை தாண்டுவதென்பது சம கால படைப்பாளிகளுக்கு மிகப் பெரும் சவால்தான்.

6 comments:

Anonymous said...

Why no mention on sujatha's novels?

KARTHIK said...

// நெடுங்குருதி,யாமம் //

எனக்கு இந்த இந்த இரண்டைவிடவும் உறுபசி புடிச்சிருந்துதுங்க...

நல்ல பதிவு அய்ஸ் :-)))

ராம்ஜி_யாஹூ said...

முன்னோடிப் படைப்பாளிகள் தொட்டுச் சென்றிருக்கும் உயரத்தை தாண்டுவதென்பது சம கால படைப்பாளிகளுக்கு மிகப் பெரும் சவால்தான்.

வெ சா இதை முப்பது வருடங்கள் முன்பே சொல்லி உள்ளார்.

ஹாலிவுட்ரசிகன் said...

மிகவும் நல்ல பதிவு. இன்னும் நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள்.

புயலிலே ஒரு தோணி யை கொழும்பு சென்றால் விசாரித்துப் பார்க்கவேண்டும்.

நிலாரசிகன் said...

வண்ணநிலவனின் "கடல்புரத்தில்", கண்மணி குணசேகரனின் "நெடுஞ்சாலை" குறிப்பிடதகுந்தவை.

நல்லதொரு பதிவு.

ரா.கிரிதரன் said...

ரொம்ப நல்லாயிருக்கு அய்யனார். ‘தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி.’ ஒரு இன்ப அதிர்ச்சி. இன்னும் படிக்காத எத்தனை நாவல்கள் இருக்கின்றன என நினைத்தால் மலைப்பாக இருக்கு. பல நல்ல நாவல்களுக்கு அறிமுகம் கிடைத்தது - மூட்டை தான் சேர்ந்துகொண்டே போகுது ;)

நன்றி
கிரி

Featured Post

test

 test