Monday, January 31, 2011

வ.வெ.தொ.அ.வெ.கு 10 .வானம்



வயல்வெளி தொலைத்த அயல்வெளிக் குறிப்புகள் 10

இந்த மாதிரி ஒரு போதைய அனுபவிச்சி ரொம்ப நாளாச்சி. இல்ல, ரொம்ப வருஷமாச்சி. இப்பலாம் போதைய ரொம்பக் கிட்டக்க பாக்க பயமா இருக்கு. ஒரு காலத்துல இந்த போதை தர பாதுகாப்பின்மைய முழுசா அனுபவிக்க முடிஞ்சது. எத பத்தியும் யோசிக்காம, கவலைப்படாம போதய போதயா மட்டுமாவே பாத்துட்டு மெதுவா அதுக்குள்ள இறங்கி முழுக்க போதையா மாறி அப்புறம் காணாமபோனது உண்டு. எந்த நொடில போதைக்குள்ள போறோம்னும் எந்த நொடில திரும்பி வரோம்னும் ரொம்ப நாளா தெரியாம இருந்தது. அப்புறம் தெரியாமப் போற அந்த நொடிதான் உச்சம்னு புரிஞ்சி போய், காணாம போற நொடிக்கே ஒவ்வொரு முறையும் போக ஆசைப்பட்டேன். அதே சமயத்துல திரும்புற நொடி இருக்கு பாருங்க அது ரொம்பக் கொடும. நரகம். விழிப்பு வரும்போது கூடவே இடம், நேரம், சூழல், வெளிச்சம் இதெல்லாம் புலப்படும். கூடவே குற்ற உணர்வும் குத்திக் கொதறும். என்னைத் தவிர உலகமே ஒழுங்கா இருக்கிற மாதிரி படும். அதுக்கேத்தாமாதிரியே சுத்தி இருக்க மனிதர்கள் எல்லாருமே பயங்கர யோக்கியமா, ஒழுங்கா நடந்துப்பாங்க. அவங்க நடை, உடை, பேச்சு, வாழ்க்கைமுறை எல்லாத்துலயுமே ஒரு தூய ஒழுங்கும், நறுவிசும், சுத்தமும் இருக்கும். என்னால தாங்கிக்கவே முடியாதப் போக்கு இது. ஒரு இயந்திரம்தான் ஒழுங்குத் தன்மையோடவே வாழ்நாள் முழுக்க இருக்க முடியும். மனிதனால எப்படி ஒரு இயந்திரம் மாதிரி வாழமுடியுது?ன்னு எனக்குள்ள கேட்டுட்டே இருப்பேன். சரி ஒழிஞ்சிப் போறாங்கன்னு விட்டுட்டு விலகலாம்னாலும் மனசுக்குள்ள இந்த ஒழுக்கவாதிகள் பயங்கரமான குற்ற உணர்வை விதைச்சுட்டுப் போயிடுறாங்க. சில நேரங்களில் இந்த விதை கழிவிறக்கமா மாறி நிகழை அணுஅணுவா கொல்லுது. எங்காச்சும் மனுச பயலுகளே இல்லாத கண்காணாத தேசத்துக்கு ஓடிப்போய்டனும் போல தோணும். இல்லன்னா மனுச நடமாட்டமே சுத்தமா இல்லாத அடர்ந்த காட்டுப் பகுதிக்கா போய்டனும். எந்த விலங்கும் ஒரு நாளை இன்னொரு நாளைப்போலவே கழிப்பதில்லை இல்லையா?

மனுசங்க எல்லார்கிட்டயும் இருக்கிற நினைவுங்கிற ஒரு விஷயத்த ப்ளேடு வச்சி சொறண்டி எடுத்திறனும். ப்ளேடால பேப்பர்ல சொறண்டுறப்ப கரகரன்னு மெல்லிசா ஒரு சத்தம் வரும். அந்த சத்தம் நல்லாவும் இருக்கும் நல்லாவும் இருக்காது. பல் லேசா கூசுறாமாதிரி இருக்கும் ஆனா கூசாது. மொத்தமா எடுத்திறனும். அப்பதான் நிம்மதி. இல்லன்னா கடைசி வர இம்சதான். சதா பழசயே நினைக்கிறது இல்லனா நடக்காதத நினைச்சி விதம் விதமா பகல் கனவுல மூழ்கிறது. இதே பொழப்பு.சை!. என்ன எழவெடுத்த வாழ்க்க பாஸ் இது?

என்னால சும்மாவே இருக்க முடியல. புத்தி,மனசு,சிந்தனை எதுவும் ஒரு புள்ளில நிக்க மாட்டேங்குது. புத்தின்னா ஏதாச்சிம் ஒண்ண நினைச்சிட்டேதான் இருக்கும். அதான் அதனோட இயல்பு. அதைலாம் யாராலும் ஒண்ணும் பண்ண முடியாது. சும்மா இருக்காம தொடர்ந்து எதையாவது பண்ணா இந்த கற்பனை உலகத்துல காணாமப் போறத தவிர்க்கலாம். எதப் பண்ணவும் பிடிக்க மாட்டேங்குதே என்ன செய்ய.. பிடிச்சத மட்டுமேவா நாம பண்ணிட்டிருக்கோம், சும்மா எதையாச்சிம் பண்ண ஆரம்பி. அப்புறமா பிடிச்சிரும்.

ரொம்ப நாளா இது நடந்திருமோன்னு நினைச்சி பயந்த விஷயம் இப்ப நடந்துருச்சி. எனக்கு பெண்கள் மேல இருந்த ஈர்ப்பு காணாம போய்டுச்சி. எல்லா வகையிலயும் பெண்களத் தவிர்க்க ஆரம்பிச்சிட்டேன். பெண்கள நிமிர்ந்து பார்க்கக் கூட அஞ்சறேன். இங்க இருந்த சொற்பமான தெரிஞ்ச பெண்களையும் சுத்தமா தவிர்த்திட்டேன். தொடர்பு எண்,விலாசம் எல்லாத்தையும் மாத்திட்டேன். எந்த வகையிலயும் என்னத் தொடர்பு கொள்ள முடியாதமாதிரி ஒளிஞ்சிகிட்டேன். தெரிஞ்ச பெண்கள்னு இல்ல, பொது இடங்கள், உணவு/மது விடுதிகள் இங்கல்லாமும் பெண்கள் இல்லாத,வராத இடமாத்தான் தேர்ந்தெடுக்கிறேன். பெண்ணுடல் மேல இருந்த ஈர்ப்பு போய்டுச்சின்னுலாம் சொல்ல முடியாது. அது போகவும் போகாதுன்னும் நம்புறேன். பெண்ணுடல்தான் நினைவுலயே இருக்கே. அப்புறம் எதுக்கு நிஜம்?. நிஜம் பயம் பாஸ். உண்மைய சொல்ரேன் நிஜம் நரகமும்தான். தேவைப்படும்போது பிம்பம் போதும். ஸ்கலிதத்துக்கு பிறகு பிம்பத்த மூடி வச்சிடலாம். தூக்கி எறிஞ்சிடலாம்.வேற நினைக்க ஆரம்பிச்சிடலாம். அவ்ளோதான் முடிஞ்சிபோச்சி. வேற வேல பாக்கலாம். ரொம்ப சுலபம்.வசதி.இம்சையில்ல.பிரச்சினை இல்ல.நிம்மதி.தொந்தரவு இல்ல.சிக்கல் இல்ல.கலாஸ். அப்ப பெண் உடலா மட்டும்தான் உனக்கு தேவப்படுறாளா? இதுவரைக்குமான உன் பெண் தோழமைகள் எல்லாமே மறைமுக உடல் தேவைக்காகத்தானா? அதென்ன மறைமுக பாஸ்? நேரடியாவே சொல்றேன். ஒரு ஆண் ஒரு பெண்ணோட பழக அவனுக்கு அவ உடம்பு மேல இருக்க ஈர்ப்பு மட்டும்தான் காரணமா இருக்க முடியும். அது நேரடியா அந்த பெண்ணா இல்லாம பொதுவா பெண்ணுடலின் மீதுள்ள ஈர்ப்பு காரணமாவும் இருக்கலாம். நீ பயங்கரமா உளற்ற. நீ சொன்னத மறுபடி சொல்லிப் பார். அது எவ்ளோ அபத்தம்னு புரியும். உனக்கு புரியலனா அது உளறலா? நம்மோட சமூக கட்டு, உறவு அமைப்புகள், பொதுவா இயங்குற அறம், ஸோ கால்டு மனசாட்சி இதலாம் விலக்கிட்டு ஒரு பெண் மேல உனக்கு எதுனால பிடித்தம் வருதுன்னு யோசி. நிச்சயம் அதுக்கான பின்னணி, உடலா மட்டுமே இருக்கற விஷயம் உனக்கு புரியலாம். நீ நாத்தம் அடிக்கிற போய்த்தொல. எல்லா பீயும் நாறும் பாஸ்.

குட்டி இளவரசன் சொல்றான் ஒரு நாள் அறுபத்து நாலு சூரிய அஸ்தமனத்த பாத்திட்டிருந்தானாம். ஒரு குட்டி இருக்கைல, பூமிக்கு வெளிய, இன்னொரு கிரகத்துல உட்கார்ந்துட்டு பூமிக்குள்ள எங்கலாம் சூரியன் மறையுதோ அங்கலாம் (இருக்கைய மட்டும் லேசா நகர்த்தி போட்டுகிட்டு) பாத்திட்டிருந்தானாம். என் கண் முன்னாலயும் பூமி சுத்திட்டிருந்தா எவ்ளோ நல்லாருக்கும். சலிப்புங்கிற ஒரு விஷயமே இல்லாம பூமியோட எல்லா பாகத்தையும் வேடிக்க பாத்திட்டு இருக்கலாம். பூமில மனுசங்களான நாம பன்ற எல்லாத்தையும் மேல உட்கார்ந்துட்டு ஒருத்தன் பாத்திட்டிருக்கான். அவன் கூட இருக்க இன்னொருத்தன் கைல வச்சிருக்க நோட்ல நாம பன்ற தப்பையெல்லாம் எழுதி வச்சிகிறான். பூமி வாழ்க்க முடிஞ்சி வான வாழ்க்கைக்கு போனதும் நாம பண்ண தப்புக்கு ஏத்தா மாதிரி தண்டன கொடுப்பான்னுலாம் சின்ன வயசுல நிறைய கதைகள் சொல்லக் கேட்டிருக்கேன். இந்தக் கதைகளில எனக்கு கிளர்ச்சியா இருக்கிறது வான வாழ்க்கைங்கிற கற்பனைதான். வானத்துல போய் வாழ்ந்தா நல்லாருக்கும் இல்ல. சொர்க்கம், நரகம் இரண்டும் வானத்துல இருக்கிறதா சொல்றது லாஜிக்கே இல்லாத கற்பனை. வானம்/பூமி மாதிரி சொர்க்கம்/நரகம் இதுவும் ரொம்ப தூரமாத்தாம் இருக்க முடியும். ஒரே வானத்துல எப்படி சொர்க்கமும் நரகமும் இருக்க முடியும்? ஒருவேளை பூமி வாழ்வை நரகம்னும் வான வாழ்வை சொர்க்கம்னும் பிரிச்சிக்கலாமோ? இப்ப இன்னா ஸொல்ல வர்ர? வானத்துல போய் வாழ்ந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன். அப்ப போ.எப்படி போறது.எல்லாரும் செத்துதான் போறாங்க.செத்த பிறகுதான் போவமுடியுமா?.ஆமா.ஆனா சாக பயம் எனக்கு.வானத்துக்கு போறவன் சாக ஏன் பயப்படனும்? அதுலாம் தெரியாது. சாவுன்னா பயம்.ஆனா வானத்துக்கும் போகனும்.அப்ப காத்திரு. எப்பவாச்சிம் ஒரு நாள் செத்துப்போய் வானத்துக்கு போலாம்.அதுவரைக்கும் இன்னா பன்றது?வான வாழ்க்கய பத்தி பேசு.எழுது.படி.அங்க போன பிறகு இதலாம் உன்னால பண்ண முடியாது.எப்படி சொல்ற பண்ண முடியாதுன்னு? அங்க இருந்து எதுவும் புத்தக வெளியீட்டு விழா அழைப்பு வரலயே? ஒரு சினிமா போஸ்டர் கூட வந்ததில்ல.அப்ப அங்க இருக்கவங்கலாம் என்ன பன்றாங்க?தெர்லயே.ஒருவேள வாழ்க்கய முழுசா வாழ்வாங்களா இருக்கும். நம்ம எல்லாரையும் போல வாழுறா மாதிரி பாவ்லா பண்ணமாட்டாங்க.நாம எல்லாருமா பாவ்லா பன்றோம்?அப்படித்தான் நினைக்கிறேன்.எல்லாரையும் விடு. நீ நடிப்பாத்தான் வாழுறயா?ஆமா.பயங்கர நடிப்பு. பேச்சு,எழுத்து,வாழ்வு எல்லாமே நடிப்புதான்.இதுலாம் கூட நடிப்புதானா?ஆமா.ஏன் இப்படி நடிக்கனும்?. சும்மாதான்.எங்காயவது நிறுத்தனுமே இத.இப்ப நிறுத்திக்கலாம் தூக்கம் வருது.

8 comments:

பா.ராஜாராம் said...

superb! :-)

ராம்ஜி_யாஹூ said...

அருமை.
ஆனால் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் போன்ற உணர்வு

Sugirtha said...

Endless wandering...It was a good reading! :)

Mohan said...

பிப்ரவரி மாதத்தில் வ.வெ.தொ.அ.வெ.குறிப்புகளை படிப்பதற்கு மிகவும் ரம்மியமாக உள்ளது!

அமிர்தவர்ஷினி அம்மா said...

........விதம் விதமா பகல் கனவுல மூழ்கிறது. இதே பொழப்பு.சை!. என்ன எழவெடுத்த வாழ்க்க பாஸ் இது//

adhanee

!!!!!!!!!!!!!!!!!

கோநா said...

அருமை அய்யனார். சமீபகாலமாய் ஏன் இவ்வளவு இடைவெளி பதிவுகளுக்கிடையில்?

Ayyanar Viswanath said...

ராஜாராம்,ராம்ஜி,சுகிர்தா,மோகன், அமித்து அம்மா மற்றும் கோநா பின்னூட்டங்களுக்கு நன்றி.

கோநா,பஸ்ஸில் முழுநேரமும் மொக்கை போடுவதால் இந்தப் பக்கம் வரமுடிவதில்லை.உங்கள் தளத்தை படித்துவிட்டு விரைவில் மடலிடுகிறேன்.

கோநா said...

அய்யகோ, என்ன அய்யனார், பஸ்ஸில் மொக்கை ஓகே, அதற்காக உங்கள் படைத்தல் என்னாயிற்று? உங்கள் கவிதைகள் என்னாயிற்று? உங்கள் மடலுக்காக காத்திருக்கிறேன்.

Featured Post

test

 test