Wednesday, December 29, 2010

திரும்புதலும் காணாமற் போதலும்



ஒரு திரைப்படத்தின் எல்லாக் காட்சிகளுமே லேசான மர்மத்தை உள்ளடக்கி இருப்பது பார்வையாளர்களை வெகுவாய் ஈர்க்கக் கூடிய சிறந்ததொரு திரைக்கதை உத்தியாகும். திகைப்பை படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை வைத்திருந்து இறுதிக் காட்சியில் திடாரென ஒரு அதிர்ச்சியைத் தந்து முடிந்து போகும் படங்கள் யாவும் இதுவரை புன்முறுவலைத்தான் வரவழைத்து விட்டுப் போயிருக்கின்றன. ஆனால் இதே உத்தியைக் கொண்ட இந்தப் படத்தை பார்த்து முடித்துவிட்டு என்னால் புன்னகைக்க முடியவில்லை. லேசான பயமும், அதிர்ச்சியும் வெகு நேரம் நீடித்திருந்தது. காட்சிகள் ஏற்படுத்தியிருந்த அழுத்தமான பிம்பச் சித்திரங்களிலிருந்து வெளியேற வெகுநேரம் பிடித்தது.

The return என்கிற இந்த இரஷ்யத் திரைப்படம் தந்தை – மகன் உறவை மிகுந்த இறுகிய முகத்தோடு பேசுகிறது. நான் பார்த்த பெரும்பாலான இரஷ்யப் படங்கள் துயரத்தைக் கொண்டாடுபவையாய் இருக்கின்றன. வாழ்வின் இருண்மையை, இயலாமையை, துக்கத்தை பெரும்பாலான இரஷ்யப் படங்கள் தூக்கிப் பிடிக்கின்றன. எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் ஒருவரான அந்திரேய் தர்க்கோயெவ்ஸ்கியின் கதா பாத்திரங்கள் அனைத்துமே மிகத் துக்கமானவைதாம். இவரின் மனிதர்கள் வாழ்வின் துக்கத்திலிருந்து விடுபட முடியாதவர்களாக, புதிர்களின் மாய வழியில் சிக்கிக் கொள்பவர்களாக, விநோதங்களும், திகைப்புகளும், துக்கங்களும், பெருக்கெடுக்கும் நிஜ /நிழல் பாத்திரங்களாக சித்தரிக்கப்படுகின்றனர். தர்க்கோயெவ்ஸ்கியின் உலகம் நீரும் தீயும் கலந்த காட்சிப் படிமங்கள்தான். இந்தப் படமும் கிட்டத் தட்ட தர்க்கோயெவ்ஸ்கியின் உலகத்தை ஒட்டிதான் எடுக்கப்பட்டுள்ளது. அவர் உண்டாக்கும் திரைஓவியப்புதிர்நீர்மப் படிமங்களின் சாயல் எதுவும் இல்லையெனினும் காட்சி ரீதியிலாக இந்தப் படமும் மிகவும் அழுத்தமானதுதான்.

படத்தின் துவக்கக் காட்சியில் ஒரு உயராமன டைவிங் மரத் திட்டு ஒன்று காண்பிக்கப்படுகிறது செங்குத்தான படிகள் கொண்ட அதன் உச்சியிலிருந்து சிறுவர்களும் பதின்மர்களும் நீரில் குதித்துக் களிக்கின்றனர். இருப்பதிலேயே சிறிய சிறுவன் அங்கிருந்து குதிக்க முடியாமல் பயப்படுகிறான். ஏற்கனவே குதித்தவர்கள் அவனை குதிக்கச் சொல்லி வற்புறுத்துகின்றனர். குதிக்காவிடில் நீயொரு கோழை என ஏசுகின்றனர். சிறுவன் அங்கேயே மடங்கி உட்கார்ந்து விடுகிறான். வெகு நேரம் கழித்து அவனைத் தேடிக் கொண்டு வரும் அவனின் தாய் அச்செங்குத்தான படிகளில் மேலேறி அவனை அணைத்துக் கொள்கிறாள்.எங்கே செத்துப் போய்விடுவேனோ என பயந்தேன் என அழுதபடியே அம்மாவைக் இறுக்கிக் கொள்கிறான். இந்த உயரத்தின் பயம்தான் நிகழப்போகும் அசம்பாவிதத்திற்கான ஒரு முடிச்சாய் இருக்கிறது. படத்தின் திருப்புமுனையை முதற்காட்சியிலேயே சூசகமாக சொல்லிவிடும் இந்த உத்தி அபாரமாய் கையாளப்பட்டிருக்கிறது.

அந்திரேயும் இவானும் சகோதரர்கள். அந்திரேய் பதின்மன். இவானுக்கு 12 வயது. இவர்களின் தந்தை 12 வருடத்திற்கு முன்பே பிரிந்து சென்றுவிடுகிறார். சிறியவன் இவான் தந்தையைப் பார்த்ததே இல்லை. ஒரு மங்கலான புகைப்படம்தான் இருவருக்கும் தந்தையாக இத்தனை வருடங்கள் இருந்து வந்திருக்கிறது. இருவரும் விளையாடிவிட்டு வீட்டிற்குத் திரும்பி வரும் ஒரு மாலையில் கட்டிலில் படுத்திருக்கும் ஒருவரைக் காட்டி உங்களின் தந்தை வந்துவிட்டார் என்கிறாள் தாய். இரவு உணவு தந்தையோடு அருந்தும்போது அவரிடம் எங்களை மீன் பிடிக்க அழைத்து செல்வீர்களா? என ஆர்வமுடன் கேட்கின்றனர். தந்தையும் ஒத்துக் கொள்கிறார். இருவரும் படுக்கையில் படுத்தபடி கிசுகிசுப்பாய் பேசிக் கொள்கின்றனர். அவரின் திடகாத்திரமான உருவம் இருவருக்கும் பிடித்திருக்கிறது. அவரின் கார், என்ன வேலை செய்வார் என்பது பற்றியெல்லாம் ஆர்வமாய் பேசிக் கொள்கின்றனர். அடுத்த நாள் காலையில் தந்தை இருவரையும் அழைத்துக் கொண்டு ஒரு தீவினை நோக்கிச் செல்கிறார்.

தந்தை மிக இறுக்கமான முகத்தைக் கொண்டிருக்கிறார். மிகப் பிடிவாதமானவராகவும் கோபக்காரராகவும் இருக்கிறார். சிறுவர்களுடன் இயல்பாய் அவரால் பழக முடியவில்லை. அவரின் வேலை என்ன? இத்தனை நாள் எங்கிருந்தார்? என்பது குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார். எனினும் அவரின் முரட்டுத்தனத்தோடு மெல்லிதாய் ஒரு அன்பும் இழையோடுகிறது. அந்திரேய் தந்தையுடன் எளிதில் ஒட்டிக் கொள்கிறான். இவான் இயல்பிலேயே வீம்பு பிடித்தவன் என்பதால் அவனுக்குப் புதிதாய் வந்த தந்தையோடு ஒத்துப் போகவில்லை. பயணத்தின் வழி நெடுக நிகழும் சம்பவங்கள் மனித மனதின் புதிர் விளையாட்டுக்களோடும், சிறுவனுக்கும் தந்தைக்குமான பனிப்போருடனும் கழிகிறது. வினோதமான பல பிரதேசங்களுக்கு தந்தை அவர்களை அழைத்துச் செல்கிறார். சூழல்களின் திகைப்பும் மூவருக்கிடையே எப்போதும் இருக்கும் இறுக்கமும் படத்தை சுவாரசியமாக்குகிறது. இறுதிக் காட்சியில் நிகழும் விபரீதம் படத்தின் மீது அவிழ்க்க முடியாத சில முடிச்சுகளை இன்னும் இறுக்குகின்றது.

இந்தப் படத்தை இயக்கி இருப்பவர் Andrei Zvyagintsev இது இவரின் முதல் படம். இன்னொரு ஆச்சரியமான தகவல் என்னவெனில் இவரின் தந்தை ஆறு வயதில் காணாமல் போய்விட்டிருக்கிறார். தன் வாழ்நாள் முழுவதுமாய் தொடர்ந்த சிக்கலை, இழப்பை அதே சிறுவனின் மனநிலையோடு இந்தப் படத்தில் பதிவு செய்திருக்கிறார். சில படைப்புகள் இயக்குனரின் வாழ்வோடு ஒன்றியிருக்குக்குமெனில் அவை பார்வையாளனுக்குத் தரும் நெருக்கம் உண்மைக்கு மிகச் சமீபமானது. இம்மாதிரியான படைப்புகள் எளிதில் கலைத்தன்மையை அடைந்து விடுகின்றன. வாழ்வும் கலையும் ஒன்றோடொன்று தொடர்புடையதுதானே?

Trailer

Tuesday, December 21, 2010

தகேஷி கிடானோவின் Outrage 2010

Outrage படத்தை திரைப்பட விழா பட்டியலில் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சமீபமாய் கிடானோவின் படங்களைத் தொடர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருக்கிறேன். கிக்கிஜீரோவை சென்ற வருடமே பார்த்திருந்தும் ஏனோ இவரைப் பின் தொடரத் தோன்றவில்லை. மிஷ்கினின் அலாதியான சிலாகிப்புகள்தாம் கிடானோவை மறுபடியும் தேடிப் பிடிக்க வைத்தது. இதுவரைக்கும் பார்த்த கிடானோவின் படங்களில் இருக்கும் பொதுவான ஒரு அம்சமாக எள்ளல் தன்மையைச் சொல்லலாம். கிண்டலும் கேலியும் இவரது எல்லா படங்களிலும் மெல்லிதாய் இழையோடுகிறது. சின்னப் புன்முறுவல் இல்லாமல் கிடானோவின் படங்களை நம்மால் பார்க்கவே முடியாது. வெகு சாதாரண ஆட்களாகத்தான் இவரது கதாநாயக பிம்பங்கள் சித்தரிக்கப்படுகின்றன. ஆனால் அவர்கள் திடீரென வல்லமை கொண்டவர்களாகவும் சடுதியில் கோழைகளாகவும் மாறிவிடுகிறார்கள். இவரது பெரும்பாலான கதாபாத்திரங்கள் தொடர்ச்சியாய் தோல்வியைச் சந்திப்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அதை வெகு எளிதில் கடந்து போகிறார்கள். Kids Return படத்தில் வரும் இரண்டு நண்பர்கள் காலத்தின் சுழற்சியில் முன்னும் பின்னுமாய் பயணித்து மீண்டும் துவங்கிய இடத்திற்கே வந்து சேர்வார்கள். “நம்முடைய வாழ்க்கை அவ்வளவுதானா? முடிந்து போயிற்றா?” என ஒருவன் கேட்கிறான். இன்னொருவன் புன்னகைத்துக் கொண்டே சொல்கிறான். “நாம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை” படம் முடிந்துபோகிறது. ஒரு காட்சியை எங்கு துவங்க வேண்டும். எங்கு முடிக்க வேண்டும் என்பதற்கு கிடானோவின் படங்கள் சம காலத்தின் மிகச் சிறந்த உதாரணங்களாக இருக்கின்றன. தேவையில்லாத ஒரு அசைவையோ படத்திற்கு சம்பந்தமில்லாத ஒரு சொல்லையோ கூட இவரது படங்களில் நம்மால் காண இயலாது. கச்சிதமும் நுட்பமும் பின்னிப் பிணைந்தவைதாம் கிடானோவின் திரைப்படங்கள்.

Outrage படத்தில் இரண்டு நொடிக்கும் குறைவான காட்சி ஒன்று வரும். இமையை லேசாக வேறு பக்கம் அசைத்திருந்தாலும் நாம் அந்தக் காட்சியை தவற விட்டுவிடக் கூடும். உயிர்பயம் காரணமாக இரயிலில் தப்பிச் செல்லும் ஒருவனை எதிராளி ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் காட்சி அது. இரயில் வேகமாகக் கடக்கும் போது ஒரு சிவப்புப் புள்ளி கண்ணிமைத்து மறையும். இந்தக் காட்சிக்கு தியேட்டரில் பலத்த ஹா க்கள் எழுந்தன. கிடானோவிற்கு உலகம் முழுக்க ஏராளமான இரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை திரைப்பட விழாவில் காண முடிந்தது. வழக்கமாய் திரைக்கு வெகு சமீபமான முன் இரண்டு வரிசை இருக்கைகள் காலியாகத்தான் இருக்கும். ஆனால் வியாழக் கிழமை மதியம் 1 மணிக் காட்சிக்கு அரங்கம் நிறைந்திருந்தது. பத்து நிமிடம் முன்னதாகச் சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டதால் வலது பக்கம் அரேபிய பெண்ணும் இடது பக்கம் பிரான்சு தேசத்துப் பெண்னும் அமர ஆசிர்வதிக்கப்பட்டேன். படத்தின் இரசனையான பல வன்முறைக் காட்சிகளில் இடது பக்கம் அமர்ந்திருந்த அரேபியப் பெண் விநோதமான உஸ் உஸ் களை எழுப்பிக் கொண்டிருந்தார். கிடானோ ஒருவனின் முகத்தில் கத்தியால் ஆழமாய் பெருக்கல் குறி போடும் காட்சியில் ஆரம்பித்து அவ்வப்போது வரும் விரல்களை வெட்டும் காட்சிகள் வரை இவர் எழுப்பிய சப்தம் அலாதியான இன்பத்தைத் தருவதாக இருந்தது. குழந்தைகள் ஜெய்ண்ட் வீலின் பரவசத்தில் கத்தும்போது தரையில் இருந்து பார்க்கும் பெரியவர்களின் புன்முறுவலைப் போல அடிக்கடி நான் புன்னகைத்துக் கொண்டேன். வலது பக்கம் அமர்ந்திருந்த ப்ரெஞ்சுப் பெண் கிடானோவின் ஒவ்வொரு அசைவிற்கும் வெடித்துச் சிரித்துக் கொண்டிருந்தார். கிக்கிஜீரோ படத்தை விட இதில் அபாரமானதொரு தாதா கதாபாத்திரத்தை ஊதித் தள்ளியிருக்கிறார் கிடானோ. எழுத்தாளர், ஓவியர், திரைக்கதையாளர், எடிட்டர், இயக்குனர், நடிகர் என எல்லா வடிவங்களிலும் கிடானோ மிளிர்கிறார். சமகால சினிமாவின் ஜீனியஸ் என தாராளமாய் இவரைச் சொல்லலாம்.

எல்லா இயக்குனர்களுக்கும் கேங்ஸ்டர் உலகத்தின் மீது பெரும் விருப்பம் இருக்கிறது. நிழல் உலகத்தின் வாழ்வு அதிக சவால்கள் நிறைந்திருக்குமென்பதால் கலைஞர்களுக்கு இயல்பாகவே அந்த உலகத்தின் மீது ஒரு பிடித்தம் இருக்கலாம். உலக அளவில் அதிகம் சிலாகிக்கப்பட்ட கேங்ஸ்டர் படமாக காட் ஃபாதரைச் சொல்கிறார்கள். மார்லன் ப்ராண்டோவின் நுணுக்கமான நடிப்பில் மூன்று பாகங்களாய் வெளிவந்த இந்தப் படம் உலகம் முழுக்க இரசிக்கப்பட்டது. என் தனிப்பட்ட இரசனை அடிப்படையில் மார்டின் ஸ்கார்சஸின் good fellas படத்தையே கேங் ஸ்டர் உலகத்தின் மிக முக்கியமான பதிவு எனச் சொல்வேன். உலகம் முழுக்க ஏராளமான கேங்ஸ்டர் படங்கள் வந்திருந்தாலும் அவர்கள் உலகத்தின் நுட்பங்களையும், கொண்டாட்டங்களையும், அபத்தங்களையும், நேர்த்தியாகப் பதிவித்தவர்களாக டராண்டின் குவாண்டினோவும் மார்டின் ஸ்கார்சஸும் சொல்லலாம். இந்த வரிசையில் இப்போது கிடானோ. ஜப்பானிய நிழல் உலகத்தின் சுவாரசியத்தை பார்வையாளர்களுக்குத் தன்னுடைய அபாரமான இயக்கத்தாலும், அசாதாரண நடிப்பினாலும் திகட்டத் திகட்டத் தந்திருக்கிறார் கிடானோ.

கதை வழக்கமானதுதான். சர்வ வல்லமை பொருந்திய நிழல் தாதா. நகரம் முழுக்க ஏராளமான நிழல் தொழில்கள், கார்ப்பரேட் நிறுவனம் தோற்றுப் போகும் அளவிற்கு கட்டுக்கோப்பான அமைப்பு, இப்படி எவராலும் அசைக்க முடியாத ஒரு அமைப்பை நிர்வகித்து வருகிறார். அவர் ஆளுமைக்குக் கீழ் இருக்கும் ஒரு குட்டி தாதாவின் ஆட்களுக்கும், அவருடைய ஆட்களுக்கும் சிறிய தகராறு ஒன்று வருகிறது. இந்தத் தகராறு சின்ன சின்னதாய் ஏகப்பட்ட குழப்பங்களை விளைவிக்கிறது. இரண்டு தரப்பிலும் ஆட்கள் கொல்லப்படுகிறார்கள். குட்டி தாதாவிற்கு கீழ் கிடானோ. கிடானோவிற்கு நம்பிக்கையாய் சிலர். இவர்களுக்குள் நடைபெறும் நிழல் உலக அரசியல் விளையாட்டும், பழிவாங்கலும், வியாபார போட்டிகளும்தான் படத்தின் பிரதான அம்சம். அதிகாரம், பதவி வெறி, வன்மம், இந்தப் பின்புலத்தில் நடக்கும் பாம்பு ஏணி விளையாட்டுதான் இந்த மொத்த திரைப்படமும்.

படத்தில் ஏராளமான வன்முறைக் காட்சிகள் வருகின்றன என்றாலும் அவைகளை குரூர நகைச்சுவை வடிவத்தில்தான் படமாக்கி இருக்கிறார். நிர்வாகத்திற்கு பிடிக்காத விஷயங்களை செய்துவிட்டால் ஒரு விரலை வெட்டிக் கொண்டு போய் தலைவருக்கு சமர்ப்பிப்பது நிழல் உலகத்தின் சம்பிரதாயங்களில் ஒன்று. படத்தில் ஏராளமான விரல்கள் பார்வையாளர்களின் பலத்த சிரிப்புப் பின்னணியில் வெட்டப்படுகின்றன. ஒரே ஒரு கொலை மட்டும் படு குரூரமாக இருந்தது. அதே நேரத்தில் அந்தக் கொலைக்குப் பின்னாலிருக்கும் கற்பனைத் திறன் குறித்தும் சிலாகிக்காது இருக்க முடியவில்லை. கிடோனோவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவனை காரில் கடத்திக் கொண்டு போய், முகத்தை கருப்புத் துணியினால் மூடி, பலமான சுருக்குக் கயிறை கழுத்தில் மாட்டி விடுகிறார்கள். ஏற்கனவே பின்புறமாய் கைகளை மடக்கிக் கட்டியாயிற்று. மிக நீளமான கயிறின் அடுத்த முனையை சாலையோரத்தில் இருக்கும் ஒரு பலமான இரும்புத் தூணில் கட்டிவிடுகிறார்கள். கார் கதவைத் திறந்து வைத்துவிட்டு சீறலாய் காரைக் கிளப்புகிறார்கள். இரும்புத்தூணில் கட்டப்பட்ட கயிறின் அடுத்த முனையில் பிணைக்கப்பட்டிருக்கும் இவனது கழுத்துடல் மிகக் கோணலாய் விசிறியடிக்கப்பட்டு, சடுதியில் உயிர் போய் துவண்டு கிடக்கிறது.கிட்டத் தட்ட என்னை உறைய வைத்த காட்சி இது. இம்மாதிரியான காட்சிகளும், நொடியில் மின்னிப் போகும் அபாரமான திரைக் கோணங்களும் கிடானோவின் படங்களில் மட்டுமே காணமுடிபவை.

இந்த படத்தை திரையில் காண்பது நல்லதொரு அனுபவமாக இருக்கக் கூடும். ஒரு மிட் ஷாட்டில் பல விஷயங்கள் நடக்கின்றன. கிடானோவின் படங்களை ஒரு முறை மட்டும் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதுவது முட்டாள்தனமான செயலாகத்தான் இருக்கக் கூடும். கிடானோவின் படங்கள் மிஷ்கினை உருவாக்கியதில் வியப்பேதுமில்லை.

Thursday, December 16, 2010

கரிசனமும் யதார்த்த இம்சையும் - துபாய் திரைப்பட விழா


ஏழாவது சர்வதேசத் திரைப்பட விழா துபாயில்கடந்த பனிரெண்டாம் தேதி துவங்கி வரும் பத்தொன்பதாம் தேதி வரை நடைபெறுகிறது. 57 நாடுகளிலிருந்து 153 படங்கள் திரையிடப்படுகின்றன. 127 hours, the kings speech போன்ற புதிய படங்கள் நேரடியாய் திரையிடப்படுகின்றன. இந்தியப் படங்களாக நம் ஊரிலிருந்து மைனா திரையிடப்படுகிறது. மலையாளத்தில் நயன் தாரா நடிப்பில், ஒரே கடல் இயக்குனர் ஷ்யாம் பிரசாத் இயக்கத்தில் எலெக்ட்ரா, இந்தியில் அபர்ணா சென்னின் இயக்கத்தில் An Unfinished Letter போன்றவை திரையிடப்படுகின்றன.

திரைப்பட விழாக்களில் நான் பெரும்பாலும் ஆங்கிலப் படங்களையும் எளிதில் பார்க்க முடிகிற படங்களையும் தவிர்த்து விடுவேன். புதிய பிரதேசங்களின் வாழ்வையும் கலாச்சாரத்தையும் புரிந்து கொள்ள உதவும் படங்களை பார்ப்பதற்கே விருப்பமாக இருக்கும். அரேபிய குறும்படங்கள், அரேபிய – பிரான்சு, அரேபிய - ஆப்பிரிக்க கலாச்சார தழுவல்களில் உருவாக்கப்படும் படங்களின் மூலம் மிகவும் புதிய நிலப் பிரதேசங்களின் வாழ்வைத் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் நேற்று மாலை MIN YE ( Tell me Who you are) என்கிற ஆப்பிரிக்கத் திரைப்படம் ஒன்றைப் பார்த்தேன். ஆப்பிரிக்காவின் மாலி பிரதேசத்திலிருந்து வந்திருக்கும் படமிது. இப்படத்தின் இயக்குனர் Souleymane Cisse ஏற்கனவே சர்வதேச அளவில் கவனம் பெற்றவர். கான் திரைப்பட விழாவில் சிறந்த வெளி நாட்டுப் படங்களுக்கான பிரிவில் இவரது முந்தைய இரண்டு படங்கள் தேர்வாகி இருக்கின்றன. MIN YE ( Who you are) எனும் இந்தப் படம் ஆப்பிரிக்க இஸ்லாம் சூழலில் இயங்கும் மத்தியதர வர்க்க குடும்பங்களின் கதையைப் பேசுகிறது. மதம், கலாச்சாரம் இவைகள் பெண்களுக்கு தரும் மன ரீதியிலான அழுத்தங்களையும் அதிலிருந்து மீள விரும்பும் பெண்களின் விருப்பத்தையும் இப்படம் களமாகக் கொண்டிருக்கிறது, அவ்விருப்பங்களின் தோல்வி எவ்வாறு பொய்களாகவும் துரோகங்களாகவும் வடிவம் கொள்கின்றன என்பதையும் இந்தப் படம் பதிவு செய்திருக்கிறது.
இந்தப் பகுதிகளில் ஆண்கள் வசதிக் கேற்ப நிறைய பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறார்கள். சட்டமும் மதமும் அதற்குப் பூரணமாய் சுதந்திரம் அளிக்கிறது. கணவனை வேறொரு பெண்ணிடம் பகிர்ந்து கொள்ள விரும்பாத பெண்களின் அகப் போராட்டங்களையும் இப்படம் பதிவு செய்திருக்கிறது. உயர் கல்வி பயின்று நல்ல பதவியில் இருக்கும் பெண்களும் இந்த இரண்டாம் /மூன்றாம் தார சிக்கலிலிருந்து தப்ப முடியாது. மருத்துவம் பயின்று நல்லதொரு பணியில் இருக்கும் மிமி என்கிற கதாபாத்திரத்தின் மூலமாய் பெண்களின் ஆசைகள், இயலாமைகள், துரோகங்கள் என எல்லா நிலைகளும் மிக யதார்த்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சமூகத்தின் கட்டுப்பாடுகள் இவைகளுக்கான பின்புலமாய் இருக்கின்றன என்பதுதாம் மறைபொருளாக படத்தில் பேசப்படுகிறது.

படத்தில் மனதைத் தொடும் எந்த ஒரு விஷயமும் கிடையாது. அடூர் கோபால கிருஷ்ணன்களை விட படு மோசமான திரையாக்கம். படம் முழுக்க தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடர் பாணியில்தான் இயக்கப்பட்டிருந்தது. சினிமா மொழி, திரைக்கதை யுக்தி, பார்வையாளனை கட்டிப் போடுதல் போன்ற எந்த மெனக்கெடலும் திரைப்படத்தில் இல்லை. மேலதிகமாய் படத்தில் எந்த விதமான அரசியல் தன்மையும் இல்லை. ஆனாலும் இந்தப் படம் நேரடியாய் மக்களின் வாழ்வைப் பேசுகிறது. ஒரு சாதாரண குடும்பக் கதை. அதை யதார்த்தமாகவும் சிக்கனமாகவும் படமாக்கி இருக்கிறார்கள். நடிகர்களின் முழு நடிப்புத் திறமைதான் படத்தின் சிலாகிக்கும் அம்சமாக இருக்கிறது. மிகவும் பின் தங்கிய பிரதேசங்களில் இருந்து திரைப்படங்கள் இப்படித்தான் படமாக்கப்படுகின்றன. அவர்கள் எந்த ஜோடனைகளையும் நம்புவதில்லை. மாறாய் தங்களின் கலாச்சார சிக்கல்களை, வாழ்வின் இயலாமைகளை, கொண்டாட்டங்களை ஓரளவு நேர்மையுடன் பதிவு செய்து விட முனைகிறார்கள்.

இந்திய சூழலில் பத்து, இருபது வருடங்களுக்கு முன்னால் கலைப்படங்கள் இப்படித்தான் வந்தன. கேமராவை கொண்டு போய் ஒரு இடத்தில் வைத்துவிட்டு இயக்குனரும் கேமிராமேனும் டீ குடிக்கப் போய்விட்டார்களா? என அஞ்சும் காட்சியமைப்புகள்தாம் இந்திய சினிமாக்களில் நிறைந்திருக்கின்றன. இம்மாதிரியான அயர வைக்கும் காட்சிகளுக்குப் பெயர் போனவர் அடூர் கோபாலகிருஷ்ணன். சமீபமாய் அவரது நிழல் குத்து படம் பார்த்து, அயர்ந்தேன். கதை மிகவும் முக்கியமானதுதான். எவரும் தொடத் தயங்கும் தளம்தான். இருப்பினும் அதை யதார்த்தமாய் பதிவு செய்வதாய் சொல்லி அயர வைப்பதுதான் யதார்த்த சினிமாக்களின் தோல்வியாக இருக்கிறது. உதாரணத்திற்கு நிழல் குத்து படத்திலிருந்து ஒரு காட்சியைப் பார்ப்போம். தூரத்திலிருந்து புள்ளியாய் ஒரு மாட்டு வண்டி தெரியும். மெல்ல அவ்வண்டி கேமரா வைக்கப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி வரும் வரும் வரும் வரும்.. கேமிரா அசையாது ஒரே கோணத்தில் இருக்கும். பொழுதும் போகும்.. போகும்... அதிலிருந்து மூவர் இறங்குவர். இருள் மெல்லக் கவிய ஆரம்பிக்கும். ராந்தல் விளக்கைப் பொருத்துவர். பின்பு மெல்ல இருளுக்காய் நடக்க ஆரம்பிப்பர். கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் கேமிரா ஒரே இடத்தில் அசையாது இருக்கும். சில நேரங்களில் கொட்டாவியோடு கொலை வெறியும் சேர்ந்து கொள்ளும் அளவிற்கு இந்த யதார்த்தத்தை நம்மவர்கள் சாறு பிழிந்திருக்கிறார்கள். தூய சினிமா என்பது இதுவல்ல. சினிமாத் தொழில் நுட்பம் வளர்ந்திராத கருப்பு வெள்ளை காலகட்டங்களிலேயே பிரெஞ்சு புதிய அலை சினிமாக்கள் காட்சி மொழியின் உச்சத்தைத் தொட்டிருக்கின்றன. சொல்லப்போனால் ஃபெலினி இயக்கிய 8 ½ திரைப்படத்தைப் போலவெல்லாம் இன்னொரு திரைப்படத்தை உருவாக்கிவிட முடியுமா? என்பது சந்தேகம்தான்.

திரையிடலுக்குப் பின்பு இயக்குனருடன் அரங்கத்திலேயே குழுவாக உரையாட முடிந்தது. திரைப்பட விழாக்களில் இருக்கும் சிறப்பு அம்சமாக இந்த ஒரு நிகழ்வைச் சொல்லலாம். படத்தின் இயக்குனர் அல்லது நடிகர்களுடன் படம் பார்த்து முடித்த பின்பு அத்திரைப்படம் எழுப்பும் கேள்விகளை பகிர்ந்து கொள்வது நல்லதொரு அனுபவமாக இருக்கும். சில நேரங்களில் இந்த உரையாடல்கள் படத்தையே வேறு மாதிரி புரிந்து கொள்ள உதவும். இன்னொரு வகையில் இந்த உரையாடல்கள் நம்முடைய சொந்த அனுபவத்தை பாதித்து விடவும் கூடும். சமீபத்தில் அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்னால் அபுதாபியில் நடந்த திரைப்பட விழாவில் சில படங்களைப் பார்த்தேன்.


ப்ரேசிலிலிருந்து I travel because I have to, I come back because I love you என்றொரு படம் பார்த்தேன். படம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. படத்தின் பிரதான கதாபாத்திரம் கேமராதான். படம் முழுக்க ஒருவனின் கண்கள் மூலம் பதிவு செய்யப்பட்டிருக்கும். வெறுமனே குரல் ஒன்று, விடாமல் பேசிக் கொண்டிருக்கும். மனைவியை விட்டுப் பிரிந்து ப்ரேசிலின் வறண்ட பிரதேங்களில் மண் ஆய்வு செல்லும் ஒருவன் ஒவ்வொரு நாளையும் எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் கதை. மிகக் கவித்துவமான உரையாடல்கள், கவிதைகள், காட்சி மொழிகள் என படம் மிக நல்லதொரு அனுபவமாக இருந்ததது. கிட்டத்தட்ட ஒரு நல்ல நாவலை வாசித்து முடித்த திருப்தியை படத்தின் பின்னணியில் ஒலிக்கும் குரல் தந்திருந்தது. படம் முடிந்த பின்பு இயக்குனர் இப்படத்தைப் பற்றித் தந்த தகவல்கள் கிட்டத்தட்ட படத்தையே வெறுக்க வைத்து விட்டது. முதலில் இது ஒரு திரைப்படமே அல்ல. பத்து வருடங்களுக்கு முன்னால் இயக்குனர் ப்ரேசிலின் வறண்ட பகுதிகளை ஒரு டாக்குமெண்டரியாக எடுக்க வேண்டுமென விரும்பியிருக்கிறார். அப்பிரதேசங்களுக்கு பயணித்து மனிதர்கள் குடிபெயர்ந்து போன வெற்றிடப் பகுதிகளை கேமிராவில் பதிவு செய்திருக்கிறார். இடையில் அந்த டாக்குமெண்டரி முயற்சி கைவிடப்பட்டிருக்கிறது. சமீபமாய் எங்கிருந்தோ இதை மீண்டும் தோண்டியெடுத்து காட்சிகளுக்கு பின்னணியாய் கதை ஒன்றை எழுதி கதைக்குச் சம்பந்தமாய் ஓரிரு காட்சிகளை மட்டும் எடுத்திருக்கிறார்கள். எடிட்டிங்கை கவனமாய் செய்து முடித்ததும் இதோ ஒரு திரைப்படம் தயாராகிவிட்டிருக்கிறது. இது ஒரு well made movie அவ்வளவுதான் என அவர் சிரித்துக் கொண்டே சொன்னபோது எனக்கு அதுவரைக்கும் இருந்த உற்சாக மனநிலை காணாமல் போனது.

ஆனால் இந்த Tell me Who you are படம் பார்த்து விட்டு உரையாடியது மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஆப்பிரிக்காவின் மாலி போன்ற பிரதேசங்களில் பெண்களின் வாழ்வு எப்படி இருக்கிறது? என்ற கேள்விக்கு இயக்குனர் தந்த பதில் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பெண்கள் அதிகம் படித்திருந்தாலோ நல்ல வேலையில் இருந்தாலோ அவர்களுக்கு திருமணம் நடப்பது மிகவும் கடினமானது. ஏதாவது ஒரு ஆணுக்கு மூன்றாம் தாராமாகவோ நான்காம் தாரமாகவோகத்தான் வாழ்க்கைப்பட வேண்டி இருக்கும். இந்த நிலை மாறுவதற்கு எந்த ஒரு முயற்சிகளும் மேற்கொள்ளப்படவுமில்லை என்ற தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். ஒரு ஆப்பிரிக்கர் மிகவும் கோபமாக ஒரு கேள்வியை முன் வைத்தார். மிமி கதாபாத்திரம் சோரம் போவதாய் காண்பிப்பதன் மூலம் வெளியில் போய் படித்து விட்டு வரும் பெண்கள், வேலைக்குப் போகும் பெண்கள் போன்றோர் கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள் என்பதாய் ஆகாதா? என்றார். இதற்கும் மிக நிதானமாகவே, எந்த சமூகத்தில்தான் சோரம் போவது நடக்கவில்லை? என்றொரு எதிர்கேள்வியும் இயக்குனர் வைத்தார். கலாச்சார நெருக்கடிகள் நிறைந்த சூழலில் பொய்களும் மீறலும் இருக்கும்தான் என்றார்.

இந்த விமர்சனங்கள் எல்லாவற்றையும் தாண்டி பின் தங்கிய பிரதேசங்களின் சினிமாவிற்கான கரிசனத்தையும் நாம் தந்தாக வேண்டும். ஏராளமான பணமும், தொழில் நுட்பமும், திறமையும் நிறைந்து கிடக்கும் தழிழ் சூழலில் பெரும்பாலும் வணிகக் கொடுங் குறிகள்தாம் விறைத்துக் கிடக்கின்றன. இவற்றோடு ஒப்பிடுகையில் சினிமா என்றால் என்னவென்றே தெரியாத ஒரு பிரதேசத்திலிருந்து நேர்மையான படங்கள் வருவதை சினிமா மொழி அறிந்த தமிழ் மனமாக விருந்தாலும் கொண்டாடத்தான் வேண்டும் என்றபடியே அரங்கை விட்டு வெளியே வந்தேன். கிடானோவின் outrage, அலெஜாண்ட்ரோவின் Buitiful, துருக்கிப் படமான Poetry போன்றவைகளைப் பார்க்க திட்டமிட்டிருக்கிறேன். பார்த்து விட்டுப் பகிர்கிறேன்.

Wednesday, December 8, 2010

நந்தலாலா- தனித்துவத்தின் பாடல்



தமிழ் சினிமாவின் சிறந்த படங்கள் என அறியப்பட்ட பெரும்பாலான படங்களுக்குச் சில பொதுத் தன்மைகள் இருக்கும். அழுத்தமான காட்சிகளின் மூலம் பார்வையாளர்களை கதறி அழ வைப்பது, எதிர்பார்த்திராத மிகப்பெரிய அதிர்ச்சியை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாத்திரங்கள் மூலமாய் ஏற்படுத்தி பார்வையாளர்களை ஒரு விதத் துயர மன நிலைக்குத் தள்ளுவது போன்றவைகள் சில உதாரணங்கள். சமீபத்தில் வெளிவந்து தமிழின் சிறந்த படங்களாக அறியப்பட்ட காதல்,பருத்தி வீரன், சுப்பிரமணியபுரம், அங்காடித் தெரு போன்ற படங்களும் இந்த பொது விதிகளுக்கு உட்பட்டுத்தான் தங்களின் இடங்களை அடையாளப்படுத்திக் கொண்டன. அத்துடன் இயக்குநரின் ஒட்டு மொத்த திறமையையும் வசனங்களின் மூலமோ, காட்சிகளின் மூலமோ, மொத்தமாய் கொட்டி படத்தின் சிறந்த கலைத் தன்மையை நிறுவிக் கொள்வதுதாம் வழக்கமானதாக இருந்து வந்திருக்கின்றது. இந்தப் பொதுத் தன்மை இந்திய அளவில் கூட பொருந்திப் போகலாம்.

சத்யஜித்ரேவிலிருந்து சமீபத்திய வசந்தபாலன் வரைக்குமாய் இந்திய சினிமாக்களில் சிறந்த படங்கள் என அறியப்பட்டவைகளில் பெரும்பாலானவை அழுகாச்சி படங்கள்தாம். மூளையிலிருக்கும் எல்லாவற்றையும் திரையில் பகிரங்கப்படுத்தி, ஒரு வித திணிக்கப்பட்ட கதை சொல்லல்கள்தாம் பெரும்பாலும் நம் திரையை நிறைத்து வந்திருக்கின்றன. இந்தப் பொதுத் தன்மையை நந்தலாலா உடைத்திருக்கிறது. அழுத்தத்தைக் கொண்டு வருகிறேன் பார் என்றெல்லாம் முக்கி முக்கி மெனக்கெடாமல் போகிற போக்கில் விசிறலாய் இந்தப் படம் ஏகப்பட்டக் கிளர்வுகளை,அழுத்தங்களை,நெகிழ்வுகளை,கரைவுகளை பார்வையாளரிடத்தில் கடத்திச் செல்கிறது. எல்லாவற்றையும் சொல்லி விடுவதன் அபத்தங்களிலிருந்துத் தப்பித்து நந்தலாலா மெளனத்தை இசைக்கிறது. சொல்லாமல் விடுவதன் இன்பத்தை நந்தலாலாவின் ஒவ்வொரு காட்சியிலும் உணர முடிகிறது. படம் பார்த்து முடித்த பின்பு அந்த மெளனம் நம்மையும் ஆக்ரமிக்கிறது.


மிஷ்கினின் திரைமொழி தமிழிற்கு மிகவும் புதிது. இதுவரைக்குமில்லாத புதியதொரு திரை பாணியை மிஷ்கின் தக்க வைத்திருக்கிறார். இவரின் திரை நாயகர்கள் பதட்டமானவர்கள். முரட்டுத்தனமும் கனிவும் நிரம்பியவர்கள். மிஷ்கினின் படங்களில் முகங்களை விட கால்கள் பிரதானமானவை. செவ்வியல் நாடகத் தன்மையும், போலி பாவனைகளிலிருந்து தப்பித்து நேரடியாய் இதயத்தோடு பேசும் வசன உத்தியும் மிஷ்கினின் தனித் தன்மைகள். இவரின் மூன்று படங்களும் மெல்லியதொரு பதட்டத்தை, அலைவை ஒவ்வொரு காட்சியிலும் தக்க வைத்திருக்கின்றன. ஒரு வித சிலிர்ப்பு மன நிலையை மிஷ்கினின் சித்திரம் பேசுதடியும் அஞ்சாதேவும் எனக்குப் பரிசாகத் தந்தன. நந்தலாலா இந்தப் பதட்டங்களிலிருந்து மீண்டு நிறைவை அடைந்திருக்கிறது. தனித் தன்மைகள் நிறைந்த ஒரு படத்தை உருவாக்குதென்பது மிகவும் கடினமானது. தனக்கான ஒரு பாணியை, திரை மொழியை தக்க வைத்துக் கொண்டவர்கள் நம் சூழலில் வெகு சிலரே. அந்த வெகு சிலரின் பட்டியலில் மிஷ்கினும் இணைகிறார்.

அகிரா குரசோவாவின் பெரும்பாலான படங்களில் அற உணர்வும், மனித நேயமும், அன்பும், கருணையும் மேலோங்கி இருக்கும். ஆனால் எதையும் வெளிப்படையாக காட்சிப்படுத்தியிருக்க மாட்டார். துருத்திக் கொண்டிருக்கும் எந்த ஒரு பிரச்சார வசனங்களும், அழுத்தக் காட்சிகளும் இவரது படங்களில் கிடையாது. இவரது கதாபாத்திரங்கள் அன்பையும் அறத்தையும் இயல்பான ஒரு விஷயமாகக் கொண்டிருக்கும். எனக்குப் பிடித்த அகிராவின் கதாபாத்திரங்கள் சிலவற்றை யோசிக்கும்போது உடனடியாய் நினைவுக்கு வருபவையாக Madadayo படத்தின் விரிவுரையாளர், Dersu Uzala படத்தில் வரும் நாடோடி வேட்டைக்காரன், The Lower Depths படத்தில் வரும் துறவி கதாபாத்திரங்களைச் சொல்லலாம். நேய உணர்வை படம் முழுக்க பயணிக்கும் ஒரு துணைக் கதாபாத்திரமாகவே அகிரா மாற்றிவிடுவார். Red Beard டாக்டர் பாத்திரத்திலிருந்து இடியட் மிஷ்கின் பாத்திரம் வரைக்குமாய் அறம்தான் அகிராவின் முக்கியமான பேசுபொருளாக அவரின் படங்கள் முழுக்கப் பயணித்து வந்திருக்கிறது

அகிராவிற்கு அடுத்தபடியாய் மிஷ்கினின் படங்கள் இதே தளத்தில் இயங்குகின்றன. நாடகத் தன்மையும் உணர்வெழுச்சியும் மிகுந்த கதாபாத்திரங்கள், திடீரென அதற்கு நேர்மாறாய் அமைதித் தன்மைக்கு திரும்பும் வினை மாற்றங்கள் எல்லாம் அகிராவின் படங்களில் மட்டுமே நிகழ்ந்து வந்த அற்புதம். பூனை வளர்க்கும் Madadayo படத்தின் பேராசிரியர் கதாபாத்திரத்தை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். வாழ்வின் மேலான நிலை, கீழான நிலை என எல்லாவற்றையும் புன்னகையோடும் அன்போடும் கடக்கும் பேராசிரியர் தான் வளர்த்த பூனை காணாமல் போனபின்பு அடம்பிடிக்கும் சிறுவன் மன நிலைக்குத் தாவிவிடுவார். இம்மாதிரியான வினோத அகிரா கதாபாத்திரங்களின் ஒட்டு மொத்த சாரமாகவே பாஸ்கர் மணி கதாபாத்திரம் சித்தரிக்கப் பட்டிருக்கிறது. இந்தக் கதாபாத்திரத்தின் வலிமையை உணர்வுபூர்வமாக வேறு எவராலும் புரிந்து கொள்ள முடியாது (அகிராவின் தீவிர இரசிகர்களைத் தவிர) என்கிற சிக்கல் இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும்போது மிஷ்கினுக்கு தோன்றியிருக்கலாம். அதன் நிமித்தமாகவே இந்தக் கதாபாத்திரத்தில் மிஷ்கினே நடித்திருக்கலாம். ஒரு வகையில் இந்த முடிவு பாராட்டப்பட வேண்டியது. வேறு எந்தத் தொழில் முறை நடிகராலும் பாஸ்கர் மணி கதாபாத்திரத்தை சிறப்பாய் செய்திருக்க முடியாது.

நந்தலாலாவின் அடிநாதம் வெகு எளிமையான ஆனால் ஒட்டுமொத்த கிழக்குச் சித்தாந்தத்தின் சாரமாய் இருக்க கூடிய நிலைப்பாடுதாம். அது அன்பை வெளியே தேட வேண்டியதில்லை என்பதுதாம். இதுநாள் வரைக்குமாய் அன்பை நாம் எப்படிப் புரிந்து வந்திருக்கிறோம்? உறவுகளின் வழியே நாம் பெறுவதுதாம் அன்பா? பிற மனிதர்களிடமிருந்து பெறுவது மட்டும்தான் அன்பா? நமக்கே நமக்காய் இருப்பது மட்டும்தான் அன்பா? என்பன போன்ற அடிப்படைக் கேள்விகளை வெவ்வேறு நிகழ்வுகளின் மூலமாய் இத்திரைப்படம் தொடர்ச்சியாய் எழுப்புகிறது. இறுதியில் வேறு எவரிடமிருந்தும் பெற்றுவிடமுடியாத, இதற்காகத்தான் இது என்கிற கொடுக்கல் வாங்கல் பிணைப்பில்லாத, தன்னுள் மட்டுமே முழுமையாய் நிறைந்திருக்கும் பேரமைதிதான் அன்பு என்பதை எல்லாரும் உணர்ந்து கொள்வதாய் இந்தப் படம்/பயணம் நிறைவடையும். தமிழில் இம்மாதிரியான ஒரு தளத்தில் வேறு ஏதாவது முயற்சிகள் நடந்திருக்கிறதா? என்றால் சின்னத் தயக்கத்தோடு இல்லை என்றுதான் சொல்ல முடிகிறது. இந்தப் படத்தில் சொல்லப்பட்டதை விட சொல்லப்படாதவைகள் ஏராளம். அந்த சொல்லப்படாதவைகளைப் புரிந்துகொள்ள அங்கங்கே சிறுசிறு பாதைகளை இந்தப் படம் உருவாக்கியிருக்கிறது. அந்தப் பாதைகளின் வழியை தொடரும்போது ஏற்படும் உணர்விற்குப் பெயர் பிரம்மிப்பாகத்தான் இருக்க முடியும்.

நந்தலாலா படம் முழுக்க சின்ன சின்னதாய் ஏகப்பட்ட நுட்பங்கள் விரவிக் கிடக்கின்றன. இத்தனைச் சிக்கனமாய் ஒரு படைப்பைச் செதுக்கியிருக்கும் மிஷ்கினின் அறிதல் மீது அன்பு பெருக்கெடுக்கிறது. பாஸ்கர் மணி சுவற்றில் கோடு கிழித்தபடியே நடப்பதன் மூலமாய் ஆதூரமான ஒரு பிடிமாணத்திற்காய் ஏங்கித் தவிக்கும் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது. அறிமுகக் காட்சியில் கவனமாகவும், தன் தாயைச் சுமந்தபடி வெளியேறும் காட்சியில் அநிச்சையாகவும் இந்தச் சுவர் கோடு காட்சி பதியப்பட்டிருக்கிறது. மிஷ்கின் வேறோ அவரது தாய் வேறோ அல்ல. சொல்லப்போனால் இந்தப் படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களுமே ஒன்றுதான். தன் தாயின் சாயல்களை பாலியல் தொழிலாளியிடம் வெறித்தனமாய் தேடும் கிழவன் உட்பட அனைவரும் ஒன்றைத்தான் முன் வைக்கிறார்கள். அது அவர்களுக்குக் கிடைக்காமல் போன அன்பாகத்தான் இருக்கிறது. இந்தப் படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களும் அன்பிற்காய் ஏங்குகின்றனர். இவர்கள் அனைவருமே வாழ்வின் பெரும்பாலான நாட்களை தனிமையில் கழிக்க சபிக்கப் பட்டவர்களாய் இருந்திருக்கிறார்கள். யாராவது ஒருத்தர் அன்பின் சிறு பொறியைத் திறந்து காண்பித்தாலும் உடைந்து போகக் கூடியவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் அனைவருமே இந்த முயற்சியில் தோல்வியடைகிறார்கள். ‘நொண்டி’ ‘மெண்டல்’ என்கிற வார்த்தைகள் மட்டுமே இவர்களைச் சிதைக்கப் போதுமானதாய் இருக்கிறது.


கிழவனின் முரட்டுத் தடி ‘திம்’ ‘திம்’ என அதிர்ந்தபடி எல்லோரையும் ஒரு கட்டத்தில் தாக்குகிறது. ஏற்கனவே கைவிடப் பட்டவர்கள் இன்னும் செயலிழந்து போகிறார்கள். எல்லாம் உடைந்து அழ ஆரம்பிக்கும்போது மழை எல்லா நாற்றத்தையும் கழுவி விடும் என நம்புகிறார்கள்.ஒரு நிறைமாத தாய் பாம்பு கைவிடப்பட்டவர்களின் தலைப் பக்கமாய் ஊர்ந்து செல்கிறது. வயிற்றுக்குள் குட்டிப் பாம்போடு அது மிகப் பெரும் நம்பிக்கையையும் சுமந்தபடி ஊர்ந்து செல்கிறது. இருத்தலின் அழகை இத்தனைக் கச்சிதமாய் இந்திய சினிமாவில் நாம் பார்த்திருக்க முடியாது. படம் முழுக்க ஒன்றிலிருந்து இன்னொன்றுக்காய் கதாபாத்திரங்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். பயணம் என்பது கதை நிகழும் தளமாக மட்டும் இல்லாமல் அகமும் புறமுமாய் பயணம் நிகழ்ந்தபடியிருக்கிறது. இறுதியில் வண்ண பலூன்களை சுமந்தபடி பாஸ்கர்மணி சேர்ந்த இருவரைக் கடந்து போகிறான். நாம் மெளனத்திற்குப் போகிறோம்.

2

கிக்கிஜீரோவை அட்டைக் காப்பி அடித்துவிட்டார்கள் என துப்பறியும் சாம்புக்களும், விமர்சன அதிபுத்திசாலிகளும் கண்டுபிடித்திருக்கிறார்கள். திருடன், திமிர்பிடித்தவன், ஆணாதிக்கவாதி என்றெல்லாம் கூட மிஷ்கினுக்குப் பல பட்டங்களை இணையத்தில் வாரி வழங்கியிருக்கிறார்கள். கிக்கிஜீரோதான் என்று நீ ஏன் ஆரம்பத்திலேயே ஒத்துக் கொள்ளவில்லை? இப்போது ஒப்புக்கொண்டாயா சரி, பிறகு ஏன் டைடில் கார்டில் கதை கிடானோ எனப் போடவில்லை? இப்படி மாறி மாறிக் கேள்விகளால் நம்மவர்கள் துளைத்தெடுக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் சொல்லக் கூடிய ஒரே சரியான பதில் “ஆம் அது அப்படித்தான் நண்பர்களே!” என்பதுதாம். இருப்பினும் நான் புரிந்து கொண்ட வரையில் இந்தக் காப்பிக் களங்கத்திற்கு ‘சப்பை’ கட்ட முயற்சிக்கிறேன்.

அகிரா குரசோவாவையும், கிடானோவையும் தன்னுடைய மானசீக குருமார்கள் என்கிறார் மிஷ்கின். இவர்களின் படங்களின் மூலமாய்த்தான் மிஷ்கின் தனக்கான திரைமொழியைக் கண்டறிந்திருக்கிறார் என்பதை ஆரம்ப நிலை உலகப்பட பார்வையாளர்களால் கூட அனுமானித்து விட முடியும். தமிழ் சினிமாவின் ‘பிரம்மா’ கே.பாலச்சந்தர் சமீபத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறார். “ஒரு காட்சி என்பது ஆரம்பம், நிகழ்வு, முடிவு என எல்லாவற்றையும் கொண்டிருக்க வேண்டும் அப்படி இருந்தால்தான் அது அது சிறந்த படமாக முடியும்” நல்ல கருத்துதான். இப்படிச் சம்பிரதாயமாக எந்த ஒரு புண்ணாக்குமே இல்லாமல் காட்சிகளை உருவாக்கும் தமிழ் சினிமா சூழலில் ஏதாவது இருக்க வேண்டும் என அறிவுறுத்துவது நியாயமானதுதான். இம்மாதிரியான ஒண்ணாங் க்ளாஸ் தமிழ் சூழலில் மிஷ்கின் அடைந்திருக்கும் உயரத்தை நம்மவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பது கடினமானதுதான்.

மிஷ்கினின் திரைமொழி ஒரு காட்சியின் முடிவையும் இன்னொரு காட்சியின் முடிவையும் இணைக்கிறது. அதாவது அடுத்தடுத்த இரண்டு காட்சிகளின் முடிவை மட்டுமே மிஷ்கின் நமக்குப் பார்க்கக் கொடுக்கிறார். ஆரம்பத்தையும் நிகழ்வையும் வெட்டி எறிந்து விடுகிறார். இந்த உத்தியை மிஷ்கின் அஞ்சாதே படத்திலும் கச்சிதமாகப் பயன்படுத்தி இருப்பார். (நரேன் முதல் நாள் வேலைக்குப் போய் திரும்பி வரும் இரவுக் காட்சியை நினைவுபடுத்திப் பாருங்கள்) கிடானோ கிக்கிஜீரோவை முழுக்க இந்த பாணியில்தான் இயக்கியிருப்பார். நந்தலாலாவிற்கான சிறுவனை மிஷ்கின் கிக்கிஜீரோவில் கண்டுபிடித்திருக்க வேண்டும். அந்த ஒற்றுமைதான் இரண்டு படங்களையும் இணைக்கிறதே தவிர இரண்டு படங்களின் அடிநாதமும் வெவ்வேறு. கிக்கிஜீரோ வை இந்தப் படம் பல மடங்கு தாண்டியிருக்கிறது என்பதுதான் என் பார்வையாக இருக்கிறது.

உதாரணத்திற்கு லாரி ட்ரைவர் கதாபாத்திரத்தை எடுத்துக் கொள்ளலாம். சாலைப் பயணத்தை களமாகக் கொண்ட கதையில் லாரியையோ, லாரி ட்ரைவரையோ தவிர்க்க முடியாது. இதையெல்லாம் காப்பி என்றால் தமிழ் சினிமா ‘புத்திசாலி’ப் பார்வையாளனை ஒன்றுமே செய்ய இயலாததுதான். கிக்கிஜீரோ லாரி ஓட்டுநரும் நந்தலாலா லாரி ஓட்டுநரும் எந்த அளவிற்கு நுட்பமாய் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் என யோசித்துப் பார்த்தாலே இரண்டு படங்களுக்குமான வித்தியாசம் புரிந்து விடும். நந்தலாலா கதாபாத்திரங்களில் என்னை மிகவும் நெகிழ வைத்த பாத்திரமாக இந்த லாரி ஓட்டுனர் இருக்கிறார். வலிமையான உடல் கொண்ட ஓட்டுநர், ஹாரனைத் திருடியதற்காக பாஸ்கர் மணியை அடி அடியென அடிப்பார். அப்படியே சாலையில் மடங்கி உட்கார்ந்து அழ ஆரம்பிக்கும் பாஸ்கர் மணியின் இயலாமை ஓட்டுநரை கலங்கடித்து விடும். பாடலின் பின்னணியில் அடுத்தடுத்து வரும் காட்சிகள் மனித நேயத்தின் உச்சம். இம்மாதிரியான ஒரு காட்சியைக் கூட கிக்கிஜீரோவில் பார்க்க முடியாது.

சிட்டி ஆஃப் காட் படத்தின் காப்பி புதுப்பேட்டை, பை சைக்கிள் தீஃப் படத்தின் காப்பி பொல்லாதவன், இன் டு த வைல்ட் படத்தின் காப்பி கற்றது தமிழ் என்பது மாதிரியான பயங்கரமான கண்டுபிடிப்புகளை நம்மவர்கள் தொடர்ச்சியாய் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழில் நல்ல படங்கள் வரத் துவங்கியிருக்கும் இந்தக் காலகட்டத்தில் இன்னும் தம்முடைய ஒலக சினிமா அறிவை பகிரங்கப்படுத்திக் கொண்டிராமல் ஆரோக்கியமான/ உருப்படியான விமர்சனங்களை விமர்சகர்கள் முன் வைக்க வேண்டும். காப்பி என்கிற விஷயம் அயோக்கியத்தனமானதுதான். அடுத்தவரின் உழைப்பைச் சுரண்டும் எல்லா வழிகளும் அடைக்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் எது காப்பி? எது ஒரிஜினல்? என்கிற தெளிவு நம்மவரிடையே வளர்த்தெடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

Thursday, November 11, 2010

அத்தியாயம் 7. துண்டிப்பு

படிக்கட்டுகளில் இறங்கி வரும் அரவம் கேட்டு விஜி தலை தூக்கிப் பார்த்தாள். அவளின் பெரிய கண்கள் சிவந்து, குளமாகியிருந்ததை மென் வெளிச்சத்தில் பார்க்க முடிந்தது. இத்தனை இறுக்கமான, தவிப்பான ஒரு மனநிலை எப்போதும் எனக்கு வாய்த்ததில்லை. என்ன மாதிரியான உணர்விது? என்பதைப் புரிந்து கொள்ள முயன்று தோற்றேன். விஜி மெல்ல தலை தூக்கி என்னைப் பார்த்துவிட்டு மறுபடியும் தலை கவிழ்ந்து கொண்டாள்.

“விஜி” என்றேன். மூக்கை உறிஞ்சியபடி நிமிர்ந்தாள்.
”நான் போறேன்”
”நீங்க எதுக்கு போகனும்? அது தூங்கி எந்திரிச்சதும், நாங்க கிளம்பிடுறோம்” என்றாள்
அதில் தெறித்த விலகலை, சடாரென என்னை யாரோவாய் சித்தரித்ததை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
”எப்படி உன்னால முடிஞ்சது விஜி?”
”தெரில. திடீர்னு எனக்கு எல்லாம் தப்பா நடக்கிறா மாதிரி பட்டது.. ஒருவேளை நீங்க ஊருக்குப் போகாம இருந்திருந்தா இது நடந்திருக்காதோ என்னவோ.. நீங்க இல்லாத முத நாள் இரவு என்னால தூங்க முடியல. ஏதோ ஒரு மயக்கம் உங்க மேல இருந்தது போல. அது அன்னிக்கு தீர்ந்தா மாதிரி இருந்தது… நான் என்ன பண்ணிட்டிருக்கேன்னு யோசிச்சப்ப பயமா இருந்தது… என் மனசாட்சி உறுத்த ஆரம்பிச்சிருச்சி… என் வீட்டுக்காரர் எனக்காகதான் ஒரு கொல பண்ணிட்டு போலிசுக்கு மாட்டாம தலமறைவா சுத்திட்டிருக்கார். நான் என்னடான்னா இன்னொருத்தரோட எந்த குத்த உணர்வுமே இல்லாம ரொம்ப சந்தோஷமா வாழ்ந்திட்டிருக்கேன்னு ஏதோதோ தோண ஆரம்பிச்சிருச்சி… சரியா விடியற்காலைல இந்த மனுசன் கண்ணு முன்னால நிக்குறார்… என்ன மன்னிச்சிடு விஜயான்னு கால்ல விழுந்தார்… பதறிப் போய்ட்டேன்… நீங்க கொடுத்த பணத்த வச்சி ஆந்திரால ஒரு சின்ன கடை போட்டிருக்காராம்... எனக்கு துரோகம் பண்ணிட்டத நெனச்சி இங்கிருந்து போன நாள் ராத்திரில இருந்து தூக்கம் வராம ரொம்ப அழுதாராம்… ஆவறது ஆவுட்டும்னு என்ன கூட்டிப் போக வந்திருக்கார்… உண்மைய சொல்லனும்னா நான் தான் அவருக்கு துரோகம் பண்ணேன்… இன்னொரு ஆளோட மூணு மாசம் வாழ்ந்தும் என்ன வந்து கூட்டிப் போய் வச்சி வாழ நினைக்கிறார்... எனக்கும் அவரோட போறதுதான் சரின்னு படுது… உங்க கிட்ட சொல்லாம போக கூடாதுன்னுதான் ரெண்டு நாள் காத்திருந்தோம்… உங்க கிட்ட வாங்கின பணத்தை இரண்டு மூணு மாசத்துல திருப்பிக் கொடுத்திருவேன்னு சத்தியம் பண்ணி இருக்கார்… உங்களுக்கு என்ன விட நல்ல பெண் கிடைக்கும்... உங்க வாழ்க்க நான் இல்லனாலும் நிச்சயம் சந்தோஷமாதான் இருக்கும்...” விஜி தரையைப் பார்த்தபடி விடாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.

எனக்கு சகலமும் அந்நியமாகிப் போனதைப் போலிருந்தது. கொண்டு வந்திருந்த பையை அப்படியே எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு முன் வாசலுக்காய் நடந்தேன். விஜி பதறிப் பின்னால் வர, திரும்பிப் பார்க்காமல் வெளியேறினேன். விடியற்காலை இருட்டு கண்களுக்கு முன்னால் லேசான குளிருடன் விழித்திருந்தது. விஜி வாசலில் என்னங்க! என்னங்க! என மெல்லமாய் கூப்பிடக் கூப்பிட சாலைக்கு வந்துவிட்டேன். நடை தள்ளாடுவதை உணர முடிந்தது. நீள் சாலையின் இடையிடையே குறுக்கும் மறுக்குமாய் சிறு சிறு சந்துகளிலிருந்து ஆட்டோக்கள் ப்ரேக்குள் தேய கிறீச்சிட்டபடி, வசையுடனும், பெருத்த சப்தத்துடனும் என்னைத் தாண்டிப் போயின. கடற்கரைக்கு வந்துவிட்டிருக்கிறேன். சடுதியில் என் வாழ்வு அற்பமாகிப் போனாற்போலிருந்தது. அப்படியே நடந்து போய் கடலில் கலந்து விடும் உந்துதல்கள் எழ ஆரம்பித்தன.

கரையோரப் பாறைகள் தாண்டி சிறிய மணற்பரப்பில் போய் அமர்ந்து கொண்டேன்.கடல் ஹோ வென இரைந்தது. இனி என்ன செய்ய வேண்டும் என்பதே புரியாமல் இருந்தது. எங்கு போக? என்ன செய்ய? என்றெல்லாம் யோசித்து குழம்பிப் போனேன். இதுதான் வாழ்வு, இதுதான் எதிர்காலம் என்றெல்லாம் நம்பி இருந்த ஒரு விஷயம் திடீரென தன் அடையாளத்தை முற்றிலுமாய் அழித்துக் கொண்டு காணாமல் போய்விடுவதன் பயங்கரத்தை நம்பக் கடினமாய் இருந்தது. திரும்பத் திரும்ப எப்படி முடிஞ்சது விஜி? எப்படி முடிஞ்சது விஜி? என்கிற கேள்விகள்தாம் விடாமல் நினைவை மோதிக் கொண்டிருந்தன.

கற்பனையில் போயிருந்த பிரான்ஸ் நகரமும் திராட்சைத் தோட்ட வாழ்வும் கைகொட்டி சிரிப்பதைப் போலிருந்தது. வஞ்சிக்கப்பட்ட உணர்வுகள் பெருகி வழிந்தன. என்னை விஜியின் இடத்தில் வைத்துப் பார்த்து ஏதாவது சமாதானங்களை வலிந்து செய்து கொள்ள முடியுமா என்றெல்லாம் யோசித்தும் கூட விஜி செய்தது துரோகமாகத்தான் எனக்குப் பட்டது. ஆனால் எதுதான் துரோகமில்லை விஜிக்கு நீ செய்தது மட்டும் என்ன? துரோகம்தானே. சமூக ஒழுங்குகளின் அடிப்படையில் உனக்கும் விஜிக்கும் இருந்தது ‘கள்ள காதல்’தானே காதலே கள்ளமாகிவிட்டபின்பு துரோகம் ஏன் நிகழக் கூடாது? சொல்லப் போனால் இந்த துரோகம் என்ற வார்த்தையே மிகுந்த அருவெறுப்பானது, சுயநலமானது. காதலை கள்ளமென ஒத்துக் கொள்ளாத நீ சந்தர்ப்ப சூழலை மட்டும் துரோகம் என முத்திரை குத்துவதேன்? வேலை, குடும்பம் என்றிருந்த பெண்ணை வார்த்தைகளைத் தூவி வளைத்துப் போட்டதுமில்லாமல் அவளை பிழியப் பிழிய மூன்று மாதங்கள் உன் உடல் இச்சைக்கு பயன்படுத்தியுமிருக்கிறாய். இந்தக் கருமத்திற்கு காதல் என்ற பெயர் வேறு ஒரு கேடா?. ஆனாலும் நான் விஜியை காதலித்தேன். மீதமிருக்கும் என் வாழ்நாள் முழுவதையும் அவளோடு வாழ்ந்துவிட தீர்மானித்திருந்தேன். இந்த நிழல் உலகத்திலிருந்து பிய்த்துக் கொண்டு தூரதேசம் எங்காவது ஓடிப்போய் விஜியுடன் வாழவே நான் விரும்பினேன். பிறகு ஏன் திருமணம் செய்து கொள்ளாமலிருந்தாய்? சட்டப்படி விஜிக்கு விவாகரத்து கிடைக்க அல்லவா நீ முயற்சி செய்திருக்க வேண்டும்? அவ புருஷன் சமூகத்தின் முன்னால ஒரு குற்றவாளி..போலீசு வேர தேடிட்டு இருக்கு, இந்த லட்சணத்துல எந்த அட்ரஸுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்ப? நீ மட்டும் சமூகத்துக்கு குற்றவாளி இல்லயா?உனக்குலாம் அட்ரஸ் இல்லயா? என்னாங்கடா டேய்? அதான் அவனுக்கு அவ்ளோ பணம் குடுத்திட்டமே, வாங்கிட்டு பல்ல இளிச்சிட்டு வேர போனானே.. இனிமே திரும்ப மாட்டான், எந்த தொந்தரவும் இருக்காதுன்னு நம்புனேன். எல்லாம் சரிதான் ராசா, நீ ஏன் இவளுக்கு தாலி கட்டல? ஏன் வீட்டுக்குள்ளாரயே பொத்தி பொத்தி வச்சிருந்த? ங்கொய்யால அந்த பொண்ணுக்கு துணி போட கூட நீ சுதந்திரம் கொடுக்கல. காமாந்தகப் பேய்டா நீ! என்ன கொடும துணி இல்லாம இருந்தாதான சுதந்திரம். அது உன்னோட கற்பிதம்.. பைத்தியக்காரன் மாதிரி அந்த பொண்ண டார்ச்சர் பண்ணி இருக்க.. அதான் அவ புருசன் வந்ததும் பாதுகாப்பு கருதி போய்ட்டா.. ஒலகத்துல எந்த பொண்ணுமே தன்னோட பாதுகாப்புத்தான் மொத இடம் கொடுப்பா.. அததான் விஜியும் பண்ணியிருக்கா..பொத்திட்டு போய் வேலய பாருடா.

இந்தப் போதை மிகுந்த பின்னிரவில் நானும் நானுமாய் சப்தமாய் சண்டையிட்டுக் கொள்ள துவங்கினோம். உள்ளுக்குள் கேள்விகளும் எதிர்கேள்விகளும் பொங்கிப் பெருகி மண்டைக்குள் ஓயாத கூச்சல் கேட்டுக் கொண்டே இருந்தது. என்னை மிக அதிகமாய் வெறுக்கத் துவங்கினேன். விஜியின் மீது ஏற்பட்ட அதிர்ச்சியும் வெறுப்பும் மெல்ல என் மீது திரும்ப ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் வெறுப்புகள் அடர்த்தியாய் மிகுந்து வர ஆரம்பித்தன. எந்த அர்த்தமுமே இல்லாத என் இருப்பின் மீது அசாத்திய வெறுப்பும் கோபமும் ஒருமித்து எழுந்தது. எழுந்து ஈர மணலில் சிறிது தூரம் நடந்தேன். மண்டைக்குள் கூய்ச்சல் ஓய்ந்தது போலிருந்தது. தூக்கம் கண்களை அழுத்தவே மணற்பரப்பை ஒட்டி இருளில் தனித்து பிரம்மாண்டமாய் தெரிந்த ஒரு பாறைக்கு அடியில் போய் படுத்துக் கொண்டேன். ஏதேனும் பாம்போ, தேளோ என்னைக் கடித்துக் கொன்றுவிட்டால்கூட நிம்மதியாகப் போகும். மறுநாளை உணரமுடியாமல் போனால் அதுவே எனக்குக் கிடைத்த பெரிய வரம் என வாய்விட்டுச் சொல்லியபடி தூங்கிப் போனேன்.

துரதிர்ஷ்ட வசமாய் ஓரிரு மணி நேரத்திலேயே மீனவர்களால் எழுப்பப்பட்டேன். என் மீது சிறிய கல் ஒன்று வந்து விழுந்தது. எழுந்து பார்த்தபோது நான்கு பேர் நின்றிருந்தனர். அதிகாலையில் கடலுக்கு செல்பவர்கள் போல. வலை சகிதமாய் நின்றபடி என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர். முதலில் என்னை கரையில் ஒதுங்கிய பிணம் என நினைத்திருக்கிறார்கள். உயிர் இருப்பதை தெரிந்து கொள்ளவே கல்லெறிந்திருக்கிறார்கள். என்ன? ஏது? என விசாரித்தார்கள். எதுவும் பதில் பேசாது பாறைகளின் மீதேறி சாலைக்கு வந்தேன். கடற்கரைச் சாலையில் மக்கள் நடமாட்டம் ஆரம்பித்திருந்தது. ஒரு பெஞ்சில் போய் அமர்ந்துகொண்டேன்.

ஆறு மணிக்கு சமீபமாய் ஒருவன் பக்கத்தில் வந்து அமர்ந்தான். “வா போலாம்” என்றான்.

எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. எப்படி இவர்கள் தேவையான போதெல்லாம் மிகச் சரியாக கண்டுபிடிக்கிறார்கள்? என்பது புரியாமலிருந்தது. என்ன செய்ய வேண்டுமென குழம்பி போயிருந்ததில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனத் தோன்றியது பதில் பேசாமல் போனேன். கார் ஒன்று தயாராய் இருந்தது. ஏறிக்கொண்டேன். அழைக்க வந்தவன் கையிலிருந்த ஜோல்னாப் பையில் கைவிட்டு ஒரு புகைப்படத்தை வெளியில் எடுத்தான். “இதான் பீசு. ஊர் சேலம். அட்ரஸ் பின்னால இருக்கு. கழுத்த கீறனும். காரியம் முடிஞ்சதும் பின் பக்கமா வெளில போகனும். முன் கதவ தாப்பா போடனும். நாளைக்கு மதியம் ஒரு மணிக்குள்ள நடக்கனும். நீ தங்கப்போற ஓட்டல் வாசல்ல கொண்டுபோய் கார் விடும்.” எனச் சொல்லி முடித்துவிட்டு ட்ரைவருக்கு சைகை தந்தான். காந்தி சிலை தாண்டி கார் நின்றது. இறங்கிக் கொண்டான். கதவை அடித்து சாத்தினான். நான் இருக்கையில் சரிந்து கண்களை மூடிக் கொண்டேன். பின் அவன் வைத்து விட்டுப் போன புகைப்படத்தைப் பார்த்தேன். சிவப்பு நிற சேலையை முக்காடிட்ட வெளுத்த குண்டுப் பெண். சேட்டுப் பெண்ணாய் இருக்கலாம் என நினைத்தபடியே தூங்கிப் போனேன்.

ஓவியம்: salvador dali

- (முதல் பாகம் முற்றும்)

Tuesday, November 9, 2010

அத்தியாயம் 6. மலைகளின் தியானம்

கண் விழித்துப் பார்த்தபோது கொல்லி மலை அடிவாரத்தை வண்டி நெருங்கியிருந்தது. சூரியன் நன்கு மேலெழுந்து விட்டிருக்கிறது. என் சட்டையும் லுங்கியும் இரத்தம் ஊறி காய்ந்து மொடமொடவென துருத்திக் கொண்டிருந்தன. வண்டிக்குள் பச்சை இரத்தத்தின் வீச்சம் குமட்டியபடி இருந்தது. சீராளனும் தாமசும் இன்னும் விழித்திருக்கவில்லை. குணா சலனமில்லாது வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தான். மூங்கில் தோப்புகள் மண்டியிருந்த, மலை ஏறும் பாதைக்கு சமீபமான இடத்தில் வண்டியை நிறுத்தினான். சீராளனையும் தாமசையும் எழுப்பினேன். முதலில் இந்த ஆடைகளை கழற்றி எறியவேண்டும். வழியில் எங்காவது போலீஸ்காரர்கள் சோதனைக்காக மடக்கி இருந்தால் என்ன ஆகியிருக்கும் என்ற யோசனை வந்தது. குணாவைக் கேட்டேன்.

“போலீஸ்காரன் எவனாவது நம்மள சும்மா பாத்திருந்தா கூட பிரச்சின ஆகிருக்கும் இல்ல குணா?”
“ம்ம் ரெண்டு மூணு இடத்துல ரூபா கொடுத்தேன். எவனும் வண்டிக்குள்ளலாம் தலய விட்டுப் பாக்கல”
“ம்ம்”

இதே உடைகளோடு வண்டியை விட்டு வெளியில் இறங்கவும் யோசனையாய் இருந்தது. இருவரையும் எழுப்பினேன். சீராளனின் உடைகள் என்னுடையதை விட மோசமாய் இருந்தது. சின்னப் பதற்றத்தோடே எழுந்த தாமஸ் கொல்லிமலை அடிவாரம் வந்திருப்பதைப் பார்த்து சற்று ஆசுவாசமானான். குற்ற உணர்வு மேலிட்டபடி “இந்த ட்ரெஸ்ஸோட நாம இவ்ளோ தூரம் வந்திருக்க கூடாது… வழில எங்காச்சிம் மாத்திட்டிருந்திருக்கனும்… எல்லாருமே நல்ல போதை..” என தலையை கவிழ்த்துக் கொண்டான். “அதுனால என்ன எந்திரிச்சி வாங்க போய் குளிப்போம் என்றான் குணா.

எப்படி இந்த போதையிலும், பதட்டத்திலும் குணா ஏழு மணி நேரம் தொடர்ச்சியாய் வண்டி ஓட்டியிருப்பான் என நினைத்துக் கொண்டேன்.வண்டியிலிருந்து இறங்காமலே அந்த வழியாய் போன ஒரு முதியவரிடம் குளிக்க இங்கு ஏதாவது இடமிருக்கிறதா? எனக் கேட்டோம். அவர் ஒரு ஒற்றையடிப் பாதையைக் காட்டினார். அவர் போகும் வரைக் காத்திருந்து பின் வண்டியிலிருந்து இறங்கினோம்.

நெடுந்தொலைவிற்கு மூங்கில் மரங்கள் புதர்களாய் மண்டிக் கிடந்தன. உயரமான மலை பசுமையைப் போர்த்தியிருந்தது. நடுத்தரப் பாறைக் கற்கள் அங்கங்கே மரங்களுக்கு நடுவில் புல் மூடித் தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்க்க வினோதமாய் இருந்தது. இரண்டு மூங்கில் புதர்களுக்கு மத்தியில் கிளைத்துச் செல்லும் இந்த ஒற்றையடிப் பாதை மலை ஓடையொன்றில் முடிந்தது. சற்றுத் தொலைவிலேயே நீரின் சலசலப்பைக் கேட்க முடிந்தது. மலையின் இடுக்குகளிலிருந்து கசிந்து வரும் இந்நீரோடை மிக அந்தரங்கமான, ஆத்மார்த்தமான ஒரு உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது. பாறைகளை அரித்தரித்து ஏராளமான கூழாங்கற்களை இந்த ஓடை உருவாக்கி விட்டிருக்கிறது. அங்கங்கே சிறு சிறு அகலமான குட்டையாய் நீர் தேங்கி, பின் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது . நீரின் உண்மையான நிறம் வெண்மையாகத்தான் இருக்க முடியும். மென் சூரியன் நீரினுள்ளிருக்கும் கூழாங்கற்களில் பட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. திடீரென ஒரு உற்சாகம் நால்வரையும் தொற்றிக் கொள்ள நெளிந்து ஊறும் மலைப்பாம்பைப் போல ஓடிக் கொண்டிருந்த ஓடையின் சிறு சிறு நீர் தேங்கலில் இறங்கி அமர்ந்து கொண்டோம்.

காற்றில் பிரத்யேகமான வாசத்தை உணரமுடிந்தது. அபூர்வமான மூலிகைகளின் வாசனையாய் இருக்கக் கூடும். பட்சிகளின் ஒலிகள் மலையடிவாரம் முழுக்க கேட்டபடியிருந்தன. இம் மலைகளில் அரூப வடிவில் எண்ணற்ற சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாய் வசித்து வருவதாக குணா சொன்னான். நானும் இத் தகவல்களை அறிந்திருக்கிறேன். பத்து வருடங்களுக்கு முன்பு இம்மலைகளில் கால் போன போக்கில் சுற்றி அலைந்தது நினைவில் வந்தது. வெகு நேரம் நீரில் கிடந்தோம். எல்லாச் சோர்வுகளையும், பாவங்களையும், பழிகளையும் இந்தத் தூயச் சிறுநதி களைந்து விட்டதைப் போல உணர்ந்தேன். மற்ற மூவரின் கண்களில் படிந்திருந்த அசாத்திய அமைதி எனக்கு ஏற்பட்டிருந்த அதே உணர்வையே பிரதிபலித்தது.

பசிதான் நீரை விட்டு அகல முக்கிய காரணமாக இருந்தது. களைந்திருந்த ஆடைகளை தீ வைத்து எரித்தோம். முழுதும் சாம்பலான பின்பு நீரை அள்ளி ஊற்றி அந்த இடத்தின் சுவடுகளை கரைந்து போக வைத்தோம். பின் வண்டிக்குத் திரும்பி கொண்டுவந்திருந்த ஆடைகளை அணிந்துகொண்டோம். குணா வண்டியை செலுத்த ஆரம்பித்தான். சற்று தூரம் கடந்ததும் கீற்றுக் கொட்டகையிட்ட ஒரு சிறு கடையைப் பார்க்க முடிந்தது.
தாமஸ்தான் முதலில் இறங்கிப் போய் சாப்பிட ஏதாவது இருக்கிறதா எனக் கேட்டான். நாற்பது வயது மதிக்கத்தக்க, தலைப்பாகை கட்டிய ஆளொருவர் எதுவும் இல்லை எனப் பதில் அளித்தார். இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்களை அவர் கையில் திணித்து உணவைத் தயாரிக்கச் சொன்னான்.

அவர் மிகவும் மகிழ்ந்துபோய் கடைக்குப் பின்னாலிருக்கும் தோப்பில் இளைப்பாறுமாறு கேட்டுக் கொண்டார். இரண்டு கயிற்றுக் கட்டில்கள் அடர்த்தியாகவும் உயரமாகவும் வளர்ந்திருந்த மரங்களின் அடியில் போடப்பட்டிருந்தன. கடைக்காரர் இரண்டு மூங்கில் பாயையும் கொண்டு வந்து கொடுத்தார். இலைகள் உதிர்ந்திருந்த பெரு மரத்தின் நிழலில் மூங்கில் பாயை விரித்துப் படுத்துவிட்டேன். குணாவும் தாமசும் கட்டிலில் படுத்த மறுநிமிடம் சன்னமாய் குறட்டை விட ஆரம்பித்தனர். சீராளன் இன்னொரு மரத்தடியில் போய் பாயை விரித்துக் கொண்டான். நேற்றைய இரவில் நிகழ்ந்த அழுத்தங்களிலிருந்து என்னால் அத்தனை சீக்கிரம் வெளியே வரமுடியவில்லை. எவனோ ஒரு தடியனின் காலில் நசுங்கி என் உயிர் போயிருக்கும் என்பதை நினைத்துச் சிரித்துக் கொண்டேன். திடீரென என் முன்னால் விரிந்திருக்கும் வாழ்வு படு அபத்தமாகத் தோன்றியது. எதன் நிமித்தமாக இப்படி ஓடிக்கொண்டிருக்கிறேன் என்பதே புரியாமல் இருக்கிறது. ஏதாவது ஒரு சின்னப் பிடி கிடைத்தால் கூட போதும் இந்த இலக்கற்ற வெள்ளோட்ட வாழ்விலிருந்து தப்பித்து விடலாம். ஆனால் எது அந்தப் பிடி என்பதும், எந்தத் திசையிலது எனக்காய் காத்துக் கொண்டிருக்கிறது என்பதையும்தான் என்னால் இதுநாள் வரை கண்டுபிடிக்க முடியவில்லை. நினைவின் அயற்சியோடு எப்போது உறங்கினேன் எனத் தெரியாமல் தூங்கிப் போனேன்.

குணா சாப்பிட எழுப்பியபோது உச்சி வெயில் என்னுடன் பாயில் படுத்துக் கொண்டிருந்தது. உணவை இங்கேயே எடுத்துவரச் சொன்னோம். இரண்டு மூன்று காட்டுப் பறவைகளை கடைக்காரர் சமைத்திருந்தார். நல்ல பசி. ருசியான உணவுதாம். கடைக்காரரின் முதுகிற்கு பின்னால் சேலையணிந்த உருவம் ஒன்று தெரிந்தது. அவரின் மனைவியாய் இருக்கக் கூடும். மெளனமாய் சாப்பிட்டு முடித்தோம். கடைக்காரர் மீதிப் பணம் என தந்ததை தாமஸ் வாங்கிக் கொள்ளவில்லை. திரும்பி வரும்போது சாப்பிட்டுக் கொள்வதாய் சொல்லிவிட்டு வண்டிக்கு நகர்ந்தோம். வண்டியை நான் ஓட்டுவதாய் சொன்னேன். குணா மறுத்தான். மலைகளில் பயணிப்பதென்பது அவனுடைய பால்யங்களுக்கு திரும்புவதை போன்றது என மென்மையாய் சொன்னான். எனக்கு இந்த மூவரைப் பற்றி எதுவும் தெரியாது. எவரின் கதையும் தெரியாது. அறிமுகமாகி 24 நான்கு மணிநேரம் கூட ஆகியிருக்கவில்லை. குணாவின் சொந்த ஊர் எதுவெனக் கேட்டேன். உதகமண்டலம் எனப் பதில் வந்தது. சீராளன் ஆந்திரா. தாமஸ் என்ன ஊர் எனக் கேட்கவில்லை. முன் இருக்கையில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டேன். நூற்றுப் பத்து கொண்டை ஊசி வளைவுகளைக் கடக்க வேண்டும். ஊட்டியை விடவும் இந்த வளைவுகள் ஆபத்தானவை என உற்சாகமாய் விசிலடித்தான் குணா.
தேர்ந்த வாகன ஓட்டிகளுக்கு இந்த கொல்லிமலைச் சாலை நல்ல அனுபவமாக இருக்கும். குணாவின் நினைவில் பால்யம் திரும்பியிருக்க வேண்டும். மிக உற்சாகமாக வண்டியை செலுத்த ஆரம்பித்தான்.

அளப்பறிய மகிழ்ச்சியையும் மிகுதியான சவாலையும் இந்த மலைப் பயணங்கள் நமக்குப் பரிசளிக்கின்றன. கண்ணில் தென்படும் மரங்கள் அனைத்தும் மிக உயர்ந்தும், மிகப் பருத்துமாய் புராதனங்களை முன் நிறுத்திக் கொண்டிருந்தன. மலைப் பெண்ணின் காலடியிலிருந்து மெல்ல ஊர்ந்து உச்சிக்கு அடையும் இப்பயணம், கலவிக்கு இணையான திளைப்புகளைத் தந்து கொண்டிருந்தது. மிகை உணர்வில் ததும்பியபடி நானொரு நிர்வாணத் துறவியாய் இவ் வனாந்திரங்களில் அலைந்து கொண்டிருந்த நாட்களை குணாவிடம் சொல்ல ஆரம்பித்தேன்.

பின்புலம் 1.

டிப்ளமோ முடித்த கையோடு எனக்கும் என் குடும்பத்தாருக்கும் இருந்த குறைவான தொடர்புகளும் விட்டுப் போயின. உடன் படித்த திருவண்ணாமலையைச் சேர்ந்த நண்பனொருவனின் வீட்டில் சில மாதங்கள் தங்கியிருந்தேன். அங்கிருந்த நாட்களில் தினம் ஏதாவது ஒரு புத்தகத்தோடு மலையடிவாரக் குறுங்காடுகளில் தஞ்சமடைவது வழக்கமாயிருந்தது. அப்படி ஒரு நாளில் சாமியார் ஒருவர் பழக்கமானார். சடை முடியும், நீள தாடியும், பஞ்சு உடலும், ஒட்டிய கன்னங்களுமாய் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் அந்த ஜீவனை பெரிதான சுவாரசியங்கள் எதுவும் இல்லாமல்தான் தினம் கடந்துபோவேன். திடீரென ஒருநாள் அவர் என்னிடம் வந்து பேச ஆரம்பித்தார். சதைத் துணுக்கையே காண முடியாத அவரின் ஒட்டிய தேகத்தில், கண்கள் மட்டும் சுடரென என்னேரமும் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவரின் கண்களைப் பார்த்து பேசிக்கொண்டிருக்கும்போது மனம் முழுக்க அவரின் பேச்சில் லயித்திருக்கும். பார்வையின் மூலமே எதிராளியின் ஐம்புலன்களையும் வசீகரிக்கும் சக்தி அவரிடம் இருந்ததாகவே நான் நம்பினேன். அதனால்தான் அவர் கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் மறுப்பேதும் சொல்லாமல் போய்கொண்டிருந்தேன்.

அவர் தன்னுடையப் பெயரை ஸ்வாமி ப்ரேம் அய்க்கா என சொல்லிக் கொண்டார். அப்படியெனில் பிரபஞ்சத்தை நேசிப்பவன் என்று அர்த்தமாம். அந்தப் பெயரை அவருக்கு வைத்தது ஓஷோ ரஜனிஷ். இவர் ஒரு ஓஷோ சன்னியாசியாகத்தான் தன் ஆன்மீக வாழ்வைத் துவங்கியிருக்கிறார். புனேவிலிருக்கும் ஓஷோ கம்யூனில் சில வருடங்கள் கழித்திருக்கிறார். ஓஷோவின் தாந்தரீக விளக்கங்களில் போதாமை ஏற்பட்டு தன் வழியைத் தானே தேடிக் கொள்ளும் முடிவில் வெளியே வந்துவிட்டிருக்கிறார். சில இடங்களில் அலைந்து விட்டு திருவண்ணாமலையில் கடந்த ஒரு வருடமாக ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டிருப்பதாய் சொன்னார். எனக்கு அவரின் மீது சின்ன சுவாரசியம் ஒன்று ஏற்பட்டது. தாந்தரீகம் என்றால் என்ன? அதன் பயன் யாவை? என்பன போன்ற என் குழந்தைத்தனமான கேள்விகளுக்குக் கூட மிகத் தன்மையாய் பதிலளித்தார்.

ஒரு நாள் சில புத்தகங்களைத் தருவதாய் கூறி என்னை அவர் வசிப்பிடத்திற்கு அழைத்துப் போனார். மலையின் அடிவாரத்தில் ஓடையொன்று அரித்துப் போன கல் பொந்து ஒன்றுதான் அவர் வசிப்பிடம். இரவில் அங்கு தூங்கும் வழக்கத்தையும் கொண்டிருந்தார். சிறு விலங்குகளின் தொந்தரவு ஏற்படா வண்ணம் அச்சிறு குகை பொந்தை பெரிய பலகைக் கல் கொண்டு மூடியிருப்பார். தாந்தீரகமும் பாலுணர்வும் என்கிற தலைப்பில் ஓஷோ பேசியிருந்த தொகுப்பைதான் எனக்கு முதலில் படிக்கத் தந்தார். இது சிறந்த அறிமுகமாக இருக்கும் என்றும் தொடர்ந்து கேள்விகள் எழுந்தால் வேறு சில புத்தகங்களை தருவதாகவும் சொன்னார். பெண்ணுடலே பரிச்சயமில்லாத பத்தொன்பது வயதில் அந்தப் புத்தகத்தை அணுக எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. காமமென்றால் என்னவென்றே தெரியாமல் எதைக் கருவியாய் கொண்டு, எதைக் கடப்பது? என்கிற யோசனையும் எழுந்தது. ஆனால் அந்த புத்தகத்தில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்தது. ஸ்வாமி ப்ரேம் அய்க்காவை என்னுடைய குரு என மானசீகமாய் நினைத்துக் கொள்ளவும் ஆரம்பித்து விட்டேன்.

அவர்தான் முதன்முதலாய் என்னை கொல்லி மலைக்கு அழைத்து வந்தார். அரப்பளீஸ்வரர் கோயிலைத் தாண்டி நிர்வாணத் துறவிகள் ஆசிரமம் ஒன்று இருக்கிறது. அங்கு சில காலம் அவரோடு தங்கியிருந்தேன். அங்கிருந்தவர்கள் எவரும் சமணர்கள் இல்லை. மகாவீரரை தொழும் வழக்கமும் இல்லாதவர்கள். வேறு எவரையும் தொழும் வழக்கமும் நான் பார்த்தவரை யாரிடமும் இல்லை. தாந்தீரீக மார்க்கத்தில் விருப்பமேற்பட்டு தனித் தனியாய் தங்களைத் தேடிக் கொண்டிருந்தவர்கள்தாம் அங்கு ஒரு குழுவாக இருந்தனர். தியானம்,உடல்,முக்தி போன்றவைதாம் பொது விஷயங்களாக இருந்ததே தவிர வேறெந்த புள்ளியிலும் அங்கிருந்தவர்கள் இணைந்து செயல்பட்டதாய் எனக்கு நினைவில்லை. என்னுடைய நிர்வாண நாட்களை நான் பெரிதும் கொண்டாடினேன். அதீதமான சுதந்திரத்தையும் விழிப்புணர்வையும் அந்த நாட்கள் தன்னகத்தே கொண்டிருந்தன.பகல்களில் இந்த வனம் முழுக்க ப்ரேம் அய்க்காவும் நானும் அலைந்திருக்கிறோம். நிலவொளியில், கானகத்தில், நிர்வாணமாய் அலைந்து கொண்டிருந்த நாட்களில் என் மனதின் அடியாழம் வரை நிம்மதியும் உயிர்ப்பும் விரவி இருந்தது. (இந்த நாவலின் இரண்டாவது பாகத்தில் இப்பகுதியை விளக்கிச் சொல்கிறேன். இப்போதைக்கு இதோடு நிறுத்துகிறேன்.)
0

“நாம இப்ப அங்கதான் தங்கப் போறமா?” என்றான் குணா
ஆமாம் எனப் புன்னகத்தேன்
”உள்ள போவனும்னா துணிலாம் கழட்டிடனுமா?”
தேவையில்லை என சிரித்தேன்

அந்த ஆசிரம நிர்வாகிக்கு என்னை நினைவிருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் யாராவது தங்க வேண்டுமென வந்தால் ஆசிரமத்தில் அனுமதி இருந்தது. இப்போது எப்படி எனவும் தெரியவில்லை. போய் பார்ப்போம் என மனதில் நினைத்துக் கொண்டேன்.

அரப்பளீஸ்வரர் கோயிலை தொட்டபோது சூரியன் மலைகளுக்குப் பின்னால் மெதுவாய் இறங்கிக் கொண்டிருந்தான். பசும் மலையில் மஞ்சள் ஒளிச் சிதறல்கள் ஏகப்பட்ட வண்ணங்களை ஒரே நேரத்தில் உண்டாக்கிக் கொண்டிருந்தன. அடர்ந்த மரங்களின் பூக்களும், இலைகளும் வெவ்வேறு வண்ணங்களை ஒரே சமயத்தில் பிரதிபலித்துக் கொண்டிருந்தன. வண்டியிலிருந்து கீழே இறங்கிய சீராளன் “ஆசிரமமெல்லாம் வேணாம்யா” என சலித்துக் கொண்டான். “பெண் துறவிகள்லாம் இருப்பாங்கயா” எனக் குறும்பாய் தாமஸ் சொன்னதும் சீராளன் முறைத்தான்.

வண்டியைக் கோயிலை ஒட்டி நிறுத்திவிட்டு சீராய் நீர் ஓடிக் கொண்டிருந்த ஆற்றில் இறங்கினோம். ஆற்றின் அடுத்த முனையில்தான் ஆசிரம் இருக்கிறது. இடையே இருக்கும் சிறு பாறைகளின் மீது கால் வைத்தபடி ஆற்றைக் கடந்தோம். பெயர் பலகை எதுவுமில்லாத உயரமான தடுப்பு சுவர் கட்டிய ஆசிரம் ஒன்று எங்களை வரவேற்றது. பத்து வருடங்களுக்கு முன்னர் கம்பி வேலிதாம் இருந்தது. துறவிகளுக்கு இடையூறு அதிகரித்திருக்க வேண்டும் என நினைத்தபடியே உள்ளே போனேன்.

வரவேற்பரையில் அமர்ந்திருந்த பெண்ணிடம் சுவாமி ப்ரேம் அய்க்காவின் நண்பன் என சொன்னேன். அவரிடம் ஒரு சிறிய மாறுதல் தெரிந்தது. புன்னகையோடு வரவேற்றார். ”ஸ்வாமி இப்ப இங்க இருக்காரா?” என்றேன். ”இல்லை அமெரிக்காவில் இருக்கிறார் அடுத்த மாதம் வருகிறார்” என மென்மையாய் பதில் வந்தது. எனக்கு சற்று ஆச்சரியமாகக் கூட இருந்தது. ஆச்சரியத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ”இங்கு சில நாட்கள் தங்கிப் போக வந்திருக்கிறோம்” என்றேன். தாராளமாக எனப் புன்னகைத்தாள் மேலும் விதிகள் தெரியுமில்லையா என்றாள்.தெரியும் என புன்னகைத்தேன். இரண்டு குடில்களுக்கான சாவிகள் தரப்பட்டன.நன்றி சொல்லிவிட்டு குடிலுக்கு வந்தோம்

”என்னய்யா உங்காளு அமெரிக்கா போய்ட்டானா? என்னய்யா நடக்குது இங்க?” என சிரித்தபடியே கேட்டான் குணா. எனக்கும் ஒன்றும் தெரியாததால் யாருக்குத் தெரியும் என மையமாய் பதில் சொல்லி வைத்தேன். இரவு உணவிற்கு பிறகு அனைவரும் சந்திக்கலாம் என்றபடி நானும் சீராளனும் ஒரு குடிலிற்கும், குணாவும் தாமசும் ஒரு குடிலிற்குமாய் பிரிந்தோம்.

இரவு உணவிற்கு பின்பு நால்வரும் குடிலுக்கு முன்பிருந்த புல்வெளியில் அமர்ந்து கொண்டோம். எங்கிருந்து எப்படித் துவங்குவது என்பதுதாம் யோசனையாக இருந்தது.
”முதல்ல நமக்குள்ள சில ஒழுங்குலாம் வேணும்” என ஆரம்பித்தான் குணா.மூவரும் ஆமோதித்தோம். “குடி, குட்டி இதையெல்லாம் கொஞ்ச நாள் நிறுத்தி வைக்கனும்… கசாமுசான்னு குடிச்சிட்டு தேவையில்லாத பிரச்சின பண்னிலாம் மாட்டிக்க கூடாது… யாருக்கும் பெண் சகவாசம் இருக்க கூடாது... தனியா எங்கயும் போய் குடிக்க கூடாது… வேல.. வேல.. வேலதான். நல்லா செட் ஆவுற வரை கொஞ்சம் ஜாக்கிரதயாதான் இருப்பமே” என்றான். எல்லாரும் ஒத்துக் கொண்டோம்.

தாமஸ் ஆரம்பித்தான். “தோப்பு சம்பவம் விபத்துன்னு முடிவாகிடுச்சாம். நம்பத் தகுந்த இடத்தில இருந்து செய்தி வந்திருக்கு. ஸோ மதுரைக்கே போய்டலாம். இன்னொரு வண்டி வாங்குவோம் சிம்மக்கல்ல சின்னதா ஒரு இடம் பாத்து ட்ராவல்ஸ் ஒண்ணு ஆரம்பிப்போம். வண்டிய நாமளே ஓட்டிக்கலாம். சீராளனுக்கு கொஞ்சம் ஆந்திரா கேங்குகளோட தொடர்பு இருக்கு. எனக்கும் மெட்ராஸ் பாண்டிச்சேரி பக்கலாம் ஆளுங்க இருக்காங்க... தனியா பன்ரோங்கிறத எல்லாருக்கும் சொல்லனும்... எந்த பிரச்சினனாலும் டக்குனு முடிச்சி குடுப்பாங்க ங்கிற நம்பிக்கையும் மார்க்கெட்ல கொண்டு வரனும்... இதுக்குலாம் பயங்கரமா உழைக்க வேண்டி வரும்”

பண்ணிடலாம் என்றேன். எல்லாரும் விடுதலையாய் உணர்ந்தோம். திட்டமிடுதலுக்கு அதிக நாட்கள் தேவைப்படும். எதைத் திட்டமிடுவது? எப்படி இயங்குவது? என்றெல்லாமிருந்த தடைகள் மெதுவாய் விலகத் துவங்கின. ”ரெண்டு நாள் இங்க தங்கிட்டு இன்னும் பக்காவா ப்ளான் பண்ணிட்டு போவமா?” என்றேன். அனைவரும் ஆமோதித்தனர். ”நம்மோட எல்லா நடவடிக்கைக்கும் ஒரு தெளிவான திட்டத்த வச்சிப்போம். பின்ன வேலய ஆரம்பிப்பம். இந்த இடம் ரொம்ப பிரமாதமான இடம். மனசு புத்தி எல்லாம் ஒரே இடத்துல நிக்கும் இங்க திட்டமிடுறதுதான் வசதி”என முடித்தேன்.

அனைவருமே சுறுசுறுப்பாய் உணர்ந்தோம். இனி வரும் நாட்களை இதே பரபரப்பு ரீதியில் எதிர்கொள்ள வேண்டும். எல்லோரும் படுக்கைக்குத் திரும்பினோம்.

ஓவியம். பிகாஸோ
-மேலும்

Saturday, November 6, 2010

அத்தியாயம் 5. தாண்டவம்

சீராளனை முத்தமிட்டதைப் பார்த்து குணாவும் தாமசும் சிரிக்க ஆரம்பித்தனர். “தாமஸ் சரக்கு போடு” என்றேன் சப்தமாக. இதோ என ஐந்தாவது ரவுண்டை ஊற்றத் துவங்கினான். தள்ளாடியபடியே அந்த டம்ளரை எடுத்து ஒரே மூச்சில் குடித்தேன். “டீசண்ட் குடி எங்கபா காணாம பூடுச்சி?” என நிதானமாய் கேட்டான் குணா. எனக்கு இப்போது சந்தேகம் வந்தது. குடி எப்போது நம்மை முழுமையாய் வெளிப்படுத்துகிறது?.. குடித்த பின்னரா? அல்லது குடித்துக் கொண்டிக்கும்போதா? நிதானம் இருக்கும்போதா? அல்லது நிதானம் தவறியபோதா? எது உண்மையான நான்? போதையற்ற நானா? போதையுள்ள நானா? இன்று ஏன் இவர்கள் பேசும் எல்லா வார்த்தையும் அர்த்தம் பொதிந்ததாக இருக்கிறது? கேள்விகள்.. கேள்விகள் ஏகப்பட்ட கேள்விகள்.. அழுத்தம் தாங்காது தலையை உதறியபடி சீராளனின் சட்டையைக் கெத்தாய் பிடித்தேன். “சீராளா இப்ப, இந்த இருட்ல, தண்ணி ஓடுர கால்வாய்ல, வுழுந்து பொரளனும்... பொண்ணு, கிளவி எவளா இருந்தாலும் பரவால்ல... ஆனா இப்ப.. இந்த நிமிஷம் வேணும்” என்றேன்.

தாமஸ் எழுந்து வந்தான். “வா சாப்டலாம்” எனக் கூப்பிட்டான். “நோ சாப்பாடு ஒன்லி வுமன்” எனக் குழறலாய் கத்தினேன். “யெஸ் யூ வில் கெட் இட் ஃபர்ஸ்ட் ஈட்”
நான் கோணலாய் மடங்கி உட்கார்ந்தேன். குணா ஒரு தட்டில் சாதம் போட்டு மீன் குழம்பு ஊற்றினான். மீன் துண்டுகளை முள் எடுத்து தனியே தட்டில் வைத்தான் சீராளன். நான் மிகுந்த பசியோடும் துவளும் போதையோடும் சாப்பிட ஆரம்பித்தேன். மற்றவர்களும் எதுவும் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தனர். குணா டம்ளரை தாமஸ் பக்கமாக நகர்த்தினான். தாமசும் குணாவும் ஆறாவது ரவுண்டை மிக நிதானமாக ஆரம்பித்து வேகமாக முடித்தனர். சீராளன் ஏழாவது ரவுண்டில் தன் டம்ளரையும் சேர்த்து நகர்த்தினான். நான் சாப்பிட்டு முடித்தேன். மேலும் சாதம் வைத்தபோது போதும் என்றேன். தண்ணீர் குடித்ததும் லேசாய் போதை நிலை கொண்டது. “எதுவும் சாப்டல… டயர்ட் வேர.. அதான் தூக்கிருச்சி” என்றேன். மூவரும் லேசாய் புன்னகைத்தபடி சாப்பிட்டனர். “தூக்குறதுக்கு தான குடிக்கிறோம் இல்லனா எதுக்கு இந்த கருமத்த குடிச்சிகிட்டு” என்றான் குணா. நிலா மிகப் பிரகாசமாய் இருந்தது. நான் சற்றுத் தள்ளிப் போய் நின்று சிகெரெட் பற்ற வைத்துக் கொண்டேன். இந்த இரவும் போதையும் எப்போதும் அனுபவித்திராத ஒன்றாக இருந்தது. விஜியுடனான கடற்கரை இரவு நினைவில் வந்து போனது. சிகரெட்டை முடித்து காலில் நசுக்கியபோது அனைவரும் சாப்பிட்டு முடித்திருந்தனர்.

குணாவும் தாமசும் உள்ளே படுக்கப் போனார்கள். சீராளன் செல் போனில் யாரையோ அழைத்தான்.
நாந்தான்
…….
நம்ம பிரண்டு ஊர்ல இருந்து வந்திருக்காப்ல. ஆசப்படுராரு.
……..
மீனாட்சி?
…….
அப்புறம் என்ன கூட்டிகிட்டு வந்து சேரு
…….
“நீ எதுக்கா? சாயந்திரம் பண்ணது போதைக்கு முன்ன… இப்ப பின்ன… பின்ன்ன..” என அழுத்திச் சொல்லியபடியே விக்கி விக்கி சிரித்தான் சீராளன்.

சற்று நேரத்தில் இரண்டு பெண்னுருவங்கள் தொலைவில் நடந்து வந்து கொண்டிருந்தன. நாங்கள் இருவரும் வலது புறமாய் இருந்த கிணற்றடிக்கு நகர்ந்தோம். நிலா வெளிச்சத்தில் கிழவி என சொல்லப்பட்ட பேரிளம் பெண் ஒளிர்ந்தாள். இவளயா கிளவி என்றார்கள்! பாவிகள். சீராளன் ஆசையாய் போய் கட்டிக் கொண்டான். அவள் கூச்சத்தில் உதறினாள். “என்னம்ல நீ” என்றாள் லேசாய் கிறங்கியபடி. மீனாட்சி ஆசையும் கூச்சமுமாக என்னைப் பார்த்தாள். நல்ல திடமான உடல். குண்டு முகம். முப்பத்தைந்து வயதிருக்கலாம். நான் அவள் கையைப் பிடித்தேன்
“பேர் என்ன”
“பேர் எதுக்கு”
“சும்மாதான் தெரிஞ்சிக்க” என்றபடியே அவளின் தோளில் கை போட்டேன். அவள் என் கையை விலக்கியபடியே “அங்கிட்டு போய்டலாம்” என இருளுக்காய் கை காண்பித்தபடி சிணுங்கினாள். சீராளனும் அவளும் “நாங்க எங்க எடத்துக்கு போறோம்” என சிரித்தபடியே இருளில் எங்கோ மறைந்தார்கள். நான் இவளைக் கூட்டிக் கொண்டு கிணற்றில் இறங்கினேன். நிலா கிணற்று நீரில் தளும்பிக் கொண்டிருந்தது. “கெணத்துக் குள்ளயா?” என்றாள் “ஆமா” “அய்யோ குளிரும்” என வர மறுத்தாள். ”குளிராது” என்றபடியே அவளின் உதடுகளைக் கவ்விக் கொண்டேன். கிணற்றின் உள்ளே சதுரமாய் சுற்றிலும் சிமெண்ட் திட்டு கட்டப்பட்டிருந்தது. சிமெண்ட் திட்டுக்களில் பாதம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் இருந்தது. அத் திட்டுக்களிலிருந்து மேலே வர படிக் கற்கள் சுற்றுச் சுவரில் பதிக்கப்பட்டிருந்தன. மிக வசதியான நேர்த்தியான கிணறு,

மீனாட்சியின் பேரழகைப் பார்த்தபின்பு என் போதை விலகி மறைந்து மூளை பரபரவென விழித்துக் கொண்டது. அவளை படிக்கட்டுகளின் வழி கீழிறக்கி சிமெண்ட் திட்டில் நிற்க வைத்து அணைத்துக் கொண்டேன். முத்தமிட்ட படியே ஆடைகளை கழற்றினேன். அவள் அத்தனை கூச்சம் இல்லாதவளாகத்தான் இருந்தாள். ஆடைகளை கழற்றி எறிந்த அவளுடல் வெகு திண்மமாக இருந்தது. நிலா வெளிச்சத்தில் அவளொரு சிலையைப் போல் ஒயிலாக நின்று கொண்டிருந்தாள். அத்தனை கனமான முலைகளை நான் அதற்கு முன்பு பார்த்ததில்லை. அகன்ற இடுப்பும் மிகப் பெரும் தொடைகளையும் கொண்ட வாளிப்பான உடல். என்னால் அவ்வுடலை வெற்றி கொள்ள முடியாதோ என அடிவயிற்றில் பயம் லேசாய் எட்டிப் பார்த்தது. நான் அவளின் மீது ஒரு வேட்டை நாயைப் போலப் பாய்ந்தேன். பாதம் மூழ்கும் நீரில் அவளுடலைக் கிடத்தினேன். நீர் விலகியது. அவளின் பருத்த ஆகிருதியில் என்னை நுழைத்தேன். வேகம்.. வேகம்.. …நிதானம். வேகம் நிதானம். அவள் ஒரு கட்டத்தில் பைத்தியமானாள். என்னை அப்படியே அள்ளி அவளின் துவாரங்களுக்குள் நுழைக்க முயன்று தோற்றாள். பின்பு என்னை நீரில் கிடத்தி மேலே அழுத்தமாய் பரவி மெதுவாய் விழுங்க ஆரம்பித்தாள். நானும் பைத்தியமானேன்.

அப்படியே இருவரும் மயங்கிக் கிடந்தோம். ஏதோ அரவம் கேட்டு விழிக்கையில் சீராளனும், அந்த ஒளிரும் பேரிளம் அழகியும் ஆடைகளில்லாமல் படிக்கட்டுகளில் இறங்கி வந்து கொண்டிருந்தனர். அப்பேரிளம் ஒளிரழகி என்னருகில் வந்து தன் இரு கைகளினால் நீரில் மிதந்து கொண்டிருந்த என்னுடலை ஏந்திக் கொண்டாள். சீராளன் கால்கள் விரித்துப் படுத்துக் கிடந்த மீனாட்சியின் யோனித் துவாரத்தினுள் தலை வழியாய் உள்ளே நுழைய ஆரம்பித்தான். அப்பேரிளம் அழகி என்னை கையில் ஏந்திக் கொண்டு நீரில் குதித்தாள். நாங்கள் ஆழ, ஆழ போய் கொண்டிருந்தோம். சுவாசம் சீராய் இருந்தது. மூச்சுத் திணறல் இல்லை. நீரின் அடியாழத்தினுள் இதே போன்றதொரு சிமெண்ட் தரை இருந்தது. அதில் என்னை மிக மெதுவாய் கிடத்தினாள். என்னுடைய கால்கள் இரண்டும் மறைய ஆரம்பித்திருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. பாதங்கள் மெல்ல மீன் வாலாக மாறத் துவங்கியிருதன. அவள் அவசரமாய் என் குறியை சுவைக்க ஆரம்பித்தாள். சீக்கிரம் அது காணாமல் போய்விடும் என்கிற பதட்டம் அந்த சுவைப்பில் இருந்ததை உணர முடிந்தது. எனக்கும் பயம் துவங்கியது. அப்பேரிளம் அழகியை மல்லாக்கத் தள்ளி கால்களை விரித்து தலையை அவளின் யோனியினுள் திணிக்க ஆரம்பித்தேன். அவள் அலறினாள். என் முகம் முழுவதும் வழுவழுப்பாய் உள்ளே போனது. அவள் யோனிக்குள் ஒரே நிசப்தம். கடலின் ஆழ அமைதி. காற்றே இல்லாத மெளன வெளி. எனக்கு மூச்சுத் திணற ஆரம்பித்தது. தாகத்தில் நாக்கு வறண்டது. கழுத்து அவளின் பிளவுகளில் சிக்கிக் கொண்டிருக்க கூடும். தலையை அசைக்க முடியவில்லை. நான் மூச்சுக்காய் அலைந்தேன். சாகும் நொடியின் வாலைத் தொட்டேன். திடீரென சுவாசம் கிட்டியது. நுரையீரல் வாய் பிளந்து காற்றை ஏற்றுக் கொண்டது. என்னருகில் பொத் தென ஒரு உடல் நீரில் விழும் சப்தம் கேட்டது. கண் விழித்துப் பார்த்தேன் சீராளன் கையில் ஒரு தடியினை வைத்துக் கொண்டு நின்றிருந்தான். யாரோ ஒரு தடித்த ஆண் கிணற்று நீரில் விழுந்திருந்தான். பின் மெல்ல நீந்தி கரையேறிக் கத்தினான்.

“தேவுடியா பசங்களா எங்க வீட்டு பொம்பளங்கள கூட்டி வந்து எங்க வீட்டு தோப்புலயே நட்ட நடு ராத்திரில ஜல்சாவாட பன்றீங்க”
அப்போதுதான் எனக்கு உறைத்தது அவன் என் கழுத்தில் கால் வைத்து அழுத்திக் கொல்ல முயன்றிருக்க கூடும். சரியான நேரத்தில் சீராளன் காப்பாற்றி இருக்கிறான். அருகில் மீனாட்சி மண்டை பிளந்து கிடந்தாள். சற்று நன்றாய் உற்றுப் பார்க்கையில் நீர் முழுக்க இரத்தமாகியிருந்தது.

“இப்படி எவன் எவன் கூடவோ கால விரிச்சி கெடந்திருக்கியேடி” என மீனாட்சியின் உடலைப் பார்த்தபடி கரையில் உட்கார்ந்து அழுதான்.

சீராளன் தடியை கையில் வைத்தபடி, என்னை எழுந்திரிக்க சொன்னான். நான் எழுந்து அவன் பக்கமாய் போய் நின்றேன். அவன் அணிந்திருந்த லுங்கி முழுக்க இரத்தமாகி இருந்தது. “இந்த தாயோலி ஓனரம்மாவையும் கொன்னுட்டான்” என்றபோது சீராளனின் உடல் நடுங்கியது. சிமெண்ட் திட்டில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தவன்
“இந்த ரெண்டு தேவடியாளுங்கள மட்டுமில்லடா, உங்களையும்தான்” என்றபடியே என் மீது பாய்ந்தான்.

சீராளன் வைத்திருந்த தடி மீண்டும் அவன் தலையைத் தாக்கியது. அவன் சமாளித்து எழுந்தான். நான் சுதாரித்து அவனின் அடிவயிற்றில் தலையைக் கொண்டு மோதினேன். ஹம்மா வென அடிவயிற்றிலிருந்து அலறியபடி மீனாட்சியின் உடல் மீது விழுந்தான். இரண்டு உடலும் புரண்டு நீரில் விழுந்தன. சீராளன் ஓடிப்போய் மீனாட்சி உடலின் காலைப் பிடித்துக் கொண்டான். நான் நீரில் விழுந்தவனின் தலை முடியைப் பிடித்திழுத்து வேகமாய் சிமெண்ட் திட்டில் மோதினேன். இரத்தம் கொப்பளித்து. நீரின் கருப்பு வண்ணம் மெல்ல சிவப்பு வண்ணத்திற்கு மாறிக் கொண்டிருந்தது. அவன் அப்போதும் உடலை அசைத்தான். சுவாசத்தினுக்காய் தலையை நீர்ப்பாம்பு போல வெளியில் நீட்டினான். நான் அவன் தலையை நீருக்குள் அழுத்தி வலுவாய் அவன் திமிறல்களை அட்க்கினேன். சற்று நேரத்தில் அவன் உடல் துவண்டது.

சுவாசத்தை சோதித்து விட்டு அவனைத் தூக்கி சிமெண்ட் திட்டில் கிடத்தினேன். சீராளன் மீனாட்சியின் உடலை தூக்கி திட்டில் போட்டிருந்தான். இருவரும் களைத்துப் போயிருந்தோம்.

“இது இப்படி ஆகும்னு நெனக்கல பாஸ் சாரி” என்றான்.
“பரவால்ல நீ போய் இன்னொரு பாடிய தூக்கிட்டு வா. மூணுதையும் சேர்த்து கட்டி இதுல போட்டுட்டு போய்டலாம்” என்றேன்.

சீராளன் தலயைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தான். “அது சரிப்படாது.. ஓனரம்மா புருசன் காலைல எழுந்து மூணு பேரயும் தேட ஆரம்பிப்பான்.. போலிசு வரும்… இங்க தங்கியிருக்க நம்மள கேள்வி கேட்கும்…”
“நீங்க எவ்ளோ நாளா இங்க இருக்கிங்க?”
“ரெண்டு மாசமா”
“நீங்க மூணு பேர் இங்க இருக்கிறது எவ்ளோ பேருக்கு தெரியும்?”
“இந்த ஓனரம்மா அவ புருசன் அப்புறம் இந்த மீனாட்சி அவ புருசன்”
“ஆக நாலு பேருக்குதான் தெரியும்”
“ஆமா”
“தோப்புக்கு வேலைக்கு வர்ரவங்க?”
“பகல்ல நாங்க யாரும் இங்க இருக்கிறதில்ல யார் மூஞ்சும் யாருக்கும் தெரியாது”
“நல்லதா போச்சு”.
“இப்ப ஓனரையும் போட்டுர்லாம். எல்லா பாடியயும் ஒரே வீட்ல வச்சி நெருப்பு வச்சிடலாம். நாம விடியறதுக்குள்ள கெளம்பிடுவோம்”
“சரி நான் போய் தாமசயும் குணாவயும் கூட்டி வர்ரேன்.. நீ மெல்ல இந்த ரெண்டு பாடியயும் மேல தூக்கி போடு” என சீராளன் கிளம்பி சென்றான்.

எனக்கு தலை வலித்தது. அப்போதுதான் உடலில் துணிகள் இல்லாமல் இருப்பது உறைத்தது. எழுந்து போய் ஆடைகளை அணிந்து கொண்டேன். பாக்கெட்டில் சிகெரெட்டும் தீப் பெட்டியும் இருந்தது. மிகுந்த தவிப்புடன் சிகரெட்டைப் பற்ற வைத்தேன்.

தீயொளியில் மீனாட்சியின் சிதைந்த தலை கோரமாய் இருந்தது. கல்லைத் தூக்கி வந்து தலையில் போட்டுக் கொன்றிருக்கிறான் அது கூட தெரியாது ஏதோ கனவில் திளைத்துக் கொண்டிருந்திருக்கிறேன். என் மீது எனக்கே கோபமாய் வந்தது. மீனாட்சியின் சிதைந்த உடலைப் பார்க்க மனம் மீண்டும் விரும்பியது தீக்குச்சியினைப் பற்ற வைத்தேன். இரு கால்கள் அகற்றி, தலை நசுங்கி, முகம் சிதைந்து, உடல் முறுக்கிக் கிடந்தது. சற்று நேரத்திற்கு முன்பு வரை சிலையைப் போலிருந்த உடலிது. வெற்றி கொள்ள பயப்பட்ட பேருடல். நான் தாங்கமாட்டாது கத்தினேன். அப்படியே மடங்கி உட்கார்ந்து விம்ம ஆரம்பித்தேன்.

தாமஸ் படியில் இறங்கி வந்தான். ”அழாத. இது என்ன.. இன்னும் பாக்க வேண்டியது எவ்ளோ இருக்கு… எழுந்திரு” என்றான். நான் எழுந்து நின்றேன். மீனாட்சியின் உடலைத் தூக்கினேன். தாமஸ் அவள் கணவனின் உடலைத் தூக்கினான். மெல்ல படிகளை ஏற ஆரம்பித்தோம்.

கரைக்கு வந்ததும் இரண்டு உடல்களையும் தரையில் போட்டோம். மூச்சு வாங்கியது. மீனாட்சியின் உடல் எப்படியும் எண்பது கிலோவிற்கு மேலிருக்கும். அவனோ நூறு கிலோ இருப்பான். சற்று மூச்சு வாங்கலிற்கு பிறகு இருவரும் கால்களைப் பிடித்துக் கொண்டு அவ்வுடல்களை இழுத்துக் கொண்டு தோப்பின் நடுவிலிருக்கும் ஓனர் வீட்டுக்காய் போனோம்.

நாங்கள் மூச்சு வாங்கியபடி அங்கு போகையில் குணா ஏற்கனவே ஓனரின் கழுத்தை அறுத்திருந்தான். அறுபது வயது மதிக்கத் தக்க உடல். மிகவும் நைந்து போயிருந்தார். ஓனரம்மாவின் துக்கம் நியாயமானதுதான் எனத் தோன்றியது. சீராளன் ஓனரம்மாவின் உடலைத் தூக்கி வந்தான். நான்கு உடல்களையும் வீட்டின் கூடத்தில் கிடத்தினோம். பெண்கள் உடலுக்கு உள்ளே இருந்து சேலையை கொண்டு வந்து சுற்றினோம். குணா உள்ளறைக்கு சென்று பீரோவைக் குடாய்ந்தான். பணக்கட்டுகளையும், நகைகளையும் ஒரு தோல் பையினுள் போட்டுக் கொண்டு வெளியில் வந்தான்.“எதுக்கு வீணா தீயில எரியனும்னுதான்” என்றான். தாமஸ் மற்ற அறையில் புகுந்து அலசினான். விலை உயர்ந்த பொருள் என்றெல்லாம் ஒன்றும் அவ் வீட்டில் இல்லை. மேலும் சில பணக் கட்டுகளை அரிசிப் பானையிலிருந்து குணா கொண்டு வந்தான். வீட்டை மேலும் தீவிரமாய் அலசியதில் இன்னும் சில ஆயிரம் ரூபாய் கட்டுக்கள் கிடைத்தன. போதுமென தோன்றியது.
தாமஸ் கட்டளைகளை பிரப்பிக்கத் துவங்கினான்.

“குணா நீ போய் பம்பு செட்ட போடு கிணத்துல இரத்தம் போகனும்..”
”சீராளா நீ நாம தங்கி இருந்த வீட்டுக்கு போ.. பாத்திரம், துணி எல்லாத்தயும் மூட்ட கட்டி கார் டிக்கில போடு... அங்க யாரும் இருந்ததுக்கான அடையாளம் இருக்க கூடாது.. கதவ பூட்டிட்டு இங்க வா..”
தாமஸ் என்னைப் பார்த்து ”தண்ணி வர்ர காவாய இந்த வழிக்கா வெட்டி விடு தண்ணி தோப்பு முழுக்க பாயட்டும். ரெண்டு பாடிய கெணத்தடில இருந்து இழுத்துட்டு வந்திருக்கோம் இரத்தம் ஒழுகி இருக்கலாம்” என்றான் எல்லாரும் விலகினோம்.
எல்லாவற்றையும் முடித்து விட்டு பத்தே நிமிடத்தில் திரும்பி வந்தோம்.
தாமஸ் வாயில் சிகெட்டை வைத்தபடி பேசினான்

“குணா நீ முன்ன போய் வண்டிய கிளப்பு. கார் தடம் தெரியுமா ?”
“இல்ல தெரியாது.. காஞ்ச திடமான மண்தான்”
“சரி தயாரா வச்சிக்க போ”
“உள்ள போய் கேஸ தொறந்து விடு சீராளா”
“வா வெளில போய்டலாம்” என்றபடியே என் கையைப் பிடித்துக்கொண்டான். வீட்டை விட்டு வெளியேறினோம்.
சீராளன் சமையலறைக்குப் போய் கேஸைத் திறந்து விட்டான். உள் கதவைப் பூட்டி விட்டு கம்பியில்லாத சன்னலின் வழியே வெளியே குதித்தான். சன்னல் கதவைத் திரும்ப மூடினான். மூவரும் மெளனமாக அகன்றோம். சற்றுத் தொலைவிலிருந்து தாமஸ் தீக்குச்சியின் மருந்து முனையை தீப்பெட்டியில் 90 டிகிரியில் நிறுத்தி நடு விரலால் சுண்டி விட்டான். அது தீயுடன் விரைந்து கதவருகில் விழுந்து சற்று நொடி கண்ணிமைத்து குபீரெனப் பற்றியது. நாங்கள் விலகிச், சிதறி ஓடினோம். அந்த வீட்டின் மின்சார ஒயர்கள் பற்றிக் கொண்டு வெடித்தன. வீட்டின் ஓடுகள் சிதற ஒரு பெரும் சப்தம் கேட்டது. தீ ஒரு விலங்கென ஆங்காரமாய் மேலெழுந்தது. தென்னை மரத் தோப்பு நிலவைத் துரத்திவிட்டு தீயில் ஒளிர்ந்தது. நாங்கள் வண்டியில் பாய்ந்து ஏறி, விரைந்து, வெளியேறினோம்.

நான் தலையைப் பிடித்துக் கொண்டபடிக் கத்தினேன் “நாளைக்கு காலை நமக்கு கொல்லி மலைல விடியனும்” குணா இரண்டே நிமிடத்தில் திருச்சி சாலையைத் தொட்டான். வண்டி ஒரு ராட்சத மிருகத்தைப் போல சாலையில் பாய்ந்தது.

- மேலும்

Thursday, November 4, 2010

அத்தியாயம் 4. சத்ரு

விஜயலட்சுமி ஆடைகளற்று கட்டிலில் சிதறிக் கிடந்தாள். நாகராஜ் அவளின் சரிந்திருந்த இடது முலையை வலக்கையால் பற்றியபடி, கழுத்து இடைவெளியில் முகம் புதைத்து, வாயில் எச்சில் ஒழுக தூங்கிக் கொண்டிருந்தான். சில நொடிகள் இமைக்க மறந்துவிட்டு அப்போதுதான் போட்ட படுக்கையறையின் சுவிட்சை அவசரமாய் அணைத்து விட்டு வெளியில் வந்தேன். இதயத் துடிப்பை கட்டுப்படுத்த முனைந்து தோற்றேன். ஆழமாய் சுவாசத்தை இழுத்து விட்டுக் கொண்டேன். மாடிக்கு போய் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டேன். ஆனால் இது இப்படி இருந்திருக்க வேண்டாம்தான். அடிவயிற்றிலிருந்து கசப்பு மிகுந்து வந்தது. வாழ்வில் முதன் முறையாய் வாய் விட்டு அழவேண்டும் போலிருந்தது. என் மீது கட்டுங்கடங்காத ஆத்திரம் பொங்கியது. மீண்டுமொரு சிகரெட்டைப் பற்ற வைத்தேன். சப்தமெழுப்பாது கீழே போய் சமையலறை கப் போர்டிலிருந்து பிராந்தி புட்டியை எடுத்து அப்படியே தொண்டையில் சரித்துக் கொண்டேன். வாய் தொண்டை வயிறு எல்லாம் எரிந்தது. இருளில் கண்கள் மூடி நின்று கொண்டிருந்தேன். புட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு மாடிக்குத் திரும்ப வந்து மீண்டுமொரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டேன்.

நான்கு நாட்கள் முன்பு என் நிறுவனம் சார்பில் ஒருவன் ப்ளூஸ்டார் ஓட்டலில் வைத்து சந்திக்க வந்திருந்தான். இங்கு வந்து ஆறு மாதங்கள் ஓடிப் போயிருந்தன. ஏதாவது அவசர வேலையாய் இருக்கலாம் என எதிர்பார்த்திருக்கவே “அம்பாசமுத்திரம் போகிறேன் வர இரண்டு மூன்று நாட்களாகலாம். நீ உன் அம்மா வீட்டில் போய் இரு”வென விஜியிடம் சொல்லி விட்டுக் கிளம்பினேன்.

இந்த வீடிருப்பது ஈஸ்வரன் கோவில் தெருவின் மத்தியில், கிட்டத்தட்ட பிரெஞ்சு வீதிகள் இந்த வீட்டிலிருந்துதான் துவங்கும். மொட்டை மாடியிலிருந்து பரந்த கடலைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். கடைசி மூன்று மாதத்தை நானும் விஜியும் இந்த வீட்டில்தான் கழித்தோம். என் வாழ்வின் மிக நிம்மதியான நாட்களாக இவை இருந்தன. என்னை ஒரு குழந்தையைப் போல் விஜி பார்த்துக் கொண்டாள். இந்த மூன்று மாதங்களில் ஒரு முறை கூட எங்களுக்குள் சோர்வுகளோ கசப்புகளோ இல்லாதிருந்தது. அவள் என்னை ஆழமாக நேசித்தாள். நான் அவளின் நேசத்தின் ஆழத்தினுக்குப் போக முயன்றுத் தோற்றுக் கொண்டிருந்தேன். விஜியை முறைப்படித் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவள் ஏற்கனவே கட்டியிருந்த தாலியை கழற்றி வைத்து விட்டாள். திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று கூட அவள் வற்புறுத்தவில்லை. என்னிடம் எதையுமே அவள் எதிர்பார்க்க வில்லை. நாங்கள் நன்றாய் குடித்து, சமைத்து, சாப்பிட்டு, புணர்ந்து வாழ்வைக் கொண்டாடினோம். உடலின் எல்லா உச்சங்களையும் தொட்டோம். காமத்தின் அத்தனை சாத்தியங்களையும் நிகழ்த்திப் பார்த்தோம். எங்களுக்குள் கூச்சமோ அச்சமோ இல்லாதிருந்தது. நான் அவளுடலையும் அவள் என் உடலையும் பரஸ்பரம் கொண்டாடினோம். வீட்டிலிருக்கும்போது ஆடைகள் அணியும் வழக்கத்தை நாங்கள் இருவருமே விட்டிருந்ததால் அவளின் பேரழகு, கதவுகள் அடைக்கப்பட்ட வீட்டின் மென்னிருளில் எப்போதும் பிராகாசித்துக் கொண்டிருக்கும். என்னுடைய எல்லா முரண்களையும், கிறுக்குத்தனங்களையும் புன்னகையோடும் மிகுந்த இசைவோடும் ஏற்றுக் கொண்டாள்.

அன்று காலாப்பட்டிலிருந்து மறு நாள் மதியம்தான் முதலியார் பேட்டை வீட்டுக்குத் திரும்பினோம். அக்கம் பக்கம் வீடுகளின் சுவாரஸியத்தை நாங்களிருவரும் கூட்டியிருப்போம் என்பதை பல ஜோடிக் கண்களின் குத்தல்களிலிருந்து உணர்ந்து கொள்ள முடிந்தது. அடுத்த நாள் விஜியின் அம்மாவை ஆஸ்பத்திரியிலிருந்து கூட்டி வந்துவிட்டோம். அதற்கடுத்த நாள் இந்த வீட்டிற்கு விஜியைக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டேன்.

கடந்த மூன்று மாதத்தில் விஜியை விட்டு ஒரு நிமிடம் கூட பிரிந்திருந்ததாய் நினைவில்லை. காய்கறி மார்க்கெட்டிலிருந்து, மீன் கடைவரை இணைந்துதான் சென்றோம். கழிவறைக் கதவுகளைக் கூட அடைக்கும் வழக்கமில்லாதிருந்தது. கிடைத்த சில போதை தருணங்களில் என் வேலை குறித்து மேலோட்டமாய் சொல்லியிருந்தேன். அவள் அதைப் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.. என்னை எந்த வகையிலும் கேள்வி கேட்காதிருந்தாள். அதுதான் அவளிடம் எனக்குப் பிடித்தமானதாக இருந்தது. நம் சூழலில் உறவுகள் அத்தனை இணக்கமானதில்லை. எல்லாருக்குள்ளும் விழித்திருக்கும் எஜமான் - அடிமை மனோபாவம்தான் பெரும்பாலான உறவுகளில் நிறைந்திருக்கிறது. எங்களுக்குள் அப்படி எந்த சிக்கலும் இல்லாதிருந்தது. சுதந்திரத் தன்மையை எல்லா வகையிலும் உணர்வதென்பது மிகப்பெரிய விடுதலை. நாங்கள் கிட்டத்தட்ட கானக விலங்குகளைப் போலத்தான் வாழ்ந்தோம். விஜியின் பாண்டிச்சேரி பின்புலத்தைப் பயன்படுத்திக் கொண்டு பிரான்ஸ் சென்றுவிடும் திட்டமிருந்தது. என்னிடமிருந்த சேமிப்பு அங்கு புதிய வாழ்வைத் துவங்க போதுமெனதான் தோன்றியது. அவ்வப்போது பிரான்ஸ் கனவுகளிலேயும் மூழ்கிக் கொண்டிருந்தோம். கோடார்ட்,ஃபெலினி படங்களை பார்த்தும் ஷார் பத்தாயின் கதைகளைப் படித்துமாய் பிரான்சின் மீதான பித்தங்களையும் வளர்த்துக் கொண்டோம்.

(ஃபோர்னோ கதைகளை படித்தபடியும், டிண்டோ ப்ராஸ் படங்களை பார்த்தபடியுமாய் நாங்கள் மேற்கொண்ட கலவிகளையெல்லாம் சொல்லுமளவிற்கு தமிழ் சூழல் இன்னும் தயாராகவில்லை என்பதை உணர்ந்தே, இந்த அத்தியாயத்தியில் சொல்லப்பட்டிருந்த அத்தகவல்களை அழிக்கிறேன். இதுவரைக்கும் எழுதியதைப் படித்து விட்டு கடந்த ஆறு மாத காலமாய் என்னுடன் பேசிக் கொண்டிருக்கும், நட்பு வைத்திருக்கும் ஒரே ஒரு நண்பியிடமிருந்து நேற்று மாலை தொடர்புகளைத் துண்டித்துக் கொளவதாய் குறுஞ்செய்தி ஒன்று வந்திருந்தது. அது கூடப் பரவாயில்லை ‘ஒண்ணாப்பில் ஒண்ணுக்கு போனேன் பத்தாம்ப்பில் பதுங்கி பதுங்கி ளவ் பண்ணேன்’ என்றெல்லாம் எழுதுபவர்களின் அதி தீவிர ரசிகையாக என் நண்பி மாறிப்போயிருக்கிறாள் என்றும், அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவனின் மிக நெருங்கிய தோழியாக மாறிவிட்டிருக்கிறாள் என்றுமாய் அங்கங்கே இருக்கும் இலக்கிய ரகசிய ஏஜெண்டுகளிடமிருந்து வந்த தகவலைக் கேட்டுத்தான் மிகவும் நொறுங்கிப்போனேன். அவள் இதற்குப் பதிலாய் என்னைப் பிய்ந்த செருப்பால் அடித்திருக்கலாம். போகட்டும். ஆனால் இந்த எழுத்துக்கள் என்னவெல்லாம் செய்து தொலைக்கின்றன என்பதை நினைத்தால் குமைந்து கொள்ளாமல் இருக்க முடிவதில்லை. மேலதிகமாய் நான் எழுதுவதைப் படிக்கும் மிக சொற்பமான நண்பர்களும் இந்த நாவலை வெளியிடத் துவங்கிய நாளிலிருந்து என்னுடன் பேசுவதை வலிந்து தவிர்க்கிறார்கள். அவர்கள் எப்போதுமே அதி நல்லவர்கள் தோற்றத்தை பொதுவெளியில் வலிந்து திணிப்பவர்கள்தாம். போகட்டும். எனக்கு எவரின் மீதும் வருத்தமோ, கோபமோ, அன்போ, வெறுப்போ இல்லை. சொல்லப்போனால் எதுவுமே இல்லை. என்னைத் தவிர்ப்பதோ, விலகுவதோ, நெருங்குவதோ அஃது அவரவர்களின் பிரச்சினைதான். இருப்பினும் இவர்களின் மனத்தாங்கலை ஓரளவு கருத்தில் கொண்டு ஆறு பத்திகளில் மிக சுவாரசியமாய் எழுதப்பட்ட மாற்றுக் கலவி, மாற்று உச்ச பத்திகளை வருத்தத்தோடே நீக்குகிறேன்)

என்னைப் பார்க்க ஒருவன் வருதாய் தகவல் கிடைத்தபோது, இப்போது செய்யப்போகும் வேலையே கடைசியாக இருக்கட்டுமென நினைத்துக் கொண்டேன். பாண்டியிலிருந்து சென்னை போக வேண்டியிருந்தது. நான்கு நாட்கள் அங்கேயே தங்கி வேலையை முடிக்க வேண்டி இருந்தது. இடையில் இவளைத் தொடர்பு கொள்ளவும் இல்லை. அம்மா வீட்டிற்கு போயிருப்பாள் என நினைத்தபடிதான் என்னிடமிருந்த மாற்று சாவியினைக் கொண்டு கதவைத் திறந்து நேராய் படுக்கையறைக்கு வந்தேன். கட்டிலில் கிடந்த விஜியின் உடலும்,அவளின் கழுத்து இடைவெளியில் புதைந்திருந்த நாகராஜின் எச்சில் ஒழுகிய முகமும்தான் திரும்ப திரும்ப நினைவில் வந்து கொண்டிருந்தன. இது ஏன் இப்படி முடியவேண்டும்? நான் வாழ்நாள் முழுக்க எவனையாவது கொல்ல கத்தியோடுதான் அலைந்து கொண்டிருக்க வேண்டும் போலிருக்கிறது. எப்போதாவது கவனம் பிசகி நடுத்தெருவில் தூக்கிப் போடக் கூட ஆளின்றி செத்துப்போவதுதான் எழுதப்பட்ட விதியோ? இதை எதைக் கொண்டும் மாற்ற முடியாது போல இருக்கிறது என்றெல்லாம் குமைந்து கொண்டேன். என்னுடைய கழிவிரக்கம் மிகுந்து போதைக்குச் சமமாய் பெருகி அந்த இரவில் தன்னந்தனியாய் அரற்றிக் கொண்டிருந்தது.

நான்கு நாட்களில் என் ஒட்டு மொத்த வாழ்வும் மாறிப்போனதாய் உணர்ந்தேன். இவ்வளவு விரைவில் இத்தனை சம்பவங்கள் எப்படி நிகழ்கிறதெனவும் ஆச்சரியமாய் இருந்தது. என் வாழ்வில் பல வருடங்கள் எதுவுமே நிகழாது இருந்திருக்கின்றன. வெறுமனே புத்தகம் படித்து, சாப்பிட்டுத் தூங்கிக் கழித்த நாட்கள்தாம் அதிகம். நானாக எந்த ஒன்றையுமே உருவாக்க மெனக்கெடுவதில்லை. எந்த இடத்தில் என் பங்கு அத்தியாவசியமாகிறதோ அந்த இடத்தை முழுமையாய் நிரப்பிவிட்டு வெளியேறிவிடுவதுதான் வழக்கமாய் இருந்தது. ஆனால் இப்போது நிகழும் ஒவ்வொரு சம்பங்களும் புதிதாய் இருக்கின்றன. எல்லாவற்றையும் நானாகத்தான் தொடங்குகிறேன். அன்று விஜியை பீச் ரிசார்டுக்கு அழைத்துப் போகாதிருந்திருந்தால் இந்நேரத்தில் ஏதாவது ஒரு பாரில் அமர்ந்து மெதுவாய் குடித்துக் கொண்டிருந்திருக்கலாம். அல்லது என்னை அழைத்துப் போனவனோடு வேலை முடிந்ததும் ஓய்வெடுக்க ஆந்திரா போயிருக்கலாம். இப்படி ஒரு அதிர்ச்சியை சந்திக்க வேண்டியிருந்திருக்காது.

என் படுக்கையில் படுத்திருக்கும் நாகராஜை ஒரு மாதத்திற்கு முன்பு நான் நின்று கொண்டிருக்கும் இதே இடத்தில், இதே மொட்டை மாடியில்தான் பார்த்தேன். அன்று இரவு தூக்கத்தில் புரண்டு படுக்கும்போது விஜி இல்லாமலிருந்தாள். தூக்கம் போய்விட்டது. மாடிக்குப் போய் புகைக்கலாம் என எழுந்து படிக்கட்டுகளில் ஏறும் போது பேச்சு சப்தம் கேட்டது. விஜி யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள்.

“நீ ஏன் இங்க வந்த?”
“உன்ன ஓக்கதாண்டி தெவுடியா”
“கத்தாத பேசு. அவர் எந்திரிச்சிடபோறார்”.
“அந்த நாராகூதி மவன இப்பவே கொன்னு போட்டுர்ரேன் பார்... யார்வீட்ல வந்து கைவச்சிருக்கான்..மவன என்ன பன்ரேன்னு மட்டும் பார்..”
“ரொம்ப கத்தாதே.. நீ இங்க இருக்கன்னு தெரிஞ்சா கூட போதும்.. உன்ன போலீஸ் சுடும்.”
“சுடும்டி சுடும். உனுக்காக ஒருத்தன் தலய சீவுனன் பார்.. அப்ப சுடாத போலிசு இப்பதான் சுடுதா?”
“அப்ப தைரியமிருந்தா பகல்ல வா”
“வருவேண்டி சிதி” என்றபடி பளாரென அறைந்தான்

நான் மாடிக்கு வந்துவிட்டிருந்தேன். அவன் ஓட ஆயத்தமானான்.

என்னை எதிர்பார்த்திராத விஜயலட்சுமி அய்யோஓ என தலையைப் பிடித்தபடி தரையில் அமர்ந்து அழத் துவங்கினாள். “ஓடாத இரு” என அவனை நிறுத்தினேன். “அழாத விஜி எழுந்திரு… வாங்க கீழ போய் பேசலாம்” என இருவரையும் கூட்டிக் கொண்டு கீழே வந்து ஹாலின் சுவிட்சைப் போட்டேன். விஜியினால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
“முதலியார் பேட்ட வீட்டு மொட்டை மாடில அன்னிக்கு எகிறி குதிச்சி ஓடினது நீதான?” என்றேன் நாகராஜைப் பார்த்து
நாகராஜ் பற்களைக் கடித்தான். “கண்டவன்லாம் என்ன பாத்து கேள்வி கேட்கும்படி வச்சிட்டியேடி தெவுடியா எனக் கத்திக் கொண்டே விஜியை எட்டி உதைத்தான். அவள் அம்மாவென அலறியபடியே கீழே விழுந்தாள். நான் பதறிப் போனேன். அவளைத் தூக்கி அருகிலிருந்த சோபாவில் அமர வவத்தேன்.

சிவந்த விழிகளோடு நாகராஜ் இதை பார்த்துக் கொண்டிருந்தான். நான் சடாரெனத் திரும்பி நாகராஜின் முகத்தில் ஒரு குத்துவிட்டேன். நாகராஜ் முகத்தைப் பொத்திக்கொண்டு மடங்கி உட்கார்ந்தான். வாயிலிருந்து இரத்தம் கசிந்தது. ஏற்கனவே நன்றாய் குடித்திருந்தான். நான் சற்று சகஜமானேன். குடிக்கிறியா என்றபடியே உள்ளறையிலிருந்து பிராந்தி புட்டியை எடுத்து வந்துத் தந்தேன். அவன் அதை அப்படியே வாயில் சரித்துக் கொண்டான்.

விஜி கூந்தலை அள்ளி முடிந்து கண்களைத் துடைத்துக் கொண்டபடி “இதான் என் புருசன்” என்றாள். நான் இதை எதிர்பார்த்தேன். மெல்லத் தலையசைத்தபடி
“உனக்கு என்ன வேணும்?” என நாகராஜைப் பார்த்துக் கேட்டேன்.
நாகராஜ் கடுமையாய் என்னைப் பார்த்தபடி “யாரண்ட பேசிட்டிருக்கன்னு தெர்லடா உனக்கு …வேணாம்.. கைல சாமான் எதுவும் கொண்டாரததால நீ இன்னிக்கு பொழச்ச மவன விடியறதுக்குள்ள இங்கிருந்து ஓடிப்போய்டு இல்லனா விடிஞ்சதும் ரோட்ல செத்து கெடுப்ப” எனக் கண்கள் துடிக்க நா குழறியபடிக் கத்தினான்.
நான் படுக்கையறைக்குப் போய் மினியேச்சரை மறைத்து எடுத்து வந்தேன். கீழே மடங்கி உட்கார்ந்திருந்தவனின் கழுத்தில் உதைத்துக் கீழே தள்ளி அவன் வாய்க்குள் துப்பாக்கியைச் செருகினேன்ன். நாகராஜ் அலறினான். “வுட்ரு என்ன”

மெல்ல பிடியை விடுவித்தேன்.
“இப்ப சொல்லு உனக்கு என்ன வேணும்?”
“இந்த தெவுடியா”
“அது முடியாது. நான் விஜிய கல்யாணம் பண்னிகிட்டேன்”
“எம் பொண்டாட்டிய நீ எப்புட்ரா கல்யாணம் பண்ணுவ சிதி”
துப்பாக்கியை அவன் நெற்றியில் வைத்தபடி “இங்க பார் ஒர்ரே இழுப்புதான்.. தெறிச்சிடுவ.. சாக்குல கட்டி, கடல்ல தூக்கி போட்டுட்டு போய்ட்டே இருப்பன்… விஜிய நீ கல்யாணம் பண்ணிகிட்ட ஒரே காரணத்துக்காகத்தான் உன்கிட்ட இன்னும் பேசிட்டிருக்கேன்.. நீ எங்க வாழ்க்கைல குறுக்க வராம இருக்க உனக்கு எவ்ளோ வேணும் சொல்?|

நாகராஜ் அருகில் வைத்திருந்த புட்டியை வாய்க்குள் சரித்துக் கொண்டான்.

“இருவத்தைந்தி கொடுத்திரு நான் எங்கனா வடநாட்டுக்கா போய் உக்கந்துக்கரேன்”
“பதினைஞ்சி தரேன். போய்டு” என்றபோது விஜி அதிர்ந்து கத்தினாள்.

“என்ன பேசுறீங்க நீங்க… இதோ ஒரே போன் போதும்.. போலீசு இவன வந்து அள்ளிட்டு போய்டும்... என்ன பேரம் பேச இவன் யாரு?.. என்றபடியே தொலைபேசிக்காய் எழுந்து போய் ரிசீவரைக் கையிலெடுத்தாள். நாகராஜ் மதுப்புட்டியை எடுத்து அவள் மீது வீசியெறிந்தான். புட்டி நங் கென அவளின் பின்னந்தலையில் தாக்கியது. விஜி தலையைப் பிடித்தபடி பக்கவாட்டில் சாய்ந்தாள். நான் ஓடிப்போய் அள்ளிக்கொண்டேன்.

நாகராஜ் இரைந்தான். “டேய் ஓத்தா, நாளைக்கு காலைல அரியாங்குப்பம் படகுதொறைல பதினைஞ்சி லட்சத்தோட வா. நான் வாங்கினு கம்முனு போய்டுரேன் இல்லனா மதியானம் நீங்க ரெண்டு பேரும் ஒட்டுத் துணி இல்லாம ரோட்ல செத்து கெடப்பீங்க..நான் யாரு இன்னாங்கிறதலாம் இந்த தேவுடியாகிட்டயே கேட்டுக்கோ என்றபடியே எழுந்து மாடிப்படிக்காய் வெளியேறினான்.

மறுநாள் காலை போய் பணத்தைக் கொடுத்தேன். எல்லா பற்களும் தெரிய இளித்தான். “சேப்பு என் பொண்டாட்டி ராணி மாதிரி நல்லா பாத்துக்க” என்றான். எதுவும் பேசாமல் திரும்ப வந்தேன். விஜிக்கு தலை லேசாய் புடைத்திருந்தது. அழுதபடி சோபாவில் படுத்துக் கிடந்தாள். மீண்டு வர ஓரிரு நாட்கள் பிடித்தன. அவனை சுத்தமாய் மறந்திருந்தபோது இப்போது திடீரென எங்கிருந்து முளைத்தான் என பிடிபடாமல் இருந்தது.

ஒருவேளை விஜி முகத்தில் ஏதாவது மயக்க வஸ்துக்களை தெளித்து அவளை மயங்கச் செய்து சல்லாபித்திருப்பானோ என்ற சந்தேகம் வந்தது. எது எப்படி இருந்தாலும் விலகிவிடுவது என முடிவு செய்தேன். எந்த சப்தமும் எழுப்பாது வந்தபடியே திரும்பிப் போய்விடுவதுதான் உத்தமம். என்ன இருந்தாலும் இடையில் வந்தது நான் தான் என்றெல்லாம் பல சமாதானங்களை எனக்கு நானே சொல்லிக்கொண்டபடி கீழே வந்தேன். விஜி ஹாலில் குத்துக்காலிட்டு முகத்தை கால்களுக்குள் கவிழ்த்தபடி அமர்ந்திருந்தாள்.

- மேலும்

Monday, November 1, 2010

அத்தியாயம் 3. தாமஸ் குணா மற்றும் சீராளன்

-------------------------------------------------------------------
இம்மாதிரியான வேலைகளுக்கு நான் பழகியிருக்கவில்லை. இந்தக் கண்ணுக்குத் தெரியாத நிறுவனத்தில் சேர்ந்ததிலிருந்து இன்று வரை மிகச் சாதாரணப் பணிகளே தரப்பட்டிருந்தன. பணியில் சேர்ந்த புதிதில் கத்தியைப் பிரயோகிக்க, துப்பாக்கியைப் பயன்படுத்த சொல்லித் தரப் பட்டிருந்தது. நானும் பழகியிருந்தேன் என்றாலும் நிஜத்தில் இம்மாதிரியான கடினமான வேலைகள் எதுவும் இதுவரை செய்ததில்லை. இந்தப் புதிர் வட்டத்தினுள் நுழையும்போதே எந்தக் காலகட்டத்திலும் இதிலிருந்து விலகி ஓட முடியாது என எனக்குத் தெரிந்துதான் இருந்தது. கிட்டத் தட்ட இந்தத் தொழிலொரு கண்ணி வெடிதான். செத்தால்தான் விடமுடியும் அல்லது விட்டால் செத்துப் போவோம்.

சராசரி வாழ்வில், கண்ணுக்குத் தெரியும் புத்திசாலித்தனமற்ற பிழைகள் மட்டுமே குற்றங்களாக முன் எடுத்துச் செல்லப்படுகின்றன. குற்றமென்பதும் நீதியென்பதும் ஊடகங்களால் கட்டமைக்கப்படும் மாபெரும் புனைவுகள்தானோ என்றெல்லாம் கூட சில நேரங்களில் நினைத்துக் கொள்வதுண்டு. எங்களுடைய செய்திகளற்ற உலகமும் செய்திகளை மட்டும் நம்பி வாழும் இதே உலகத்தில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. மிகச் சுறுசுறுப்பாக, மிகப் புத்திசாலித்தனமாக, மிகமிகக் கொண்டாட்டமாக,நூறு சதவிகித பாதுகாப்பில்லாது எங்களின் வாழ்விருக்கிறது. செய்திகளின் உலகில் வசிக்கும் செல்வந்தர்களுக்கு செய்திகளற்ற நாங்கள் எல்லாவற்றையும் பரிசளிக்கிறோம். எல்லாவற்றையும் நிகழ்த்திக் காட்டுகிறோம். எங்களுக்கு நீதிகளோ அல்லது அடிப்படை நியதிகளோ எதுவும் இல்லை.

அப்பாஸ் கியராஸ்தமியின் படமொன்று நினைவுக்கு வருகிறது. ஒருவர் தன்னுடைய தற்கொலைக்கு உதவி செய்ய வேண்டி இன்னொரு மனிதனைத் தேடி படம் முழுக்க அலைந்து கொண்டிருப்பார். அவரை உயிரோடு மண்ணில் புதைக்க வேண்டுமென்கிற வேண்டுகோளைக் கேட்ட அனைவரும் பயந்து ஓடுவர். வாழ்வின் மீது நம்பிக்கையிழந்து தன்னை மாய்த்துக் கொள்ள் விரும்புபவர்களுக்கு உதவக் கூட சராசரி மனிதர்கள் அஞ்சுகிறார்கள். அவர்களுக்கு மரணத்தின் மீது மிகப் பெரும் பயமிருக்கிறது. எத்தனை மோசமானதாக இருந்தாலும் இந்த வாழ்வை கடைசி நாள் வரை வாழ்ந்துவிட பேராசை கொள்கின்றனர். எங்களுக்கான முதல் அடிப்படைப் பாடம் வாழ்வைத் துச்சமென மதிப்பதும் பயத்தைக் களைவதும்தான். எந்த ஒன்றின் மீதும் பற்றோ பயமோ இல்லாதபோது இன்னும் சுலபமாய் நம்மால் முடிவுகளை எடுக்கமுடியும். சுதந்திர மனம் என்பது துரிதங்களை நிகழ்த்திக் காட்டுவதற்கும், எதிர்பாராத சவால்களை எதிர் கொள்வதற்கும் மிக அத்தியாவசியம். எனக்கு பயங்கள் குறைவு. எனவேதான் இத் தொழிலில் இருக்கிறேன்.

வாழ்வின் மீதான ஆழமான காதல் கொண்டவர்களைக் கூட வாழ்லிருந்து துண்டிப்பதை நாங்கள் எவ்விதக் குற்ற உணர்வுமில்லாமல் செய்கிறோம். அழிப்பது சிவமென்றால், ஒவ்வொரு நிழல் மனிதனும் சிவம்தான் இல்லையா? இந்தச் சமூகம் மிகப் பாதுகாப்பாக இயங்குவதாக நம்ப வைக்கப்பட்டிருக்கிறது. அரசு, காவல் துறை, சட்டம், நீதி என பல்வேறு பெயர்களில் மனிதர்களின் வாழ்வு பத்திரப்படுத்தப் படுவதாகவும் சமூகத்தில் சம நீதி பரவலாய் எல்லாருக்கும் கிடைக்கக் கூடியதாய் இருப்பதாகவுமாய் நம்மைச் சுற்றியுள்ள அரசியல்வாதிகளால், எழுத்தாளர்களால், ஊடகவியலாலர்களால் , அதிகாரிகளால் நம்பவைக்கப் பட்டுள்ளது. அது சுத்தப் பொய். எந்த பாதுகாப்பையும் நொடியில் நிர்மூலமாக்கும் எங்களின் உலகம் இந்தப் பாதுகாப்புலகை சுற்றியேதான் கண்ணுக்குத் தெரியாமல் பின்னப்பட்டுள்ளது.

நான் இப்போதொரு பணக்கார, தடித்துச் சிவந்த நடுத்தர வயதுப் பெண்ணொருத்தியைக் கொல்ல வேண்டும். அவள் கழுத்தை என்னுடைய சட்டைப் பையிலேயே வைத்திருக்கும் சிசேரியன் கத்தி கொண்டு லேசாய் கீறினாள் போதுமானது. இரண்டு நிமிடத்தில் சாவு நிச்சயம். நான் இம்மாதிரிக் கத்திகளைப் பயன்படுத்த தயார் செய்யப்பட்டிருக்கிறேன். சும்மா ஒரு பாதுகாப்பினுக்காக சிறிய மினியேச்சர் ரக துப்பாக்கியினைக் கூட உள் ஜட்டிக்குள் வைத்திருக்கிறேன். இது நாள் வரை மிக மேலோட்டமான காரியங்களை மட்டுமே செய்து வந்திருக்கிறேன். பெரும்பாலும் சம்பவங்களுக்கான திட்டங்களை தீட்டுவது, ஆட்களை அமர்த்துவது, தகவல் தொடர்பு இப்படியான காரியங்கள்தாம். ஒரு விபத்து, இரண்டு விஷம் என சாந்த வழிகளின் மூலமே நான்கைந்து பேரைக் கொன்றிருக்கிறேன். சமீபமாய் எனக்கும் தலைமை நிர்வாகத்தினருக்கும் உறவு சரியில்லை. அதனால் இந்த மாதிரியான மாட்டிக் கொள்ளும் சிக்கலான வேலைக்கு அமர்த்தப்படுகிறேன். இந்த பெண்ணைக் கொன்றுவிட்டு எங்காவது சென்றுவிடலாம். இனிமேல் வருவதில்லை எனக் கூட தலைமைக்கு தகவல் அனுப்பிவிட நினைத்துக் கொண்டேன். ஆனால் அதற்குப் பின்பும் தொல்லைப் படுத்தாமல் இருப்பார்களா என்பது சந்தேகம்தாம். நான் எங்கு சென்றும் மறைந்த கொள்ள முடியாத மிகப்பெரிய அமைப்பு இது.

பகல் பதினோரு மணிக்கு அவளின் வீட்டிற்குள் நுழைய வேண்டும். தனி வீடுதான். சேல்ஸ் ரெப் தோரணை போதுமானது. ஆழமாய் மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டேன். அந்த புகைப்படத்திலிருந்த பெண்ணை ஒரு கடமையாக்கினேன். அவளின் கழுத்தறுப்பது என் வேலை என இரண்டு முறை சொல்லிக் கொண்டேன். தங்கியிருந்த ஓட்டலை விட்டு சாலைக்கு இறங்கி நடக்கத் துவங்கினேன். இந்த ஊரில் தங்குவது இதுவே முதல்முறை. ஆனால் இந்த ஊரின் வழியாக பல முறை பயணித்திருக்கிறேன். சேலம். சேலம் என்றால் என்னவென்று தெரியவில்லை. எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். பத்து மணிக்கே வெயில் மிகக் கடுமையாய் இருந்தது. நடைபாதையில் ஒரு மட்டரக தோளில் மாட்டக் கூடிய பை ஒன்றினையும் டை ஒன்றினையும் வாங்கிக் கொண்டேன். சாலையோரக் கக்கூஸில் நுழைந்து சட்டையை இன் செய்து டையைக் கட்டிக் கொண்டேன். எப்போதும் பூட்ஸ் அணியவேண்டுமென்பது நிர்வாகத்தின் நியதி. பார்க்க ஷூ மாதிரிதான் இருக்குமென்பதால் ஒரு சேல்ஸ் ரெப் தோரணை வந்துவிட்ட்தாகவே நினைத்துக் கொண்டேன்.

எம் ஆர் சி கல்யாண மண்டபத்தினுக்கு பின் புறம் 15 ஆம் இலக்க, மஞ்சள் வண்ணமடித்த, சிவப்பு இரும்பு கேட் கொண்ட வீடு. வந்து சேர்ந்தேன். நான் எதிர்பார்த்திருந்ததை விட மிகப்பெரிய ஜி ப்ளஸ் ஒன் வீடு. வாசலில் பதித்து வைக்கப்பட்ட பெயர் பலகையில் எஸ்விசி ஜுவல்லரி என எழுதப்பட்டிருந்தது. சேட்டுப் பெண் என்கிற எண்ணம் புகைப்படத்தை பார்த்தபோதே வந்தது. என் வாழ்நாளில் எந்த ஒரு மார்வாடிப் பெண்ணிடமும் பேசியது கூட இல்லை. வயிறை மொத்தமாய் காட்டியபடி முக்காடிட்ட சிவந்த பெண்களை என் சொந்த ஊரில் கடந்து போனதோடு சரி. பூட்டியிராத கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தேன். வாசலில் மிகப்பெரிய தேக்கு கதவு. அதற்கு முன் கம்பிகளாலான நுழைவு கேட்டு. நகைக் கடை நுழை வாயில்களைப் போன்றே வீடுகளையும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அழைப்பு மணியை அழுத்தினேன். சற்று நேரம் கழித்து ”கோஓன்? ” என்றபடியே அந்தப் பெண் கதவைத் திறந்தாள்.

அவளின் தைரியமான தோற்றமும், சப்தக் குரலும் என்னை லேசாய் தடுமாற வைத்தது. விற்க வந்தவன் என்றால் பிராண்டி வெளியே துரத்திவிடுவாள். புருவத்தை உயர்த்தி என்ன? என சைகையால் கேட்டாள்.
”ஏசி மெயிண்டனன்ஸ் மேம்” என்றேன் பரிதாபமாக.
”நல்லா ஓடுதே. யார் கம்ப்ளைண்ட் பண்ணா? ”
”வாரண்டி மெயிண்டனன்ஸ் மேம்”
”வாங்கி நாலு வருஷம் ஆச்சே அப்புறம் என்ன வாரண்டி?”
’இல்ல மேம் நாங்க மேனுபேக்சரர்ஸ்.. எதாவது ட்ரபுள்ஸ் வருதான்னு எல்லா கஸ்டமர்கிட்டயும் சர்வே பண்னிட்டிருக்கோம்.”
”அதுலாம் ஒண்னும் இல்ல நல்லாருக்கு”
“ஒரே ஒரு அஞ்சு நிமிசம். பங்க்ஷன் செக் பண்ணிட்டு போயிடுரேன்”
லேசாய் முறைத்தபடியே கதவைத் திறந்தாள்.
“கெஸ்ட் வராங்க சீக்கிரம் கிளம்பிடனும்” என்றாள்.

சரி மேம் என்றபடியே பவ்யமாய் உள்ளே போனேன் ”ஏசி எங்க இருக்கு மேம்?” பெட்ரூம் என்றபடியே மாடிக்குக் கை காட்டினாள். பெட்ரூமில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் அந்த கிங் சைஸ் கட்டிலை ஆக்ரமித்துப் படுத்திருந்தார். என்னைப் பார்த்து புன்னகைத்தார். வாட்சைப் பார்த்தார். ”சமையலறையிலேயே முடிச்சிடு” எனத் திரும்பிப் படுத்துக் கொண்டார். எனக்கு எந்த உணர்வுமே ஏற்படவில்லை. மெல்ல கீழிறங்கிப் போனேன் எனக்கு முதுகாட்டி கேஸ் ஸ்டவ்வில் எதையோ கிளறிக் கொண்டிருந்தாள். கத்தியை விரல்களுக்குள் வைத்து நீட்டிக் கொண்டேன். சத்தமில்லாது அருகில் போய் மேம் என்றேன். திக் என அவளின் உடல் தூக்கிப் போட திரும்பினாள். திரும்பும் இடைவெளியில் சரியாய் கழுத்து வாகில் கீறினேன். கத்தக் கூட இயலாது ஹீக் என வினோதமாய் முனகியபடி இரண்டு கைகளால் கழுத்தைப் பொத்தியபடியே கீழே விழுந்து துடித்தாள். வாசலில்அழைப்பு மணி அடித்தது.

சமயலறைக் கதவைச் சாத்தினேன். வரவழைத்தவன் இவளின் கணவன் என்பதால் சாதாரணமாகவே இருந்தேன். துடிக்கும் அவள் உடலில் சரிந்து கிடந்த தொப்பையின் மீது அழுத்தமான பூட்ஸ் காலை வைத்து அழுத்தினேன். உடல் அடங்க இரண்டு நிமிடங்கள் தேவைப்படும். சப்தம் வெளியில் கேட்காதிருக்க அவள் முகத்தினுக்காய் குனித்து வாய் பொத்தினேன். மூன்று நிமிடங்கள் கழித்து கதவைத் திறந்தேன். மேலே படுத்திருந்த மாமிச மலை மாடிப்படிக்கட்டுகளில் மல்லாக்க விழுந்து துடித்துக் கொண்டிருந்த்து. வலது பக்க கழுத்தில் ஆழக் கீறல் விழுந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. துடிக்கும் அவரின் நெஞ்சின் மீது காலை வைத்து அழுத்தியபடியே நான் வைத்திருக்கும் அதே சைஸ் மருத்துவ கத்தியின் இரத்தத்தை ஒருவன் துடைத்துக் கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்து புன்னகைத்தேன். அவனும் புரிந்து சிரித்தான்.

”இவன் அனுப்பின ஆளா நீ?” என்றான்
”அதுலாம் தெரியாது”
”இவ வச்ச ஆளா நீ?” என்றேன்
”எனக்கும் தெரியாது” என சிரித்தான்.
”இந்த ஊர்ல ஏதாவது நல்ல பார் இருக்கா?” என்றேன்.
வா போலாம் என வீட்டின் முன் கதவை சாத்திவிட்டு பின் பக்க சுவர் எகிறி குதித்து வெளியேறினோம்.

சேலம் பேருந்து நிலையத்தினுக்கு சமீபமான ஒரு ஓட்டலின் குளிரூட்டப்பட்ட பாரில் அமர்ந்தோம். கும்பல் சிதறியிருந்தது.என்னைக் கேட்காமலேயே ஓல்ட் மங்க் என்றான். முதல் ரவுண்டை அவசரமாய் முடித்து விட்டு தொண்டையைக் கனைத்தபடியே
”என் பேரு தாமஸ்” என்றான். பெயரைச் சொன்னேன்.
”எத்தன வருசம் ஆச்சி?”
”எட்டு வருசம்”
”பார்க்க சின்ன வயசா இருக்க”
சிரித்தேன்
”எவ்ளோ தராங்க பீசுக்கு”
”பீஸ் ரேட் இல்ல அப்பப்ப அக்கவுண்ட்ல பணம் போடுவாங்க ஒரே ஊர்ல இருக்க கூடாதுங்கிறதுதான் கண்டிசன். சொந்தம் வீடு வாசல் எதுவும் எனக்கு கிடையாது. அப்படியே மேகம் மாதிரி மிதந்து போய்ட்டே இருக்கேன்” லேசாய் போதை ஏறி இருந்தது எனக்கு.

”நம்மள ரொம்ப மோசமா பயன்படுத்திக்கிறானுங்க இல்ல”
”ம்ம்ம். என்ன பன்ரது அதுக்கு? எனக்கும் போரடிச்சிருச்சிதான். ஆனா விடவும் முடியல”
தாமஸ் என் கண்களை ஆழமாய் பார்த்துக் கேட்டான்.
”சேர்ந்து பண்ணலாமா? மூணே வருசம் . ஓரளவுக்கு தேத்திகிட்டு வெளிநாடு போய்டலாம். திரும்பி வரவே வேணாம். என்ன சொல்ர? ”
“எனக்கு யாரையும் தெரியாதே”
”அத நான் பாத்துக்கரேன்”
”சரி. எங்க? எப்போ? எப்படி?”
”இத முடி கெளம்புவோம். மதுரைல கொஞ்ச நாள் உட்காரலாம். யோசிக்கலாம். அப்புறம் ஆரம்பிக்கலாம்.”
தாமஸ் யாருக்கோ தொலைபேசினான்
”குணா வண்டி இருக்கா?” …………
”நம்ம பார்லதான்”.……………
”பத்து நிமிசத்துல வா!” என்றபடியே வைத்தான்.

அரைப்புட்டியைக் குடித்திருந்தோம். இன்னொரு அரைப்புட்டியை வாங்கி பெப்சி பாட்டிலில் ஊற்றிக் கொண்டான். இருவருவரும் கீழே வந்தோம். வெள்ளை நிற சுமோ ஒன்று உரசுவது போல் அருகில் வந்தது. ஏறிக்க என்றபடியே தாமஸ் கதவைத் திறந்தான்.பின் சீட்டில் அமர்ந்து கொண்டோம்.
”யார் இவரு?” என்றான் குணா
”நம்மாளுதான் குணா. எடத்துக்கு போய் பேசிக்கலாம்” என்றான்
குணா வண்டியை விரட்டத் துவங்கினான்.

இருள் கவிய ஆரம்பித்திருந்த போது மதுரையை நெருங்கினோம். வண்டி ஒத்தக் கடையிலேயே வலது பக்கமாய் திரும்பி ஓடத் துவங்கியது. இந்தச் சாலை சக்கரத்தாழ்வார் கோயிலுக்கு செல்லும். ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு இந்த வழியில் பயணித்திருக்கிறேன். மீண்டும் மண் சாலையில் இறங்கி, அடர்த்தியான இருளைக் கிழித்து வண்டி நகர்ந்தது. இரண்டு மூன்று குறுகலான வேலிக்காத்தான் முள் வளைவுகளுக்குப் பின் ஒரு தென்னந்தோப்பிற்குள் நின்றது. தாமஸ் தான் முதலில் இறங்கினான். ”இறங்கு பா” என்றபடியே நடக்க ஆரம்பித்தான். நான் அவனைத் தொடர்ந்தேன். குணா வண்டியைப் பூட்டி விட்டு என் பின்னால் வந்தான். இருள் அடர்ந்திருந்தது. சுற்றிலும் உயரமான தென்னை மரங்கள் இன்னும் அடர்த்தியான இருளுக்கு காரணமாயிருந்தன. தூரத்தில் ஒரு குண்டு பல்பு தனியே தொங்கிக் கொண்டிருந்தது. சற்று நெருங்க ஓட்டு வீடு ஒன்று புலப்பட்டது. எதுவும் பேசாமல் அதை நோக்கி நடந்து கொண்டிருந்தோம். திடீரென இருளில் சலசலப்புகள் கேட்டன. லேசான முனகல்களும் சிணுங்களும் வந்த திசையை நோக்கி தாமஸ் பற்களைக் கடித்தான். ”தாயோலி மவன் அடங்க மாட்டேங்குறானே.

“இந்த இருட்ல எவ டா வர்ரா” என்றான் குணாவைப் பார்த்து.
”சொன்னா அதிர்ச்சி ஆவ மாட்டியே”
”சொல்லு”
”ஓனரம்மா தான்” எனச் சொல்லி சிரித்தான்.
”தூ! கருமம் அந்த கெளவியயா.. நாறப் பய எவ கெடச்சாலும் விட மாட்டேன்குறான். ..கொல்டித் தாயோலி.. எப்பவும் கைல புடிச்சிட்டு திரியுரானே”
எனப் புலம்பிக் கொண்டே நகர்ந்தான். நான் சிரித்துக் கொண்டேன்.

பார்க்க சிறிய ஓட்டு வீடாக இருந்தாலும் சற்று விஸ்தாரமான கூடமும் படுக்கையறையும் உள்ளே இருந்தது. சமையல் செய்வதற்கும் தனியே ஒரு சுவர் தடுப்பிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் லுங்கியை தோளில் போட்டபடி சிவப்பு ஜட்டியுடன் சீராளன் வந்தான். ”எப்ப வந்தீங்க எல்லாம்” என இளித்தான். என்னைப் பார்த்து ”யாரு இவரு?” என்றதற்கு தாமஸ் பதில் சொல்லாமல் முறைத்துக் கொண்டிருந்தான். ”ரொம்ப கோச்சுக்காதன்னா” என கொஞ்சியபடியே ”இரு குளிச்சிட்டு வந்திடுரேன்” என வீட்டின் வலது புறமாய் சென்று இருளில் மறைந்தான். சற்று நேரத்திற்கெல்லாம் தொம் என கிணற்றில் நீர் சிதறும் சப்தம் கேட்டது. வீட்டிற்கு முன்பிருந்த சிமெண்ட் திண்ணையில் தாமஸ் அமர்ந்து கொண்டான். லேசாய் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

”இதான் நாங்க. நான், குணா, சீராளன் மூணு பேரையுமே தனித்தனி கும்பல்கள் பயன்படுத்திட்டிருக்கு. சீராளன் எப்பவோ வெளில வந்துட்டான். குணா போன மாசந்தான் வெளில வந்து ஒரு வண்டி வாங்கி ஓட்டிட்டு இருக்கான். நான் இன்னிக்கு பண்ணம் பார் இதோட வெளில வந்துட்டேன். இந்த மாதிரி ஒரு வீட்ட தேடி கண்டுபுடிச்சி தங்கிட்டிருக்கோம். அப்படியே பல யோசனைகள் எல்லாருக்கும் ஓடுது. உன் தொழில் சுத்தத்த பார்த்தேன். எங்களுக்கு சமமான ஆள்தான். ஒண்ணா இருக்கலாம்.”

எனக்கு இந்த இடம் பிடித்திருந்தது. இந்த சூழல் இந்த மூன்று பேர் என எல்லாமும் பிடித்திருந்தது. அடுத்த முறை என்னைத் தலைமை தொடர்பு கொள்ளும்போது சொல்லிவிட வேண்டியதுதான் என மனதில் நினைத்துக் கொண்டேன்.

”சரி தாமஸ் எனக்கு கொல பசி. ஏதாவது சாப்ட தா!” என்றேன்.

சீராளன் தலை துவட்டியபடி வந்தான். ”சாப்பாடு ரெடியா இருக்கு மதியம் ஏரிக்கு போய் உளுவையும் கொறவையும் புடிச்சிட்டு வந்தேன். வர்ர வழில ரெண்டு கொக்கையும் போட்டு எடுத்துட்டு வந்தேன். கொக்கு வறுவல், மீன் குழம்பு கோட்டர்தான் மிஸ்” என்றான் வருத்தமாக.

குணா உள்ளே போய் இரண்டு நெப்போலியன் முழு பாட்டிலை எடுத்து வந்தான். எதுவுமே மிஸ் ஆவுல இன்னிக்கு என சத்தமாய் சொல்லியபடிப் புன்னகைத்தான்.

நிலா மேலெழ ஆரம்பித்தது. தென்னை மரங்கள் மென்மையாய் கீற்றுகளை அசைக்கத் துவங்கின. வீட்டிற்கு முன்புறம் இருந்த சிமெண்ட் தளத்தில் வட்டமாய் அமர்ந்து கொண்டோம். எவெர்சில்வர் டம்ளரில் பாட்டிலை உடைத்து சமமாய் ஊற்ற ஆரம்பித்தான் தாமஸ். எளனி லேசா சேரு என்றான் குணா. பச்சை இளநீரை சீவித் தூவலாய் ஊற்றி பின்பு நீர் சேர்த்தான். நான்கு பேரும் பேசாமல் எடுத்துக் குடிக்க ஆரம்பித்தோம். குணா ஒரே கல்பில் அடித்து பட் டென டம்ளர் சப்தம் எழ கீழே வைத்தான். தாமஸ் அண்ணாந்து நீர் குடிப்பது போல இரண்டு முறை தொண்டையில் சரித்துக் கொண்டான். சீராளனும் நானும் மட்டும் ஒரு சிப் குடித்து விட்டு டம்ளரை கீழே வைத்தோம். குடிக்கும் முறை தான் மனிதர்களின் ரசிப்புத் தன்மையை வெளிப்படுத்துகிறது. குடித்த பின்பு அவனவன் குணத்தையும் குடி பிரதிபலிக்கிறது.

எனக்கு வயிறு கப கப வென எரிந்தது. சட்டியிலிருந்த கொக்குக் துண்டு ஒன்றினை எடுத்து எலும்பைக் கையினால் பிடித்தபடி சதையினை மென்றேன். வாய் எரியத் துவங்கியது. உள்ளங்காலிருந்து உச்சந்தலை வரைக்குமாய் காரம் பரவியது. தாங்க முடியாத காரம். உஸ் ஆ என சப்தமாய் வாயைத் திறந்து காற்றை ஊத ஆரம்பித்தேன். மூவரும் சிரித்தனர். ”இவன் ஆந்திரால இருந்து வந்து பத்து வருஷமாச்சி ஆனாலும் அதே காரத்தோடதான் சமைக்குரான், திங்குரான்... இவனால நாங்களும் காரத்த பழகிகிட்டோம்...சரக்க எடுத்து குடிங்க பாஸ்” என்றான் குணா. ஒரே மூச்சில் மீதி இருந்த பிராந்தியை காலி செய்தேன். இதுக்குதான் குடிக்கும்போது காரமா திங்குரது என சிரித்தான் தாமஸ். நான் இப்போது ஒரு நிலைக்கு வந்திருந்தேன். அடுத்த பீசை எடுத்து சாப்பிட்டேன். அபரிதமான ருசியாக இருந்தது. ”ரொம்ப நல்லாருக்கு” என்றேன் சிரித்தபடி. எல்லாரிடமும் இருந்த தயக்கம் லேசாய் விலகியிருந்தது. ”ஊத்துண்ணா” என்றான் குணா.

மிகக் குறைவான இந்த ஒளியில் தாமஸ் டம்ளர்களை வரிசையாக வைத்து ஒரு துளி கூட சிதறாமல் மதுவினைக் கலந்து கொண்டிருந்தது கவனம் பிசகாத ஓவியனை நினைவூட்டியது. டம்ளர்களில் மது ஊற்றும் சப்தத்தை மற்ற நாங்கள் மூவரும் கேட்டுக் கொண்டிருந்தோம். சமோவாரில் தேநீர் கொதிக்கும் சப்தம் கேட்டபடி தியானிக்கும் புத்த பிட்சுகளாக ஒரு கணம் எங்களை நினைத்துக் கொண்டேன். சிரிப்பு வந்தது. மொட்டையடித்து, காவி அங்கி அணிந்த பிட்சுகளாக மற்ற மூவரையும் கற்பனை செய்து பார்த்தபோது சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை. என் கற்பனையை சொன்னேன்.

மூணு வருசத்துக்கு பின்னால புத்த பிட்சு என்ன புத்தனாக கூட மாறலாம்.ஆனா இப்ப இந்த மூணு வருசம் கொலகாரனுங்களாதான் திரியனும். என்றான் தாமஸ்.
பணம்தான் டார்கெட் னா ஏன் கொல பண்ணனும் தாமஸ்?. கொள்ளையடிக்கலாமே.
திருட்டு வேணாம். வேல செய்ஞ்சிதான் சம்பாதிக்கனும் அப்படிங்கிற அடிப்படை விசயம் ஒண்ணு இருக்கு. அத மீற முடியாது. அது எந்த வேலங்கிறதுலதாம் மீருரோம் என்றான் தாமஸ். சீராளனும் குணாவும் அதை ஆமோதித்தனர். திருடுவது மட்டும் வேலையில்லயா என நினைத்துக் கொண்டேன். வெளியில் சொல்லவில்லை.

”சரிதான். ஆனா எங்க ஆரம்பிக்க போறோம்.. யார் வேல தர போறா நம்மோட ரேட் என்ன? எங்க இருக்க போறோம்... இதுலாம் தெரியனும்.

அவசரமாய் சீராளன் சொன்னான். ”இருக்கப் போறது இங்கதான் இத விட நல்ல எடம் கெடச்சிட போவுதா என்ன?”

”கெளவி சாமானுக்கே இவ்ளோவா..என குணா சிரித்தபடியே அவன் தலையில் தட்டினான்.

”ஏஏ அதுலாம் ஒண்ணும் இல்ல. நல்ல காத்தோட்டமான மறைவான இடமா இருக்கிறதால சொல்ரேன். இந்த மாதிரிலாம் வேற எங்காயாச்சிம் ஃப்ரியா குடிக்க முடியுமா?”
”ஆமாண்டா உன்ன மாதிரி ஃப்ரியா காத்தோட்டமா காவா க்குள்ளலாம் கிளவியோட படுத்துப் புரள எவனாலயும் முடியாதுதான்”
”அட ஏம்பா திரும்ப திரும்ப அங்கியே வந்துட்டு. பாவம் அது. பத்து வருசமா சோப்ளாங்கி புருசனோட கெடந்து தவிச்சிருக்கு. நான் லேசா கண்ணதான் காட்னேன். எங்க கூப்டாலும் வருது.. என்ன சொன்னாலும் பண்ணுது... ரொம்ப நல்ல மாதிரிபா”
எல்லாருக்கும் நான்கு ரவுண்டு ஏறியிருந்தது. நான் தீவிரமாய் சீராளனிடம் சொன்னேன்.

”எங்க வேணா பொரளு. ஒண்ணும் பிரச்சின இல்ல. இவளுங்க இப்படித்தான் எங்க கூப்டாலும் வருவாளுங்க.. என்ன சொன்னாலும் பண்னுவாளுங்க.. நீயும் அதே உணர்வோட இருந்துக்கோ. எப்ப பிச்சிக்கனுமோ அப்ப பிச்சிக்க.... இந்த லவ்வு செண்டிமெண்டு இப்படி எதுலயும் வுழுந்திடாதே... பாசமா இருக்கான்னுலாம் வாழ்க்கய நாசம் பண்ணிக்காதே ...அப்புறம் வெளில வர்ரது கஷ்டமாய்டும்.”

”என்கிட்டயேவா பாஸ். எத்தன பொண்ண க்ராஸ் பண்னி வந்துறிக்கிங்க நீங்க? இப்ப பொரண்டு வந்தனே அவளோட சேர்த்து நாப்பது பேரோட படுத்திருக்கேன். இதுல பாதிக்கும் மேல இஷ்டப்பட்டு வந்ததுதான். உருகி உருகி காதலிச்சதுதான். என்னப் பொருத்தவர ஒழுக்கம், துரோகம் இந்த ரெண்டு வார்த்தைக்குமே அர்த்தம் இல்ல பாஸ். சந்தர்ப்பங்களும், தேவைகளும்தான் எல்லாத்துக்கும் பின்னால இருக்கு. என்னோட தேவய நீ தீர்.. உன்னோட தேவய நான் தீக்குரேன் அவ்ளோதான்.... எவ்ளோ நாள் இந்த உறவு போவுமோ, அவ்ளோ நாள் போவட்டும்... எப்ப முடிலயோ அவங்க அவுங்க வழிய பாத்துட்டு போய்ட்டே இருக்க வேண்டியதுதான்... இதுல காதல்,புனிதம், ஒறவு , தோல்வி, துரோகம்,ஏமாற்றம் இப்படின்னுலாம் எந்த மசிரும் இல்ல..கையாலாக எல்லா பேமானிங்களும் இந்த மாதிரி வார்த்தைகள்லாம் தூவி என்னவோ ஒலகத்துல தாம் மட்டும்தான் நல்லவங்கிற மாதிரியும் மத்தவங்களாம் டுபாக்கூருங்க மாதிரியுமா தனக்குத் தானே நம்பிக்கிறாங்க. அப்படியொரு நம்பிக்கைலதான் இந்த ஒலகமே இயங்கிட்டிருக்கு. ஆனா நான் அப்படி நம்பல பாஸ். அஎன் யோக்கியத எனக்கு தெரியும்கிறதால மத்தவங்க யோக்கியதையப் பத்தி நான் நெனச்சதே இல்ல பாஸ்.

எனக்கு ஏதோ துலங்கியது போலிருந்தது. விஜயலட்சுமியின் மீது அன்பு பொங்கியது. என் வஞ்சிக்கப்பட்ட கழிவிரக்க மனநிலை ஓடிப்போனது. நான் எழுந்து சீராளனைக் கட்டிக் கொண்டேன். தேங்க் யூ சீராளா என அவனை இறுக்கி முத்தமிட்டேன்.

Featured Post

test

 test