Saturday, March 5, 2011

அத்தியாயம் இரண்டு. எழுச்சி

கொல்லி மலையில் நான்கு நாட்கள் தங்கியிருந்தோம். ஆசிரமத்தில் நிரம்பியிருந்த அமைதி எங்களை ஒரு நிதானத்திற்கு வர வழைத்தது. அடுத்து என்ன செய்வது? என்பதை யோசித்தோம். முதலில் இந்தக் குடியையும் பெண் சகவாசத்தையும் விட்டொழிக்க வேண்டுமென ஒரு மனதாய் உறுதி பூண்டோம். அடுத்த மூன்று வருடங்கள் தொழிலில் மட்டுமே கவனத்தைச் செலுத்த வேண்டும். ஓரிரு வேலைகளை கச்சிதமாய் செய்து முடித்து நம் இருப்பை அறிவித்து விட்டால் போதும் தொடர்ச்சியாய் வேலைகள் எப்படியாவது கிடைக்கத் தொடங்கி விடும். மக்களோடு மக்களாய் கலந்து விட, பெயருக்கு ஒரு தொழிலைத் தொடங்க வேண்டும். என்ன தொழிலை செய்வது? என யோசித்தபோதுதான் குணா ட்ராவல்ஸ் தொடங்கலாம் என்றான். மதுரைக்கே திரும்பிவிட உத்தேசித்தோம்.


அடுத்த நாள் ஆசிரமத்தில் இருந்து கிளம்பினோம். ஆசிரம உண்டியலில் ஒரு தொகையைப் போட்டேன். யாரும் வழியில் நிறுத்திக் குடிக்க வேண்டுமெனச் சொல்லவில்லை. ஒருவருக்கொருவர் பெரிதாய் பேசிக்கொள்ளாமலே மதுரை வந்தோம். மதுரையில் தாமஸிற்கு சில வீட்டு புரோக்கர்களைத் தெரிந்திருந்தது. ஊருக்கு வெளியே வசிப்பதுதான் வசதி எனத் தோன்றியது. திருப்பரங்குன்றம் தாண்டி வீட்டைப் பிடித்தோம். சிம்மக்கல் கடை வீதியில், இருபதிற்கு நாற்பது அளவில் ஒரு கடையைப் பிடித்தோம். மீனாட்சி ட்ராவல்ஸ் என சாமி படம் போட்ட பெயர் பலகையை கடைக்கு முன் மாட்டினோம். ஏற்கனவே குணாவின் சுமோ இருந்தது. ஒரே ஒரு இண்டிகாவை மட்டும் வாங்கினோம். ட்ரைவர் யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. கொடைக்கானல் சவாரி வந்தால் மட்டும் குணா போவான். மற்றபடி வருகிறவர்களுக்கெல்லாம் “வண்டி புக் ஆகிடுச்சிண்ணே” என ஒரே பதிலை வைத்திருந்தோம்

ஆரம்பத்தில் செய்த வேலைகளென்றால் பெரிதாய் ஒன்றுமில்லை.
இரு தரப்பு தொடர்புகளை உண்டாக்கிக் கொடுப்பதுதான் முக்கிய வேலையாக இருந்து வந்தது. நானும், குணாவும், சீராளனும் முகம் தெரியாத தலைமைகளுக்கு மட்டுமே வேலை செய்திருந்ததால் வேலையைத் தவிர்த்து எதையும் தெரிந்து வைத்துக் கொள்ளவில்லை. மார்க்கெட் நிலவரம் கூட தாமஸின் மூலமாகத்தான் தெரிய வந்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாய் அடிமாட்டு விலைக்கு பல ரிஸ்குகளை எடுத்து வந்திருக்கிறேன் என்பது மார்க்கெட்டிற்கு வந்த பின்புதான் புரிந்தது. தாமஸிற்கு பாண்டிச்சேரி பகுதியில் நல்ல செல்வாக்கு இருந்தது. கடலூர், பாண்டி,சிதம்பரம் பகுதிகளில் நிகழந்த சம்பவங்கள் பெரும்பாலும் வெளியாட்களைக் கொண்டுதான் செய்யப்பட்டன. குணா முதல் வருடத்தில் நான்கைந்து முறை சிதம்பரம் போய் வந்தான். கிடைத்த எல்லா வேலைக்கும் ஒத்துக் கொண்டோம். வேலையில் சின்னது பெரியது என எதையும் ஒரு வருடத்திற்கு பார்க்க வேண்டாமென்பது தாமஸின் எண்ணமாக இருந்தது. மெல்ல எல்லா நெட்வொர்குகளும் எங்களுக்கு அறிமுகமாகின். “அதனை அவன் கண் விடல்” என்பது எல்லா நெட்வொர்குகளுக்குமே தாரக மந்திரமாக இருந்ததைப் புரிந்து கொண்டோம். இரண்டாம் வருடத்தில் நாங்கள் வலிமையானதை எங்களாலே உணரமுடிந்தது. உதாரணத்திற்கு வட இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் பணக்கார பானர்ஜியையோ, அரசியல் சட்டர்ஜியையோ தீர்த்துக் கட்ட வேண்டுமென்றாலும் எங்களால் மதுரையிலிருந்தபடியே செய்ய முடிந்தது. எங்களுக்கு தேவையானதெல்லாம் கால அவகாசம் மட்டும்தான். அவகாசத்திற்கேற்ப தொகையும் மாறுபடும். கிட்டத்தட்ட இந்தியா முழுக்க ஆட்களையும், சிறுசிறு குழுக்களையும் ஒண்ணரை வருடத்தில் தெரிந்து வைத்துக் கொண்டோம். லோக்கல் வேலைகளையும் விடாமல் செய்து வந்தோம். தேடி வந்த ஆட்களை திருப்தியோடு அனுப்பும் வணிக முதலாளி மனநிலையில்தான் இயங்கினோம். விலை நிர்ணயம், சம்பவங்களுக்கானத் திட்டங்கள், முன்னேற்பாடுகள் இவை அத்தனையும் நானும் தாமசும் பார்த்துக் கொண்டோம். சீராளன் ரிஸ்கில்லாத வேலைகளுக்கும், குணா ரிஸ்கான வேலைகளுக்கும் பழகி இருந்தனர் சமயத்தில் இருவரும் ஒன்றாகச் செய்வதும் உண்டு.

ஒரு முறை காதலனை துரோகித்து விட்டு, சிம்லாவிற்குத் தேனிலவு போயிருந்த பெண், புதுக் கணவனுடன் சல்லாபிப்பதற்கு முன்பு கொல்லப்பட வேண்டுமென்கிற பழைய பணக்காரக் காதலனின் ஆசையைப் பூர்த்தி செய்தோம். அவள் சரியாய் தன் உள்ளாடைகளைத் தளர்த்தும்போது ஒரு சர்தாஜி அவளின் மென் கழுத்தை அறுத்தான். தகவல் உறுதி செய்யப்பட்ட அல்லது பணம் கைமாறின முப்பது நிமிடத்திற்குள் வட சென்னை கவுன்சிலர் ஒருவரை அவரின் தெருமுனையில் வைத்தே அரிவாளால் வெட்டிச் சாய்த்தோம். தகவல் உறுதி செய்யப்பட்ட பதினெட்டு நிமிடத்திற்குள் திருச்சி சப் இன்ஸ்பெக்டர் சிவராமனை, நெற்றி துளைக்க துப்பாக்கியால் சுட்டுக் கொல்லவும் எங்களால் முடிந்தது. வாடிக்கையாளர்களின் திருப்திதாம் எங்களுக்கு முக்கியமாக இருந்தது. பணத்திற்கான வேலையாக மட்டும் பார்க்காமல் அதை சுவாரஸ்யமாகவும் நாளையடைவில் மாற்றிக் கொண்டோம். ஒவ்வொரு வேலையும் மிகப் பெரிய சவாலாகவும் அதன் துல்லியமான நிறைவேற்றம் பெரும் பூரிப்பாகவும் இருந்து வந்தது. ஒரு உயிரைத் துண்டிக்கும்போது எந்தப் பதட்டமும் இல்லாமல் இருந்தது. துண்டித்த பின்பு குற்ற உணர்வும் ஏற்படாத அளவிற்கும் பழகி இருந்தோம்.

பிரபல நகைக்கடைக்காரின் மூத்த பெண்ணின் கணவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால், ஆத்திரமடைந்த அவன் மனைவி, அவனைக் கொல்ல வேண்டுமென எங்களிடம் வந்தாள். தாமஸ்தான் அந்தக் காரியத்தைச் செய்து முடித்தான். தவிர்க்க இயலாது கூடவே அவன் காதலியையும் கொல்ல வேண்டியதாய் போயிற்றாம் கொலைகளைப். பொறுத்தவரை தடயங்களில் கவனமாய் இருந்தோம்.
திட்டமிட்ட கொலை என்பது எங்களைப் பொறுத்தவரை மிக சலிப்பான ஒன்றாகத்தான் இருந்து வருகிறது. நாங்கள் மிகச் சாதாரணமாய் இயங்கினோம். பெரிதான திட்டமிடல்கள் எதுவும் இருக்காது. துரிதம் மட்டுமே பிரதானம். துரிதத்தில்தான் கச்சிதம் கைகூடும் என்பதை நாங்களாய் கண்டறிந்து கொண்டோம். கடத்தல்களில் ஈடுபடுவது எங்களுக்கு சரிப்படவில்லை. ஒரு முறை லோக்கல் அரசியல்வாதி ஒருவன் தனக்கு இணங்க மறுத்த நடிகையைக் கடத்தி வரப் பணித்தான். அவனைப் பகைத்துக் கொள்ள விரும்பாமல், செய்துவிடலாம் என்றே முடிவெடுத்தேன். குணா தீர்மானமாய் மறுத்து விட்டான். இந்த மாதிரி வேலைகளை தன்னால் செய்ய முடியாதெனவும் நம்முடைய வேலை இதுவல்லவெனவும் அவன் கோபமாய் மறுத்தான். அரசியல்வாதிக்கு இதைப் புரியவைக்கும் வேலையை நான் எடுத்துக் கொண்டேன். மதுரையில் அவனைப் பகைத்துக் கொண்டு எதுவும் செய்யமுடியாதென்பதால் ஜாக்கிரதையாகவே அனுகினேன். ”எந்த நடிகையின் தலை வேண்டுமெனச் சொல்லுங்கள் வெட்டித் தருகிறோம்” என பவ்யமாய் பதில் சொன்னதற்கு ஆர்ப்பாட்டமாய் சிரித்து ”நல்ல பாலிசிதான்யா தேவைப்பட்டா கூப்டுறேன் போய்ட்டு வாங்க” என்றான்.

சரியாய் இரண்டே வாரத்தில் கூப்பிட்டனுப்பினான்.

நானும் தாமசும் அவனைப் பார்க்கப் போனோம். பாலமேடு பக்கத்தில் விஸ்தாரமான இடத்தில் கட்டப்பட்டிருந்த பெரிய தோப்பு வீடு அது. உயரமான காம்பவுண்டு சுவரும் ஏராளமான நாய்களுமாய் அந்த இடம் பழையத் திரைப்படங்களில் வரும் ஜமீன்தார் பங்களாவை நினைவுபடுத்தியது. இவனுக்கு இல்லாத ஆளா? நம்மள ஏன் கூப்டுறான் என சலித்துக் கொண்டேதான் சென்றோம். உயரமான மாமரத்திற்கு அடியில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்துபடி குடித்துக் கொண்டிருந்தான். தொலைவில் இரண்டு குண்டர்கள் கைகட்டியபடி நின்று கொண்டிருந்தனர். ”ஒருத்திய வெட்டனும். ஒடம்புல எந்த பாகமும் யாருக்கும் கிடைக்க கூடாது. பழைய கவர்ச்சி நடிகை ஜிகினாஸ்ரீயத் தெரியும் இல்ல. அவதான்” என நிறுத்தினான். எனக்குத் துணுக்குறலாக இருந்தது. பதட்டத்தை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. மேலும் தொடர்ந்தான் “அடுத்த வாரம் கொடைக்கானல் வரா. ஹில் வியூ ஓட்டல்லதான் தங்க போறா. அங்க வச்சே முடிச்சிடுங்க” என்றான். தொலைவில் இருந்தவர்களை நோக்கி கையசைத்தான். ஒருவன் சுருட்டிய மஞ்சள் பையை எடுத்துக் கொண்டு அருகில் வந்தான். ”இத வாங்கிக்க, பத்தலனா கேளு, கூச்சப்படாதே” என்றான். தாமஸ் வாங்கிக் கொண்டான். ”வேற ஏதாவது தெரியனுமா?” என்றான். தாமஸ் தலையை சொறிந்தபடி இளித்தான் ”அதுலாம் ஒண்ணும் இல்லணா ஒரே டவுட்டு கேட்டுக்கட்டா?” என்றான். தலையசைத்தான்.

”உங்களுக்கு இல்லாத ஆளுங்களா, நாங்க ஏதோ பிசாத்து பசங்க, எங்களப் போய் இந்தச் சின்ன வேலைக்கெல்லாம் கூப்புடுறிங்களே அதான்” என்றான்.
அரசியல்வாதி அனுபூதி போதைச் சிரிப்பைத் துப்பினார். ”எங்கிட்ட இருக்க பசங்க எல்லாரையும் என் பொண்டாட்டிக்கு தெரியும், பொம்பள விவகாரம் அவ காதுக்குப் போச்சின்னா சரிப்படாது, அதான் உங்களலாம் கூப்ட வேண்டி இருக்கு”
”அப்ப சரி அடுத்த வாரம் விஷயம் முடிஞ்சதுன்னு வச்சிக்கிங்க.” பணம்? என இழுத்தான் ”அய்யோ உங்ககிட்ட பணம் வாங்க கூடாது ஏதோ குடுக்கிறீங்களேன்னு மறுக்காம வாங்கிகிட்டேன்” என தாமஸ் மீண்டும் இளித்தான். ”பொழச்சிப்பீங்க எனச் செல்லி அதே கேவலமான சிரிப்பை மீண்டும் துப்பினான். எனக்கு வெளியே எப்போது போவோம் என்று இருந்தது.

வெளியில் வந்து காரைக் கிளப்பியதும் சொன்னேன்
”தாமஸ் இத நாம பண்ணல”
”ஏன்?”
”ஜிகினாவை எனக்கு நல்லா தெரியும்”
”அப்ப வேல சுலபம்தானே”
”இல்ல என்னால முடியாது.”
”இத மறுக்க முடியாது பா, ஏற்கனவே அவன் சொன்ன வேலைய நாம பண்ணல. இதையும் ஒத்துகிட்டு, பின்ன மாட்டோம்னு சொன்னா, அவன் நம்மள இங்க விட்டு வைக்க மாட்டான்”
அமைதியானேன். தாமஸ் சொல்வதும் சரிதான்.

ஆனாலும் ஜினாவைக் கொல்ல எனக்கு மனம் ஒப்பவில்லை. ஜிகினாவை இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு இக்கட்டிலிருந்து காப்பாற்றினேன். அதுவும் வேலைதான். ஹைதராபாத்தில் ஒரு பணக்கார நாயுடு அவளைக் கடத்திக் கொண்டு போய் வைத்திருந்தான். அவனுடைய இரவு மதுவிடுதிகளில் வலுக்கட்டாயமாக காபரே ஆட பணிக்கப்பட்டிருந்தாள். பலமான அரசியல் தொடர்பு கொண்டவன் என்பதால் லீகலாய் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு மாதத்தினுக்கு மேல் அவளிடமிருந்து தகவல் எதுவும் வராததால். ஜிகினாவின் அக்கா எங்கள் தலைமையை தொடர்பு கொண்டாள். நான் அவளை மீட்டுக் கொண்டு வரும் வேலைக்கு அனுப்பப்பட்டேன். தெலுங்கு மசாலா சினிமாக்களை விஞ்சும் சாகசம்தான் அது. எங்கள் தலைமையின் கச்சிதமான திட்டத்தால் அதை நிறைவேற்ற முடிந்தது. ஹைதராபாத் நகரத்திலேயே நான்கு நாட்கள் ஜிகினாவோடு பதுங்கி இருந்தேன். பரபரப்புகள் அடங்கியதும் அவளை சென்னைக்கு அழைத்து வந்தேன். அதற்குள் தலைமை, அரசியல் புள்ளிகளைப் பிடித்து, நாயுடுவை சாந்தமாக்கி இருந்தது. நான்கு நாட்களில் ஜிகினாவிடமிருந்த பேதமையைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். நாற்பத்தெட்டு வயதிலும் விகல்பமில்லாமல் இருந்தாள். நான்கு இரவுகளிலும் ஒன்றாகத் தூங்கியது வேலைக்கு மேல் கிடைத்த விசேஷ போனஸ். தளர்ந்த சதைக் குவியல்தாமென்றாலும் பதின்மங்களில் அவளென் சுயபுணர்வுக்கான பிம்பமாக இருந்தாள். அவளைப் புணர்ந்தது கனவு போலத்தான் இருந்தது.

கடைக்கு வந்தோம். சீராளனிடமும் குணாவிடமும் விஷயத்தைச் சொன்னோம். சீராளன் ஜிகினா என்றதும் வாய் பிளந்தான். குணாவிடம் எந்த ரியாக்சனும் இல்லை. சீராளன் தயங்கி தயங்கி சொன்னான். ரெண்டு வருஷமா மிஷின் போல ஓடுது பா, கொஞ்சம் ரெஸ்ட் வேணும். கூடவே ஜிகினாவும் என இளித்தான். நானும் தாமசும் ஒரே நேரத்தில் புன்னகைத்தோம். இரண்டு நாட்களுக்கு முன்பாகவே போய் ஹோட்டலில் தங்கலாமென்றான் தாமஸ். நால்வருமே போவதாய் முடிவு செய்தோம்.

கிளம்பினோம்.


மேலும்
ஓவியம் : Rembrandt

5 comments:

Anonymous said...

Haunting! ayyanaar, i think this novel gonna be your master piece.
keep rocking!!

sudha

Anonymous said...

அய்ஸ்

நல்ல வேகம் அடுத்த அத்தியாயத்த சீக்கிரம் போஸ்ட் பண்ணு :-)

- சிவா

Nithi said...

REALLY SUPERB...... great.....

jayaramprakash said...

வாழ்துக்கள் அய்யனார்.இந்த நாவலை விரைவில் வெளியிடுங்கள்.அமோக வரவேற்ப்பு இருக்கும்.

vinthaimanithan said...

படிச்சவொடனே மனசு ஸ்தம்பிச்சி போயிடுதுய்யா! ஜாலக்காரனய்யா நீர்!

Featured Post

test

 test