Tuesday, March 22, 2011

அத்தியாயம் ஒன்பது. சுழல்

மழை வந்துதான் என்னை எழுப்பியது. எப்போதோ ஆரம்பித்திருக்க வேண்டும். மாமரத்தின் அடர்த்தி இத்தனை நேரம் என்னை நனைவதிலிருந்து காத்திருக்கிறது. காற்றின் சாரல்தான் முகத்தை நனைத்தது. சுற்றிலும் அடர்ந்த மரங்கள் இருப்பதால் மழையை அதிகம் கேட்கத்தான் முடிந்தது. அவ்வப்போது எல்லை மீறும் காற்று, மழை வெறும் இசை மட்டுமல்ல என்பதைத் தெரிவித்துக் கொண்டிருந்தது. நேரத்தை யூகிக்க முடியவில்லை. காலையில் இங்கு வந்தபோது அத்தனை வெயிலடித்தது. திடீரென எப்படி வானமும் பூமியும் ஒரே சாம்பலும் கருமையுமாய் மாறிப்போனதெனத் தெரியவில்லை. கட்டிலை விட்டு எழுந்து தோப்பின் முகப்பிற்கு வந்தேன். மழையின் பிரம்மாண்டம் முழுமையாய் தெரிந்தது. வயல்வெளியின் மீது நீர்த்தாரைகள் ஆவேசமாய் இறங்கிக் கொண்டிருந்தன. மழைதான் பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த முயக்கமாக இருக்க வேண்டும். பிரபஞ்ச உயிரிகள் யாவும் மழையின்போது கலவியில் ஈடுபடுகின்றன. இயலாத உயிர்களுக்குக் கூட கலவியின்பத்தின் சிறு சிலிர்ப்பை இந்த மழை தந்து விட்டுத்தான் போகிறது.

விஜியுடன் கடைசியாய் மழையில் நனைந்த கடற்கரை இரவு, நினைவை ஆக்ரமித்தது. அன்று மழை இன்னும் ஆக்ரோஷமாக இருந்தது. மின்னலும் இடியுமாய் பெய்தப் பெருமழையது. நீரில் நனைந்த விஜியின் உடல், இருளில் ஒளிர்ந்த தொடைகள், புடவை ஏறின வெண்திண்ம ஸ்தனங்கள் யாவும் பிம்பங்களாய் நினைவில் மோதின. சடாரென இரத்தம் பீய்ச்சியடிக்க அவளின் வெட்டுப்பட்டுத் தலை நினைவின் தரையில் உருண்டது. நான் பாரம் தாங்காமல் கண்களை மூடிக்கொண்டேன். நெஞ்சு விம்மியது. அய்யோ விஜி! என வாய்விட்டுக் கதறினேன். அடைந்திருந்த அழுகை ஒரு காட்டாற்றைப் போல உள்ளுக்குள் இருந்து பீறிட்டது. சப்தமாய் கேவிக் கதறினேன். மழையின் இசையில் அழுகையின் சப்தம் குறைவாய்த்தான் கேட்டது. இன்னும் சப்தமாய் அழுதபடி மழையில் இறங்கினேன். உடல் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது. மெத்தை விரித்திருந்த புல் தரை, என்னை அணைத்துத் தேற்றக் கரங்களை விரிப்பது போலிருந்தது. போய் படுத்துக் கொண்டேன். கை கால்களை அகலமாய் விரித்துப் போட்டுக் கொண்டு, கண்களை விரித்து வானத்தைப் பார்க்க முயற்சித்தேன். முடியவில்லை. அழுகைப் பொங்கி பொங்கி அடங்கியது. மூச்சை உள்ளிழுத்து, மூக்கை உறிஞ்சி, பொங்குதலைக், கரைவைக் கட்டுப்படுத்தினேன். பின் கண்களை மூடிக் கொண்டேன். மழை கன்னங்களில் வழிந்த கண்ணீரைக் கழுவிக் கரைந்தது. சப்தங்கள் மெல்லக் குறைந்து, தூறலாகிப் பிசுபிசுப்பாகி மழை நின்றதும் எழுந்து கொண்டேன். மனமும், உடலும் சுத்தமாய் கழுவி விடப் பட்டதைப் போல உணர்ந்தேன். பரிசுத்தம் என்கிற வார்த்தை சம்பந்தமே இல்லாமல் நாவில் உழன்றது. திரும்பத் தோப்பிற்கு போகாமல் ஓடைவரை போய் வெள்ளத்தைப் பார்க்கும் ஆசை எழுந்தது. சிறு வயதில் மழை பார்ப்பதை விட, மழை எப்போது முடியும் என்கிற பரபரப்புதான் எல்லா மழை தினங்களிலும் என்னிடம் ஒட்டிக் கொண்டிருக்கும். முழுதாய் நிற்பதற்கு முன்பே வயக் காட்டுக்கு ஓடிப் போய் கிணறில், குட்டையில், ஏரியில், குளத்தில் உயர்ந்திருக்கும் நீர் மட்டத்தைப் பார்த்து வருவேன். வழியெங்கும் தேங்கி இருக்கும் மழை நீரில் கால் துழாவித் துழாவி நடப்பது மழையில் நனைவதை விட அலாதியானது. கிட்டத்தட்ட அதே பரவச மனநிலையில்தான் இப்போதிருந்தேன்.

நெருங்கிப் போய் பார்த்தேன். ஓடையில் பாதியளவு மழை நீர் கலங்கலாய் ஓடிக் கொண்டிருந்தது. அருகிலிருக்கும் மலையிலிருந்து இந்த ஓடை துவங்கலாம். மலையை வெண்புகை மூடியிருந்தது. அறுப்பு முடிந்த வயலில் கால் முட்டியளவுத் தண்ணீர் தேங்கியிருந்தது. வேலை செய்து கொண்டிருந்தவர்கள் எங்கு போனார்கள் எனத் தெரியவில்லை. ஓடையில் நீளமான தண்ணீர் பாம்பு ஒன்று நீரின் ஓட்டத்தில் நீந்திப் போனது. பின்னாலேயே ஒரு குட்டிப் பாம்பு வாலசைக்காமல் சோம்பலாய் போய்கொண்டிருந்தது. திரும்பி தோப்பிற்கு நடந்து வந்தேன். எனக்கு முன்னால் குடை பிடித்தபடி அந்த இளைஞன் போய்கொண்டிருந்தான். வீட்டிற்குள் நுழைந்தவன் அதே வேகத்தில் வெளியில் வந்தபோது நான் எதிரில் வந்து கொண்டிருந்தேன்.

சற்று ஆசுவாசமானவன் முழுக்க நனைந்திருந்த என்னைப் பார்த்துப் புன்னகைத்தான். வீட்டிற்குள் வரச் சொல்லிவிட்டு அவன் கொண்டுவந்திருந்த பையிலிருந்து ஒரு துண்டை எடுத்துக் கொடுத்தான். அந்தப் பையில் ஒரு வேட்டி சட்டையும் இருந்தது. இன்னொரு ஒயர் கூடையில் சாப்பாட்டுக் கேரியர் இருந்தது. உடலைத் துவட்டிக் கொண்டு சாப்பிடச் சொன்னான். அவன் என்னை அறைந்தது வசதியாய் போயிற்று என நினைத்துக் கொண்டேன். ஈர ஆடைகளைக் கழற்றிப் போட்டுவிட்டு உடல் துடைத்தேன். அவன் கொண்டுவந்திருந்த ஆடைகளை அணிந்து கொண்டு சாப்பிட அமர்ந்தேன். சற்று குண்டான அரிசி சாதம். காரமான மீன் குழம்பு. வேகமாய் சாப்பிட ஆரம்பித்தேன். அந்த இளைஞன் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என உள்ளுணர்வு சொன்னாலும் நாவும் பசியும் அதை பொருட்படுத்தவில்லை. அவன் கொண்டு வந்திருந்த மொத்த சாப்பாட்டையும் ஒரு பருக்கை கூட மீதம் வைக்காமல் சாப்பிட்டு முடித்தேன். பெயரளவிற்குக் கூட அவனைச் சாப்பிட அழைக்காதது சாப்பிட்டு முடித்த பின்பே நினைவிற்கு வந்தது. லேசாய் கூச்சமாய் இருந்தது. இன்னும் அவன் பெயரைக் கூட கேட்கவில்லை.

பெயர் கேட்டதற்கு சென்னா ரெட்டி என்றான். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்திருக்கிறான். சின்ன வயதிலிருந்தே சினிமா ஆசை அதிகம். படிப்பு ஏறவில்லை. பனிரெண்டாவது பெயிலாகி வீட்டில் அடிவாங்கி சென்னை ஓடிப்போயிருக்கிறான். எப்படியாவது பெரிய நடிகனாகிவிட வேண்டுமென்பதுதான் அவன் கனவு. கோடம்பாக்கத்தில் வாய்ப்பிற்காக அலைந்து திரிந்த இலட்சங்களில் சென்னாவும் ஒருவன். பின்பு வயிற்றுப் பாட்டிற்காக ஏதோ ஒரு உணவகத்தில் வேலை பார்த்திருக்கிறான். கோபம் தணிந்து சென்னா ரெட்டியின் அப்பா அவனைத் தேடி உறவினர்களுடன் கூட்டமாய் சென்னையில் அலைந்து,அவனைக் கண்டு பிடித்திருக்கிறார். யதார்த்தம் உணர்ந்து, மனம் திருந்தி அப்பாவுடன் ஊருக்கு வந்து விட்டானாம். இப்போது அவருக்கு உதவியாய் விவசாயத்தைப் பார்த்துக் கொள்கிறான். இந்தத் தோப்பும்,வயலும் சென்னா ரெட்டியின் அப்பாவினுடையது.
என்னை இந்த வீட்டிலேயே தங்கிக் கொள்ளச் சொன்னான். அவன் வீட்டிலிருந்து சாப்பாடு வந்துவிடுமென சொன்னான்.

இது எந்த ஊரெனக் கேட்டேன். குண்ட்டூர் தாண்டி ஐந்து கி மீ தொலைவில் இருக்கும் எதுக்குரு கிராமம் எனப் பதில் வந்தது. இந்த ஊருக்குப் பத்து மைல் தள்ளி கொண்டவீடு மலைக்காடு இருக்கிறது. கொண்ட வீடு கிராமத்தில் பழங்காலக் கோட்டைகளும் இருப்பதால் சுற்றுலா வரத்தும் இந்தப் பக்கம் இருக்கும் என்றான். மாலை ஆறு மணியைத் தாண்டி இருந்தது. ஏற்கனவே இருந்த இருள் இப்போது முற்றிலுமாய் சூழ்ந்து கொண்டது. நான் சில மாதங்கள் இங்கு தங்கியிருக்க முடிவு செய்தேன் அருகாமையிலிருக்கும் நகரத்திற்குப் போய் உடைகள் மற்றும் உடமைகள் வாங்கி வரலாம் என சென்னாவை அழைத்தேன். பஸ்ஸில் போவது இந்நேரத்தில் கடினம், வீட்டிற்குப் போய் பைக்கை எடுத்துக் கொண்டு போகலாம் என்றான். நான் அவனோடு கிளம்பிப் போனேன். தோப்பின் இன்னொரு முடிவிற்காய் நடந்தோம். தோப்பு முடிந்து மீண்டும் வயல் குறுக்கிட்டது. வரப்புகளின் மீது நடக்க ஆரம்பித்தோம். பத்து நிமிட நடைக்குப் பின்னர் தொலைவில் வெளிச்சம் தென்பட்டது. மண்சாலை தொடங்கியது. நடக்க ஆரம்பித்தோம். முதலில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்த கோயில்தான் வரவேற்றது. சின்ன ஊர்தான். தெரு விளக்கு கம்பங்களில் டியூப் லைட் பளீரென எரிந்து கொண்டிருந்தது. மழை நீர் தெருவில் அங்கங்கே தேங்கி இருந்தது. வீட்டுத் திண்ணைகளில் சப்தமாய் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். முதல் தெருவின் கடைசி வீடு சென்னாவினுடையது. இரண்டு பெரிய திண்ணைகளைத் தாண்டி உள்ளே போனோம். சென்னா அவன் அப்பாவை சப்தமாய் அழைத்தான். ஐம்பது வயது மதிக்கத்தக்க உயரமான ஒருவர் வேட்டி மட்டும் அணிந்தபடி உள்ளிருந்து வந்து கைகூப்பினார். தெலுங்கில் ஏதோ சொன்னார். மையமாய் சிரித்து வைத்தேன். வண்டி சாவியை எடுத்துக் கொண்டு இரவு தோப்பிலேயே படுத்துக் கொள்வதாய் சொல்லியபடியே வந்தான். வெளியில் வந்தோம். வீட்டின் பக்கவாட்டில் ஹோண்டா சிடி100 வண்டி இருந்தது. சிவப்பு நிற வண்டி. சென்னாவையே ஓட்டச் சொல்லிவிட்டு பின்னால் அமர்ந்து கொண்டேன். அந்த வீதி இன்னொரு கோயிலில் முடிந்தது. நான்கு பக்கமும் வீதிகள் பிரிந்தன. கடைத்தெருவும் கோயிலை ஒட்டியே இருந்தது. நான் நினைத்ததை விடப் பெரிய ஊர்தான். மழையில் நனைந்த மண் சாலைகள் வழுக்கின. நிதானமாய் வண்டியைச் செலுத்தினான். இருபது நிமிடத்தில் குண்ட்டூர் வந்தோம். அங்கு தரை நன்கு காய்ந்திருந்தது. ஒரு ரெடிமேட் துணிகடைக்கு சென்று ஆடைகள் வாங்கினேன். கடையிலிருந்து வெளியே வரும்போது இண்டர்நெட் செண்டர் கண்ணில் பட்டது. சீராளன் மற்றும் குணாவின் வங்கி விவகாரங்கள் நினைவிற்கு வந்தது. சோப்பு, பிரஷ், டூத் பேஸ்ட், கண்ணாடி, பாய், தலையணை, போர்வை இதெல்லாம் வாங்கச் சொல்லி சென்னாவிடம் பணம் கொடுத்தேன். நான் அருகிலிருந்த இண்டர்நெட் செண்டரில் இருப்பதாய் அவனிடம் சொன்னேன். சரியெனப் போனான்.
பண விவகாரங்களை எல்லாம் தாமஸ்தான் பார்த்துக் கொண்டான். எங்கள் நால்வருக்கும் பத்திற்கும் மேற்பட்ட தனித் தனி வங்கிக் கணக்குகள் இருக்கின்றன. தாமஸ்தான் இதையெல்லாவற்றையும் நிர்வகித்து வந்தான். வரும் பணத்தை சமமாய் பிரித்து எல்லோர் கணக்கிற்கும் பட்டுவாடா செய்துவிடுவான். பொதுவான செலவுகளுக்குத் தனிக் கணக்கு ஒன்றும் இருந்தது. நால்வருக்கும் தனித் தனி மின்னஞ்சலகளை உருவாக்கி அதில் வங்கிக் கணக்கு விவரங்களை சேமித்து வைத்திருந்தான். இன்று வரை என் கணக்குகள் எந்தெந்த வங்கிகளில் இருக்கிறதென்றோ, எவ்வளவு பணம் இருக்கிறதென்றோ எனக்குத் தெரியாது.

மின்னஞ்சலைத் திறந்தேன் வங்கிகளின் பெயர்கள், கணக்கு எண், நிலுவையிலிருக்கும் தொகை எல்லாமும் துல்லியமாய் ஒரு எக்ஸெல் பைலில் சேமிக்கப்பட்டு ட்ராஃப்டில் இருந்தது. என் கணக்கில் மூன்று கோடியும் சில இலட்சங்களும் இருந்தன. அதே தொகை நால்வரின் கணக்கிலும் இருந்தது. ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டேன். சீராளனுக்குத் தொலைபேசி முகவரி வாங்கி, இந்த பிரிண்ட் அவுட்டை கொரியர் செய்து விடலாமா? என யோசித்தேன். பின்பு ஒரு வாரம் கழித்து அனுப்பிக் கொள்ளலாம் என முடிவை மாற்றிக் கொண்டேன். அங்கு நிலமை எப்படி இருக்கிறதெனத் தெரியவில்லை. பாதியிலே பிய்த்துக் கொண்டது வேறு மனதை அறுத்தது. சென்னா பைகளோடு வந்தான்.
மழை மீண்டும் வரும்போல இருந்தது. சென்னா எதையோ சொல்ல முற்படுவது போலிருந்தது. என்ன என்றேன் ஒன்றுமில்லை என முறுவலித்தான். அருகில் ஒயின்ஸ் கடை இருந்ததைக் கவனித்தேன். போய் மூன்று முழு புட்டிகளை வாங்கினேன். ஹாட் அடிப்பியா என்றதற்கு சிரிப்பாய் தலையசைத்தான். பைகளை மடியில் வைத்துக் கொண்டு வண்டியில் அமர்ந்தேன். மீண்டும் கிராமத்திற்கு வந்து சேர்ந்தோம். வயல் துவங்கும் இடத்திற்கு முன்பு வண்டியை நிறுத்தினான். அங்கிருந்து நடந்துதான் போக முடியும். இருள் முழுமையாய் வயலை மூடியிருந்தது. சென்னா கையில் சிறிய டார்ச் வைத்திருந்தான். அதன் வெளிச்சத்தில் பைகளை சுமந்தபடி வழுக்கும் கால்களோடு நடந்து போனோம்.

தோப்பு வீட்டில் இரண்டு குண்டு பல்புகள் இருந்தன. வீட்டின் வெளிச்சுவரில் ஒன்றும் உள்ளே ஒன்றுமாய் தொங்கின. அந்த வெளிச்சமே போதுமானதாய் இருந்தது. உடைகளை மாற்றிக் கொண்டு குடிக்க அமர்ந்தோம். எதுவும் பேசாமல் மூன்று ரவுண்ட்களை வேகமாய் முடித்தோம். இருட்டில் ஒரு ஆள் வந்துகொண்டிருப்பது மங்கலாய் தெரிந்தது. சென்னாவின் உறவினராம். உணவு கொண்டுவந்தார். அவரிடம் வண்டி சாவியைக் கொடுத்து வீட்டிற்கு வண்டியை எடுத்துப் போகச் சொன்னான். வேகமாய் சாப்பிட்டுவிட்டு படுத்துவிட்டோம். எதையும் பேசும் மனநிலையும் இல்லாமல் இருந்தது.
0
மாலை மூன்று மணிக்கு பூந்தமல்லியிலிருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது. பூந்தமல்லியை நெருங்குவதற்கு முன்பே சீராளன், சென்னைத் தொடர்புகளுக்குத் தொலைபேசி எல்லா வசதிகளும் தயாராய் இருப்பதை உறுதி படுத்திக் கொண்டான். மருத்துவமனை வாயிலை அடைந்ததும் ஸ்ட்ரெட்சரோடு மூவர் காத்துக் கொண்டிருந்தனர். ட்ரைவரும் சீராளனுமாய் குணாவைத் தூக்கி ஸ்ட்ரெட்சரில் கிடத்தினார்கள். உடன் வந்த டாக்டர் சிகிச்சை கொடுக்கப் போகும் டாக்டரிம் பரபரப்பாய் சில தகவல்களைச் சொன்னார். மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் குணாவைக் கொண்டு போய் கதவை மூடிக்கொண்டனர். டாக்டரும் நர்சும் விடை பெற்றுப் போனபின் ஒல்லியான ஒரு நபர் சீராளனிடம் நெருங்கி வந்து உடன் வருமாறு கிசுகிசுத்தார். சீராளன் அவரோடு போனான். மருத்துவமனை வளாகத்திலேயே அவனுக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. உள்ளே போனவுடன் சீராளன் கத்தையாய் பணமெடுத்து அவரிடம் கொடுத்தான். நன்றி சொல்லி அந்த நபர் விடைபெற்றுப் போனார். அயற்சியாய் படுத்துக் கொண்டான். ஏழு மணி வாக்கில் அவன் அறைக்கதவு தட்டப்பட்டது. குணாவிற்கு அறுவை சிகிச்சை முடிந்ததாகவும், இனி எதுவும் பயமில்லை என்றும், ஆனால் ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டுமென்றும் ஒருவர் தகவல் சொன்னார். சீராளன் நிம்மதியானான்.

ஒரு மணி நேரத்தில் குளித்துக் கிளம்பி மருத்துவமனை போனான். குணாவை அனுமதித்திருந்த அறைக்குள் நுழைந்தான். குணா ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தான். இரண்டு மணி நேரம் கழித்தே பேசமுடியும் என்றார்கள். பத்து மணி வாக்கில் குணா பேசினான்.
”பொழச்சிட்டனா?” எனப் புன்னகைக்க முயன்றான்.
சீராளனுக்கு அழுகை வந்தது. சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான். ”என்னாலதான்” என விம்மினான்.
குணா மெதுவாய் தலையசைத்து ”இல்ல அந்த பாடு தான் எல்லாத்துக்கும் காரணம், எங்க அவன்?” என கடுமையான குரலில் கேட்டான்.
”அவன் வரல வழிலயே இறங்கிகிட்டான்”
“நேத்து நைட் எங்க போய் தொலைஞ்சானாம்?”
சீராளன் அதிர்ச்சியாய் கேட்டான் “உங்களோட இல்லயா அவன்?”
குணா பதில் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துவிட்டு பின்பு சொன்னான். ”தாமஸ் தல என் கண் முன்னாலயே உருண்டது, என்னால ஒண்ணும் பண்ண முடியல, ரொம்ப அசிங்கமா ஓடி வந்தேன். அந்தத் தாயோலி எங்க போனான்னே தெரியல”
சீராளன் விரைப்பானான் ”அப்படியா? அவனும் நீயும் மேல் மாடி ரூமுக்குள்ள போறதுதான ப்ளான்?”
”ஆமா ஆனா ஒரு மணிக்கு அவன் வரல. நானும் தாமசும் காத்திருந்து வெறுத்து போய் இனிமேலும் தாமதிக்க கூடாதுன்னு ஒரு குருட்டு தைரியத்தோட ஆரம்பிச்சோம். லோகுவையும் கூட இருந்த எட்டு பேரையும் போட்டுட்டோம் ஆனா கீழ இருந்து நிறைய பேர் வந்துட்டாங்க சமாளிக்க முடியல”

சீராளன் அதிர்ச்சியடைந்தான். ”என்ன சொல்ற குணா?.. நீங்க மூணு பேரும் ஒண்ணாத்தான் பண்ணீங்கன்னு இல்ல நெனச்சிட்டிருந்தேன்.. நேத்து நீ துண்டாப் போன கையை, ஒரு கைல எடுத்துகிட்டு, தாமச போட்டாங்கடான்னு கத்திட்டே வண்டில ஏறின.. கொஞ்ச நேரத்துல பின் சீட்ல விழுந்து மயக்கமாகிட்ட. அஞ்சு நிமிசம் கழிச்சி அவனும் முகம் முழுக்க இரத்ததோட ஓடி வந்தான். பின்னால ஆளுங்க வேற தொரத்திட்டு வந்தாங்களே”
”ஒரு வேள எவகூடவாச்சிம் படுத்துத் தூங்கி இருப்பானோ?” என்றான் குணா
சீராளன் இறுக்கமாய் சொன்னான் ”என்ன காரணமா இருக்கலாம்ங்கிறது நமக்கு அவசியமில்ல குணா... ஆனா அவன் தாமஸ் சாவுக்கு பதில் சொல்லியே ஆகனும்”

சீராளனின் முகம் சிவந்திருந்தது. மிகவும் சிரமப்பட்டு கோபத்தை அடக்கிக் கொண்டான்.

குணா மீண்டும் அசதியாய் கண்களை மூடிக் கொண்டான்.

photo: Memories of murder

மேலும்

Featured Post

test

 test