Wednesday, December 30, 2009

வனமழிக்கும் தீயின் ஊற்று - நதியலை

இரவின் நிசப்தமாய் அணைப்பின் கதகதப்பாய் முத்தத்தின் ஈரமாய் அடக்கவியலா கண்ணீரின் ஊற்றாய் அந்தி மேகத்தீற்றலாய் குழைத்து குழைத்து ஊட்டப்படும் உணவின் ருசியாய் பகிரப்பட்டிருக்கின்றன அய்யனாரின் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள். பிரம்மாண்டமான மாளிகைகள் தராத சுகத்தைச் சின்னஞ்சிறு மரக்குடில் தந்துவிடுவதைப்போன்றது இக் குறுங்கவிதைகள். அந்தந்த நேரத்து நெகிழ்வை, ஆசையை, நினைவை, விரக்தியை, சோகத்தை எவ்வித பூச்சும் வர்ணனைகளுமில்லாமல் அப்படியே வார்த்தைகளை கோர்த்து அளித்திருக்கின்றார். ஏக்கத்தை, தவிப்பை, அன்பை சொல்லும் கவிதைகளை பெரும்பாலும் காதல் கவிதைகள் என்றே முத்திரை பதித்து விடுகின்றோம். இப்பதிவில் உள்ள பெரும்பாலான கவிதைகள் காதல் என்ற சட்டத்திற்குள் அறையப்படாது பொதுவாக நேசத்தை மொழியும் கவிதைகளாகவே பார்க்கத்தோன்றியது.

உணர்வுகளை எண்ணங்களை வெளிப்படையாக சொல்ல முடிவது ஒரு கலை. அது எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. ஆனால் அப்படி தொடர்ந்து வெளிப்படுத்தப்படுவதாலேயே சில உணர்வுகள் மலிந்து விட்டன. அதிகமாக பயன்படுத்திப் பயன்படுத்தியே அதன் வீர்யத்தை குறைத்துவிட்டோமோவென எண்ணத்தோன்றுமளவுக்கு பல வார்த்தைகளை சக்கையாக்கிவிட்ட நிலையில் இதையெல்லாம் சொல்லத்தான் வேணுமா? என்ற எண்ணம் பல நேரங்களில் மேலோங்குகின்றது. இப்படி சொல்லுவதா வேண்டாமா என்ற குழப்பநிலையில் சொல்லாமல் விடுவதின் விளைவுகளை அழகாக ஒப்பிட்டுள்ளார் இவ்வரிகளில்
‘சிலவற்றை சொல்லாமல் விடுவது
மழை மாலையில் முத்தங்களை தவறவிடுவதற்கு ஒப்பானது’
இப்படி உணர்வுகளை வெளிக்காட்டிவிடுவதின் நலன்களை அறிந்திருந்தும் தனது ப்ரியங்களை சொல்லிவிட முடியாமல் தவிக்கும் மனதினுக்கு மயிலிறகால் நீவிவிடுவதையொத்த சுகத்தை, ஆறுதலை இவ்வரிகளில் தேக்கி வைத்திருக்கிறார்.
“சொல்லப்படாதவைகள்
இந்த பயணங்களை
கொஞ்சம் நீட்டிக்கச் செய்யலாம்
-----------
-----------
அச்சிறு கால நீட்டிப்புகளுக்குள்
வாழ்ந்துவிட்டுப்போகட்டும் நமக்கான
'இது'”
மேலும் ‘நமக்கான இதில் மெளனங்களே மிகவும் வசதியானது’ என்கிறார். வசதி கருதி மௌனமாக இருப்பதா அல்லது சொல்லிவிடுவதே நல்லதா என்பவையெல்லாம் அனுபவத்தால் நன்கு அறிந்திருந்தாலும் அன்றாட வாழ்வில் சொல்லவேண்டுவதை சொல்ல முடியாமல்போவதாலும் சொல்ல வேண்டாமென்று நினைப்பவற்றை கொட்டித்தீர்ப்பதாலும் இழக்கும் முத்தங்கள் பெருகிக்கொண்டேயிருப்பதான விபரீதங்கள் தொடரத்தானே செய்கின்றன.

அன்பில் திளைக்கும் மனதினுக்கு மகிழ்ச்சியையோ துக்கத்தையோ அள்ளித்தர ஒரு சிறு நகர்வு போதுமானதாக இருக்கின்றது. நேசம் நிறைந்திருக்கும் உள்ளத்தில் மொத்தமாக குழைவும் நெகிழ்வும் குடிகொண்டுவிடுகின்றது. கிளர்வு புத்துணர்ச்சி படபடப்பு என எல்லாம் கலந்த உணர்வில் தளும்பும் மனதை அதே கோட்டில் உணர முடியாதவர்களுக்கு இத்தகைய அதீத நேசங்கள் சலிப்பானதாகவே இருந்துவிடுவது சாபமென்றாலும் எக்காரணத்திற்காகவும் விரிந்து நீளும் அன்பின் பரப்பை மடங்கி சுருட்டுவது இயலாக் காரியமாகத்தானாகின்றது என்பதை சொல்கின்றன இவ்வரிகள்.
“உனக்கான என் அன்பை
ஆக்டோபஸின் வடிவமொத்து
எல்லாத் திசைகளிலும்
விரித்தாயிற்று
ஒரு புள்ளியில் குவிய
இனிமேல் சாத்தியமில்லை”

ஆனால் ஒப்பற்று ஓங்கி உயரும் நேசங்கள் விளங்கிக்கொள்ளப்படும்போது அந்த மகிழ்ச்சியை சுகமான பாரத்தை தாங்கொனா களிப்பை எதிர்கொள்வது சற்று திக்குமுக்காட வைக்கும் சங்கதிதான் என்பதை சொல்கிறார் இப்படி

“தாங்கமுடியவில்லை
விழிகள் விரியச் சிரிக்கும்
எனக்கான அப்பெரும் புன்னகையை”
ஒருமித்து கலக்கும் இதயங்கள் சாதாரணமாக பேசும் மொழிகள் கூட கவிதையாகிவிடுகின்றன என்பதாக தோன்றியது மீன் தொட்டியில் இருக்கும் அழகான மீனுக்கு அவளின் பெயரை சூட்டியதாகவும் அதை ஒரு முறை வந்து பார்த்துவிட்டுப்போயேன் என்று அழைப்பதாக இருக்கும் கவிதை. நாமும் சென்று ரகசியமாக அம்மீனை கண்டுவரலாமோவென ஆவல் எழுப்பும் கவிதையது.

நுண்ணுணர்வுள்ள எந்த ஒரு இதயத்தையும் தனிமை தீண்டாமல் இருந்ததில்லை. நீங்காமல் உடனிருக்க பலரிருந்தும் தனிமையில் ஏங்கிக்கிடக்க எங்கிருந்தோ காரணமில்லா சோகம் தொத்திக்கொள்ள பலவேளைகளில் எதுதான் வேண்டுமென அறியாமல் மருண்டு அவளின் அருகாமை மட்டுமே நாடும். தன்னை சரியாக புரிந்துக்கொள்ள மாட்டாளாவென இடைவிடாத நிரந்தரமான தவிப்பு தங்கிவிடும். அப்படியான பொழுதுகளில் தன் நேசத்தை, வேட்கையை, ஊசலாட்டத்தை இத்தனை கச்சிதமாகவும் வடித்துவிடமுடியுமோ!

“நீரினடியில்
பற்றுதலுக்காய்
அலைந்துகொண்டிருக்கின்றன
என் மிக மெல்லிய வேர்கள்”
தனிமையிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் திணறிக்கொண்டு திணிக்கப்படும் வாழ்வில் கசங்கும் மனிதர்கள் ஏராளம். அப்படி தனிமை மட்டுமே வாய்க்கப்பெற்ற மனங்களின் மன்றாடல்கள் எத்தனை வேதனை மிகுந்ததாக இருக்கும். தனிமையின் இசையென தன் வலைபக்கத்துக்கு தலைப்பு வைத்திருக்கும் அய்யனார் அத்தனிமையிலிருந்து தப்பிக்க தனக்கான வழியாக சொல்வது…

“வேண்டுவதெல்லாம் வெதுவெதுப்பான
ஒரு மென் தொடுகை
அல்லது
விழிக்கையில் சிரிக்கும்
வெள்ளைப் பின்னனி கொண்ட
மிகப்பெரு இரு கரு நிற விழிகள்...”
வார்த்தைகளால் விளங்கச்செய்ய முடியாத அன்பை, தர முடியாத நம்பிக்கையை, உணரமுடியாத நெருக்கத்தை முத்தத்தின் அழுத்தமோ அணைப்பின் இறுக்கமோ எடுத்துரைத்துவிடுகின்றன. அதேபோல் முத்தங்களை மொழியும் கவிதைகள் முத்தங்களை போன்று கிளர்ச்சியூட்டவும் செய்கின்றன. அப்படியான சில வரிகள்…

“அவசரமாய் முத்தமிடத் தோன்றுகிறது”

“இப்போது உன் உதடுகளிலிருந்து
துவங்குவதே மிகச்சரியானதாயிருக்கக்கூடும்”
எதிர்ப்பார்ப்பதோ ஆசைபடுவதோ தானாக நிறைவேறிடுவது சுகம்தானெனினும் கேட்டு வாங்கி கொள்வதும் சுகமானதாகவே இருக்கின்றது காதலின் கொஞ்சல்களிலும் கெஞ்சல்களிலும். தனக்கான தேவையை கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியங்கள் காதலில் இருப்பதில்லையென்றாலும் மறுப்புகளும் சிணுங்கள்களும் விலகல்களும் அதற்கான வித்துக்களாகின்றன. அப்படியான அழகான கெஞ்சலாக இருக்கின்றது ‘முத்தங்களிட்டு மலரச் செய்யேன் முதல் பூவை’ என்னும் வரிகள். ஆனால் அதையே வேறோர் கவிதையில் இப்படியும் பதிவு செய்கின்றார்.

“வனமழிக்கும்
தீயின் ஊற்று
உன் உதடுகளாய் இருக்கலாம்”
நேசிக்கும் உயிர்கள் எல்லாம் தொடர்ந்து ஒன்றாக வாழ நேரிடமுடியாமல் போவதுகூட என்றென்றைக்குமாக அக்காதலை நீடிக்கச்செய்கின்றதோ என்றே தோன்றுகின்றது. சேர்ந்து வாழ முடிந்தவர்கள் கூட தங்கள் காதலை வாழ்க்கைவோட்டத்தில் எங்கேனும் தொலைத்துவிட நேரிடலாம் ஆனால் பிரிந்தவர்களோ காலத்துக்கும் அக்காதலை சுமந்துக்கொண்டு நினைவுகளால் நீருற்றி வளர்த்துவருகின்றனர். காலத்துக்குமான வலிதான் இப்பிரிவு என்றாலும் அவ்வேதனைகளை கவிதைகளில் தவழவிட்டுப்பார்ப்பது சற்று ஆறுதலானதுதான். உருகி உருகி நேசிக்கும் தன்னவளை

“ஒளியில் சிதறும் கருமை நான்
நானிலும் நுழையும் வெளிச்சமவள்”
என்பதைவிடவும் உயர்வாக கூறிவிடவும் முடியுமோ? பார்ப்பதோ பேசுவதோ அத்தனை எளிதில் நடக்கக்கூடிய காரியமில்லாமலிருந்தாலும் தவித்திருந்து காத்திருந்து பேசி பழகியவளை பிரிய நேரிட்டதை எவ்வித அழுகையோ புலம்பல்களோ இல்லாமல் கச்சிதமாக அந்த ரணத்தை சாதாரணமான வரிகளைக்கொண்டு அசாராதாணமாக சொல்லிவிடும் கவிதையில் அப்பிரிவின் வேதனையோடு வியப்பாகவும் இருந்தது இவ்வரிகளை வாசிக்கும்பொழுது.

“அவள் கடைசியாய் தொலைபேசியபோது
எங்களிருவரிடமும் சொந்தமாய் தொலைபேசி இருந்தது”

மனம் அடையும் முதிர்ச்சியும் மாற்றமும் தான் எத்தனை விசித்திரமானது. துக்கத்தையும் ஆனந்தத்தையும் சுழற்சிமுறையில் சுகிக்கும் வினோதங்களை நம்முள்ளேயே நிகழ்த்திக்காட்டி நம்மை வியக்கவைக்குமல்லவா காலம். பிரிவுத்துயரின் ஆற்றாமையால் வாடும் பிம்பங்களின் ரணங்களை சொல்லாமல் சொன்னவர் இதோ இக்கவிதையில் பிரிவும் ஆனந்தமென்கின்றார்.

"துளை வழி வந்த
உன் குரலின் வெம்மைகளை
எனதறை முழுக்க
நிரப்பித் தூங்கிப்போகிறேன்
நினைவுகளை வாரியணைத்தபடி
நீ தூங்குவதாய் சொல்கிறாய்
எவர் சொன்னது
பிரிவு
வலிகள் மிகுந்ததென?"
பற்றோ அல்லது ஈர்ப்போ எந்த ஒன்றிலும் முழுமையாக ஈடுபடச்செய்கின்றது. இதுதான் இதைநோக்கித்தான் இப்படி முடிவடையுமென்றுதான் என்ற எதோ ஒரு நம்பிக்கையில் தொடர்வது பல காரணங்களால் தடைப்படக்கூடும். அப்படி தானாக தடைப்படும் சந்தர்ப்பங்களில் எப்படியோ மனது சமாதானம் அடைந்துக்கொண்டு மாற்று வழிகளை கண்டடைந்து விடுகின்றது. ஆனால் நாமாக முடிவு செய்ய வேண்டிய தருணங்களில் தொடர்ந்துக்கொண்டிருப்பதை துண்டிப்பதா அல்லது தொடர்வதா என்ற குழப்பங்கள் நீடிக்கின்றன. வெகு தொலைவு நகர்ந்துவிட்ட பின்பு அதை துண்டித்துக்கொள்ள மனம் என்றுமே விழைவதில்லை. அதற்கான காரணங்கள் பலவாக இருந்துவிடுகின்றன அவற்றில் ஒரு காரணத்தை விளக்குவதாக இவ்வரிகள்

“இதுவரை கடந்திடாத தொலைவுகளை கடந்தபின்னும்
பறவை பறந்துகொண்டிருக்கிறது
வழி தப்பும் பயத்தில்
நானும் தொடர்ந்துகொண்டிருக்கிறேன்”
இதைப்போலவே பறவை என்ற படிமத்தைக்கொண்டு அழகாக வடிக்கப்பட்டுள்ள மற்றுமொரு கவிதை வரிகளில் எதேதோ எண்ணங்களிலும் கனவுகளிலும் கடந்து வந்த நிகழ்வுகளிலும் நம்மை மூழ்கடித்துக்கொண்டிருக்க கையிலிருக்கும் காலம் விலக்கிக்கொண்டிருப்பதாக சொல்கின்றார்.

“உதறி விழி திறக்கையில்
சன்னலருகில் சிறகுதிர்த்ததுப் பறந்திருந்தது
நிகழ் சிட்டுக்குருவி”
மென்மையானவர்கள் எல்லோருக்கும் காதல் அனுபவம் வாய்த்து விடுகின்றதா அல்லது காதலிப்பதால் மென்மையானவர்களாக மாற்றப்பட்டுவிடுகின்றார்களா என்று தோன்றுமளவுக்கு இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கவிதைகள் மென்மையானவை. அடைமழைப்போல் பொழியாமல் மெல்லிய சாரலாக வருடுபவை. உள்ளம் பூரித்து பரவசிக்கும் நிலையில் உருகி உதிர்க்கும் வார்த்தைகளாகவே பட்டது இவ்வரிகளை வாசிக்கும் பொழுது

“அவளின் முகமேந்தியபடி சொன்னேன்
பூவீன்ற இப்பறவையும்
இன்னொரு பூவினை பிரசவிக்கப்போகும் நீயும்
அபூர்வமானவர்களென”
இவ்வளவு மென்மையை தன்னுள் தேக்கிக்கொண்டவரால் மட்டுமே இப்படியும் தீ கக்க முடியும் என்று உணர்த்தியது “கண்களுக்கெதிரில் நுரையின் பின் விரிந்திருக்கிறது எல்லைகளற்ற நீலம்” என்ற வரிகளை கொண்ட சிறப்பான கவிதை. தன் கவிதைகளில் நெகிழ்வை கொண்டுவருவதற்காக மெனக்கெட வைத்த முயற்சிகளை சொல்வதாக அமைந்த கவிதையும் சிறப்பு. அதில் “இப்போதெல்லாம் உங்களால் நெகிழ்வை உணரமுடிகிறதல்லவா என் கவிதைகளில்?” என்ற வரிகளை வாசிக்கும்போது ஆமென்று புன்னகையோடு பூரணமாய் ஒப்புக்கொள்ளமுடிகின்றது.

மென்தொடுகைக்கும் இறுக அணைத்தலுக்கும், நெற்றி முகர்தலுக்கும் இதழ் முத்தத்திற்கும் உள்ள வேறுபாடு போலத்தான் இவரின் இரண்டு கவிதைத் தொகுப்புகளான நானிலும் நுழையும் வெளிச்சமும் தனிமையின் இசையும். இதிலுள்ள கவிதைகள் எல்லாம் நேசத்தை மென்மையாக மிதமாகச்சொல்பவை. எந்த திருகலும் இசங்களும் உள்நுழையவிடாமல் எதார்த்தமாய் நிகழம் உள்ள வெளிப்பாடாக தன் மனவோட்டத்தை பதிவித்திருக்கிறார். அடர்த்தியாக கட்டிய பூமாலைக்களுக்கிடையில் இது போன்று மணம்வீசும் உதிரிப்பூக்களும் தேவையாகத்தானிருக்கின்றன.

‘நானிலும் நுழையும் வெளிச்சம்’ என்ற இக்கவிதை தொகுப்புடன் ‘உரையாடலினி (சிறுகதை)’, ‘தனிமையின் இசை (கவிதைகள்)’, என்ற புத்தகங்களை வெளிகொண்டுவரும் அய்யனார் இலக்கிய பரப்பில் மேலும் பல அடர்த்தியான படைப்புகளை கொண்டுவரவும், விரைவில் தன் முதல் நாவலை எழுதி முடித்து வெளியிடவும் வாழ்த்துக்கள்.

நதியலை
20 நவம்பர் 2009

8 comments:

சென்ஷி said...

:)

வாசகத்தன்மை குறைந்து ரசிகத்தன்மையை ஏராளமாய் பிரதிபலித்து மனங்களை உற்சாகப்படுத்துகிறது எழுத்துக்கள்... வாசிக்கும் ஈடுபாட்டிற்கான முன்னுற்சாகமாக நதியலையின் முன்னுரையுள்ளது.

chandru / RVC said...

தொகுப்பாய் வாசிக்கும் ஆவல் அதிகரித்துக்கொண்டுள்ளது. :)

குப்பன்.யாஹூ said...

என்ன சொல்லி பாராட்ட , திருப்பி திருப்பி நன்றி நன்றி ன்னு அடித்து சலித்து விட்டது என் கணினிக்கும்..

நீங்கள் எல்லாம் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன், இந்த ஒரு மகிழ்ச்சியே போதும் நண்பர்களே

ரௌத்ரன் said...

அழகான கவிதைகள்...

நதியலையின் முன்னுரையில் இன்னும் அழகாகத் தெரிகிறது அய்யனார்...

வாழ்த்துக்கள் :)

யாத்ரா said...

எல்லா அணிந்துரைகளையும் வாசித்தேன் அய்யனார், ஆனால் இந்த அணிந்துரையை வாசிக்கும் போது ஆரம்பம் முதல் இறுதி வரை ஒருவகை உணர்வு வயப்பட்ட மனநிலையிலேயே இருந்தேன், பல இடங்களில் மேலே மேலே தொடர்ந்து வாசிக்க இயலாமல் கவிதைகளிலேயே நின்றும் அவற்றிற்கு நதியலை அவர்கள் எழுதியிருந்த வரிகளில் லயித்தும்,,,,,,, உங்கள் மொத்த கவிதைகளையும் இணையத்தில் வாசித்திருந்தாலும் தொகுப்பில் மறுபடியும் வாசிக்கும் ஆர்வம் என்னை பிடித்தாட்டுகிறது. இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளின் மென்மையில் நெகிழ்வில் மீண்டும் கரைய தவிக்கிறது மனம்.

இரவுப்பறவை said...

வாழ்த்துக்கள் அய்யனார்... மேலும் மேலும் எழுதுங்கள்!
புத்தகங்களை படிக்க ரொம்பவும் எதிர்பார்ப்போடு இருக்கிறேன்!

நேசமித்ரன் said...

வாழ்த்துகள்


இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

JoeArulanandam said...

Machi Great., Doing great

Featured Post

test

 test