Monday, February 7, 2011

ஆடுகளம் – புதிய அலை

ஆடுகளம் இந்த வாரம்தான் துபாயில் வெளியானது. இருக்கும் இரண்டு தமிழ் திரையையும் சிறுத்தையும் காவலனும் கடந்த வாரங்களை ஆக்ரமித்துக் கொண்டிருந்ததால் இந்தப்படம் வரத் தாமதமானது. இணையப் பாராட்டு /திட்டு விமர்சனங்களை மேலோட்டமாய் மேய்ந்திருந்ததாலும், நண்பர்களின் சிலாகிப்புகளை கூகுல் பஸ்ஸில் அறிந்திருந்ததாலும் சற்று ஆவலாகத்தான் காத்திருந்தேன். நல்ல படம் என்கிற முத்திரை இருந்ததால் இணையத்தில் பார்க்க விரும்பவில்லை. இரண்டு நண்பர்களுடன் வியாழன் மாலை நாலரை மணிக் காட்சிக்கு சென்றிருந்த போது திரையரங்கில் எங்களுக்கு முன்பு நான்கு பேர் அமர்ந்திருந்தனர். ஆட்கள் வரவில்லையென காட்சியை இரத்து செய்துவிடுவார்களோ என்ற திகிலும் இருந்தது. இறுதியில் 9 பேருக்காக மட்டும் திரை விலகியது.

வெற்றிமாறனின் பொல்லாதவன் படம் வெளிவந்து மூன்று மாதங்கள் கழித்துதான் பார்த்தேன். பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஏன் இந்தப் படத்தைத் தவறவிட்டோம்? என வருந்தினேன். தனுஷ் புதுப்பேட்டைக்குப் பிறகு தொடர்ச்சியாய் மொக்கைப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். சுள்ளான், புள்ளான் என ஏதேதோ பெயரில் பல படங்கள் வந்தன. பொல்லாதவனும் இந்த படங்களுக்கு நடுவில் வந்து போயிருக்கிறது. விஜய், அஜித்,சிம்பு இன்ன பிற புரச்சிக் கதாநாயகர்கள் படங்களை முற்றிலுமாய் தவிர்த்துப் பல வருடங்களாகின்றன. அதே வரிசையில் தனுஷையும் சேர்த்துவிட்டு போஸ்டரைக் கூட பார்க்காமல் அக்கடாவென இருந்ததில் பொல்லாதவன் விடுபட்டிருக்கிறது. பொல்லாதவனில் வெற்றிமாறனின் இயக்கம் மிகவும் பிடித்திருந்தது. ஒரு கமர்சியல் படம் இப்படித்தான் இருக்க வேண்டும் எனும் அளவிற்குப் பொல்லாதவனைப் பிடித்திருந்தாலும் தமிழ் சினிமாவின் வழமையான வெகுசன சினிமா மரபை மீறாத படம்தான் அது. ஆனால் தன்னுடைய இரண்டாவது படமான ஆடுகளத்தில் வெற்றிமாறன் சற்று முன் நகர்ந்திருக்கிறார். அதே பொல்லாதவன் திரைக்கதை பாணிதான் என்றாலும் சேவற் சண்டைப் பின்னணியில் தன்னுடைய பாணிக் கதையை புகுத்தியிருக்கிறார்.

சேவற் சண்டையைப் பற்றிய விரிவான பதிவு இந்தப் படம் என்கிற சிலாகிப்புகளில் எனக்கு உடன்பாடில்லை. சேவற் சண்டை களத்தைத்தான் இந்தப் படம் தொட்டிருக்கிறதே தவிர அதன் நுட்பங்களை அல்ல. சண்டைக்காக ஒரு சேவல் எவ்வாறு தயார் செய்யப்படுகிறது? என்பது குறித்தான தகவல்களைப் பதிவிப்பதில் இன்னும் சற்று மெனக்கெட்டிருக்கலாம். இன்னும் நெருக்கமாகக் கூட இந்தப் புதிய களத்தை தமிழ்சினிமாவிற்கு வெற்றிமாறனால் தந்திருக்க முடியும். ஆவணப்படச் சாயல் வந்துவிடும் எனத் தயங்கி, தகவல் நுட்பத்திற்குள் போகாமல் இருந்துவிட்டாரோ என்னவோ? ஆனாலும் இது ஒரு நல்ல முயற்சி என்பதை மறுக்க முடியாது.

சம கால தமிழ் இலக்கியத்திலும், சினிமாவிலும் காமம், வன்மம், துரோகம் போன்ற உணர்வுகள் அதிகம் பேசப்படுபவையாக இருக்கின்றன. எத்தனைக் காலம்தான் பாசத்தையும், அன்பையும், சென்டிமெண்ட் குப்பைகளையும், லாலாலா பின்னனியில் சொல்லிக் கொண்டிருப்பது? சற்று வெளியே வந்து எதிர் அழகியலை நேரிடையாகத்தான் பேசிப் பார்ப்போமே என்கிற மாற்றம் இப்போது நிகழ்ந்திருக்கிறது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். பிரான்சின் புதிய அலை சினிமா காலகட்டத்தில் எடுக்கப்பட்ட படங்களைப் பார்க்கும்போதும் அவை எடுக்கப்பட்ட சூழல்களைப் படிக்கும்போதும் ஒரு புத்துணர்ச்சி எழுவதைப் பலர் உணர்ந்திருக்கலாம். தமிழ் சினிமாவிலும் சம காலத்தை புதிய அலையாகத்தான் பார்க்க முடிகிறது. முக்கியமாய் புதியவர்களால், இளைஞர்களால் தமிழ் சினிமா ஆக்ரமிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து நல்ல படங்கள் வருகின்றன. இந்த மாற்றங்கள் சினிமா விரும்பிகளுக்கு மகிழ்ச்சியையும் விமர்சனப் பொறுப்புகளையும் தந்திருக்கின்றன என்பதைப் பரவலாய் பார்க்க முடிகிறது.

ஆடுகளத்தின் அடிநாதமாக நான் கருதுவது வன்மத்தை அல்ல. சாதியத்தின் வழி உருவாகும் கெளரவம் என்பதைக் காக்க வேண்டி, மனிதர்கள் நடத்தும் போராட்டமாகத்தான் இப்படத்தைப் பார்க்கிறேன். இறந்து போன கணவனின் கெளரவத்தை மகன் காப்பாற்றாமல் போய்விடுவானோ எனப் புலம்பும் தாய்கிழவி - அம்மா சாவதற்குள் ஒரு முறையாவது சேவற் சண்டையில் ஜெயித்து கெளரவத்தை நிலைநாட்டி விட துடிக்கும் மகன்- பல வருடங்களாய் சேமித்து வைத்திருந்த பெயர், தான் வளர்த்துவிட்ட சீடனாலே மெல்லத் தேய்வதைப் பொறுக்கொள்ள முடியாத குரு - எல்லாத் தவறுகளையும் தன் மீது சுமத்திக் கொண்டு குருவின் கெளரவத்தைக் குலைக்காமல் ஊரை விட்டு வெளியேறும் சீடன். ஆக இந்தப் படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களும் இன்னொருவரின் கெளரவத்தை அல்லது பிறரால் கட்டமைக்கப்பட்ட தன் கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடுகின்றன. சாதி இந்தக் கதாபாத்திரங்களினூடே மெல்லிதாய் படந்திருப்பதையும் இயக்குனர் நுட்பமாய் பதிவு செய்திருக்கிறார்.

ஒரு குடும்பத்தின் சாதி அடையாளம் அந்த வீட்டு ஆண்களை விட பெண்களிடத்தில் மிக நேரடியாய் வெளிப்படும். மீனாளின் மொழியும் இன்ஸ்பெக்டர் வீட்டுப் பெண்கள் குறிப்பாய் இன்ஸ்பெக்டரின் அம்மா பேசும் மொழியும் தேவர் சாதிக்குறியப் பேச்சுவழக்கு. ஒரு காட்சியில் துரையும் (கிஷோர்) இன்ஸ்பெக்டரும் ஒரே சாதி என்பது நேரடியாகவே சொல்லப்பட்டிருக்கும். இன்ஸ்பெக்டர், துரை, பேட்டைக்காரன் மூவரும் ஒரே சாதி என்பதையும் பழிவாங்கப்படும் அயூப்பும் கருப்பும் வேறு சாதி என்பதையும் இயக்குனர் நுட்பமாய் பதிவு செய்துள்ளார். இந்த அவதானமும் பதிவும் மிக முக்கியமானது. இதன் பின்புலத்தில் நிகழும் சம்பவங்களைப் பார்த்தால் பேட்டைக்காரனின் வன்மத்திற்கான கண்ணி புலப்படும். இந்த இயல்பு எல்லா கிராமத்து மனிதர்களிடமும் இருக்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியாது.

கிராமம் என்றால் அதுவும் குறிப்பாய் மதுரை என்றால் அவிய்ங்க, இவிய்ங்க, வந்துட்டு, போய்ட்டு, அங்கிட்டு, இங்கிட்டு என டைலாக் வைப்பதும் நேட்டிவிட்டியைக் காண்பிக்கிறேன் பார் என தெப்பக் குளத்தையும், வைகை ஆற்றுப் பாலத்தையும் ஒரு சுற்று சுற்றும் கேமிராக் காட்சிகள் வைப்பதையும் தவிர்த்துவிட்டு அசலான மனிதர்களை, அசலான வாழ்வை ஆடுகளம் நேர்மையாய் பதிவு செய்திருக்கிறது. மதுரையின் இரவு வாழ்வு தனித்துவம் வாய்ந்தது. தமிழ் நாட்டின் மற்ற நகரங்களில் பார்க்க முடியாத இந்த இரவு வாழ்வை மதுரையில் காணலாம். இந்தத் தனித்துவ இரவை ஆடுகளம் சரியாய் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. படத்தில் இரவுக் காட்சிகள் மிக நேர்த்தியாய் படமாக்கப்பட்டிருந்தன. ஆங்கிலோ இந்தியப் பெண்ணுடனான தனுஷின் காதல் படத்தில் ஒட்டவில்லைதான் என்றாலும் சுவாரஸ்யமாய் கொடுக்க முயன்றிருக்கிறார்கள். கிராமத்து விடலைத்தனம் மிகச் சரியாகவேப் பதியப்பட்டிருக்கிறது.

யதார்த்தப் படங்கள் வெளித்தோற்றங்களை மட்டுமே, பாவணைகளை மட்டுமே பதிவு செய்யாமல் வாழ்வின் ஆழம் நோக்கியும் நகர வேண்டும். சாதியம் பின்னிப் பிணைந்து கிடக்கும் நம் வாழ்வை விமர்சனங்களோடு பதிவிப்பது அத்தனை எளிதான காரியமில்லை. கமலஹாசன்களால் மெனக்கெடப்பட்டு துதிபாடத்தான் முடிந்ததே தவிர, சாதியத்தின் வன்மத்தை தொட முடியாமலேயே போனது. ஒரு விளையாட்டுப் பின்னணியில் சாதியத்தின் வன்மங்களை மிக நேரடியாகவும் தெளிவாகவும் பதிவித்ததில் வெண்ணிலா கபடிக் குழு திரைப்படத்திற்கு முக்கியப் பங்கு உண்டு. ஆடுகளம் வெண்ணிலா கபடிக் குழுவின் நேரடிச் சாடலை, வீரியத்தை எட்டவில்லை எனினும் ஸ்தூலமாக அதை சரியாய் முன்னெடுத்திருக்கிறது.

வ.ஐ.ச ஜெயபாலன், மீனாள், தனுஷ், தனுஷின் நண்பன், கிஷோர், நரேன்,தப்ஸி இந்த வரிசையில் பாத்திரங்களின் படைப்பு மிளிர்கின்றன. எல்லாரிடத்தும் கச்சிதமான நடிப்பை வெளிக் கொண்டு வந்திருக்கிறார்கள். குறிப்பாய் ஜெயபாலன் அபாரமான நடிப்பினால் வெகு நேரம் மனதில் தங்கி இருக்கிறார். தனுஷ் இயக்குனரின் நடிகர் என்பதால் அவரைக் குறித்தும் பிராது சொல்ல ஏதுமில்லை. பாடல்கள், சண்டைக் காட்சிகள்,அம்மா செண்டிமெண்ட் என எல்லா கமர்சியல் மசாலாக்களுமிருந்தும் படத்தை முழுமையாய் இரசிக்க முடிந்தது. நேர்த்தியான கமர்சியல் இயக்குனர் என்ற பெயரை வெற்றிமாறன் மீண்டும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

0
இனிமேல் மதுரையைக் களமாகக் கொண்ட படங்களைப் பார்ப்பதில்லை என முடிவெடுத்துள்ளேன். எல்லாவற்றுக்குமே ஓர் எல்லை இருக்கிறது. தமிழ் சினிமாவில் கிராமப் படம், யதார்த்தப்படம், சண்டைப்படம், செண்டிமெண்ட் படம், கலைப்படம், என எந்த எழவென்றாலும் கேமராவைத் தூக்கிக் கொண்டு சினிமாக்காரர்கள் எல்லாரும் மதுரைக்கு ஓடிவிடுகிறார்கள். தமிழ் நாட்டில் வேறு நகரமே/கிராமமே இல்லையா? எனத்தான் கேட்கத் தோன்றுகிறது. கிட்டத் தட்ட காதல் படத்தின் வெற்றியிலிருந்து இந்த ‘மதுரை மேனியா’ நம் தமிழ் சினிமா ஆட்களை ஆட்டுவிக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலியை வைத்து ஏராளமான படங்கள் வெளிவந்தன. தொடர்ச்சியாய் பல திருநெல்வேலிப் படங்கள் குப்புறப் படுத்த பின்புதாம் நம்மவர்கள் திருநெல்வேலியைப் பிழைக்க விட்டார்கள். அதே நிலைமை மதுரைக்கும் வரும் வரை நம்மவர்கள் தொடர்ந்து மதுரையை சதாய்ப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. எனவேதான் மதுரைப் படங்களைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளேன். வெற்றி ஃபார்முலா, செண்டிமெண்ட் மூடத்தனங்கள், ஓடும் குதிரையில் சவாரி போன்ற பிடிகளிலிருந்து திரை உலகம் விடுபடாதவரை புத்துயிர்ப்புக் காலம் என்றோ புதிய அலை காலமென்றோ இந்த மாற்றங்களை சொல்லிக் கொண்டிருப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை.

0
படத்தில் சொல்லவேப் படாத சாதியத்தை துப்பறிஞ்சி கண்டுபுடிச்சிட்டாண்டா எனும் நண்பர்களுக்கு மேலும் சில விளக்கங்கள்

1. இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் பேட்டைக்காரன் கதாபாத்திரத்தின் மீது எந்த விதத்திலும் வன்மம் கொள்வதில்லை. பழிவாங்கல் நடவடிக்கையோ, எதிரி மனப்பான்மையோ இருக்கவே இருக்காது. இதற்கான காரணம் வெறும் விளையாட்டு நேர்மை மட்டுமில்லை.
2. கருப்புவை சந்தர்ப்பம் கிடைத்தால் போட்டுத் தள்ளத் துடிப்பவர்கள் துரைக்கு உதவி செய்யவே மெனக்கெடுகிறார்கள்.
3. எதிரி உதவி செய்தும் துரை அவர் பக்கம் போகமலிருப்பதற்கு காரணம் வெறும் குரு பக்தி மட்டுமில்லை.
4. இத்தனை விளக்கமே தேவையில்லை மதுரைப் பக்கம் ஒரு விசிட் அடித்திருந்தாலே கதாபாத்திரங்களின் சித்தரிப்பைக் கொண்டு அவர் என்ன சாதி என்பதைத் தீர்மானமாய் சொல்லி விட முடியும்.




10 comments:

கோநா said...

நுட்பமான அலசல் அய்யனார், ஆனால் கட்டுரை நடையில் சிறு மாற்றம் தெரிகிறது.

Anonymous said...

What about the scene where pettaikkaaran gets beaten up in the police station?

Btw, I did not realise any saathi in the movie when I saw that :)

நிறைமதி said...

சமீபத்தில் ஞாநியுடன் ஆடுகளம் குறித்து விவாதிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.சமூக விரோதிகளையெல்லாம் கதாநாயர்களாய் ஆக்கி சினிமாவை கெடுப்பதாக குற்றம் சாட்டினார்.தணுஷ் இந்தப் படத்தில் மிகச் சிறந்த மனிதர்,சமூக விரோதி இல்லை என நான் வாதாட அவர் ஒத்துக்கொள்ளவில்லை.ஜெயபாலனை காப்பற்ற பணத்தை கையில் எடுத்துக்கொள்வது,அதை ஆட்டோவில் விட்டுச்செல்வது,என அவரது நற்குணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.ஒரே கதைக் களம்,நெருடல் இல்லாத திரைக்கதை என் எல்லா சிறப்புகளும் உள்ள இந்த படத்தை ஞாநி எதிர்க்க ஒரே காரணம்தான் இருக்க வேண்டும்.விளிம்பு நிலை மனிதர்கள் குறித்து சினிமா பேசுவது சற்று மேல்குடி மனிதர்களுக்கு ஒத்துக்கொள்ள முடியவிலை என எண்ணுகிறேன்

vinthaimanithan said...

மிக அருமையான ரிவ்யூ அய்ஸ்! வினவில் ஆடுகளம் விமர்சனத்துக்குத் தக்க பதிலாய் உமது...!

வழக்கமான சோம்பேறித்தனத்தால் பின்னூட்டம் இடுவதில்லையே தவிர ஒரு சில பதிவர்களுக்கும் சில வாசகர்களுக்கும் உம்ம வலைப்பக்கத்தைப் பற்றி சொல்லியவன் என்ற வகையில் சிறிது கர்வமும்கூட! அணில்?!

Anonymous said...

This is one of the best review of Aaadu kallam,..In a sense this review caught the basic line. Yes, the movie is about the coming of underprivileged to power.

The whole movie can be understood, if you know the word "kallam" is used where else in Tamil ? Is it "Therthal Kallam"...

Second, remember, the names "karrupu" (danush) and his friend (who's name was "aadivashi" in the movie Gilli ). And, who are all behind the "pettai karran"?


Look at the dialogues of "kaarupu" about his involvement in " Seval sandaai". He says to his mother, one time, " I want to live with some honour".

And interestingly, the heroine is intentionally shown as an "anglo-christian". Here, the director is really clever. An anglo-christian girl in love with "Kaarupu". That makes sense.

BTW, pettai karan's get up and an young wife, seems to symbolically remember somebody ?

Ashok D said...

எந்த பாசாங்குகளுமற்றியிருந்தது.. சாதியத்தை எழுத்தில் கொண்டுவந்திருப்பது அருமை...

கிராமங்களிலிருந்து நகரத்துக்கு அல்லது சென்னைக்கு வரும் மனிதர்களை நானும் கவனித்திருக்கிறேன்(அவர்கள் சாதிகளையும் கொண்டுவருவார்கள்)... கிட்டதட்ட ஒரு மூன்று தலைமுறைக்கு பின்னர்... நகரவாசியாகவும் மாறுவதை பார்த்துயிருக்கிறேன்

ஸ்டாலின் குரு said...

நல்ல அலசல்

காமராஜ் said...

மிக மிக நேர்த்தியான விமரிசனம்.நேர்மையானதும்.

Prathap Subramani said...

Good Comments.. Ayyanaar

Unknown said...

நன்றாக இருந்தது, ஒரு தீவிரமான அலசல், சாதிய பார்வை புதியதுதான், ஒரு வகையில் உண்மையும் அதுதான். மிகுந்த நுட்பமான அலசல் நல்ல சுவையான எழுத்து நடையும் கூட நன்றி

Featured Post

test

 test