Tuesday, April 13, 2010

முப்பது வருடங்கள்

பொழுதுகளோடு நான் புரிந்த
யுத்தங்களையெல்லாம் முடித்துவிட்டு
உன்னருகே வருகிறேன்
அமைதி என்பது மரணத் தறுவாயோ ?
வந்தமர்ந்த பறவையினால்
அசையும் கிளையோ ?
வாழ்வின் பொருள் புரியும்போது
உலக ஒழுங்கு முறையின் லட்சணமும்
புரிந்துவிடுகிறது.
அமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ ?
எழுந்து சென்ற பறவையினால்
அசையும் கிளையோ ?
- தேவதேவன்


முப்பது வயதைக் கடந்திருக்கிறோம் என நினைக்கையில் லேசான ஒரு திடுக் மனநிலை அல்லது நம்ப இயலாத ஒரு வியப்பு புன் முறுவலைப் போலத் தோன்றி விட்டு மறைகிறது. ஆனாலும் முப்பது வருடங்களை நான் கடந்துதான் வந்திருக்கிறேன். இன்னும் எத்தனை வருடங்கள் மீதமிருக்கின்றன என நினைத்துக் கொள்ளவும் இந்த நாள் ஒரு வாய்ப்பளிக்கிறது. அசையாது அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் மரணத்தின் முன்புதாம் நாமனைவரும் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. மரணம் நமக்களித்த கொடைதாம் இந்த வாழ்வு. எப்போது வேண்டுமானாலும் அந்தக் கொடையை திரும்பப் பெற்றுக் கொள்ளவும் மரணம் தயங்குவதில்லை. மேலும் அது திரும்பப் பெற்றுக் கொள்ளும் கணம் அத்தனை இலகுவாய் எவருக்கும் இருப்பதில்லை. நான் என்னளவில் அந்த கணத்தின் இறுக்கத்தை சிறிது குறைக்க விரும்புகிறேன். இந்த வாழ்வின் இந்த பயணங்களின் இந்த அலைவுகளின் குறைந்த பட்ச வெற்றியென்பது மரணத்தை இலகுவாக்குவதுதான். நானும் என் சகோதரனும் அடிக்கடி சொல்லிக் கொள்வதுதான் இது. மரணம் ஒரு தியானத்தைப் போல, ஒரு விடுபடுதலைப் போல, ஒரு திறப்பைப் போல அணுகப்பட வேண்டும். அதற்கான மன நிலையை எட்டுவதுதான் என் வாழ்நாள் சாதனையாக இருக்கக் கூடும். A perfect pure death என சொல்லிப் பாருங்கள் கிளர்ச்சியாக இருக்கிறதல்லவா?

இன்றைய பதினைந்து நிமிடக் காலைப் பயணத்தில் முப்பது வருடங்களை நினைவில் சக்கரமாய் சுழற்றிப் பார்த்தேன். மிக இலகுவாய் நகர்ந்து போகும் இந்த நாட்களை விட வியர்வையில் குளித்தபடி வெயிலில் அலைந்து கொண்டிருந்த இருபதின் ஆரம்ப நாட்கள் மிகுந்த உயிர்ப்புத் தன்மை கொண்டதாகத் தோன்றுகிறது. பத்து வருடத்திற்கு முன்பு நான் எட்டுவதற்கான உயரங்கள், அடைய வேண்டியவை, கைப் பற்ற வேண்டியவை என்பன போன்ற ரீதியிலான நீளமான பட்டியல்களும் பேராசைகளுமிருந்தன. அந்த விரும்புதல்கள் இன்னொரு வகையில் வாழ்வை உற்சாகமாகவும் வைத்திருந்தன. வெற்றி, தோல்வி, கொண்டாட்டம், துயரம் என்பதினை அடி மனதிலிருந்து அந்தந்த உணர்வுகளின் வேர்சுவையை ருசிக்க முடிந்தது. இப்போதும் அதே உணர்வுகள் இருக்கிறதுதாம் என்றாலும் ஏதோ ஒரு புள்ளியில் நான் அதிலிருந்து விலகுகிறேன். அதன் ஆழத்தினுக்கு என்னால் பயணிக்க முடியவில்லை. பாதியிலேயே நான் நடிப்பது எனக்கே உறைத்துவிடுகிறது. மீண்டும் அவ்விருபதினுக்கு,அப்பதின்மத்தினுக்கு செல்ல முடிந்து விட்டால் பின்பு எப்போதுமே அங்கிருந்து நகராமல் எதையாவது பிடித்துக் கொள்ள வேண்டும். சற்றுக் கலைந்த நினைவுகளில் பதின்மமும்,இருபதும் தந்த அயற்சிகள் லேசாய் எட்டிப் பார்த்தன. இன்னும் சற்று வசதியாக இருக்கட்டுமே என நினைவை இன்னும் பின்னோக்கி விரட்டினேன்.அணிந்திருக்கும் கால்சட்டை முழுக்க தெருப்புழுதியும், ஆற்று மணற்துகள்கள் நிரந்தரமாய் தஞ்சம் புகுந்துவிட்ட செம்பட்டை தலை முடியோடும் சுற்றித் திரிந்த என் சிறு வயது பிம்பத்தில் நினைவைப் பொருத்தி விடுகிறேன். இதில் எந்த சிக்கல்களுமில்லை.

எல்லா வளர்ந்த ஆண், பெண்களிலும் ஒரு சிறுவனோ சிறுமியோ நிரந்தரமாய் விழித்திருப்பார்கள் போலும். என் சிறுவனை எவரும் நினைவுறுத்தத் தேவையில்லாது அவன் அவ்வப்போது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான். அந்த கணங்கள் மிகப் பிரத்யேகமாகிவிடுகின்றன. அந்த கணத்தின் உற்சாகத் தளும்பலை எது கொண்டும் அடக்கி விட முடிவதில்லை. அந்த கணத்திலேயே தொடர்ந்து நீடிப்பதுதான் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வாய் இருக்க முடியும். மனதளவில் நான் அந்த வயதை விட்டு நகராமல்தான் இருக்கிறேனோ என்கிற சந்தேகங்கள் எழ ஆரம்பிக்கின்றன. எப்போதுமே இழந்ததை விரும்பும் மனதின் பகல் கனவுதாம் இவ்வெண்ணங்கள் என்பது உறைத்தாலும் கனவினை நாடும் மனம் நிகழில் ஒரு போதும் பொருந்துவதில்லை.

இன்றைய தினத்தில் நன்றி உணர்வு பெருக்கெடுக்கிறது. இந்த இயற்கை, இந்த மனிதர்கள், எனக்குச் சமீபமான சக உயிரினங்கள், என எல்லாத் தரப்பிலிருந்தும் நான் அன்பைப் பெற்றிருக்கிறேன். எந்த பற்சக்கரத் தாடைகளும் கடித்துக் குத்தி கிழித்துவிடாமல் இந்த வருடங்களை நான் கடந்திருக்கிறேன். அவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக இன்றைக் கருதுகிறேன். கோபத்தின் விதையை, வன்மத்தின் வளர்ந்த செடியை, துரோகத்தின் மறைவுக் கொடியை நான் பலரின் சிறு தோட்டங்களில் ஊன்றியிருக்கலாம். அவைகளுக்கான காரணங்கள் அந்தந்த நிமிடங்களின் உணர்வுத் தெறிப்புகளேயன்றி எப்போதைக்குமான வன்மங்கள் அல்ல. எனக்கு இணக்கமில்லாதவர்கள், என்னை வெறுப்பவர்கள், என் மீது உமிழ நினைப்பவர்கள் அனைவருக்கும் என் அன்பு முத்தங்கள்.

இதே நாளில் பிறந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சக வலைப்பதிவர் வால் பையன், தங்கை அருள்மொழி பாலாஜி மற்றும் முகமற்ற முகவரியற்ற அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள். மின்னஞ்சல்,தொலைபேசி,ஆர்குட்,முகப்பு பக்கம் மூலமாக வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றியும் அன்பும்.
Post a Comment

Featured Post

தினசரிகளின் துல்லியம் - கிண்டில் வெளியீடு

தினசரிகளின் துல்லியம்             புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் சில உதிரிக் குறிப்புகள் உள்ளே.. 1.    தினசரிகள...