Friday, March 19, 2010

மத்தியக் கிழக்கின் வாழ்வும் திரையும் - துபாய் திரைப்பட விழா



ஆறாவது சர்வதேசத் திரைப்பட விழா துபாயில் டிசம்பர் 9 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 16 ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இவ்விழாவில் 55 நாடுகளிலிருந்து 168 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் அராபிய ஆவணப்படங்களும் பாலஸ்தீனிய குறும்படங்களும் உள்ளடக்கம். பெரும்பாலான திரையிடல்கள் மால் ஆஃப் எமிரேட்ஸ் - சினிஸ்டார் திரையரங்குகளிலும் சொற்பமான படங்கள் மதினாத் ஜூமைரா, டிஎம்சி உள்ளிட்ட மற்ற மூன்று இடங்களிலும் திரையிடப்பட்டன.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வெளிவரும் திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதை தேர்வுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இது ஒருவகையில் சரியானதே. பெரும்பான்மையுடன் போட்டியிட முடியாத சிறுபான்மை சினிமாவிற்கான தளமாகவும் துபாய் திரைப்பட விழா இருக்கிறது. A celebaration of Indian cinema என்கிற பிரிவில் இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அமிதாப் பச்சனிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நம் ஊரிலிருந்து அவள் பெயர் தமிழரசி மற்றும் யோகி இரண்டும் இடம் பிடித்திருந்தன. பிற நாடுகளின் வரிசையில் பிரெஞ்சுத் திரைப்படங்களும் அதிகம் திரையிடப்பட்டன.

மற்ற நாடுகளின் சினிமா பரிச்சயமான அளவிற்கு நான் வாழும் நிலப்பரப்பின் திரைப்படங்களை இன்னும் பார்த்திருக்கவில்லை(ஈரான் நீங்கலாக) எனவே இம்முறை மத்திய கிழக்கின் படங்களைப் பார்க்க பெரிதும் விரும்பியிருந்தேன். ஆனால் முன்பெப்போதுமில்லாத பரபரப்பான நாட்களை எதிர்கொண்டிருப்பதால் நான்கு படங்களை மட்டுமே பார்க்க முடிந்தது.

THE NILE BIRDS – Egypt
WHISPER WITH THE WIND -Iraq
MY DEAR ENEMY - South Korea
THE MAN WHO SOLD THE WORLD - Morocco

நான்கு படங்களுமே நல்லதொரு காட்சி அனுபவமாக இருந்தது. திரைப்படம் என்கிற வகையில் எகிப்திய படமான நைல் பேர்ட்ஸ் எனக்கு ஏமாற்றத்தையே அளித்தாலும் நைல் நதிக்கரை மனிதர்கள், நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வு, காமம், கொண்டாட்டம், துயரம் இவற்றை ஓரளவிற்கு சுமாரான திரைக்கதையிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. எகிப்தில் சினிமா ஒரு இலாபகரமான தொழிலாக இல்லை. அதிக திரைப்படங்கள் எடுக்கப்படுவதில்லை. வளர்ச்சி, தொழில்நுட்பம் என எதுவுமில்லாத ஒரு தேசத்திலிருந்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அந்நாட்டைப் பொறுத்த வரை ஒரு முக்கிய சினிமாவாக இருக்கலாம். இப்படத்தினை அதன் இயக்குனரோடும் கதாநாயகனோடும் அமர்ந்து பார்த்தேன். படம் முடிந்த பின்பான உரையாடலில் நான் சிக்கலை ஏற்படுத்த விரும்பவில்லை. ஆனால் எகிப்து நாட்டின் பார்வையாளர்களிடமிருந்து இச்சினிமா குறித்த நல்லதொரு திருப்தி இருந்ததை அவர்களின் களிப்பிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.

After the Downfall, Heman, The Children of Diyarbakir, Whisper with the Wind போன்ற குர்திஷ் இயக்குனர்களின் படங்கள் இம்முறை இடம் பெற்றிருந்தன. குர்திஷ் இன மக்களின் அழித்தொழிப்பை களமாகக் கொண்டிருக்கும் இத் திரைப்படங்கள் துருக்கி,ஈரான் மற்றும் ஈராக் நாடுகளால் கொன்று குவிக்கப்பட்ட குர்திஷ் இன மக்களின் அவலத்தை மிகுந்த வலியுடன் நம் முன் வைக்கின்றன. Turtles can fly படத்தை இயக்கிய பக்மன் ஹோபாடியின் No one Knows about Persian Cats படத்தைப் பார்க்க பெரிதும் விரும்பியிருந்தேன் அத்திரைப்படம் இங்கு திரையிடப்படாததால் இரானிய குர்திஷான ஷாஹ்ரம் அலிடியின் இயக்கத்தில் வந்த Whisper with the Wind படத்தைப் பார்த்தேன். ஷாஹ்ரம் அலிடியின் முதல் படமிது. கான் 2009 திரைப்பட விழாவில் பல்வேறு விருதுகளை குவித்திருக்கிறது. குர்திஷ் இன மக்களின் மீது அரசாங்கம் நிகழ்த்திய வெறியாட்டத்தை, படுகொலைகளை இத் திரைப்படம் காட்சிப்படுத்தியிருக்கிறது. வறண்ட மலைகள் சூழந்த நிலப்பரப்பு, எல்லாவிடத்தும் நிறைந்திருக்கும் காற்றின் அமானுஷ்ய சப்தம் இவற்றின் பின்னணியோடு மிகத் துல்லியமான, அபாரமான ஒளிப்பதிவும் சேர்ந்து இப்படத்தை மிளிரச் செய்திருக்கிறது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் சாமான்யர்களின் வாழ்வு மிகுந்த வலியுள்ளதாக இருக்கிறது. தொடர்ச்சியான போர்களிலும், வல்லரசுகளின் கோரத் தாண்டவங்களிலும் சிக்கி அலைவுறுவதோடு மட்டுமில்லாமல் மதம், சமூகக் கட்டுக்கள், சிறுபான்மை இனத்தவரின் மீதான அதிகாரத்தின் வெறியாட்டம் என எல்லா வன்முறைகளும் நிகழ்ந்த / நிகழ்ந்து கொண்டிருக்கும் இடமாக இத் தேசங்கள் இருக்கின்றன. இம்மாதிரியான சூழலிலிருந்து வெளிவரும் படங்கள் தங்களின் துயரம் நிரம்பிய வாழ்வை, இழப்பை, கதறல்களை இரத்தமும் சதையுமாக பார்வையாளன் முன் வைக்கின்றன. அவை ஏற்படுத்தும் அதிர்ச்சி பார்வையாளனை நிலைகுலைய வைக்கிறது. அப்படி ஒரு அதிர்வைத்தான் இப்படமும் ஏற்படுத்தியது. ஈராக் - அமெரிக்க போர்சூழல் பின்னணியில் வெளிவந்த turtles can fly படத்தின் தொடர்ச்சியாக இதை அணுகலாம். இரண்டு பிரச்சினைகளும் வெவ்வேறானது என்றாலும் இரண்டுமே சாமான்யர்களின் துயரத்தை மிக அழுத்தமாகவே நம் முன் வைக்கின்றன.

ஈராக் மலைப்பிரதேசங்களில் வாழும் குர்திஷ் மக்களின் அழித்தொழிப்பில் தன் மகனை இழந்த மாம் பால்டார் என்கிற முதியவர் திக்பிரம்மையுற்ற மனைவியுடன் எஞ்சிய நாளை கழிக்கிறார். தன் வாகனத்தில் மலைகள், சமவெளிகள் முழுக்கப் பயணித்து அங்கங்கே மீதமிருக்கும் மக்களுக்கு தகவல்களைத் தந்து கொண்டிருக்கிறார். கூண்டோடு அழிக்கப்பட்ட கிராமங்கள், உயிரோடு புதைக்கப்பட்ட மனித உடல்கள் எல்லாவற்றையும் தாண்டி மீதமிருக்கும் மனிதர்களுக்கு சிறுசிறு உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார். அவரது பயணங்களில் தென்படும் கடைகள், நிகழ்வுகள் யாவும் திரும்பி வரும்போது காணாமல் போயிருக்கின்றன அல்லது சிதிலமாகிக் கிடக்கின்றன. உயிர் எப்போது வேண்டுமானாலும் போகலாம் அழித்தொழிப்புகள் எல்லாத் திசைகளிலிருந்தும் வரலாம் என்கிற பயத்தோடு வாழ்கிற மக்களின் அவலத்தை மிகத் துல்லியமாய் பதிவு செய்திருக்கும் படமிது. எல்லா நம்பிக்கைகளும் காணாமல் போன பின்பு அங்கங்கே கேட்கும் அல்லா அல்லா என்கிற அவலக் குரல்களுக்கு மத்தியில் மிகுந்த சிரமங்களுக்கிடையில் மாம் பால்டார் பதிவு செய்த பிறந்த குழந்தையின் அழுகுரலொன்றை தடைசெய்யப்பட்ட வானொலி ஒளிபரப்பு செய்கிறது. மலைப் பிரதேசமெங்கும் வானொலியில் கேட்கும் அப்போதுதான் பிறந்த குழந்தையின் அழுகுரல் புதியதொரு துவக்கத்திற்கான நம்பிக்கைகளைத் தருவதோடு படம் நிறைவடைகிறது.

ஈழம், குர்திஷ்தான் என நிறைவேறாமலேயே போன அற்புதங்கள் கணக்கிலடங்கா குழந்தைகளின் பெண்களின் முதியவர்களின் இளைஞர்களின் உடல்களைத் தின்று அதிகாரத்தின் காலடியில் புதையுண்டிருக்கலாம். ஆயினும் அதிகாரத்தின் குரல்வளையை நோக்கிப் புதைவிலிருந்து நீளும் ஆயிரம் கைகளைப் பற்றிய கனவுகளின் மீது நம்பிக்கை வைப்பதுதான் இந்நாட்களின் மீட்பாய் இருக்கிறது.

மொராக்கோ திரைப்படமான The man who sold the world புதுமையான காட்சி அனுபவத்தைத் தந்தது. திரைப்படவிழாவில் இரண்டு முறை திரையிடப்பட்டு இரண்டு முறையும் அரங்கு நிறைந்தது. இவ்விழாவில் பார்த்ததிலேயே எனக்கு மிகவும் பிடித்தமான படமாக இதைச் சொல்லலாம். இமாத் நூரி(Imad Noury), சுவெல் நூரி (Swel Noury) என்கிற மொராக்கோ சகோதரர்கள் இயக்கிய படமிது. இவர்களின் தந்தை ஹக்கிம் நூரி மொராக்கோவில் நன்கு அறியப்பட்ட இயக்குனர். தாய் மரியா (Maria Pilar Cazorla) ஸ்பானியத் திரைப்பட தயாரிப்பாளர். இத் திரைப்படத்தை தயாரித்திருப்பதும் இவர்தான்.

தஸ்தாயெவ்ஸ்கியின் 'A Weak Heart' நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படமிது. பெரும்பாலான காட்சிகளில் இரஷ்ய இயக்குனர் அந்திரேய் தர்க்கோயெவ்ஸ்கியின் பாதிப்பை உணர முடிந்தது. திரையில் மிகச் சிறந்த கவித்துவப் படிமங்களை உண்டாக்குவதில் வல்லவரான தர்க்கோயெவ்ஸ்கியால் பயன்படுத்தப்பட்ட பல திரைப்படிமங்கள் இவர்களை பாதித்திருக்கின்றன. கவித்துவ உச்சங்களை திரையில் கொண்டுவர தர்க்கோயெவ்ஸ்கியால் மட்டும்தான் முடியுமென்கிற என் இறுக்கமான நம்பிக்கைகளை இவர்கள் சற்றுத் தளர்த்தியிருக்கிறார்கள். மத்திய கிழக்கின் intellectual cinema என இத்திரைப்படத்தை தாராளமாக கொண்டாடும் அளவிற்கு மிக நேர்த்தியான முறையில் படமாக்கப் பட்டிருக்கிறது. இப்படத்திற்கு திரைக்கதை எழுதியிருப்ப சுவெல் நூரி.

ரெட் காமிராவினைக் கொண்டு படமாக்கி இருக்கிறார்கள். லில்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் Audrey Marnay யின் வெண்ணிற உடலில் தனியாய் தெரியும் அடர் சிவப்பு உதடுகளும் சிவப்புச் சாயம் பூசின நகங்களும் ரெட் காமிராவின் அசாத்தியங்கள். படம் முழுவதுமே சிவப்பு நிறம் காதலின் நிறமாகவும் கொண்டாட்டத்தின் நிறமாகவும் கையாளப்பட்டிருக்கிறது.

காட்சிகளுக்குப் பின்னணியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஓவியங்கள் படத்திற்கு அசாதாரணத் தன்மையை தந்திருக்கின்றன. மனதின் மிக ஆழமான, கொந்தளிப்பான, உணர்வுகளின் / உணர்ச்சிகளின் தெறிப்பை ஒவ்வொரு காட்சியிலும் உணர முடிந்தது. பதினைந்து தலைப்புகளில் இத்திரைப்படம் தொகுக்கப்பட்டுள்ளது. ஒரு அடையாளமில்லா தேசத்தில் போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்வு மிகக் கடுமையான சட்ட திட்டங்களுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது. வளைந்த கால் ஒன்றையும் மிக இலேசான இதயத்தையும் கொண்டவனுமான எக்ஸ்(Said Bey) அரசாங்கத்தின் கோப்புகளை மறு பிரதியாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறான். எக்ஸின் கையெழுத்து அந்த ஊரிலேயே மிகச் சிறந்த கையெழுத்தாய் இருப்பதனாலும் அவன் உடல் சிக்கலை முன் வைத்தும் அவனை அரசாங்கம் போர் முனைக்கு அனுப்பி வைக்க வில்லை. எக்ஸின் அறைத்தோழனும் சக பணியாளனுமான நே (Fahd Benchamsi) எக்ஸின் மீது மிக ஆழமான அன்பை வைத்திருக்கிறான். இருவரும் மிக நெருக்கமான அடர்த்தியான அன்பில் திளைக்கிறார்கள். மேலதிகமாய் எக்ஸிற்கு லில்லி என்கிற மிக அழகான பாடகியின் காதலும் கிட்டுகிறது. அவள் எக்ஸை இந்த உலகத்தின் எல்லாவற்றையும் விட அதிகமாய் நேசிக்கிறாள்.

தன் மீது நம்பிக்கை வைக்கும் உயரதிகாரி, அன்பையும் அக்கறையும் கொட்டும் உயிர்த்தோழன், தன்னை வாரிக் கொடுக்கும் அழகான காதலி என எல்லாமிருந்தும் எக்ஸ் துயரமடைகிறான். பதட்டமடைகிறான். இந்த உலகத்தில் தனக்கு மட்டும் எல்லாம் கிடைத்துவிட்டதே என குற்ற உணர்வு கொள்கிறான். தன்னைச் சுற்றியுள்ளவர்களின் நம்பிக்கையை குலைத்து விடுவோமோ என பயப்படுகிறான். தன்னை உலகத்துடன் பொருத்திப் பார்த்து உலகம் எப்போது மகிழ்வடைகிறதோ அப்போதுதான் தன்னால் மகிழ்வாய் இருக்க முடியும் என நம்புகிறான். இறுதியில் மனநிலை பிறழ்கிறான்.

இப்படத்தின் திரையாக்கம் மகிழ்வையும், உற்சாகத்தையும், அன்பில் திளைத்தலையும், நட்பையும், காதலையும், காமத்தையும், உடலையும், போதையையும், பைத்தியத்தன்மையையும் மிகச் கச்சிதமாக பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது. போர்ச்சூழலை காண்பிக்க இரண்டு சிதிலமடைந்த வீடுகளும் எக்ஸ் மற்றும் நே வின் பதட்டங்களும் போதுமானதாய் இருக்கிறது. தஸ்தாயெவ்ஸ்கியின் கதையும் புறம் சாராது அகத்திலேயே பயணிப்பதால் இடம்/தேசம் குறித்தான அடையாளமற்றத் தன்மையை உண்டாக்க இயக்குனர்கள் பெரிதாய் மெனக்கெட வேண்டிய அவசியமில்லாமல் போய்விடுகிறது.

திரையிடலுக்குப் பின்பான கலந்துரையாடலில் நூரி சகோதரர்களில் ஒருவரும் தயாரிப்பாளரான தாயும் மற்றும் எக்ஸாக நடித்திருந்த சையத்பேவும் பங்குபெற்றனர். இரஷ்ய நாவலை அராபிய போர் சூழலுக்குப் பொருத்த எவ்வாறு முடிந்தது என்கிற வினாவிற்கு நூரி பதிலளித்தார். தஸ்தாயெவ்ஸ்கி, காஃப்கா போன்றவர்களின் படைப்புகளில் சூழல்கள் பின்னணிகள் குறித்த பெரும் விவரணைகள் இல்லாதது எல்லா சூழல்களுக்கும் பொருந்திப் போக இலகுவாய் இருக்கிறதென்றார். தாய் தயாரிப்பாளராக இருந்ததால் தங்களால் சுதந்திரமாய் இயங்க முடிந்ததென்றும் பட நேர்த்தியை மட்டுமே கவனத்தில் வைத்து செயல்பட முடிந்ததாயும் பகிர்ந்தனர். அரை மில்லியன் யூரோக்களை இப்படத்திற்கு செலவு செய்ததாய் மரியா பகிர்ந்தார். முப்பது வயதையும் எட்டியிராத இவ்விளம் இயக்குனர்கள் தொட்டிருக்கும் உயரம் அசாத்தியமானதுதான். மேலதிகமாய் இத்திரைப்படம் மூலமாய் உலகத்திற்கு நீங்கள் சொல்ல விரும்புவதென்ன போன்ற மொன்னை கேள்விகளுக்கும் மிக நிதானமாய் பதில் சொல்லும் பொறுமையும் இவர்களுக்கு இருக்கிறது.படம் முடிந்த பின்பு நூரியின் கைகளை அழுத்தமாய் பற்றிக் குலுக்கினேன். இவ்விரு சகோதரர்களும் வருங்கல மத்தியக் கிழக்கின் தவிர்க்க முடியாத சினிமா அடையாளமாகவிருப்பர் என்பதில் சந்தேகமில்லை.

துபாய் திரைப்பட விழாவின் வண்ணம் வருடத்திற்கு வருடம் மெருகேறிக் கொண்டிருக்கிறது. கடந்த மூன்று வருடங்களாக இந்நிகழ்வை அவதானித்து வருபவன் என்கிற முறையில் கடந்த வருடங்களை விட இவ்வருடம் மிக தைரியமான படங்களை விழாக் குழுவினர் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். உள்ளூர் படங்களுக்கு கணிசமான பரிசை வழங்குவதின் மூலம் அராபிய இளைஞர்களிடையே திரைப்படம் குறித்தான சிந்தனைகளை வளர்த்தெடுக்கிறார்கள். அய்ரோப்பிய திரைப்பட விழாக்களைப் போல கவர்ச்சியும் வசீகரமும் புகழின் வெளிச்சமும் அங்கீகாரங்களும் இன்னமும் இவர்களுக்கு கிடைக்கவில்லைதான் எனினும் மத்தியக் கிழக்கின் பெருமளவில் அறியப்படாத சினிமாக்களுக்கு இவ்விழா ஒரு பாலமாக இருக்கிறது என்பது உண்மைதான்.

அகநாழிகை மார்ச் 2010 இதழிலும் இக்கட்டுரை வெளிவந்துள்ளது. நன்றி வாசு.

2 comments:

ராம்ஜி_யாஹூ said...

ஆயிரம் நல்ல விஷயங்கள் இருந்தாலும், நம்ம ஊர் தெலுங்கு படங்களை போல அராபிய நாடுகளில் அரசு செய்யும் தீமைகளை எதிர்த்து படம் எடுக்க அனுமதி இல்லை, ஆர்குட் இணைய தளம் பயன் படுத்த அனுமதி இல்லை. இவை போன்ற கருத்து சுதந்திரங்கள் இல்லாததால் இந்த நாடுகளின் கலை படைப்பின் மீது ஈடுபாடு வருவது இல்லை.

ராம்ஜி_யாஹூ said...

விகடனிலோ, இந்தியா டுடே யிலோ அய்யனாரின் பதிவுகள் வருவதால் அந்த பத்திரிக்கைகளுக்கு தான் பெருமை.

Featured Post

test

 test