Thursday, November 5, 2009

பவா வைப் பற்றி சில குறிப்புகள்

From தனிமையின் இசை

மிக நெருக்கடியான பணிச்சூழலில்தான் என் விடுமுறையைத் தீர்மானித்தேன். வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை இந்தியா வரவேண்டிய சூழல்கள் அமைவதால் விடுப்புகள் குறைவாகவே இருந்தன. இந்த நேசமற்ற சூழலும், இயந்திர முகங்களையும் பார்த்து சலித்து வெறுத்த தனிமை குறைந்த பட்சம் முப்பது நாட்கள் விடுப்பைக் கோரியது. எல்லாம் உதறி செப்டம்பர் மாதத்தின் ஒரு அதிகாலையில் ஓசியில் கிடைத்த ஒயினை மூக்கு முட்டக் குடித்த கிறக்கத்தோடு சென்னை வந்திறங்கினேன். மூன்று வருடங்களுக்கு முன்பு முதல் முறையாய் இந்த அயல்தேசத்திலிருந்து ஊருக்குக் திரும்பிய நாளின் பரவசமெல்லாம் எங்கே போயின எனத் தெரியவில்லை. என்னுடைய எல்லா உணர்வுகளையும், பரவசங்களையும், அறியாமைகளையும் இந்த நகரும் காலம் தின்றுக் கொழுத்துவிட்டுத்தான் செத்து மடிகிறது. காலத்தின் மாறுதல்களின் எந்த நச்சும் தீண்டியிராத மனிதர்களைப் பார்க்கும்போது பொறாமையும் இணக்கமும் ஒருமித்து, ஒரு வித ஸ்நேகம் உள்ளுக்குள் துளிர்விடுகிறது. அப்படி ஒரு மனிதர்தான் பவா.செல்லதுரை.

என் வாழ்வில் அபூர்வமாய் வந்துவிட்டுப் போன தேவதைகள் வாழ்வின் மீதான என் நம்பகத்தன்மைகள் குறித்து பெரிதும் கவலை கொள்வர். நான் மிகுந்த வறட்டுத் தனமாய் இருக்கிறேன், வெறும் அவநம்பிக்கைகளை மட்டுமே சுமந்தலைகிறேன் என்றெல்லாம் அவர்கள் பதறி மாய்ந்து, மாய்ந்து என் நிலைப்பாட்டை மாற்றப் பெரிதும் மெனக்கெடுவர். திமிர்,அலட்சியம், அசட்டை என என் பிரத்யேகமான வெவ்வேறு குணாதிசயங்களின் மூலம் எல்லாவற்றையும் சிதறடித்துவிட்டு அவர்கள் கடந்து போன பின்னர் கழிவிரக்கத்திலாழ்வதுதான் இதுவரைக்குமான என் வாழ்வாய் இருந்து வருகிறது. முதன் முறையாய் வாழ்வென்பது நெகிழ்ச்சியானது, அன்பாலானது, சக மனிதன் ஒருவனை எவ்வித முகாந்திரமுமில்லாது நேசிக்க முடியும் என்பன போன்ற நம்பிக்கைகளை, மனிதர்கள் அத்தனை போலித்தனமானவர்கள் அல்ல என்கிற இணக்கத்தை பவா வின் மூலமாய் கண்டறிய முடிந்தது.

பவா வின் வரவேற்பில் ஒரு குழந்தையின் குதூகலம் இருக்கும். ஒவ்வொரு முறையும் அதே குதூகலம் நிரம்பி வழியும். அன்பை, நேசிப்பை சரியான நேரத்தில், சரியான மனிதர்களிடத்தில், மிகச் சரியாய் சொல்ல முடிவது / வெளிப்படுத்த முடிவது என்னைப் பொறுத்தவரை மிக அபூர்வமான குணமாகத்தான் இருக்க முடியும். (என்னால் ஒருபோதும் வெளிப்படுத்த முடிந்ததில்லை) பவா வின் இயல்பே நெருக்கமும் இணக்கமுமான ஒரு குழைவு நிலைதான். ஒருவரை இதனால்தான் பிடிக்க வேண்டும் அல்லது ஒருவருடன் இதனால்தான் பழக வேண்டுமென்கிற துய்ப்பு சூழல் எனக்குக் கற்றுத் தந்த பாடங்களையெல்லாம் பவா காற்றில் பறக்கவிட்டார். என்னிடம் சொல்வதற்கு அவரின் இத்தனை வருட வாழ்வு இருந்தது. எனக்குத்தான் அவரிடம் சொல்ல புத்தகங்களையும் அந்நிய வாழ்வையும் தவிர வேறொன்றுமில்லாமல் போனது.

பவாவின் வீட்டில், நிலத்தில், கடையில், பயணிக்கையில், ஏரிக்கரையில், விடுதிப் பூங்காவில், விடுதி அறையில், என நாங்கள் சந்தித்துக் கொண்ட எல்லா இடங்களிலும் விடாது பேசிக் கொண்டிருந்தோம். அவருடைய தொடர்ந்த பேச்சில் நான் மெல்ல இளகத் துவங்கினேன். ஒரு கட்டத்தில் தினம் இரண்டு வார்த்தையாவது அவருடன் பேசாவிடின் அந்த நாளே முழுமையாகாத உணர்வும் வரத் துவங்கியது. என் வாழ்வின் மிக இலேசான நாட்களாக, நம்பிக்கையும் அன்புமான நாட்களாக இந்த விடுமுறை தினங்கள் இருந்தமைக்கு பவாதான் காரணமாக இருந்தார்.

பவா வை அவரின் குழந்தமை சிதையாது பார்த்துக் கொள்வதின் மிக முக்கியப் பங்கு தமிழின் மிக முக்கியமான மொழிபெயர்ப்பாளரான, மலையாளத்திலிருந்து பல காத்திரமான படைப்புகளை தமிழில் அதன் ஆன்மாவோடு கொண்டுவந்த ஷைலஜா மற்றும் அவரின் குடும்பத்தாரினுடையது. உலகின் எங்கோ ஒரு மூலையில் பிளாக்கில் பினாத்துகிறேன் என்கிற அறிமுகம் கூட எனக்கான அன்பைத் தருவதற்கு இவர்களுக்கு தேவையில்லாத ஒன்றுதான். நான் ஒரு சக மனிதன் என்பது மட்டுமே போதுமானதாகவும் வாசிப்பவன் என்பது அதிகப்படியான குணமாகவுமாய் இவர்களுக்கு இருக்கிறது.

ஒரு மின்சாரம் போன மதியத்தில் ஷைலஜா தன் கைகளினால் உருண்டையாக்கித் தந்த சோற்றுக் கட்டிதான் இதுவரை நான் சாப்பிட்டதிலேயே மிகச் சிறந்த உணவு. வீட்டில் சுற்றி உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த அந்தப் பின் மதிய அமைதியில் எங்கள் ஒவ்வொருவரின் கைகளிலும் அன்பைச் சேர்த்துப் பிசைந்த அந்தச் சோற்றுக் கட்டி அமிர்தமாய் இருந்தது. வம்சி மற்றும் மானஸியோடு நாங்களும் ஷைலஜாவின் பிள்ளைகளானோம்.

பவா எனக்கு அறிமுகப்படுத்திய உலகம் இதுவரை நான் அறிந்திராத ஒன்றாகத்தான் இருந்தது. பேச்சினூடாய் பகிர்ந்து கொண்ட மனிதர்கள், நிகழ்வுகள், சம்பவங்கள் யாவும் இயல்பு வாழ்வு குறித்தான என் முன் முடிவுகளை தகர்ப்பதாய் இருந்தது. எனக்குப் பிடித்தமான ஆளுமைகளில் தொடங்கி அடுத்த வீட்டு மனிதர் வரைக்குமாய் விரிந்திருந்த பவாவின் நட்புலகில் விரோதிகளோ பிடிக்காதவர்களோ இல்லை.

பவா எனக்கு அறிமுகப்படுத்திய நண்பர்கள் அனைவரின் வாழ்வு முறையும் புதிதாக இருந்தது. புகழ்,பணம், பிரபல வெறி என எல்லாவற்றிலிருந்தும் விலகி ஒதுங்கி கலையை வாழ்வாகவும், வாழ்வைக் கலையாகவும் நேசித்து வாழும் மனிதர்களையும் அவர்களின் படைப்புகளையும் நான் காண நேர்ந்தபோது நெகிழ்ந்து போனேன். நான் உழன்று கொண்டிருக்கும் இயங்கிக் கொண்டிருப்பதாய் நம்பிக் கொண்டிருக்கும் உலகத்தையும் அதில் கடக்க நேரிடும் சக மனிதர்களையும் அந்தச் சூழலில் நினைத்துப் பார்த்துக் கொண்டேன். எத்தனை மோசமான வாழ்வை நானும் என் சக உலகத்தவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என நினைத்து சிரித்துக் கொண்டேன். இப்படி ஒரு எண்ணத்தை வரவழைத்தது திருவண்ணாமலையில் வாழும் ஸ்பெயின் ஓவியர் காயத்ரி காமுசும் அவரது கணவரான ஆனந்தும் தான். இருவரைப் பற்றியும் விரிவாக பிறகொருமுறைப் பதிகிறேன்.

நான் எதைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறேன்? என்னைச் சுற்றியுள்ள சமூகத்திலிருந்தும் மனிதர்களிடத்துமிருந்தும் ஏன் விலகி வந்துவிட்டேன்? என்றெல்லாம் எனக்குள் யோசனைகள் மிக ஆரம்பித்தன. வாழ்வை வறட்சியாக அணுக எனக்கு சில தோல்விகளும், பல புத்தகங்களும், சில துரோகங்களும் கற்றுக் கொடுத்திருக்கின்றன. கண்கள் விரியாதுச் சிரிக்க, அழுத்தமில்லாது கைக் குலுக்க இந்த அந்நிய வாழ்வும் சிநேகமற்ற மனிதர்களும் பழகிக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் வாழ்வை நேசிக்க, மனிதர்களை முன்முடிவில்லாமல் அணுக, எதிர்பார்ப்பில்லாத அன்பு சாத்தியம் என்கிற நம்பிக்கைகளையெல்லாம் எவரிடமிருந்தும் இதுவரை நான் பெற்றிருக்கவில்லை. இந்நம்பிக்கைகளை என்னில் துளிர்விட பவாவும் ஷைலஜாவும் அவரின் குடும்பமும் அவரின் நண்பர்களும் காரணமாய் இருந்திருக்கிறார்கள்.

விடைபெறும் நாளின் கடைசி சில மணிநேரங்களுக்கு முன்பு கூட பவா அவரின் கல் வீட்டில் அமர்ந்தபடி அவரின் நெகிழ்ச்சியான சத்தமான குரலில் பாவண்ணனின் கதையொன்றினை சொல்லிக் கொண்டிருந்தார். நானும் என் சகோதரனும் ஷைலஜாவும் அவரது குரல் வழி உலகில் பயணித்துக் கொண்டிருந்தோம். பக்கத்திலிருக்கும் சிறு நகரத்தினுக்கு சைக்கிளில் பயணிக்கும் ஆசைகள் மிகுந்த குமாஸ்தா ஒருவன் மிகப் பாடுபட்டு கடனுக்கு காத்திருந்து சைக்கிளொன்றை வாங்குகிறான். பயணத்தில் அவனோடு சிறுவன் ஒருவனும் சேர்ந்து கொள்ள இருவரின் பயணமும் சுகமாய் தொடர்கிறது. குமாஸ்தாவினுக்கு சைக்கிள் மீதிருந்த காதலை விட அச்சிறுவனுக்கு அதிகமான காதலிருப்பதை உணர்ந்து கொள்ளும் குமாஸ்தா சைக்கிளை அச்சிறுவனிடம் கொடுத்துவிட்டு பஸ் ஏறுவதாய் கதை முடியும். இந்தக் கதையை எழுதியவரின் உணர்வுகளை அப்படியே உள்வாங்கி தன் குரலில் அவ் உலகை படைக்கும் பவாவின் வார்த்தை வண்ணங்களில் முழுவதுமாய் கரைந்து போனோம்.

விமானத்தைப் பிடிக்கச் சென்னைக்கு விரைந்த அவ்விரவில் தொலைபேசியில் பவா வின் குரல் கேட்க என்னால் முடியவில்லை. வாழ்வில் எப்போதாவது அடைக்கும் தொண்டை அப்போது அடைத்துக் கொண்டது. என்னால் எப்போதும் அழமுடிவதில்லை என்பது உண்மைதாம் நண்பர்களே!
Post a Comment

Featured Post

தினசரிகளின் துல்லியம் - கிண்டில் வெளியீடு

தினசரிகளின் துல்லியம்             புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் சில உதிரிக் குறிப்புகள் உள்ளே.. 1.    தினசரிகள...