Tuesday, January 26, 2010

ஆயிரத்தில் ஒருவன் - புனைவின் கொண்டாட்டம்


குவாண்டின் டராண்டினோவின் சமீபத்திய படமான இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் பார்த்துவிட்டு வெளியில் வந்த போது புனைவின் அதிகபட்ச சாத்தியங்களில் ஒன்று என நினைத்துக் கொண்டேன். இதே மாதிரி உணர்வைத்தான் ஆயிரத்தின் ஒருவனும் தந்தது. வரலாற்றை தம் வசதிக்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்வது அல்லது தம் கதைக்குள் வரலாறை உலவவிடுவது போன்றவையெல்லாம் புனைக்கதையாளனின் தந்திரமாய்த்தான் இருக்க முடியும். பார்வையாளன் அல்லது வாசகனுக்கான புதிய அனுபவத்தினை தருவதின் நோக்கம் மட்டுமே இவையென்பதால் fantasy எனப் பெயரிட்டுக் கொண்டு இம்மாதிரி சிலத் திரிபுகளை அனுபவிப்பதில் நமது தமிழ் சினிமாவின் அறம் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாதுதான்.

இயக்குனர் செல்வராகவன் தமிழின் மிக சொற்பமான நம்பிக்கை. கதாநாயகர்களின் படம் என்கிற நெடுங்கால அடையாளத்தை இயக்குனரின் படமாக மாற்றிய மிகச் சில இயக்குனர்களில் ஒருவர். சற்றே மந்தமான நாயகர்கள், புத்திசாலிப் பெண்கள், வெளிப்படைக் காமம், வன்முறையின் பரவசம், விளிம்பு நிலை வாழ்வு, ஆண் மய்ய பிம்பங்களின் தகர்வுகள் இவற்றையெல்லாம் தமிழ் திரையில் சாத்தியமாக்கியவர். கிட்டத் தட்ட இதே கூறுகளைக் கொண்ட இன்னொரு படம்தான் ஆயிரத்தில் ஒருவன். இவரது எல்லா படங்களிலும் வரும் வழக்கமான நெருப்பு நடனத்திற்கு 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ மன்னனான பார்த்திபனும் சம காலத்தைச் சேர்ந்த கார்த்தியும் நடனமாடும்போது நான் புனைவின் உச்ச பட்ச சாத்தியங்களை கொஞ்சம் தள்ளி வைத்துக் கொண்டேன்.

வரலாற்றையும் சமகாலத்தையும் இணைக்கும் துணிச்சல் அசாத்தியமானது. இம்மாதிரியான ஒரு துணிச்சல் நம்மவரிடையே இருக்கிறது என்பதில் இலேசான பெருமிதமும் எனக்கு ஏற்பட்டது. சினிமா இரசிகன் என்கிற முறையில் தமிழ் சினிமாவின் அபத்தங்களின் மீதும் நாயக பிம்பங்களின் மீதும் கடுமையான கோபங்களும் எரிச்சலும் ஆழ்மனதில் விரவியிருக்கின்றன. இம்மாதிரியான சில முயற்சிகளே மிகப் பெரும் கொண்டாட்ட மனநிலையைத் தந்து விடுவதற்கான காரணம் பெருகிப்போன அபத்தங்கள்தாம் என்றால் அது மிகையில்லை.

சிறுவர் படக்கதைகளிலும் மாயாஜாலக் கதைகளிலும் மூழ்கிக் கிடந்த என் சிறுபிராயத்து உற்சாகங்களை இப்படத்தின் முதல் பாதியில் மீட்டெடுத்தேன். விட்டலாச்சார்யா காலத்திலிருந்தே நமது சூழலில் ஏழு கண்ணிகள் பாதுகாவலுடன் உயிர் ஒன்று உலவிக் கொண்டிருக்கிறதுதான் என்றாலும் அதைக் கச்சிதமாகவும் பிரம்மாண்டமாகவும் பார்க்க மிகவும் பிடித்திருந்தது. இரு கன்னியருடன் உயிரைப் பணயம் வைத்து ஏழு கண்ணிகளை கடந்த பின்பு தென்படும் சிதிலமான புராதண நகரம் சுவாரசியத்தின் துளியைப் பார்வையாளனுக்குப் பருகத் தருகிறது. ஒட்டகக் கறி மற்றும் மதுவினோடு கச்சிதமான பாடலும் சேர்ந்து கொள்ள மரண பயத்திலிருந்தும் நெடிய பசியிலிருந்தும் மீண்ட மன நிலையை பார்வையாளனும் அடைகிறான். திடீரென கேட்கும் பெரும் சப்தத்தினால் மூவரும் மனம் பிறழ்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும் மரணத்தை விளையாட்டாக்குவதும் இதுவரைக்குமான தமிழ் திரையின் முதல் காட்சியின்பக் காட்சிகள். மிகத் தட்டையாக சொல்லப்போனால் இந்த ஒரு காட்சியினுக்காகவே இந்தப் படத்தை மிகத் தாரளமாகக் கொண்டாடலாம்.

மிக அடர்த்தியான இரண்டாம் பகுதி பார்வையாளனை வேறொரு திசையில் பயணிக்க வைக்கிறது. வரலாறையும் நிகழையும் ஒன்றுடன் ஒன்று பொருந்துவதில் தவிர்க்க முடியாத நடைமுறைச் சிக்கல்கள் இடை இடையே தலை காட்டுகிறதுதாம் என்றாலும். மக்களின் மொழி அரச மொழி இவற்றில் காண்பிக்கப் பட்டிருக்கும் வித்தியாசங்கள், இரும்புக் குண்டு சகிதமாய் அடிமைகளை கொன்று குவிக்கும் மல்லனுடனான யுத்தக் காட்சி, வசீகரமும் அடர்த்தியான நஞ்சும் கொண்ட நாகத்தினை நினைவூட்டும்படியான ரீமாசென்னின் கதாபாத்திரம் மற்றும் எம்மாதிரியான வாழ்வியல் சூழலிலும் அரசர்கள் சுகபோகமாகவே இருந்தனர் என்பதைக் காட்சிப்படுத்தியிருப்பதும் அதிமாயா நெருடல்களை குறைக்க உதவியிருக்கின்றன.

செல்வா, யுவன், அரவிந்த் கிருஷ்ணா கூட்டணி உடைந்த பின்னர் வரும் முதல் படமென்பதால் தரம் குறித்தான சந்தேகங்கள் எனக்கிருந்தன. ட்ரெய்லரில் பார்த்திருந்த உன் மேல ஆசதான் பாடலெல்லாம் இம்மாதிரியான படத்தினுக்கு தேவையா என்கிற வருத்தமுமிருந்தது. ஆனால் படம் எந்த வித நெருடல்களையும் ஏற்படுத்தவில்லை மேலதிகமாய் கொண்டாட்ட மனநிலையையும் தந்தது. ஜி.வி. பிரகாஷின் இசையனுபவத்தைப் பொறுத்தவரை இம்மாதிரியான படத்தின் பின்னணி இசையென்பது குருவி தலையில் பனங்காய்தான். இசை படத்தினுக்கு உறுத்தலில்லாமல் இருந்ததே மிகப் பெரிய சாதனைதாம். ராம்ஜியின் ஒளிப்பதிவும் கச்சிதம்.

குவாண்டின் டராண்டினோவின் அனுகுமுறையே செல்வராகவனின் அனுகுமுறையாகவுமிருக்கிறது. அதிகாரத்தின் வரலாற்றை அதற்கு இணையான அல்லது அதைவிட பலம் வாய்ந்த அதிகாரத்தின் பக்கம் நின்று புனைவுகளின் துணைக் கொண்டு சிதைப்பதைத்தான் செலவராகவனும் நிகழ்த்தியிருக்கிறார். எல்லா அதிகாரங்களும் தின்று வளர்வது சாமன்யர்களின் உடல்களாக இருக்கிறதென்பதையும் எல்லா அதிகாரக் குறிகளும் நீள்வது உயிரை மட்டும் கொண்டிருக்கும் நைந்துபோன எம் பெண்டிர்களையும் சிறுமிகளையும் நோக்கித்தாம் என்பதையும் செல்வா காட்சிப்படுத்தத் தவறவில்லை.


செல்வராகவனுக்கு அடுத்தபடியான அபாரம் ரீமாசென். இனிமேல் இதுபோன்றதொரு கதாபாத்திரத்தில் இவரால் நடித்து விட முடியுமா என்பது நம் இந்தியச் சூழலில் சந்தேகமே. பருத்தி வீரன் ‘உதிரி’ கார்த்தி யினுக்கும் ஆ.ஒ ‘சாமான்ய’ கார்த்தி யினுக்கும் வித்தியாசங்கள் அதிகமில்லை. ஒரே ஒரு அழுக்கு நிஜாருடன் திரையில் அறிமுகமாகும் கதாநாயகனும் நமது புர்ச்சி, வீர, அதிரடி, தல, கால், கை, கன்றாவிகள் உலவும் சூழலில் இருக்கிறான் என்பதே ஆறுதலாக இருக்கிறது. பிரபலங்களின் குடும்பப் பின்னணி, முதல் படத்தின் மாபெரும் வெற்றி போன்றவைகள் இருந்தும் கூட ஆ.ஒ மாதிரியான கதாபாத்திரத்தினுக்காக இரண்டு வருடங்கள் செலவழித்த கார்த்தியினுக்குப் பாராட்டுக்கள். மேலதிகமாய் இப்படத்தின் பிரதான பாத்திரம் ரீமா சென்னாக இருந்தபோதும்கூட முழுமையான ஈடுபாட்டுடன் நடித்துக் கொடுத்தமைக்கும் ஒரு விசேச பாராட்டு. ஆண்ட்ரியாவின் குரலில் சிறப்பாய் வந்திருந்த மாலை நேரம் பாடல் இடம்பெறாதது குறித்து வருத்தமெதுவுமில்லை. கிங்ஸ் அரைவல் போன்ற யுவனின் சாயல்களைத் தவிர்த்திருக்கலாம்.

ஆங்கிலத்தில் fantasy படங்கள் மாதத்தினுக்கு மூன்று என்கிற கணக்கில் மிகப் பிரம்மாண்டமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆயிரத்தில் ஒருவன் படமாக்கப் பட்டிருந்ததை விட பன்மடங்கு அதிகத் தரத்துடன் பிரம்மிப்புகளை திரையில் பெரும்பாலானோர் பார்த்திருக்கிறோம் என்றாலும் சன்குழுமங்களின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பரிதாபமான தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நிச்சயம் இஃதொரு மாற்றுப் படமே.

29 comments:

JP said...

குப்பை.கேவலம்.வக்கிரம். என்றெல்லாம் குவியும் நிராகரிப்புகளின் மத்தியில் உங்கள் கொண்டாட்டம் கொஞ்சம் ஆசுவாசம். நீங்கள் கொண்டாட்டமாக பார்த்ததை நான் பகையின் வெறியாட்டமாக பார்த்தேன் :-)

நட்புடன் ஜமால் said...

நீங்கள் குறிப்பிட்ட இரண்டு படங்களையுமே பார்க்கலை.

1000ல்1ருவன் பார்க்கலாம் என்றே இருக்கின்றேன்.

புனைவுகளுக்கு விதிகள் இல்லை என்று நல்லா சொல்லியிருக்கீங்க.

நிச்சியம் இது ஒரு மாற்று படமாகவே நினைத்து பார்க்க போகனும்.

சந்தனமுல்லை said...

மீ த ஃபர்ஸ்ட்!

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க...ஒட்டகக் கறியோடு மதுவும் அந்த பாட்டும் டான்ஸும் - அதை நான் எழுதாம விட்டுட்டேன்...எனக்கும் ரொம்ப பிடிச்சி இருந்தது... கூடவே ஆடணும் போல இருந்தது..என்ன பண்றது..கையிலே இருந்த கோக்கையும் சோளப்பொறியையும் பார்த்துட்டு அமைதியாகிட்டேன்..:))

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான பார்வை அய்யனார்!! என் கருத்தும் இதே தான்..

//ஆயிரத்தில் ஒருவன் படமாக்கப் பட்டிருந்ததை விட பன்மடங்கு அதிகத் தரத்துடன் பிரம்மிப்புகளை திரையில் பெரும்பாலானோர் பார்த்திருக்கிறோம் என்றாலும் சன்குழுமங்களின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பரிதாபமான தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நிச்சயம் இஃதொரு மாற்றுப் படமே.//

உண்மையான வரிகள். இதை நாம் ஏற்க ஏன் மறுக்கிறோம்.

anujanya said...

அழகான, கச்சிதமான விமர்சனம் ஐய்ஸ். எனக்கும் வரலாறும், நிகழ்காலமும் ஒன்று சேரும் புள்ளியை பார்த்திபன் நடனமாடும் போது ஒன்று சேரும் கார்த்தியின் நடனம் மூலம் காண்பித்தது இன்னமும் வியப்பில் ஆழ்த்துகிறது. இந்தப் படத்தின் உயிர் நாடியை ஒரு காட்சியில் உணர்த்தியது அது.

நிச்சயம் கொண்டாடப் பட வேண்டிய தமழ்ப் படம். ஆனால், வணிகப் பின்புலத்தில் எழும்பும் கேள்விகளும் என்னைப் பொறுத்த வரையில் பொருத்தமானவையே. ஒரு புது பாதையில் செல்பவனின் பொறுப்புகள் அதிகம். இப்படிப்பட்ட முயற்சிகள் பெருமளவில் நட்டம் தராமல் இருக்க வேண்டும் என்பதும் அத்தகைய பொறுப்புகளில் ஒன்று. அதில் செல்வா கொஞ்சம் சறுக்கியிருப்பது, அவரைத் தொடர முனைபவர்களுக்கு அவர் அறியாமலே இழைத்த தீங்கு.

அனுஜன்யா

வால்பையன் said...

உங்கள் கோணம் படம் பார்க்கும் ஆர்வத்தை மேலும் தூண்டுகிறது!

MSK / Saravana said...

அதே தான் தல.. அதே.. அதே..
இந்தமாதிரிதான் நானும் இப்படத்தை பற்றி எழுதவேண்டுமென்றிருந்தேன்.. இன்னும் இந்த அளவுக்கு எழுத வரவில்லை.

//இவரது எல்லா படங்களிலும் வரும் வழக்கமான நெருப்பு நடனத்திற்கு 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ மன்னனான பார்த்திபனும் சம காலத்தைச் சேர்ந்த கார்த்தியும் நடனமாடும்போது நான் புனைவின் உச்ச பட்ச சாத்தியங்களை கொஞ்சம் தள்ளி வைத்துக் கொண்டேன்.//
உண்மையிலேயே மிகுந்த ஆர்வமும் கொண்டாட்டமும் கொண்டபடி படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்.. ஒவ்வொரு முறையும் செல்வா எனது எதிர்பார்ப்புகளை எமாற்றியதே இல்லை. :)

அடுத்த திரைப்படம் ஒரு psychological thriler, mind game kind of திரைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்..

ஈரோடு கதிர் said...

அருமையான விமர்சனம்

நன்றி

☀நான் ஆதவன்☀ said...

அய்ஸ் புனைவுக்கு லாஜிக் தேவையில்லை தான்.... புனைவின் உட்கட்டமைப்புக்கு லாஜிக் தேவை தானே? பல இடங்களில் அது மிஸ்ஸிங்.

“உன் மேல ஆசை தான்” பாட்டு & பார்த்திபன், கார்த்தி நடனத்திற்கு எல்லாம் தியேட்டரிலேயே ஆட வேண்டும் போல் இருந்தது :)

Deepa said...

ஆஹா... நீங்களுமா. இப்போது தான் முல்லை எழுதியதைப் பார்த்து ஆவலாகி இருந்தேன். மேலும் தூண்டி விட்டீர்கள்.

//சன்குழுமங்களின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பரிதாபமான தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நிச்சயம் இஃதொரு மாற்றுப் படமே.//
:-))

Ganesan said...

நல்ல ஆழமான விமர்சனம்.
இரண்டாம் பாதி புரியவில்லை என்பது பலர் கருத்து, புரியவில்லை என்பதைவிட புரிய முற்படவில்லை என்பதே என் எண்ணம்.
இந்த மாதிரி படங்களுக்காக கொஞ்சம் புரிய முற்பட்டிருந்தால் இந்த படம் வெகுவாக கவரும்.

சாமனிய ஜனங்கள், படத்தின் இரண்டாம் பாதியில் நிசப்தமாக இருப்பதே படத்தின் வெற்றிக்கு சாட்சி. ஆனால் ஏனோ ஒத்துக்கொள்ளாத ஜனங்கள்.மிகவும் எளிமையுடன் , விளக்கத்துடன் படம் பார்த்த தமிழர்கள் இப்படத்தையும் ஒவ்வொரு காட்சியையும் விளக்க வேண்டும் என எதிர்பார்கிறனர். உதாரணமாக ,கார்த்தி,தான் உண்மையான தூதன் என்றும், இறுதி காட்சியில் தூக்கி செல்லும் சிறுவன் தான் அடுத்த ராஜா, என்பது தெரியாமலேயே அல்லது இது மாதிரி நிறைய இரண்டாம் பாதி காட்சிகள் புரியவில்லை என்பது பலர் கருத்து.

போதும் மக்களே, வேட்டைகாரன், வில்லுகள் போதும்.

ஆ.ஒ புரியமுற்படுங்கள். அது அருமையான படம் என்பது தெரியும் உங்கள் கண்களுக்கு.

2 தடவை பார்த்துவிட்டேன், இன்னும் 3 தடவை பார்க்கவேண்டும்.

Anonymous said...

அருமை அய்ஸ்.

நீங்களாவது பிரதியைப் பிரதியாகப் பார்த்திருக்கிறீர்கள்.

ரௌத்ரன் said...

செமித்தியா இருக்குதாட்ருக்கு :))

பாக்கல இன்னும்..டொரண்ட்ல எந்த புண்ணியவானாவது போட்டாதான் உண்டு :(

ஒருவேள செல்வா தமிழவன் நாவல்லாம் படிக்க ஆரம்பிச்சுட்டாரோ....அய்யய்யோ...பயமா இருக்கே :)))

குசும்பன் said...

இப்ப என்ன செய்யட்டும் நான், எனக்கு படம் பிடித்திருந்தது, பிடிச்சிருக்குன்னு சொன்னா எங்க என்னையும் உன் கேட்டகிரியில் சேர்த்துடுவாங்களோன்னு பயமா இருக்கு:))

ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் புரியுது இந்த பினாவானாக்களுக்கு படம் புடிக்கனும் என்றால், ஹீரோயின் நின்னுக்கிட்டு ஒன்னுக்கு அடிக்கனும், கெட்டவார்த்தை பேசனும் இப்படி பல இருக்கு போல:)

அப்பாலிக்கா ஒரு மேட்டர் இங்க நம்ம ஊரில் ரிலீஸ் ஆகியிருப்பது 45 நிமிடங்கள் கட் செஞ்ச படமாம், கட் செஞ்ச பகுதியில் ரீமா இன்னும் பல "சாகசம்" செய்கிறதாம்:))

லேகா said...

பகிர்விற்கு நன்றி அய்யனார்..

தமிழில் இது ஒரு முக்கியமான திரை முயற்சி என்பதில் சந்தேகமில்லை.
மிகவும் ரசித்து பார்த்தேன் இப்படத்தை.

"புனைவின் கொண்டாட்டம்" -
:-)))) உண்மைதான்

கோபிநாத் said...

\அப்பாலிக்கா ஒரு மேட்டர் இங்க நம்ம ஊரில் ரிலீஸ் ஆகியிருப்பது 45 நிமிடங்கள் கட் செஞ்ச படமாம், கட் செஞ்ச பகுதியில் ரீமா இன்னும் பல "சாகசம்" செய்கிறதாம்:))\\

;)

அண்ணே உண்மை தான்..ஆனா அங்க கட் பண்ணிய காட்சிகள் இங்க வருது...இங்க கட் பண்ணிய காட்சிகள் அங்க வருதாம். ;)))

ரெண்டு இடத்திலும் பார்த்த நம்ம ஆதவன் சொன்னான் ;))

கோபிநாத் said...

\\சன்குழுமங்களின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பரிதாபமான தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நிச்சயம் இஃதொரு மாற்றுப் படமே\\

இதுக்கு என்னோட ஓட்டு...;))

Anonymous said...

எனக்கும் படம் மிகவும் பிடித்திருந்தது... மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும்.. படம் வெளியான அடுத்த நாள் பார்த்ததால் ஒரே சத்தம்.. :))

Sai Ram said...

படத்தை விட படத்தினை நீங்கள் அணுகிய விதம் சுவாரஸ்யமாக இருந்தது.

Anonymous said...

//ஆயிரத்தில் ஒருவன் படமாக்கப் பட்டிருந்ததை விட பன்மடங்கு அதிகத் தரத்துடன் பிரம்மிப்புகளை திரையில் பெரும்பாலானோர் பார்த்திருக்கிறோம் என்றாலும் சன்குழுமங்களின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பரிதாபமான தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நிச்சயம் இஃதொரு மாற்றுப் படமே.//

TRUE

chandra said...

மிக சிறந்த பார்வை அய்யனார்.

உயிரோடை said...

மிக‌ அருமையான‌தொரு விம‌ர்ச‌ன‌ம் அய்ய‌னார். இந்த‌ ப‌ட‌த்தை ஏன் ப‌ல‌ரும் துவேசிக்கின்ற‌ன‌ர் என்று தான் தெரிய‌வில்லை. இந்த‌ வார‌ம் இர‌ண்டாம் முறை இப்ப‌ட‌த்தை காண‌ செல்ல‌லாம் என்ற‌ திட்ட‌ம் என‌க்கு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

சன்குழுமங்களின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பரிதாபமான தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நிச்சயம் இஃதொரு மாற்றுப் படமே.//

நச்

KARTHIK said...

// குவாண்டின் டராண்டினோவின் சமீபத்திய படமான இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் //

ஆமாம் இதை பாக்கும் போதும் அந்த கடைசிகாட்சி கொஞ்சம் கூட எதிர்பாக்காதது புனைவின் உச்சம் :-))

// ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும் மரணத்தை விளையாட்டாக்குவதும் இதுவரைக்குமான தமிழ் திரையின் முதல் காட்சியின்பக் காட்சிகள்.//

உங்க பார்வைல விமர்சனம் படிக்கும் சுகமே தனிதான்.

எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் போனதால் படம் என்ன ரொம்ப ஈர்த்ததா நெச்சேன்

ரீமா சான்ஸே இல்ல கலக்கிட்டாப்பள

வலை நண்பர்கள் தவிற எல்லாத்தரப்பையும் படம் கவர்ந்திருக்குங்க

வழக்கம் போல அட்டகாசமான விமர்சனம் அய்ஸ் :-))

குப்பன்.யாஹூ said...

your review is better than the film.
As Narsim said in lot of scenes the synchronisation, logics are total missing. Thats why I cant involve much after the interval.

Editing also lot to be improved.

இளங்கோவன் said...

நல்ல விமர்சனம்
எம்ஜியாரின் ஆயிரத்தில் ஒருவன் எனக்கு ரொம்ப பிடித்த படம்
அதோ அந்த பறவைபோல... பாட்டை யார்தான் ரசிக்காமலிருக்கமுடியும்?
அந்தப்படம் போல இது ஒரு பிரம்மாண்ட முயற்சி என்று நினைத்துப் பார்க்கப் போனால் செல்வராகவன் அசத்திவிட்டார்.
எந்தெந்தக் காட்சிகள் எதற்காக நம்க்குப் பிடித்திருக்கிறது? என்பதற்கான காரணங்களை உங்கள் விமர்சனம் படித்துப் புரிந்தது.
இன்னொருமுறை பார்க்கத்தோன்றுகிறது.
நன்றி

தமிழன்-கறுப்பி... said...

கார்த்தியை பாராட்டலாம்,
ரீமாசென்- செல்லமே படத்துலயே புடிச்சிருந்துது.

:)

//சன்குழுமங்களின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பரிதாபமான தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை//

:)

jayaram said...

ஒப்பிடுதல் படத்தின் தரத்தை குறைக்கும் வாய்ப்பு அதிகம்!!!
இந்த படத்தை பொறுத்த வரை "பிரம்ம பிரயத்தனம்" என்ற வார்த்தைக்கு பொருள் விளங்கியது !!!

jayaram said...

ஒப்பிடுதல் படத்தின் தரத்தை குறைக்கும் வாய்ப்பு அதிகம்!!!
இந்த படத்தை பொறுத்த வரை "பிரம்ம பிரயத்தனம்" என்ற வார்த்தைக்கு பொருள் விளங்கியது !!!

Featured Post

test

 test