Wednesday, December 29, 2010

திரும்புதலும் காணாமற் போதலும்



ஒரு திரைப்படத்தின் எல்லாக் காட்சிகளுமே லேசான மர்மத்தை உள்ளடக்கி இருப்பது பார்வையாளர்களை வெகுவாய் ஈர்க்கக் கூடிய சிறந்ததொரு திரைக்கதை உத்தியாகும். திகைப்பை படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை வைத்திருந்து இறுதிக் காட்சியில் திடாரென ஒரு அதிர்ச்சியைத் தந்து முடிந்து போகும் படங்கள் யாவும் இதுவரை புன்முறுவலைத்தான் வரவழைத்து விட்டுப் போயிருக்கின்றன. ஆனால் இதே உத்தியைக் கொண்ட இந்தப் படத்தை பார்த்து முடித்துவிட்டு என்னால் புன்னகைக்க முடியவில்லை. லேசான பயமும், அதிர்ச்சியும் வெகு நேரம் நீடித்திருந்தது. காட்சிகள் ஏற்படுத்தியிருந்த அழுத்தமான பிம்பச் சித்திரங்களிலிருந்து வெளியேற வெகுநேரம் பிடித்தது.

The return என்கிற இந்த இரஷ்யத் திரைப்படம் தந்தை – மகன் உறவை மிகுந்த இறுகிய முகத்தோடு பேசுகிறது. நான் பார்த்த பெரும்பாலான இரஷ்யப் படங்கள் துயரத்தைக் கொண்டாடுபவையாய் இருக்கின்றன. வாழ்வின் இருண்மையை, இயலாமையை, துக்கத்தை பெரும்பாலான இரஷ்யப் படங்கள் தூக்கிப் பிடிக்கின்றன. எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் ஒருவரான அந்திரேய் தர்க்கோயெவ்ஸ்கியின் கதா பாத்திரங்கள் அனைத்துமே மிகத் துக்கமானவைதாம். இவரின் மனிதர்கள் வாழ்வின் துக்கத்திலிருந்து விடுபட முடியாதவர்களாக, புதிர்களின் மாய வழியில் சிக்கிக் கொள்பவர்களாக, விநோதங்களும், திகைப்புகளும், துக்கங்களும், பெருக்கெடுக்கும் நிஜ /நிழல் பாத்திரங்களாக சித்தரிக்கப்படுகின்றனர். தர்க்கோயெவ்ஸ்கியின் உலகம் நீரும் தீயும் கலந்த காட்சிப் படிமங்கள்தான். இந்தப் படமும் கிட்டத் தட்ட தர்க்கோயெவ்ஸ்கியின் உலகத்தை ஒட்டிதான் எடுக்கப்பட்டுள்ளது. அவர் உண்டாக்கும் திரைஓவியப்புதிர்நீர்மப் படிமங்களின் சாயல் எதுவும் இல்லையெனினும் காட்சி ரீதியிலாக இந்தப் படமும் மிகவும் அழுத்தமானதுதான்.

படத்தின் துவக்கக் காட்சியில் ஒரு உயராமன டைவிங் மரத் திட்டு ஒன்று காண்பிக்கப்படுகிறது செங்குத்தான படிகள் கொண்ட அதன் உச்சியிலிருந்து சிறுவர்களும் பதின்மர்களும் நீரில் குதித்துக் களிக்கின்றனர். இருப்பதிலேயே சிறிய சிறுவன் அங்கிருந்து குதிக்க முடியாமல் பயப்படுகிறான். ஏற்கனவே குதித்தவர்கள் அவனை குதிக்கச் சொல்லி வற்புறுத்துகின்றனர். குதிக்காவிடில் நீயொரு கோழை என ஏசுகின்றனர். சிறுவன் அங்கேயே மடங்கி உட்கார்ந்து விடுகிறான். வெகு நேரம் கழித்து அவனைத் தேடிக் கொண்டு வரும் அவனின் தாய் அச்செங்குத்தான படிகளில் மேலேறி அவனை அணைத்துக் கொள்கிறாள்.எங்கே செத்துப் போய்விடுவேனோ என பயந்தேன் என அழுதபடியே அம்மாவைக் இறுக்கிக் கொள்கிறான். இந்த உயரத்தின் பயம்தான் நிகழப்போகும் அசம்பாவிதத்திற்கான ஒரு முடிச்சாய் இருக்கிறது. படத்தின் திருப்புமுனையை முதற்காட்சியிலேயே சூசகமாக சொல்லிவிடும் இந்த உத்தி அபாரமாய் கையாளப்பட்டிருக்கிறது.

அந்திரேயும் இவானும் சகோதரர்கள். அந்திரேய் பதின்மன். இவானுக்கு 12 வயது. இவர்களின் தந்தை 12 வருடத்திற்கு முன்பே பிரிந்து சென்றுவிடுகிறார். சிறியவன் இவான் தந்தையைப் பார்த்ததே இல்லை. ஒரு மங்கலான புகைப்படம்தான் இருவருக்கும் தந்தையாக இத்தனை வருடங்கள் இருந்து வந்திருக்கிறது. இருவரும் விளையாடிவிட்டு வீட்டிற்குத் திரும்பி வரும் ஒரு மாலையில் கட்டிலில் படுத்திருக்கும் ஒருவரைக் காட்டி உங்களின் தந்தை வந்துவிட்டார் என்கிறாள் தாய். இரவு உணவு தந்தையோடு அருந்தும்போது அவரிடம் எங்களை மீன் பிடிக்க அழைத்து செல்வீர்களா? என ஆர்வமுடன் கேட்கின்றனர். தந்தையும் ஒத்துக் கொள்கிறார். இருவரும் படுக்கையில் படுத்தபடி கிசுகிசுப்பாய் பேசிக் கொள்கின்றனர். அவரின் திடகாத்திரமான உருவம் இருவருக்கும் பிடித்திருக்கிறது. அவரின் கார், என்ன வேலை செய்வார் என்பது பற்றியெல்லாம் ஆர்வமாய் பேசிக் கொள்கின்றனர். அடுத்த நாள் காலையில் தந்தை இருவரையும் அழைத்துக் கொண்டு ஒரு தீவினை நோக்கிச் செல்கிறார்.

தந்தை மிக இறுக்கமான முகத்தைக் கொண்டிருக்கிறார். மிகப் பிடிவாதமானவராகவும் கோபக்காரராகவும் இருக்கிறார். சிறுவர்களுடன் இயல்பாய் அவரால் பழக முடியவில்லை. அவரின் வேலை என்ன? இத்தனை நாள் எங்கிருந்தார்? என்பது குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார். எனினும் அவரின் முரட்டுத்தனத்தோடு மெல்லிதாய் ஒரு அன்பும் இழையோடுகிறது. அந்திரேய் தந்தையுடன் எளிதில் ஒட்டிக் கொள்கிறான். இவான் இயல்பிலேயே வீம்பு பிடித்தவன் என்பதால் அவனுக்குப் புதிதாய் வந்த தந்தையோடு ஒத்துப் போகவில்லை. பயணத்தின் வழி நெடுக நிகழும் சம்பவங்கள் மனித மனதின் புதிர் விளையாட்டுக்களோடும், சிறுவனுக்கும் தந்தைக்குமான பனிப்போருடனும் கழிகிறது. வினோதமான பல பிரதேசங்களுக்கு தந்தை அவர்களை அழைத்துச் செல்கிறார். சூழல்களின் திகைப்பும் மூவருக்கிடையே எப்போதும் இருக்கும் இறுக்கமும் படத்தை சுவாரசியமாக்குகிறது. இறுதிக் காட்சியில் நிகழும் விபரீதம் படத்தின் மீது அவிழ்க்க முடியாத சில முடிச்சுகளை இன்னும் இறுக்குகின்றது.

இந்தப் படத்தை இயக்கி இருப்பவர் Andrei Zvyagintsev இது இவரின் முதல் படம். இன்னொரு ஆச்சரியமான தகவல் என்னவெனில் இவரின் தந்தை ஆறு வயதில் காணாமல் போய்விட்டிருக்கிறார். தன் வாழ்நாள் முழுவதுமாய் தொடர்ந்த சிக்கலை, இழப்பை அதே சிறுவனின் மனநிலையோடு இந்தப் படத்தில் பதிவு செய்திருக்கிறார். சில படைப்புகள் இயக்குனரின் வாழ்வோடு ஒன்றியிருக்குக்குமெனில் அவை பார்வையாளனுக்குத் தரும் நெருக்கம் உண்மைக்கு மிகச் சமீபமானது. இம்மாதிரியான படைப்புகள் எளிதில் கலைத்தன்மையை அடைந்து விடுகின்றன. வாழ்வும் கலையும் ஒன்றோடொன்று தொடர்புடையதுதானே?

Trailer

Tuesday, December 21, 2010

தகேஷி கிடானோவின் Outrage 2010

Outrage படத்தை திரைப்பட விழா பட்டியலில் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சமீபமாய் கிடானோவின் படங்களைத் தொடர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருக்கிறேன். கிக்கிஜீரோவை சென்ற வருடமே பார்த்திருந்தும் ஏனோ இவரைப் பின் தொடரத் தோன்றவில்லை. மிஷ்கினின் அலாதியான சிலாகிப்புகள்தாம் கிடானோவை மறுபடியும் தேடிப் பிடிக்க வைத்தது. இதுவரைக்கும் பார்த்த கிடானோவின் படங்களில் இருக்கும் பொதுவான ஒரு அம்சமாக எள்ளல் தன்மையைச் சொல்லலாம். கிண்டலும் கேலியும் இவரது எல்லா படங்களிலும் மெல்லிதாய் இழையோடுகிறது. சின்னப் புன்முறுவல் இல்லாமல் கிடானோவின் படங்களை நம்மால் பார்க்கவே முடியாது. வெகு சாதாரண ஆட்களாகத்தான் இவரது கதாநாயக பிம்பங்கள் சித்தரிக்கப்படுகின்றன. ஆனால் அவர்கள் திடீரென வல்லமை கொண்டவர்களாகவும் சடுதியில் கோழைகளாகவும் மாறிவிடுகிறார்கள். இவரது பெரும்பாலான கதாபாத்திரங்கள் தொடர்ச்சியாய் தோல்வியைச் சந்திப்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அதை வெகு எளிதில் கடந்து போகிறார்கள். Kids Return படத்தில் வரும் இரண்டு நண்பர்கள் காலத்தின் சுழற்சியில் முன்னும் பின்னுமாய் பயணித்து மீண்டும் துவங்கிய இடத்திற்கே வந்து சேர்வார்கள். “நம்முடைய வாழ்க்கை அவ்வளவுதானா? முடிந்து போயிற்றா?” என ஒருவன் கேட்கிறான். இன்னொருவன் புன்னகைத்துக் கொண்டே சொல்கிறான். “நாம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை” படம் முடிந்துபோகிறது. ஒரு காட்சியை எங்கு துவங்க வேண்டும். எங்கு முடிக்க வேண்டும் என்பதற்கு கிடானோவின் படங்கள் சம காலத்தின் மிகச் சிறந்த உதாரணங்களாக இருக்கின்றன. தேவையில்லாத ஒரு அசைவையோ படத்திற்கு சம்பந்தமில்லாத ஒரு சொல்லையோ கூட இவரது படங்களில் நம்மால் காண இயலாது. கச்சிதமும் நுட்பமும் பின்னிப் பிணைந்தவைதாம் கிடானோவின் திரைப்படங்கள்.

Outrage படத்தில் இரண்டு நொடிக்கும் குறைவான காட்சி ஒன்று வரும். இமையை லேசாக வேறு பக்கம் அசைத்திருந்தாலும் நாம் அந்தக் காட்சியை தவற விட்டுவிடக் கூடும். உயிர்பயம் காரணமாக இரயிலில் தப்பிச் செல்லும் ஒருவனை எதிராளி ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் காட்சி அது. இரயில் வேகமாகக் கடக்கும் போது ஒரு சிவப்புப் புள்ளி கண்ணிமைத்து மறையும். இந்தக் காட்சிக்கு தியேட்டரில் பலத்த ஹா க்கள் எழுந்தன. கிடானோவிற்கு உலகம் முழுக்க ஏராளமான இரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை திரைப்பட விழாவில் காண முடிந்தது. வழக்கமாய் திரைக்கு வெகு சமீபமான முன் இரண்டு வரிசை இருக்கைகள் காலியாகத்தான் இருக்கும். ஆனால் வியாழக் கிழமை மதியம் 1 மணிக் காட்சிக்கு அரங்கம் நிறைந்திருந்தது. பத்து நிமிடம் முன்னதாகச் சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டதால் வலது பக்கம் அரேபிய பெண்ணும் இடது பக்கம் பிரான்சு தேசத்துப் பெண்னும் அமர ஆசிர்வதிக்கப்பட்டேன். படத்தின் இரசனையான பல வன்முறைக் காட்சிகளில் இடது பக்கம் அமர்ந்திருந்த அரேபியப் பெண் விநோதமான உஸ் உஸ் களை எழுப்பிக் கொண்டிருந்தார். கிடானோ ஒருவனின் முகத்தில் கத்தியால் ஆழமாய் பெருக்கல் குறி போடும் காட்சியில் ஆரம்பித்து அவ்வப்போது வரும் விரல்களை வெட்டும் காட்சிகள் வரை இவர் எழுப்பிய சப்தம் அலாதியான இன்பத்தைத் தருவதாக இருந்தது. குழந்தைகள் ஜெய்ண்ட் வீலின் பரவசத்தில் கத்தும்போது தரையில் இருந்து பார்க்கும் பெரியவர்களின் புன்முறுவலைப் போல அடிக்கடி நான் புன்னகைத்துக் கொண்டேன். வலது பக்கம் அமர்ந்திருந்த ப்ரெஞ்சுப் பெண் கிடானோவின் ஒவ்வொரு அசைவிற்கும் வெடித்துச் சிரித்துக் கொண்டிருந்தார். கிக்கிஜீரோ படத்தை விட இதில் அபாரமானதொரு தாதா கதாபாத்திரத்தை ஊதித் தள்ளியிருக்கிறார் கிடானோ. எழுத்தாளர், ஓவியர், திரைக்கதையாளர், எடிட்டர், இயக்குனர், நடிகர் என எல்லா வடிவங்களிலும் கிடானோ மிளிர்கிறார். சமகால சினிமாவின் ஜீனியஸ் என தாராளமாய் இவரைச் சொல்லலாம்.

எல்லா இயக்குனர்களுக்கும் கேங்ஸ்டர் உலகத்தின் மீது பெரும் விருப்பம் இருக்கிறது. நிழல் உலகத்தின் வாழ்வு அதிக சவால்கள் நிறைந்திருக்குமென்பதால் கலைஞர்களுக்கு இயல்பாகவே அந்த உலகத்தின் மீது ஒரு பிடித்தம் இருக்கலாம். உலக அளவில் அதிகம் சிலாகிக்கப்பட்ட கேங்ஸ்டர் படமாக காட் ஃபாதரைச் சொல்கிறார்கள். மார்லன் ப்ராண்டோவின் நுணுக்கமான நடிப்பில் மூன்று பாகங்களாய் வெளிவந்த இந்தப் படம் உலகம் முழுக்க இரசிக்கப்பட்டது. என் தனிப்பட்ட இரசனை அடிப்படையில் மார்டின் ஸ்கார்சஸின் good fellas படத்தையே கேங் ஸ்டர் உலகத்தின் மிக முக்கியமான பதிவு எனச் சொல்வேன். உலகம் முழுக்க ஏராளமான கேங்ஸ்டர் படங்கள் வந்திருந்தாலும் அவர்கள் உலகத்தின் நுட்பங்களையும், கொண்டாட்டங்களையும், அபத்தங்களையும், நேர்த்தியாகப் பதிவித்தவர்களாக டராண்டின் குவாண்டினோவும் மார்டின் ஸ்கார்சஸும் சொல்லலாம். இந்த வரிசையில் இப்போது கிடானோ. ஜப்பானிய நிழல் உலகத்தின் சுவாரசியத்தை பார்வையாளர்களுக்குத் தன்னுடைய அபாரமான இயக்கத்தாலும், அசாதாரண நடிப்பினாலும் திகட்டத் திகட்டத் தந்திருக்கிறார் கிடானோ.

கதை வழக்கமானதுதான். சர்வ வல்லமை பொருந்திய நிழல் தாதா. நகரம் முழுக்க ஏராளமான நிழல் தொழில்கள், கார்ப்பரேட் நிறுவனம் தோற்றுப் போகும் அளவிற்கு கட்டுக்கோப்பான அமைப்பு, இப்படி எவராலும் அசைக்க முடியாத ஒரு அமைப்பை நிர்வகித்து வருகிறார். அவர் ஆளுமைக்குக் கீழ் இருக்கும் ஒரு குட்டி தாதாவின் ஆட்களுக்கும், அவருடைய ஆட்களுக்கும் சிறிய தகராறு ஒன்று வருகிறது. இந்தத் தகராறு சின்ன சின்னதாய் ஏகப்பட்ட குழப்பங்களை விளைவிக்கிறது. இரண்டு தரப்பிலும் ஆட்கள் கொல்லப்படுகிறார்கள். குட்டி தாதாவிற்கு கீழ் கிடானோ. கிடானோவிற்கு நம்பிக்கையாய் சிலர். இவர்களுக்குள் நடைபெறும் நிழல் உலக அரசியல் விளையாட்டும், பழிவாங்கலும், வியாபார போட்டிகளும்தான் படத்தின் பிரதான அம்சம். அதிகாரம், பதவி வெறி, வன்மம், இந்தப் பின்புலத்தில் நடக்கும் பாம்பு ஏணி விளையாட்டுதான் இந்த மொத்த திரைப்படமும்.

படத்தில் ஏராளமான வன்முறைக் காட்சிகள் வருகின்றன என்றாலும் அவைகளை குரூர நகைச்சுவை வடிவத்தில்தான் படமாக்கி இருக்கிறார். நிர்வாகத்திற்கு பிடிக்காத விஷயங்களை செய்துவிட்டால் ஒரு விரலை வெட்டிக் கொண்டு போய் தலைவருக்கு சமர்ப்பிப்பது நிழல் உலகத்தின் சம்பிரதாயங்களில் ஒன்று. படத்தில் ஏராளமான விரல்கள் பார்வையாளர்களின் பலத்த சிரிப்புப் பின்னணியில் வெட்டப்படுகின்றன. ஒரே ஒரு கொலை மட்டும் படு குரூரமாக இருந்தது. அதே நேரத்தில் அந்தக் கொலைக்குப் பின்னாலிருக்கும் கற்பனைத் திறன் குறித்தும் சிலாகிக்காது இருக்க முடியவில்லை. கிடோனோவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவனை காரில் கடத்திக் கொண்டு போய், முகத்தை கருப்புத் துணியினால் மூடி, பலமான சுருக்குக் கயிறை கழுத்தில் மாட்டி விடுகிறார்கள். ஏற்கனவே பின்புறமாய் கைகளை மடக்கிக் கட்டியாயிற்று. மிக நீளமான கயிறின் அடுத்த முனையை சாலையோரத்தில் இருக்கும் ஒரு பலமான இரும்புத் தூணில் கட்டிவிடுகிறார்கள். கார் கதவைத் திறந்து வைத்துவிட்டு சீறலாய் காரைக் கிளப்புகிறார்கள். இரும்புத்தூணில் கட்டப்பட்ட கயிறின் அடுத்த முனையில் பிணைக்கப்பட்டிருக்கும் இவனது கழுத்துடல் மிகக் கோணலாய் விசிறியடிக்கப்பட்டு, சடுதியில் உயிர் போய் துவண்டு கிடக்கிறது.கிட்டத் தட்ட என்னை உறைய வைத்த காட்சி இது. இம்மாதிரியான காட்சிகளும், நொடியில் மின்னிப் போகும் அபாரமான திரைக் கோணங்களும் கிடானோவின் படங்களில் மட்டுமே காணமுடிபவை.

இந்த படத்தை திரையில் காண்பது நல்லதொரு அனுபவமாக இருக்கக் கூடும். ஒரு மிட் ஷாட்டில் பல விஷயங்கள் நடக்கின்றன. கிடானோவின் படங்களை ஒரு முறை மட்டும் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதுவது முட்டாள்தனமான செயலாகத்தான் இருக்கக் கூடும். கிடானோவின் படங்கள் மிஷ்கினை உருவாக்கியதில் வியப்பேதுமில்லை.

Thursday, December 16, 2010

கரிசனமும் யதார்த்த இம்சையும் - துபாய் திரைப்பட விழா


ஏழாவது சர்வதேசத் திரைப்பட விழா துபாயில்கடந்த பனிரெண்டாம் தேதி துவங்கி வரும் பத்தொன்பதாம் தேதி வரை நடைபெறுகிறது. 57 நாடுகளிலிருந்து 153 படங்கள் திரையிடப்படுகின்றன. 127 hours, the kings speech போன்ற புதிய படங்கள் நேரடியாய் திரையிடப்படுகின்றன. இந்தியப் படங்களாக நம் ஊரிலிருந்து மைனா திரையிடப்படுகிறது. மலையாளத்தில் நயன் தாரா நடிப்பில், ஒரே கடல் இயக்குனர் ஷ்யாம் பிரசாத் இயக்கத்தில் எலெக்ட்ரா, இந்தியில் அபர்ணா சென்னின் இயக்கத்தில் An Unfinished Letter போன்றவை திரையிடப்படுகின்றன.

திரைப்பட விழாக்களில் நான் பெரும்பாலும் ஆங்கிலப் படங்களையும் எளிதில் பார்க்க முடிகிற படங்களையும் தவிர்த்து விடுவேன். புதிய பிரதேசங்களின் வாழ்வையும் கலாச்சாரத்தையும் புரிந்து கொள்ள உதவும் படங்களை பார்ப்பதற்கே விருப்பமாக இருக்கும். அரேபிய குறும்படங்கள், அரேபிய – பிரான்சு, அரேபிய - ஆப்பிரிக்க கலாச்சார தழுவல்களில் உருவாக்கப்படும் படங்களின் மூலம் மிகவும் புதிய நிலப் பிரதேசங்களின் வாழ்வைத் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் நேற்று மாலை MIN YE ( Tell me Who you are) என்கிற ஆப்பிரிக்கத் திரைப்படம் ஒன்றைப் பார்த்தேன். ஆப்பிரிக்காவின் மாலி பிரதேசத்திலிருந்து வந்திருக்கும் படமிது. இப்படத்தின் இயக்குனர் Souleymane Cisse ஏற்கனவே சர்வதேச அளவில் கவனம் பெற்றவர். கான் திரைப்பட விழாவில் சிறந்த வெளி நாட்டுப் படங்களுக்கான பிரிவில் இவரது முந்தைய இரண்டு படங்கள் தேர்வாகி இருக்கின்றன. MIN YE ( Who you are) எனும் இந்தப் படம் ஆப்பிரிக்க இஸ்லாம் சூழலில் இயங்கும் மத்தியதர வர்க்க குடும்பங்களின் கதையைப் பேசுகிறது. மதம், கலாச்சாரம் இவைகள் பெண்களுக்கு தரும் மன ரீதியிலான அழுத்தங்களையும் அதிலிருந்து மீள விரும்பும் பெண்களின் விருப்பத்தையும் இப்படம் களமாகக் கொண்டிருக்கிறது, அவ்விருப்பங்களின் தோல்வி எவ்வாறு பொய்களாகவும் துரோகங்களாகவும் வடிவம் கொள்கின்றன என்பதையும் இந்தப் படம் பதிவு செய்திருக்கிறது.
இந்தப் பகுதிகளில் ஆண்கள் வசதிக் கேற்ப நிறைய பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறார்கள். சட்டமும் மதமும் அதற்குப் பூரணமாய் சுதந்திரம் அளிக்கிறது. கணவனை வேறொரு பெண்ணிடம் பகிர்ந்து கொள்ள விரும்பாத பெண்களின் அகப் போராட்டங்களையும் இப்படம் பதிவு செய்திருக்கிறது. உயர் கல்வி பயின்று நல்ல பதவியில் இருக்கும் பெண்களும் இந்த இரண்டாம் /மூன்றாம் தார சிக்கலிலிருந்து தப்ப முடியாது. மருத்துவம் பயின்று நல்லதொரு பணியில் இருக்கும் மிமி என்கிற கதாபாத்திரத்தின் மூலமாய் பெண்களின் ஆசைகள், இயலாமைகள், துரோகங்கள் என எல்லா நிலைகளும் மிக யதார்த்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சமூகத்தின் கட்டுப்பாடுகள் இவைகளுக்கான பின்புலமாய் இருக்கின்றன என்பதுதாம் மறைபொருளாக படத்தில் பேசப்படுகிறது.

படத்தில் மனதைத் தொடும் எந்த ஒரு விஷயமும் கிடையாது. அடூர் கோபால கிருஷ்ணன்களை விட படு மோசமான திரையாக்கம். படம் முழுக்க தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடர் பாணியில்தான் இயக்கப்பட்டிருந்தது. சினிமா மொழி, திரைக்கதை யுக்தி, பார்வையாளனை கட்டிப் போடுதல் போன்ற எந்த மெனக்கெடலும் திரைப்படத்தில் இல்லை. மேலதிகமாய் படத்தில் எந்த விதமான அரசியல் தன்மையும் இல்லை. ஆனாலும் இந்தப் படம் நேரடியாய் மக்களின் வாழ்வைப் பேசுகிறது. ஒரு சாதாரண குடும்பக் கதை. அதை யதார்த்தமாகவும் சிக்கனமாகவும் படமாக்கி இருக்கிறார்கள். நடிகர்களின் முழு நடிப்புத் திறமைதான் படத்தின் சிலாகிக்கும் அம்சமாக இருக்கிறது. மிகவும் பின் தங்கிய பிரதேசங்களில் இருந்து திரைப்படங்கள் இப்படித்தான் படமாக்கப்படுகின்றன. அவர்கள் எந்த ஜோடனைகளையும் நம்புவதில்லை. மாறாய் தங்களின் கலாச்சார சிக்கல்களை, வாழ்வின் இயலாமைகளை, கொண்டாட்டங்களை ஓரளவு நேர்மையுடன் பதிவு செய்து விட முனைகிறார்கள்.

இந்திய சூழலில் பத்து, இருபது வருடங்களுக்கு முன்னால் கலைப்படங்கள் இப்படித்தான் வந்தன. கேமராவை கொண்டு போய் ஒரு இடத்தில் வைத்துவிட்டு இயக்குனரும் கேமிராமேனும் டீ குடிக்கப் போய்விட்டார்களா? என அஞ்சும் காட்சியமைப்புகள்தாம் இந்திய சினிமாக்களில் நிறைந்திருக்கின்றன. இம்மாதிரியான அயர வைக்கும் காட்சிகளுக்குப் பெயர் போனவர் அடூர் கோபாலகிருஷ்ணன். சமீபமாய் அவரது நிழல் குத்து படம் பார்த்து, அயர்ந்தேன். கதை மிகவும் முக்கியமானதுதான். எவரும் தொடத் தயங்கும் தளம்தான். இருப்பினும் அதை யதார்த்தமாய் பதிவு செய்வதாய் சொல்லி அயர வைப்பதுதான் யதார்த்த சினிமாக்களின் தோல்வியாக இருக்கிறது. உதாரணத்திற்கு நிழல் குத்து படத்திலிருந்து ஒரு காட்சியைப் பார்ப்போம். தூரத்திலிருந்து புள்ளியாய் ஒரு மாட்டு வண்டி தெரியும். மெல்ல அவ்வண்டி கேமரா வைக்கப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி வரும் வரும் வரும் வரும்.. கேமிரா அசையாது ஒரே கோணத்தில் இருக்கும். பொழுதும் போகும்.. போகும்... அதிலிருந்து மூவர் இறங்குவர். இருள் மெல்லக் கவிய ஆரம்பிக்கும். ராந்தல் விளக்கைப் பொருத்துவர். பின்பு மெல்ல இருளுக்காய் நடக்க ஆரம்பிப்பர். கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் கேமிரா ஒரே இடத்தில் அசையாது இருக்கும். சில நேரங்களில் கொட்டாவியோடு கொலை வெறியும் சேர்ந்து கொள்ளும் அளவிற்கு இந்த யதார்த்தத்தை நம்மவர்கள் சாறு பிழிந்திருக்கிறார்கள். தூய சினிமா என்பது இதுவல்ல. சினிமாத் தொழில் நுட்பம் வளர்ந்திராத கருப்பு வெள்ளை காலகட்டங்களிலேயே பிரெஞ்சு புதிய அலை சினிமாக்கள் காட்சி மொழியின் உச்சத்தைத் தொட்டிருக்கின்றன. சொல்லப்போனால் ஃபெலினி இயக்கிய 8 ½ திரைப்படத்தைப் போலவெல்லாம் இன்னொரு திரைப்படத்தை உருவாக்கிவிட முடியுமா? என்பது சந்தேகம்தான்.

திரையிடலுக்குப் பின்பு இயக்குனருடன் அரங்கத்திலேயே குழுவாக உரையாட முடிந்தது. திரைப்பட விழாக்களில் இருக்கும் சிறப்பு அம்சமாக இந்த ஒரு நிகழ்வைச் சொல்லலாம். படத்தின் இயக்குனர் அல்லது நடிகர்களுடன் படம் பார்த்து முடித்த பின்பு அத்திரைப்படம் எழுப்பும் கேள்விகளை பகிர்ந்து கொள்வது நல்லதொரு அனுபவமாக இருக்கும். சில நேரங்களில் இந்த உரையாடல்கள் படத்தையே வேறு மாதிரி புரிந்து கொள்ள உதவும். இன்னொரு வகையில் இந்த உரையாடல்கள் நம்முடைய சொந்த அனுபவத்தை பாதித்து விடவும் கூடும். சமீபத்தில் அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்னால் அபுதாபியில் நடந்த திரைப்பட விழாவில் சில படங்களைப் பார்த்தேன்.


ப்ரேசிலிலிருந்து I travel because I have to, I come back because I love you என்றொரு படம் பார்த்தேன். படம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. படத்தின் பிரதான கதாபாத்திரம் கேமராதான். படம் முழுக்க ஒருவனின் கண்கள் மூலம் பதிவு செய்யப்பட்டிருக்கும். வெறுமனே குரல் ஒன்று, விடாமல் பேசிக் கொண்டிருக்கும். மனைவியை விட்டுப் பிரிந்து ப்ரேசிலின் வறண்ட பிரதேங்களில் மண் ஆய்வு செல்லும் ஒருவன் ஒவ்வொரு நாளையும் எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் கதை. மிகக் கவித்துவமான உரையாடல்கள், கவிதைகள், காட்சி மொழிகள் என படம் மிக நல்லதொரு அனுபவமாக இருந்ததது. கிட்டத்தட்ட ஒரு நல்ல நாவலை வாசித்து முடித்த திருப்தியை படத்தின் பின்னணியில் ஒலிக்கும் குரல் தந்திருந்தது. படம் முடிந்த பின்பு இயக்குனர் இப்படத்தைப் பற்றித் தந்த தகவல்கள் கிட்டத்தட்ட படத்தையே வெறுக்க வைத்து விட்டது. முதலில் இது ஒரு திரைப்படமே அல்ல. பத்து வருடங்களுக்கு முன்னால் இயக்குனர் ப்ரேசிலின் வறண்ட பகுதிகளை ஒரு டாக்குமெண்டரியாக எடுக்க வேண்டுமென விரும்பியிருக்கிறார். அப்பிரதேசங்களுக்கு பயணித்து மனிதர்கள் குடிபெயர்ந்து போன வெற்றிடப் பகுதிகளை கேமிராவில் பதிவு செய்திருக்கிறார். இடையில் அந்த டாக்குமெண்டரி முயற்சி கைவிடப்பட்டிருக்கிறது. சமீபமாய் எங்கிருந்தோ இதை மீண்டும் தோண்டியெடுத்து காட்சிகளுக்கு பின்னணியாய் கதை ஒன்றை எழுதி கதைக்குச் சம்பந்தமாய் ஓரிரு காட்சிகளை மட்டும் எடுத்திருக்கிறார்கள். எடிட்டிங்கை கவனமாய் செய்து முடித்ததும் இதோ ஒரு திரைப்படம் தயாராகிவிட்டிருக்கிறது. இது ஒரு well made movie அவ்வளவுதான் என அவர் சிரித்துக் கொண்டே சொன்னபோது எனக்கு அதுவரைக்கும் இருந்த உற்சாக மனநிலை காணாமல் போனது.

ஆனால் இந்த Tell me Who you are படம் பார்த்து விட்டு உரையாடியது மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஆப்பிரிக்காவின் மாலி போன்ற பிரதேசங்களில் பெண்களின் வாழ்வு எப்படி இருக்கிறது? என்ற கேள்விக்கு இயக்குனர் தந்த பதில் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பெண்கள் அதிகம் படித்திருந்தாலோ நல்ல வேலையில் இருந்தாலோ அவர்களுக்கு திருமணம் நடப்பது மிகவும் கடினமானது. ஏதாவது ஒரு ஆணுக்கு மூன்றாம் தாராமாகவோ நான்காம் தாரமாகவோகத்தான் வாழ்க்கைப்பட வேண்டி இருக்கும். இந்த நிலை மாறுவதற்கு எந்த ஒரு முயற்சிகளும் மேற்கொள்ளப்படவுமில்லை என்ற தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். ஒரு ஆப்பிரிக்கர் மிகவும் கோபமாக ஒரு கேள்வியை முன் வைத்தார். மிமி கதாபாத்திரம் சோரம் போவதாய் காண்பிப்பதன் மூலம் வெளியில் போய் படித்து விட்டு வரும் பெண்கள், வேலைக்குப் போகும் பெண்கள் போன்றோர் கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள் என்பதாய் ஆகாதா? என்றார். இதற்கும் மிக நிதானமாகவே, எந்த சமூகத்தில்தான் சோரம் போவது நடக்கவில்லை? என்றொரு எதிர்கேள்வியும் இயக்குனர் வைத்தார். கலாச்சார நெருக்கடிகள் நிறைந்த சூழலில் பொய்களும் மீறலும் இருக்கும்தான் என்றார்.

இந்த விமர்சனங்கள் எல்லாவற்றையும் தாண்டி பின் தங்கிய பிரதேசங்களின் சினிமாவிற்கான கரிசனத்தையும் நாம் தந்தாக வேண்டும். ஏராளமான பணமும், தொழில் நுட்பமும், திறமையும் நிறைந்து கிடக்கும் தழிழ் சூழலில் பெரும்பாலும் வணிகக் கொடுங் குறிகள்தாம் விறைத்துக் கிடக்கின்றன. இவற்றோடு ஒப்பிடுகையில் சினிமா என்றால் என்னவென்றே தெரியாத ஒரு பிரதேசத்திலிருந்து நேர்மையான படங்கள் வருவதை சினிமா மொழி அறிந்த தமிழ் மனமாக விருந்தாலும் கொண்டாடத்தான் வேண்டும் என்றபடியே அரங்கை விட்டு வெளியே வந்தேன். கிடானோவின் outrage, அலெஜாண்ட்ரோவின் Buitiful, துருக்கிப் படமான Poetry போன்றவைகளைப் பார்க்க திட்டமிட்டிருக்கிறேன். பார்த்து விட்டுப் பகிர்கிறேன்.

Wednesday, December 8, 2010

நந்தலாலா- தனித்துவத்தின் பாடல்



தமிழ் சினிமாவின் சிறந்த படங்கள் என அறியப்பட்ட பெரும்பாலான படங்களுக்குச் சில பொதுத் தன்மைகள் இருக்கும். அழுத்தமான காட்சிகளின் மூலம் பார்வையாளர்களை கதறி அழ வைப்பது, எதிர்பார்த்திராத மிகப்பெரிய அதிர்ச்சியை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாத்திரங்கள் மூலமாய் ஏற்படுத்தி பார்வையாளர்களை ஒரு விதத் துயர மன நிலைக்குத் தள்ளுவது போன்றவைகள் சில உதாரணங்கள். சமீபத்தில் வெளிவந்து தமிழின் சிறந்த படங்களாக அறியப்பட்ட காதல்,பருத்தி வீரன், சுப்பிரமணியபுரம், அங்காடித் தெரு போன்ற படங்களும் இந்த பொது விதிகளுக்கு உட்பட்டுத்தான் தங்களின் இடங்களை அடையாளப்படுத்திக் கொண்டன. அத்துடன் இயக்குநரின் ஒட்டு மொத்த திறமையையும் வசனங்களின் மூலமோ, காட்சிகளின் மூலமோ, மொத்தமாய் கொட்டி படத்தின் சிறந்த கலைத் தன்மையை நிறுவிக் கொள்வதுதாம் வழக்கமானதாக இருந்து வந்திருக்கின்றது. இந்தப் பொதுத் தன்மை இந்திய அளவில் கூட பொருந்திப் போகலாம்.

சத்யஜித்ரேவிலிருந்து சமீபத்திய வசந்தபாலன் வரைக்குமாய் இந்திய சினிமாக்களில் சிறந்த படங்கள் என அறியப்பட்டவைகளில் பெரும்பாலானவை அழுகாச்சி படங்கள்தாம். மூளையிலிருக்கும் எல்லாவற்றையும் திரையில் பகிரங்கப்படுத்தி, ஒரு வித திணிக்கப்பட்ட கதை சொல்லல்கள்தாம் பெரும்பாலும் நம் திரையை நிறைத்து வந்திருக்கின்றன. இந்தப் பொதுத் தன்மையை நந்தலாலா உடைத்திருக்கிறது. அழுத்தத்தைக் கொண்டு வருகிறேன் பார் என்றெல்லாம் முக்கி முக்கி மெனக்கெடாமல் போகிற போக்கில் விசிறலாய் இந்தப் படம் ஏகப்பட்டக் கிளர்வுகளை,அழுத்தங்களை,நெகிழ்வுகளை,கரைவுகளை பார்வையாளரிடத்தில் கடத்திச் செல்கிறது. எல்லாவற்றையும் சொல்லி விடுவதன் அபத்தங்களிலிருந்துத் தப்பித்து நந்தலாலா மெளனத்தை இசைக்கிறது. சொல்லாமல் விடுவதன் இன்பத்தை நந்தலாலாவின் ஒவ்வொரு காட்சியிலும் உணர முடிகிறது. படம் பார்த்து முடித்த பின்பு அந்த மெளனம் நம்மையும் ஆக்ரமிக்கிறது.


மிஷ்கினின் திரைமொழி தமிழிற்கு மிகவும் புதிது. இதுவரைக்குமில்லாத புதியதொரு திரை பாணியை மிஷ்கின் தக்க வைத்திருக்கிறார். இவரின் திரை நாயகர்கள் பதட்டமானவர்கள். முரட்டுத்தனமும் கனிவும் நிரம்பியவர்கள். மிஷ்கினின் படங்களில் முகங்களை விட கால்கள் பிரதானமானவை. செவ்வியல் நாடகத் தன்மையும், போலி பாவனைகளிலிருந்து தப்பித்து நேரடியாய் இதயத்தோடு பேசும் வசன உத்தியும் மிஷ்கினின் தனித் தன்மைகள். இவரின் மூன்று படங்களும் மெல்லியதொரு பதட்டத்தை, அலைவை ஒவ்வொரு காட்சியிலும் தக்க வைத்திருக்கின்றன. ஒரு வித சிலிர்ப்பு மன நிலையை மிஷ்கினின் சித்திரம் பேசுதடியும் அஞ்சாதேவும் எனக்குப் பரிசாகத் தந்தன. நந்தலாலா இந்தப் பதட்டங்களிலிருந்து மீண்டு நிறைவை அடைந்திருக்கிறது. தனித் தன்மைகள் நிறைந்த ஒரு படத்தை உருவாக்குதென்பது மிகவும் கடினமானது. தனக்கான ஒரு பாணியை, திரை மொழியை தக்க வைத்துக் கொண்டவர்கள் நம் சூழலில் வெகு சிலரே. அந்த வெகு சிலரின் பட்டியலில் மிஷ்கினும் இணைகிறார்.

அகிரா குரசோவாவின் பெரும்பாலான படங்களில் அற உணர்வும், மனித நேயமும், அன்பும், கருணையும் மேலோங்கி இருக்கும். ஆனால் எதையும் வெளிப்படையாக காட்சிப்படுத்தியிருக்க மாட்டார். துருத்திக் கொண்டிருக்கும் எந்த ஒரு பிரச்சார வசனங்களும், அழுத்தக் காட்சிகளும் இவரது படங்களில் கிடையாது. இவரது கதாபாத்திரங்கள் அன்பையும் அறத்தையும் இயல்பான ஒரு விஷயமாகக் கொண்டிருக்கும். எனக்குப் பிடித்த அகிராவின் கதாபாத்திரங்கள் சிலவற்றை யோசிக்கும்போது உடனடியாய் நினைவுக்கு வருபவையாக Madadayo படத்தின் விரிவுரையாளர், Dersu Uzala படத்தில் வரும் நாடோடி வேட்டைக்காரன், The Lower Depths படத்தில் வரும் துறவி கதாபாத்திரங்களைச் சொல்லலாம். நேய உணர்வை படம் முழுக்க பயணிக்கும் ஒரு துணைக் கதாபாத்திரமாகவே அகிரா மாற்றிவிடுவார். Red Beard டாக்டர் பாத்திரத்திலிருந்து இடியட் மிஷ்கின் பாத்திரம் வரைக்குமாய் அறம்தான் அகிராவின் முக்கியமான பேசுபொருளாக அவரின் படங்கள் முழுக்கப் பயணித்து வந்திருக்கிறது

அகிராவிற்கு அடுத்தபடியாய் மிஷ்கினின் படங்கள் இதே தளத்தில் இயங்குகின்றன. நாடகத் தன்மையும் உணர்வெழுச்சியும் மிகுந்த கதாபாத்திரங்கள், திடீரென அதற்கு நேர்மாறாய் அமைதித் தன்மைக்கு திரும்பும் வினை மாற்றங்கள் எல்லாம் அகிராவின் படங்களில் மட்டுமே நிகழ்ந்து வந்த அற்புதம். பூனை வளர்க்கும் Madadayo படத்தின் பேராசிரியர் கதாபாத்திரத்தை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். வாழ்வின் மேலான நிலை, கீழான நிலை என எல்லாவற்றையும் புன்னகையோடும் அன்போடும் கடக்கும் பேராசிரியர் தான் வளர்த்த பூனை காணாமல் போனபின்பு அடம்பிடிக்கும் சிறுவன் மன நிலைக்குத் தாவிவிடுவார். இம்மாதிரியான வினோத அகிரா கதாபாத்திரங்களின் ஒட்டு மொத்த சாரமாகவே பாஸ்கர் மணி கதாபாத்திரம் சித்தரிக்கப் பட்டிருக்கிறது. இந்தக் கதாபாத்திரத்தின் வலிமையை உணர்வுபூர்வமாக வேறு எவராலும் புரிந்து கொள்ள முடியாது (அகிராவின் தீவிர இரசிகர்களைத் தவிர) என்கிற சிக்கல் இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும்போது மிஷ்கினுக்கு தோன்றியிருக்கலாம். அதன் நிமித்தமாகவே இந்தக் கதாபாத்திரத்தில் மிஷ்கினே நடித்திருக்கலாம். ஒரு வகையில் இந்த முடிவு பாராட்டப்பட வேண்டியது. வேறு எந்தத் தொழில் முறை நடிகராலும் பாஸ்கர் மணி கதாபாத்திரத்தை சிறப்பாய் செய்திருக்க முடியாது.

நந்தலாலாவின் அடிநாதம் வெகு எளிமையான ஆனால் ஒட்டுமொத்த கிழக்குச் சித்தாந்தத்தின் சாரமாய் இருக்க கூடிய நிலைப்பாடுதாம். அது அன்பை வெளியே தேட வேண்டியதில்லை என்பதுதாம். இதுநாள் வரைக்குமாய் அன்பை நாம் எப்படிப் புரிந்து வந்திருக்கிறோம்? உறவுகளின் வழியே நாம் பெறுவதுதாம் அன்பா? பிற மனிதர்களிடமிருந்து பெறுவது மட்டும்தான் அன்பா? நமக்கே நமக்காய் இருப்பது மட்டும்தான் அன்பா? என்பன போன்ற அடிப்படைக் கேள்விகளை வெவ்வேறு நிகழ்வுகளின் மூலமாய் இத்திரைப்படம் தொடர்ச்சியாய் எழுப்புகிறது. இறுதியில் வேறு எவரிடமிருந்தும் பெற்றுவிடமுடியாத, இதற்காகத்தான் இது என்கிற கொடுக்கல் வாங்கல் பிணைப்பில்லாத, தன்னுள் மட்டுமே முழுமையாய் நிறைந்திருக்கும் பேரமைதிதான் அன்பு என்பதை எல்லாரும் உணர்ந்து கொள்வதாய் இந்தப் படம்/பயணம் நிறைவடையும். தமிழில் இம்மாதிரியான ஒரு தளத்தில் வேறு ஏதாவது முயற்சிகள் நடந்திருக்கிறதா? என்றால் சின்னத் தயக்கத்தோடு இல்லை என்றுதான் சொல்ல முடிகிறது. இந்தப் படத்தில் சொல்லப்பட்டதை விட சொல்லப்படாதவைகள் ஏராளம். அந்த சொல்லப்படாதவைகளைப் புரிந்துகொள்ள அங்கங்கே சிறுசிறு பாதைகளை இந்தப் படம் உருவாக்கியிருக்கிறது. அந்தப் பாதைகளின் வழியை தொடரும்போது ஏற்படும் உணர்விற்குப் பெயர் பிரம்மிப்பாகத்தான் இருக்க முடியும்.

நந்தலாலா படம் முழுக்க சின்ன சின்னதாய் ஏகப்பட்ட நுட்பங்கள் விரவிக் கிடக்கின்றன. இத்தனைச் சிக்கனமாய் ஒரு படைப்பைச் செதுக்கியிருக்கும் மிஷ்கினின் அறிதல் மீது அன்பு பெருக்கெடுக்கிறது. பாஸ்கர் மணி சுவற்றில் கோடு கிழித்தபடியே நடப்பதன் மூலமாய் ஆதூரமான ஒரு பிடிமாணத்திற்காய் ஏங்கித் தவிக்கும் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது. அறிமுகக் காட்சியில் கவனமாகவும், தன் தாயைச் சுமந்தபடி வெளியேறும் காட்சியில் அநிச்சையாகவும் இந்தச் சுவர் கோடு காட்சி பதியப்பட்டிருக்கிறது. மிஷ்கின் வேறோ அவரது தாய் வேறோ அல்ல. சொல்லப்போனால் இந்தப் படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களுமே ஒன்றுதான். தன் தாயின் சாயல்களை பாலியல் தொழிலாளியிடம் வெறித்தனமாய் தேடும் கிழவன் உட்பட அனைவரும் ஒன்றைத்தான் முன் வைக்கிறார்கள். அது அவர்களுக்குக் கிடைக்காமல் போன அன்பாகத்தான் இருக்கிறது. இந்தப் படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களும் அன்பிற்காய் ஏங்குகின்றனர். இவர்கள் அனைவருமே வாழ்வின் பெரும்பாலான நாட்களை தனிமையில் கழிக்க சபிக்கப் பட்டவர்களாய் இருந்திருக்கிறார்கள். யாராவது ஒருத்தர் அன்பின் சிறு பொறியைத் திறந்து காண்பித்தாலும் உடைந்து போகக் கூடியவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் அனைவருமே இந்த முயற்சியில் தோல்வியடைகிறார்கள். ‘நொண்டி’ ‘மெண்டல்’ என்கிற வார்த்தைகள் மட்டுமே இவர்களைச் சிதைக்கப் போதுமானதாய் இருக்கிறது.


கிழவனின் முரட்டுத் தடி ‘திம்’ ‘திம்’ என அதிர்ந்தபடி எல்லோரையும் ஒரு கட்டத்தில் தாக்குகிறது. ஏற்கனவே கைவிடப் பட்டவர்கள் இன்னும் செயலிழந்து போகிறார்கள். எல்லாம் உடைந்து அழ ஆரம்பிக்கும்போது மழை எல்லா நாற்றத்தையும் கழுவி விடும் என நம்புகிறார்கள்.ஒரு நிறைமாத தாய் பாம்பு கைவிடப்பட்டவர்களின் தலைப் பக்கமாய் ஊர்ந்து செல்கிறது. வயிற்றுக்குள் குட்டிப் பாம்போடு அது மிகப் பெரும் நம்பிக்கையையும் சுமந்தபடி ஊர்ந்து செல்கிறது. இருத்தலின் அழகை இத்தனைக் கச்சிதமாய் இந்திய சினிமாவில் நாம் பார்த்திருக்க முடியாது. படம் முழுக்க ஒன்றிலிருந்து இன்னொன்றுக்காய் கதாபாத்திரங்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். பயணம் என்பது கதை நிகழும் தளமாக மட்டும் இல்லாமல் அகமும் புறமுமாய் பயணம் நிகழ்ந்தபடியிருக்கிறது. இறுதியில் வண்ண பலூன்களை சுமந்தபடி பாஸ்கர்மணி சேர்ந்த இருவரைக் கடந்து போகிறான். நாம் மெளனத்திற்குப் போகிறோம்.

2

கிக்கிஜீரோவை அட்டைக் காப்பி அடித்துவிட்டார்கள் என துப்பறியும் சாம்புக்களும், விமர்சன அதிபுத்திசாலிகளும் கண்டுபிடித்திருக்கிறார்கள். திருடன், திமிர்பிடித்தவன், ஆணாதிக்கவாதி என்றெல்லாம் கூட மிஷ்கினுக்குப் பல பட்டங்களை இணையத்தில் வாரி வழங்கியிருக்கிறார்கள். கிக்கிஜீரோதான் என்று நீ ஏன் ஆரம்பத்திலேயே ஒத்துக் கொள்ளவில்லை? இப்போது ஒப்புக்கொண்டாயா சரி, பிறகு ஏன் டைடில் கார்டில் கதை கிடானோ எனப் போடவில்லை? இப்படி மாறி மாறிக் கேள்விகளால் நம்மவர்கள் துளைத்தெடுக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் சொல்லக் கூடிய ஒரே சரியான பதில் “ஆம் அது அப்படித்தான் நண்பர்களே!” என்பதுதாம். இருப்பினும் நான் புரிந்து கொண்ட வரையில் இந்தக் காப்பிக் களங்கத்திற்கு ‘சப்பை’ கட்ட முயற்சிக்கிறேன்.

அகிரா குரசோவாவையும், கிடானோவையும் தன்னுடைய மானசீக குருமார்கள் என்கிறார் மிஷ்கின். இவர்களின் படங்களின் மூலமாய்த்தான் மிஷ்கின் தனக்கான திரைமொழியைக் கண்டறிந்திருக்கிறார் என்பதை ஆரம்ப நிலை உலகப்பட பார்வையாளர்களால் கூட அனுமானித்து விட முடியும். தமிழ் சினிமாவின் ‘பிரம்மா’ கே.பாலச்சந்தர் சமீபத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறார். “ஒரு காட்சி என்பது ஆரம்பம், நிகழ்வு, முடிவு என எல்லாவற்றையும் கொண்டிருக்க வேண்டும் அப்படி இருந்தால்தான் அது அது சிறந்த படமாக முடியும்” நல்ல கருத்துதான். இப்படிச் சம்பிரதாயமாக எந்த ஒரு புண்ணாக்குமே இல்லாமல் காட்சிகளை உருவாக்கும் தமிழ் சினிமா சூழலில் ஏதாவது இருக்க வேண்டும் என அறிவுறுத்துவது நியாயமானதுதான். இம்மாதிரியான ஒண்ணாங் க்ளாஸ் தமிழ் சூழலில் மிஷ்கின் அடைந்திருக்கும் உயரத்தை நம்மவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பது கடினமானதுதான்.

மிஷ்கினின் திரைமொழி ஒரு காட்சியின் முடிவையும் இன்னொரு காட்சியின் முடிவையும் இணைக்கிறது. அதாவது அடுத்தடுத்த இரண்டு காட்சிகளின் முடிவை மட்டுமே மிஷ்கின் நமக்குப் பார்க்கக் கொடுக்கிறார். ஆரம்பத்தையும் நிகழ்வையும் வெட்டி எறிந்து விடுகிறார். இந்த உத்தியை மிஷ்கின் அஞ்சாதே படத்திலும் கச்சிதமாகப் பயன்படுத்தி இருப்பார். (நரேன் முதல் நாள் வேலைக்குப் போய் திரும்பி வரும் இரவுக் காட்சியை நினைவுபடுத்திப் பாருங்கள்) கிடானோ கிக்கிஜீரோவை முழுக்க இந்த பாணியில்தான் இயக்கியிருப்பார். நந்தலாலாவிற்கான சிறுவனை மிஷ்கின் கிக்கிஜீரோவில் கண்டுபிடித்திருக்க வேண்டும். அந்த ஒற்றுமைதான் இரண்டு படங்களையும் இணைக்கிறதே தவிர இரண்டு படங்களின் அடிநாதமும் வெவ்வேறு. கிக்கிஜீரோ வை இந்தப் படம் பல மடங்கு தாண்டியிருக்கிறது என்பதுதான் என் பார்வையாக இருக்கிறது.

உதாரணத்திற்கு லாரி ட்ரைவர் கதாபாத்திரத்தை எடுத்துக் கொள்ளலாம். சாலைப் பயணத்தை களமாகக் கொண்ட கதையில் லாரியையோ, லாரி ட்ரைவரையோ தவிர்க்க முடியாது. இதையெல்லாம் காப்பி என்றால் தமிழ் சினிமா ‘புத்திசாலி’ப் பார்வையாளனை ஒன்றுமே செய்ய இயலாததுதான். கிக்கிஜீரோ லாரி ஓட்டுநரும் நந்தலாலா லாரி ஓட்டுநரும் எந்த அளவிற்கு நுட்பமாய் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் என யோசித்துப் பார்த்தாலே இரண்டு படங்களுக்குமான வித்தியாசம் புரிந்து விடும். நந்தலாலா கதாபாத்திரங்களில் என்னை மிகவும் நெகிழ வைத்த பாத்திரமாக இந்த லாரி ஓட்டுனர் இருக்கிறார். வலிமையான உடல் கொண்ட ஓட்டுநர், ஹாரனைத் திருடியதற்காக பாஸ்கர் மணியை அடி அடியென அடிப்பார். அப்படியே சாலையில் மடங்கி உட்கார்ந்து அழ ஆரம்பிக்கும் பாஸ்கர் மணியின் இயலாமை ஓட்டுநரை கலங்கடித்து விடும். பாடலின் பின்னணியில் அடுத்தடுத்து வரும் காட்சிகள் மனித நேயத்தின் உச்சம். இம்மாதிரியான ஒரு காட்சியைக் கூட கிக்கிஜீரோவில் பார்க்க முடியாது.

சிட்டி ஆஃப் காட் படத்தின் காப்பி புதுப்பேட்டை, பை சைக்கிள் தீஃப் படத்தின் காப்பி பொல்லாதவன், இன் டு த வைல்ட் படத்தின் காப்பி கற்றது தமிழ் என்பது மாதிரியான பயங்கரமான கண்டுபிடிப்புகளை நம்மவர்கள் தொடர்ச்சியாய் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழில் நல்ல படங்கள் வரத் துவங்கியிருக்கும் இந்தக் காலகட்டத்தில் இன்னும் தம்முடைய ஒலக சினிமா அறிவை பகிரங்கப்படுத்திக் கொண்டிராமல் ஆரோக்கியமான/ உருப்படியான விமர்சனங்களை விமர்சகர்கள் முன் வைக்க வேண்டும். காப்பி என்கிற விஷயம் அயோக்கியத்தனமானதுதான். அடுத்தவரின் உழைப்பைச் சுரண்டும் எல்லா வழிகளும் அடைக்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் எது காப்பி? எது ஒரிஜினல்? என்கிற தெளிவு நம்மவரிடையே வளர்த்தெடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

Featured Post

test

 test