Wednesday, February 11, 2009

வ.வெ.தொ.அ.வெ.கு - 3

அத்தியாயம் மூன்று : கவிதைப் பயன் அல்லது எழுத்துப் பயன்

சாம் தான் இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் துவக்கம்.அவன் அதை என்னிடம் தனியாய் சொல்லியிருக்கலாம்.சாம் நாங்கள் வழக்கமாய் சந்திக்குமிடமான கரிபு கஃபே வில் பணிபுரிபவன்.நேற்று நானும், இவளும் எங்களின் வழக்கமான இருக்கையில் அமர்ந்தபடி பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.அடுத்த மாதம் இந்த பறவைகள் போய்விடுமே என இப்போதிலிருந்தே கவலைப்பட ஆரம்பித்தவளைத் தேற்றிக் கொண்டிருந்தேன். சாம் ஆப்பிரிக்க தேசத்தவன். எனக்கான குழம்பியைக் கொடுத்தபடி அந்தச் செய்தியைச் சொன்னான்.கடந்த நான்கு நாட்களாகத் தமிழ்முகங்கள் கொண்ட சிலர் மாலைவேளையில் இப்பகுதியை சுற்றிச் சுற்றி வருகிறார்களாம்.எனக்கென்னமோ அவர்கள் உங்களைத் தேடித்தான் வந்திருப்பார்கள் எனத் தோன்றுகிறது என்றான்.இவளின் முகம் இருண்டது.எனக்கும் துணுக்குறலாகத்தான் இருந்தது.நாங்கள் கடந்த ஒரு வாரமாக இந்த இடத்தில் சந்திக்கவில்லை.இவள் அவசரமாகக் கிளம்பினாள். உடன் நானும் கிளம்பி அந்த இடத்திற்குப் போனோம் (எந்த இடமென்று இனிமேல் சொல்லப்போவதில்லை)

"எனக்கு எங்க மச்சம் இருக்குன்னு கூட எழுதிவியா நீ! மானங்கெட்டவனே" கடுமையான வசவாய் இருந்தாலும் பொறுத்துக்கொண்டபடி "நீ! உன் மச்சங்களை என்னிடம் இன்னும் காண்பிக்கவில்லை" என்றேன்.தன்னிரு வளைக் கைகளைக் கொண்டு கழுத்தை நெறிக்க முயற்சித்துப் பின் வாங்கினாள்.உரையாடலினி பதிவு எழுதியதால் வந்த வினை இது.நெடுநாள் இவளைப் பற்றி எழுதிவிட வேண்டும் என்கிற தவிப்பு இருந்து கொண்டே இருந்தது.அறுத்தாறு பக்கங்களில் இவளை எழுதி அய்ந்து பக்கங்களுக்குச் சுருக்கினேன்.அந்த பதிவை எழுதிக்கொண்டிருந்த நாட்களில் மிகுந்த மன நெருக்கடிக்குள்ளானேன்.எந்த வார்த்தை கொண்டும் அவளைச் சரியாய் எழுதிவிட முடியவில்லை.எழுதி முடித்தும் கூட நான் சொல்ல நினைத்ததில் பாதியைக் கூட சொல்ல முடியவில்லை என்கிற போதாமையும் ஆதங்கமும் இருந்தது.ஆனாலும் அந்த உரையாடலினி பிம்பம் என்னைப் படிக்கும் சொற்ப வாசகர்களிடத்தில் ஒரு வித கனவுத் தன்மையை ஏற்படுத்தி விட்டிருந்தது.ஒருவேளை அவர்களில் சிலர் இவளைப் பார்க்க கரிபு கஃபே வந்திருக்கலாம் என அவள் சந்தேகித்தாள்.

அவள் மிகுந்த கோபத்திலிருந்தாள்.அவளின் இருபெருகருநிற விழிகளில் என்னை முறைத்துக் கொண்டிருந்தாள்.மிகுந்த அலைக்கழிப்பில் இதற்கும் அதற்குமாய் நடந்து கொண்டிருந்தாள்.எனக்கு புல்வெளியில் அலையும் முயல் நினைவில் வந்து போனது.எப்படிச் சமாதானப்படுத்துவதெனத் தெரியவில்லை. பெண்களைச் சமாதானப்படுத்த முத்தத்தை விட சிறந்த முறை எதுவுமில்லை. ஆனால் இவள் சீதையின் கடைசி வாரிசு.தொடவும் முடியாது. அவளை என் வசப்படுத்திய என் கவிதைகளைச் சொல்ல முடிவெடுத்தேன். விழிக்கையில் சிரிக்கும் இருபெருகரு நிற விழிகள் என முடியும் கவிதையைச் சொல்ல ஆரம்பித்தேன் (இந்த வரிக்காக முன்பு ஒரு முறை பெரிய சண்டை ஒன்று இருவருக்கும் வந்தது.இந்த வரி உனக்கானது எனச் சொல்லியபோது அதிர்ந்தாள்."விழிக்கையில் சிரிக்கும் என்றால் என்னோடு படுக்கும் எண்ணமா உனக்கு?" எனக் கத்தினாள்."நீ அருவெருப்பானவன்,அசிங்கம் பிடிச்சவன், "எனக் கத்தி மிகப்பெரிய ரகளையை நிகழ்த்தினாள்.) வெகுசனப் பத்திரிக்கைகள், வெகு சன சினிமாக்கள், சாமியார்கள், மத போதகர்கள், ஒழுக்க சீலர்கள், அரசியல்வாதிகள் இன்ன பிற நாதாறிகளால் சீர்கெட்ட தமிழ்சூழலின் தாக்கங்கள் இவளிடம் அதிகமாகவே இருந்தன.எதைக் கொண்டும் என்னால் அவற்றை மாற்றமுடியவில்லை.

தலையை இதற்கும் அதற்குமாய் அசைத்தபடி "அண்டப் புளுகண்டா நீ ! எனக் கத்தினாள்."நான் உன் விரலைக் கூட தொட்டதில்லை தனியாய் தள்ளிட்டு போய் முத்தம் கொடுத்தனாம் அதுவும் பார்ல அய்யோஓஓஒ" எனக் கத்தினாள். அவளுக்கு புனைவெழுத்தின் சாத்தியங்களை விளக்க தொண்டையைக் கனைத்தேன்.நான் பேச வாயெடுப்பதை கண்ட அவள் "போதும் நிறுத்து "என சைகையாலே தடுத்தாள்.பின் எனக்காய் முதுகு காட்டி அமர்ந்தாள்.எல்லாக் கதவுகளும் மூடிக்கொண்டதைப் போல் இருந்தது.சற்று நேரம் மெளனத்துடன் உரையாடிவிட்டுச் சொல்ல ஆரம்பித்தேன்.

வண்ணங்களுதிர்த்த
என் நிழல்
கண்கள் சுருக்கி
கொட்டாவி விடுகிறது.
தலைக்கு மேல் சிறகடிக்கும்
மென்சிறு பட்சிகளை
விழியசையாது
வெறிக்கிறது.
சூழும் கருமைகளை
கனவிக் கலவுகிறது.
……….
பச்சை நிறத்திற்கு
சமீபமான எதுவாக
இருந்தாலும்
பரவாயில்லை
என நினைத்துக் கொள்கிறது.

சொல்லி முடித்த பத்து நிமிடம் கழித்து எனக்காய் திரும்பினாள்."மறுபடி சொல்லு" என்றாள்.சொன்னேன்."சூழும் கருமை நல்லாருக்கில்ல..ஆனா இந்த சமீபமான எதுவாக இருந்தாலும் ங்கிற காம்ப்ரமைஸ் இருக்கில்ல அது செம கொடுமடா " என்றாள். எனக்கு நிம்மதியாய் இருந்தது.அதே உற்சாகத்தில் இன்னொன்றைச் சொல்ல ஆரம்பித்தேன்.

நேற்றிரவு
தாமதமாய் திரும்புகையில்தாம்
நிகழ்ந்திருக்க வேண்டும்.
ஒருவேளை
நினைவுப்பாதைகளின்
குழம்பிய வளைவுகளில்
தொலைந்து விட்டிருக்கலாம்.

இரவின் மீதங்கள்
உதிர்ந்திடாத
அதிகாலையில்
புறப்பட்டேன்.
உன் கீச்சுக் குரல்
பதுங்கியிருக்கும்
வளைவுப்
பள்ளத்தாக்குகளுக்கு..
அவள் இதைத் திரும்பத் திரும்பக் கேட்டாள்.சொல்லிக் கொண்டிருந்தேன். எனக்காய் நெருங்கி வந்து என் கண்களை வெகு சமீபமாய் பார்த்துச் சொன்னாள்."உன்னை என்னால காதலிக்க முடியாது...இனிமேலும் நீ திருந்தப் போறதில்லைன்னு தெரிஞ்சு போச்சு...இன்னிக்கோட உனக்கு முற்றும்."எனச் சொல்லியபடி எழுந்தாள்.நான் பதட்டமானேன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டபடி பிதற்ற ஆரம்பித்தேன்.

உன் மென் மென்னியை
நெறித்தே விடுவது.
உன் மயிர்காடுகளில்
தொலைந்தே விடுவது.
உன்னிதழ் இரத்தத்தை
சுவைத்தே விடுவது.
உன்னுடலின்
இடுக்கு
சிடுக்கு
குறுக்கு
நெடுக்கு
வெடிப்பு
பிளவு
மறைவு
உச்சி
ஆழம்
பைத்தியம்.
கண்களை இறுக்க மூடி இக்கவிதையை சத்தமாய் சொன்னபோது அவள் என்னை பயத்தோடு பார்க்க ஆரம்பித்தாள்."ப்ளீஸ் !என்ன கரெக்ட் பண்ண ட்ரை பண்ணாதே.இயல்பா இரு" என்றாள்.இதை அவள் சொல்லும்போது இரு விழிகளிலும் கண்ணீர் தேங்கியது. எந்த நிமிடத்திலும் உடைந்து விடுவாளெனத் தோன்றியது.என்னால் இயல்பாய் இருக்க முடியவில்லை.எந்த ஒன்றையும் மிக அதிகபட்சமாய் துய்க்கும் குரூர மனதினைக் கொண்டதினால் அவளின் மிக அதிகபட்சம் எதுவோ அதை எனதாக்கிக் கொள்ளும் வேகமெனக்கு அந்தப் பொழுதில் இருந்தது.அவள் தீர்மானமாய் சொன்னாள்."இனி என்னால் உன்னுடன் பேசவோ முன்பு போல பழகவோ முடியாது.இத இதோட விட்டுடு !"என்றபடி என் கண்ணிலிருந்து மெல்ல மறைய ஆரம்பித்தாள்.அவளின் மங்கும் பிரகாசம் பாத்தபடி இப்படிக் கத்தினேன்.

எதைக் கொண்டாவது
என்னை அழி.
துரத்தியடி.
நிராகரி.
காறியுமிழ்.
சொற்களின் வன்மம் கொண்டு
கருக்கு.
மிதி.
புதை.
மீண்டும் எழாமலென்னை
அழித்தொழி.
.................
வெறுமனே விலகாதே
.......................
உன் விலகல்
என் பைத்தியம்.

Tuesday, February 10, 2009

வ.வெ.தொ.அ.வெ.கு - 2


அத்தியாயம் இரண்டு : புனைவெழுத்தாளனும் பூனையும்

புனைவெழுத்தாளனாய் இருப்பதென்பது *கண்ணாடிச் சில்லுகள் பதிக்கப்பட்ட மதிலின் மேல் நடக்கும் பூனையின் லாவக நடைக்கு இணையானது.தன்னை ஒரு புனைவெழுத்தாளனாய் நம்புவதென்பது மதிலின் மேலிருந்து குதிக்கும் இன்னொரு பூனையின் லாவகத்திற்கு ஒப்பானது.நான் சில நேரங்களில் நடந்தும் சில நேரங்களில் குதித்துமாய் என்னை நகர்த்திக் கொண்டிருக்கிறேன்.ஒன்றை மட்டும் தெளிவாய் சொல்லிவிடுகிறேன் பூனைகள் எப்போதும் இரத்தம் சிந்துவதில்லை.அவை சாதுர்யமானவை. லாவகமானவை. மென்மையானவை. கவர்ச்சியானவை.பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தவை. திருட்டை, சோம்பலை, திடீர்பாய்ச்சலை இயல்பாய் கொண்டவை.மேலும் புலிகளின் தோற்றுவாய் அல்லது புலிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவை எனவும் நம்பப்படுகின்றன.சக புனைவெழுத்தாளர்கள் புலிகளை நினைவில் புணரும் நிஜப் பூனைகளாகத்தான் இருக்கிறார்கள் என்பது என்னுடைய திண்ணம்.

இத்தகைய புனைவெழுத்தாளனுக்கு அன்றாட வாழ்வியலில் நேரும் துயரங்கள், துக்கங்கள், எரிச்சல்கள், சொல்லி மாளாதவை. நான் புனைவெழுத்தாளனாய் வடிவமெடுத்த நாளிலிருந்து இன்று வரை தொடரும் பெருந்துக்கம் ஒன்றிலிருந்து ஆரம்பிப்பது சரியாய் இருக்கும்.இந்தத் துக்கம் என்னை ஒவ்வொரு நாளையும் மிகுந்த பதட்டத்தோடு துவங்க காரணமாகிறது.இன்றும் எவனாவது, எவளாவது கேட்டு விடுவானா/ளா என்ற பதபதப்புகள் எப்போதும் இருக்கின்றன."அலோ எக்ஸ்கியூஸ்மி நீங்க புனைவெழுத்தாளர் புண்ணியகேடிதானே" ரீதியில் எவராவது உரையாடலை தொடங்கும்போதே என் இதயம் உச்சமாய் அடித்துக்கொள்ளும் ,அடுத்ததாய் அவர்கள் கேட்கும் கேள்வி அதாய் மட்டுமே இருக்க முடியும்."என்ன இம்சடா சாமி!" என பலமுறை அலுத்து வெறுத்துப் போயிருக்கிறேன்.தமிழ் சூழலில் உலவும் உயிர்ப்பான மூளை,உச்ச மூளை,உள்ளொளி மூளை,செத்த மூளை,பாடம் பண்ணப்பட்ட மூளை, பளபளக்கும் மூளை, இன்ன பிற எல்லா வஸ்துக்களிலும் எப்படியோ இந்த கேள்வி புகுந்துவிட்டிருக்கிறது.இந்த ஒரு கேள்வியிலிருந்து எப்படித் தப்பிப்பது என்கிற உளைச்சல்கள் என்னை மனநோய்க்கு சமீபமாய் கூட்டிச் சென்றுவிடுமோ என்கிற பயங்களும் எழ ஆரம்பித்துவிட்டன.

இந்த பிரச்சினைகளின் உச்சமாய் கடந்த செவ்வாய் இரவு நடந்த நிகழ்வைச் சொல்லலாம்.வழக்கம்போல் பத்தரை மணிக்குத் தூங்கிவிட்டேன்.அன்று மட்டும் என்னிடம் பதினெட்டு பேர் அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தனர்.பதினெட்டு பேர் அந்த கேள்வியை கேட்பதென்பது எனக்கு சாதாரணமானது. ஏனெனில் ஒரு நாளில் முன்னூற்று இருபத்தேழு முறைகள் அக்கேள்வியை எதிர்கொண்டிருப்பதால் கடந்த செவ்வாய் எனக்கு சாதாரண ஒர் நாள்தான். என்னவாகிற்றோ தெரியவில்லை நள்ளிரவில் தூக்கத்தில் எழுந்து, படுக்கையில் சப்பணமிட்டு அமர்ந்து, அந்தக் கேள்விக்கு ஆயிரத்துப் பதினேழு விடைகளைச் சொல்லியிருக்கிறேன்.என் மனைவி நான் பேச ஆரம்பித்ததும் பதிவு செய்யும் கருவியை உயிர்ப்பித்து விட்டு, காதுகளில் பஞ்சை அடைத்துக்கொண்டு தூங்கி விட்டாளாம்.இன்னொரு முக்கியமான விடயத்தை சொல்ல மறந்துவிட்டேன்.ஒரு வெற்றிகரமான புனைவெழுத்தாளனாய் திகழ மனைவியின் பங்களிப்பு மிக மிக அவசியம்.பாருங்களேன் நான் பேச ஆரம்பித்ததும் பதிவு செய்யும் கருவியை உயிர்ப்பித்த அவளின் சாதுர்யத்தை எப்படிப் புகழ!!..அதனால்தான் எத்தனை விடைகளை சொல்லி இருக்கிறேன் என மறுநாள் கேட்டு மிகத் துல்லியமாய் ஆயிரத்துப் பதினேழு விடைகள் என என்னால் குறிப்பிட முடிந்தது.புனைவெழுத்தாளனுக்கு துல்லியம் மிக முக்கியம்.

அந்த ஒரே ஒரு கேள்வியை தெரிந்தவர்,தெரியாதவர், முன் பின் பார்த்திராதோர், பிறந்ததிலிருந்து பார்த்துக்கொண்டிருப்போர், பல வருடங்களாய் தெரிந்தோர், சில வருடங்களாய்த் தெரிந்தோர் என பாகுபாடில்லாமல் என் கண்ணில் படுவர்கள்/படாதவர்கள்/பட்டிராதவர்கள் எல்லாம் கேட்டுத் தொலைவதுதான் என்னை பெரும் துயரத்தில் ஆழ்த்துகிறது.ஒரே கேள்வியை பத்தாயிரம் முறைகளில் மாற்றி மாற்றிக் கேட்கமுடியும் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?நம்ப முடியாவிட்டாலும் இதுவரை நான் அந்த கேள்வியைப் பத்தாயிரம் முறைகளில் கேட்டிருக்கிறேன். கேட்கப்பட்டிருக்கிறேன். உதாரணத்துக்கு இங்கே சில முறைகள் மட்டும் உங்கள் பார்வைக்கு.

/புனைவு என்றால் என்ன?/புனைவுன்னா என்ன அய்யனார்?//புனைவு அப்படின்னா?/புனைவு என்றால் என்னங்க அய்யனார்?//புனைவு ன்னா என்ன மச்சி?/டே மாமா அது இன்னாடா பொனைவு?/யோவ் மாம்ஸ் புனைவுன்னா என்னய்யா?//எலேய் எப்பபாத்தாலும் புனைவு கினைவு ன்னு என்னடா அப்படின்னா?/மரியாதைக்குரிய அய்யனார் புனைவு என்றால் என்ன என்பதை எனக்கு புரியும்படி விளக்கமுடியுமா?தங்கள் பதிலை வேண்டி (ஒவ்வொரு முறையும் ஜிமெயிலை திறக்கும்போதே இதுபோன்ற கடிதம் இருக்க கூடாது என வேண்டிக்கொண்டே திறப்பேன்.)//அய்ஸ் புனைவுன்னா என்ன?/தம்பி புனைவ கொஞ்சம் விளக்கேன்?/செல்லம் புனைவுன்னா என்ன செல்லம்?/கண்ணா என்னடா ஆஆ அது புனைவு?/Darling I saw some label called punaivu in your blog what is that?/தங்கம் நீ என்னமோ எழுதிறியே புனைவு அது என்னாது?/ Honey punaivu means Fiction?/

உங்களுக்காவது தெரியுமா புனைவு என்பதை பொட்டில் அடித்தாற்போல் எப்படிச் சொல்வதென்பதை?..

*கண்ணாடிச் சில்லுகள் பதிக்கப்பட்ட மதிலின் மேல் நடக்கும் பூனை : இந்தப் படிமம் ரமேஷ் ப்ரேமினுடையது.

Sunday, February 8, 2009

வயல்வெளி தொலைத்த அயல்வெளிக் குறிப்புகள்


அத்தியாயம் ஒன்று : எண்கள்

என் செல்லிடைப்பேசி சென்ற வாரத்தில் ஒரு நாள் அற்பாயுளில் உயிரை விட்டபோது எனக்கந்த விபரீதம் புரிந்திருக்கவில்லை.புதிய பேசியை வாங்கி உயிர்பித்தபோதுதான் சிம்மில் எந்த எண்ணையுமே சேமிக்கவில்லை எனத் தெரியவந்தது.எனக்கான உலகம் திடுமெனக் குழம்பிப் போனதைப்போல உணர்ந்தேன். நான் உயிர்த்திருக்க உதவும் எண்களை வேறு எங்கேயுமே எழுதிவைத்திருக்கவில்லை.என் நினைவுக் குமிழி் சோப்பு நுரைகளாலானது. காற்றின் சாயல்களையொத்த கடினமான எதையுமே உள்ளே அனுமதியாமல் என் குமிழ் வீங்கிப் பருத்திருந்தது. ஏற்கனவே தெரிந்திருந்த எண்களையெல்லாம் பதட்டத்தில் குழப்பிக் கொண்டேன்.என் வங்கி அட்டைகளின் ரகசிய எண்கள் கண்ணாமூச்சி ஆடத் துவங்கின.ரகசிய எண்களைக் கூட செல்லிடைப் பேசியில் சேமித்து ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் சரிபார்த்துக் கொள்ளும் வழக்கம் எனக்கு.அட்டை சிக்கிக் கொண்டுவிடுமோ என்கிற லேசான பயத்துடன் ரகசிய எண்ணைப் பிரயோகித்தேன். எதிலேயும் சிக்கிக் கொள்ளாமல் பணமும் அட்டையும் இலகுவாய் வெளியில் வந்து விழுந்தன.என் நினைவுக் குமிழ் கடின நீரின் பின்புலத்தில் உருவாகி இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

எதிலேயும் பொறுப்பில்லை.எந்த ஒன்றையும் சரியாய் செய்வதில்லை. எல்லாவற்றிலும் மெத்தனம்.எல்லாவற்றிலும் சோம்பேறித்தனம்.என என்னை நானே கடுமையாய் திட்டிக்கொண்டேன்.இந்த சனிக்கிழமையாவது மூன்று மாதங்களாய் தள்ளிப்போடும் வங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என வெள்ளி இரவு தூங்கப்போகும் முன் மனதில் கறுவிக் கொண்டேன். புதிய நிறுவனத்தின் விலாசத்தை வங்கிகளுக்கு இன்னும் தரவில்லை.வரவு செலவு விவரங்களடங்கிய வங்கி அறிக்கைகள் பழைய நிறுவனத்திற்கே சென்றுகொண்டிருக்கின்றன.எப்போதாவது வரும் திடீர் பொறுப்பில் கடனட்டைகளுக்குத் தொலைபேசி விசாரிப்பேன். அவர்கள் நம்ப முடியாத ஒரு தொகை நிலுவையில் இருப்பதாகப் பதில் தருவார்கள்.அசலுக்கு வட்டியா? வட்டிக்கு வட்டியா? என்ன வாங்கினோம்? என ஒரேயடியாய் குழப்பங்கள் சூழும்.இந்த சனிக்கிழமையாவது புதிய விலாசத்தை தந்து அறிக்கைகளை உடனுக்குடன் சரிபார்க்க வேண்டும் என நினைத்துக் கொள்வதோடு அந்த கணங்களைக் கடந்து விடுவேன்.எதிர்பாராமல் ஏற்பட்ட எண்களின் பழிவாங்கல் என்னைத் திடீர் சுறுசுறுப்பாளியாக்கியது.

வங்கிகள்,பேரங்காடிகள்,பயணப் பதிவு செய்யுமிடங்கள்,அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட எந்த பொது இடங்களில் புழங்கினாலும் பெண்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பது என் வழக்கம்.பெண்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகள் மட்டுமே என் கால்கள் நகரும் திசையாகவிருக்கும்.நேற்றும் அப்படித்தான்.

நுஸ்ரத் பானு என்கிற அந்த வாடிக்கையாளர் சேவகி புன்னகையுடன் வரவேற்றாள்.என் பிரச்சினைகளைச் சொன்னேன்.புதிய விலாசத்தை சொல்லுங்கள் என்றபடி அவள் படிவத்தைப் பூர்த்தி செய்ய ஆரம்பித்தாள். சொல்லிக்கொண்டே வந்தேன்.அலுவலக தொலைபேசி எண்? என்றபோது எனக்கு திக் கென்றது அதுவரை நினைவில் வைத்திருந்த எண் மறந்து போனது. தடுமாறினேன்.எண் மறந்துவிட்டது என்றேன்.வீட்டுத் தொலைபேசி எண்ணை சொல்லுங்கள் என்றாள்.அய்யகோ! எனக்கு அதுவும் நினைவிலில்லை. செல்லிடைப்பேசி குளறுபடியால் எண்களைத் தொலைத்துவிட்டேன் எனப் பரிதாபமாக சொன்னேன்."வீட்டு எண்ணைக் கூடவா" எனக்கேட்டுச் சிரித்தாள்.”உங்கள் செல்லிடைப்பேசி எண் நினைவிருக்கிருதா?” என்றாள்.நல்ல வேளையாக அது நினைவிலிருந்தது. “சரி அஞ்சல் பெட்டி எண்ணைச் சொல்லுங்கள்?” என்றாள். நான் எதைச் சொல்ல? அவள் விழிகளைத் தவிர்த்துவிட்டு நினைவிலில்லை என்றேன்.”பின் எந்த விலாசத்திற்கு வங்கி அறிக்கைகளை அனுப்ப?” எனக் கேட்டுச் சிரித்தாள்.அவளிடத்தில் நான் இருந்திருந்தால் கோபப்பட்டிருப்பேன்.பத்து நிமிட அவகாசமும் உள்ளூர் தொலைபேசி எண்களின் முழுப்பட்டியலையும் கேட்டு வாங்கினேன்.என் நிறுவனத்தின் பெயரைத் தேட ஆரம்பித்தேன்.அதிர்ஷ்டவசமாக இருந்தது.அதற்குத் தொலைபேசி நான் பணிபுரியும் பிரிவின் எண்ணை கேட்டுக் குறித்துக் கொண்டேன்.என் பிரிவிற்குத் தொலைபேசி நமது அஞ்சல் பெட்டி எண் என்ன? எனக் கேட்டேன்.தொலைபேசியை எடுத்தவன் கொட்டவி விட்டபடி சொன்னான்.வெற்றிப் பெருமிதத்தோடும் என் சமயோசித அறிவை மெச்சிய படியுமாய் நுஸ்ரத் பானுவை எதிர் கொண்டேன்.

இரண்டு நாட்களில் சரியாகிவிடும் என்று சொல்லியபடி பானு ஒரு படிவத்தை நிரப்புமாறு பணித்தாள்.அது வாடிக்கையாளர் கருத்துப் படிவம்.அதில் முழுத் திருப்தியை தேர்வு செய்து இரண்டு வரிகள் அதிகமாகவே பானுவை பாராட்டி எழுதி, கையொப்பமிட்டு எழுந்தேன்.விடைபெறுகையில் சற்று யோசித்து தன் செல்லிடைப் பேசி எண் கொடுத்தாள் எந்தப் பிரச்சினையென்றாலும் (வங்கியில்தான்)தன்னை நேரடியாய் அழைக்கச் சொன்னாள்.இனிமேல் பேசவே மாட்டேன் என கண்ணைக் கசக்கிக் கொண்டு போன உரையாடலினி நினைவிலாடினாள்.அவளைத் தவிர உலகத்தில் எல்லாப் பெண்களுக்கும் என்னைப் பிடித்துத் தொலைகிறது.

இன்னும் இரண்டு வங்கிகளுக்குப் போக வேண்டும்."என்ன அவசரம் மெதுவாய் பார்த்துக்கொள்ளலாம்" என அதுவரைத் தூங்கியிருந்த விழிப்பாளன் சோம்பல் முறித்தான். இன்று சனிக்கிழமை மதியம் மாதிரியே இல்லை.வானம் முழுக்க மேகம் அண்டியிருந்தது.மிக அபூர்வமான பாலைத் தென்றல் சன்னமாய் வீசிக் கொண்டிருந்தது.மதியப் பொழுதினுக்கு இருக்கும் கலவிச் சோம்பல், உயர்ந்த கட்டிடங்களின் வழி கசிந்து கொண்டிருந்தது.பிரதான சாலையைப் புறக்கணித்து கார்னீஷ் வழியைத் தேர்ந்தெடுத்தேன்.சலனமற்று விரிந்திருந்த நீர்ப்பரப்பின் கரைகளில் நீ(ல)ளமான, வெள்ளை நிற இறக்கைகளைக் கொண்ட பறவைகள் கும்பல் கும்பலாக அமர்ந்திருந்தன.எவருடைய நகர்வையும், நடத்தலையும் சற்றும் பொருட்படுத்தாது செந்நிறப் பூனையொன்று நடைபாதையின் குறுக்கில் படுத்திருந்தது.குள்ளமான பேரீச்சை மரங்கள் வரிசையாய் சாலையின் நடுவில் நடப்பட்டிருந்தன.நீளமான, சுத்தமான, நடுவில் மரங்கள் வளர்ந்திருந்த, ஓரங்களில் பசும் புற்கள் வளர்க்கப்பட்டிருந்த சாலையில், மேகங்கள் மூடிய மதியப் பொழுதில் நடந்து செல்ல இதமாய் இருந்தது. பதின்மனொருவன் சக்கரங்கள் வைக்கப்பட்ட பலகையில் படுவேகமாய் நடைபாதையில் சறுக்கிக் கொண்டு வந்தான்.நான் சற்றுப் பின் வாங்கி வழிவிட்டேன்.பதின்மம் என்னைப் படுவேகமாய் கடந்து செல்வதை எதனோடோ தொடர்புபடுத்திப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

தயாரித்தல்கள்,பாதுகாப்புகள் மீதெல்லாம் எப்போதிலிருந்து தூசு படிய ஆரம்பித்தன எனத் தெரியவில்லை. என்னுடைய மூளை என்கிற வஸ்துவை பயன்படுத்தாமலிருக்க பலர் பல விதங்களில் உதவியாய் இருக்கிறார்கள்.ஒரு அசாதாரண மிருகத்தைப் போல பல்கிப் பெருகும் அறிவியலின் வளர்ச்சி மூளையை சும்மா வைத்திருக்க பெரும் உதவியாய் இருக்கிறது. எப்போதாவது சில குளறுபடிகளில் சிக்கிக் கொண்டாலும் சும்மா இருப்பதென்பது அலாதியானது.

Friday, February 6, 2009

முத்துக்குமார் வைத்த தீ

ஏதாவது செய்.

ஏதாவது செய் ஏதாவது செய்
உன் சகோதரன்
பைத்தியமாக்கப்படுகின்றான்
உன் சகோதரி
நடுத்தெருவில் கற்பிழக்கிறாள்
சக்தியற்று
வேடிக்கை பார்க்கிறாய் நீ
ஏதாவது செய் ஏதாவது செய்
கண்டிக்க வேண்டாமா.

அடி உதை விரட்டிச் செல்
ஊர்வலம் போ பேரணி நடத்து
ஏதாவது செய் ஏதாவது செய்
கூட்டம் கூட்டலாம்
மக்களிடம் விளக்கலாம்
அவர்கள்…. கலையுமுன்
வேசியின் மக்களே
எனக் கூவலாம்

ஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்று செய்யத்தவறினால்
உன் மனம் உன்னைச்
சும்மா விடாது.
சரித்திரம், இக்கணம்
இரண்டும் உன்னை
பேடி என்றும்
வீர்யமிழந்தவன் என்றும்
குத்திக் காட்டும்.

ஆத்திரப்படு
கோபப்படு
கையில் கிடைத்த
புல்லை எடுத்து
குண்டர்கள் வயிற்றைக் கிழி
உன் சகவாசிகளின்
கிறுக்குத் தனத்தில்
தின்று கொழிப்பவரை
ஏதாவது செய் ஏதாவது செய்.

-ஆத்மநாம்

முத்துக்குமார் வைத்துக் கொண்ட தீயில் கருகிப் போனது அவரின் உடல் மட்டுமல்ல தலைவர் பிம்பங்கள் மீது வைத்திருந்த சாமான்யனின் அடிப்படை நம்பிக்கைகளும்தான்.நமது சூழலைப் பொறுத்தவரை அரசியல்வாதிகள் எப்போதும் அரசியல்வாதிகளாகவே இருக்கின்றனர். அவர்களுக்கு பங்கம் விளைவிக்கும் எந்த ஒரு சிறு அசைவையும் / நகர்வையும் அவர்கள் ஒருபோதும் செய்யத் துணிவதில்லை.நாம்தான் மிகையிலும், கவர்ச்சியிலும் நம்மை தொலைத்து இறுதியில் சகலத்தையும் தொலைக்கிறோம்.நாம் எப்போதும் ஏமாளியாகத்தான் இருக்கிறோம்.மேடைப்பேச்சுகளில், அடுக்குமொழி வாய்ஜாலங்களில், எண்ணற்ற வாக்குறுதிகளில், மெய்மறக்கிறோம்.நகரும் கால இடைவெளியில் மொத்தத்தையும் மறக்கிறோம்.நமக்கான இன உணர்வை எழுப்பக்கூட முத்துக்குமார்கள் தங்களை மாய்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

தமிழகத்தின் பிரதான ஊடகங்கள் (அச்சு,ஒளி,ஒலி) அதிகார வர்க்கத்தின் பிரச்சாரக் கூடங்களாய் இருப்பது / மாறிப் போனது மிகப்பெரிய சோகம்.முத்துக்குமார் சம்பவத்தை இருட்டடிப்பு செய்தும்,திரித்தும் கூட இவர்களால் மக்களிடையே ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பை குறைத்து விடமுடியவில்லை.தொடர்ச்சியாய் வந்து கொண்டிருக்கும் பதிவுகள் இணைய எழுத்துக்கள் வலிமையான மாற்று ஊடகங்கள் என்பதான என் நம்பிக்கைகளை இன்னும் வலுப்படுத்துகின்றன.சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கும் சக நண்பர்களுக்கு என் நன்றிகள்.(திரித்துக்கொண்டிருப்பவர்களுக்கும் சேர்த்துத்தான்)

Featured Post

test

 test