Wednesday, June 29, 2011

அத்தியாயம் 5. ஊசலாட்டம்

எதிர்ப்படும்
எல்லாக் கரங்களும்
குரல்வளை நோக்கியே நீள்கின்றன
பயந்து பின் வாங்கும்
கால்களுக்குச் சமீபமாய்
புதை மணற்
ஆசையாய் விழித்திருக்கிறது
அன்பினால் சூழ்ந்த உலகிற்கும்
பற்கள் முளைத்திருந்ததை
அப்போதுதான் பார்த்தோம்.

அலுவலகத்தில் நெருக்கடிகள் கூடிக் கொண்டே போயின. ஆறு மாதத்தில் எல்லாமே தலைகீழாகிவிட்டது. ஒரு கூட்டமே என்னைக் கத்தியோடு துரத்துவது போலவும் ஓடிப்போய் பதுங்கிய இடங்களிலிருந்து திடீரென சக அலுவலகப் பெண்கள் தோன்றி என் மீது காறி உமிழ்வது போலவும் தொடர்ச்சியாய் கனவு வந்து கொண்டிருந்தது. இன்று ஏனோ விடிந்ததிலிருந்து ஒரு அமைதியின்மை இருந்தது. விரைவில் நித்யா விஷயத்தில் ஒரு முடிவு எடுத்துவிட வேண்டும். அம்மாவிடம் எப்படியாவது விஷயத்தை சொல்லிவிட வேண்டும். கடைசியாய் வீட்டிற்கு எப்போது தொலைபேசினேன் என்பது மறந்து போய்விட்டது. அம்மாவின் நினைவே சுற்றி சுற்றி வந்தது. அலைபேசியில் வீட்டு நம்பரை அழுத்தினேன். அம்மாதான் எடுத்தாள். நல விசாரிப்புகளுக்குப் பின் நித்யாவின் அப்பா பேரைச் சொல்லி தெரியுமா? எனக் கேட்டேன் சற்று நேரம் குழம்பி தெரியலையே என்றாள். சற்று நிம்மதியாகக் கூட இருந்தது. எதற்கும் டீட்டெய்லாக கேட்டுவிடலாம் என்றெண்ணி பொது உறவினர் பெயரைக் குறிப்பிட்டு அவரின் சித்தப்பா மகன் என்றேன். அம்மா உடனே பிடித்துக் கொண்டாள். “அவர் ரொம்ப வருஷத்துக்கு முன்னவே இறந்துட்டாரே. பாண்டிச்சேரின்னுதான் நினைக்கிறேன். அவர் அப்பவே ஒரு முதலியார் பொண்ண சேர்த்துகினார்” என்ற தகவலையும் சொன்னாள். எனக்குத் துணுக்குறலாக இருந்தது “சேர்த்துகினார்னா?” என்றேன். “அட அந்தப் பொம்பளைக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி வாழாம வந்திருச்சாம். இவருக்கு எப்படியோ பழக்கமாய்டுச்சாம்” என்றாள். இதெல்லாம் உனக்கு யார் சொன்னது என்றேன் கடுகடுப்புடன். பொது உறவினர் பெயரைச் சொல்லி அவரும் உங்க அப்பாவும்தான் கூட்டாளிங்களாச்சே அவர்தான் அப்பாகிட்ட சொன்னார் என முடித்தாள். “எதுக்குடா இதெல்லாம் கேட்குற? என்ற அம்மாவிடம் “ஒண்ணும் இல்ல அவர் பையன் என்னோட வேல பாக்கிறான் அதான் கேட்டேன்” என்றேன். அம்மா ஆச்சர்யப்பட்டாள். கடைசியாய் சொன்ன இன்னொரு தகவல்தான் கிரகிக்க முடியாமல் இருந்தது.

“என்ன மொதல்ல அவங்க வீட்ல இருந்துதான் பொண்ணு கேட்டு வந்தாங்க. எங்க அப்பா கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டார்”
“ என்னது?”
“ஆமாண்டா எங்க வகைல அவங்க நெருங்கிய சொந்தம்தான். அந்த பையன் வீட்டுக்கு போய் பாரு. முடிஞ்சா வீட்டுக்கு கூட்டி வா” என முடித்தாள்.

எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போனது. எதற்கு அம்மாவிடம் பேசினோம் என்று இருந்தது. திடீரென எல்லாமே முடிந்ததைப் போல உணர்ந்தேன். குரு வீட்டில் நித்யாவைப் பார்த்தே அன்றே இவளை விட்டு விலகிவிடுவதுதான் நியாயமானது எனத் தோன்றியது. எவ்வளவோ பேசிப்பார்த்தேன். ஓரிரு முறை தவிர்த்தும் பார்த்தேன். கெட்ட வார்த்தையில் திட்டினேன். அரிப்பு, அலைச்சல் என்றெல்லாம் காதுக் கூசும் வார்த்தைகளையும் இறைத்துப் பார்த்தேன். நித்யா திடமாக இருந்தாள். நான் நல்லவனா என்கிற சந்தேகம் எனக்கே அவ்வப்போது தோன்றும். ஆறு மாதத்தில் அவள் என்னிடம் என்ன நல்ல தன்மைகளை கண்டுகொண்டாள் என்பதுதான் புரியவில்லை. அலுவலக நெருக்கடிகள், பழிவாங்கத் துடிக்கும் முன்னாள் நண்பர்கள், இவற்றோடு நித்யாவின் பிரச்சினையும் மண்டையை குடைந்தது. இன்னும் குருவிற்கு இந்த விஷயம் தெரியவந்தால் என்ன ஆகும் என யோசிக்க யோசிக்கத் தலை வலித்தது. இப்போதெல்லாம் சரியாய் தூக்கம் வேறு வருவதில்லை. காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து சுவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சமீபமாய் குடிப்பதுமில்லை. நண்பர்கள் விலகிப் போனதும் முதலில் நின்று போனது குடிப்பதுதான். எனக்கு தனியாய் போய் குடிக்கவும் பிடிப்பதில்லை.

திடீரென முன் கதவு படீரெனத் திறந்தது. “விச்சூ “என கத்திக் கொண்டே நித்யா ஓடிவந்து என்னைக் கட்டிக் கொண்டாள். அவள் உதடு வீங்கியிருந்தது. தலைமுடி கலைந்து போய் பரட்டையாகியிருந்தது. ஒரு பக்க கன்னத்தில் விரல்கள் அழுந்தப் பதித்திருந்தன. பதறிப் போனேன். நித்யாவை மெதுவாய் விலக்கி “என்னமா ஆச்சி?” என்றேன்.
“குருவுக்கு தெரிஞ்சி போச்சி”
“எப்படி?”
“தெரியல ஆனா நேத்து ஃபருக்கும் விஜய்பாபுவும் வீட்டுக்கு வந்தாங்க”
“ஓ அப்ப கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்”
“அவங்க உன் பிரண்ட்தானே விச்சு, அவங்களா சொல்லி இருப்பாங்கன்ற?”
“ஆமா நித்தி இப்ப எல்லாமே மாறிப்போச்சு. சீக்கிரம் இது நடக்கும்னு எதிர்பாத்திட்டுதான் இருந்தேன்”
“நேத்து நைட் லேட்டாதான் வீட்டுக்கு வந்தான். அம்மா காலைல ஒரு கல்யாணத்துக்கு போயிட்டாங்க. அவன் எழுந்த உடனே, ஏன் எதுக்குன்னு கூட கேட்காம இழுத்து போட்டு அடிச்சான். என்னால முடியல விச்சு. நான் வண்டி எடுத்துட்டு இங்க வந்திட்டேன். என தேம்பினாள்”
கோபமும் ஆத்திரமும் பொங்கியது. “நித்தி நீ இங்க இரு. எவன் வர்ரான்னு பாத்திர்ரேன்” எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே
“திருட்ட்ட்டு முண்ட” எனக் கத்தியபடியே குரு உள்ளே வந்தான்
நித்யா தலைகுனிந்தபடியே என் முதுகிற்காய் நகர்ந்து நின்றாள்.
“குரு எதா இருந்தாலும் பேசிக்கலாம். கொஞ்சம் அமைதியா இரு”
“பேசிக்கிறதா? ங்கோத்தா தெவிடியாப்பைய்யா நீலாம் பரண்டாடா?”
“குரு எனக்கு உன்ன இப்பதான் தெரியும். நித்யாவ ஆறு மாசமா தெரியும். வீணா உணர்ச்சி வசப்படாதே”
“சரி பிரண்டு தங்கச்சின்னுதான் தெரிஞ்சிருச்சி இல்ல அப்புறம் என்னடா ஒதுங்கிப் போவ வேண்டியதான”

பேசிக் கொண்டிருக்கும்போதே விஜய்பாபுவும் ஃபருக்கும் உள்ளே வந்தனர். என்னை எரித்து விடுவது போல் பார்த்தனர்.
குரு தொடர்ந்தான் “ங்கோத்தா இவ உனக்கு தங்கச்சி முற வேற, அத நெனச்சாதான் இன்னும் அசிங்கமா இருக்கு. என்னா ஜென்மம்டா நீ?”
“குரு இத நிதானமா பேசுவோம். ஆனா இனிமே நித்யா மேல கைய வச்ச சும்மா இருக்க மாட்டேன்”
“அத சொல்றதுக்கு நீ யார்ரா சிதி” என்றபடியே முன்னால் வந்து என்னை ஓங்கி அறைந்தான்.
“எல்லாம் உன்னலதாண்டி” என பின்னால் நின்று கொண்டிருந்த நித்யாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி இடுப்பில் உதைத்தான்.
நான் சுதாரித்து குருவை பிடித்துத் தள்ளினேன்.

நித்யா தரையில் மடங்கி அழுது கொண்டிருந்தாள்.அவளைத் தூக்க குனிந்தேன். ஃபரூக் என்னை பின்னாலிருந்து உதைத்தான். எதிரிலிருந்த சுவற்றில் முட்டி கீழே விழுந்தேன். விஜய் ஓடிவந்து முகத்தில் மிதித்தான். குரு மீண்டும் நித்யாவையின் தலைமுடியைப் பற்றித் தூக்கினான். அவள் கழுத்தை வாகாய் பிடித்து நெட்டி வெளியில் தள்ளினான்.

“நான் இவளை வீட்ல கடாசிட்டு வரேன் ங்கோத்தா இன்னிக்கு இவன சாவடிக்கிறோம் நாம“ என்றபடியே வெளியே நகர்ந்தான்
நித்யா படிக்கட்டிற்காய் போய் நின்று “யாராவது ஓடிவாங்க காப்பாத்துங்க” எனப் பெருங்குரலில் கத்தினாள்.
நான்கைந்து பேர் மாடிப் படிக்கட்டில் ஏறும் சப்தம் கேட்டது
ஃபரூக்கும் விஜயும் பதட்டமானார்கள். குரு “தெவுடியா முண்ட” என மீண்டும் அவளை உள்ளே இழுத்து அறைந்தான்.

ஹவுஸ் ஓனர் தான் முதலில் உள்ளே வந்தார்.
“என்னப்பா நடக்குது இங்க?” எனப் பதட்டமாகக் கேட்டார் என் வாயிலிருந்து இரத்தம் வழிந்தபடி இருந்தது. நித்யா தலைவிரி கோலமாக தேம்பிக் கொண்டிருந்தாள்
இன்னும் மூன்று பேர் உள்ளே வந்தனர். “யார்டா நீங்கலாம்” என மூவரையும் பார்த்து ஒருவர் கேட்டார்
குரு சமாதானமாய் “ஒண்ணும் இல்லைங்க என் தங்கச்சி வாழ்க்க பிரச்சின தயவுசெய்ஞ்சி நீங்க வெளில போங்க” என்றான்
ஹவுஸ் ஓனர் கத்தினார் “என் வீட்ல நின்னுகிட்டு என்ன வெளில போக சொல்றியா, நீ மொதல்ல வெளில போடா” என குருவைப் பிடித்து தள்ளினார்.
“யோவ் என் தங்கச்சிய இவன் தூக்கிட்டு வந்துட்டான்யா கூட்டிட்டு போக வந்திருக்கேன்”
“ஆறேழு மாசமா இந்த பொண்ணு இங்க வந்துட்டு இருக்கா நீ என்னடா புதுசா கத சொல்ற?” என்றார் ஹவுஸ் ஓனர். உடன் வந்த அவர் மகனைப் பார்த்து சொன்னார்
“டேய் எதிர்வூட்ல போலிஸ்கார தம்பி இருக்காரா பார். இருந்தா அர்ஜெண்டா கூட்டியா” என்றார். ஃபருக்கும் விஜயும் மெல்ல வெளியே நகர்ந்தார்கள்.

ஓனர் கத்தினார் “எவனும் நகரக் கூடாது பொட்டப்புள்ளன்னு கூட பார்க்காம எப்படி அடிச்சிருக்கானுங்க மூணு பேரையும் உள்ள தள்ளுறோம் பார்”
நான் மெதுவாய் சொன்னேன். “இது எங்க சொந்தப் பிரச்சினைங்க. ப்ளீஸ் விட்டுடுங்க அவங்க போவட்டும்”
“அட என்னப்பா உன்னையும் போட்டு இப்படி அடிச்சிருக்கானுங்க போவட்டும்ன்ற”
“இல்லண்ணே அவரு இவளோட அண்ணன். கோவப்படாம இருப்பாரா?”
“எதா இருக்கட்டும். அதுக்காக பட்டபகல்ல வீடு பூந்து அடிப்பானுங்களா?”
ஹவுஸ் ஓனர் மனைவி மூச்சு வாங்க படியேறி வந்தார். ஹவுஸ் ஓனரைப் பார்த்து இறைந்தார். “அன்னிக்கே சொன்னேன். ஒரு பொண்ணு ரெகுலரா வூட்டுக்கு வருதுன்னு கேட்டீங்களா? பேச்சிலர் பசங்கள வைக்காதீங்கன்னு தலப்பாடா அடிச்சிகிட்டேன் கேட்டீங்களா?” என மீண்டும் மூச்சு வாங்கினார். லுங்கி கட்டிய போலிஸ்காரர் எல்லாரையும் விலக்கிகொண்டு உள்ளே வந்தார்.
“என்ன இங்க பிரச்சின? யாரு இந்த பொண்ணு? யார்மா உன்ன அடிச்சது?” என கேள்விகளைத் தொடர்ந்து கேட்டார். நான் எல்லாவற்றையும் சொன்னேன். “மேஜரான பொண்ண அடிக்கிறது தப்பு. அண்ணனா இருந்தா என்ன ஆட்டுகுட்டியா இருந்தா என்ன? உங்க மூணு பேருக்கும் பிரச்சின சரி. இவனுங்க யாரு ரெண்டு பேர். அடியாளுங்களா?”
ஃப்ரூக்கும் விஜயபாபும் மென்று விழுங்கினார்கள். “இல்ல சார் வந்து வந்து”
“என்னடா வந்து போயி இவனுங்க உம் மேல கைய வச்சாங்களாபா” என எனக்காய் பார்த்துக் கேட்டார்
“இல்ல சார் “என சொல்லிக் கொண்டிருக்கும்போதே நித்யா கத்தினாள்
“ஆமா சார் ரெண்டு பேரும் அவர போட்டு அடிச்சானுங்க, என்ன என் அண்ணன் அடிச்சான்.”

பேசிக்கொண்டிருந்த போலிஸ்காரர் சற்றும் எதிர்பாராமால் ஃபருக் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்.
“தவ்லோண்டு இருந்துகுனு அதுக்குள்ள நீங்களாம் ரவுடிங்களா? மூணு பேரும் நடங்கடா ஸ்டேசனுக்கு” என்றார்.
நான் முன்னால் போய் “வேணாம் சார் விட்டுடுங்க எல்லாமே ஃப்ரண்ட்ஸ்தான் ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் அவ்ளோதான். பொண்ணோட அம்மாகிட்ட பேசினா எல்லாம் சரியாகிடும் விட்டுடுங்க சார்” என்றேன்
“அட என்னபா நீயி. இவ்ளோ நடந்திருக்கு. பொண்ணே சொல்லுது அடிச்சாங்கன்னு நீ ஏம்பா பயப்படுற?”
“சார் அதுலாம் ஒண்ணும் வேணாம் விட்டுடுங்க” என்றேன்.கும்பலைப் பார்த்து “தயவுசெய்ஞ்சி எல்லாம் போங்க” என்றேன். கலைந்து முனகியபடியே போனார்கள்.

ஹவுஸ் ஓனர் “தம்பி இது கடைசியா இருக்கட்டும் இன்னொரு தரம் இப்படி நடந்ததுன்னா நீ காலி பண்ணிக்க” என்றபடியே கீழே இறங்கிப் போனார்.
போலிஸ்காரர் மூவரின் பெயரையும் அட்ரஸையும் ஒரு பேப்பரில் எழுதி வாங்கிக் கொண்டார்.
நித்யாவைப் பார்த்து “ஏதாவது பிரச்சினனா சொல்லும்மா” என அவருடைய தொலைபேசி நம்பரைக் கொடுத்தார். நித்யா தேம்பிக்கொண்டே “ரொம்ப தேங்க்ஸ் சார்” என்றாள். நானும் அவரின் கையைப் பிடித்து “நன்றி சார்” என்றேன்
“சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்குங்க “ எனச் சொல்லிவிட்டு கீழே இறங்கிப் போனார்.
மூவரும் ஆத்திரத்தோடும் வெறுப்போடும் கீழே போனார்கள். நித்யா உள்ளே வந்து கதவை சாத்தினாள். இனிமே என்னால வீட்டுக்கு போக முடியாது விச்சு. நான் இங்கயே இருந்திடுறேன் என்றாள்.

மேலும்

1 comment:

Anonymous said...

intresting ays waiting for the next post

senthil

Featured Post

test

 test