Monday, February 22, 2010

கடினத்திலிருந்து நீர்மைக்கு


மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு பிப்ரவரி மாத இறுதியில்தான் இந்த வலைப்பூ மலர்ந்தது. கல்வியினுக்குப் பிறகு மூன்று வருடங்கள் தொடர்ந்து ஒரே தளத்தில், ஒரே இடத்தில், ஒரே மாதிரியான வாழ்வினை நான் எப்போதும் எதிர்கொண்டிருக்கவில்லை. கடந்த பனிரெண்டு ஆண்டுகளில் அதிகபட்சம் ஒண்ணரை வருடங்கள் ஒரே சூழலில் வாழ்ந்திருந்ததுதான் என் சாதனையாக இருந்தது. இதோ இந்த வலையும், எழுத்தும் விலக இயலா ஈர்ப்பாக மூன்று வருடங்கள் கடந்த பின்னும் என்னுள் இருந்து கொண்டிருக்கிறது. ஒரு போதும் கடமையாகவோ, வேலையாகவோ, நிர்பந்தமாகவோ, பிறரின் விருப்பத்தினுக்காகவோ இந்த எழுத்து இன்னமும் செய்யப்படாததாகவே இருக்கிறது என்கிற நம்பிக்கைகள் மட்டுமே இதைத் தொடரும் காரணங்களாகப் பின்னிருந்து கொண்டிருக்கின்றன.

பதிமூன்று வயதில் கிடைத்த மெரூன் நிற டைரியொன்று ஏதோ ஒரு கணத்தில் என் அந்தரங்க நண்பனானது. என் மிக இரகசியத் தகவல்களை ஒளித்து வைக்குமிடமாகவும் விரைவில் அது மாறியது. நாட்குறிப்பு எழுதும் வழக்கத்தையும் என் அண்ணனைப் பார்த்துதான் எழுத ஆரம்பித்தேன். இரகசியமாய் அவரின் டைரிகளைப் படித்து அதே மாதிரி எழுதி வைத்துக் கொள்ள ஆரம்ப நாட்களில் பெரிதும் மெனக்கெட்டேன். இதுவரைக்குமான எல்லாமும் அண்ணனைப் பார்த்துக் கற்றுக் கொள்வது அல்லது அண்ணன் கற்றுக் கொடுத்ததாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. முக்கிய சம்பவங்கள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், புத்தகம், சினிமா பற்றிய குறிப்புகள் எல்லாமும் அப்போதிலிருந்து இன்றைய தேதி வரைக்குமாய் அந்தந்த புரிதல்களுக்கு ஏற்றார் போல் என்னால் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்போது இல்லாமல் போனது அந்தரங்கமாகத்தான் இருக்கிறது என்றாலும் அதற்கு படைப்பு, ஆசிரியன், வாசகன் என்றெல்லாம் வேறுவேறு பெயர்களை சூட்டிக் கொண்டாயிற்று.

கற்பனைகளால் கட்டமைக்கப்படும் உலகம், மிகவும் சாந்தமான மன நிலையைத் தந்துவிடுகிறது. இயல்பிற்கேத் திரும்பாத வேறொரு உலகத்தில் மொத்தமாய் தொலைந்து போய்விடும் பரவச ஆசையும் அந்த கணத்தில் மேலெழும். ஆனாலும் பயம், தேவைகள், நிர்பந்தம் என ஏதேதோ பெயர்களில் நான் மீண்டும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்துக் கொண்டு இயல்பு உலகத்தினுக்கு வந்து விடுகிறேன். இந்த தேர்வு என்னுடையது. இந்த இயல்பு வாழ்க்கையை தெரிவு செய்தது நான். சுதந்திர வாழ்வினையோ அல்லது பாதுகாப்பில்லாத வாழ்வினையோ என்னால் சகித்துக் கொள்ள இயலாது. தோளில் ஒரு பையினை மாட்டிக் கொண்டு கால் போன போக்கில் என்னால் நடந்து போய்விடமுடியாது. ஹிப்பிக்களின் வாழ்வெல்லாம் சிலாகிக்க மட்டும்தானேயன்றி பின் தொடர்வதற்கில்லை என்பன போன்ற சாமர்த்திய அனுகுமுறைகளே என் வாழ்வாக இருக்கிறது.

கடந்த நான்கு வருடங்களாய் இதுவாய், அதுவாய் ஆக வேண்டுமென்கிற ஆசைகளோ, கனவுகளோ சுத்தமாய் இல்லை. எனக்கிருந்த மிக உயர்ந்த பட்சக் கனவே ஏதோ ஒரு நிறுவனத்திற்காக மேனஜராய் குப்பை கொட்ட வேண்டுமென்பதாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது வந்திருக்கும் தொலைவு அந்த கனவுகளை வெகு அற்பமாக்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பிடங்களின் தொடர்ச்சியான மாற்றங்கள், சந்திக்க நேர்ந்த புதிய மனிதர்கள், அலைக்கழிப்பும், அதி உற்சாகமுமான வாழ்வு மற்றும் மனநிலை என எல்லா பரீட்சார்த்தங்களுமிருந்தும் உண்மையாகவே எனக்கு எதிலேயும் ஆர்வமோ பிடிப்போ இல்லை. எல்லா இடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கின்றேனோ என்கிற சந்தேகங்கள் வேறு வர ஆரம்பிக்கின்றன. இந்த வாழ்வை உற்சாகமாக வைத்துக் கொள்ள செய்ய வேண்டியதெல்லாம் உண்மையாகவே எனக்குப் பிடித்த வேலையை செய்வதும், பிடித்த மாதிரி வாழ்வதும்தான். ஆனால் எப்படி இருந்தால் எனக்குப் பிடிக்கும்? என்பதுதான் இப்போதைய குழப்பமாக இருக்கிறது. சமூகத்திற்கும், சூழலுக்கும், மனிதர்களுக்கும் ஏற்றார்போல் மாற்றி மாற்றித் தகவமைத்துக் கொண்டதன் மூலம், என்னுடைய அடையாளத்தை முற்றிலுமாய் இழந்துவிட்டிருக்கிறேன். எது என்னுடைய பிடித்தம்? எந்த நகர்வில் என் பூரணத்துவத்தை எட்ட முடியும்? என்பதைக் கண்டுபிடிப்பதுதான் இப்போதைய சவாலாக இருக்கிறது.

இது நான் இல்லை, இது என் உலகம் இல்லை என்கிற கிசுகிசுப்புக் குரலை எனக்கான தினசரிகளினூடாய் எப்போதும் கேட்டபடியிருக்கிறேன். அந்தக் கிசுகிசுப்புகள் எப்போது உரத்து ஒலிக்க ஆரம்பிக்கிறதோ அப்போதென்னால் குறைந்த பட்ச நிம்மதியுடன் கூட வாழ முடியாதுதான் போலிருக்கிறது. குரலை உயர்த்தவிடாமலிருக்கவும் நான் உபாயங்களைக் கண்டறிந்திருக்கிறேன். சொல்லப்போனால் இங்கே கொட்டப்படும் வார்த்தைகளுக்கான ஆதாயமும், இந்தப் பரப்பைக் கெட்டியாய் பிடித்துக் கொள்வதற்கான காரணங்களும் குரலை உயர்த்த விடாமலிருக்கத்தான்.

0
இந்த வலைப்பக்கத்தை துவங்கிய நாளிலிருந்து இன்று வரைக்குமாய் கிடைத்த, கிடைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களும் அவர்களின் வழி விரியும் உலகமும் புதுமையானவை. நல்ல / கெட்ட என்றெல்லாம் பிரித்தோ, ஒதுக்கியோ, உயர்த்தியோ, தாழ்த்தியோ பார்க்கும் வழக்கத்திலிருந்து மெல்ல நகர்ந்து மனிதர்களை மனிதர்களாக பார்ப்பதற்கு பழகிக் கொள்கிறேன். எல்லா துன்பங்களுக்கும் காரணம் “நான்” எல்லா இன்பங்களுக்கும் காரணம் “நீ” என்கிற அனுகுமுறை இவ்வுலகில் இரு மனிதர்களுக்கிடையிலான உறவுகளை மகிழ்ச்சியாய் வைத்திருக்க உதவும் என்கிற நம்பிக்கைகள் வரத் துவங்கிவிட்டன. குற்றம் சுமத்துதல், பழிபோடுதல், வன்மம், பகை, கழிவிரக்கம், குற்ற உணர்வு, இழந்தவற்றின் மீதான ஏக்கம், இயலாமை, நிகழின் மீதான வெறுப்பு, அவநம்பிக்கை, குறுக்கு புத்தி, என வெவ்வேறு மனநிலைகளைக் கடந்து கொண்டிருக்கிறேன்.

நதியின் வசீகரக் குளுமையை நினைவில் கொண்டபடி பாலையைக் கடப்பது படு அபத்தமானது என உள்ளிருக்கும் நிகழ் புத்தன் குரலெழுப்பினாலும் அவன் குரல் வளையை என் ஆயிரம் இயலாமை கரங்களைக் கொண்டு நெறித்தபடி அதே நதியின் நினைவுகளோடு நிகழைத் தொலைக்கிறேன். நினைவில் காடுள்ள இன்னொரு மிருகம் நான். எந்த வனத்திலிருந்தும் தப்பவில்லையெனினும் மீண்டும் வனம் புக விழையும் நவீன மிருகமாகத்தானிருக்கிறேன். அடர்ந்த வனங்களை மோகித்தபடி காட்டுச் சிற்றோடைகளில் நீந்திக் களிக்கிறேன். எந்நேரத்திலும் விரிந்த நீர்ப்பரப்பு நினைவில் விடாமல் சிறு அலைகளை ஏற்படுத்தியபடி இருக்கிறது. என் வாழ்வாக, கனவாக, கிளர்ச்சியாக (நீரினடியில் இன்னொரு உடல் நுழைவது என் நெடுநாளையக் கிளர்வுகளில் ஒன்று) விருக்கும் இந்நீரே என் மரணமாகவுமிருக்கும்.

மலைகளில் தோன்றி, பள்ளத்தாக்குகளில் வீழ்ச்சியடைந்து, வளைவுகளில் குறுகி, பாறைகளில் உயர்ந்து, சமவெளியில் சலனமற்று நகரும் நதியினை யொத்ததாய் இருக்கிறது வாழ்வு. அதே சமவெளி நதியின் இருப்பினையொத்த மனநிலையோடு மீதமிருக்கும் வாழ்வையும் கடந்துவிடுவதற்கான விருப்பங்களும் வரத் துவங்கியாயிற்று. மஜித் மஜிதியை ஊருக்கு வர வழைக்க விரும்பும் பவாவின் மனநிலையோடோ, கோணங்கியைப் போல ஊர் சுற்றிக் கொண்டோ எஸ்.ராமகிருஷ்ணனைப் போல பொதிகை மலையில் இலைகளின் நடனத்தை எழுதிக் கொண்டோ மீதமிருக்கும் வாழ்வினைக் கடக்க நான் விரும்புகிறேன்.

மூன்று வருடங்களுக்கு முன்பிருந்த கடின “நான்” இரண்டாம் வருடத்தில் இளகி மூன்றாம் வருடத்தில் நீர்மையாகியிருக்கிறது. இனி செய்ய வேண்டியதெல்லாம் காண்பதுவும் கடப்பதுவும் மட்டுமே.
0
Post a Comment

Featured Post

தம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா

கினோகுனியா - சிறுகதைத் தொகுப்பை அமேஸான் கிண்டிலில் வாங்க https://www.amazon.in/dp/B077DHX1FX பத்துக் கதைகளை கிண்டிலில்...