Sunday, March 20, 2011

அத்தியாயம் எட்டு. அடைக்கலம்

கார் எந்தச் சாலையில் விரைகிறதெனப் புரியவில்லை. சீராளன் கிட்டத்தட்ட கண்களை மூடிக் கொண்டு ஆக்சிலேட்டரை மிதித்தான். எங்காவது, எதன் மீதாவது மோதி செத்துப் போய்விட்டாலும் நிம்மதியாகப் போகுமென அவன் நினைத்திருக்கக் கூடும். நான் குற்ற உணர்வில் ஏற்கனவே செத்துப் போயிருந்தேன். குணா அதிக இரத்த இழப்பில் மூர்ச்சையாகியிருந்தான். சற்று நேரம் கழித்து ஒரு நிலைக்கு வந்தேன். எப்படியாவது குணாவைக் காப்பாற்றியாக வேண்டும்.

சன்னமான குரலில்“வழில எங்காவது ஹாஸ்பிடல் இருக்குமா சீராளா?” என்றேன்.
“எங்க போனாலும் மாட்டிப்போம்” என்றான்
”யாராவது தெரிஞ்ச டாக்டருங்க?”
வண்டியை ஓட்டியபடியே சீராளன் யாருக்கோ தொலைபேசினான்.
”காக்கிநாடால தெரிஞ்சவங்க ஆஸ்பிடல் இருக்காம்”
“இடம் எங்கன்னு கேட்டுக்கோ. ஆஸ்பிடல்ல சேக்க வேணாம். ஆம்புலன்ஸ் இருந்தா நல்லது, அதுல குணாவ படுக்க வச்சிட்டு டாக்டருங்கள ட்ரீட் பண்ண சொல்லலாம். ஆம்புலன்ஸ்லயே மெட்ராஸ்க்கு தூக்கிட்டுப் போய்டலாம்” என்றேன்.
“பார்க்கலாம்” என்றான்.
வண்டி பிரதான சாலையைத் தொட்டது. அதிர்ஷ்டவசமாக காக்கிநாடா சாலையில்தான் இருந்தோம். வண்டியை விரட்டினான். பத்தாவது கிலோமீட்டரில் ஒரு தனியார் மருத்துவமனை கண்ணில் பட்டது. சீராளன் வண்டியை ஓரம் கட்டினான். மீண்டும் தொலைபேசி மருத்துவமனையின் பெயர் சொன்னான். பின்பு வண்டியை மருத்துவமனைக்குள் செலுத்தினான். தூரத்தில் இரண்டு ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதற்கு சமீபமாய் காரை நிறுத்தி விட்டுக் காத்திருந்தான். பத்து நிமிடத்தில் வெள்ளைக் கோட்டணிந்த ஒரு இளைஞர் வெளியே வந்தார். முன்னும் பின்னுமாய் பார்த்தார்.

சீராளன் கார் விட்டு இறங்கி அவரிடம் போனான். ஏதோ பேசிக் கொண்டார்கள்.
நானும் இறங்கிப் போனேன். எப்படியாவது குணாவைக் காப்பாற்றும் படி கெஞ்சிக் கொண்டிருந்தான். ஆம்புலன்ஸிலேயே வைத்து ட்ரீட்மெண்ட் தரவேண்டுமென்றும் கொல்லம் வரை ஆம்புலன்ஸிலேயே போகவேண்டுமென்றும் தெலுங்கில் சொல்லிக் கொண்டிருந்தான். டாடா சுமோ கார் சாவியை வைத்துக் கொள்ளுமாறு டாக்டரிடம் தந்தான். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம் எனச் சொல்லியபடி பாக்கெட்டில் கை விட்டு பணக்கட்டுக்களை எடுத்துக் கொடுத்தான். டாக்டர் பணத்தை வாங்கிக் கொண்டார். உள்ளே வேகமாய் போனார். ”எதற்கு கொல்லம்?” என்றேன். நிலமை சீராகும் வரை அங்குபோய் சில மாதங்கள் தங்கி இருக்கலாம் என்றான். அங்கு அவனுடைய பழைய தொடர்புகள் நிச்சயம் உதவுவார்கள் எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு நர்சும், ஆம்புலன்ஸ் ட்ரைவரும் உடன் வந்தனர். டாக்டர் ஒரு பெரிய மருந்து அட்டைப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தார். நானும் சீராளனும் மயங்கிக் கிடந்த குணாவைத் தூக்கி ஆம்புலன்ஸில் கிடத்தினோம். நர்ஸ் குணாவின் இரத்தம் என்ன குரூப்? என்றாள் தெரியவில்லை என்றோம். சோதித்து விட்டு பி பாசிட்டிவ் என்றாள்.

டாக்டர் குணாவைச் பரிசோதித்து விட்டு தொடர்ச்சியாய் ஊசிகளைப் போட்டார். திரும்ப உள்ளே ஓடிப்போய் ப்ளட் பாங்கிலிருந்து தேவையான இரத்தம் வாங்கி வந்தார். நான் மெதுவாய் வண்டியைச் செலுத்தலாம் என்றேன். டாக்டர், ட்ரைவருக்கு சைகை காண்பித்தார். ஆம்புலன்ஸ் அலறலோடு மருத்துவமனையை விட்டு வெளியேறியது. வண்டியை நிதானமாகவே ஓட்டச் சொன்னோம். இரத்தம் ஏறிக் கொண்டிருந்தது. டாக்டர் தொடர்ந்து பல்ஸைச் சோதித்துக் கொண்டிருந்தார். அரை மணிநேரத்தில் குணா அபாய கட்டத்தை தாண்டி விட்டதாய் சொன்னார். ஆனால் அடுத்த பனிரெண்டு மணி நேரத்திற்குள் மருத்துவமனை சிகிச்சை அவசியம் என்றார். கையில் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டுமென்றார். சீராளன் சற்று யோசித்தான். காக்கிநாடாவிலிருந்து கொல்லம் ஆயிரத்து நானூறு கிலோ மீட்டர். நிச்சயம் ஒரு நாள் ஆகும். இடையில் சென்னையில் மருத்துவமனையில் சேர்க்காவிட்டால் நிலமை விபரீதமாகலாம்.

எனக்காய் திரும்பி ”மெட்ராஸ்ல ஆளுங்கள புடிக்க முடியுமா?” என்றான்
உடனே சென்னையிலிருக்கும் தொடர்புகளுக்குத் தொலைபேசினேன். நிலமையைச் சொன்னேன். பூந்தமல்லி வந்துவிடச் சொன்னார்கள். ஹாஸ்பிடல் பெயரைச் சொன்னார்கள். அதே எண்ணுக்குத் தொடர்பு கொண்டால் போதுமென்றும் மற்ற விவகாரங்களை பார்த்துக் கொள்ள ஆட்கள் மருத்துவமனையில் காத்திருப்பார்கள் எனவும் பதில் வந்தது. எண்ணை சீராளனிடம் தந்தேன். ட்ரைவர் விரைவாய் போனால் பத்து மணி நேரத்தில் சென்னை போய் சேர்ந்து விடலாமென்றார். விடிந்தது. ஏழு மணி சமீபமாய் விஜயவாடா வந்து சேர்ந்தோம். குணா சீராய் மூச்சு விட்டுக் கொண்டிருந்தான்.

சீராளன் சீட்டில் படுத்துக் கொண்டான். நான் உட்கார்ந்த வாக்கிலேயே கண்களை மூடினேன். முகத்தில் இரத்தம் காய்ந்து போய் நாற்றமடித்தது. விஜியை வெட்டிய அரிவாள் ஆசை தீராமல் என் நெஞ்சிலும் நீளமாய் மெல்லிதாய் கோடு கிழித்திருக்கிறது. அணிந்திருந்த சட்டை பனியன் எல்லாமும் இரத்தத்தில் தோய்ந்து காய்ந்து முடமுடெவென இருந்தது. சட்டையையும் பனியனையும் நர்ஸ் இருப்பதைப் பொருட்படுத்தாமல் கழற்றிப் போட்டேன். ட்ரைவரை வண்டியை ஓரமாய் நிறுத்தச் சொல்லி, தண்ணீர் பாட்டில் வாங்கி முகத்தைக் கழுவிக் கொண்டேன். அவரிடம் ஒரு பழைய சட்டை இருந்தது. வாங்கி அணிந்து கொண்டேன். இதற்கு மேல் இந்தச் சூழலில் என்னால் தொடர்ந்து இருக்க முடியாதெனத் தோன்றியது. சீராளனை எழுப்பி இங்கேயே இறங்கிக் கொள்வதாய் சொன்னேன். சீராளன் எந்த உணர்ச்சியுமில்லாமல் என்னைப் பார்த்தான். இரண்டு நாளில் சீராளனுக்குத் தொலைபேசுவதாகவும். வங்கிக் கணக்கு விவரங்களை கொரியரில் சீராளனுக்கு அனுப்பி வைப்பதாகவும் சொல்லிவிட்டு இறங்கிக் கொண்டேன். குணாவப் பாத்துக்கோ எனச் சொல்ல நினைத்து சொல்லாமல் விட்டேன். அப்படிச் சொல்வதற்கான எந்த அருகதையுமே எனக்கு இல்லை
From தனிமையின் இசை

இது எந்த இடம் எனத் தெரியவில்லை. கண்களுக்கெட்டியவரை வயலாய் இருந்தது. லேசாய் மயக்கம் வருவது போலிருந்தது. இமைகளை மூடினால் வெட்டுப்பட்ட விஜியின் தலையும், தாமசின் தலையும் விடாது நினைவில் உருண்டு கொண்டிருந்தன. என்ன செய்வதென்றே புரியாமல் நடந்து கொண்டிருந்தேன். வழியில் ஒரு பெரிய ஆலமரம் விழுதுகளை விரித்துக் கொண்டு பிரம்மாண்டமாய் நின்று கொண்டிருந்தது. அந்த நிழலில் போய் படுத்துக் கொண்டேன். ஒரே இரவில் அடுக்கடுக்காய் இத்தனை திருப்பங்களை எதிர் கொண்டதுண்டு என்றாலும் விஜியையும் தாமஸையும் அப்படிச் சுலபத்தில் கடந்து வர முடியவில்லை. இரண்டிற்கும் நான் தான் காரணம் என்கிற எண்ணம்தான் பயங்கரமான அழுத்தத்தைக் கொடுத்தது. கண்களை மூட முயன்றும் முடியவில்லை. எழுந்து கொண்டேன். தொலைவில் ஒரு மோட்டார் பம்பு நீரை இறைத்துக் கொண்டிருந்தது. நீரில் போய் விழலாமென அதை நோக்கிப் போனேன். கிணறிலிருந்து பம்பு நேரடியாய் கால்வாயில் நீரை இறைத்துக் கொண்டிருந்தது. நீர் விழுந்த இடம் மட்டும் பெரிய குழியாகி இருந்தது. ஆடைகளோடு போய் நின்றேன். தலைமேல் நீர் அழுத்தமாய் கொட்டியது. கொதிப்படைந்த உடல் தணியும் வரை நின்றுகொண்டே இருந்தேன். எங்கிருந்தோ ஒரு முதியவர் வந்து தெலுங்கில் இறைந்தார். நான் மேலேறி வந்தேன்.

மீண்டும் சாலைக்காய் நடக்க ஆரம்பித்தபோது நிற்கச் சொல்லி ஒரு குரல் முதுகின் பின்னாலிருந்து வந்தது. திரும்பிப் பார்த்தேன். இருபது வயது மதிக்கத் தக்க ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான்.
”மீரு எவரண்டி?” என்றான்
பதில் சொல்ல முடியாத அளவிற்கு உடலும் மனமும் சோர்ந்து போயிருந்தது. எதுவும் பேசாமல் பார்வையை மாற்றிக் கொண்டு வந்த வழியே நடக்க ஆரம்பித்தேன். அந்த இளைஞன் இப்போது கோபமாய் கேட்டான்.
”எவரனி அடுகுத்துன்னானு மாட்லாடுகொண்டா வெளுத்துன்னாவு?” நான் திரும்பியே பார்க்காமல் நடந்தேன்
இளைஞன் ஓடிவந்து என் தோளைப் பிடித்துத் திருப்பினான்
”எவரு நூவு? என்றான்
வழி தவறிவிட்டதாய் தமிழிலேயே சொன்னேன்
”தமிழா?”
தலையசைத்தேன்.
எங்கிருந்து எங்க போன? இங்க எப்படி வழி மாறி இருக்க முடியும்? தெலுங்கு கலந்த தமிழில் தொடர்ச்சியாய் கேள்விகள் கேட்டான்.
நான் கையை உதறிவிட்டு நடந்தேன்.
திடீரென அந்த இளைஞன் திரும்பி நின்று கத்த ஆரம்பித்தான்
ஆட்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் கையில் ஆயுதங்களோடு ஓடி வந்து என்னைச் சூழ்ந்து கொண்டனர். அந்த இளைஞன் உரத்து ஏதோ சொன்னான்.
கட்டுக்கோப்பான உடலுடன் ஒரு விவசாயி முன்னால் வந்து
யார்பா நீ? இங்க என்ன பன்ற? என தமிழில் கேட்டார்
நான் மீண்டும் வழிமாறிவிட்டேன் என்றேன்
”இலாக அடுகாமெண்டே செப்படு” என்றபடி அந்த இளைஞன் வேகமாய் முன்னால் வந்து என்னை பலமாய் அறைந்தான். நான் பொத்தென அறுப்பு முடிந்த வயலில் விழுந்தேன்.
”பொலம்ல உறி கொய்யிடம் பணி உந்தான்னனி சூட ஒச்சின மர்ம வெக்தி” எனக் கத்தினான். என்னால் எழமுடியவில்லை. உடலை விட மனம் அதிக சோர்வடைந்திருந்ததால் அப்படியே படுத்துக் கொண்டேன்.
கூட்டத்திலிருந்து ஒரு குரல் ”தரவாத்தா ஆ அன்னி சூஸ்தம் முந்து தீஸ்க்கெல்லி மரமுல கட்டியையண்டி” என்றது. இருவர் முன்னால் வந்து என் கைகளை இரண்டு பக்கமாக பிடித்து இழுத்துச் சென்றனர். பாதி உடல், அறுப்பு முடிந்த வயலில் தேய்ந்து கொண்டே வந்தது. கிணறை ஒட்டியிருந்த புங்கை மரத்தடியில் கிடத்தினர்.

ஒருவன் என் சட்டை,பேண்ட் பாக்கெட்டுகளில் கை விட்டு சோதித்தான். நனைந்து போயிருந்த பர்ஸையும் செல்போனையும் வெளியில் எடுத்தான். துப்பாக்கியை காரிலேயே விட்டுவிட்டது நல்லதாகப் போயிற்று. பர்ஸைத் திறந்து பார்த்தவன் வியப்படைந்தான். கத்தையாய் ஆயிரம் ரூபாய் நோட்டுகள், நான்கைந்து ஏடிம் கார்டுகள் இத்துடன் ஒரு அடையாள அட்டையும் இருந்தது. நாங்களாய் வைத்துக் கொண்ட அடையாள அட்டையது. என்பெயருக்கு கீழ் மேனேஜிங் டைரக்டர் மீனாட்சி குரூப் ஆப் கம்பெனிஸ் என இருக்கும். அந்த அட்டையை என்னை அறைந்த இளைஞன் தான் சப்தமாய் வாசித்தான். ஒரு சின்ன பதட்டம் அந்த குழுவில் தொற்றிக் கொண்டது. இளைஞன் ஓடிப்போய் தண்ணீர் கொண்டு வந்தான். கூட்டமாய் இருந்தவர்கள் அவனைத் திட்ட ஆரம்பித்தனர். அந்த இளைஞன் கீழே உட்கார்ந்து என் தலையைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு வாயில் நீர் புகட்ட முயற்சித்தான். நான் எழுந்து அமர்ந்து கொண்டு தண்ணீர் வாங்கிக் குடித்தேன். மிகவும் பதட்டமாய் அந்த இளைஞன் மன்னிப்புக் கேட்டான்

நான் சன்னமாய் பேசினேன் என் தவறுதான் நான் சரியான பதிலை சொல்லவில்லை என்றேன். வியாபாரத்தில் கடுமையாய் நட்டமடைந்ததால் கால் போன போக்கில் நடந்து கொண்டிருப்பதாய் சொன்னேன். இளைஞன் கூட்டத்தைப் பார்த்து நான் சொன்னதை தெலுங்கில் சொன்னான். நிறைய உச் உச் கள் எழுந்து அடங்கின
யாரோ ஒருவர் எவர்சில்வர் தூக்குப் போசியை கொண்டு வந்து நீட்டினார்.
சாப்பிடச் சொன்னார். என் பசி அப்போதுதான் எனக்கே உறைத்தது. போசியைத் திறந்தேன் பழைய சாதத்தில் மோர் ஊற்றப்பட்டு வெண்ணெய் மிதந்து கொண்டிருந்தது. அள்ளி அள்ளி சாப்பிட ஆரம்பித்தேன்.

அனைவரும் கலைந்து போயினர். அந்த இளைஞன் ஓரளவுக்கு தமிழ் பேசினான். கூட்டத்தில் தமிழ் பேசிய கட்டுமஸ்தான உடல் கொண்டவரும் அருகிலேயே நின்றார்.
இப்ப எங்க ஸார் போவுது? என்றான் “தெரியல” என்றேன்
அந்த இளைஞன் சில நாட்கள் இங்குத் தங்கிப் போகும்படி சொன்னான். பேச்சில் குற்ற உணர்வு மிகுந்திருந்தது. நான் தூங்க வேண்டும் என்றேன். பின்னால் வரச்சொல்லிவிட்டு வரப்பின் மீது நடக்க ஆரம்பித்தான். வயல் முடிந்ததும் சிறிய ஓடை ஒன்று குறுக்கிட்டது. ஓடையில் சன்னமாய் நீர் ஓடிக்கொண்டிருந்தது. சரிவிலிருந்த கற்களைத் தாண்டி மேலேறியதும் மரங்கள் அடர்ந்த தோப்பு ஒன்று வரவேற்றது. நடக்க நடக்க மஞ்சம்பில் வேய்ந்த கூரை வீடு ஒன்று தென்பட்டது. அதை நோக்கிப் போனோம். ஒரு பெரிய மாமரம் வீட்டின் முற்றத்தில் நிழல் விரித்திருந்தது. ஏற்கனவே ஒரு கயிற்றுக் கட்டிலும் அங்கயே கிடந்தது. அவன் சொல்லுமுன்பே போய் படுத்துக் கொண்டேன்.

ஓவியம் : வான்கோ

மேலும்

2 comments:

யுவா said...

திருப்பங்களுடன் கூடிய கதை... இல்லை இல்லை... கதையுடன் கூடிய திருப்பங்கள்!

Nithi said...

நல்லா இருக்குங்க.....

Featured Post

test

 test